வெற்றி!...
வெற்றி!...
வெற்றி!...
நீதியின் வெற்றி!
நேர்மையின் வெற்றி!
பொறுமையின் வெற்றி!
அறப் போராட்டத்தின் வெற்றி!
மறத் தமிழரின் வெற்றி!
முதுமையிலும் சாதிக்க
முடியும் எனக் காட்டியுள்ள
அற்புதம்மாளின் வெற்றி!
தாய் அவருக்குத் தோள் கொடுத்த
தமிழ்ப் பிள்ளைகளின் வெற்றி!
பல காலமாய்ப் போராடிய
தலைவர் வை.கோ-வின் வெற்றி!
இளந்தலைமுறையைத் தட்டியெழுப்பிய
அண்ணன் சீமானின் வெற்றி!
புதிய புயல்களாய்ப் புறப்பட்டுள்ள
இன்ன பிற தமிழ்த் தலைவர்களின் வெற்றி!
உலகெங்குமுள்ள
மனித உரிமை ஆர்வலர்களின் வெற்றி!
மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் வெற்றி!
எல்லோருக்கும் மேலாய்
இந்த அண்ணன்கள் விடுதலைக்காய்
உயிர் விளக்கேற்றிய
ஈகி செங்கொடியின் வெற்றி இது!
இவர்கள் குற்றமே செய்யவில்லை என்பதை
உறுதிப்படுத்த முடிந்திருந்தால்
இன்னும் களிகூர்ந்திருக்கும் இந்த மன்பதை!
ஆனாலும் இது வெற்றிதான்!
ஆறுதல் மிகத் தரும் பெற்றிதான்!
கொண்டாடுவோம்!
கொண்டாடுவோம்!
தமிழ் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி...
காங்கிரசார் செவிடுபட எக்காளம் முழங்கி...
தோழர்களை அணைத்து...
ஆனந்தக் கண்ணீர் உகுத்து...
பட்டாசுகள் வெடித்து...
தப்பட்டை அடித்து...
கொண்டாடுவோம் இன்று!
இது நம்
முதல் வெற்றி என்று!...
ஆம்...
நிகழும் தமிழ்ப் போராட்டங்களுக்கு
இஃது ஊக்க மருந்து!
இனி
இருக்கிறது பார் தமிழினத்துக்கு
மென்மேலும் வெற்றி விருந்து!
******
ஆம்! மேற்கண்ட பாவில் கூறியபடி, இராஜீவ்
காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மூவரின் தூக்குத்
தண்டனைத் தள்ளுபடி தமிழ் மக்கள் அனைவர் உள்ளத்திலும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது!
ஒன்றுமறியாத இந்த மூவரையும் வேண்டுமென்றே
இதில் சிக்க வைத்த அதிகார வர்க்கத்தினர் திரித்த கயிறுகள் அவர்கள் கழுத்தை
இறுக்கும் முன் வாய்மையின் நெருப்பு அதைப் பொசுக்கியிருக்கிறது எனச் சொன்னால்
மிகையாகாது. இன்னும், இவர்கள் இந்தக் குற்றத்தைச் செய்யவே இல்லை என்பதையும்
உறுதிப்படுத்த முடிந்திருந்தால் வரலாறே மாறியிருக்கும். ஆனாலும், இது
மகிழ்ச்சிதான்; ஆறுதல்தான்.
நீதியரசர்கள் சதாசிவம், கோகாய்,
சிவகீர்த்தி சிங் ஆகியோருக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் தமிழ் மக்கள் தங்கள் நெஞ்சார்ந்த
நன்றியைத் தெரிவிக்க வேண்டிய வேளை இது. அதே நேரம், இந்தியா என்கிற இந்த விநோதமான
பல இன அமைப்பில், தனி மனிதர்கள் ஓரிருவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் கூட,
அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக இருந்தால் கூட, அவர்கள் இனத்தைச் சேர்ந்த
ஒருவர் அதிகாரத்துக்கு வரும் வரை எத்தனை ஆண்டுக்காலம் ஆனாலும், கொடுமையின்
பிடியில் அவர்கள் தம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது காத்திருக்கத்தான்
வேண்டும், வேறு வழியில்லை என்பதை இந்தக் காலம் கடந்த தீர்ப்பு மொத்த
இந்தியாவுக்கும் தலையிலடித்து உணர்த்தியிருக்கிறது! இந்திய தேசியவாதிகள் இனியாவது
சிந்திக்க வேண்டும்!
மறுபுறம், இவர்களின் தண்டனைக் குறைப்பு,
விடுதலை ஆகியவற்றோடு நிறைவடைந்து விடாமல், இராஜீவைக் கொன்ற உண்மைக் குற்றவாளிகளைத்
தேடி, குற்றத்தை அவர்கள் பேரில் உறுதிப்படுத்தத் தமிழர் தலைவர்கள் தொடர்ந்து
முயற்சியெடுப்பது இவர்களுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை முற்றிலும் துடைப்பதோடு,
தமிழீழம் மலரவும் பேருதவியாக இருக்கும். (எப்படி என்பதை அறிய அழுத்துங்கள் இங்கே!).
உச்சநீதிமன்றம் இப்பொழுது சாந்தன்,
முருகன், பேரறிவாளன் மூவருடைய தூக்குத் தண்டனையை மட்டும்தான் தள்ளுபடி
செய்திருக்கிறது. மேற்கொண்டு, இவர்கள் விடுதலைக்கு மாநில அரசுதான் முன்வர
வேண்டும்! தமிழ்நாட்டு அரசின் முதல்வர் அந்த அளவுக்கு நீதி பரிபாலனத்திலோ, தமிழ்
உணர்விலோ சிறந்தவர் இல்லை என்பதை உணர்ந்துதான், ஏற்கெனவே இவர்கள் வழக்கில்,
இவர்களை விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குப் பரிந்துரைக்கத் தனக்கு அதிகாரம்
இருந்தும், அப்படியோர் அதிகாரம் தனக்கு இல்லை எனப் பொய் சொன்னவர்தான் தமிழ்நாட்டு
முதல்வர் என்பதை நினைவில் கொண்டுதான் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் இந்தத் தூக்குத்
தண்டனைத் தள்ளுபடித் தீர்ப்பிலேயே, “இனி இவர்களை விடுதலை செய்ய மாநில அரசு தன்
அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்த முறையும் ஏமாந்து விடாமல்,
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் குறிப்பை எடுத்துக்காட்டி, உடனடியாக இவர்களை
விடுவிக்க ஆவன செய்யுமாறு தமிழ் உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி
முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்! வெறுமே அறிக்கைகள் விடுத்துக்
கொண்டிருப்பது வேலைக்கும் ஆகாது! அஃது உண்மையான அக்கறையும் கிடையாது!
பிரதமர் கனவு காணும் இந்த நேரத்திலாவது, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் தன் நெடுங்காலப் பழக்கத்தை இந்த முறையும் கடைப்பிடிக்காமல், தமிழர்
வாக்குகள் மொத்தத்தையும் அள்ளக்கூடிய இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள
ஜெயலலிதாவும் முன்வர வேண்டும்!
இற்றைத் தகவல் (Update): முன்வந்து விட்டார் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா! சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டுமல்லாமல் இதே வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள நளினி, இராபர்ட் பயசு, ஜெயகுமார், இரவிச்சந்திரன் என ஏழு பேரையும் விடுவிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அந்த முடிவை நடுவணரசுக்கு அறிவித்து, மூன்று நாட்களுக்குள் இது குறித்து நடுவணரசு பதிலளிக்காவிட்டால் மாநில அரசே தன் சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்யும் என்றும் வரலாறு காணாத அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டு முதல்வர்! வாழ்க! உலகம் தழுவிய தமிழ் மக்களின் உளமார்ந்த நன்றிகள் அவருக்கு உரித்தாகுக!
இற்றைத் தகவல் (Update): முன்வந்து விட்டார் தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா! சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டுமல்லாமல் இதே வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள நளினி, இராபர்ட் பயசு, ஜெயகுமார், இரவிச்சந்திரன் என ஏழு பேரையும் விடுவிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அந்த முடிவை நடுவணரசுக்கு அறிவித்து, மூன்று நாட்களுக்குள் இது குறித்து நடுவணரசு பதிலளிக்காவிட்டால் மாநில அரசே தன் சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்யும் என்றும் வரலாறு காணாத அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டு முதல்வர்! வாழ்க! உலகம் தழுவிய தமிழ் மக்களின் உளமார்ந்த நன்றிகள் அவருக்கு உரித்தாகுக!
படம்: நன்றி முத்துப்பேட்டை செய்திகள்
பதிவைப் பரப்புவீர்! நம் கொண்டாட்ட உணர்வையும் அடுத்த கட்ட கடமைகளையும் நம் தமிழ்ச் சொந்தங்களுடன் பகிர்வீர்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
Nantri Hon. Judges. Nantri Tamil Nadu.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!
நீக்கு