சனி, ஜனவரி 14, 2023
பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு 2054 நல்வாழ்த்துக்கள்
ஞாயிறு, நவம்பர் 27, 2022
ஏன் இவர்கள் மாவீரர்கள்?
தமக்குப் பின்னால்
ஒரு நாடே இருக்கிறது
எனும் துணிவில் துப்பாக்கி தூக்குபவர்கள்
வீரர்கள்!
ஆனால்
இவர்கள்
தங்களை எதிர்த்து
மொத்த உலகமே நிற்கிறது
என்று தெரிந்தும்
துப்பாக்கியை இறக்காதவர்கள்!
அதனால்தான் இவர்கள்
மாவீரர்கள்!🫡
திங்கள், அக்டோபர் 10, 2022
தாய்மொழி வழிக் கல்வி - மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவுக்கு எனது கோரிக்கை
ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022
மகான் - திரைப்பட மதிப்புரை | Mahaan - Cinema Review
"என்னடா இது! அவனவன் படத்தின் முதல் நாள், முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்பொழுதே இடைவேளையில் மதிப்புரை (review) எழுதிக் கொண்டிருக்கிறான். இவன் என்னடாவென்றால் வெளிவந்து 6 மாதமான படத்துக்கு இப்பொழுது எழுதுகிறானே?" என நீங்கள் நினைக்கலாம். இந்தப் படம் வந்து ஒரு மாதம் கழித்துத்தான் நான் பார்த்தேன். அப்பொழுதே துவிட்டரில் (twitter) இதை எழுதி விட்டேன். வரும் ஆகத்து 31 அன்று பிள்ளையார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக மகான் படம் சின்னத்திரையில் முதன் முறையாக (‘கலைஞர்’ தொலைக்காட்சியில்) ஒளிபரப்பாவதை முன்னிட்டு துவிட்டரில் நான் எழுதியது இங்கே உங்களின் மேலான பார்வைக்கு!
வெள்ளி, ஆகஸ்ட் 05, 2022
நம் பரதேசி அவர்களின் நூல்கள் - ஓர் அறிமுகம்
பரதேசி என்றதும் எல்லாருக்கும் ஏழ்மையான ஒருவரின் தோற்றம் நினைவுக்கு வரும்; சிலருக்கு இயக்குநர் பாலா அவர்களின் திரைப்படம் நினைவுக்கு வரலாம்; ஆனால் பதிவர்களான நம் நினைவுக்கு வருபவர் பரதேசி @ நியூயார்க் என்கிற வலைப்பூவை நடத்தும் ஆல்ஃபிரட் தியாகராசன் அவர்கள்.
அமெரிக்க வாழ் தமிழரான ஆல்ஃபி அவர்கள் ஏறக்குறைய
பத்து ஆண்டுகளாக நகைச்சுவை, வாழ்வியல், சுற்றுலா, கவிதை எனப் பலதரப்பட்ட பதிவுகளை
எழுதி வருகிறார். பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட இவர் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுத் தலைவராகவும் திகழ்வதில் வியப்பில்லை.
வலைப்பூவில் மட்டுமே மணம் வீசிக் கொண்டிருந்த
தன் எழுத்துக்களை நூலாய் வெளியிட ஆர்வம் கொண்டு ஆல்ஃபி அவர்கள் நம்
பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன்
அவர்களை நாட, முத்துநிலவன் ஐயா என்னைக் கை காட்ட, அப்படித்தான் முகிழ்த்தது எங்கள்
இருவருக்குமான நட்பு.
திருத்தப் (proof
reading) பொறுப்பை நானும், தொகுக்கும் பணியைத் தோழர் கோமதி அவர்களும் அட்டை
வடிவமைப்பை நண்பர்கள் சந்தோஷ்,
ஜெகதீஷ் ஆகியோரும் ஏற்றுக் கொள்ள வண்ணமயமான வானவில் போல இதோ ஆல்ஃபி அவர்களின் ஏழு
நூல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் பரதேசி, இலங்கையில் பரதேசி, மெக்சிகோவில்
பரதேசி, இஸ்தான்புல்லில் பரதேசி, போர்ட்டோ ரிக்கோவில் பரதேசி, டெக்சாசில் பரதேசி
எனத் தான் சுற்றிப் பார்த்த துய்ப்புகளைப் (experience) பற்றி ஆறு
சுற்றுலா நூல்களையும் 22 ஆண்டுக் கால அமெரிக்க வாழ்க்கை பற்றி நியூயார்க்
பக்கங்கள் (பாகம்-1) எனும் ஒரு வாழ்வியல் நூலையும் இத்தொகுப்பில் வெளியிட்டுள்ளார்
ஆல்ஃபி அவர்கள்.
கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 35ஆவது ஆண்டு விழாவில் ஓர் இணை அமர்வாக
ஆல்ஃபி அவர்களின் இந்நூல்களைப் புகழ் பெற்ற எழுத்தாளரும் தென்சென்னைத் தொகுதி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்
வெளியிட சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற மக்களவை
உறுப்பினருமான மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் பெற்றுக் கொண்டது என்றென்றும்
இனிக்கும் நிகழ்வு!
உங்கள் பதிவுலக நண்பர் எழுதிய இந்நூல்களை, பதிவுலகில்
உங்கள் இன்னொரு நண்பனான எனக்கும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமான
இந்நூல்களைப் படித்து மகிழுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்!
இதில் ஒவ்வொரு சுற்றுலா நூலிலும் அந்தந்த
நாடுகளையே நாம் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. வெறும் இடங்களைச் சுற்றிக்
காட்டுவதாக மட்டுமின்றி அந்த இடங்களின், நாடுகளின் வரலாற்றையே மிகச் சில
பக்கங்களில் மணிச் சுருக்கமாகத் தரும் ஆல்ஃபியின் எழுத்துக்களில் இதுவரை அறியாத பல
புதிய, அரிய தகவல்களை நாம் சுவைக்க முடிகிறது. மேலும் மொழி தெரியாமல், பழக்க வழக்கம்
புரியாமல் ஒவ்வொரு நாட்டிலும் சிக்கிக் கொண்டு ஆல்ஃபி படும் அவதிகளை அவர்
விவரித்துள்ள விதம் நம்மை விலாநோகச் சிரிக்க வைக்கிறது.
‘சீனாவில் பரதேசி’ நூல் இவற்றில் உச்சம்!
இது வெறும் சீனா பற்றிய சுற்றுலா நூல் மட்டுமில்லை அந்நாட்டைச் சுற்றிப் பார்க்க விழையும்
தமிழர்கள் அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்க வேண்டிய வழிகாட்டியும் கூட!
அதே போல் ‘நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1)’
நூல் அமெரிக்கா செல்லத் துடிக்கும் தமிழர்களுக்கான கையேடு! அங்கு நிலவும்
தட்பவெப்பச் சூழல், விந்தையான பழக்க வழக்கங்கள், மேலைநாட்டு வாழ்க்கைப் பாணி, மண்
மணத்தை நினைத்துப் பார்க்கும் தமிழர் ஏக்கங்கள், கடல் தாண்டியும் தாய்மொழி
வளர்க்கும் தமிழர் நிகழ்ச்சிகள் என அயல்நாட்டு வாழ்வியலையும் அது ஏற்படுத்தும்
தாக்கங்கள் பாதிப்புகள் ஆகியவற்றையும் ஒரு தமிழர் பார்வையில் நகைச்சுவை கொப்பளிக்க
விவரிக்கும் இந்நூல் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் தவம் கிடக்கும் தமிழர்கள்
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.
அமேசானில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்களை நீங்கள்
மின்னூல் (E-Book), அச்சுநூல் என உங்கள் வசதிக்கேற்ப எந்த வடிவில் வேண்டுமானாலும்
வாங்கலாம். இதோ அதற்கான இணைப்பு - https://amzn.to/3Jvafb2.
படித்துப் பாருங்கள்! கூடவே உங்கள் மேலான கருத்துக்களை அந்தந்த நூலுக்கான அமேசான் பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள்!
வெள்ளி, ஜூலை 01, 2022
என் படைப்புக்கு உங்கள் மதிப்பீடு என்ன?
‘இந்தியாவின் அடுத்த மாபெரும் எழுத்தாளருக்கான தேடல்’ எனும் முழக்கத்துடன் தேசிய அளவிலான ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறது Notion Press இணையத்தளம். படைப்பார்வம் கொண்டவர்கள் தங்கள் நூலை இணையத்தில் தாங்களே வெளியிட்டுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இது, ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இவர்கள் நடத்தும் சிறுகதைப் போட்டியில் இதோ உங்கள் விருப்பத்துக்குரிய நானும்!
கதையை படித்தவர்களின் எண்ணிக்கை, அப்படிப் படித்தவர்கள் தந்த மதிப்பீடு (ratings), ஆசிரியர் குழுவின் மதிப்பெண் மூன்றையும் சேர்த்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அவர்தாம் நாட்டின் அடுத்த மாபெரும் எழுத்தாளராக அறிவிக்கப்படுவார் என்பது போட்டியின் நெறிமுறை. எனவே என் படைப்புக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் இதோ இணைப்பு உங்கள் பார்வைக்கு - https://bit.ly/3I74NKK.
போட்டி ஒருபுறம் இருக்கட்டும்! உலகின் எல்லா நாடுகளிலும்தாம் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் நடக்காத ஒரு கொடுமை நம் மண்ணில் மட்டும் நடப்பது ஏன்? என்னுடைய இந்த நெஞ்சக் கொதிப்புதான் இந்தக் கதை. படித்துப் பார்த்து உங்கள் மேலான தரமதிப்பீட்டையும் கருத்துரையையும் கட்டாயம் வழங்க வேண்டுகிறேன்!
மதிப்பீடும் கருத்தும் வழங்கும் முறை:
1. இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் - https://bit.ly/3I74NKK.
2. கதையைப் படியுங்கள்.
3. கதையின் முடிவில் ஒரு நீல நிறப் பெட்டி இருக்கும். அதன் வலப் பக்கத்தில் கீழே காண்பது போல் ஐந்து விண்மீன் குறியீடுகள் இருக்கும். கதையின் தரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதற்கேற்ப அந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் அழுத்தலாம். எ.டு.: 50 புள்ளிகள் தர விரும்பினால் 5-ஆவதை அழுத்தலாம்.
6. தரமதிப்பீடு அளித்தவுடன் ‘கதை பிடித்திருக்கிறதா?’ எனக் கேட்டு இன்னொரு பெட்டி முளைக்கும். அதில் கதையைச் சமுக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப் பொத்தான்கள் இருக்கும். நம் வீட்டுப் பெண்கள் மீதான அந்தக் கொடுமைக்கு எதிராக நீங்களும் உங்கள் பங்குக்கு ஒருமுறை சாட்டையைச் சுழற்ற விரும்பினால் அந்தப் பொத்தான்களை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கும் கதையைக் கொண்டு சேர்க்கலாம்.
மதிப்பீட்டைப் பதிவு செய்யக் கடைசி நாள்: சூலை 25, 2022
"சரி, இவ்வளவு சொல்கிறாயே? நீ மட்டும் போட்டியில் கலந்து கொண்டால் போதுமா?" எனக் கேட்கிறீர்களா? வருக வருக நண்பர்களே! சூலை 10, 2022 வரை கதைகளைப் பதிவேற்ற நேரம் இருக்கிறது. இதோ போட்டியில் கலந்து கொள்வதற்கான நெறிமுறைகளைக் கீழே தந்திருக்கிறேன். படித்துப் பார்த்து நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!
உங்கள் வசதிக்காக என் கதையின் இணைப்பு இங்கே மீண்டும்: https://bit.ly/3I74NKK.
வியாழன், மே 19, 2022
ஒரு முதல் வெற்றி! - பேரறிவாளன் விடுதலைக் கவிதை
வெற்றி!...
வெற்றி!...
நீதியின் வெற்றி!
நேர்மையின் வெற்றி!
பொறுமையின் வெற்றி!
அறப் போராட்டத்தின் வெற்றி!
மறத் தமிழரின் வெற்றி!
முதுமையிலும் சாதிக்க
முடியும் எனக் காட்டியுள்ள
அற்புதத் தாயின் வெற்றி!
தாய் அவருக்குத் தோள் கொடுத்த
தமிழ்ப் பிள்ளைகளின் வெற்றி!
பல காலமாய்ப் போராடிய
தலைவர் வை.கோ-வின் வெற்றி!
இந்த அண்ணன்கள் விடுதலைக்காய்
உயிர் விளக்கேற்றிய
ஈகி செங்கொடியின் வெற்றி இது!
இவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதை
உறுதிப்படுத்த முடிந்திருந்தால்
இன்னும் களிகூர்ந்திருக்கும் இந்த மன்பதை!
ஆனாலும் இது வெற்றிதான்!
ஆறுதல் மிகத் தரும் பெற்றிதான்!
கொண்டாடுவோம்!
தமிழ் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி...
காங்கிரசார் செவிடுபட எக்காளம் முழங்கி...
தோழர்களை அணைத்து...
ஆனந்தக் கண்ணீர் உகுத்து...
பட்டாசுகள் வெடித்து...
தப்பட்டை அடித்து...
கொண்டாடுவோம் இன்று!
இது நம்
முதல் வெற்றி என்று!...
ஆம்...
காலமெல்லாம் போராடும்
இஃது ஊக்க மருந்து!
இனி
இருக்கிறது பார் எங்களுக்கு
மென்மேலும் வெற்றி விருந்து!