.
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 12, 2026

'திருக்குறள் அறிஞர்' சாலமன் பாப்பையா அவர்களுக்குப் புகழஞ்சலி

Tribute to Solomon Pappaiah

"அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! இனிய குழந்தைகளே!" என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குறள் தமிழ் வளர்த்த கனித் தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைந்தார்!

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியால், திருக்குறளில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்பதைக் கூட எளிதில் சொல்லி விடலாம். ஆனால் இதுவரை எத்தனை பேர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள் என்பதை எண்ணவே முடியாது. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மணக்குடவரில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் புனைவு எழுத்தாளர் சுஜாதா வரை குறளுக்கு உரை எழுதிய பெருமக்களின் பெயர்ப் பட்டியல் அவ்வளவு நீளம். இருந்தாலும் திருக்குறளை எழுதியவர் யாரென்று கேட்டால் சாலமன் பாப்பையா என்று குழந்தைகள் சொன்னாலும் சொல்லும் என்கிற அளவுக்குக் குறளமுதை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்த்தவர் ஐயா அவர்கள்.

குறளுக்கு உரை எழுதிய அத்தனை பேருமே தன் தமிழ்த் திறமையைக் காட்டவே அந்தக் களத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் பாப்பையா அவர்கள், குறளின் பின்பாதியையும் முன்பாதியையும் மாற்றிப் போட்டுப் படித்தாலே பெரும்பாலான குறள்கள் புரிந்து விடும் என்று குறளைக் குறளாலேயே விளக்கியதைச் சிறு வயதில் கேட்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்" என்ற குறளை ஐயா எப்படி விளக்குவார் தெரியுமா? "வானம் வழங்கா தெனின் தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்" என்பார். "வானம் கொடுக்காவிட்டால் - அதாவது மழை பெய்யாவிட்டால் - தானமும் தவமும் வியன் உலகத்தில் தங்காது" என்பது அவர் அப்படிக் குறளைப் புரட்டிப் போட்டதிலேயே பாதி புரிந்து விடும். அதன் பிறகு வியன் உலகம், தங்கா போன்ற புரியாச் சொற்களுக்கான விளக்கம் அவர் மேற்கொண்டு தொடர்கையில் விளங்கிவிடும்.

இப்படித்தான்... இப்படித்தான் இவர் உரையாசிரியர்களே இல்லாமல் திருக்குறளை நாமே படிக்க முடியும் எனும் நம்பிக்கையை நமக்கு ஊட்டினார். காலங்காலமாக உரையாசிரியர்களெல்லாரும் தங்கள் விழிகளின் வழியாகவே வள்ளுவரைக் காட்டியபொழுது இவர் மட்டும்தான் நம் விழியாலேயே வள்ளுவரைப் பார்க்க வைத்தார். "இவ்வளவுதான்யா... இதுக்காய்யா இவ்வளவு கஷ்டம்? இதுக்காகவாய்யா திருக்குறளைப் படிக்காம இருக்கீக? படிங்கய்யா" என்று சொல்லாமல் சொன்னார்.

உலகெங்கும் பறந்து பறந்து பட்டிமன்றம் நடத்தினார். அதனால் ஊடகங்களெல்லாம் இந்த நேரத்தில், 'பட்டிமன்றப் பேரரசர்', 'பட்டிமன்ற அறிஞர்' என்றே ஐயாவைக் குறிப்பிடுகின்றன. பட்டிமன்ற நடுவர் மட்டுமில்லை புறநானூற்றை வரிசை புதுப்பித்தவர், சங்க இலக்கியங்களுக்கும் திருக்குறளுக்குச் செய்தது போலவே காணொளி உரை வழங்கியவர் என அவருக்குப் பல பெருமைகள் இருந்தாலும் உண்மையில் 'திருக்குறள் அறிஞர்' என்பதுதான் அவர்தம் சரியான அடையாளம்.

ஆனால் அவர் நம்மை விட்டுப் பிரிந்திருக்கும் இன்றைய நிலையிலும் 'சிவாஜி' படத்தின் அங்கவை - சங்கவை நகைச்சுவையைக் குறிப்பிட்டுக் கீழ்த்தரமாக நினைவுகூர்கிறார்கள் சிலர்.

என் வயதின் இருபதுகளில் அந்த நகைச்சுவையைப் பற்றிய இத்தகைய எதிர்வினைகள் என்னிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் இந்த நாற்பது வயதில் நினைத்துப் பார்க்கும்பொழுது அந்த நகைச்சுவை வேறு கோணத்தில் தென்படுகிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் காதலையும் வீரத்தையும் இரு கண்ணெனப் போற்றி வளர்த்த ஒரு சமுகம், இடைக்காலத்தில், வெளியிலிருந்து வந்த தவறான பண்பாட்டின் தாக்குதலால் காதல் எனும் சொல்லைக் கூடத் தவறானதாகப் பார்க்கும் அளவுக்குக் குழம்பிக் கிடக்கிறது இன்று வரையில். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், "அங்கவை சங்கவைன்னு எங்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு. பழகிப் பாருங்க! புடிச்சா கட்டிக்குங்க! இல்லேன்னா ஃபிரெண்ட்சா இருப்போம்" என்று ஐயா பேசியது மறந்து போன தமிழ்ச் சமுகத்தின் உண்மையான காதல் பண்பாட்டை மீண்டும் நினைவூட்டும் நற்பணி என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பழகிப் பார்த்துத் திருமணம் செய்யும் பழந்தமிழர் காதல் மரபை மீட்டெடுக்கும் இந்த வேலையை சாலமன் பாப்பையா போல ஒரு தமிழறிஞர் செய்யாமல் வேறு யார் செய்ய முடியும்? பாரி மகளிரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று குதிக்கும் அரைகுறைகளே, ஆனானப்பட்ட பாப்பையாவுக்குத் தெரியாத பாரி மகளிரையா நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள்? அப்படி ஒரு காட்சியில் நடிக்கும் முன் உங்கள் அளவுக்குக் கூடவா அவர் சிந்தித்திருக்க மாட்டார்?

நீங்கள் எவ்வளவுதான் தூற்றினாலும் நம் தமிழர் திசைகாட்டியாம் திருக்குறள் இருக்கும் வரை பாப்பையாவின் பெயரும் இருக்கும்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் வானுறையும் தெய்வத்துள் கட்டாயம் வைக்கப்படுவார்.

எனவே இரண்டாயிரத்துக் குழந்தைகளிடமும் (2K kids) குறள் வளர்த்த தமிழ்ப் பெருமகனாரைப் போற்றுவோம்!

வாழ்க சாலமன் பாப்பையா புகழ்! 🙏🏽

சனி, ஜூன் 27, 2026

திரைக்கதை மன்னனுக்குப் புகழஞ்சலி!

Screenplay King Bhagyaraj-Tribute
 

கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் என 'நாலும் தெரிந்த' ஒருவரை இன்று இழந்திருக்கிறோம்!😭

பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1️⃣ ஒன்று, நாயகரை (protagonist) மையமாகக் கொண்ட படம்.

2️⃣ அடுத்தது, கதையை மையமாகக் கொண்ட படம்.

தொண்ணூறுகளில் பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் ஒருபுறம் கதையை மையமாகக் கொண்ட படங்களைப் படைத்து வந்தனர். மறுபுறம் ரஜினி, கமல், விஜயசாந்தி போன்றோரை வைத்து நாயகரை மையமாகக் கொண்ட படங்களும் வந்து கொண்டிருந்தன.

ஆனால் இந்த இரண்டு வகைக்கும் நடுவில், கதை - நாயகர் இரண்டுக்கும் சரிசம முக்கியம் கொடுத்துப் புதுமையான வகையில் படங்களை வழங்கியவர் பாக்யராஜ்.

அவர் படங்களிலும் நாயகன் சண்டை போடுவான், எதிரிகளை அடித்து நொறுக்குவான். ஆனால் படத்தில் அவன் பெறும் இறுதி வெற்றி, உடல்வலிமையால் பெற்றதாக இருக்காது. அவனுடைய அறிவுக்கூர்மையாலோ ஈக (sacrifice) மனப்பான்மையாலோ பெற்றதாகத்தான் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, 'ஆராரோ ஆரிரரோ', 'ராசுக்குட்டி' ஆகிய படங்களைச் சொல்லலாம்.

பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான எனக்கு, "நாயகன் என்பவன் நாலு பேரை அடித்துத் துவைப்பவன் இல்லை. நாலும் தெரிந்த அறிவாளிதான் உண்மையான நாயகன்" எனத் திரும்பத் திரும்பச் சொன்ன இவரது படங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

தமிழ்த் திரைப்பட நாயகன் என்றாலே பக்கம் பக்கமாக உரையாடல் பேச வேண்டும் என்றிருந்த காலத்தில், பேச முடியாத மாற்றுத்திறனாளியை நாயகனாக்கி, 'ஒரு கை ஓசை' என்று படம் கொடுத்தவர் கதையாசிரியர் பாக்யராஜ். 90-களில் வெளியான ஈகமே உருவான காதல் நாயகர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடி ஒரு கை ஓசையின் நாயகன் சின்னப் பண்ணைதான். பாக்யராஜ் என்பவர் எப்பேர்ப்பட்ட உலகத்தரமான கதைசொல்லி என்பதைக் காட்டும் படைப்பு இது. (விரும்புவோர் பாருங்கள் இங்கே - https://youtu.be/0F9ErB74lik?si=caNb7sIpcoMM41uy)

இன்றைய செய்மதி (AI) உலகில் யாரை வைத்து வேண்டுமானாலும் நாம் படமெடுத்துவிட முடியும். ஆனால் போதுமான கணினித் தொழில்நுட்பம் கூடப் பிறக்காத 1990-இலேயே, இறந்து போன எம்ஞ்சியாரை மீண்டும் திரையில் உலவ விட்டவர் திரைக்கதையாசிரியர் பாக்யராஜ்!

1977-இல் ஶ்ரீதர் இயக்கத்தில் எம்ஞ்சியார் நடித்து, திரைக்கு வராமல் போன 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தின் படச்சுருளைப் பயன்படுத்தி, அந்தக் காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒரு திரைக்கதையை எழுதி அசத்தலான ஒரு முழுப்படத்தையே உருவாக்கிக் காட்டிய சூராதி சூர எழுத்தாளர் இவர்! அதனால்தான் 'திரைக்கதை மன்னன்' என இவரைப் புகழ்கிறோம்.

'தாவணிக் கனவுகள்' படத்தின் ஒரு காட்சியில், ஒரு திரைப்படத்தின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும் எனப் பாடமே எடுத்திருப்பார் உரையாடலாசிரியர் பாக்யராஜ்!

'எங்க சின்ன ராசா' படத்தில், நாயகன் சின்னராசைச் சிறுவனாயிருக்கும் பொழுதிலிருந்தே அவன் சித்தி தவறாக வழிநடத்திக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்கு அடிமையாக்கிக் கொள்வதை அந்த ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பானை வனையும் காட்சியோடு ஒப்பிட்டுக் காட்டிக் கொண்டே வருவார் இயக்குநர் பாக்யராஜ். கடைசியில், சித்தி சொல்லாமலே அவள் விருப்பம் அறிந்து, பாம்பைத் தன் கையில் பிடித்து வருவான் சின்னராசு. உடனே, பானை முழுவதுமாய் உருவாக்கப்பட்டு விட்டதாகக் காட்சியமைத்து 'இயக்குநர் முத்திரை' (Directorial touch) என்றால் என்ன என்பதைக் காட்டியிருப்பார்!

இப்படித் திரைத்துறையில் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் என நான்கிலும் முத்திரை பதித்ததோடு மட்டுமின்றி பாக்யராஜ் அவர்கள் 'முந்தானை முடிச்சு' படத்துக்காக 1983-இல் பிலிம்பேர் விருது பெற்ற சிறந்த நடிகரும் கூட.

மேலும், 'பாக்யா' வார இதழை நிறுவி, நடத்தி இதழாளராகவும் திகழ்ந்தார். வாரந்தோறும் 'பாக்யா பதில்கள்' எனும் பகுதியில் நேயர்கள் கேள்விக்கு அவர் அளிக்கும் விடைகள் புகழ் பெற்றவை. இரண்டு வரிக் கேள்விக்கு ஒரு குட்டிக் கதையே சொல்லி விடை தருவார். இந்த விடைகள் பின்னர் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாகவும் வெளியாயின.

அறிவியல் செய்திகள், அயல்நாட்டில் நடக்கும் விந்தை நிகழ்வுகள் ஆகியவை பற்றிய இரண்டு தொடர்கள் பாக்யா இதழில் எப்பொழுதும் இடம்பெறும். என் மாமா மணிவண்ணன் அவர்கள் அந்த இரு தொடர்களுக்காகவே சில காலம் எனக்குத் தொடர்ந்து பாக்யா வாங்கித் தந்து கொண்டிருந்தார். பின்னாளில் அந்தத் தொடர்களைக் கிழித்து, ஒரு சிறு புத்தகமாக்கினேன். இப்பொழுதும் அது என் சேமிப்பில் இருப்பதை ஆற்றாமையோடு இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்😢

தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் அமிதாப்பச்சனை இயக்கித் தமிழன் திறமையை வடக்கன்களுக்கு அன்றே எடுத்துக்காட்டினார்.

இப்படி பாக்யராஜ் தான் தொட்ட அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட எனக்கு அவரிடத்தில் பிடித்தது அவருடைய மனிதநேயமும் சமுகச் சிந்தனையும்தான்.

மறுமணம் என்பது பெரிய அறைகூவலாக இருப்பதை 'நூறு சாமி' போன்ற படங்கள் மூலம் இன்றைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிற சமுகம் இது. ஆனால் 1989-இலேயே 'ஆராரோ ஆரிரரோ' படத்தின் மூலம், பாலியல் கொடுமைக்கு ஆளாகிக் கருவுற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் இளைஞனை நாயகனாக்கியவர் பாக்யராஜ்.

அதிலும் இறுதிக்காட்சியில் குழந்தை இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கும்படி ஒரு காட்சி வைத்திருப்பார். படம் பார்ப்பவர்கள், "என்ன இருந்தாலும், இப்படிப்பட்ட பெண்ணை வேண்டுமானால் ஒருவன் திருமணம் செய்து கொண்டு வாழலாம். அவளுக்குப் பிறந்த குழந்தையை அவன் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முடிவு சரிதான்" என ஒரு நிமையம் நினைப்போம். ஆனால் அடுத்த நிமையமே மறைக்கப்பட்ட குழந்தை உயிரோடு நலமாகத் திரும்பக் கிடைக்கும். அந்தப் பெண்ணோடு குழந்தையையும் முழு அன்புடன் நாயகன் ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான முடிவு.

"கொஞ்ச நேரம் உங்க புத்தி எப்படிப் போச்சு பார்த்தீங்கள்ல? ஏன், அந்தக் குழந்தையையும் அவன் வளர்க்க முடியாதா? இன்னொருத்தனுக்குப் பொறந்த குழந்தைய வேறொருத்தர் அப்பாவா இருந்து வளர்க்கறதுல என்ன தப்பு?" எனக் கேட்காமல் கேட்கும் விதமாய் அவர் வைத்த அந்தத் திருப்பமில்லாத திருப்பம் சமுகத்தின் பொதுப்புத்திக்கு பாக்யராஜ் எனும் படைப்பாளி வலிக்காமல் வலித்த சூடு!

தான் எடுத்த படம், நடித்த படம் எனப் பலவற்றில் பார்ப்பனியத்துக்கு ஒத்து ஊதும் காட்சிகளையும் பிற்போக்குக் கருத்துக்களையும் காட்சிப்படுத்தியவர்தாம் பாக்யராஜ் என்றாலும் அவருடைய பல படங்களில் மேலே சொன்னது போல் பல சமுக அக்கறை மிக்க, சாதியத்துக்கு எதிரான, முற்போக்கான பல காட்சிகளையும் பார்க்க முடியும்.

🔥 'இது நம்ம ஆளு' படத்தில் "சிவன் மனைவி பார்வதி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்" என வெளிப்படையாகவே வைத்த உரையாடல்...

🔥 'ஒரு கை ஓசை' படத்தில் இரட்டைக் குவளை முறையைச் சாடி வைத்த காட்சி...

🔥 'வேட்டிய மடிச்சுக் கட்டு' படத்தில் "ஈழத் தமிழர்களும் வாழப் பிறந்தவர்கள் ஐ.நா., சபையில் இதைக் கூறு" என்று வைத்த பாட்டு...

- போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.

அவருடைய படங்கள், கதைமாந்தர் வடிவமைப்பு, எழுத்தாற்றல் பற்றி எழுதிக் கொண்டே போனால் இந்தப் பதிவு இன்றைக்கு முடியாது. இருந்தாலும் இத்தோடு நிறைவு செய்கிறேன் வருத்தத்துடன்!🙏🏽

புதன், ஜூன் 10, 2026

இயக்குநர் இமயத்துக்குப் புகழஞ்சலி!


சிலைகளை வடிக்கும் சிற்பிகளுக்கிடையில்
சிற்பிகளையே படைத்த
அற்புதனே!

ஏ.வி.எம்., விசயா வாகினி என
படப்பிடிப்புக் கூடங்களுக்குள்
சிறைப்பட்டுக் கிடந்த திரைமொழியை
விடுதலை செய்ய வந்த
தமிழ்மகனே!

உலகத் திரைப்படங்களைப் பார்த்து
தமிழில் சூடுபோட்டுக் கொண்ட
இயக்குநர்களின் மத்தியில்
தமிழ் நிலத்தின் கதைகளை
உலகத் தரத்தில் சொன்ன
மண்வாசனைப் படைப்பாளியே!

உன் இனிய தமிழ் மக்களுக்கு
🙏🏽வணக்கம் கூடச் சொல்லாமல்
எங்கு சென்றாய்?😭

நீ
அடித்து அழ வைத்தவர்களெல்லாம்
இன்று
நடிக்காமலே அழுது கொண்டிருக்கிறார்கள்!
எப்பொழுது கேட்கும்
அந்தக் கரகரத்த குரலில் ஒரு
“கட், டேக் ஓகே”?

கல்லுக்குள் ஈரம் கண்டவனே
பதினாறு வயதினிலே
முதல் மரியாதை
என உன்
காதல் ஓவியங்களை நீ
அயல்நாட்டில் பிறந்து
ஆலிவுட்டில் தீட்டியிருந்தால்
உலகெங்கும்
கொடி பறந்திருக்கும்
உன் புகழ்!
வாசலில்
தவமிருந்திருக்கும்
ஆசுகார்!

மாறாக,
தீந்தமிழ் மண்ணில்
தேனியிலே பிறந்தாய்
தேனினும் இனிய
கலைத்தமிழ் சுரந்தாய்!
அது
நாங்கள் பெற்ற பேறு!
உனகென்றுமில்லை ஈறு!!

காதலும் பாசமும்
வீரமும் ஈகமும்
தமிழ் மண்ணில்
கமழும் வரைக்கும்
சப்பாணியும் மயிலும்
விருமாயியும் மாயாண்டியும்
பாலு தேவரும் சங்கரனும்
குயிலும் மலைச்சாமியும்
வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்
அவர்கள் வாழும் வரைக்கும்
உன் நினைவின்
அலைகள் ஓய்வதில்லை!🌊

வெள்ளி, செப்டம்பர் 19, 2025

ஆசிரியர் சாந்தா அவர்களுக்குப் புகழஞ்சலி!

நேற்று காலை சாந்தா மிஸ் இறந்துவிட்டார்! 😢

யார் சாந்தா மிஸ் எனக் கேட்கிறீர்களா?

என் கோப்பையைக் காலி செய்த ஆசிரியர்!

மூன்றாம் வகுப்பு முடிக்கும் தறுவாயில் எனக்குக் காலில் வழக்கம் போல் எலும்புமுறிவு. அதன் பின் பள்ளிக்கு அனுப்ப அஞ்சிய அம்மா, நான்காம் வகுப்பு கற்பிப்பதற்காகப் பின் தெருவில் இருந்த ஆசிரியர் சாந்தா அவர்களை நாடினார். யாருக்கும் தனி வகுப்பு நடத்தாத அவர், அம்மாவின் வேண்டுகோளுக்காக எனக்கு மட்டும் நடத்த முன்வந்தார்.

முதல் நாள் வகுப்பில், சாந்தா மிஸ் என் திறனைச் சோதிக்க விரும்பிக் குட்டியாக ஒரு தேர்வு நடத்தினார். சிற்சில கேள்விகள்தாம். ஆனால் சரியாக விடையளிக்காத நான், அதெல்லாம் தெரியாவிட்டாலும் தமிழில் எனக்கு எல்லாம் தெரியும் என்று திமிராகப் பேசினேன்.

மாற்றுத்திறனாளி என்பதால் என்னைச் சிறுவயதிலிருந்தே எல்லாரும் கொஞ்சம் மிகையாகவே பாராட்டுவார்கள். “பிரகாசுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை”, “அவன் சொன்னால் சரியாக இருக்கும்” என்றெல்லாம் பாராட்டு மழையில் நனைந்து நனைந்து அந்த வயதிலேயே தலையில் முளைத்திருந்த கொம்பு அப்படிப் பேச வைத்தது.

உடனே சாந்தா மிஸ் என் குறிப்பேட்டை (Notebook) வாங்கினார்; ஐந்தாறு தமிழ்ச்சொற்களை எழுதிக் கொடுத்து “இதுக்கெல்லாம் விடை எழுதி வை. இதோ வரேன்” என்றுவிட்டு உள்ளே போனார். பார்த்தால், எல்லாம் அருஞ்சொற்பொருள் கேள்விகள். தமிழில் எல்லாம் தெரியும் என்று நினைத்தவனுக்கு அந்தச் சொற்கள் சில புதிதாக இருந்தன. இருந்தாலும் தெரிந்த வரையில் எல்லாவற்றுக்கும் விடை எழுதினேன். ‘மரை’ என்று அவர் கேட்டிருக்க, அது மான் என்பது கூடத் தெரியாமல் திருகாணி (screw) என்று நினைத்துக்கொண்டு விடை எழுதியதை இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

வந்து பார்த்தார். திருத்தித் திருப்பித் தந்தார். ஒன்றோ இரண்டோதான் சரியாக எழுதியிருந்தேன், மற்ற அனைத்தும் தவறு! எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தை அன்றோடு அழிந்தது.

ஒரு அடி இல்லாமல், ஒற்றைக் கடுஞ்சொல் சிந்தாமல், வெகு நயமான முறையில், நான் யார் என்பதை எனக்கே ஒரு கண்ணாடி போல எதிரொளித்துக் காட்டிய ஆசிரியர் சாந்தா அவர்களின் திறமை என்னை அண்ணாந்து பார்க்க வைத்தது.

கோப்பை காலியாக இருந்தால்தான் தேநீரை நிரப்ப முடியும் என்பார்கள். கல்வி கற்பதற்கான அடிப்படைத் தகுதியை எடுத்துரைக்கும் சென் (Zen) கதை அது. அப்படி, சேர்ந்த முதல் நாளே என் கோப்பையைக் காலி செய்துவிட்டு எனக்குப் பாடம் நடத்தத் தொடங்கியவர் சாந்தா மிஸ்.

அதுவரை படித்துக் கொண்டிருந்த நான் அன்றிலிருந்துதான் கற்கத் தொடங்கினேன்.

முதல் நாள்தான் என்றில்லை, ஒருநாளும் என்னிடம் அவர் ஒரு சுடுசொல் கூடப் பயன்படுத்தியதாக நினைவில்லை. எப்படிச் சொன்னால் எனக்குப் புரியும் என்பது அவருக்குத் தெரியும். அதற்கேற்பக் கற்பிப்பார். கண்டிப்பும் கிடையாது, ஒரேயடியாகக் கனிவாகப் பேசிக் கொஞ்சுகிற பழக்கமும் கிடையாது. இரண்டும் கலந்த ஒரு சமநிலையில் எப்பொழுதும் இருப்பார்.

எப்பொழுதும் பாடம்தான் என்றில்லை. சனிக்கிழமையானால் தொலைக்காட்சியில் இந்திப் படம் ஓடும். கொஞ்ச நேரம் படம் பார்க்கச் சொல்வார். மிகச் சிறிது நேரம் கதைப்புத்தகங்களும் படிக்கத் தருவார்.

சாந்தா மிஸ்ஸுக்கு இராமதுரை, சிறீராம் என இரண்டு பிள்ளைகள். இருவருமே என்னை விட மிகவும் மூத்தவர்கள். அங்குதான் எனக்குச் சிறார் இதழான ‘கோகுலம்’ அறிமுகமானது. பூந்தளிர், ராணி காமிக்சு எனப் பெரியவர்கள் சிறுவர்களுக்கு எழுதிய படைப்புகளை மட்டுமே படித்துக் கனவுலகிலேயே மிதந்து கொண்டிருந்த எனக்கு, சிறுவர்களாலும் எழுத முடியும் என்கிற எண்ணத்தை விதைத்தது அந்த இதழ்தான். அந்த வகையில் சாந்தா மிஸ் வீட்டில் அறிமுகமான கோகுலம்தான் என் வாழ்க்கையையே தீர்மானித்தது என்றால் அது துளியும் மிகையில்லை.

ஓரீர் ஆண்டுகள்தாம் அவரிடம் படிக்க வாய்த்தது. அதன் பின், ஏதோ காரணங்களால் மீண்டும் படிப்பு நின்று போனது.

அம்மாவின் இடைவிடாத முயற்சியால், சில ஆண்டுகள் கழித்து, தனித்தேர்வராக 8ஆம் வகுப்பு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குக் குறைந்தது 5ஆம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்பது நெறிமுறை. அப்பொழுது சாந்தா மிஸ்தான், “இந்த மாணவன் என்னிடம் 5ஆம் வகுப்பு வரை படித்தவன். இவனுக்கு 8ஆம் வகுப்புத் தேர்வு எழுதத் தகுதி உண்டு. அரசுப்பள்ளி ஆசிரியர் எனும் முறையில் நான் சான்றளிக்கிறேன்” என்று கைப்பட எழுதித் தந்தார். அதை இன்னும் என் தகுதிச்சான்றிதழ்களுள் ஒன்றாகப் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.

பின்னர் ஓரிரு முறை வீட்டுக்கு வருகை தந்தார். அதன் பின், பல ஆண்டுகள் தொடர்பு விட்டுப் போனாலும் தன் மகன் திருமணத்துக்காக மறவாமல் வந்து அவர் அழைப்பிதழ் வைத்தது பசுமையாக நினைவில் இருக்கிறது.

அதன் பின் நான் அவரைப் பார்க்கவில்லை. இனி பார்க்கவும் இயலாது! ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் என் வாழ்வில் மிக முக்கியமானது என்பது மட்டும் மறக்காது!

நன்றி சாந்தா மிஸ்!🙏

படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.

ஞாயிறு, நவம்பர் 27, 2022

ஏன் இவர்கள் மாவீரர்கள்?

Tamil Eelam Heroes Day

தமக்குப் பின்னால்

ஒரு நாடே இருக்கிறது

எனும் துணிவில் துப்பாக்கி தூக்குபவர்கள்

வீரர்கள்!

ஆனால்

இவர்கள்

தங்களை எதிர்த்து

மொத்த உலகமே நிற்கிறது

என்று தெரிந்தும்

துப்பாக்கியை இறக்காதவர்கள்!

அதனால்தான் இவர்கள்

மாவீரர்கள்!🫡

❀ ❀ ❀ ❀ ❀

சனி, நவம்பர் 27, 2021

வீரத்தமிழ் வேங்கைகளே! - மாவீரர் திருநாள் போற்றிக் கவிதை


மக்களைக் காப்பாற்ற

தன்னையே விதைத்துக் கொண்ட

வீரத்தமிழ் வேங்கைகளே!


தமிழர்க்கொரு நாடு சமைக்க

உடல் விறகில் உயிர்த்தீ மூட்டிய

சந்தனப்பேழைகளே!!


வாழிய உங்கள் புகழ்!

வெல்க உங்கள் கனவு!

தணிக உங்கள் தாகம்!

மலரும் ஒருநாள்

தமிழீழத் தாயகம்!

❀ ❀ ❀ ❀ ❀

படம்: நன்றி மே பதினேழு இயக்கம்.

வெள்ளி, நவம்பர் 27, 2020

தமிழினத் தெய்வங்களே! - மாவீரர் திருநாள் அஞ்சலிப் பா

 Great Heroes' Day

இனம் காக்க
உயிர் ஈந்த
பெருந்தகைகளே!

உங்களுக்கு
நினைவொளி ஏற்றுவதில்
பிறவிப் பயன் எய்தும்
எம் இரு கைகளே!

வாழ்வாங்கு வாழ்ந்தவர்களைக்
கடவுளாகப் போற்றுவதுதான்
தமிழர் மதம்!

எனவே
தியாகிகள் என்பதல்ல
தெய்வங்கள் என்பதே
உங்களுக்குத் 
பொருத்தமான பதம்!

உலகத்தையே 
திரட்டி வந்து
உங்களைத் தோற்கடித்து விட்டதாய்
இறுமாப்பு கொண்டிருக்கிறது சிங்களம்

உலகமே
திரண்டு வந்ததால்தான்
வெல்ல இயன்றதென
சாவிலும் நீங்கள் படைத்த வரலாறு
அவர்களுக்குப் புரிவது எங்ஙனம்!

மக்களுக்காக
உயிர் வாழ்ந்தவர்கள்
உயிர் விட்டவர்கள்

இவர்கள்தாம்
தமிழ்க் குடும்பங்களின்
குலத் தெய்வங்கள்

அப்படியானால்
ஒட்டுமொத்த இனத்துக்காகவும்
உயிர் விட்ட நீங்கள்
எங்கள்
இனத் தெய்வங்கள் அல்லவா?...

இனி
கார்த்திகைதோறும்
ஒளிரும் விளக்குகள்

முருகனுக்காக மட்டுமல்ல
உங்களுக்காக
என்று தனியாய்ச்
சொல்லவா?

(நான் நவம்பர்27.நெட் இணையத்தளத்தில் 17.11.2011 அன்று எழுதியது, சில மாற்றங்களுடன்)

படம்: நன்றி உதயன்.

திங்கள், செப்டம்பர் 14, 2020

உயிரை மாய்த்துக் கொண்ட என் இனிய இளவல்களே! – இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள்!

Three students committed suicide due to NEET Examination
உயிரை மாய்த்துக் கொண்ட என் இனிய தம்பிகளே, தங்கையே!

என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்?
என்ன முடிவு இது?
இதனால் நீங்கள் சாதித்தது என்ன?

இதோ உங்களைப் படாத பாடுபட்டுப் பெற்று வளர்த்து ஆளாக்கிய உங்கள் பெற்றோரைத் துடித்துத் துடித்துக் காலமெல்லாம் கண்ணீர் விடும்படி செய்திருக்கிறீர்கள். இதைத் தவிர நீங்கள் இந்தத் தற்கொலையால் வென்றது என்ன?

நீங்கள் மூன்று பேர் உயிர் விட்டு விட்டதால் இந்திய அரசு இனி மருத்துவப் பொதுநுழைவுத்தேர்வே (NEET) வேண்டா என நிறுத்தி விடப் போகிறதா?...

மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போர்க்கொடி உயர்த்தி நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றப் புது வழி கண்டு விடப் போகிறதா?...

உச்சநீதிமன்றம் தானாக வழக்கெடுத்து இப்படி மாணவர்களின் உயிரையே காவு வாங்கும் அளவுக்குக் கொடுமையான ஒரு தேர்வை ஏன் நடத்துகிறீர்கள் என ஆட்சியாளர்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பி விடப் போகிறதா?...

இப்படி எந்த ஒரு நன்மையும் நடக்கப் போவதில்லை. மாறாக, நடக்கப் போவதெல்லாம் என்னென்ன தெரியுமா?

உயிரின் மதிப்பு தெரியாத கோழைகள் என உங்களை உலகம் தூற்றப் போகிறது. பிள்ளைகளை வளர்க்கத் தெரியாதவர்கள் என உங்கள் பெற்றோரைப் பழிக்கப் போகிறது. ஆம்! எந்தப் பெற்றோர் உங்கள் தேர்வுத் தோல்வியால் தலைகுனிந்து விடக்கூடாது என்பதற்காக நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்களோ அதே பெற்றோர் காலமெல்லாம் தலைகுனிந்து நிற்கத்தான் உங்களுடைய இந்த முடிவு வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமா?

“மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வில் வெல்லத் தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தகுதி இல்லை. அதனால்தான் அங்கு தொடர்ச்சியாக இத்தனை மாணவத் தற்கொலைகள்” என நாட்டின் மற்ற மாநிலங்கள் நம் மாணவர்களைப் பார்த்துச் சிரிக்கப் போகின்றன. நாட்டுக்கே மருத்துவத் தலைநகரமாய் விளங்கும் இம்மண்ணைப் பார்த்து அடிப்படை அளவில் கூட மருத்துவத்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் இப்படி ஏளனமாகச் சிரிக்கத்தான் உங்கள் தற்கொலை உதவியிருக்கிறது.

இது மட்டுமில்லை, “பிடித்த படிப்பு கிடைக்காவிட்டால் சாவதே மேல்” என்கிற ஒரு தவறான எடுத்துக்காட்டை நீங்கள் இதன் மூலம் முன்வைத்திருக்கிறீர்கள். மருத்துவம் மட்டுமின்றி இனி கலை, அறிவியல் என எல்லாப் பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு எனச் சட்டம் வந்துவிட்ட நிலையில் உங்களுடைய இந்த முடிவு எத்தனை பேரைத் தற்கொலைக்குத் தூண்டி விடுவதாக இருக்கும் என்பதைக் கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா?

இப்படி நீங்களும் செத்து, பிறரையும் சாகத் தூண்டி, பெற்றோரையும் நடைபிணமாக்கி, பிறந்த மண்ணுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திய உங்கள் தற்கொலை முடிவு சரியா? இதனால் யாருக்கு என்ன பயன்?

மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்பதால் உயிரையே அழித்துக் கொள்ளத் துணிந்த நீங்கள் அதே துணிச்சலுடன் இந்தக் கேடு கெட்ட தேர்வுமுறைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியிருந்தால் அது பயனுள்ளதாய் இருந்திருக்கும்.

“ஒரு பாடத்திட்டத்தில் படித்த நான் வேறு பாடத்திட்டத்தில் அமைந்த தேர்வில் ஏனடா என் திறமையை உறுதிப்படுத்த வேண்டும்?” என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தால் அஃது உங்கள் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கும்.

ஒருவேளை இப்படிப் போராடவெல்லாம் உங்களுக்கு மனமில்லாவிட்டாலும் மருத்துவக் கனவைக் கைவிட்டு வேறு ஏதாவது ஒரு துறையில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தால் கண்டிப்பாகப் பெரிய அளவில் சாதித்து மற்றவர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்க முடியும்.

அப்படிப் பெரிதாக எதுவும் சாதிக்காவிட்டாலும் சராசரியாக எளிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் கூட மருத்துவக் கனவில் தோல்யுற்றும் துவண்டு போகாமல் வாழ்க்கையை எதிர்கொண்ட தன்னம்பிக்கைச் சின்னமாக மற்றவர்களுக்கு நீங்கள் திகழ்ந்திருக்க இயலும்.

இப்படி எதையுமே செய்யாமல் வெறுமே உயிரைப் போக்கிக் கொண்டதன் மூலம் நீங்கள் நம் எதிரிகளுக்குத்தான் உதவி செய்திருக்கிறீர்கள், தெரியுமா?

நாட்டிலேயே மிக அதிகமான மருத்துவக் கல்லூரிகள் நிறைந்தது நம் தமிழ்நாடு. நம் அம்மாவும் அப்பாவும் வியர்வை சிந்திச் செலுத்திய வரிப் பணத்தில் உருவான இந்த வளத்தை மற்ற மாநிலத்தவர்களுக்கு அலுங்காமல் அள்ளிக் கொடுப்பதற்குத்தான் மருத்துவ நுழைவுத்தேர்வு எனும் கபட நாடகத்தை அரங்கேற்றுகிறது இந்திய அரசு. இப்பேர்ப்பட்ட பகல் கொள்ளைக்கு எதிராகத் திமிறி எழ வேண்டிய நீங்கள், அதற்கு மாறாக இப்படிச் செத்து மடிந்தால், மாணவர்களே அது யாருக்கு ஆதாயம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

ஆகவே அன்பிற்கினிய என் தமிழ் உடன்பிறப்புகளே! உங்களை நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்!

எதற்காகவும் உயிரை மட்டும் விட்டுவிடாதீர்கள்!🙏 காரணம் நம் எதிரிகள் விரும்புவதே அதுதான். தமிழர்கள் வாழவே கூடாது என நினைப்பவர்கள்தாம் காலங்காலமாக இந்த மண்ணை ஆண்டு வருகிறார்கள். எனவே நீங்கள் எதிலும் வெல்ல முடியாவிட்டாலும் கவலையில்லை. வெறுமே இவர்கள் கண் முன்னால் வாழ்ந்து காட்டுங்கள்! அதுவே வெற்றிதான்! மாறாக, உங்கள் உயிரை உரமாக்கித் தமிழ்ப் பகைவர்களை வெற்றி அடையச் செய்யாதீர்கள்!

வியாழன், அக்டோபர் 31, 2019

இனியாவது சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை என்ன?

Last kisses to Sujith with tears
போய்விட்டான் சுர்ஜித்!

தனக்காக மேலே எத்தனை இலட்சம் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை கோடி விழிகள் கண்ணீரை வடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை நூறு கரங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றன...

எப்படிப்பட்ட ஓர் அன்புலகம் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது...

என எதையுமே பார்க்காமல் போய்விட்டான் சுர்ஜித்!

ஆனால் போனவன் சும்மா போகவில்லை. இக்கட்டான பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கு உருப்படியாக இன்னும் எதையுமே கண்டுபிடிக்காத சமூகம் இது எனும் உண்மையை நம் முகத்தில் அறைவது போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

அறிவியலாளர்களும் தொழில்நுட்பர்களும் சந்திராயன் போன்ற திட்டங்களின் மூலம் நமக்கு நிலவைக் காட்டி நாட்டுப்பற்றுச் சோறூட்டிக் கொண்டிருக்கும் வேளையில் “கொஞ்சம் குனிஞ்சு உங்க காலுக்குக் கீழே பாருங்கடா” என்று நம் பின்னந்தலையில் அடித்து விட்டுப் போயிருக்கிறான்.

பெருநிறுவனப் பணமுதலைகளுக்கான கண்டுபிடிப்புகளே மக்களுக்கான பெருமிதமாகவும் நம்ப வைக்கப்படும் இத்திருநாட்டில் மக்களுக்கான உண்மையான அறிவியலும் தொழில்நுட்பமும் குறித்த கேள்விகளை எழுப்ப வைத்து விட்டு மறைந்திருக்கிறான்.

அவனுடைய இப்பேர்ப்பட்ட உயிர் ஈகம் (தியாகம்) பயனின்றிப் போகக்கூடாது!

இதுவரை எத்தனையோ குழந்தைகளின் உயிரை ஆழ்துளைக் கிணறுகள் பலி வாங்கியிருக்கின்றன. ஆனால் இந்தக் குழந்தைக்குக் கிடைத்த அளவுக்குப் பரவலான கவனம் இதுவரை வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. இந்த ஒரு மீட்புப் பணியில் கையாளப்பட்ட அளவுக்குத் தொழில்நுட்பங்கள் இதுவரை வேறெங்கும் கையாளப்பட்டதாகவும் தெரியவில்லை. இவை எதுவும் வீணாகக்கூடாது! எனவே நடந்த இந்த மீட்புப் பணி முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்!

சிறுவன் கிணற்றில் விழுந்த அந்த முதல் நொடியிலிருந்து உயிரற்ற நிலையில் அவன் மீட்கப்பட்ட கடைசி நொடி வரையில் என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டன என்பது ஒன்று விடாமல் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்!

எத்தனை விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

எத்தனை விதமான கருவிகள் கொண்டு வரப்பட்டன?

என்னென்ன விதமான செயல்நுட்பங்களும் (technique) தொழில்நுட்பங்களும் முயன்று பார்க்கப்பட்டன?

அவையெல்லாம் என்னென்ன காரணங்களால் தோல்வியடைந்தன?

வேறு எந்த விதமான கருவிகள் / தொழில்நுட்பங்கள் இருந்திருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்க முடியும்?

இவை அத்தனையும் விரிவாக நுட்பமாகப் பதிவாக வேண்டும்!

இத்தோடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இதுவரை ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் இன்ன பிற இக்கட்டான பகுதிகளிலிருந்தும் குழந்தைகளை மீட்க மேற்கொள்ளப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் இதே போல் விரிவாகத் திரட்டப்பட்டு மொத்தமாக ஓர் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியோருக்கான மீட்பு நடவடிக்கை பற்றிய மொத்த அறிவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இனி ஒரு குழந்தைக்கு இப்படி நடந்தால் குழந்தையின் விவரங்கள், சூழலின் விவரங்கள் போன்றவற்றை அந்த இணையத்தளத்தில் உள்ளிட்டு அதே போல் முன்பு மாட்டிய குழந்தையை எப்படி மீட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விரைவாகக் குழந்தையைக் காப்பாற்ற முடியும். ஒருவேளை அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சூழலிலான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் ஏன் தோல்வியடைந்தன என்பதைத் தெரிந்து கொண்டு அத்தகைய முயற்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் நேரத்தைக் குறைக்க முடியும்.

எத்தனையோ புதிய கருவிகளும் தொழில்நுட்பங்களும் சுர்ஜித் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டன என ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்றவர்களால்தாம் முயன்று பார்க்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கென முழுமையான ஒரு மீட்புத் திட்டம் (well-designed plan) வடிவமைக்கப்பட்டால்தான் அதற்கான பயிற்சிகளை மீட்புக் குழுவினருக்கு வழங்கவும் முடியும். அப்படி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட முறையான திட்டம் என இதுவரை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே உடனடியாகத் தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். இதில் நம்மிடம் இருக்கும் தலைசிறந்த பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், அறிவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், குழந்தை உளவியலாளர்கள், மண்ணியலாளர்கள், நீரியலாளர்கள், தீயணைப்புத்துறை போன்ற பேரிடர் மேலாண்மை வீரர்கள், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் என அனைத்துத் தரப்பு வல்லுநர்களும் இடம்பெற்றுத் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் எப்படிப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்தும் குழந்தைகளை மீட்பதற்கான முழுமையான ஒரு மீட்புத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். வடிவமைக்கப்பட்டவுடன் தீயணைப்புத்துறையினருக்கும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் அதைச் செயல்படுத்துவதற்கான முழுமையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

தன்னார்வலர்கள் சிலரும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் சிலரும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை மீட்கும் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். இரண்டு இயந்திர மனிதர்களே கூட உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை இவை அத்தனையும் வெறும் போல்மப் படைப்புகளாகத்தாம் (prototypes) இருக்கின்றன. இந்தத் துயரத் தோல்விக்குப் பிறகாவது அரசு இனியும் இது போன்ற முயற்சிகளைக் கிடப்பில் போட்டு வைக்காமல் உடனடியாக இவை அனைத்தையும் முறையாக ஆராய்ந்து தகுதியுள்ளவற்றுக்கு ஏற்பிசைவு வழங்கி ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தலா ஒரு கருவி எப்பொழுதும் ஆயத்தமாக இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் முன்னால், துணை முதல்வர் உறுதியளித்தது போல் உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு சரியான முறையில் மூடப்பட வேண்டும்.

ஆனால் இஃது அவ்வளவு எளிதான வேலை இல்லை. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மாநிலம் முழுக்க இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதாக நீரியல் வல்லுநர் எஸ்.ஜனகராஜன் கூறுகிறார். எனவே அரசு மட்டுமே முயன்று இவை அனைத்தையும் கண்டறிந்து விட முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால் அதற்கான காலமும் வெகுவாக நீடிக்கும். எனவே பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் தமிழ்நாட்டில் எங்கே இருந்தாலும் உடனடியாக மக்கள் அதை அரசுக்குத் தெரிவிக்க அழைப்பு மையம் ஒன்றையும் அதற்கான இலவச அழைப்பு எண் ஒன்றையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.

எப்படியாவது தன்னை அம்மா மடியில் சேர்த்து விடுவார்கள் என்று நம்மை நம்பிக் காத்திருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கடைசி வரை காப்பாற்றாமலே விட்ட நாம் அந்தக் கொடும்பெரும் துரோகத்துக்குக் கழுவாய் தேடவாவது இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும்! அப்படிச் செய்தால்தான் இனியாவது நம் சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்யுமா அரசு?
❀ ❀ ❀ ❀ ❀
Make Sujith death will be the last
நன்றி: தினச்செய்தி.
படம்: நன்றி www.ripbook.com

தொடர்புடைய வெளியிணைப்புகள்:
✎ ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்? சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?
✎ `சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்

இந்தக் கட்டுரையைக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து இன்னொரு சுஜித்துக்கு இப்படி ஆகாமல் தடுக்க நீங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

வெள்ளி, மே 17, 2019

இலங்கை மீது தமிழர்களே நீதிமன்றப் புகார் அளிப்பது எப்படி? - திருமுருகன் காந்திக்கும் பிற தலைவர்களுக்கும் அனுப்பிய மடல்

10th Memorial of Tamil Genocide

தமிழுலகினரே! ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்க நாம் இதுவரை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் மிக மிக முக்கியமான ஒரு முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது என்பதே உண்மை! நடந்த தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதோடில்லாது தமிழீழ விடுதலைக்கும் திறவுகோலாக அமையக்கூடிய அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தித் தமிழினத் தலைவர்களுக்கு நான் அனுப்பிய மடல் இங்கே உங்கள் பார்வைக்கு! 
☟   ☟   ☟
தனிப்பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய உயர்திரு.திருமுருகன் காந்தி அவர்களுக்கு நேச வணக்கம்!

இனப்படுகொலை நடந்து இந்தாண்டோடு பத்தாண்டுகள் முடிவடைகின்றன. இன்னும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்தபாடில்லை. தாங்களும் ஐ.நா-வில் உரையாற்றுவது, உலக நாடுகளிடம் வலியுறுத்துவது போன்ற பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். அதற்காகத் தமிழன் எனும் முறையில் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

இருப்பினும் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய இன்னோர் இன்றியமையாத முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது. அதைத் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வரவே இதை எழுதுகிறேன்! எனவே அருள் கூர்ந்து இக்கடிதத்தை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்!

வியாழன், மே 02, 2019

ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!

6th Birthday of your AgaSivappuThamizh
உலகத் தமிழ் உள்ளங்களே, ‘அகச் சிவப்புத் தமிழின்’ ஆறாவது பிறந்தநாள் பதிவுக்கு உங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன்!

ஆம், நண்பர்களே! உங்கள் அன்புக்குகந்த இந்த வலைமனை ஏப்ரல் 23, 2019 அன்று ஆறு ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் நுழைந்து விட்டது. அதையொட்டி ஆறாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டில் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுக்குப் பந்தி வைக்க வந்திருக்கிறேன். முதலாவதாகப் புள்ளிவிவரங்கள். 



பதிவுகள்
கருத்துக்கள்★
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 -
ஏப்ரல் 2019
13
120
38949+
-183
மொத்தம்
125
1525
3,09,565+
▽2009
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.
▽ எண்ணிக்கையில் இறக்கம்.


நம் நேச(ர்) நாடுகள் :-P 

 
உள்ளீடு
பக்கக்காட்சிகள்
இந்தியா
132003
அமெரிக்கா
81228
இரசியா
14411
பிரான்சு
8641
ஐக்கிய அரபு நாடுகள்
5734
ஆறாமாண்டில் அதிகம் படிக்கப்பட்ட ஐந்து பதிவுகள்

❋ இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (12016 பார்வைகள்)

❋ சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (11361 பார்வைகள்)

❋ காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள் (10856 பார்வைகள்)

❋ கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? (9739 பார்வைகள்)

❋ தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! (7460 பார்வைகள்)

வழக்கமாக, அதிகம் பார்வையிடப்பட்ட முதல் ஐந்து பதிவுகளைப் பட்டியலிடும்பொழுது அந்தப் பதிவுகள் எழுதப்பட்ட நேரம், அவை கடந்து வந்த வழி, ஈட்டிய வெற்றி குறித்தெல்லாம் எழுதுவேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் எழுதவில்லை. காரணம், இவை அனைத்துமே பழைய பதிவுகள். போன ஆண்டு நான் எழுதிய எந்தப் பதிவும் பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை sad. 

போன ஆண்டு நான் எழுதிய பதிவுகளே மிகவும் குறைவுதான். அதுவும் மிகவும் இடைவெளி விட்டு. இதனால் முந்தைய ஆண்டு (2017-18) ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்ற நம் தளம் போன ஆண்டு (2017-18) அதில் பாதியைக் கூட எட்டவில்லை.

இருப்பினும் வலைப்பூவின் தொடக்க ஆண்டுகளில் 20, 30 எனப் பதிவுகள் எழுதிப் பெற்ற பார்வைகளைக் காட்டிலும் இது கூடுதல்தான். அன்று அத்தனை பதிவுகள் வெளியிட்டு முப்பதாயிரம், முப்பத்தையாயிரம் எனக் கிடைத்த பார்வைகள் இன்று வெறும் 13 பதிவுகளை வெளியிட்டும் சற்றேறக்குறைய அதே அளவிலான பார்வைகளை ஈட்டுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு இன்று இந்தத் தளம் மக்களிடையே போய்ச் சேர்ந்திருப்பதுதான் என நினைக்கிறேன். புதிதாக ஏதும் எழுதாவிட்டாலும் முன்பு எழுதிய பதிவுகள் அடைந்த புகழ் தொடர்ந்து இந்தத் தளத்துக்கு மக்களை அழைத்து வந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் பார்க்கையில் நானும் ஏதோ பயனுள்ள வகையில் எழுதித்தான் இருக்கிறேன் என எண்ணி மகிழ்கிறேன்.

இறங்குமுகப் பயணத்திலும் சில மறக்க முடியா நினைவுகள்

கடந்த ஆண்டுப் பதிவுலகப் பயணம் இப்படி இறங்குமுகமாக இருந்தாலும், சில மறக்க முடியா நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை. வெற்றி என்பது வெறும் பார்வை எண்ணிக்கையில் மட்டும் இல்லை அன்றோ? அதைத் தாண்டி வேறு சில வெற்றிகளை இந்தாண்டு சந்தித்தேன். கூடவே, வழக்கம் போல் சில கசப்பான நிகழ்வுகளும் உண்டு. உண்மையில், இவற்றைப் பதிவு செய்யவே இந்தப் பிறந்தநாள் பதிவு.

கடந்த ஆண்டு நெஞ்சை நொறுங்கச் செய்த முதல் நிகழ்வு ஸ்டெர்லைட் படுகொலை. அந்தப் படுகொலையை விடப் பெருங்கொடுமை, அதைத் தட்டிக் கேட்டவர்களே கூட “மக்கள் வரம்பு மீறவில்லை. எனவே சுட்டது தவறு” என்பதாகவே திரும்பத் திரும்ப வாதாடியதுதான். இது, “மக்கள் வரம்பு மீறியிருந்தால் சுட்டது சரியே” என மறைமுகமாகச் சொல்வது போல் இருந்தது. எனவே இது தவறு; மக்கள் வன்முறையில் இறங்கினால் கூட அதை இரப்பர்க் குண்டு, கண்ணீர்ப் புகை போன்றவற்றின் மூலம் அடக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய, சுட்டுக் கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி ‘ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!’ என்ற பதிவை எழுதினேன்.

இதைத் துவிட்டரில் படித்துவிட்டு, நான் பெரிதும் வியக்கும் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) அவர்கள் தன் நண்பர்களுக்கும் பகிர, அதுவரை துவிட்டரில் என்னுடைய வேறெந்த வலைப்பதிவும் பெறாத அளவுக்கு 55 விருப்பக்குறிகளும் 69 மறுகீச்சுகளும் பெற்றுப் பரவலான கவனத்தை ஈர்த்தது இப்பதிவு.

இத்தோடன்றி, பதிவுலகத் தோழர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்கள் ‘மக்களைக் கொலை செய்ய அரசுக்கு உரிமை இருக்கிறதா?’ எனும் தலைப்பில் இதைக் காணொலியாக வெளியிட அஃது ஏறக்குறைய 2000 பார்வைகளைப் பெற்றது. 

 
ஆனால் இவற்றையெல்லாம் விட, இனியாவது அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் மக்கள் அதை எதிர்த்துச் சரியான கேள்விகளை எழுப்ப இப்பதிவு ஒரு சிறு தூண்டுதலாக அமைந்தால், அப்படி ஒரு மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் அதுவே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவை ஒட்டி சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசியவாதிகள் – திராவிடவாதிகள் சொற்போர் மீண்டும் உச்சம் அடைந்தது. தமிழினப் படுகொலையின்பொழுது கருணாநிதி நடந்து கொண்ட விதத்தை நினைவூட்டித் தமிழ்த் தேசியவாதிகள் மீண்டும் திட்ட, அதை எதிர்த்துத் திராவிடவாதிகள் பச்சையான புளுகுகளை அவிழ்த்து விட மிகவும் கீழ்த்தரமாகப் போனது.

எனவே கருணாநிதி மீதான இந்தக் குற்றச்சாட்டை முறையாக எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்தால் இந்தப் பழி அவரை விட்டு நீங்கும் என்பதைச் சொல்லும் விதமாய்க் ‘கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?’ எனும் கட்டுரையை எழுதினேன். உண்மையிலேயே உளமார்ந்த அக்கறையோடு எழுதிய இந்தப் பதிவைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் துவிட்டரில் பெரும்படையாய் வந்து சண்டை பிடித்தார்கள் திராவிடவாதிகள். எவ்வளவு பேசினாலும் என்னை மடக்க முடியவில்லை என்றானதும் தங்கள் மனதில் இருந்த சாக்கடையையும் என் மேலே வாரி வீசி விட்டுப் போனார்கள்.

பச்சைப் பொய்களையே எதிர்வாதங்களாய் முன்வைத்த இவர்களின் பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், யாருக்காக இதை எழுதினோமோ அவர்களே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, அந்த அளவுக்குத் தவறான கோணத்தில் எழுதி விட்டோமோ என்று வருந்தினேன். அந்த நேரத்தில்தான் வந்தது அந்த மடல்! தலைசிறந்த பெரியாரியவாதியும் முதிர்ந்த பகுத்தறிவாளருமான ‘கீற்று’ இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு “இதை ஏன் கீற்றிற்கு அனுப்பவில்லை, தோழர்?” என்று உரிமையோடு கேட்டிருந்தார்.

Keetru Nandhan mail for ask that why I did not send the "Solution for the treacherous accusation against Karunanidhi" article to Keetru

அவருடைய அந்த மடல் இந்தக் கட்டுரையால் எனக்கு ஏற்பட்ட அத்தனை காயங்களையும் ஒரு நொடியில் போக்கியது. திராவிட இயக்கச் சிந்தனைகளில் வெகுவாக ஊறியவர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பற்றையெல்லாம் நன்கறிந்தவர் நந்தன் அவர்கள். அவரே இந்தக் கட்டுரை தன் இதழில் வெளிவந்திருக்க வேண்டும் என விரும்பிக் கேட்கிறார் என்றால் அதை விட ஒரு நற்சான்றிதழ் இதற்குத் தேவையில்லை. இது தமிழ்த் தேசியச் சார்புத்தன்மை காரணமாகவோ கருணாநிதி மீதான காழ்ப்புணர்வு காரணமாகவோ எழுதப்பட்டது இல்லை; ஈழ இரண்டகக் (துரோகக்) குற்றச்சாட்டை முறையாகத் தி.மு.க., எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டதுதான் என்பதற்கு நந்தன் அவர்களின் அந்த ஒரு வரி மடலே போதுமானது.

இதற்கு அப்புறம் செப்டம்பர், அக்டோபர் மாதமெல்லாம் அலுவல்கள் மூச்சு முட்ட இருந்ததால் புதிதாக ஏதும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஏற்கெனவே பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று இடம்பெற்று வலைப்பூவில் அதுவரை வெளியிடாமல் வைத்திருந்த ‘தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற கட்டுரையை மேலும் செழுமையூட்டி ‘உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.

இதன் முதல் பாகத்தைப் படித்து விட்டுத் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான இராம.கி., எனும் இராமசாமி கிருஷ்ணன் ஐயா பாராட்டியிருந்தது எனக்குப் புளகாங்கிதத்தை (goose bumps) ஏற்படுத்தியது. தமிழில் அரிதினும் அரிதான வரலாற்று ஆராய்ச்சிகளையும் கற்பனைக்கும் எட்டாத சொல்லாய்வுகளையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற ‘வளவு’ இராம.கி., அவர்கள் நான் கொண்டாடும் அறிஞர்களில் ஒருவர். அவரே இந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் அதை விடச் சிலிர்ப்பான ஒரு பாராட்டும் இதற்குக் கிடைத்தது. இதோ நீங்களே அதைப் பாருங்கள் கீழே! 

Unforgettable feedback received for "Place of the mother tongue in Tamil lifestyle (1/2)" article

தமிழ்ப் பயன்பாடு குறித்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டுத் தன் தமிழ்ப் பயன்பாட்டுத் திறனை ஒருவர் சோதித்துப் பார்த்துக் கொள்கிறார் என்றால் அதை விட எழுதியவனுக்கு நிறைவு தருவது வேறென்ன இருக்க முடியும்? தங்கள் எழுத்து மக்களின் மனதில், வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எழுதும் ஒவ்வொருவரின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு! அதையே இக்கட்டுரை சாதித்து விட்டது எனும்பொழுது இதை விடப் பெரிய வெற்றி வேறு எதுவுமே இல்லை. இதுவரை நான் எழுதியவற்றிலேயே மாபெரும் வெற்றி பெற்ற படைப்பு இதுதான் என்பேன்.

இதன் பின், கடந்த பிப்ரவரி மாதம் எழுதிய ‘தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்! - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்!’ பதிவை ‘2019 தி.மு.க., தேர்தல் அறிக்கைக் குழுவினர்’ படித்து விட்டுத் தனிப்பட மின்மடல் அனுப்பியிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

“2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்களும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்” என்று ஸ்டாலின் அறிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே முடிவெடுத்து விட்டேன், நானும் அனுப்புவதாக. ஈழ இனப்படுகொலையில் தி.மு.க., செய்த இரண்டகத்தால் அவர்கள் மீது மாறா வெறுப்புக் கொண்ட கோடிக்கணக்கான தமிழர்களில் ஒருவனான நான் திடீரென இப்படி ஒரு முடிவுக்கு வரக் காரணம் உண்டு. இந்த நேரத்தில் யாரும் தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பைத் தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தாவிட்டால் நாளைக்கே இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் “எங்கள் தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் பொறுப்பையே நாங்கள் மக்களிடம் ஒப்படைத்தும் யாருமே தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை” எனக் கூசாமல் சொல்வார்கள் என்பதால்தான்.

அதனால்தான் பரிந்துரைகளை ஸ்டாலின் சொன்னபடி மின்னஞ்சலில் அனுப்பியது மட்டுமின்றித் துவிட்டரிலும் குறிப்பிட்ட சிட்டையின் (tag) கீழ் பொதுப் பார்வைக்கு வைத்தேன். அதுவும் போதாதென்று என்றும் இது நிலையாக மக்கள் பார்வைக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே வலைமனையிலும் பதிந்தேன்.

ஆனால் எதிர்பாராத வகையில், மின்மடலைப் படித்ததோடு மட்டும் நில்லாமல் வலைமனைக்கும் வந்து பார்வையிட்ட தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக் குழுவினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தனிப்பட்ட முறையில் விரிவாக மறுமடல் எழுதியது உண்மையாகவே மிகவும் வியப்பை அளித்தது. யார் எது சொன்னாலும் மதித்துச் செவிமடுக்கும் கட்சி எனத் தி.மு.க., பற்றி மற்றவர்கள் சொல்வது வெற்றுப் புகழ்ச்சியில்லை போலும் என்று தோன்ற வைத்தது.

பொதுவாகப் பெரிய பெரிய எழுத்தாளர்கள்தாம் “இந்த நூல் அந்தப் பதிப்பகத்தார் கேட்டதால் எழுதியது... அந்த நூல் இந்த இதழினர் கேட்டதால் எழுதியது” எனவெல்லாம் குறிப்பிடுவார்கள். ஆனால் என்னை நானே மீண்டும் மீண்டும் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் விதமாக என் வாழ்விலும் அப்படி ஒன்று நடந்தது! அதைத்தான் அடுத்துக் குறிப்பிடப் போகிறேன். அதுவும் ஒரு மின்மடல்தான். இதோ கீழே பாருங்கள்! 

Keetru Nandhan asked me to write an article for Keetru - One of the Best Moment in my life

இப்படியெல்லாம் என் வாழ்க்கையிலும் நடக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை! ஆனானப்பட்ட ‘கீற்று’ ஆசிரியர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்கிறார் என்றவுடன் “மவனே, எழுத்தாளனாயிட்டேடா நீ!” என்று யாரோ என் முதுகில் தட்டுவது போல் இருந்தது.

கோரிக்கை என அவர் குறிப்பிட்டாலும் அதை மாபெரும் பெருமிதமாகச் (கௌரவம்) சிரமேற்கொண்டு நான் எழுதியதுதான் ‘ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்’ எனும் பதிவு. படித்துவிட்டு நந்தன் அவர்கள் மிகவும் பாராட்டியிருந்தார்.

இவற்றுக்கிடையில் போன ஆண்டில் இரண்டு போன்மிகளையும் (memes) வெளியிட்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இணையவுலகையே ஆட்சி செய்பவை போன்மிகளும் வாரல்களும்தாம் (trolls). நானும் கூட முன்பு சிலமுறை வெளியிட்டிருக்கிறேன். இருந்தாலும் முன் எப்பொழுதையும் விடக் கடந்த ஆண்டு இவை அதிகம் கொடி கட்டிப் பறந்ததால், அந்தத் தாக்கம் காரணமாக நானும் இரண்டு வெளியிட்டேன். சமூக ஊடகங்களில் மட்டுமே நான் பகிர்ந்து கொண்ட அவை இப்பொழுது இங்கே உங்கள் பார்வைக்கு! 




ஏப்ரல் 2018-19 எனும் இக்காலக்கட்டத்தில் பதிவுலகம் இரண்டு இழப்புகளைச் சந்தித்தது. முதலாவது ‘எனது எண்ணங்கள்’ தி.தமிழ் இளங்கோ அவர்களின் மறைவு. பலமுறை நம் வலைமனைக்கு வந்து அவர் கருத்திட்டிருக்கிறார். கடந்த ஐந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் பதிவில் கூட வந்து வாழ்த்தியிருந்தார். ஆனால் இந்த ஓராண்டுக்குள் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் வருந்துகிறேன்! அவருக்கு என் அன்பார்ந்த அஞ்சலி!

அடுத்தது ‘வலைச்சரம்’ சீனா ஐயா அவர்களின் இறப்பு.

பொதுவாக யாருடைய வலைமனையையும் தொடர்ந்து படிக்கிற, கருத்துரைக்கிற வழக்கம் எனக்குக் கிடையாது. அதையும் மீறி இன்று தமிழ்ப் பதிவுலகில் என்னை நான்கு பேருக்குத் தெரியும் என்றால் அதற்கு முக்கிய காரணம் வலைச்சரம் இதழும் அதில் என்னைப் பற்றி நம் நண்பர்கள் எழுதியதும்தாம். உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ப் பதிவுலகை ஒரே குடும்பம் போல இறுகப் பிணைத்த அரும்பெருமைக்கு உரியது வலைச்சரம். அதை நிறுவிய ‘அன்பின்’ சீனா ஐயாவோடு எனக்குத் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் இப்பேர்ப்பட்ட ஒரு சாதனையை நிகழ்த்திய அம்மாமனிதரின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை என்னால் உணர முடிகிறது. ஐயாவுக்கு எனது உளமார்ந்த அஞ்சலி!

அதே நேரம், உலகத் தமிழ்ப் பதிவர்களுக்கான ஒரு பெரும் வலைப்பின்னலாகச் (network) செயல்பட்ட அவரது வலைச்சரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்பதையும் இங்கே வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தொழில்நுட்பம் சார்ந்தோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ இதற்கு என்னால் ஆகக் கூடியது ஏதும் இருப்பின் தயங்காமல் கேளுங்கள், கட்டாயம் கை கொடுக்க ஓடோடி வருவேன் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவை தவிர, இன்னோர் இழப்பும் போன ஆண்டு நடந்தது – கூகுள் பிளசின் மூடுவிழா. சக மனிதர்களை நம்பாமல் சமூக ஊடகங்களையே நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு இது பெரிய அடி! அகச் சிவப்புத் தமிழுக்கு வரும் பார்வைகளில் சரிபாதி கூகுள் பிளசிலிருந்துதான். அது அப்படியே பறிபோய் விட்டது. தவிர, ஏறக்குறைய இருநூறு தொடருநர்களையும் (followers) இழந்து விட்டேன் (அதனால்தான் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டு திடீர் இறக்கம்). தனிப்பட்ட இந்தப் பாதிப்புகளைத் தாண்டி மெய்யாகவே கூகுள் பிளசின் இந்த மூடுவிழா கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மூடப்படும் செய்தி முந்தைய ஆண்டே தெரியும்; என்றைக்கு மூடப்படப் போகிறது என்பதும் முன்பே தெரியும். அப்பொழுதெல்லாம் ஏதும் தோன்றவில்லை. ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இரவு, படுத்த பின் ஏனோ கொஞ்சம் வேதனையாக இருந்தது, ஒரு நல்ல நண்பனைப் பிரிவது போல. அப்பொழுது உடனே எழுந்து கூகுள் பிளசில் எழுதிய கடைசி வரிகள் இவை.

My last post in G+

வருந்தத்தக்க இத்தகைய நிகழ்வுகளுக்கிடையில் நடந்த ஒரே நல்லது, எனக்கு மிகவும் பிடித்தமான பதிவரும் அருமை நண்பருமான சகா ‘மகிழ்நிறை’ மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்தது (மூன்றாம் பிறந்தநாள் பதிவில் கூட இதையேதான் சொல்லியிருந்தேன். நான் சொன்ன நேரமோ என்னவோ மறுபடியும் பதிவுலகை விட்டுப் போய்விட்டார் அவர். இந்த முறை அப்படிச் செய்ய மாட்டார் என நம்புகிறேன்).

கலைக்குடும்பம் எனக் கேள்விப்பட்டிருப்போம். அது போல, எனக்குத் தெரிந்த ‘பதிவர் குடும்பம்’ மைதிலி அவர்களுடையது. அவரும் அவர் கணவர் கஸ்தூரிரங்கன் அவர்களும் மட்டுமில்லை அவர்கள்தம் மூத்த மகள் நிறைமதிவதனா அவர்கள் கூடப் பதிவர்தாம். ‘மைதிலியின் புன்னகை’ எனும் வலைப்பூவை நடத்தி வரும் தமிழ்ப் பதிவுலகின் குட்டிப் பதிவர்களுள் ஒருவர்! ஓரிரு வாரங்களுக்கு முன் அவருடன் பேசியில் உரையாடினேன். பொதுவாகக் குழந்தைகளோடு பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையோடு நிறையவே பேசினேன். கூடவே மீண்டும் அவர் பதிவு எழுத வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். “நீங்க சொல்லிட்டீங்கள்ல, எழுதிட வேண்டியதுதான்” என்று அவர் தோரணையாகச் சொன்னதை மிகவும் ரசித்தேன். தவிர, “பரவாயில்ல, நீங்க கொஞ்சம் எல்லாத்தைப் பத்தியும் நல்லாப் பேசறீங்க” என்ற அவர் பாராட்டை இப்பொழுது கூட நினைத்து நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்து விட்டதால் அவரது ‘புன்னகை’யும் மறுபடி பூக்கும் என நம்புவோம்.

நன்றிக்குரியோர்!

வாட்சப், உயூடியூபு என உலகமே வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்ட இக்காலத்திலும் இந்த வலைமனைகளைத் தேடி வந்து பெருமையூட்டும் தமிழ்ப் பறவைகள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை ஆதரித்து வரும் பழைய, புதிய அகத்தினர்கள்...

தாங்கள் விரும்பிப் படிக்கும் வலைமனைகளின் பட்டியலில் இந்த மனைக்கும் ஒரு மணை அளித்துக் கவனம் ஏற்படுத்தித் தரும் எனதன்புப் பதிவுலக நண்பர்கள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டு, அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைப்பதன் மூலம் என்னைச் செதுக்கி வரும் கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்கள்...

இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவி புரிந்த ஊக்கமளித்த என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள்...

என்னை அடக்க முயல்வதாக நினைத்து மீண்டும் மீண்டும் கொம்பு சீவி விடும் என் பகைச் செல்வத்துக்குரிய எதிரிகள்...

தளத்துக்குப் பார்வைகள் கிடைக்க வகை செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

தளத்தின் உயர்வும் தாழ்வும் அறிந்து சரி செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம்...

பதிவுகளை அழகூட்டும் படங்களையும் அவற்றை மெருகூட்டும் சேவைகளையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்கள்...

பதிவுகளின் தரத்தை உயர்த்த உரிய தகவல்களை அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாய், தமிழ் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை நமக்குத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருவதோடு கடந்த ஆண்டு முதல் பொருளாதார முக்கியத்தையும் நமக்கு அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினர்...

ஆகிய அனைவருக்கும்...

இன்னும் யாரையாவது இங்கு நான் குறிப்பிடத் தவறியிருந்தால் அவர்களுக்கும்...

Thanks

காணிக்கை!

தண்டவாளத் தொடரியைப் போல்
ஒரு கட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்த
என் சிந்தனை ஊர்திக்கு
இறக்கை பொருத்திப் பறக்க வைத்தவன்...

ஒரு விதயத்தை
இத்தனை கோணங்களில் பார்க்க இயலுமா
இவ்வளவு ஆழமாக அலச இயலுமா
இப்படியெல்லாம் கூடப் பேச இயலுமா
என என்னை வியக்க வைத்தவன்...
தன்னோடு சேர்த்து என்னையும் இவ்வழிகளில்
நடக்க வைத்தவன்...

என் எழுத்துக்களில் தென்படுவதாக
இன்று பிறர் குறிப்பிடும்
நுட்பத்துக்கும் செறிவுக்கும் காரணமானவன்...
உடன் பிறவாத் தம்பி...
உளம் பிரியாத் தோழன்...
உணர்வால் குடும்ப உறுப்பினன்...
அஷ்வின் சத்யா அவர்களுக்கு
இந்த ஆண்டு பெற்ற
வலைப்பதிவு வெற்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!


படங்கள்: நன்றி அலேசியோடெவேச்சி, எழுத்து.காம்.
காணொலி: நன்றி எஸ்.பி.எஸ் மீடியா

முந்தைய ஆண்டுகளில்:
✎ ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!  
✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
✎ உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
✎ உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே! 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (46) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) ஆய்வு (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கண்ணதாசன் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (40) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (10) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (4) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்