.
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில்நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 27, 2021

பதிவர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை! – வலைப்பதிவுகளுக்கான மின்னஞ்சல் சேவையை நிறுத்துகிறது கூகுள்!

ன்பார்ந்த பதிவுலக உறவுகளே!

கூகுள் நிறுவனத்தின் பீட்பர்னர் (Feedburner) தன் மின்னஞ்சல் சேவையை வரும் சூலை 2021 முதல் நிறுத்தவுள்ளது என்கிற வருத்தமான செய்தியோடு வந்துள்ளேன்!

அதாவது, வலைப்பூவில் நாம் ஒவ்வொரு முறை புதிதாகப் பதிவு வெளியிடும்பொழுதும் அது மின்னஞ்சல் வழியே நம்மைப் பின்தொடரும் நேயர்கள் அனைவருக்கும் சென்று சேரும் இல்லையா? அந்தச் சேவை இம்மாத இறுதிக்குப் பின் கிடையாது! மேலே உள்ள படத்தைப் பாருங்கள்! விரிவான அறிவிப்பைக் காண அழுத்துங்கள் இங்கே!

மின்னஞ்சல் சேவை மட்டும்தான் நிறுத்தப்படுகிறதே தவிர நம் வலைப்பூக்களுக்கான ஊட்டங்கள் (blog feeds) தொடர்ந்து செயல்படும் என்பதாகத்தான் பீட்பர்னர் அறிவித்திருக்கிறது. ஆயினும் இது அதிர்ச்சியான செய்திதான்!

பேசுபுக்கு, துவிட்டர், வாட்சப் என எத்தனை சமுக ஊடகங்கள் வந்தாலும் அத்தனைக்கும் ஆணிவேர் மின்னஞ்சல்தான். நாம் புதிதாக ஒரு பதிவு வெளியிட்டதும் வேறு எங்கிருந்து நேயர்கள் வருகிறார்களோ இல்லையோ, மின்னஞ்சல் வழியே தொடர்பவர்களில் கட்டாயம் சிலராவது வருவார்கள். அவர்கள்தாம் நம் நிலையான நேயர்கள் என்றால் கூட மிகையில்லை. அப்பேர்ப்பட்ட சேவை நிறுத்தப்படுவது கண்டிப்பாகப் பேரிழப்புதான்! ஆனால் ஓர் ஆறுதலான செய்தி என்னவெனில் இஃதொன்றும் ஈடு செய்ய முடியாத இழப்பில்லை என்பதுதான்!

ஆம் நண்பர்களே! பீட்பர்னர் போலவே மின்னஞ்சல் சேவை வழங்கும் வேறு இணையத்தளங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மாறிக் கொள்வதன் மூலம் நாம் தொடர்ந்து நம் நேயர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதிவுகளை அனுப்ப முடியும்!

ஆனால் அதற்கு முன் இப்பொழுது நாம் முக்கியமாகச் செய்ய வேண்டியது, ஏற்கெனவே பீட்பர்னர் மூலம் நம்மோடு இணைந்திருக்கும் நேயர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தரவிறக்கிக் (download) கொள்வதுதான். அதை எப்படிச் செய்வது என்பதை ஒரு சிறிய காணொளி மூலம் கீழே விளக்கியிருக்கிறேன்.

இதை முதலில் செய்து விடுங்கள்! பின்னர் வேறு மின்னஞ்சல் சேவைக்கு எப்படி மாறுவது என்பதை விரிவான பதிவாக / காணொளியாகத் தனியே காண்போம்!

இதற்கெனவே புதிதாக யூடியூபு வலைக்காட்சி (YouTube Channel) தொடங்கியுள்ளேன் நண்பர்களே! காணொளி விளக்கம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் காணொளியின் வலக்கீழ் மூலையில் (right bottom corner) உள்ள ‘அகச் சிவப்புத் தமிழ்’ச் சின்னத்தின் மீது காட்டியைக் (cursor) கொண்டு சென்று, அங்கே தோன்றும் ‘SUBSCRIBE’ பொத்தானை அழுத்தி வலைக்காட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள்! அடுத்த கட்ட விளக்கம் உங்களுக்குத் தானாக மின்னஞ்சலில் வந்து சேரும்! 

படம்: நன்றி பீட்பர்னர்.

செவ்வாய், மே 05, 2020

ழகரத்துக்கு ஆபத்து! - ஒருங்குறிக் கூட்டமைப்பின் (Unicode Consortium) தான்தோன்றித்தனமான முடிவு

Zha is in Danger because of the arbitrary decision of Unicode Consortium

மிழின் தனித்தன்மை, அடையாளம், பெருமை என்றெல்லாம் காலங்காலமாக நாம் போற்றுவது சிறப்பு எழுத்தான ழகரம்.

அப்பேர்ப்பட்ட தமிழ்ச் சொத்தைப் போகிற போக்கில் பிள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல் தெலுங்குக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு (Unicode Consortium)!

உண்மையாகத்தான் சொல்கிறேன் நண்பர்களே! இதோ கீழே பாருங்கள்!

வியாழன், அக்டோபர் 31, 2019

இனியாவது சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை என்ன?

Last kisses to Sujith with tears
போய்விட்டான் சுர்ஜித்!

தனக்காக மேலே எத்தனை இலட்சம் நெஞ்சங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை கோடி விழிகள் கண்ணீரை வடித்துக் கொண்டிருக்கின்றன...

எத்தனை நூறு கரங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றன...

எப்படிப்பட்ட ஓர் அன்புலகம் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது...

என எதையுமே பார்க்காமல் போய்விட்டான் சுர்ஜித்!

ஆனால் போனவன் சும்மா போகவில்லை. இக்கட்டான பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கு உருப்படியாக இன்னும் எதையுமே கண்டுபிடிக்காத சமூகம் இது எனும் உண்மையை நம் முகத்தில் அறைவது போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்.

அறிவியலாளர்களும் தொழில்நுட்பர்களும் சந்திராயன் போன்ற திட்டங்களின் மூலம் நமக்கு நிலவைக் காட்டி நாட்டுப்பற்றுச் சோறூட்டிக் கொண்டிருக்கும் வேளையில் “கொஞ்சம் குனிஞ்சு உங்க காலுக்குக் கீழே பாருங்கடா” என்று நம் பின்னந்தலையில் அடித்து விட்டுப் போயிருக்கிறான்.

பெருநிறுவனப் பணமுதலைகளுக்கான கண்டுபிடிப்புகளே மக்களுக்கான பெருமிதமாகவும் நம்ப வைக்கப்படும் இத்திருநாட்டில் மக்களுக்கான உண்மையான அறிவியலும் தொழில்நுட்பமும் குறித்த கேள்விகளை எழுப்ப வைத்து விட்டு மறைந்திருக்கிறான்.

அவனுடைய இப்பேர்ப்பட்ட உயிர் ஈகம் (தியாகம்) பயனின்றிப் போகக்கூடாது!

இதுவரை எத்தனையோ குழந்தைகளின் உயிரை ஆழ்துளைக் கிணறுகள் பலி வாங்கியிருக்கின்றன. ஆனால் இந்தக் குழந்தைக்குக் கிடைத்த அளவுக்குப் பரவலான கவனம் இதுவரை வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. இந்த ஒரு மீட்புப் பணியில் கையாளப்பட்ட அளவுக்குத் தொழில்நுட்பங்கள் இதுவரை வேறெங்கும் கையாளப்பட்டதாகவும் தெரியவில்லை. இவை எதுவும் வீணாகக்கூடாது! எனவே நடந்த இந்த மீட்புப் பணி முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்!

சிறுவன் கிணற்றில் விழுந்த அந்த முதல் நொடியிலிருந்து உயிரற்ற நிலையில் அவன் மீட்கப்பட்ட கடைசி நொடி வரையில் என்னென்ன நடவடிக்கைகளெல்லாம் மேற்கொள்ளப்பட்டன என்பது ஒன்று விடாமல் விலாவாரியாகப் பதிவு செய்யப்பட வேண்டும்!

எத்தனை விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

எத்தனை விதமான கருவிகள் கொண்டு வரப்பட்டன?

என்னென்ன விதமான செயல்நுட்பங்களும் (technique) தொழில்நுட்பங்களும் முயன்று பார்க்கப்பட்டன?

அவையெல்லாம் என்னென்ன காரணங்களால் தோல்வியடைந்தன?

வேறு எந்த விதமான கருவிகள் / தொழில்நுட்பங்கள் இருந்திருந்தால் சிறுவனைக் காப்பாற்றியிருக்க முடியும்?

இவை அத்தனையும் விரிவாக நுட்பமாகப் பதிவாக வேண்டும்!

இத்தோடு மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இதுவரை ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் இன்ன பிற இக்கட்டான பகுதிகளிலிருந்தும் குழந்தைகளை மீட்க மேற்கொள்ளப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் இதே போல் விரிவாகத் திரட்டப்பட்டு மொத்தமாக ஓர் இணையத்தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.

இதன் மூலம் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியோருக்கான மீட்பு நடவடிக்கை பற்றிய மொத்த அறிவும் ஒரே இடத்தில் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். இனி ஒரு குழந்தைக்கு இப்படி நடந்தால் குழந்தையின் விவரங்கள், சூழலின் விவரங்கள் போன்றவற்றை அந்த இணையத்தளத்தில் உள்ளிட்டு அதே போல் முன்பு மாட்டிய குழந்தையை எப்படி மீட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு விரைவாகக் குழந்தையைக் காப்பாற்ற முடியும். ஒருவேளை அதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சூழலிலான முயற்சிகள் தோல்வியடைந்திருந்தாலும் ஏன் தோல்வியடைந்தன என்பதைத் தெரிந்து கொண்டு அத்தகைய முயற்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் நேரத்தைக் குறைக்க முடியும்.

எத்தனையோ புதிய கருவிகளும் தொழில்நுட்பங்களும் சுர்ஜித் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டன என ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்றவர்களால்தாம் முயன்று பார்க்கப்பட்டனவா என்பது தெரியவில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றுவதற்கென முழுமையான ஒரு மீட்புத் திட்டம் (well-designed plan) வடிவமைக்கப்பட்டால்தான் அதற்கான பயிற்சிகளை மீட்புக் குழுவினருக்கு வழங்கவும் முடியும். அப்படி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட முறையான திட்டம் என இதுவரை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே உடனடியாகத் தமிழ்நாடு அரசு இதற்கென ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும். இதில் நம்மிடம் இருக்கும் தலைசிறந்த பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், அறிவியலாளர்கள், குழந்தை மருத்துவர்கள், குழந்தை உளவியலாளர்கள், மண்ணியலாளர்கள், நீரியலாளர்கள், தீயணைப்புத்துறை போன்ற பேரிடர் மேலாண்மை வீரர்கள், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் என அனைத்துத் தரப்பு வல்லுநர்களும் இடம்பெற்றுத் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் எப்படிப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்தும் குழந்தைகளை மீட்பதற்கான முழுமையான ஒரு மீட்புத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். வடிவமைக்கப்பட்டவுடன் தீயணைப்புத்துறையினருக்கும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் அதைச் செயல்படுத்துவதற்கான முழுமையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

தன்னார்வலர்கள் சிலரும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் சிலரும் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை மீட்கும் கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கியிருக்கிறார்கள். இரண்டு இயந்திர மனிதர்களே கூட உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை இவை அத்தனையும் வெறும் போல்மப் படைப்புகளாகத்தாம் (prototypes) இருக்கின்றன. இந்தத் துயரத் தோல்விக்குப் பிறகாவது அரசு இனியும் இது போன்ற முயற்சிகளைக் கிடப்பில் போட்டு வைக்காமல் உடனடியாக இவை அனைத்தையும் முறையாக ஆராய்ந்து தகுதியுள்ளவற்றுக்கு ஏற்பிசைவு வழங்கி ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் தலா ஒரு கருவி எப்பொழுதும் ஆயத்தமாக இருக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் முன்னால், துணை முதல்வர் உறுதியளித்தது போல் உடனடியாக மாநிலம் முழுவதும் உள்ள பயன்படாத ஆழ்துளைக் கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு சரியான முறையில் மூடப்பட வேண்டும்.

ஆனால் இஃது அவ்வளவு எளிதான வேலை இல்லை. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மாநிலம் முழுக்க இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் இருப்பதாக நீரியல் வல்லுநர் எஸ்.ஜனகராஜன் கூறுகிறார். எனவே அரசு மட்டுமே முயன்று இவை அனைத்தையும் கண்டறிந்து விட முடியாது. அப்படிச் செய்வதாக இருந்தால் அதற்கான காலமும் வெகுவாக நீடிக்கும். எனவே பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் தமிழ்நாட்டில் எங்கே இருந்தாலும் உடனடியாக மக்கள் அதை அரசுக்குத் தெரிவிக்க அழைப்பு மையம் ஒன்றையும் அதற்கான இலவச அழைப்பு எண் ஒன்றையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.

எப்படியாவது தன்னை அம்மா மடியில் சேர்த்து விடுவார்கள் என்று நம்மை நம்பிக் காத்திருந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கடைசி வரை காப்பாற்றாமலே விட்ட நாம் அந்தக் கொடும்பெரும் துரோகத்துக்குக் கழுவாய் தேடவாவது இவற்றையெல்லாம் செய்தாக வேண்டும்! அப்படிச் செய்தால்தான் இனியாவது நம் சுர்ஜித்துகளைப் பறிகொடுக்காமல் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்யுமா அரசு?
❀ ❀ ❀ ❀ ❀
Make Sujith death will be the last
நன்றி: தினச்செய்தி.
படம்: நன்றி www.ripbook.com

தொடர்புடைய வெளியிணைப்புகள்:
ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்? சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி?
`சுஜித் உடலைக் காட்டாதது ஏன்?' - கும்பகோணம் தீ விபத்தைச் சுட்டிக்காட்டிய ராதாகிருஷ்ணன்

இந்தக் கட்டுரையைக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து இன்னொரு சுஜித்துக்கு இப்படி ஆகாமல் தடுக்க நீங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

சனி, ஆகஸ்ட் 31, 2019

செவ்வாய்க் கோளுக்குச் சென்றவர்களின் பெயர்ப் பட்டியலில் நீங்களும் இடம்பெற வேண்டுமா? - இதோ நாசா வழங்கும் இலவச வாய்ப்பு!

Are you willing to go to Mars?
ரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி.

வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அடுத்த பகுதியாக வரும் ஆண்டில் ‘மார்சு 2020 (MARS 2020)’ எனும் செயல்திட்டத்தின் கீழ் மீண்டும் இன்னோர் உலாவியைச் செவ்வாயில் இறக்கத் திட்டமிட்டுள்ள நாசா இதில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாமும் பெயரளவில் செவ்வாய்க்குப் போக முடியும். எப்படி எனக் கேட்கிறீர்களா?

வெள்ளி, ஜனவரி 01, 2016

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!


Stopped Tamil Aggregators

ன்பார்ந்த பதிவுலகத் தோழர்களே! அனைவருக்கும் நேச வணக்கம்!

இந்நாட்களில் தமிழ்த் திரட்டிகள் பலவும் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. இவ்வரிசையில் அண்மையில் சேர்ந்திருப்பது ‘இன்ட்லி’! பல்லாயிரக்கணக்கான பயனர்களுடன் முதல் தரத் திரட்டிகளுள் ஒன்றாக இருந்த ‘இன்ட்லி’யெல்லாம் மூடப்படும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆனால், அதுவும் நடந்து விட்டது!

‘இன்ட்லி’யின் சேவையைப் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை இணையத்தில் வெகு குறைவு. அவர்களுள் பலர் இன்றும் அந்தத் தளத்தின் நிரலிகளை (HTML scripts) வலைப்பூவிலிருந்து நீக்காமல் வைத்திருப்பதைக் காண்கிறேன். அந்தத் தளமே இப்பொழுது இணையத்தில் இல்லாததால் அதன் நிரலிகள் முற்றிலும் செயலிழந்து விட்டன நண்பர்களே! அவற்றை நீங்கள் இன்னும் நீக்காமல் வைத்திருப்பதால் உங்கள் வலைப்பூக்கள் திறக்க மிக மிகத் தாமதம் ஆகிறது. வேண்டுமானால், உங்கள் வலைப்பூவுக்குச் சென்று, அதிலிருக்கும் ஏதாவது ஓர் இடுகையைத் திறந்து பாருங்கள்!

சனி, செப்டம்பர் 19, 2015

இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!



Tamils take over the internet!

கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1)
 
ணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம்.

ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல்.

கணித்தமிழ் முன்னோடிகளான சிங்கப்பூர் நா.கோவிந்தசாமி, மா.ஆண்டோ பீட்டர் போன்றோர் முதல் இன்றைய வலைப்பதிவர்கள் வரை அனைவருமே தன்னார்வமாக, எந்த விதப் பொருளாதார நோக்கமும் இன்றியே இவை அனைத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இப்படி மக்களின் ஆர்வத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு ஒரு துறை எத்தனை காலத்துக்கு நீடிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி. ஆங்கிலம், பிரெஞ்சு என மற்ற மொழிகள் கணினித்துறையிலும், இணையத்துறையிலும் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு, இப்படியெல்லாம் நம் மொழியும் மிளிர வேண்டும் எனும் அவாவினால் இன்று நாம் எவ்விதப் பலனும் எதிர்பாராமல் கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடலாம். ஆனால், அப்படி மற்ற மொழிகளுக்கு இணையாக எல்லா வகைகளிலும் தமிழும் கணித்துறையில் வளர்ந்த பிறகு, தொடர்ந்து கணினிகளிலும் இணையத்திலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டுமானால் அதற்கெனப் பொருளாதார அடிப்படை ஒன்று இருத்தல் இன்றியமையாதது.

எழுத்தாளர்கள், இதழாளர்கள், வலைப்பதிவர்கள் என எழுத்துத்துறை சார்ந்த பயனர்களுக்கு மட்டுமேயானதாகக் கணித்தமிழ்ப் பயன்பாடு சுருங்கி விடாமல், தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாகப் பெருவளர்ச்சி பெற வேண்டுமானால் இதழ்கள், காட்சி ஊடகங்கள் ஆகியவற்றைப் போல் இணையமும் முழுமையான ஓர் ஊடகமாக உருவெடுத்தாக வேண்டும்! சுருக்கமாகச் சொன்னால், கணித்தமிழின் எதிர்காலம் இணையத்தமிழின் வளர்ச்சியைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. எனவே, இத்தனை ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கணித்தமிழ் தொடர்ந்து வருங்காலத் தலைமுறைகளாலும் பயன்படுத்தப்பட வேண்டுமானால் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழிலும் இணையத்தை நாம் முழுமையான ஊடகமாகக் கட்டியெழுப்ப வேண்டும்! இயல், இசை, நாடகம் என மற்ற தமிழ்த் துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஓரளவாவது அவற்றின் மூலம் வருமானம் கிடைப்பது போல் நான்காம் தமிழ் எனப் போற்றப்படும் கணித்தமிழ்த்துறையிலும் வருவாய் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்! எதையுமே பொருளியல் (materialistic) கண்ணோட்டத்துடனே அணுகப் பழகி விட்ட இன்றைய உலகில் இதன் முதன்மைத்தனம் (importance) எத்தகையது என்பது குறித்து மேலும் விளக்கத் தேவையில்லை.

இணையத்தமிழ் முழுமையான ஊடகமாக வளர்ச்சியுற வேண்டுமானால், முதலில் அதற்கான வணிகக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஊடக வணிகத்தின் வருமான வாயிலே விளம்பரங்கள்தாம். ஆனால், இணையத்தில் தமிழுக்கான விளம்பர வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இந்நிலையை மாற்ற உடனடித் தீர்வு, நிலையான தீர்வு என இரண்டு தீர்வுகளைத் தமிழ்கூறும் நல்லுலகின் மேலான பார்வைக்கு இங்கே முன்வைக்கிறேன்!

உடனடித் தீர்வு!

பெரிதாக ஒன்றுமில்லை; கூகுள் ஆட்சென்சு பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு அந்நிறுவனத்திடம் விண்ணப்பிப்பதுதான் இதற்கான உடனடித் தீர்வாக நான் முன்மொழிய விரும்புவது.

இப்படிச் சொன்னதும் சிலர் முகம் சுளிக்கலாம். ‘மற்ற மொழிகளையெல்லாம் கூகுள் தானாக முன்வந்து ஆட்சென்சு பட்டியலில் சேர்த்திருக்கும்பொழுது, தமிழர்களாகிய நாம் மட்டும் அதைக் கேட்டுப் பெறுவது நன்றாக இருக்குமா?’ என்று அவர்கள் நினைக்கலாம். அதுவும் தமிழரான சுந்தர் பிச்சை அவர்கள் இப்பொழுது கூகுளின் தலைமைச் செயலாளராக (CEO) வீற்றிருக்கும் நேரத்தில் இப்படி நாம் இதை விண்ணப்பித்துப் பெற்றால், தமிழர் ஒருவர் அப்பதவிக்கு வந்ததும் அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தமிழர்கள் வருமானம் பார்க்கக் கிளம்பி விட்டார்கள் என்று மற்ற மொழியினர் நினைப்பார்கள் என்றும் சிலர் கருதலாம்.

நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள்! தமிழுக்கு கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தகுதி இல்லாவிட்டால், நாம் இப்படிக் கேட்டுப் பெறுவது இழிவானது. ஆனால், எல்லாத் தகுதிகளும் இருந்தும், மாநில மொழியாக இருக்கிற ஒரே காரணத்தால் நம் மொழிக்குரிய இடம் மறுக்கப்படுமானால் அதைக் கேட்டுப் பெறுவதில் என்ன தவறு?

அண்மையில், இந்தி கூகுள் ஆட்சென்சு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே! இந்தி என்ன, தமிழை விட இணையத்தில் முந்தி நிற்கிறதா?

உலகத்திலேயே ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான இணையத்தளங்களைக் கொண்டிருக்கும் மொழி தமிழ்!2 இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக இணையத்தில் அடியெடுத்து வைத்த மொழியும் தமிழே!3 அப்படிப்பட்ட தமிழை விட்டுவிட்டு கூகுள் இந்திக்கு ஆட்சென்சு பட்டியலில் இடம் கொடுக்க ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி’ என்கிற தவறான பரப்புரையைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

ஒருவேளை, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மிகுதியான மக்கள் பயன்படுத்தும் மொழி இந்திதான் என வைத்துக் கொண்டாலும், அஃது இணையத்துக்கு வெளியே உள்ள நிலை. இணைய உலகைப் பொறுத்த வரை அந்தக் கூற்று தமிழுக்குதான் பொருந்தும்.

ஆக, எப்படிப் பார்த்தாலும், தகுதியுள்ள தமிழைப் புறக்கணித்து, ஏதோ சில தவறான காரணங்களின் அடிப்படையில் இந்திக்கு கூகுள் முதன்மை கொடுக்கத் தொடங்கியிருப்பது தெளிவாகத் தெரியும் நிலையில், நமக்குரிய இடத்தை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை தோழர்களே!

வடநாட்டு அரசியலாளர்கள் தம் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணாக, மாநில மொழி4 ஒன்றை இந்நாட்டின் தேசிய மொழியாக முன்னிலைப்படுத்துவதுதான் கூகுள் மட்டுமன்றி எல்லா இணையச் சேவை நிறுவனங்களிலும் அண்மைக்காலமாக இந்தி முதன்மை பெற்று வரக் காரணம். அப்படி முறைகேடான வழியில் அவர்கள் தம் மொழியை வளர்த்துச் செல்லும் நிலையில், தகுதியிருந்தும் நாம் வாளாவிருந்தால் இளித்தவாயர்களாகத்தான் வரலாற்றில் இடம் பெறுவோம்.

எனவே, உலகெங்குமிருந்து தமிழ் வலைப்பதிவர்கள் திரண்டு வந்திருக்கும் இந்தப் ‘புதுகை வலைப்பதிவர் திருவிழா’விலேயே ‘தமிழ் வலைப்பதிவர் சங்கம்’ ஆட்சென்சு பட்டியலில் தமிழைச் சேர்க்கும்படி கூகுள் நிறுவனத்தைக் கோரி, உரிய காரணங்களை எடுத்துக்காட்டித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்! அதை முறைப்படி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கவும் வேண்டும்!

தமிழ் வலைப்பதிவர்களில் மிகப் பெரும்பாலோர் கூகுளுடைய ‘பிளாகர்’ சேவையைத்தான் பயன்படுத்துகிறார்கள்5. கூகுள் நிறுவனத்தின் மற்ற சேவைகளைப் பயன்படுத்தும் தமிழர்களிடையில் சங்கம், மாநாடு போன்றவை இல்லாத நிலையில், கூகுளின் தமிழ்ப் பயனர்களில் பெரும்பாலானோர் ஒன்று கூடும் நிகழ்வாகத் திகழ்வது வலைப்பதிவர் திருவிழாக்கள்தாம். ஆக, புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாதான் இதற்கான பொருத்தமான இடம் என்பதில் ஐயமில்லை!

நிலையான தீர்வு!

கூகுள் ஆட்சென்சு போலவே தமிழுக்கென விளம்பர நிறுவனம் ஒன்றை உருவாக்குவதே இதற்கான நிலையான தீர்வாக இருக்கும்.

இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பரப்பளவுடைய தமிழ்நாட்டிடம், எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட உலகளாவிய தமிழினத்திடம் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன. கடைகள், அங்காடிகள், வணிக வளாகங்கள் எண்ணற்ற அளவில் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இணையத்தில் விளம்பரப்படுத்த நமக்கென இணைய விளம்பரச் சேவை நிறுவனம் ஒன்று கட்டாயம் தேவை! ஆனால், இந்திய இணைய விளம்பர நிறுவனங்கள் எல்லாமே மகாராட்டிர, ஆந்திர, கருநாடக மாநிலத்தவருடையவையாகவே இருக்கின்றன. தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

ஆங்கிலத்துக்கு அடுத்துத் தமிழில்தான் மிகுதியான இணையத்தளங்கள் இருக்கின்றன எனில், தமிழ் இணையத்தளங்களுக்கென விளம்பர நிறுவனம் தொடங்குவது எவ்வளவு பெரிய வருவாய் வாய்ப்பு என்பதைத் தமிழ் இளைஞர்களும், தமிழ்நாட்டு நிறுவனங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

கணித்தமிழ் முயற்சிகளுக்குப் பல்வேறு வகைகளிலும் பேராதரவு அளித்து வரும் தமிழ்நாடு அரசு இந்த வகைத் தொழில் முனைவுகளையும் முன்னெடுக்க ஊக்குவித்தல் வேண்டும்! இப்படியொரு கோரிக்கையைத் தமிழ்நாடு அரசின் ஒரு பிரிவான ‘தமிழ் இணையக் கல்விக்கழக’மும் இணைந்து நடாத்தும் ஒரு போட்டியில் தெரிவிப்பது சிறந்த பலனை அளிக்கும் என நம்புகிறேன்!

ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழிலும் முழுமையான இணைய ஊடகத்தை உருவாக்குவோம்!
கணித்தமிழ் முயற்சிகளை நிலையாக்குவோம்!
தமிழை என்றும் அழியா மொழியாக்குவோம்!


சான்றுகள்:

2. அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் திசம்பர் 2004-இல் சிங்கப்பூரில் நடைபெற்ற இணையத்தமிழ் மாநாட்டில் அளித்த 'நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி' எனும் கட்டுரை.

3. தமிழின் சிறப்புகள் – தினத்தந்தி.

4. இந்தியாவின் அலுவல் மொழிகள் – தமிழ் விக்கிப்பீடியா.

5. தமிழ்ப்புள்ளி வலைப்பூக்கள் திரட்டி – நீச்சல்காரன். 

படம்: நன்றி கம்ப்யூட்டர் பிரம் வில்லேஜ்.

க்கட்டுரை என் சொந்தப் படைப்பே எனவும், இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015க்காகவே எழுதப்பட்டது” எனவும் உறுதிமொழி அளிக்கிறேன். மேலும், இது “இதற்கு முன் வெளியான படைப்பன்று, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதிமொழிகிறேன்.

❀ ❀ ❀ ❀ ❀

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

புதன், ஜூன் 11, 2014

தமிழ்10 திரட்டியில் உங்கள் வலைப்பூவை இணைக்க முடியவில்லையா? – இதோ தீர்வு!


Tamil10 Aggregator

நானும் கடந்த ஓராண்டாக –அதாவது, இந்த வலைப்பூவைத் தொடங்கிய நாள் தொட்டு- இந்தத் தளத்தைத் தமிழ்10-இல் இணைக்க முயன்று வருகிறேன்; முடியவில்லை!

இணைப்பதற்காக ஒவ்வொரு முறை அந்தத் தளத்துக்குச் சென்று ‘பதிவை இணைக்க’ பொத்தானை அழுத்தும்பொழுதும் ‘பக்கம் காணப்படவில்லை’ (404 Error) என்றே காட்டும். ‘சரி, புதிய தளங்களை இணைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போல. சரியான பிறகு வரலாம்’ என நானும் திரும்பி விடுவேன். ஆனால், இப்படியே பலமுறை ஆன பின்னர், ‘சரி, வலைப்பூவை இணைக்கத்தான் முடியவில்லை. தமிழ்10-இன் வாக்குப்பட்டையையாவது நம் தளத்தில் நிறுவி வைக்கலாம். மற்றவர்கள் அதில் வாக்களிப்பதன் மூலமாவது நம் இடுகைகள் அந்தத் திரட்டியில் இணைய முடிகிறதா பார்க்கலாம்’ என்று எண்ணி ஓரிரு நாட்களுக்கு முன் வாக்குப்பட்டை தேடி அந்தத் தளத்துக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக அந்த அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது.

திங்கள், நவம்பர் 25, 2013

பிளாகர் ‘பின்பற்றுபவர்கள்’ (Blogger Follower widget) செயலி இப்பொழுது தமிழிலும்!


ரு பழைய கணக்கெடுப்பின்படி, தமிழில் மொத்தம் 9,578 பிளாகர் வலைப்பூக்கள் இருப்பதாகச் சொல்கிறார் தலைசிறந்த தமிழ் வலைப்பதிவர்களுள் ஒருவரான நீச்சல்காரன் அவர்கள். (பார்க்க: சொடுக்குக). ஆனால் நான் பார்த்த வரையில், தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிளாகர் வலைப்பூக்கள் ஆங்கிலத்தில்தான் இயங்குகின்றன. அதாவது, தளத்தில் எல்லாமே தமிழிலேயே இருந்தாலும் தளத்தின் மொழி அமைப்பு மட்டும் ‘ஆங்கிலம் என வைக்கப்பட்டிருக்கும். பதிவு எழுதப்பட்ட நாள், கருத்துகளின் எண்ணிக்கை ஆகியவை ஆங்கிலத்தில் இருப்பதை வைத்து இதைக் கண்டுபிடிக்கலாம். (பெரிய கண்டுபிடிப்பு!). 

தமிழில் எழுத வேண்டும் என விரும்பி முன்வந்திருக்கும் நம் பதிவுலகத் தோழர்கள் தங்கள் வலைப்பூ மொழியை மட்டும் ஆங்கிலத்தில் வைத்திருக்க முதற்பெரும் காரணம் பிளாகரின் ‘பின்பற்றுபவர்கள் செயலி (Blogger Follower widget) என அழைக்கப்படும் கூகுள் ‘நண்பர் இணைப்புச் செயலி (Google Friend Connect)!

சமூக வலைத்தளங்கள் வழியாகவும், திரட்டிகள் வாயிலாகவும் எத்தனை பேர் நம் வலைப்பூவைப் பின்தொடர்ந்தாலும் வலைப்பூவைப் பின்தொடர்வதற்கெனவே பிளாகர் வழங்கும் இந்தச் செயலி மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கைதான் ஒரு வலைப்பூவின் அதிகாரப்பூர்வமான நேயர் எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது இன்றளவும். இதனால் இது பிளாகர் வலைப்பூக்களின் ஒரு மதிப்புக்குரிய அடையாளமாகிவிட்டது. மேலும், குறிப்பிட்ட வலைப்பூவை நண்பர்களுக்குப் பரிந்துரைத்தல், தான் தொடர்ந்து படிக்கும் மற்ற வலைப்பூக்களைப் பட்டியலிட்டுக் காட்ட இயலுதல் என மற்ற பின்தொடர்ச் செயலிகளில் இல்லாத சில வசதிகளும் இதில் இருக்கின்றன.

இப்படிப் பல வகைகளிலும் முதன்மை பெறுகிற, பிளாகர் வலைப்பூக்களின் அதிகாரப்பூர்வப் பின்தொடர்ச் செயலியான இதை, நம் வலைப்பூவின் மொழி அமைப்பு ஆங்கிலத்தில் இருந்தால்தான் வலைப்பூவில் இணைக்க முடியும் என நம்பப்படுவதுதான் மிகப் பெரும்பான்மையானோர் தங்கள் வலைப்பூ மொழியை ஆங்கிலத்தில் வைத்திருக்கக் காரணம்.

ஆனால், இந்த நம்பிக்கை தவறானது! ‘பிளாகர் பின்பற்றுபவர்கள் செயலி தமிழிலும் கிடைக்கிறது! Yes! Blogger Follower widget is available in Tamil also.

அண்மையில், ஓரிரு பிளாகர் வலைப்பூக்களில் இந்தச் செயலி தமிழில் காட்சியளித்ததைக் கண்டு வியந்தேன். (பார்க்க masusila.com). பிளாகருக்குள் தேடிப் பார்த்தேன். பெருவியப்புக்குரிய வகையில் கிடைத்தே விட்டது! இதோ இனி, எப்படி நம் வலைப்பூவில் இந்தச் செயலியைத் தமிழில் நிறுவலாம் எனப் பார்க்கலாம்.

திங்கள், அக்டோபர் 28, 2013

'கருத்துரைக் கண்காணிப்பு' (Comments Follow Up) இப்பொழுது பிளாகரிலும்!


Comments Follow Up now in Blogger also!

திவுக்கு வரும் கருத்துக்களைப் பரப்புவது, அதன் மூலம் வருகையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்துவது ஆகியவற்றில் முகநூல் கருத்துப் பெட்டிக்கு நிகர் எதுவும் கிடையாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம், பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும் கருத்துக்களின் எண்ணிக்கைதான் பதிவின் முகப்பில் காட்டப்படுகிறது என்பதாலும், கருத்துத் திரட்டிகள் (Comment aggregators), கருத்துப் பட்டியல் செயலிகள் (Recent Comments widgets) ஆகியவை கூட பிளாகர் கருத்துப் பெட்டியில் இடப்படும் கருத்துக்களைத்தான் திரட்டுகின்றன என்பதாலும் பிளாகர் கருத்துப் பெட்டியும் தவிர்க்க முடியாத முதன்மையைப் பெறுகிறது. அப்படிப்பட்ட பிளாகர் கருத்துப் பெட்டியில் ஒரு புதிய மேம்பாட்டைச் செய்திருக்கிறது கூகுள்.

சில இணையத்தளங்களில் கருத்துரை இடும்பொழுது, நம் கருத்து வெளியிடப்படுவதை நாம் அறியவும், மேற்கொண்டு யாராவது அந்தப் பதிவுக்குக் கருத்து தெரிவித்தால் அதை நாம் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கீழ்க்காணும் படத்தில் அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டிருப்பது போல.  


Comments Follow Up in other sites
வேர்டுபிரசு வலைப்பூக்களில் கூட இந்த வசதி உண்டு. ஆனால், பிளாகரில் இத்தனை காலமாக இஃது இல்லாமல் இருந்தது. பிளாகர் வலைப்பூ ஒன்றில் நாம் ஏதேனும் கருத்து தெரிவித்தால், நம் கருத்து வெளியிடப்பட்டதா இல்லையா, மற்றவர்கள் –குறிப்பாகப் பதிவை எழுதியவர்- நம் கருத்துக்கு என்ன பதிலளித்தார்கள், குறிப்பிட்ட பதிவு பற்றி மற்றவர்கள் கருத்து என்ன என்பவற்றையெல்லாம் அறிய அந்தப் பக்கத்தை நூற்குறியிட்டுக் கொண்டு அவ்வப்பொழுது சென்று பார்த்து வர வேண்டியிருந்தது.

எத்தனையோ பக்கங்கள் படிப்போம்; எவ்வளவோ கருத்துக்கள் இடுவோம். ஒவ்வொன்றையும் இப்படி நேரில் சென்று கண்காணிப்பது முடியாது. அதனால், பிளாகர் வலைப்பூக்களில் நாம் இடும் பல கருத்துக்கள், குறைந்தது, நம்மாலேயே கூடக் கவனிக்கப்படாமல் போய்க் கொண்டிருந்தன. இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் இதோ, ‘கருத்துரைக் கண்காணிப்பு’ (Comments Follow Up/ Notify me of follow-up comments via email) வசதி இப்பொழுது பிளாகரிலும்!*

தனது 13-ஆம் பிறந்தநாளை ஒட்டித் தனது சேவைகளையெல்லாம் கூகுள் மேம்படுத்தி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இந்தப் புதிய வசதியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள்.

இனி, பிளாகர் வலைப்பூக்களில் கருத்துரை இட்டு அனுப்பியதும் பாருங்கள்! கருத்துப் பெட்டியின் அடிப் பக்கம் ஒரு சிறு கட்டம் வரும். (பார்க்க: கீழே உள்ள படம்).

வியாழன், ஆகஸ்ட் 29, 2013

முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்!

'Like' Button problem


தொழில்நுட்பப் பதிவு எழுதுவதற்கு நான் ஒன்றும் பெரிய பிரபு கிருஷ்ணாவோ, அப்துல் பாசித்தோ, பொன்மலரோ கிடையாது. ஆனாலும், தமிழ்ப் பற்றாளன் எனும் முறையில் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட வேண்டிய தமிழ் சார்ந்த மாறுதல்களை எடுத்துச் சொல்ல எனக்குள்ள உரிமையால் இதை எழுதுகிறேன்.

நீங்கள் முகநூலைத் தமிழில் பயன்படுத்துபவரா? அல்லது, நீங்கள் வலைத்தளம்/வலைப்பூ நடத்துபவரா? அப்படியானால், குறிப்பாக உங்கள் கவனத்துக்காகத்தான் இந்தப் பதிவு! கனிவு கூர்ந்து முழுக்கப் படியுங்கள்!

அண்மையில், முகநூலின் ‘விருப்பம்’ பொத்தானில் ஏற்பட்டுள்ள ஒரு மாறுதலைத் தமிழில் முகநூல் பயன்படுத்தும் அனைவருமே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முகநூல் தமிழ்ப் பயனர்களுக்கு இத்தனை நாட்களாக ‘விருப்பம்’ என்று காட்சியளித்து வந்த முகநூல் பொத்தான், கடந்த சூலை 24ஆம் நாள் முதல் ‘பிடித்திருக்கிறது’ எனக் காட்சியளிக்கிறது. இதனால் முகநூல் பொத்தான்கள் அனைத்திலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது!

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்