.

செவ்வாய், மார்ச் 21, 2017

கொலையா பலியா? – தமிழ் மீனவர் பிரிட்ஜோவுக்கு நடந்த கொடுமையின் உண்மைக் காரணம்!


The Tamil fisherman Bridjo who killed by SL navy
 
மீண்டும் ஒருமுறை கடலன்னைக்குக் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது ஒரு தமிழ் உயிர்!

வயிற்றுப்பாட்டுக்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்களை இலங்கைக் கடற்படையினர் அடிப்பது, உதிரம் சொட்டும்படி காயப்படுத்துவது, வலைகளை அறுத்து எறிவது, படகுகளைப் பிடித்துச் செல்வது, கை கால்களை முடமாக்குவது, நச்சுமீனின் முள்ளால் நாக்கில் குத்துவது, அம்மணமாக்கி விரட்டுவது, பாலியல் வன்கொடுமை செய்வது என விதவிதமாக சித்திரவதைப்படுத்துகின்றனர்.

வற்றையெல்லாம் பற்றித் தமிழர்கள் நாம் முறையிட்டால் இத்தனை கொடுமைகளுக்கும் சேர்த்து இந்திய அரசிடமிருந்து வரும் ஒரே பதில்...
 
“நீங்கள் ஏன் எல்லை தாண்டிப் போகிறீர்கள்?” என்பதுதான். அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் முதல் இந்தியப் படைப்பிரிவு அதிகாரிகள் வரை நடுவணரசின் தரப்பிலிருந்து அனைவரும் சொல்வது இதுதான். இவர்கள் மட்டுமில்லை, தமிழ்நாட்டிலேயே கூட இது விதயத்தில் பெரும்பாலான மக்களின் கருத்து, “இவர்கள் அங்கே போகாமல் இருந்தால் அவர்கள் ஏன் தாக்குகிறார்கள்?” என்பதுதான்.

Tamil fisherman Bridjo
கொஞ்சமும் கூசாமல், இப்படி பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழியையும் சுமத்தி வந்த நம் அனைவருடைய முகத்திலும் குருதி தோய்ந்த கரங்களால் அறைந்திருக்கிறது மீனவர் பிரிட்ஜோ கொலை!... கடந்த 6ஆம் நாள் அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழ் மீனவர்களில் ஒருவரான பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். உடன் சென்ற சரோன் என்பவரும் குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டிய விதயம் - இது நடந்திருப்பது இந்திய எல்லைக்குள்!

எதற்கெடுத்தாலும், எப்பொழுது பார்த்தாலும், ‘இவர்கள் ஏன் எல்லை தாண்டி மீன் பிடிக்கிறார்கள்?’, ‘நம் மீனவர்களுக்கு ஏன் பேராசை!’, ‘அடுத்த நாட்டுக் கடல் வளத்துக்கு ஏன் ஆசைப்பட வேண்டும்?’ எனவெல்லாம் திரும்பத் திரும்பப் பேசி வந்த அறிவு கெட்ட முண்டங்களே! இப்பொழுது உங்கள் முகத்தை எங்கே வைத்துக் கொள்வீர்கள்?...

சொல்லப் போனால், சிங்கள வெறியர்கள் இப்படி நம்முடைய கடல் எல்லைக்குள் அத்துமீறி வந்து தாக்குதல் நடத்துவது இது முதல் முறை இல்லை. அடிக்கடி நடப்பதுதான். நாளேடுகளிலும் செய்தியாக வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், “மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்” என்கிற செய்தியைப் பார்த்தாலே ‘திரும்பவும் எல்லை தாண்டிப் போய்விட்டார்கள் போலும்’ என நாமாகவே நினைத்துக் கொள்கிறோம். அந்த அளவுக்கு நம் மீனவத் தமிழர்கள் பற்றித் தவறான ஓர் எண்ணம் நம் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த முறை நடந்திருப்பது அப்படி இல்லை. இந்நிகழ்வின்பொழுது நம் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லவில்லை என்பது பல வகைகளிலும் உறுதியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோவும் சரோனும் காயமடைந்ததை அறிந்ததும் உடன் இருந்த மீனவர்கள் மீனவர் சங்கச் செயலாளர் ஜேசுராஜ் மூலம் கடலோரக் காவல்படையை அழைத்துள்ளனர். அவர்கள் பக்கம் தவறு இருந்திருந்தால் இப்படித் துணிந்து கடலோரக் காவலர்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருக்க முடியாது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரம், பிரிட்ஜோவும் சரோனும் காயமடைந்திருப்பதைப் பார்த்த நேரம் என அனைத்தையும் துல்லியமாகத் தெரிவித்திருக்கிறார்கள் மீனவர்கள். இதில் ஏதேனும் பொய் இருப்பின் அடுத்த கட்ட விசாரணைகளிலும் பிண ஆய்விலும் தெரிந்து விடும். அதன் மூலம், எல்லை தாண்டப்படிருந்தால் அதுவும் வெளியாகி விடும். எனவே, இவ்வளவு துல்லியமாக மீனவர்கள் இந்த நிகழ்வை விவரிப்பதிலிருந்தே இவர்கள் சொல்லும் அனைத்தும் உண்மைதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், மீனவர்கள் மீனவர் சங்கச் செயலாளரைத் தொடர்பு கொண்ட நேரம், அவர் கடலோரக் காவல்படையைத் தொடர்பு கொண்ட நேரம் ஆகியவையும் பதிவாகியிருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேல், தமிழக முதல்வர் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே, “6.3.2017 அன்று இராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் IND-TN-10-MM-514 விசைப்படகில் பாக் வளைகுடாவில் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்” என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

H.Raja, National Executive, BJP

விதயம் இவ்வளவு தெளிவாக இருப்பதால், இத்தனை காலமாக, எவ்வளவு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டாலும் நம் மீனவர்கள் மேலேயே பழி போட்டு வந்தவர்களுக்கு இப்பொழுது அந்த எல்லைக்கோடு பற்றிய கேள்வியை எழுப்ப வழி இல்லாமல் போய்விட்டது. எனவே, நடந்த கொலையைக் காட்டிலும் கொடூரமான வேறு பழிகளைப் போட அப்படிப்பட்டவர்கள் துணிந்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான், “மீனவர்கள் மீதான இந்தத் தாக்குதல் ஏன் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் வேலையாக இருக்கக்கூடாது?” என்கிற பா.ஜ..க., தேசியச் செயலாளர் எச்.ராஜாவுடைய கேள்வியும்! அதாவது மே பதினேழு, நாம் தமிழர், ம.தி.மு.க போன்ற விடுதலைப்புலி ஆதரவு இயக்கங்கள்தான் பிரிட்ஜோவைக் கொன்றிருக்கும் என்பது ராஜாவின் குற்றச்சாட்டு.

நடந்திருப்பது தோண்டித் துருவித் துப்பறிய வேண்டிய வழக்கு இல்லை. மிக வெளிப்படையான பச்சைப் படுகொலை! மீனவர்களின் படகுகள் மீது நிமிடக்கணக்கில் குண்டுகள் மழையாகப் பொழிந்திருக்கின்றன. எனவே, படகில் ஏராளமான குண்டுகள் சிதறிக் கிடக்கும். கொல்லப்பட்டிருக்கும் பிரிட்ஜோ, காயமடைந்திருக்கும் சரோன் ஆகியோர் உடலிலிருந்தும் குண்டுகள் எடுக்கப்பட்டிருக்கும். அவற்றை வைத்தே சுட்டது இலங்கைக் கடற்படையா இல்லையா என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விட முடியாதா?

போதாததற்கு, கொலையை நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்... கொலை நடந்தபொழுதே அவர்கள் தங்களைக் காப்பாற்றச் சொல்லி விடுத்த அழைப்பும் பதிவாகியிருக்கிறது... இத்தனையும் இருக்கும்பொழுதே நடந்த கொலைக்கான பழியைத் தமிழர்கள் மீதே திருப்பிப் போடுவது என்றால்... போயும் போயும் தமிழர்கள்தானே என்கிற கீழ்த்தர மனப்பான்மை அன்றி வேறென்ன!

இது மட்டுமின்றி, இந்தக் கொடூர நிகழ்வு குறித்து யாரும் கேட்காமலே வாய் திறந்திருக்கும் ‘கருத்துப் பல்லி’ சுப்பிரமணிய சாமி, “தமிழ்நாட்டில் இருக்கும் பொறுக்கிகள் நகரச் சாக்கடைகளில் ஒளிந்து கொள்வதை விட்டுவிட்டு, கட்டுமரங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போய் இலங்கைக் கடற்படையுடன் சண்டை போட வேண்டும்!” எனத் திமிராகக் கீச்சியிருப்பது (tweet) தமிழர்களை மட்டுமின்றி மனித இதயம் படைத்த அனைவரையுமே கொந்தளிக்கச் செய்திருக்கிறது.
தெரியாமல்தான் கேட்கிறேன், இதையே என்னைப் போன்ற தமிழ் உணர்வாளர்கள் எழுதியிருந்தால் நடுவணரசினரும் மாநில அரசினரும் இப்படிக் கை கட்டி வேடிக்கை பார்ப்பார்களா? குறிப்பிட்ட சமூகத்தினரைத் தீவிரவாதம் செய்யத் தூண்டுவதாகச் சொல்லிச் சிறையில் தள்ளியிருக்க மாட்டார்கள்? ஆக, நாங்கள் சொன்னால் மட்டும்தான் தவறு, சுப்பிரமணிய சாமியும் எச்.ராஜாவும் மட்டும் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? அப்படி ஒரு தனி உரிமையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென அரசியல் சட்டம் வழங்கியிருக்கிறதா?...

இதற்கிடையே, இந்தக் கொடுமை குறித்து பதில் அளித்திருக்கும் இலங்கைக் கடற்படைச் செய்தித் தொடர்பாளன் சமிந்த வலாகுளுகே, இதைத் தாங்கள் செய்யவில்லை என மறுத்திருப்பதோடு, “இந்தியாவில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தாலே எங்கள் மீது குற்றம் சுமத்துவது வாடிக்கையாகி விட்டது” என்றும் பேசியிருக்கிறான்.

பொதுமக்களும் நினைக்கலாம், “இதற்கு முன் இலங்கைக் கடற்படை, தமிழ் மீனவர்கள் மீது பலமுறை தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பதற்காக இந்தத் தாக்குதலும் அவர்களுடையதாகத்தான் இருக்க வேண்டுமா? வேறு யாராவது வந்து மீனவர்களைச் சுட்டிருக்க முடியாதா?” என்பதாக.

ஐயா! மீனவர்கள் ஒன்றும் அவ்வளவு கேனயர்கள் இல்லை! தங்கள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் இலங்கை மீதே அவர்கள் குற்றம் சாட்டுவதில்லை. வேறு யாராவது தாக்குதல் நடத்தினால் அதையும் சரியாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவை பதிவாகியும் இருக்கின்றன.

2009ஆம் ஆண்டு. ஈழத்தில் சிங்களக் கொடியவர்களுடன் கைகோத்துச் சீனர்களும் தமிழ் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது இதே போல் மீனவத் தோழர்கள் இந்திய – இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் இலங்கைக் கடற்படையினருடன் சேர்ந்து சீனர்களும் நம் மீனவத் தமிழர்கள் மீது வன்முறை நிகழ்த்தினார்கள். கரைக்கு வந்து அது பற்றி முறையிட்ட மீனவர்கள் சீனர்களும் சேர்ந்து தங்களைத் தாக்கியதாகத்தான் பதிவு செய்திருக்கிறார்களே தவிர வழக்கம் போல் சிங்களர்கள் வேலைதான் என்று கண்மூடித்தனமாகக் குற்றம் சாட்டவில்லை. (பார்க்க: இலங்கை கடற்படையுடன் தமிழக மீனவர்களை தாக்கியது சீனர்கள் - இல.கணேசன்).

இதே போல 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒருமுறை, காரைக்கால் தமிழ் மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையே தாக்குதல் நடத்தியது! அப்பொழுதும் மீனவர்கள் நமது கடல் எல்லைக்குள்ளேதான் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். தங்களை மீன் பிடிக்கக் கூடாதென்று தடுத்த கடலோரக் காவல்படையினரைப் பார்த்து, “இலங்கைக் கடற்பகுதிக்குத்தான் செல்லக்கூடாது என்கிறீர்கள்; இப்பொழுது இந்திய எல்லைக்குள் கூட மீன் பிடிக்கக் கூடாது என்று சொன்னால், நாங்கள் வேறு எங்கே செல்ல முடியும்?” என்று கேட்கவும் செய்திருக்கிறார்கள். நியாயமான இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாத அந்தக் காவல் தெய்வங்கள் கோபப்பட்டு, மீனவர்களின் படகு உரிமத்தைப் பறித்துக் கொண்டு, அவர்களைக் காயப்படுத்தி, வலைகளையும் அறுத்தி வீசி அட்டூழியம் செய்த கொடுமையும் நடந்தது. (பார்க்க: காரைக்கால் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை தாக்குதல்).
 
இந்த நிகழ்வின்பொழுதும், நம் மீனவ மக்கள் இந்தியக் கடலோரக் காவல்படை மேல்தான் குற்றஞ்சாட்டினார்களே ஒழிய மாகனம் பொருந்திய (😆) இலங்கைக் கடற்படை மீதில்லை.

எல்லாவற்றையும் விட, இலங்கைக் கடற்படையினர் என்பவர்கள் யாரோ தெருவில் போகிறவர்கள் இல்லை. அவர்களுக்கெனச் சீருடை இருக்கிறது. அதில் இலங்கை அரசின் முத்திரைகள் இருக்கின்றன. எனவே, வேறு யாரையோ பார்த்துவிட்டு அவர்களை இலங்கைக் கடற்படையினர் என நினைத்துக் கொள்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இலங்கைக் கடற்படையே அப்படிச் சொல்கிறதென்றால், தங்கள் கடற்படையினர் கடலில் சீருடை கூட இல்லாமல் சுற்றும் போக்கிரிகள் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்களா? 😜

இலங்கைதான் இப்படிப் பச்சையாகப் புளுகுகிறது என்றால், மாறி மாறி அரியணை ஏறும் இந்திய ஆட்சியாளர்கள் நடத்தும் நாடகம் அதற்கு மேல் பொறுக்க முடியாததாக இருக்கிறது.

அண்மையில், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரிட்ஜோ கொல்லப்பட்ட அடுத்த இரண்டாம் நாளே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

எப்பொழுதெல்லாம் தமிழ் மீனவர்கள் தாக்கப்பட்டு, அந்தச் செய்தி பெரிதாகிறதோ அப்பொழுதெல்லாம்... இல்லை இல்லை... அப்பொழுது மட்டும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இங்கேயும் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலிருந்தே இது ஒரு வழக்கமாகி விட்டது. அது எப்படி நம் மீனவர்கள் தாக்கப்படும்பொழுது மட்டும் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வருகிறார்கள்? மற்ற நேரங்களில் அவர்கள் வருவதில்லையா? அல்லது, வந்தாலும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் கண்டு கொள்வதில்லையா? எனில், அந்தக் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அவர்களைக் கைது செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது?

ஆக, மீனவத் தமிழர் பிரச்சினைக்கு இங்கு அழுத்தம் கூடும்பொழுதெல்லாம் அது தொடர்பாய் ஏதாவது நடவடிக்கை எடுத்தது போலக் கணக்குக் காட்டுவதற்காக நடத்தப்படும் கபட நாடகம்தானே ஒழிய இது வேறொன்றுமில்லை. இரு நாடுகளும் சேர்ந்து கொண்டு ஏதுமறியாத ஏழை மீனவர்களைக் காய்களாக வைத்து மாறி மாறி அரசியல் பகடை விளையாடுகின்றன. இதுதான் உண்மை!

Fishermen

இது புரியாமல் மீனவர்கள், தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள் போன்றோர் ஒவ்வொரு முறை இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும்பொழுதும் அவர்கள் இங்கு கண்ணியமாக நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி மார்தட்டிக் கொள்கிறார்கள். சொல்லப் போனால், பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை. மாறாக, தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது போலவே இலங்கை மீனவர்கள் கைதும் தவறான நடவடிக்கைதான்!

என்னடா இவன், இலங்கை மீனவர்களுக்கு ஆதரவாக எழுதுகிறானே என நினைக்காதீர்கள் நண்பர்களே! பொறுமையாகப் படியுங்கள்!

காற்று, கடல் நீரோட்டம் போன்றவை காரணமாகப் பலமுறை தாங்கள் அறியாமலே எல்லை தாண்டிச் சென்று விடுவதாக நம் மீனவர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். மனச்சான்றைத் தொட்டுச் சொல்லுங்கள், நண்பர்களே! இது நம் மீனவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? இலங்கை மீனவர்களுக்குப் பொருந்தாதா?

“மீனுக்காகத்தான் மீனவர்கள் கடலுக்குள் இறங்குகிறார்கள். எனவே மீன் எங்கு கிடைக்கிறதோ அது வரைக்கும் அவர்கள் தேடிக் கொண்டு செல்லத்தான் செய்வார்கள். இதற்குப் போய்ப் பன்னாட்டு எல்லைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இலங்கை மீனவர்களுக்கும் சேர்த்துத்தான் இல்லையா?

ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது அந்நாட்டின் கரையிலிருந்து 21 கடல் காதம் (Nautical Miles) என்பது பன்னாட்டுச் சட்டம். ஆனால், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அவ்வளவு இடைவெளியே இல்லை. எனவே, இந்தப் பகுதி முழுமையும் இரு நாட்டு மீனவர்களுக்குமே சொந்தம் என்பதுதான் பன்னாட்டுச் சட்டங்கள்படியான நீதி! இதன்படி பார்த்தால் கச்சத்தீவில் மீன் பிடிக்க நமக்கு எப்படி உரிமை இருக்கிறதோ அதே போல நம் பக்கம் வந்து மீன் பிடிக்க அவர்களுக்கும் உரிமை இருக்கிறது என்பதை நாம் மறுக்க இயலுமா?

அவ்வளவு ஏன், இலங்கையில் மீன் பிடிப்பவர்கள் எல்லாரும் சிங்களக் காடையர்களா? இல்லையே! நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களும் அவர்களில் இருக்கிறார்கள்தானே?

உண்மைகள் இப்படியிருக்க, நம் மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதை மட்டும் எதிர்க்கும் நாம், அவர்களை இந்தியக் கடற்படை கைது செய்வதை மட்டும் வரவேற்பது எந்த வகையில் முறையாகும்? இந்த நியாயங்களை நாம் உணராததால்தான், உதிரச் சொந்தங்களான ஈழத் தமிழ் மீனவர்களுக்கும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலேயே பகைத் தீ மூட்டி இருநாட்டு ஆட்சியாளர்களும் குளிர் காய்கிறார்கள்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் மீனவர்கள் மீது பெரியளவில் தாக்குதல் ஏதும் நடத்தாமல், கைது செய்வதும் படகுகளைக் கைப்பற்றுவதுமாக மட்டுமே இருந்த இலங்கை இப்பொழுது திடீரென உயிரை எடுக்கும் அளவுக்கு மீண்டும் தாக்குதல் நடத்தக் காரணம் என்ன என்பது சிந்தனைக்குரியது!

மீனவர்கள், “கச்சத்தீவில் இருக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் ஆண்டுதோறும் தமிழ் மீனவர்கள் கலந்து கொள்வது இன்றும் தொடர்கிறது. அது ஒன்றுதான் அந்தத் தீவின் மீது தமிழர்களுக்கு இருக்கும் வழிவழியான உரிமையைத் தொடர்ந்து நினைவூட்டுவதாக இருக்கிறது. எனவே, அந்தத் திருவிழா நெருங்கும் வேளையில் இப்படி ஒரு வன்முறை நடத்தினால், நாம் அங்கு செல்வதைத் தடுக்கலாம் என்பதற்காக, திருவிழா நெருக்கத்தில் இப்படிச் செய்திருக்கின்றனர்” எனக் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் காரணத்துக்காக அவர்கள் இப்படி ஒரு தாக்குதலை மேற்கொள்வதாக இருந்தால் கடந்த ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு எனத் தொடர்ந்து இப்படிச் செய்திருக்க வேண்டுமே! இல்லையே! ஆக, உண்மைக் காரணம் வேறு!

Human Rights and the World

ஈழத் தமிழினப் படுகொலை பற்றிப் பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் எனத் தொடக்கத்திலிருந்தே சில நாடுகள் குரல் கொடுத்து வந்தன. அதை ஏற்க இலங்கையும் தொடர்ந்து மறுத்து வந்தது. கடைசியாக, “பன்னாட்டு மேற்பார்வையின் கீழ் இலங்கை தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளலாம்” என வரலாறு காணாத விந்தை முடிவை அறிவித்தன உலக நாடுகள். அப்படி நடந்த விசாரணையின் அறிக்கையை இலங்கை தாக்கல் செய்ய வேண்டியது இந்த மார்ச் மாதத்தில்தான். ஆனால், எட்டு ஆண்டுகளாக எந்த விசாரணையையும் ஏற்க மறுத்து, செத்துப் போன தமிழர்களுக்குக் கூட நீதி கிடைக்காமல் செய்து வந்த இலங்கை, மேற்கொண்டும் 18 மாதங்கள் கெடுவை நீட்டிக்கச் சொல்லித் தற்பொழுது கேட்க இருக்கிறது. இந்தச் செய்தி பிப்ரவரி 12ஆம் நாளிலிருந்தே வரத் தொடங்கி விட்டது.

எனவே, கண்டிப்பாக இதற்கு தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பும் என்பது இலங்கைக்குத் தெரியும். அதுவும், ஏறு தழுவல் போராட்டத்துக்குப் பிறகு தமிழர்களின் போர்க்குணம் பன்மடங்கு உயர்ந்து விட்ட தற்பொழுதைய சூழலில் ஈழத் தமிழர்களுக்காக அப்படி ஒரு போராட்டம் இங்கே தொடங்கி விட்டால் அது இலங்கைக்கும், இந்தியாவுக்குமே கூட பன்னாட்டு அளவில் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்து விடும். அதனால்தான் அப்படி ஓர் எழுச்சி இங்கு ஏற்படாமல் தடுப்பதற்காக நம்மில் ஒருவரையே கொன்று அனுப்பி நம் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது இலங்கை.

ஆம்! நம் பிரிட்ஜோ கொல்லப்படவில்லை தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தொடக்கத்திலேயே சொன்னது போல் இலங்கையால் பலி கொடுக்கப்பட்டிருக்கிறார்!!

ஆனால், சிங்களச் சில்லறைகளே! உங்கள் பலிபூசை ஒருபொழுதும் பலனளிக்கப் போவதில்லை. காரணம், ஒரு தமிழனின் உதிரம் இன்னொரு தமிழனின் உதிரத்தை நினைவூட்டத்தான் செய்யுமே ஒழிய மறக்கடிக்காது! 😡💪 👊

(நான் கீற்று தளத்தில் ௦-௩- அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி தமிழ் ஒன் இந்தியா, தினமணி, அருகில், வினவு, வீரகேசரி.


தொடர்புடைய பதிவு:
முதல்வர் மறந்த வாக்குறுதி - மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு!

இது தொடர்பாக அறிய வேண்டிய உண்மைகள்:
குண்டு பாய்ந்த நிலையில் ஒரு மணிநேரம் போராடிய மீனவர்! நடுக்கடலில் என்ன நடந்தது?
பிரிட்ஜோவைக் கொன்றது யார் தெரியுமா?
"பிரிட்ஜோக்கள் இறப்பில் நமக்கு தொடர்பில்லையா...?" மீனவப் படுகொலையும்... சுதும்பு மீனும்!

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. நடுநிலை பேணிச் சிறப்பாக அலசி உள்ளீர்கள்

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா!

      தங்களுடைய மின்னூல் கட்டுரைப் போட்டி பற்றிய இடுகையை ஏற்கெனவே படித்து விட்டேன் ஐயா! கருத்தும் தெரிவித்திருக்கிறேன். முடிந்தால் நானும் கலந்து கொள்வேன். அழைப்பிற்கு நன்றி!

      நீக்கு
  2. நல்ல விரிவான கட்டுரை. உங்கள் கருத்துக்கள் அனைத்தும் நியாயமானவையே. கொடூரமான நிகழ்வு. ஏன் நம் அரசுகள் எதுவும் பேசாமல் வாய் மூடிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் விந்தையாக இருக்கிறது.

    அது சரி இதுவரை புரியாத ஒன்று. கடலில் எல்லை வகுக்கச் சுவரா எழுப்ப முடியும்? அல்லது அடியில் ஓடும் மீன்களுக்கும் குடியுரிமை உண்டா என்ன? இலங்கை மீன் இந்தியா மீன் என்று?!! இங்கும் அங்கும் ஓடிக் கொண்டுதானே இருக்கும்? அவற்றின் மீது கடவுச்சீட்டு ஒட்டி இருக்கா என்ன? இல்லை அவற்றிற்குத்தான் தெரியுமா? வினோதமாக இருக்கிறது பல விசயங்கள்.

    நல்ல விரிவான கட்டுரை வழக்கம் போல மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கு முதலில் நன்றி சகோ!

      நம் அரசுகள் பேசவில்லை எனச் சொல்ல முடியாது. பேசிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பேசிக் கொண்டு மட்டுமே இருக்கின்றன என்பதுதான் நமது ஆற்றாமை!

      மற்றபடி, உங்கள் கேள்விகளெல்லாம் சிங்கள - இந்திய ஆட்சியாளர்களை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளச் செய்யும் வகை! மிக அருமை!

      நீக்கு
  3. தமிழகப் பிரச்சனைகளைக் குறித்து ஐநாவில் பேசுவது பற்றி தாங்கள் காண்செவிக் குழுவில் அனுப்பியதைப் பார்த்துவிட்டேன். ஏன் வாய் மூடிக் கொண்டிருக்கின்றன என்று கேள்வி எழுப்பியிருந்தோம் முதல் கருத்தில்...

    அதனால் தான் மீண்டும் இக்கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்.

    சகோ.கீதா அவர்கள் சொல்லியிருப்பதுபோன்று கடலில் எல்லை வகுப்பதென்பது நடைமுறையில் மிகச்சிரமமானது.

    தமிழகத்தின் நலனுக்காகக் குரல்கொடுக்கக் கூடிய தலைமை நம்நாட்டில் இல்லாததுதான் குறை.

    தமிழர்க்கு என்ன நேர்ந்தாலும் கேள்வி கேட்க எவருமில்லை என்ற நிலை மாறவேண்டும்.

    கேரளா போன்ற மாநிலங்கள், அவர்கள் மீனவர்கள் இது போலக் கொல்லப்படும் சமயத்தில் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.
    மெரினா போராட்டம் போல மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுமா என்பதில் எனத் தெரியவில்லை.
    ஆனால், இப்படிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமாயின், ஆட்சியாளர்கள் திருத்தப்படுவர்.

    என்ன செய்தாலும் இவர்களைக் கேட்க எவரும் இல்லை என்ற நிலைமாறும்.

    செறிவான கட்டுரை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா! போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தமாகவே இருக்கிறார்கள். ஆனால், அரசு மிகத் திறமையாகப் போராட்டங்களை ஒடுக்கி விடுகிறது. ஆனால், அரசு, அதிகாரம், ஆட்சி போன்ற அமைப்புகள் உலகில் இருக்கும் வரை போராட்டம் என்பதும் இருந்தே தீரும் இல்லையா? :-)

      நன்றி ஐயா!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்