.

புதன், டிசம்பர் 27, 2017

காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள்

Vote for Money
 
வாங்கிய காசுக்கு நேர்மையாக நடந்து கொள்பவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவர்கள்...

மக்களாட்சி முறையை இழிவுபடுத்தியவர்கள்...

பணத்துக்கு விலை போனவர்கள்...

- இப்படி நாடே திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது இராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே நகர்) மக்களை.

உழைக்கும் மக்களுக்கு நம் நாட்டில் எப்பொழுதுமே மரியாதை குறைவுதான். நம்மைப் பொறுத்த வரை அவர்கள் கறுப்பர்கள், படிக்காத முட்டாள்கள், ஆங்கிலம் தெரியாதவர்கள், நாகரிகம் அறியாதவர்கள், முரடர்கள், ஏமாளிகள், நம்பத்தகாதவர்கள், குடிகாரர்கள்... இன்னும் என்னென்னவோ. இவற்றோடு ‘பணத்துக்கு வாக்களிப்பவர்கள்’ எனக் கூடுதலாக ஒன்றைச் சேர்த்துச் சொல்வதால் அவர்களுக்குப் புதிதாக எந்த மானக்கேடும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

ஆம், அவர்கள் பணம் வாங்கினார்கள். பணம் வாங்கிக் கொண்டுதான் தினகரனை வெற்றி பெறச் செய்தார்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் அவர்கள் பணத்துக்கு விலைபோனார்கள்!

ஆனால், அம்மக்களின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன? அவர்களின் வாழ்க்கை நிலைமை என்ன? இதன் பின்னால் உள்ள அரசியல் என்ன? இவற்றையெல்லாம் ஆராய வேண்டாவா? இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மக்களாட்சி முறைக்கே அறைகூவல் விடுக்கும் இந்த காசுக்கு வாக்களிக்கும் பிரச்சினையை நாம் சரி செய்ய முடியுமா?

நான் தலைமுறை தலைமுறையாகச் சென்னையையே பிறந்தகமாகக் கொண்டு வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் இராதாகிருட்டிணன் நகரில் வாழாவிட்டாலும் என் நெருங்கிய உறவினர்கள் பலர் அங்கு இருக்கிறார்கள். அவர்களும் பல தலைமுறைகளாகச் சென்னையையே –அதுவும் இராதாகிருட்டிணன் நகரையே– பிறப்பிடமாகக் கொண்டவர்கள்தாம். அந்த வகையில் அந்தப் பகுதி பற்றி எனக்கு ஓரளவு நன்றாகவே தெரியும்.

அந்தப் பகுதி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதே தெருவிலோடும் சாக்கடைகள், அதே கொசுக்கடி, வளரும் பிள்ளைகளைக் குடி, கட்சி எனத் திசை திருப்பும் அதே வாழ்க்கைச் சூழல் என எதுவும் மாறவில்லை. எந்தச் சிங்காரச் சென்னைத் திட்டமும், எந்தத் தூய்மை இந்தியா திட்டமும் இந்தப் பகுதியை மணக்கச் செய்து விடவில்லை.

சொல்லப் போனால், முன்பு போல் இல்லாமல் அரசே ஊற்றிக் கொடுக்கத் தொடங்கி விட்ட இன்றைய சூழலில், சாதிக் கட்சிகள் முந்தைய தலைமுறையை விடப் பெருகி விட்ட இன்றைய காலக்கட்டத்தில் இப்பிரச்சினைகள் இன்னும் பன்மடங்கு கூடித்தான் இருக்கின்றன. பணம் படைத்தவர்களின் பென்சு மகிழுந்துகள் அலுங்காமல் பறப்பதற்காகக் கண்டமேனிக்கு உயர்த்தப்பட்ட சாலைகள் ஒவ்வோர் ஆண்டும் அந்த மக்களை மழை வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன; உணவுப் பொட்டலத்துக்குக் கையேந்த வைத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரில், இந்திய அளவிலும் உலக அளவிலும் முக்கியமான ஒரு நகரமாகத் திகழும் சென்னையில் இருக்கும் இந்தச் சிறு பகுதியை ஆட்சியாளர்கள் நினைத்தால் மாற்றியிருக்க முடியாதா? தாராளமாக முடியும்! மனம் வைத்தால் ஆறே மாதத்தில் செய்யலாம். ஆனால், அப்படிச் செய்து விட்டால் அதன் பின் இந்த மக்களிடம் எதைச் சொல்லி வாக்குக் கேட்பது?

சாலையே இல்லாத இடத்தில்தான் “நான் ஆட்சிக்கு வந்தால் தங்கத்திலேயே சாலை அமைத்துத் தருகிறேன்” எனச் சொல்லி வாக்குக் கேட்க முடியும்; பள்ளிக்கூடமே இல்லாத இடத்தில்தான் “எங்களுக்கு வாக்களித்தால் ஒரே நாளில் பள்ளிக்கூடம் கட்டித் தருவோம்” எனச் சொல்லி மக்களை மயக்க முடியும்; கொசுத் தொல்லை அதிகமாக இருக்கும் இடத்தில்தான் “டெங்குவை ஒழித்தே தீருவேன்” என முழங்க முடியும். இவை எல்லாவற்றையும் செய்து கொடுத்து விட்டால் அதன் பின் எதைச் சொல்லி வாக்குக் கேட்டுப் போவது?

அது மட்டுமா, இப்படி அடிப்படை வசதிகளெல்லாம் செய்து கொடுத்து விட்டால் அந்த மக்கள் முன்னேறி விட மாட்டார்களா? முன்னேறி விட்டால் சிந்திக்கத் தொடங்கி விட மாட்டார்களா? “நீ போன முறையே இத்தனை கோடி ஊழல் செய்ததாகச் சொன்னார்களே! மீண்டும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாக்குக் கேட்டு வருகிறாய்?” எனக் கேள்வி எழுப்ப மாட்டார்களா? மக்கள் சொந்தப் பிரச்சினைகள் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் வரைதான் அரசியலாளர்கள் வெள்ளை வேட்டி கட்ட முடியும். அவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து நாடு – சமூகம் எனச் சிந்திக்கத் தொடங்கி விட்டால் அரசியலாளர்கள் நிலைமை என்னாவது? அதனால்தான் இராதாகிருட்டிணன் நகரை இன்னும் அழுக்குப் போகாமல் அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல் தலைமுறை தலைமுறையாக இந்தத் துன்பங்களைப் பட்டு வரும் அந்த மக்களிடம்தாம் நாம் வலியுறுத்துகிறோம் தேர்தல் நேர்மையை! “யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் நிலைமை மாறப் போவதில்லை. அப்படியிருக்க, நாங்கள் ஏன் தருகிற பணத்தை வேண்டா எனச் சொல்ல வேண்டும்? யாருக்கு வாக்களித்தாலும் எங்கள் வாழ்க்கைத் தரம் உயரப் போவதில்லை எனும்பொழுது குறைந்தது அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டால் எங்கள் சொந்தத் தேவைகளாவது தீருமில்லையா?” என்பது அவர்கள் வாதம்.

இது இராதாகிருட்டிணன் நகர் எனும் ஒரு பகுதி மக்களின் கேள்வி மட்டுமில்லை, காசுக்கு வாக்களிக்கும் அடித்தட்டு மக்கள் அனைவரின் கேள்வியும் இதுதான். அப்படிப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு நாள் கூட முழுதாகத் தங்கிப் பார்த்திராமல், “காசுக்கு வாக்கை விற்பது உடலை விற்பதற்குச் சமம்” எனச் சொகுசு நாற்காலியில் சாய்ந்தபடி தொலைக்காட்சியில் கருத்துப் பேசும் படித்த கும்பல் இந்தக் கேள்விக்கு என்ன விடை தரப் போகிறது?

இடைத்தேர்தலில் எந்த மடையனாவது போயும் போயும் தனி வேட்பாளருக்கு (சுயேச்சை) வாக்களிப்பானா? அதுவும் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் வெளிப்படையாகப் பகைத்துக் கொண்டிருக்கும் ஓர் ஆளைப் போய் எந்தப் பித்துக்குளியாவது தேர்ந்தெடுப்பானா? இந்த வேட்பாளரால் ஆளுங்கட்சிகளிடம் நம் தொகுதிக்கென எதையும் கேட்டுப் பெற்றுத் தர முடியாது என அவர்களுக்குத் தெரியாதா? இருந்தும் அந்த மக்கள் அதைச் செய்திருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்?

“யார் வந்தாலும் நமக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை” என்பதில் அவர்கள் அந்தளவுக்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பது இதிலிருந்தே புரியவில்லையா? “இந்த ஆள் காசாவது தருகிறார். அதற்காகவாவது வாக்களித்து விட்டுப் போவோம்” என்கிற மனநிலையில்தான் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகவில்லையா?

நாட்டையே கட்டியாளும் பா.ஜ.க-வை விட ‘இவர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ எனும் பொத்தானுக்கு அதிக வாக்குகள் விழுந்திருக்கின்றன என்றால், நாட்டிலுள்ள அத்தனை கட்சிகள் மீதும் மக்கள் நம்பிக்கை அற்றுப் போய் விட்டார்கள் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்? 

BJP the national party which got lesser vote than NOTA

ஆக, இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல் முடிவு, நாட்டிலுள்ள அத்தனை கட்சிகள் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதற்கான எச்சரிக்கை மணி! தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதற்கான மறுக்க முடியாத சான்று! ஒரு குடியரசு நாட்டில் இந்த அளவுக்கு அத்தனை கட்சிகள் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்படுவது மிகப் பெரிய ஆபத்துக்கான அறிகுறி!

இப்படித்தான், இந்தக் கோணத்தில்தான் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு எப்பொழுது பார்த்தாலும், மக்கள் பணத்துக்கு விலை போகிறார்கள், பல்லாங்குழி ஆடப் போகிறார்கள் என அரசியல் நோக்கர்களும் சமூக ஆர்வலர்களும் வறட்டு நியாயம் பேசிக் கொண்டிருப்பது, மக்களின் மனநிலையையோ கள நிலவரத்தையோ உணராத அரை வேக்காட்டுத்தனம்!

அப்படியே மக்கள் செய்வதுதான் தவறு என வைத்துக் கொண்டாலும் பொதுமக்கள் என்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அத்தனை பேரையும் அறிவுரை சொல்லித் திருத்துவது என்பது ஆகிற கதையில்லை. மாறாக, கட்சிக்காரர்கள் என்பவர்கள் பொதுமக்களை விடக் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள். அதுவும் நாடு - சமுகம் – அரசியல் போன்ற அமைப்பியல்கள் (systems) பற்றிய அறிவும் பொதுமக்களை விட அரசியலாளர்களுக்குத்தான் அதிகம். எனவே, இவர்களைத் திருத்துவதுதான் நடக்கக்கூடிய செயல்.

ஆகவே, “நீங்கள் என்னதான் அடுத்த வேளைச் சோற்றுக்கே வழியின்றித் தவித்தாலும், அரசியலாளர்கள் உங்கள் கண் முன்னே இலட்சக்கணக்கில் பணத்தை நீட்டினாலும் அதைத் தொடாமல் நேர்மையாக வாக்கைச் செலுத்த வேண்டும்” என மக்களுக்குப் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, “பணத்துக்கு மக்கள் வாக்களிப்பது என்பதே கட்சிகள் மீதான நம்பிக்கையின்மையின் அடையாளம்தான். இது இப்படியே தொடர்ந்தால் நாட்டின் குடியரசு அமைப்புக்கே ஆபத்து ஏற்படும். எனவே, காசு கொடுத்து வாக்குக் கேட்காமல் ஏதாவது நன்மையைச் செய்து அவர்களைக் கவர முயலுங்கள்” என அரசியலாளர்களுக்குப் புரிய வைப்பதே சமூக ஆர்வலர்களின் இன்றைய தலையாய பணி.

எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சிக்காரர்கள் காசு தருவதால்தான் மக்கள் வாங்குகிறார்களே ஒழிய, வாக்காளர்களே தேடிப் போய் எந்த வேட்பாளர் வீட்டுக் கதவையும் தட்டிக் காசு கேட்பதில்லை. எனவே, திருந்த வேண்டியது தலைவர்கள்தாமே தவிர மக்கள் இல்லை. வாக்குக்குப் பணம் வாங்கும் மக்களை இழிவாகப் பேசும் மேட்டுக்குடிக் கும்பல் இதை முதலில் உணர வேண்டும்.

அதற்காக நம் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. இந்தக் குற்றச்சாட்டை மக்கள் மீது சுமத்துவதன் மூலம் நாட்டின் மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை நாம் கவனிக்கத் தவறுகிறோம் என்பதைத்தான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். திருந்த வேண்டியவர்கள் மக்கள்தாம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உண்மைக் குற்றவாளிகளான அரசியலாளர்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதைத்தான் எடுத்துரைக்க முயல்கிறேன்.

ஆனால், இவ்வளவு பெரிய பண வெள்ளம், மத்திய – மாநில ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆகியவற்றின் செல்வாக்கு, அதிகார வல்லமை போன்ற அத்தனைக்கும் இடையில் எந்த விதச் செல்வாக்கோ செல்வ வலிமையோ இல்லாமல் நாம் தமிழர் கட்சி அனைவரும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் வாக்குகளைப் பெற்றிருக்கிறதே, அதுதான் இந்தத் தேர்தல் முடிவின் மிகப் பெரிய நற்கூறு (plus point).


கட்சிகள் மீதான மக்களின் நம்பகத்தன்மை ஒரேயடியாக ஒழிந்து விடவில்லை; இளைய தலைமுறையிடம் அது இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது என்பதன் அறிகுறி இது. ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி சொட்டுச் சொட்டாக உயர்ந்தே வருகிறது. பணமோ செல்வாக்கோ பெரிய திரைப்புகழோ இன்றிச் சீமான் எனும் தனி ஒரு மனிதனின் ஆழமான கருத்துக்களுக்கும் தொலைநோக்கான சிந்தனைகளுக்கும் கிடைக்கும் இந்த வெற்றிகள் புதிய கருத்தியல்களுக்கும் இளைய தலைவர்களுக்கும் மக்களிடம் வரவேற்பு இருப்பதைக் காட்டுகின்றன; தமிழ்த் தேசியம் எனும் புதிய கோட்பாட்டுக்கு அரசியல் அரங்கில் இருக்கும் வருங்காலத்தை உறுதிப்படுத்துகின்றன. இதைச் சீமான் தொடர்ந்து எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதில்தான் அவருடைய எதிர்காலமும் தமிழ்த் தேசியத்தின் எதிர்காலமும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

என்னைக் கேட்டால், யாருக்குமே வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் கூடத் தங்கள் நிலைப்பாட்டைப் பதிவு செய்ய வாய்ப்பளித்த பின்னும் ஆயிரத்தெட்டு நுரைநாட்டியம் சொல்லிக் கொண்டு, வாக்களிக்கப் போகாமல் இணையத்தில் அரசியல் பேசிக் கொண்டிருக்கும் மெத்தப் படித்த மேதாவிகள் வாழும் தொகுதிகளை விட வாங்கிய காசுக்காகவாவது தங்கள் மக்களாட்சிக் கடமையை நிறைவேற்றும் இராதாகிருட்டிணன் நகர்கள் எவ்வளவோ மேலானவையே!

தமிழர்களை இந்நாட்டுக் குடிமக்களாகவே மதிக்காத தேசியக் கட்சிகள் தங்களை அரியணையில் அமர வைத்து விட்டால் மட்டும் நம்மைத் தலை மேல் தூக்கிக் கொண்டாடத் தொடங்கி விடுவார்கள் என நம்பும் பட்டம் பெற்ற அரை மடையர்களை விடத் தேர்தல் அரசியலில் யாருமே சரியில்லை என்பதை நடைமுறைக் காரணங்களோடு பிட்டுப் பிட்டு வைக்கும் படிக்காத அந்த மக்கள் அறிவாளிகளே!

இந்நேரம் இதே இடைத்தேர்தல் மயிலாப்பூரிலோ மடிப்பாக்கத்திலோ நடந்திருந்தால் குசராத்தில் பா.ஜ.க அடைந்த வெற்றியின் தாக்கம் ஓரளவாவது எதிரொலிக்காமல் இருந்திருக்காது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் துளியும் நினைத்துப் பார்க்காமல், தமிழர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத பா.ஜ.க-வுக்கு ‘இவர்களில் யாருக்கும் வாக்கில்லை’ எனும் தேர்வுக்கு அளித்த வாக்குகளை விடக் குறைவாக வாக்களித்து பெரியார் நினைவு நாளும் அதுவுமாக இது பெரியார் மண் என்பதை உறுதிப்படுத்திய, தமிழினத்தின் தன்மானத்தை நிலைநாட்டிய எமதருமைச் சென்னை மக்கள் பெருமைக்குரியவர்களே! 
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧) தமிழ் குட் ரிடர்ன்சு, ௨) தீக்கதிர், ௩) புதிய தலைமுறை.

தொடர்புடைய பதிவுகள்:
மாற்று அரசியல் தோற்று விட்டதா? - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல்!

தேர்தல் - 2016 (3) | பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பதில் உள்ள ஆபத்துகள் - ஒரு பார்வை!
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. எல்லாவற்றுக்கும் மனசாட்சியை துணைக்கழைப்பது போல் இருக்கிறது ஏன் என்றால் எப்படியாவதுசொல்லி நியாயப்படுத்தக்கூடிய ஒன்று மனசாட்சிதான் ஆர் கே நகர் வாசிகளுக்கு அது நிறையவே உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹ்ஹா! இதைத்தான் நான் தொடக்கத்திலேயே சொன்னேன் ஐயா! உழைக்கும் மக்கள் மீதான நாம் பொதுப் பார்வையின் கோளாறு இது. நன்றி!

      நீக்கு
  2. பணத்துக்கு வாக்களிப்பது நாளைய தலைமுறைக்கு நஞ்சு வைப்பதற்கு ஒப்பாகும்.
    தமிழ்நாட்டின் அரச மொழி தமிழ் என்று அங்கீகரித்த பின்னும் பயன்படுத்தாமல் இருப்பதும் இவ்வாறே!
    தமிழ்நாட்டின் மாற்றம் கட்சிகளை விட மக்களில் தான் தங்கியுள்ளது.
    மக்கள் மனங்களில் மாற்றம் வரின் தமிழ்நாடு முன்னேற இடமுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! இதைப் பற்றித்தான் நான் கட்டுரையிலும் குறிப்பட்டிருந்தேன். பொதுமக்கள் என்பவர்கள் பல கோடிப் பேர். அவர்கள் பலதரப்பட்டவர்கள். அத்தனை பேரும் திருந்தினால்தான் நாடு உருப்படும் என்றால் எந்த நாடும் உருப்பட முடியாது. மாறாக, கட்சிகளில் இருப்பவர்கள் நாட்டின் அரசியலமைப்பு, வாக்குக்குப் பணம் கொடுப்பதால் ஏற்படும் தீமை, தருமம், நியாயம் எல்லாம் அறிந்தவர்கள். எனவே அவர்களைத் திருத்துவதுதான் எளிது. அவர்களுக்கு அறிவு வர வேண்டும் என்பதற்குத்தான் இந்தக் கட்டுரையே! பணத்துக்கு வாக்களிப்பதால் மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு வாக்கைப் பணம் கொடுத்து வாங்குவதால் கட்சி அரசியலுக்கும் தீமை உண்டு. இதனால் நாட்டில் மக்களாட்சி அமைப்பு சீர்குலைந்து மக்களுக்கு நாட்டின் அரசியலமைப்பு, கட்சிகள் ஆகிய அனைத்தின் மீதும் நம்பிக்கை அற்றுப் போய் தேசிய அமைப்புச் சீர்குலையும். இதை அரசியலாளர்கள் உணர வேண்டியே இதை எழுதினேன். ஆனால், நண்பர்களான நீங்கள் எல்லோருமே கூட இதைப் புரிந்து கொள்ளாமல் எதிர்மறையாகக் கருத்திடுவதைப் பார்த்தால் நான் சொல்ல நினைத்ததைச் சரியாகச் சொல்லவில்லை எனத் தோன்றுகிறது.

      இருந்தாலும் என் கட்டுரையைத் தவறாகப் புரிந்து கொள்ளாமல் எதிர்மறைக் கருத்தையும் வழமை போல் அன்புடன் தெரிவித்தமைக்கு நன்றி ஐயா!

      நீக்கு
  3. பதில்கள்
    1. பெயர் சொல்லக் கூட முதுகெலும்பில்லாத பேடிப் பயல்களுக்குக் கருத்து வேறு! தூ!...

      நீக்கு
  4. சகோ! உங்கள் கட்டுரை ஆழமான பார்வையுடன் அழகாக விரிந்துள்ளது. மக்களுக்கு அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கை குறைந்துவருகிறது என்பது நோட்டாவின் மூலம் தெரிகிறது. அது போன்று மக்கள் ஏன் பணம் வாங்குகிறார்கள் என்பதற்கான காரணங்கள் ஒரு பக்கம் சரி என்று தெரிந்தாலும், 640 நோட்டா விழுந்து அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவிக்க முடிந்திருக்கிறது என்றால், மீதமுள்ளவரும் அப்படி, "எங்கள் தொகுதியில்/பகுதியில் இது வரை எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை...காலம் காலமாக நாங்கள் இதே சென்னை மாநகரத்தில் எந்தவித முன்னெற்றமும் இல்லாமல்தான் வாழ்ந்துவருகிறோம் இதற்கு என்ன பதில்" என்று கேட்பது போல் நீங்கள் அப்ப்குதி முன்னேறவில்லை என்று சொல்லியிருக்கும் அதே காரணங்களையே இவர்கள் முன்வைத்து தேர்தலை எதிர்த்திருந்தால் இன்னும் அரசியல் கட்சிகளுக்குப் பயம் வந்திருக்கும்...எப்போதுமே ஒரு புரட்சி வந்தால் மட்டுமே மாற்றம் வரும் என்றே தோன்றுகிறது. இது எனது தனிப்பட்டக் கருத்து சகோ.

    உங்கள் கட்டுரையின் கருத்து புரியாமல் இல்லை...ஆனால் இது எனது தனிப்பட்டக் கருத்து...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ கீதா அவர்களே! வழக்கம் போல் உங்கள் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி!

      உங்களைப் போல் எதிர்க் கருத்தையும் இவ்வளவு அன்புடன் சொல்பவர்கள் எத்தனை பேர். இந்தக் கட்டுரையை எழுதி விட்டு எத்தனை பேரிடம் என்னென்ன திட்டு வாங்கினேன் என்பதை நான் மட்டுமே அறிவேன். உங்கள் கருத்து அவற்றுக்கு மருந்திடுவது போல் உள்ளது. மிக்க நன்றி!

      தேர்தலைத் தவிர்க்கலாம் எனும் உங்கள் பரிந்துரை முறையானதே. இதற்கு முன்னும் தமிழ்நாட்டின் பற்பல இடங்களில் மக்கள் அப்படிச் செய்திருப்பதும் ஆனால் அதனால் பலன் ஏதும் கிடைத்ததில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. ஆனால், அதன் காரணமாகத்தான் இராதாகிருட்டிணன் நகர் மக்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என நான் சப்பைக்கட்டுக் கட்ட மாட்டேன். :-)

      பொதுவாக, நம் மாநிலத்தில் பலருக்கும் வாக்களிக்கப் பணம் வாங்குவது வழக்கமாகவே ஆகிவிட்டது. இதை அவர்கள் தவறாகக் கூட நினைப்பதில்லை. அரசின் நலத்திட்டக் குறைபாடுகள், அரசியலாளர்களின் அத்துமீறல்கள், அரசு அதிகாரிகளின் கையூட்டு முதலான முறைகேடான நடவடிக்கைகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி அப்படிப்பட்ட வழிகளில் தாங்கள் இழந்த பணத்தையே தாங்கள் இந்த வழியில் திரும்பப் பெறுவதாக அந்த மக்கள் அதை நியாயப்படுத்தத் தொடங்கி விட்டார்கள். அதை நான் ஆதரிக்கவில்லை.

      போதாததற்கு, அரசியல் தலைவர்களே கூட வாக்குக்குப் பணமளித்தால் வாங்கிக் கொள்ளுமாறும், அதைப் பெற்றுக் கொண்டு வாக்கை மட்டும் தங்களுக்கு அளிக்குமாறும் பேசுகிறார்கள். ஓரளவு சட்டம் அறிந்த, அரசியலமைப்பு - தேர்தல் முறைகேடுகளின் விளைவுகள் போன்றவற்றை அறிந்த தலைவர்களே இப்படியிருக்கும்பொழுது படிக்காத மக்களை நாம் என்ன சொல்வது?! அதனால்தான் முதலில் அரசியலாளர்கள் திருந்த வேண்டும் என்கிறேன் நான்.

      என் வாதம் மிகவும் எளிமையானது. அறிவு, பொருளாதாரம், வாழ்க்கைத்தரம் முதலான பல வகைகளிலும் ஒப்பீட்டளவில் மக்களை விட அரசியலாளர்களே மேலே இருக்கிறார்கள். எண்ணிக்கையளவிலும் அவர்களே குறைவாக இருக்கிறார்கள். எனவே, அவர்களைத் திருத்துவதே எளிது என்கிறேன் நான். வேறொன்றுமில்லை.

      என் வாதங்களும், என்னுடைய இத்தகைய கருத்துக்களும் நீங்கள் ஏற்கெனவே அறிந்தவையே. இருந்தாலும், இத்தகைய கருத்துக்களை வெளியிட உங்கள் கருத்துரையை ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொண்டேன், அவ்வளவுதான். மற்றபடி, நீங்கள் கூறுவது போல் மக்கள் புரட்சிக்கு உங்களைப் போலவே சிறியேனும் என்றும் ஆதரவாளன்தான் என்பதும் நீங்கள் அறிந்ததே! :-))

      நீக்கு
  5. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழைப்புக்கு நன்றி ஐயா! நல்ல பதிவு! படித்து, என் கருத்தையும் தெரிவித்திருக்கிறேன்.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்