"என்னடா இது! அவனவன் படத்தின் முதல் நாள், முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்பொழுதே இடைவேளையில் மதிப்புரை (review) எழுதிக் கொண்டிருக்கிறான். இவன் என்னடாவென்றால் வெளிவந்து 6 மாதமான படத்துக்கு இப்பொழுது எழுதுகிறானே?" என நீங்கள் நினைக்கலாம். இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்துத்தான் நான் பார்த்தேன். அப்பொழுதே துவிட்டரில் (twitter) இதை எழுதி விட்டேன். வரும் ஆகத்து 31 அன்று பிள்ளையார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக மகான் படம் சின்னத்திரையில் முதன் முறையாக (‘கலைஞர்’ தொலைக்காட்சியில்) ஒளிபரப்பாவதை முன்னிட்டு துவிட்டரில் நான் எழுதியது இங்கே உங்களின் மேலான பார்வைக்கு!
அன்பின் @karthiksubbaraj அவர்களே!
இப்பொழுதுதான் பிரைமில் #மகான் பார்த்தேன்! தரம்! செம்மையான தரம்!
காந்தியின் பெயரால் வன்முறை நிகழ்த்தும் வடக்கன்களின் காந்தியத்துக்கு எதிரான வாழ்வோடு ஒப்பிட்டால் வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து திருந்தும் தமிழர்கள் நாம் மாமனிதர்களே எனச் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறீர்கள்!
காந்தி, தாதா, சத்தியவான் எனப் பெயர்த் தேர்வு அசத்தல்! ‘சாராய வணிகத்தின் அரசன்’, எனும் அடைமொழி கதை பேசும் பூகோள அரசியலை ஆணியடித்து நிறுத்துகிறது. அவ்வகையில் இந்தப் படம் பேசும் அரசியல் இன்றைய இந்திய அரசியல் சூழலில் இன்றியமையாதது!
மறுபுறம் படத்தின் கதைப்போக்கு...! அப்பப்பா! உள்ளம் உடைகிறது. இதுவரை இரண்டகத்தால் (betrayal) ஏற்படும் வலி எப்படிப்பட்டது என்பதைத்தான் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன. ஆனால் முதன் முறையாக இரண்டகம் செய்பவனின் வலி எப்பேர்ப்பட்டது என்பதைப் பார்க்கும் எங்களையே உணரச் செய்து விட்டீர்கள்! கடைசியில் எல்லாவற்றையும் செய்து விட்டு வலி தாளாமல் விக்ரம் அலறிக் கத்தும் அந்த இடத்தில் நமக்கே முடியைப் பிடித்துக் கொண்டு கத்தலாமா என்றிருக்கிறது! 💔💔💔
எப்படியய்யா நீர் இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்! அதை விட எப்படி இப்படிப்பட்ட நுட்பமான உணர்வுகளையெல்லாம் அப்படியே பார்வையாளனுக்குக் கடத்துகிறீர்! அதுவும் இவ்வளவு வேகமான திரைக்கதையில்! அலாதி!
படத்தின் ஒரே குறை கடைசித் திருப்பத்தை முன்கூட்டியே கணிக்க முடிவது. ஞானம் அவ்வளவு ஞானமுள்ளவன் இல்லை என்பதும் அந்தத் திட்டம் தாதாவுடையதாகத்தான் இருக்கும் என்பதும் முன்கூட்டியே புரிந்து விடுகிறது. ஆனாலும் விக்ரம் அவர்களின் நடிப்பு தாங்கிப் பிடிக்கிறது! விக்ரம் மட்டுமா? துருவ் அப்பாவையே சாப்பிடும் அடேங்கப்பா நடிகராக இருக்கிறார். நொடிக்கொரு முகப் பாவனை காட்டும் அவர் நடிப்பு மிரட்டல்!
கடைசியில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து சரக்கடித்தபடி ஒன்றாய் நிற்பது போல் காட்டி முடித்தது இழப்புகள் தந்த வலிக்கு ஒரு சிறு மென்வருடல்!
மிக்க நன்றி இப்படி ஒரு நுண்ணரசியல் படத்துக்காக! 🙏
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
படம் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம். நன்றி ஐயா
பதிலளிநீக்குஆகா! மிக்க நன்றி ஐயா! வெகுநாள் கழித்து உங்கள் கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி!
நீக்கு