 |
| இனப்படுகொலையாளி இராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து மெரினாவில் போராட்டம்! |
இராஜபக்சேவின் வருகை மட்டுமில்லை, அதற்கான
எதிர்ப்பும் இந்த முறை கொஞ்சம் சலசலப்புகளை இங்கே ஏற்படுத்தியிருக்கிறது.
பொதுவாக, ஈழப் பிரச்சினைக்கான எல்லாப்
போராட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இராஜபக்சேவின்
கொடும்பாவியை எரிப்பது உட்பட. ஆனால், இந்த முறை இராஜபக்சே வருகையை எதிர்த்து
நடத்திய ஆர்ப்பாட்டங்களை மக்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை.
“தெற்காசிய நாட்டுத் தலைவர்கள் எல்லோரையும்
அழைக்கும்பொழுது அவனையும் சேர்த்து அழைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே? இதற்கு ஏன்
இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என்பது போன்ற கேள்விகளை இந்த முறை பொதுமக்களிடமிருந்து கேட்க
முடிந்தது.
மக்கள் எழுப்பும் இப்படிப்பட்ட
கேள்விகளுக்குப் பதில் என்ன? உண்மையிலேயே, இராஜபக்சே வருகைக்கான இந்த எதிர்ப்பு
தேவையற்றதா? தமிழ் உணர்வாளர்கள் இந்த விதயத்தில் கொஞ்சம் மிகையாக நடந்து கொண்டு
விட்டோமா? கொஞ்சம் அலசலாம் வாருங்கள்!
தமிழ்ப் பற்றாளர்கள், தலைவர்கள் ஆகியோரின்
முதற்பெரும் கடமை!
எப்பொழுது ஒரு போராட்டத்துக்குப்
பொதுமக்களின் ஆதரவு குறைந்து, அது தனிப்பட்ட சிலரின் போராட்டமாக மாறுகிறதோ
அப்பொழுதுதான் அதற்குத் ‘தீவிரவாதம்’ எனும் முத்திரை குத்தப்படுகிறது. எனவே,
எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு கட்டத்தின்பொழுதும், ஒவ்வொரு
ஆர்ப்பட்டத்தின்பொழுதும் மக்களுக்கு அதிலுள்ள நியாயத்தைத் தெரியப்படுத்துவது
இன்றியமையாதது! இதைச் செய்யாமல் எப்பேர்ப்பட்ட தலைவனாலும் போராட்டத்தின் இலக்கை
வென்றெடுக்க முடியாது என்பதை இன்றைய தலைவர்களும் நம் தமிழ்ப் பற்றாளர்களும்
முதலில் உணர வேண்டும்!
இலங்கைக் கொடுங்கோலனின் வருகைக்கான
எதிர்ப்புப் பற்றி மக்கள் சில கேள்விகள் எழுப்புகிறார்கள். அவற்றுக்குப் பதில் கூற
வேண்டியது நம் கடமை.
ஒவ்வொரு கேள்வியாகப் பார்க்கலாம்.