.

சனி, அக்டோபர் 03, 2026

கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் சான்றிதழ் பெற்ற எங்கள் ஆய்வுக் கட்டுரை

ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையமும் இணைந்து கண்ணதாசன் நூற்றாண்டுக்கான பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்கு ஆய்வுக் கட்டுரைகள் கோரி அறிவித்த அன்றே என்னை எழுதச் சொல்லித் தூண்டினார் ஆருயிர் நண்பரும் மைத்துனருமான ச.பிரகாசு அவர்கள். அதற்கிணங்க, நானும் அவரும் கலந்துரையாடி, 'கவியரசு கண்ணதாசன் பாடல்களில் சொல்லாட்சி' எனும் தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரையைக் கடந்த 2026.09.25 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கிலே தன் மிடுக்கான குரலில் அரங்கேற்றினார் அவர்.

ஆப்ரிக்கா முத்தமிழ்க் கூட நிறுவனர் அதியமான் கார்த்திக், பாக்தாத் தமிழ்ச் சங்கத் தலைவர் சாதிக் பாட்சா என அயல்நாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் முதல் நம் ஐக்கூ மாமன்னர் மு.முருகேசு, கவிஞர் அறிவுமதி, திரைப் பாடலாசிரியர் கண்மணி சுப்பு எனத் தமிழ்நாட்டுப் பெரும்புள்ளிகள் வரை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்த இப்படியொரு நிகழ்வில் எங்கள் கட்டுரையும் மேடையேறியதில் பெருமகிழ்ச்சி! 🥳

இன்னும் முனைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் எனப் பலரும் தாக்கல் செய்த ஆய்வுக் கட்டுரைகளுடன் எங்கள் கட்டுரையும் உடனே 'காலத்தின் கலைக்களஞ்சியம் கவியரசு கண்ணதாசனின் படைப்புகளும் - பார்வைகளும்' என நிகழ்ச்சியின் தலைப்பிலேயே பன்னாட்டுத் தரப் புத்தக எண்ணுடன் (ISBN) மலராகவும் வெளியிடப்பட்டது. கூடவே எங்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நேற்று அந்த மலரில் வெளிவந்த கட்டுரை இதோ நம் வலைப்பூவில் உங்கள் கனிவான பார்வைக்குப் பின்வருமாறு👇🏽


கவியரசு கண்ணதாசன் பாடல்களில் சொல்லாட்சி

முன்னுரை

மணிப்பிரவாள நடை கொடுங்கோலோச்சிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகில் தன் தூயதமிழ்ச் சொல்லாட்சியால் தமிழன்னையின் செங்கோலாட்சியை மீட்டவர்களுள் முக்கியமானவர் கண்ணதாசன்! மேடைதோறும் நல்ல தமிழை முன்னெடுத்த திராவிட இயக்கவாதிகளுள் ஒருவராகத் திரையுலகுக்கு வந்த கண்ணதாசன்¹ தெவிட்டாத தேன்தமிழ்ச் சொற்களால் தெள்ளமுதப் பாடல்களை வார்த்து உண்மைத் தமிழின் மேன்மையை எளிய மக்களும் உணரச் செய்தார். அழகியலும் புதுமையும் மொழிநயமும் தமிழ் ஆளுமையும் மிளிரும் கண்ணதாசனின் அப்பேர்ப்பட்ட சொல்லாட்சியை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தமிழினிமை காட்டும் சொல்லாட்சி

தமிழின் சிறப்பே அதன் இனிமைதான் எனப் பெருமை பேசுவது தமிழர் வழக்கம். தமிழின் அந்த இனிமைக்கு உண்மையான காரணம் அதன் மெல்லின - இடையின எழுத்து வகைகள்தாம். ஆங்கிலத்தில் இரண்டு பகரம், இந்தியில் நான்கு ககரம் என உலக மொழிகளிலெல்லாம் வல்லின வகைக்கே அதிக எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டிருக்க, தமிழில் மட்டும்தான் இடையினத்துக்கும் மெல்லினத்துக்கும் அதிக எழுத்துக்கள் உள்ளன. ல-ள-ழ, ண-ந-ன ஆகிய இந்தத் தமிழின் சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட சொற்களை அடுத்தடுத்து அடுக்கி எழுதப்பட்டிருப்பதுதான் கண்ணதாசனின் “பேசுவது கிளியா” பாடல். இது தமிழ் மொழியில் அப்படி என்னதான் இனிமை இருக்கிறது என்பதை உணரச் சரியான படைப்பு.
“பேசுவது கிளியா – இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்துமலர்க் கொடியா”
எனத் தொடங்கும் பாடலில், ‘சேரனுக்கு உறவு’, ‘செந்தமிழர் நிலவு’, ‘வில்லேந்தும் காவலன்’, ‘வேல்விழியாள் காதலன்’ என்றெல்லாம் எழுதி ர-ற, ழ-ல, ள-ல ஆகிய மாறுபட்ட மெல்லின, இடையின எழுத்துக்களை அடுத்தடுத்து இடம்பெறச் செய்திருப்பார் கவியரசர். வாய்விட்டுப் பாடிப் பார்த்தால் இந்த வரிகளை உச்சரிக்கும்பொழுதே நாவில் எச்சில் ஊறுவதை உணரலாம்.

வீரச்செறிவு ஊட்டும் சொல்லாட்சி

திராவிடத்தின் தேசியப்பண் (Anthem of Dravidism) என்றே சொல்லத்தக்கது கண்ணதாசன் எழுதிய “அச்சம் என்பது மடமையடா”. ‘மன்னாதி மன்னன்’ படத்தில் கதைநாயகன் எம்.ஜி.ஆர்., அறிமுகத்துக்கான (hero intro) இந்தப் பாடலைத் தமிழர் வரலாறு, தமிழ்ப் பெருமை, வாழ்வியல் எனச் செறிவான கருத்துக்களை எடுத்துரைப்பதாகவும் அமைத்துக் கொண்டது கவியரசரின் திறமை!
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா”
என இளைஞர்களை நாட்டுப்பணிக்கு வர அழைப்பு விடுக்கும் பாணியில் எழுதப்பட்ட இப்பாடல், திராவிட இயக்கங்களின் மேடைதோறும் முழங்கியது.¹
பல்லவியில் இப்படிக் கடமை உணர்வை ஊட்டியவர், சரணத்தில்,
“கனக விஜயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேரமகன்!
இமய வரம்பினில் மீன்கொடி ஏந்தி
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”
எனத் தமிழர் வரலாற்றை நினைவுபடுத்தி இன உணர்வை ஊட்டுகிறார். அடுத்து,
“கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை”
என மொழிப்பற்றையும் ஏற்படுத்துகிறார்.
பல தலைவர்கள் மேடைதோறும் மணிக்கணக்கில் பேசியும் ஏடுகள்தோறும் பக்கம் பக்கமாய் எழுதியும் தட்டியெழுப்பி வந்த கடமையுணர்ச்சி, இன உணர்வு, தாய்மொழிப் பற்று ஆகிய மூன்றையும் இப்படி மூன்றே பத்திகளில் அடக்கி, அடங்கிக் கிடந்த தமிழ் இனத்தை வீறுகொண்டு எழச் செய்த கண்ணதாசனின் எழுத்துவன்மை வியக்கத்தக்கது!

இலக்கியச்சுவை கூட்டும் சொல்லாட்சி

கண்ணதாசன் எனும் பெருங்கவிஞனின் உச்சப்படைப்பு (masterpiece) எனக் கேட்டால் உடனே நினைவுத் திரையை விலக்குவது “அத்திக்காய் காய் காய்”.
நிலவு ஒளிவீசுவதைக் காய்தல் என்போம். அப்படிக் காயும் நிலவொளி காதல் ஏக்கத்தில் இருப்பவர்களுக்கு மேலும் ஏக்கத்தைத் தூண்டித் துன்புறுத்தும் என்பது இலக்கிய வழக்கு. இதை அறிந்து கொண்டால்தான் இந்தப் பாடலே புரியும்.
படத்தில் ஒரு முதலிரவுக் காட்சி. தலைவன், தலைவி இருவருமே காதல் ஏக்கத்தில் இருந்தாலும் வெட்கம் காரணமாகப் பேசிக் கொள்ளாமலே இருக்கிறார்கள். நேரம் விரைகிறது. அந்த நேரத்தில் சாளரம் வழியே வீசும் நிலவின் ஒளி ஏற்கெனவே ஏக்கத்தில் இருக்கும் இருவருக்கும் மேலும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. அப்பொழுதுதான் இந்தப் பாடல் பிறக்கிறது.
“அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல் பெண்ணல்லவோ”
எனத் தலைவி பாடுகிறாள். அதாவது, “என் மீது உன் ஒளியைப் பாய்ச்சாதே - அதாவது காயாதே - வெண்ணிலவே! நான் ஏற்கெனவே காதல் ஏக்கத்தில் தவிக்கிறேன். அந்தப் பக்கமாய், என் எதிர்த்திசையில் - அதாவது அந்தத் திக்கில் நின்று கொண்டு - என் ஏக்கம் புரிந்தும் புரியாதது போல் அமர்ந்திருக்கும் என் தலைவன் மீது உன் ஒளியைச் செலுத்து” என்கிறாள் தலைவி. இங்கே அத்திக்காய் என்பது அந்தத் திக்காய் - அதாவது அந்தத் திசையில் - எனவும் இத்திக்காய் என்பது இந்தத் திசையில் எனவும் பொருள்படும்.
ஆலம் என்றால் வானம் என ஒரு பொருள் உண்டு. ஆகவே ‘ஆலங்காய் வெண்ணிலவே’ என்றால் ‘வான மரத்தின் காயாக இருக்கும் வெண்ணிலவே’ எனப் பொருள். இப்படி, காய் எனும் ஒரு சொல்லை வைத்துப் பாடல் முழுவதும் அப்படி ஓர் ஆட்டத்தை நடத்தியிருப்பார் கண்ணதாசன்.
உண்மையில், பழைய தனிப்பாடல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பாடல்தான் இது.
“அத்திக்காய் காய்காய்காய்! ஆலங்காய் வெண்மதியே!
இத்திக்காய்க் காய்ந்துனக்கு என்னபயன் - சற்றும்என்மேல்
பற்றற்று அவரைக்காய்! பாவைக்காய்க் கோவைக்காய்
சொற்றக்காய் தூதுளங் காய்!”¹
என்கிற அந்த மூலப் பாடலில் மொத்தம் எட்டே காய்கள்தாம். ஆனால், கண்ணதாசனோ இந்தப் பாடலில் மொத்தம் முப்பத்தொரு காய்களை எழுதிக் குவித்திருப்பார்! ஒவ்வொரு காயும் ஒவ்வொரு விதம். காய்தல் என்பதற்கு, முன்பே சொன்னது போல நிலா காய்தல் மட்டுமின்றி, சினம் கொள்ளுதல், வாடுதல் போன்ற பல பொருள்கள் உண்டு. தவிர, அவருக்காக, இவருக்காக போன்ற சொற்களின் இறுதியில் வரும் ‘காக’ எனும் சொல்லுருபையும் ‘காய்’ எனச் சொல்வது வழக்கம். இப்படி இந்தப் பாடல் முழுவதும் காய் எனும் சொல்லைப் பல்வேறு பொருள்களிலும் மாற்றி மாற்றி எழுதிப் புல்லரிக்க வைப்பார் கவியரசர்.

உணர்வுநயம் மீட்டும் சொல்லாட்சி

கண்ணதாசன் எனும் பெயரைச் சொன்னால் கூடவே மனவானில் தோன்றும் இன்னொரு முகம் எம்.எஸ்.விஸ்வநாதன். காரணம், அவர் பாடலுக்கு அதிகம் இசையமைத்தவர் என்பதால் மட்டுமில்லை, இசையும் தமிழுமாய் இருவரும் இணைபிரியா நண்பர்களாய்த் திகழ்ந்ததாலும்தான். ஆனால் மெல்லிசை மன்னரைத் தாண்டி இசைஞானி இளையராஜாவுக்கும் பல பாடல்களை எழுதியிருக்கிறார் கண்ணதாசன். அவற்றுள் யாராலும் மறக்க முடியாதது, கவியரசரின் கடைசிப் பாடலான “கண்ணே கலைமானே”.
நாயகனுக்கு நாயகி மீது காதல். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் நாயகியோ உள்ளத்தளவில் ஒரு குழந்தை. அவளைப் பார்த்து நாயகன் என்ன பாட முடியும்? அவளை அழகே அமுதே எனக் கொஞ்ச முடியாது, மலரே விழியே என வருணிக்க முடியாது. எனவே ஒரு குழந்தைக்குத் தாலாட்டுப் பாடுவது போல நாயகன் பாடுகிறான். அதனால்தான் “கண்ணே கலைமானே” எனக் குழந்தையை வருணிப்பது போல் தொடங்குகிறது பல்லவி.
அதே நேரம், உள்ளத்தளவில் அவள் குழந்தையாக இருந்தாலும் முதல் முறை பார்க்கும்பொழுது அவனுக்கு அது தெரியாது. அவள் வயதுடைய மற்ற பெண்களைப் போலத்தான் அவளும் என்றெண்ணி, பார்த்தபொழுதே அவள் மீது இவன் காதல் கொண்டு விட்டான். இப்பொழுது அவனால் அந்தக் காதலைத் தந்தையன்பாக மாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. அதற்காகத்தான் அடுத்த அடியிலேயே “கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே” என்று எழுதினார்.
இப்படி, காதல் பாடலாகவே இருந்தாலும் காதல்சுவை சொட்டும் சொற்கள் இல்லாமல், தாலாட்டுப் பாடலாகவே இருந்தாலும் குழந்தைக்கான பாடலாக இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பயணிக்கும் நூதனமான பாடல் இது! பாட்டனுபவம், வாழ்வனுபவம் இரண்டிலும் கரை கண்டவர் என்பதால் இந்தப் பயணத்தை அழகாக நடத்திக் காட்டிருக்கிறார் கண்ணதாசன்.

முடிவுரை

இதுவரை கண்ணதாசக் கடலில் நான்கு துளிகள் மட்டுமே பார்த்தோம். இன்னும் நட்பு, தாய்மை, தந்தைமை, உடன்பிறப்புப் பாசம் என அவர் எழுதிக் குவித்திருக்கும் 4500 பாடல்களையும்² ஆராய்ந்தால் தொகுதி தொகுதியாய்ப் பல நூல்கள் எழுதலாம் அவருடைய சொல்லாட்சி பற்றி. பாடல்கள் எத்தனை இருந்தாலும் அவை அனைத்துக்கும் அடிப்படை மனித உணர்ச்சி. அந்த உணர்ச்சி என்பது மனித இனத்திடம் இருக்கும் காலம் வரை கவியரசரின் பாடல்கள் வாழும் வசந்தமாய்!

சான்றுகள்:

1) கவிஞர் கண்ணதாசனும் விமர்சனங்களும், தி.தமிழ் இளங்கோ, முதுநிலைத் தமிழ் இலக்கியம், https://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post.html
2) ‘சொன்னது நீதானா’ - காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்களும் சுவாரசியப் பின்னணியும், முரளிதரன் காசி விஸ்வநாதன், https://www.bbc.com/tamil/articles/c0l4z9jwyrlo

✒️ இ.பு.ஞானப்பிரகாசன் & ச.பிரகாஷ்

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்தக் கட்டுரை சென்றடைய உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறோம்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

0 comments:

கருத்துரையிடுக

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (46) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) ஆய்வு (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கண்ணதாசன் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (40) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (10) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (4) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்