ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையமும் இணைந்து கண்ணதாசன் நூற்றாண்டுக்கான பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்கு ஆய்வுக் கட்டுரைகள் கோரி அறிவித்த அன்றே என்னை எழுதச் சொல்லித் தூண்டினார் ஆருயிர் நண்பரும் மைத்துனருமான ச.பிரகாசு அவர்கள். அதற்கிணங்க, நானும் அவரும் கலந்துரையாடி, 'கவியரசு கண்ணதாசன் பாடல்களில் சொல்லாட்சி' எனும் தலைப்பில் எழுதிய ஆய்வுக் கட்டுரையைக் கடந்த 2026.09.25 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கிலே தன் மிடுக்கான குரலில் அரங்கேற்றினார் அவர்.
ஆப்ரிக்கா முத்தமிழ்க் கூட நிறுவனர் அதியமான் கார்த்திக், பாக்தாத் தமிழ்ச் சங்கத் தலைவர் சாதிக் பாட்சா என அயல்நாட்டுத் தமிழ்ப் பெருமக்கள் முதல் நம் ஐக்கூ மாமன்னர் மு.முருகேசு, கவிஞர் அறிவுமதி, திரைப் பாடலாசிரியர் கண்மணி சுப்பு எனத் தமிழ்நாட்டுப் பெரும்புள்ளிகள் வரை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்த இப்படியொரு நிகழ்வில் எங்கள் கட்டுரையும் மேடையேறியதில் பெருமகிழ்ச்சி! 🥳













