.

ஞாயிறு, மே 18, 2014

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!


Genocide Rememberance!Genocide Rememberance!

யிற்று!
அப்படி இப்படி என ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன!

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த முறை நாம் நம் மெழுகுத்திரிகளைக் கண்களில் நீரோடு மட்டுமில்லாமல், உதட்டில் சிறு புன்னகையோடும் ஏற்றலாம். தமிழினப் படுகொலைக்குப் பழிவாங்கி விட்ட நிறைவில்! காங்கிரசை வீழ்த்திய மகிழ்வில்!

ஆம், வெளிவந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளை ஒட்டி நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பரிசு! சிறந்த ஆறுதல்! கடந்த ஐந்தாண்டுக்காலத் தமிழர் போராட்டங்களின் பெருவெற்றி!

இது காங்கிரசுக்கு வாழ்வா சாவா தேர்தல் எனக் காரணங்களோடு விளக்கினார் தலைசிறந்த அரசியல் நோக்கரான ப.திருமாவேலன் அவர்கள், தமிழின் தனிப்பெரும் ஊடகமான ஆனந்த விகடனில். அப்படிப் பார்த்தால், இந்தத் தேர்தலில் காங்கிரசை நாம் சாகடித்து விட்டோம் என்றே சொல்லலாம். ராஜீவ் கொலைப் பழியை அதில் தொடர்பே இல்லாத தமிழர்கள் மீது சுமத்தியதோடில்லாமல், அந்த ஒற்றை மனிதன் கொல்லப்பட்டதற்காக நம் இனத்தையே அழித்த காங்கிரசு, இப்பொழுது அதுவும் அழிந்து விட்டது எனச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு வீழ்ச்சியை அடைந்திருக்கிறது! தமிழர்களின் இந்தக் கனவை நனவாக்கிய இந்திய உடன்பிறப்புகளுக்கு முதலில் கோடானுகோடி நன்றி! 

நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலித்ததா? சான்றுகள் என்ன?

ஈழப் பிரச்சினை இந்தத் தேர்தலில் வலுவாகவே எதிரொலித்திருக்கிறது என்பதற்குத் தி.மு.க-வின் படுதோல்வி முதல் சான்று!

காங்கிரசு மீதாவது மக்களுக்கு ஏராளமான குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், தி.மு.க மீது அலைக்கற்றை ஊழலையும், தமிழினத் துரோகத்தையும் தவிர வேறென்ன குற்றச்சாட்டு இருந்தது? ஊழல் குற்றச்சாட்டுகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன தமிழ் மக்கள் இந்த இரண்டில் எந்தக் காரணத்துக்கு அதிக முக்கியத்துவத்தைத் தந்திருப்பார்கள் என்பது ஊகிக்க முடியாததா என்ன?

2004 நாடாளுமன்றத் தேர்தலிலும், இனப்படுகொலையைக் காங்கிரசு நடத்திக் கொண்டிருந்தபொழுதே அவர்களுடன் கூட்டணி வைத்துச் சந்தித்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி மாலை சூடிய தி.மு.க, இதற்கு முன்பும் அலைக்கற்றை ஊழல் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள் பலவற்றில் சிக்கிக் கொண்டிருந்தபொழுதும் இந்தளவுக்கு முழுத் தோல்வியைச் சந்தித்திராத தி.மு.க, இந்தத் தேர்தலில் இப்படியொரு படுதோல்வியைத் தழுவியிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஈழப் பிரச்சினை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

ஆனால், ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!’ என்பது போலத்தான் தி.மு.க இந்தத் தோல்வியைப் பற்றிக் கருத்துரைத்திருக்கிறது. தோல்விகளும், இழப்புகளும் தி.மு.க-வுக்குப் புதியவையல்ல. எத்தனையோ பெருந்தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து வந்த கட்சிதான் அது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், இதுவரை தி.மு.க கண்ட தோல்விகளெல்லாம் அரசியல்ரீதியானவை. ஊழல், கையூட்டு (இலஞ்சம்), அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஆட்சியில் குறைபாடு போன்ற பொதுவான குற்றச்சாட்டுகள்தான் அந்தத் தோல்விகளுக்குக் காரணங்களாக இருந்தன. ஆனால், இந்தத் தோல்வி அப்படியில்லை. எந்தக் காரணத்துக்காகத் தி.மு.க எனும் கட்சி உருவாக்கப்பட்டதோ, அந்த அடிப்படையிலிருந்தே அந்தக் கட்சி விலகி வெகுதொலைவு போய்விட்டதால் மக்கள் இந்தக் கட்சியை வெறுத்து, வேண்டாம் என ஒதுக்கி விட்டதன் அடையாளம்தான் இந்தப் படுதோல்வி!

உண்மையில் தி.மு.க எனும் கட்சி உருவாக்கப்பட்டதே காங்கிரசுக்கு எதிராகத்தான். காங்கிரசு, பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை தமிழர்களுக்கான உண்மையான பிரதிநிதிகளாகச் செயல்படாததால்தான், தமிழர்களைத் தேசிய அளவிலும் உலகளவிலும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கென்று ஒரு தனி அமைப்பு வேண்டும் என்பதற்காக இங்கே திராவிட இயக்கங்கள் மலர்ந்தன. அதனால்தான், இந்தியாவின் மற்ற பல மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலைப் போலவே மக்கள் மாநிலக் கட்சிகளின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள்.

ஆனால், இவற்றையெல்லாம் மொத்தமாக மறந்து விட்டு, ஏதோ ஜெயலலிதாவை எதிர்ப்பதற்காகத்தான் தி.மு.க-வே பிறந்தது போல, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முழுக்க முழுக்க ஜெயலலிதாவைக் குறி வைத்தே பரப்புரை செய்தார்கள் தி.முக-வினர். கருணாநிதியோ, ஸ்டாலினோ, தி.மு.க-வில் மற்றவர்களோ தங்கள் பரப்புரையில் நடுவணரசு பற்றியோ, இந்திய அரசால் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் பற்றியோ, தாங்கள் மீண்டும் நடுவணரசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க என்ன செய்வோம் என்பது பற்றியோ எதுவும் பேசாமல், முழுக்க முழுக்க மாநில அரசின் குறைகளைப் பற்றியே பேசினர்.

போதாக் குறைக்கு, மூன்றாவது அணியுடனும் கூட்டணியில் இல்லாமல், ‘வென்றால் மதச்சார்பற்ற ஆட்சிக்கு ஆதரவு’ என்றும் தி.மு.க அறிவித்தது, இவர்களுக்கு வாக்களித்தால் மீண்டும் காங்கிரசைத்தான் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது. ‘மக்களாகிய நீங்கள் எவ்வளவுதான் காங்கிரசு மீது உச்சக்கட்ட வெறுப்பை உமிழ்ந்தாலும் நாங்கள் அந்தக் கட்சியோடுதான் தோழமை பாராட்டுவோம்’ என்ற தி.மு.க-வின் இந்த அருவெறுப்பான நிலைப்பாடு, அந்தக் கட்சி எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படைக் காரணத்திலிருந்தே அது முற்றுமுழுதாக விலகி விட்டது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கி விட்டது. தேசியக் கட்சிகளுக்கு மாற்று (alternate) வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், தேசியக் கட்சி ஒன்று தமிழர்களை அழிக்கும் அளவுக்குப் போன பிறகும், ‘அந்தக் கட்சிக்கு அடிவருடியாகத்தான் நாங்கள் இருப்போம்’ என இந்தத் தேர்தலில் வெளிப்படையாகக் காட்டி விட்டதால், இனி, தி.மு.க தமிழர்களின் பிரதிநிதியாகத் திகழாது; ஆட்சியைப் பிடிக்க மட்டுமே அரசியலில் ஈடுபடும் ஒரு பொத்தாம்பொதுவான கட்சியாகத்தான் இருக்கும் எனத் தமிழர்கள் நினைத்து விட்டதன் விளைவு, ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டுவதற்கும் சேர்த்துக் காட்டுவதற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டதன் விளைவு – இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு! இதைத் தி.மு.க உணர்கிறதோ இல்லையோ, தி.மு.க-வின் இடத்தைப் பிடிக்க இன்று புதிதாகக் கிளம்பியிருக்கும் கட்சிகள் கண்டிப்பாக உணர வேண்டும்! 

ம.தி.மு.க-வின் அதிர்ச்சித் தோல்வி! காரணங்கள் என்ன?

தமிழினப் பகைவர்களும் ஆட்காட்டிகளும் அடைந்த இந்தப் படுதோல்வியைக் கொண்டாட முடியாமல் செய்து விட்டது ம.தி.மு.க-வின் தோல்வி!

தமிழர் பிரச்சினைகள் எல்லாவற்றுக்காகவும் குரல் கொடுக்கிற, களமிறங்கிப் போராடுகிற, எதிர்க் கட்சிகளால் கூட விரல் நீட்டிப் பேச முடியாத அளவுக்குப் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைப்பிடிக்கிற ம.தி.மு.க-வுக்கு மீண்டும் பெருந்தோல்வியையே பரிசளித்திருக்கிறார்கள் தமிழ் மக்கள்!

ஆனால், இந்த முறை இதற்காக நாம் மக்களை மட்டும் குறை சொல்ல முடியாது; நம் பக்கமும் பிழை இருக்கிறது என்பதை ம.தி.மு.க தோழர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்! காரணம், அமைத்த கூட்டணி அப்படி!

பா.ம.க-வுக்குச் சாதிய வாக்கு வங்கி எப்பொழுதும் உண்டு. ஆகவே, அவர்கள் ஓரிடத்திலாவது தேறி விட்டார்கள். பா.ஜ.க-வுக்குச் சமயவாதிகள், காங்கிரசைப் பிடிக்காத தேசியவாதிகள் ஆகியோரின் வாக்கு வங்கி உண்டு. ஆகையால், அவர்களும் ஓரிடத்தைக் கைப்பற்றி விட்டார்கள். ம.தி.மு.க-வுக்கு இப்படிப்பட்ட குறுகிய அடையாளம் எதுவும் கிடையாது! தமிழ் மக்கள் அனைவருக்காகவும், மனிதநேயத்துக்காகவும் பாடுபடுகிற, ‘யாவரும் கேளிர்’ என்கிற பரந்துபட்ட மனப்பான்மை கொண்ட கட்சி அது. தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்கும் இருப்பது போன்ற கவர்ச்சி வாக்கு வங்கி எனும் கீழ்த்தர வாக்கு வங்கியும் அதற்குக் கிடையாது. ம.தி.மு.க-வின் ஒரே வாக்கு வங்கி தமிழீழ ஆதரவாளர்கள்தாம். ஆனால், தமிழ்நாட்டின் மொத்த ஈழ ஆதரவு அலையும் ம.தி.மு.க-வின் பக்கம் வீச முடியாதபடி நிகழ்ச்சிகள் அரங்கேறி விட்டன.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பா.ஜ.க அணியில் இருந்தாலும் வெறும் ஏழு தொகுதிகளில் போட்டியிடும் அவர்களால், அத்தனையிலும் வென்றால் கூட அவற்றை வைத்துக்கொண்டு பா.ஜ.க-வைத் தமிழர்கள் சார்பாகத் திருப்ப முடியுமா என மக்களுக்குத் தொடக்கத்திலேயே ஐயம் இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தலுக்கு முன்பே, “தனி ஈழத்தை ஒருபோதும் பா.ஜ.க ஆதரிக்காது” என முந்திரிக்கொட்டை அறிவிப்பு விடுத்தது அக்கட்சி. ஆட்சியில் அமரும் முன்பே இப்படியென்றால், ஆட்சிக்கு வந்த பிறகு, வை.கோ-வின் பேச்சைக் கேட்டு இவர்கள் என்ன பெரிதாகத் தமிழர்களுக்குச் செய்து கிழித்து விடுவார்கள் என்ற எண்ணம் அப்பொழுதே மக்கள் உள்ளத்தில் பதிந்து விட்டது.

அடுத்ததாக, அரசியலில் நுழைந்த குறுகிய காலக்கட்டத்திலேயே வை.கோ-வுக்கு இணையாக ஈழப் போராட்டத் தலைவராகப் பரிணமித்து விட்ட சீமான் அவர்கள், நடந்த தேர்தலில் ஈழ ஆதரவு வாக்குகளை அ.தி.மு.க-வுக்கு மடைமாற்றி விட்டது பெருமளவில் ம.தி.மு.க-வின் வாக்கு வங்கியைச் சரியச் செய்தது.

ஆனால், அதற்காகச் சீமான் அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. காங்கிரசை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டும் என்றால், அதற்கு எதிரான வலுவுள்ள கட்சியோடுதான் கூட்டணி வைக்க வேண்டும் எனும் வகையில் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்கிற வை.கோ அவர்களின் முடிவு சரியானது என்றால், பா.ஜ.க-வா அ.தி.மு.க-வா என்கிற நிலைமையில், தமிழீழத்துக்காக இதுவரை எதுவும் செய்யாத, இனிமேலும் செய்யப் போவதில்லை எனத் தேர்தலுக்கு முன்பே திட்டவட்டமாக அறிவித்து விட்ட பா.ஜ.க-வைப் புறக்கணித்து, தமிழீழத்துக்கு ஆதரவாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, மூவர் விடுதலைக்காக வாதாடியது போன்ற துணிச்சலான தமிழீழ ஆதரவு நிலைப்பாடுகளை மேற்கொண்ட ஜெயலலிதாவைச் சீமான் அடையாளம் காட்டியதும் சரியானதே!

ஆக மொத்தத்தில், ம.தி.மு.க-வின் தோல்விக்கு வை.கோ அவர்களையோ, சீமான் அவர்களையோ, மக்களையோ நாம் குறை சொல்ல முடியாது. கூட்டணிக் கட்சியின் தவறான நிலைப்பாடும், இருந்த ஒரே வாக்கு வங்கியும் சிதறிப் போனதும், காங்கிரசு, தி.மு.க ஆகியவற்றின் மீதான வெறுப்பு அலை, இந்த இரு கட்சிகளையும் எதிர்க்கும் கட்சிகளில் பெரிய கட்சியான அ.தி.மு.க-வுக்கே முழுக்க முழுக்கச் சாதகமாகி விட்டதும்தான் இதற்குக் காரணம். இது, காலத்தின் கோலமே தவிர, இதனால் தமிழ்நாட்டில் ம.தி.மு.க-வுக்குச் செல்வாக்கு இல்லை எனவோ, ஈழப் பிரச்சினை இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவோ கூறுவது மடத்தனம்!

உண்மைத் தமிழரும், தளராப் போராளியும், மாறாத மக்கள்நலத் தொண்டருமான வை.கோ அவர்கள் இந்தத் தோல்வியால் துவண்டு விட மாட்டார். மாறாக, “எப்படியோ, காங்கிரசு தோற்றதே! ஆட்சி மாறியதே! அந்த மட்டில் மகிழ்ச்சிதான்” என்று நம்மைப் போல் அவரும் களிப்புதான் எய்துவார். வை.கோ அவர்களை அறிந்த உண்மையான தமிழ் நெஞ்சங்களுக்கு இது தெரியும், புரியும்! 

அ.தி.மு.க-வின் வெற்றி நியாயமானதா?

அநியாயத்துக்கு வெற்றி பெற்றிருக்கிறது அ.தி.மு.க! ஆனால், இது அநியாய வெற்றியா எனக் கேட்டால், ஓரளவுக்கு அது உண்மைதான். ஜெயலலிதாவின் பண வலிமையும், தேர்தல் ஆணையத்தின் ‘ஒத்துழைப்பும்’ இந்த வெற்றிக்குப் பங்களித்திருப்பதை யாரும் மறைக்க முடியாது. ஆனால், அவை மட்டுமே இவ்...வளவு பெரிய வெற்றியை அளித்து விட முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரேயடியாக 37 தொகுதிகளிலும் வாக்காளர்களை விலைக்கு வாங்கி விடுவதோ, தேர்தல் ஆணையத்தின் முறைகேடான ஒத்துழைப்போடு இத்தனை தொகுதிகளிலும் இத்தனை இலட்சம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெறுவது என்பதோ நடக்க முடியாதவை. மேலும், முறைகேடுகளால்தான் வெற்றி பெற முடியும் என்கிற நிலையில் ஒரு கட்சி உண்மையிலேயே இருக்குமானால், அந்த முறைகேடுகளால் மட்டுமே இப்பேர்ப்பட்ட வெற்றியை ஈட்டி விட முடியாது.

எனவே, முறைகேடுகளெல்லாம் நடந்தது உண்மைதான் என்றாலும், இந்த வெற்றிக்கு அவை மட்டுமே முழுக் காரணமல்ல. மீதேன் குழாய் பதிப்பால் வேளாண் உரிமையையும், இலங்கைக் கடற்படையால் மீன்பிடி உரிமையையும், அண்டை மாநிலங்களின் பகையுணர்வால் காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றில் நீர் உரிமையையும், இலங்கையில் உயிர் வாழும் உரிமையையும் இப்படி எல்லா உரிமைகளையும் தமிழர்கள் இழந்து விட்ட நிலையில், காங்கிரசு – பா.ஜ.க ஆகிய இரண்டு இந்திய தேசியக் கட்சிகளுமே இந்தத் தேர்தலில் இந்தப் பிரச்சினைகளுள் எதைப் பற்றியுமே பேசாததுதான் இந்த அளவுக்கு மக்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்குகளை வாரி வழங்க ஒரே காரணம்!

ம.தி.மு.க தோற்று விட்டதை வைத்து, ஈழப் பிரச்சினையோ இன்ன பிற தமிழர் பிரச்சினைகளோ இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனப் பலரும் கருதுகிறார்கள். ஆனால், தமிழர் பிரச்சினைகள் அனைத்தினுடைய உச்சக்கட்டத் தாக்கம்தான் இஃது என்பதுதான் உண்மை! இல்லாவிட்டால், காங்கிரசின் ஆட்சி முறை மீதான கோபம் மட்டுமே இந்தத் தேர்தலில் எதிரொலித்திருந்தால், பா.ஜ.க-தானே இங்கும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்? அப்படி இல்லாமல், ஒரு தமிழ்நாட்டுக் கட்சிக்கு இந்தளவுக்கு ஒரு வரலாறு காணாத வெற்றியை மக்கள் அளித்திருக்கிறார்கள் என்றால், அதற்கு முழுமுதற் காரணம் அந்த அளவுக்கு இந்திய தேசியத்தின் மீதும், இந்த நாட்டின் தேசியக் கட்சிகள் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டு விட்டதுதான். எந்தத் தேசியக் கட்சியோடும் கூட்டணியில் இல்லாத ஒரு மாநிலக் கட்சிக்குத் தமிழ் மக்கள் இந்தளவுக்கு வாக்குகளை அள்ளிக் கொட்டியிருப்பதே ஈழம் முதலான தமிழர் பிரச்சினைகள் எந்தளவுக்கு இந்தத் தேர்தலில் எதிரொலித்திருக்கின்றன என்பதற்கு இரண்டாவது மிகச் சிறந்த சான்று! அந்தளவுக்குத் தமிழ் மக்களுக்குத் தமிழர் பிரச்சினைகளில் அக்கறையும் விழிப்புணர்வும் ஏற்பட்டு விட்டது என்பதைத்தான் இது காட்டுகிறது. பதிவின் தொடக்கத்தில் ‘கடந்த ஐந்தாண்டுக்காலத் தமிழர் போராட்டங்களின் பெருவெற்றி!’ என்று குறிப்பிட்டதும் இதைத்தான்.

ஆக, இனிமேல்தான் வை.கோ, சீமான் முதலான தமிழ்த் தலைவர்களுக்கு, ஈழப் பிரச்சினையில் பொறுப்புகளும் கடமைகளும் கூடுகின்றன.

தமிழர் பிரச்சினைகள் பற்றி, இந்தியாவின் துரோகம் பற்றி எத்தகைய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பாடுபட்டோமோ, அது தங்களுக்குப் புரிந்து விட்டது என்பதைத்தான் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தேசியக் கட்சிகளையுமே புறக்கணித்ததன் மூலம் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். எனவே, தலைவர்கள் ஈழப் பிரச்சினையில் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டிய வேளை பிறந்து விட்டது.

ஈழப் பிரச்சினைக்காக இதுவரை நாம் நிகழ்த்தியவையெல்லாம் போராட்டங்கள் மட்டும்தான்! ஆனால், இனி அவை மட்டும் போதா. காரணம், அடிப்படையில் ஈழம் ஒரு அரசியல் பிரச்சினை. எனவே, அரசியல்ரீதியான காய் நகர்த்தல்களை மேற்கொள்ளாமல் வெறும் போராட்டங்களை மட்டும் நடத்தி நாம் இதில் வெற்றி பெறுவது முடியவே முடியாது!

இதோ, ஈழப் பிரச்சினையில் ராஜபக்சே அடுத்த காய் நகர்த்தலைத் தொடங்கி விட்டான். மோடியின் வெற்றி முறைப்படி அறிவிக்கப்படும் முன்னரே தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்து, தன் நாட்டுக்கு வரும்படி அழைப்பும் விடுத்திருக்கிறான். நாம் செய்யப் போவது என்ன? 2006இல் செய்தது போல, இரு நாட்டு ஆட்சியாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள், போக்குவரத்துகள் எல்லாம் நடைபெறும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, கடைசியில் பாதிப்பு ஏற்படும்பொழுது மீண்டும் போராட்டம் நடத்தத் தொடங்கப் போகிறோமோ அல்லது இந்த முறை தொடக்கத்திலேயே விழித்துக்கொள்ளப் போகிறோமா?

இந்த முறை தமிழர்களுக்கு நடுணரசில் செல்வாக்கே இல்லாமல் போய்விட்டது உண்மைதான். ஆனால் அதற்காக, அரசியலே செய்ய முடியாது என்பதில்லை. அப்படிச் சொல்லி விட்டால், அப்புறம், “என்னிடமென்ன இராணுவமா இருக்கிறது, ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற?” என்று கேட்ட கருணாநிதிக்கும் நமக்கும் என்ன வேறுபாடு? 

செய்ய வேண்டியவை என்ன?

“தமிழர்கள் வாக்களிக்காவிட்டாலும், அவர்களுக்கும் சேர்த்து நல்லாட்சி வழங்குவதும், தமிழர்களுக்கும் ஏற்றபடி வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்வதும் பிரதமர் எனும் முறையில் உமது கடமை” என்பதை மோடிக்கு முதலில் புரிய வைக்க வேண்டும்!

“இந்தியா முழுக்க பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டதால்தான் உங்கள் நடுவண் அமைச்சரவைக் கனவு தகர்ந்து போனது. அதற்குத் தமிழர்கள் என்ன செய்ய முடியும்? எனவே, தமிழர்கள் உங்களுக்கு எதிர்பாராத அளவுக்கு அளித்திருக்கும் இந்த மாபெரும் வெற்றிக்கான பலனை எப்படியாவது நீங்கள் அவர்களுக்குத் தந்தாக வேண்டும்! உங்கள் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எப்பாடுபட்டாவது நீங்கள் முயற்சி எடுக்கத்தான் வேண்டும்” என்று ஜெயலலிதாவுக்கு உணர்த்த வேண்டும்!

மோடி-ராஜபக்சே உறவு வலுப்படும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், இனி ஒரு துரும்பு கூட இங்கிருந்து அங்கேயோ அங்கிருந்து இங்கேயோ போக முடியாதபடி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்! ஈழத் தமிழர்களுக்கு எதிராகவோ, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்குப் புறம்பாகவோ இந்திய அரசு இனி ஓர் அடி எடுத்து வைத்தால் கூட முன்னை விடப் பெரும் போராட்டங்களை இங்கு நாம் நடத்த வேண்டும்!

ஈழத் தமிழர்களுக்காக எதையுமே செய்ய விடாமல் எல்லாவற்றுக்கும் முதற்பெரும் முட்டுக்கட்டையாக இருந்த காங்கிரசே வீழ்ந்து விட்டதால், ஈழத் தமிழர் பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாத ஓர் அரசுதான் அடுத்து அமையவிருக்கிறது என்பதால், இனியாவது ஈழப் பிரச்சினைக்கான பன்னாட்டு முயற்சிகளைத் தொடங்கத் தமிழ்த் தலைவர்கள் முனைய வேண்டும்!

இன்றைக்கு இருக்கும் உலகளாவிய தொலைத்தொடர்பு வசதியையும், எல்லா நாடுகளிலும் தமிழர்கள் வாழ்வதையும் பயன்படுத்திப் பன்னாட்டளவிலான ஈழ ஆதரவுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்! ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் எல்லா நாட்டு அமைப்புகளையும், உறுப்பினர்களையும், உலகத் தமிழர்கள் அனைவரையும் அதன் கீழ் ஒன்று திரட்ட வேண்டும்! இனியும் இப்படித் தனித் தனியாகப் போராடிக் கொண்டிருக்காமல், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதற்குண்டான ஒரு பன்னாட்டுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்!

அந்த அமைப்பின் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற, ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும்! ஐ.நா-வில் ஈழத் தமிழர்களுக்காக இந்த நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்கள் உண்மையில் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் தேவை என்ன என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்! இந்த அமைப்புதான் ஈழத் தமிழர்களுக்கான பிரதிநிதி என்பதை நிலைநாட்டி இனப்படுகொலைக்கான பன்னாட்டு விசாரணை, தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு போன்றவற்றையெல்லாம் வென்றெடுக்க வேண்டும்!

சுருக்கமாகச் சொன்னால், இனிமேலும் வெறும் போராட்டங்களை மட்டுமே நடத்திக் கொண்டிருக்காமல், அரசியல்ரீதியான நடவடிக்கைகள் மூலம் ஈழப் பிரச்சினையைத் தீர்க்கத் தமிழ்த் தலைவர்களான வை.கோ, சீமான் முதலானோர் முயற்சி செய்ய வேண்டும்.

ஆனால், இப்படியெல்லாம் செய்ய நமக்கு முதல்பெரும் இன்றியமையாத் தேவை ஒற்றுமை!

இனியும் வை.கோ ஒரு பக்கம், சீமான் மறு பக்கம், பழ.நெடுமாறன் வேறு பக்கம், மே பதினேழு, சேவ் தமிழ்சு போன்ற இயக்கங்கள் மற்றொரு பக்கம் என இப்படியே ஆளுக்கொருபுறம் பிரிந்து நின்றால் வேலைக்காகாது. இதுநாள் வரை, மக்களுக்கு ஈழப் பிரச்சினை பற்றி விழிப்புணர்வூட்டுவதும், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதும் மட்டும்தான் ஈழத்துக்கான வேலையாக இருந்தது. ஆனால், இந்தக் கடமைகள் இன்று முடிந்து, எதிர்த்துப் போராடுவதற்குக் காங்கிரசோ, தி.மு.க-வோ இனி களத்தில் இல்லை எனும் நிலையில், இனி அரசியல்ரீதியான நடவடிக்கைகள் மூலம் ஈழப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு வந்துவிட்டோம். இனிமேலும் இப்படிப் பிரிந்தே நின்றால் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. கடைசி வரை, மேடைகளிலும் இணையத்திலும் இப்படிக் கத்திக் கத்தியே சாக வேண்டியதுதான். 

எனவே
மக்களுக்கு விழிப்புணர்வூட்டியது போதும்!
தலைவர்களே! இனி நீங்கள் ஒன்றுபடுங்கள்!
போராட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் குறைத்துக்கொண்டு
இனி அரசியல்ரீதியான நடவடிக்கைகளைக் கையிலெடுங்கள்!
தமிழீழத்தை வென்று கொடுங்கள்!
ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!
தமிழ்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வையுங்கள்!
இந்த ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் நாளில்
இதுவே உங்கள் உறுதிமொழியாக இருக்கட்டும்!


(நான் கீற்று இதழில் எழுதிய கட்டுரை).

படங்கள்: நன்றி நக்கீரன், தமிழ் மக்கள் குரல், தமிழ்ச்சோதி

கனிவு கூர்ந்து இதைப் பரப்புங்கள்! தமிழீழப் போராட்டம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல உதவுங்கள்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

0 comments:

கருத்துரையிடுக

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்