வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்!
பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக்
கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்
போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள
பெரிய கேள்வி.
தெருவில் கிடக்கிற
சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல்
நாம் நடத்தி வரும் போராட்டங்களை இதுவரை செருப்பளவுக்காவது மதித்திருக்கிறதா இந்த இந்திய அரசு? இப்பொழுது கூட, இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கைக்கு ஆதரவாக மூன்று முறைகளுக்கு மேல் திருத்தி விட்டு, அப்படியும் அந்த இற்றுப் போன தீர்மானத்துக்கு வாக்களிக்கக் கூட விருப்பமில்லாமல் அந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்து விட்டுத்தான் நம்மிடம் வாக்குக் கேட்க வருகிறார்கள் காங்கிரசார்!
இதை விட ஓர் இனத்தை
அவமானப்படுத்த முடியுமா?
இப்படிப்பட்ட
அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?
இனி தமிழர்களிடம்
வம்பு வைத்துக் கொண்டால் நாம் இந்திய அரசாட்சியை நினைத்துப் பார்க்கவே முடியாது
எனும் பீதியை இந்தக் காங்கிரசுக்காரர்களுக்கு ஏற்படுத்த வேண்டாமா?
தமிழர்களைப்
பகைத்துக் கொண்டதால் காங்கிரசு அடையவிருக்கும் படுதோல்வியைப் பார்த்து இனி வரும்
இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களை எண்ணி மிரள வேண்டாமா?
மண்ணுலகிலேயே நரகத்தை
அனுபவித்துக் கொண்டிருக்கும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் மீள வேண்டாமா?
அப்படியானால், வரும்
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் நம் வாக்குகளைத் திட்டமிட்டுச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்!
அதற்கு ஒரு கூர்மையான திட்டத்தை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம்!
யாருக்கு
வாக்களிப்பது?
இத்தனை ஆண்டுகளாக
இல்லாத அளவுக்கு இந்த முறை இது கொஞ்சம் சிக்கலான கேள்வியாகத்தான் ஆகி விட்டது
தமிழ்நாட்டில்.
கடலில் தூக்கிப்
போட்டாலும் கட்டுமரமாக மிதந்து வந்து காப்பாற்றுவார் என்று தமிழர்கள் நாம்
காலங்காலமாய் நம்பிய கருணாநிதி, தமிழர்களையே பிணமாக்கிக் கட்டுக் கட்டாக அடுக்கிச்
சிங்களர்கள் எரித்தபொழுதும் மரம் போலத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால்,
இப்பொழுது அந்தக் காங்கிரசைக் கழற்றி விட்டுத் தேர்தலைச் சந்திக்க
வந்திருக்கிறார்.
அதே நேரம், ‘போர்
என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற,
அதுவரை உலகில் யாருக்குமே தெரியாத பேருண்மையை () நமக்கு உணர்த்த முயன்ற ஜெயலலிதா இன்று அனைத்து விதங்களிலும்
ஈழ ஆதரவாளராய் மாறி நிற்பதாகக் கூறுகிறார்!
சரி, தமிழர்
பிரச்சினைகள் அனைத்துக்காகவும் தொடக்கக் காலம் முதல் போராடி வரும் வை.கோ
அவர்களுக்கு வாக்களிக்கலாமா எனப் பார்த்தால் அவர் போட்டியிடுவதோ வெறும் எட்டே
தொகுதிகள்!
ஆகவே, இவர்களில் யாரை
நம்பி அல்லது யாரை எதிர்த்து எப்படியென வாக்களிப்பது என்பது இந்த நாடாளுமன்றத்
தேர்தலில் நம்மைப் பெரும் குழப்பத்துக்கு ஆளாக்கியிருப்பதில் வியப்பில்லை. இந்தக்
குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டு தெளிவாக வாக்களிக்க நமக்குத் தேவை ஒரு பன்னோக்குத்
திட்டம் (Master Plan). ஏன், கட்சிகள் மட்டும்தான் கூட்டணி, வாக்கு
வங்கி எனப் பலவற்றையும் பற்றி ஆராய்ந்து திட்டமிட்டுத் தேர்தலைச் சந்திக்க
வேண்டுமா? வாக்காளர்களான நாமும் ஒவ்வொரு கட்சி, கூட்டணி பற்றியும் அவர்களின்
நிலைப்பாடு, கொள்கை, உறுதிமொழி, குறிப்பிட்ட பிரச்சினைகளில் அவர்களின் கடந்த கால
நடவடிக்கை, எதிர்காலப் போக்கு என அனைத்தைப் பற்றியும் விரிவாக அலசி ஒரு முடிவுக்கு
வரலாம் வாருங்கள்!
தி.மு.க-வுக்கு
வாக்களிப்பவன் தமிழனா?
இனியும்
தி.மு.க-வுக்கு வாக்களிக்கலாமா எனத் தமிழ் உடன்பிறப்புக்கள் இந்தத் தேர்தலிலாவது
சிந்திக்க முன்வர வேண்டும்!
2004 நாடாளுமன்றத்
தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கு நாம் மாபெரும் வெற்றியை அளித்தோம். இந்தியாவிலேயே
முதன்முறையாகத் தமிழர் ஒருவர் துணைப் பிரதமர் பதவிக்கு அழைக்கப்படும் அளவுக்கு இந்திய
அரசியல் வானில் கருணாநிதிக்குப் பெரும் பலத்தைக் ஏற்படுத்திக் கொடுத்தோம். ஆனால்,
வரலாறு காணாத அந்தச் செல்வாக்கை அவர் எதற்குப் பயன்படுத்தினார்? தமிழினத்தையே அழிப்பதற்கு!
இலங்கையில்
நடத்தப்பட்ட இன அழிப்பில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தமிழர்கள்
செத்தார்கள்! தமிழ்ப் பெண்கள் நட்டநடுத் தெருவில், வெட்டவெளியில் கூட்டம் கூட்டமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாக்கப்பட்டார்கள்! ‘நடுவணரசுக்கான ஆதரவைத் தி.மு.க விலக்கிக்
கொள்கிறது’ எனும் ஒற்றை வரி அறிவிப்பால் இந்த அத்தனை
கொடுமைகளையும் நிறுத்தித் தமிழினத்தையே காப்பாற்றும் வல்லமை இருந்தும் கருணாநிதி
அதைச் செய்யவில்லை. மாறாக, நடுவணரசுக்கு எதிரான தமிழ் மாணவர்களின் போராட்டத்
தீயைப் பொறியிலேயே அணைக்கும் விதமாகப் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தையும்
இழுத்துச் சாத்தினார்!
ஈழப் பிரச்சினை
நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று உளவுத்துறையை விட்டு
ஆராய்ந்தார்! இல்லை என்று அறிக்கை கிடைத்ததும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பதவி விலகுவார்கள் என்று நாடகமாடினார்! எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக, உலகம் காணாத உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை நடத்தி, போர் முடிந்து விட்டதாக அறிவித்து, பதுங்குகுழிகளிலிருந்த
தமிழர்களையெல்லாம் வெளியே வரச் செய்து அழித்தார்!
ஆம்! கருணாநிதி ஈழத்
தமிழினப் படுகொலைக்குத் ‘துணை போனார்’ என்பது பசப்பு வார்த்தை!
தமிழினப் படுகொலையைக் கண்டு கொள்ளாமல் இருந்ததோடும், அதை நிறுத்தும் ஆற்றல்
தன் கையிலிருந்தும் அதைச் செய்யாமல் இருந்ததோடும் நிறுத்திக் கொண்டிருந்தால் அந்த
இனப்படுகொலைக்கு அவர் ‘துணை போனார்’ என்பதோடு நாமும்
நிறுத்திக் கொள்ளலாம். ஆனால், தமிழர்கள் ஒளிந்துகொண்டு விட்டார்கள், எத்தனை குண்டுகள் போட்டாலும், இரும்பு அரண் போல்
கிடந்து காக்கும் தமிழர்த் தேசிய மரமான பனை மரத்தைத் தாண்டி எந்தக் குண்டும்
அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றவுடன், ஐம்பதாண்டுகளுக்கும்
மேலாகத் தமிழ் மக்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கை எனும் ஆயுதத்தைப்
பயன்படுத்தி அவர்களை வெளியே கொண்டு வந்து சாகடித்தாரே, அவரை எப்படி இந்தப் படுகொலைக்குத் ‘துணை போனவர்’ எனச் சொல்ல முடியும்? கொலை செய்பவனுக்கு உதவி புரிபவனுக்குத்தான்
உடந்தைக் குற்றவாளி எனப் பெயர்; இப்படிக் குற்றத்தின் மூளையாகவே செயல்படுபவனுக்குப்
பெயர் முதன்மைக் குற்றவாளி!!
கேட்டால், போர் நின்று விட்டதாகச் சொல்லி அவரை ஏமாற்றி விட்டார்கள் என்பார்கள்
அப்பாவித் தி.மு.க தொண்டர்கள். சரி,
அப்படியே இருக்கட்டும். அஃது
உண்மையாக இருந்தால், அவரது உண்ணாநிலைப் போராட்டம் முடித்த பிறகும்
போர் தொடர்வது பற்றிக் கேட்டதற்கு “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று ஏன் சொன்னார்? “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று ஜெயலலிதா சொன்னதை விடக் குரூரமான வார்த்தையாடல்
இல்லையா இது?
ஆனால், இப்பேர்ப்பட்ட
துரோகத்துக்குப் பின்பும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம்
கருணாநிதிக்குத்தான் வாக்களித்தோம். அதனால் ஏற்பட்ட பயன் என்ன? நடந்து கொண்டிருந்த
இனப்படுகொலை நின்றதா? இல்லை! மாறாக, தேர்தல் வெற்றியைக் கொண்டாடத் தி.மு.க-வினர்
இங்கே வேட்டுக்கள் வெடித்த அடுத்த நிமிடம் அங்கே முள்ளிவாய்க்காலில் பேரழிவு
ஆயுதங்கள் வெடித்தன. வரலாறு காணாத கொடுமையாக ஒரே நாளில் நாற்பதாயிரம் தமிழர்கள்
துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். ஆனால், அது பற்றி எள்முனையளவும் கவலையின்றி,
அதே நேரத்தில் இங்கே தி.மு.க-வினர் தங்கள் வெற்றியை இனிப்பு வழங்கிக் கொண்டாடிக்
கொண்டிருந்தனர், கருணாநிதி உட்பட!
“இவையெல்லாம்
பழங்கதைகள். இன்றைய நிலைமை என்ன? அப்படிப்பட்ட காங்கிரசை இந்தத் தேர்தலில்
தூக்கியெறிந்து விடவில்லையா எங்கள் தலைவர்?” என்கிறார்கள்
உடன்பிறப்புக்கள். ஆம், தூக்கியெறிந்தார். எப்பொழுது? ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத்
தமிழ்நாடெங்கும் மாணவச் செல்வங்கள் சீறி எழுந்து, மொத்தத் தமிழ்நாடும் அதற்கு
ஆதரவாகத் திரும்பிய பின்னர். வேறு வழியில்லாமல். இதை நான் சொல்லவில்லை; 12.06.2013
அன்று நிகழ்ந்த, காங்கிரசைச் சேர்ந்தவரான திருநாவுக்கரசரின் இல்லத் திருமண
விழாவில் கருணாநிதியே தன் திருவாய்மலர்ந்து சொல்லியிருக்கிறார்.
“திருநாவுக்கரசர்
நான் அவரோடு ஒட்டி இருக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தார்.
ஒட்டி இருந்த என்னை, வெட்டி
விட்டது யார் என்பது அவருக்கே தெரியுமென்று கருதுகிறேன்”
என்ற கருணாநிதியின் அந்த வார்த்தைகளுக்கு, மக்கள்தான் தன்னைக் காங்கிரசை விட்டுப்
பிரித்து விட்டார்கள்; தானாக விரும்பிப் பிரிவில்லை என்பதைத் தவிர வேறென்ன பொருள்
இருக்க முடியும்? (சான்று: இங்கே).
ஆக, காங்கிரசுடன்
கருணாநிதிக்கு இன்னும் கள்ள உறவு நீடிக்கிறது என்பதுதான் உண்மை! நாம்
தி.மு.க-வுக்கு வாக்களித்தால் அந்த வெற்றியை மறுபடியும் கருணாநிதி, சோனியா
காலடியில்தான் கொட்டுவார் என்பது உறுதி!
இவ்வளவுக்கும்
பிறகும், இனியும் தி.மு.க-வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என அடம்
பிடிப்பவர்களே, தமிழினத் தலைவர் என இன்னும் கருணாநிதிக்கு வடம் பிடிப்பவர்களே,
தலைவர் பிரபாகரன் சொன்னாராம்; இராஜபக்சேவாவது சொந்த இன மக்களுக்காக வேறு இன
மக்களாகிய நம்மை அழிக்கிறான்; ஆனால், கருணாநிதி சொந்த இன மக்களையே அழிக்கிறாரே
என்று! இதில் அணுவளவாவது தவறு இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! இராஜபக்சேவை
விடக் கொடிய தமிழின எதிரியான, துரோகியான கருணாநிதி தமிழினத் தலைவரா? அவருக்குத்
தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமா? சொல்லுங்கள்!
முதன்முதலில் நாம்
கருணாநிதிக்கு எதற்காக வாக்களிக்கத் தொடங்கினோம்? நினைவிருக்கிறதா? நன்றாகச்
சிந்தனையைக் கூட்டிப் பாருங்கள்! அவர் ‘பராசக்தி’ முதலான படங்களில் நல்ல கதை, வசனம் எழுதியதற்காகவா?
திருக்குறளைப் பிரபலப்படுத்தியதற்காகவா? திருவள்ளுவருக்குக் கோட்டமும் சிலையும்
நிறுவியதற்காகவா? கண்ணகியின் புகழை வெளிக்கொண்டு வந்ததற்காகவா? இல்லை, ‘தொல்காப்பியப்
பூங்கா’ போன்ற பல நூல்கள் படைத்ததற்காகவா? இவற்றுள்
எதற்காகவும் இல்லை. அவர் தமிழர்களுக்காகப் போராடுபவர் என்பதற்காக! தமிழர்
பிரச்சினைகளில் தமிழ் மக்கள் தரப்பில் நிற்பவர் என்பதற்காக! உலக அளவில்
தமிழர்களுக்கு எங்கே, எந்தப் பிரச்சினை வந்தாலும் குரல் கொடுக்கக்கூடியவர்
என்பதற்காக! ஆனால், இப்பொழுது இவை எதுவுமே இல்லை என்று ஆன பின்னும், தமிழ்
மக்களையே அழித்தவர் அவர், அப்படி அழிப்பவர்களோடு இன்னும் உறவு பூண்டிருப்பவர் அவர்
என்று ஆன பின்னும் அவருக்குத்தான் வாக்களிப்பது என நீங்கள் உறுதியாக
இருக்கிறீர்கள் என்றால், முதலில் நீங்கள் தமிழர்தானா? சிந்தியுங்கள்!
விடுதலைச்
சிறுத்தைகளுக்கு வாக்களிப்பவன் மட்டும் தமிழனா?
கருணாநிதிக்குப் பொருந்தக்கூடிய இந்தக்
குற்றச்சாட்டுகளுள் ஏறத்தாழ அத்தனையும் திருமாவளவனுக்கும் பொருந்தும்.
தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சகோதரர்களுக்கு இதோ
கிடைத்து விட்டார் ஒரு மீட்பர் என்றும், தமிழ்ச் சமூகத்துக்காகத் திருமணம் கூடச்
செய்து கொள்ளாமல் தன் வாழ்வையே அர்ப்பணித்து விட்ட ஈகைச் செல்வர் என்றும், ஊழல்
கறை படிந்த கருணாநிதிக்கு மாற்றாக நேர்மையான தமிழினத் தலைவர் ஒருவர் கிடைத்தே
விட்டார் என்றும், இன்னும் என்னென்னவோ வகைகளிலும் திருமாவளவனை எண்ணிப் பூரித்த
பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவன்தான் நானும். ஆனால், திருமாவளவன் செய்த, செய்கிற தமிழினத்
துரோகங்கள், அத்தனையையும் தவிடு பொடியாக்கி நெஞ்சில்
ஆறாத காயத்தை உண்டாக்கி விட்டன!
தமிழர்களைக் காங்கிரஸ் அழிக்கத்
தொடங்கியதால் இனி எக்காலத்திலும் அதனுடன் கூட்டணி கிடையாது என்று மேடையேறி முழங்கி
விட்டு, அந்த இனப் படுகொலையைக் காங்கிரஸ் நடத்தி முடிக்கும் வரை கூடக் காத்திராமல்
அக்கட்சியுடன் தோளோடு தோள் நின்று திருமாவளவன் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்
தேர்தலைச் சந்தித்ததை யாரால் மறக்க முடியும்?
ஈழத்துக்காக யார், எப்பொழுது, எந்தப்
போராட்டம் நடத்தினாலும் உடனுக்குடன் முன்வந்து, உயிரைக் கூட மதிக்காமல் எப்பேர்ப்பட்ட
போராட்டத்திலும் கலந்து கொள்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் குறிக்கப்படும் நம்
தமிழ்ச் சொந்தங்கள்தாம். அப்பேர்ப்பட்ட தமிழ்ப் பற்றாளர்களைக் கடந்த
பத்தாண்டுகளாகக் காங்கிரசுக்கு வாக்களிக்க வைத்த, வைக்கிற திருமாவளவனின் துரோகத்தை
வரலாறு ஒருகாலும் மன்னிக்கப் போவதில்லை!
சாதியின் பெயரால் தமிழ் மக்களையே, அதுவும்
தமிழ் உணர்வு மிகுந்த குறிப்பிட்ட பிரிவினரையே, தமிழர்களை அழித்தவர்களுக்கு ஆதரவு
தர வைக்கும் திருமாவளவனின் இந்தப் போக்கு கருணாநிதியின் தமிழினத் துரோகத்துக்குத்
துளியும் குறைந்ததில்லை.
இலங்கைக்குப் போனால் தலைவர்
பிரபாகரனுடனும், இந்தியாவில் இருந்தால் சோனியாவுடனும் கைகுலுக்கும் திருமாவளவன்,
‘முள்வலி’ எழுதிய அதே எழுதுகோலால் காங்கிரசுடனான கூட்டணிக்கும் கையொப்பமிடும்
திருமாவளவன் தமிழனா? சிந்திக்க வேண்டும் இந்த நேரத்திலாவது!
எனவே, உண்மையான தமிழ்க் குருதியில் பிறந்த
யாரும் இனி தி.மு.க-வுக்கோ விடுதலைச் சிறுத்தைகளுக்கோ கனவிலும் வாக்களிக்க
மாட்டார்கள்!
மற்ற கட்சிகள், கூட்டணிகள் பற்றி இந்தப் பதிவின்
அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
ஆம், இது தொடரும்...
படங்கள்: நன்றி மாலைமலர், பாரதபாசை, தேவேந்திரர் குரல், சிந்திக்கவும், ஓசை, யாழ்.
படங்கள்: நன்றி மாலைமலர், பாரதபாசை, தேவேந்திரர் குரல், சிந்திக்கவும், ஓசை, யாழ்.
(இந்தப் பதிவு பின்னால் அகரமுதல தனித்தமிழ் இதழிலும் வெளியானது).
தொடர்புடைய பதிவு:
பதிவில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் சரி எனத் தோன்றினால், இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து இந்தத் தேர்தலிலாவது காங்கிரசுக் 'கை'ப்பிடியிலிருந்து மக்கள் தப்ப வழி செய்யுங்களேன்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
மக்கள் தப்பிக்க எப்போதோ முடிவு செய்து விட்டார்கள்... அடுத்த பகுதியிலும் பலவற்றை அறிந்து கொள்கிறேன்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குமுதல் அன்பராக வந்து கருத்தளித்தமைக்கு நன்றி ஐயா!
நீக்கு//மக்கள் தப்பிக்க எப்போதோ முடிவு செய்து விட்டார்கள்// - உங்கள் வாய்க்கு இனிப்புக் கொட்ட! பலிக்கட்டும்!