.
மீம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீம்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 05, 2022

இது தமிழ் மக்களுக்கு அ.தி.மு.க., செய்யும் இரண்டகம் (Betrayal) - ஒரு போன்மி (meme)

மருத்துவப் பொது நுழைவுத் தேர்விலிருந்து (NEET) தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டமுன்வடிவை (bill) இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால் தமிழ்நாட்டு மக்களின் அந்த ஒருமித்த எதிர்பார்ப்பையும் நலன்களையும் காலில் போட்டு மிதிக்கும் விதமாய் அதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர். இது குறித்து அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று முறையே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் சற்றும் கூச்சமே இல்லாமல் அதைப் புறக்கணிப்பதாக அறிவிக்கிறது அ.தி.மு.க. இந்த நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் பா.ச.க., கூட்டத்தைப் புறக்கணிக்கிறது என்றால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் இதே நுழைவுத்தேர்வுக்கு எதிராக ஆளும் தி.மு.க., அரசு சட்டப்படி என்ன நடவடிக்கை மேற்கொண்டாலும் ஆதரவளிப்பதாகச் சட்டமன்றத்தில் கூறிவிட்டு அ.தி.மு.க., இன்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் வடிகட்டிய இரண்டகம் (betrayal)! எனக்கு இதைப் பார்க்கும்பொழுது என்ன தோன்றுகிறது தெரியுமா? இதோ கீழே பாருங்கள்:-

ADMK & BJP refused to participate in all parties' conference on NEET exception bill

படம்: நன்றி மோகனா மூவீசு

சனி, மே 01, 2021

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு எட்டாம் பிறந்தநாள்! - வாருங்கள்! வாழ்த்துங்கள்!

Eighth Birthday of Aga Sivappu Thamizh
அகம்நிறை தமிழன்பர்களே!
உங்கள் விருப்பத்துக்குரிய ‘அகச் சிவப்புத் தமிழ்’ இந்த 23.04.2021 அன்று எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் ஒயில் நடை பயில்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விழைகிறேன்!

பதிவைத் தொடங்கும் முன், மனித இனத்தையே அழித்து வரும் மகுடை (COVID) நோயில் உயிரிழந்த அனைவருக்காகவும் முதலில் என் உளமார்ந்த இரங்கல்!

நிலைகுலைந்து நிற்கும் நேரத்தில் சாயத் தோள் கொடுப்பதுதான் ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யக்கூடிய ஆகப் பெரும் உதவி. அந்த அடிப்படை மனிதநேயத்தைக் கூட மனிதருக்கு மனிதர் காட்ட முடியாமல் – நோயால் நலிந்து கிடக்கும் நம் அன்புக்குரியவர்களை நாம் அரவணைத்து ஆறுதல் சொல்லக் கூட விடாமல் – தடுத்து நிற்கும் இந்த மகுடையை விடக் கொடியது வேறெதுவும் இருக்க முடியாது.

இந்தத் தீநுண்மி (virus) முற்றிலும் இந்தக் கோளை விட்டே அழிய வேண்டும். இந்த ஆண்டாவது அது கண்டிப்பாக நடக்கும் எனும் நம்பிக்கையோடு இதோ பதிவைத் தொடங்குவோம்.


காலக்கட்டம்

பதிவுகள்

கருத்துகள்*

பார்வைகள்

அகத்தினர்கள்**

ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014

30

171

24,000+

266

ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015

21

357

32,851+

267

ஏப்ரல் 2015 - 
ஏப்ரல் 2016

25

336

36,260+

539

ஏப்ரல் 2016 - 
ஏப்ரல் 2017

18

181

75,281+

930

ஏப்ரல் 2017 - 
ஏப்ரல் 2018

18

360

1,02,224

190

ஏப்ரல் 2018 - 
ஏப்ரல் 2019

13

120

38949+

-183

ஏப்ரல் 2019 - 
ஏப்ரல் 2020

18

103

28298

17

ஏப்ரல் 2020 - 
ஏப்ரல் 2021

14

129

25437+

26

மொத்தம்

157

1757

3,63,300+

2052

* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.

நான் இந்தாண்டு அதிகமாய் எழுதவில்லை. அப்படியும் பார்வைகள், கருத்துக்கள் என நீங்கள் கொடுத்திருக்கும் வரவேற்பில் பெரிய குறைவில்லை. இது நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைத்தான் காட்டுகிறது. தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்றும் என் நெஞ்சார்ந்த நன்றி!

கடந்த ஆண்டு அதிக வரவேற்புப் பெற்ற ஐந்து பதிவுகள்
Top 5 posts of 2020-21
இவற்றில் நான்கு பதிவுகள் கடந்த ஆண்டிலேயே எழுதப்பட்டு அதே காலக்கட்டத்தில் உங்களிடம் இந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி! தொடர்ந்து நான் இயங்கி வருகிறேன் என்பதையும் மக்களான நீங்கள் அதை விரும்புகிறீர்கள் என்பதையுமே இது காட்டுகிறது. மிக்க நன்றி!

உள்ளத்தில் உறைந்தவை

கடந்த ஆண்டு எழுதியவை பற்றி நினைக்கையில் முதலில் மனத்தில் இனிப்பது ஆண்டின் முதல் வெளியீடான பிறந்தநாள் பதிவுக்கு நீங்கள் அனைவரும் தெரிவித்திருந்த வாழ்த்து!

வழக்கமாக வருகை புரியும் பதிவுலக அன்பர்கள், பழைய நண்பர்கள் மட்டுமில்லாமல் அதுவரை அறிமுகமாகாத புதியவர்கள் கூட வாழ்த்தியிருந்தார்கள்! மிகவும் குதூகலமாக இருந்தது! தொடர்ந்து பதிவுகள் எழுதப் பெரும் ஊக்கமாகவும் அமைந்தது.

அடுத்து ‘ழகரத்துக்கு ஆபத்து! - ஒருங்குறிக் கூட்டமைப்பின் (Unicode Consortium) தான்தோன்றித்தனமான முடிவு’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

தமிழின் சிறப்பு எழுத்தான ழகரத்தை எழுதத் தெலுங்கு ஒருங்குறியிலும் (Telugu Unicode) ஒரு தனியிடம் ஒதுக்குவது எனும் ஒருங்குறிக் கூட்டமைப்பின் முடிவைக் கண்டித்து எழுதிய இந்தக் கட்டுரையைத் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். பெரும்பாலும் அப்படித்தான் நடந்தது. ஆனால் முரண்பாடாகத் துறைசார் தமிழ் வல்லுநரான மணி.மணிவண்ணன் அவர்கள் இதை எதிர்த்து பேசுபுக்கில் என்னைக் கடுமையாகத் தாக்கி எழுதியதும் நடந்தது. மிகவும் அதிர்ச்சி! மிகுந்த வேதனை!

அந்த மனப்புண்ணுக்கு மருந்திடும் வகையில் தமிழறிஞர் தஞ்சை கோ.கண்ணன் ஐயா அவர்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு ஆறுதல் கூறினார். தன்னுடைய தமிழ்ப் பணிகள் குறித்த தகவல்களையும் தொடர்ந்து கணித்தமிழில் செய்ய வேண்டியுள்ள பணிகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அதற்கான ஆவணங்களையும் எனக்கு அளித்துக் “காலம் ஒரு நாள் வரும் அன்று உங்களை ஒத்த தமிழர்கள் தமிழைக் காக்க எழுவார்கள் என்ற எண்ணத்தில் உங்களிடம் (இந்த ஆவணங்களை) கையளிக்கிறோம்” என்று அவர் சொன்ன சொற்கள் என்னை மயிர்க்கூச்செறிய வைத்தன!

அவ்வளவு பெரிய தமிழ்த் தொண்டர் ஏதுமறியாச் சிறுவனான என் மீது வைத்த அந்தப் பெரும் நம்பிக்கையை எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை. ஐயா சொன்ன அந்தப் பொற்காலத்துக்காக என்றும் காத்திருப்பேன்.
 
Tamil Scholar Thanjai. Ko.Kannan
தமிழாய்வாளர் தஞ்சை கோ.கண்ணன்
பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து ஒருங்குறிக் கூட்டமைப்பு தன்னுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டதாகத் தமிழறிஞர் நாக.இளங்கோவன் பேசுபுக்கில் அறிவித்திருந்தார் (பார்க்க - https://bit.ly/3u8nZ2P). அளவில்லா மகிழ்ச்சியும் மன அமைதியும் அடைந்தேன். பேரா.பொன்னவைக்கோ அவர்கள், முனைவர் இராம.கி., ஐயா முதலான தமிழறிஞர்கள் கொண்ட வல்லுநர் குழுவும் தமிழ் இணையக்கல்விக் கழகமும் தமிழ்நாடு அரசும் கைகோத்து இதைச் சாதித்ததாக அறிய முடிந்தது. அவர்கள் அனைவரையும் இந்தச் சிக்கலை முதன் முதலாக வெளியுலகுக்குக் கொண்டு வந்த தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் அவர்களையும் இது பற்றி நான் தெரிவித்த உடனே இரவென்றும் தயங்காமல் அப்பொழுதே செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தங்க.காமராசு அவர்களுக்குத் தெரிவித்த ஆருயிர் நண்பரும் மைத்துனருமான பிரகாஷ் சங்கர் அவர்களையும் இன்றும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!

இதற்கு அடுத்து, கடந்த இனப்படுகொலை நினைவு நாளில் எழுதிய ‘பதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்’ எனும் கட்டுரையும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமாக அமைந்தது.

தமிழினப் படுகொலைக்கு உதவிய தி.மு.க., பற்றி என்னுடைய நிலைப்பாடு என்ன என்பது இந்த வலைப்பூவைத் தொடக்கத்திலிருந்து படிக்கும் அனைவரும் அறிந்ததே. எனினும் கடந்த ஓரீர் ஆண்டுகளாக ஈழ விவகாரம் தொடர்பான தி.மு.க-வின் நிலைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண முடிந்தது. இதன் உச்சமாகக் கடந்த மே மாதத் தொடக்கத்தில், ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிக்கை விட்டு அறிவுறுத்தியது.

தி.மு.க-வின் இந்த மாற்றம் நெருங்கி வரும் அரசியலை மனதில் கொண்டது என்பதுதான் என் கருத்து என்றாலும் தமிழர் அரசியலின் முக்கிய புள்ளியான அக்கட்சியுடைய இம்மாற்றத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஈழ ஆதரவுத் தலைவர்களின் கடமை என்று கட்டுரையில் வலியுறுத்தியிருந்தேன்.

ஈழத் தமிழர் நலனை மனத்தில் கொண்டுதான் அப்படி எழுதினேன் என்றாலும் அது சரிதானா என்கிற ஊசலாட்டமும் உள்ளுக்குள் இருந்தது. எனவே ஈழத் தமிழர்களாலேயே பல ஆண்டுகளாக நடத்தப்படும் ‘யாழ் களம்’ இணைய மடலாடல் குழுவில் கட்டுரையைப் பகிர்ந்தேன்.

நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் வரவேற்பை எனக்கு அள்ளித் தந்தனர். “யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதை விட யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஈழ விவகாரத்தில் ஈழத் தமிழர்கள் சார்பாக நிலைப்பாடு எடுக்க வைப்பதே சரியான அணுகுமுறை” என்று எனக்கு அவர்கள் அளித்த ஒப்புதல் கண்டு அகம் குளிர்ந்து போனேன்.

தொடர்ந்து ஈழ விவகாரம் பற்றியும் அதில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அணுகுமுறை பற்றியும் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்கள் முதிர்ச்சி மிக்கவர்கள் என்பதைப் புரிய வைத்தது. கூடவே இவ்வளவுக்கும் பிறகும் தமிழ்நாட்டுத் தமிழர்களான நம் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு கொஞ்சமும் குறையாதது கண்டு நெக்குருகிப் போனேன் (பார்க்க விரும்புவோருக்கு - https://bit.ly/3eFYQWL).

அடுத்து ஆகத்து மாதம் எழுதிய ‘என் யுவர் கோட் (Your Quote) கவிதைகள்’ எனும் பதிவு புதுமையாக வெற்றி பெற்றது.

அதாவது பதிவு பெரிய அளவில் பார்வைகளைப் பெறாவிட்டாலும் இதில் குறிப்பிடப்பட்ட யுவர் கோட் எனும் குறுஞ்செயலியைப் பார்த்துப் பலரும் ஆர்வமாகி விவரம் கேட்டனர். சில நாட்களிலேயே நண்பர்களும் பதிவுலகத் தோழர்களும் அதைப் பயன்படுத்தத் தொடங்கியதைப் பார்க்க முடிந்தது. எனக்கு இந்தக் குறுஞ்செயலியை அறிமுகப்படுத்திய அன்பு மகள் நிறைமதிவதனாவுக்கே எல்லார் நன்றியும்!


உத்திரப்பிரதேச மாநிலம் அத்திராசில் (Hathras) கடந்த ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை மனித நெஞ்சம் படைத்த யாரையுமே தூங்க விடவில்லை. நினைத்தாலே இப்பொழுதும் வயிறு பற்றி எரிகிறது! தன்னைப் போன்ற இன்னொரு மனிதப்பிறவியை இந்த அளவுக்குக் கொடுமைப்படுத்த முடியுமா என்கிற கேள்வி அதையொட்டி எழுந்தபொழுதுதான் தலித்து சாதியைச் சேர்ந்தவர்களை இந்த நாடுதான் மனிதர்களாகவே மதிப்பதில்லையே எனும் உண்மையும் உறைத்தது.

ஆகவே “ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை இனி பாலியல் வன்கொடுமை எனச் சொல்லாதீர்கள்; இனப்படுகொலை என்றே சொல்லுங்கள்” என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு கட்டுரையை எழுதினேன். மொத்த இந்திய ஊடகங்களுக்குமான வேண்டுகோள் என்பதால் அதை ஆங்கிலத்தில் எழுதுவதுதான் சரி என்று தோன்றியது. எனக்கு அந்தளவுக்கு ஆங்கிலப் புலமை போதாதென்பதால் என் தங்கையின் உதவியை நாடினேன்.

அப்படித்தான் உருவானது ‘Hathras Case: Not a Sexual Harassment but Genocide! - A Request to Indian Media’ எனும் கட்டுரை. தமிழ் வடிவத்தின் சூடும் சுருக்கும் துளியும் குறையாமல் வெகு அழகான ஆங்கிலத்தில் எழுதித் தந்தார் அன்புத் தங்கை ஸ்ரீதேவி. என்னுடைய படைப்புகளைத் தொடக்கம் முதல் ஆதரித்து வரும் ‘கீற்று’ இணைய இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் அப்பொழுதுதான் புதிதாக ‘Butitis’ எனும் ஆங்கில இணைய இதழைத் தொடங்கியிருந்தார். கட்டுரையை அனுப்பியதும் உடனே அதை வெளியிட்டு உதவினார். இருவருக்கும் இங்கு என் அன்பார்ந்த நன்றி!

கடந்த ஆண்டு எழுதியவற்றிலேயே மிகப் பெரிய வெற்றி பெற்றது ‘வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்’ எனும் கட்டுரை.

வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைக் கடந்து விட்ட இப்பதிவு துவிட்டரிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. தமிழைக் கீழ்த்தரமாகப் பேசிய இனவெறியன் ஒருவனுக்கு எதிரடி தருவதற்காக எழுதிய இதைப் படித்து விட்டுத் தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் வழங்கிய பாராட்டுக்கள் இப்படிப்பட்ட துறைசார் பதிவுகளை எழுதுவதில் எனக்கிருந்த மனத்தடைகளை அசைத்துப் பார்த்தன.

இக்கட்டுரையை எழுதத் தோன்றாத் துணையாய் நின்ற தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர், மேற்கொண்டு எழுத முடியாமல் ஓரிடத்தில் திக்கி நின்றபொழுது வழிகாட்டி உதவிய தமிழாய்வாளர் சேதுபாலா, இதனைத் துவிட்டரில் எல்லார் பார்வைக்கும் கொண்டு சேர்த்து மிகப் பெரிய வெற்றிக்கு வழிகோலிய தமிழாய்வாளரும் பதிவருமான தமிழ் இனியன், எழில், காலம்பன் முதலான நண்பர்கள் பலர் என அனைவருக்கும் என் களிகூர் நன்றி!

தமிழ்ப் போராளி, எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவரான புகழேந்தி தங்கராசு ஐயா இந்தக் கட்டுரை பற்றி நான் சொல்லாமலே தானாக வந்து படித்துப் பாராட்டியது எதிர்பாராத குதூகலம்! பதிவுலகத் தோழர் ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் இதற்கெனப் போன்மியெல்லாம் (meme) உருவாக்கிப் பாராட்டியது என்றைக்கும் மறக்க முடியாதது.
 
 Appreciation of Mythily Kasthurirengan for ‘Vakkatra Mozhiya Tamil’
2021-சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வழக்கம் போல் தி.மு.க., தலைவர் தாலின் மக்களிடம் தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிப் பட்டியலில் இடம்பெற வேண்டிய பரிந்துரைகளைக் கேட்டிருந்தார். நான் 19 பரிந்துரைகளையும் ஒரு புதிய திட்டத்தையும் எழுதியனுப்பினேன். அவற்றை மக்கள் பார்வைக்கும் முன்வைக்க விரும்பி ‘தி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்’ எனும் பெயரில் இங்கேயும் வெளியிட்டிருந்தேன்.

பெரிய அளவில் பார்வைகளைப் பெறாவிட்டாலும் படித்தவர்களின் பாராட்டை இது பெற்றது. குறிப்பாக, அதுவரை நான் அறியாதவரான கல்வி ஆர்வலர் இரத்தின புகழேந்தி அவர்கள் மடலாடல் குழு ஒன்றில் இதைப் படித்து விட்டுப் பாராட்டியது எதிர்பாரா மகிழ்ச்சி! தோழர் மைதிலி கஸ்தூரிரங்கன் இதற்கும் ஒரு போன்மி அனுப்பிப் பாராட்டியிருந்தார். அவர் அன்பே அன்பு!

Appreciation for my suggestions to DMK Manifesto 2021 by Mythily Kasthurirengan
கடந்த முறை போல் தி.மு.க-விடமிருந்து மறுமொழி ஏதும் வராவிட்டாலும் இவற்றுள் ஐந்து பரிந்துரைகள் அவர்களின் தேர்தலறிக்கையில் இடம் பிடித்திருந்ததைப் பார்க்க முடிந்தது. என்னுடைய இந்த மடலைப் பார்த்து விட்டுச் சேர்த்தார்களோ அவர்களாகச் சேர்த்தார்களோ! எப்படியோ நல்லது நடந்தால் சரி.

அடுத்து தில்லி உழவர் போராட்டம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அறவழிப் போராட்டம் எனும் பெயரில் மக்கள் தங்களை வருத்திக் கொள்வதில் எப்பொழுதுமே எனக்கு உடன்பாடில்லை. மனிதக் குல வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஒன்றரைக் கோடிப் பேர் திரண்டு போராடிய தில்லி உழவர் போராட்டத்திலும் போராளிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படவே “இனியும் மக்களான நாம் இப்படி அறவழிப் போராட்டம் எனும் பெயரில் நம்மை வருத்திக் கொள்ளாமல் புதிய போராட்ட வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்” என்று அக்கட்டுரையை எழுதினேன்.

ஆனால் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். நடந்த கலவரத்தை ஒட்டிச் சில உழவர் சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததைக் கண்டு போராட்டமே முடிந்து விட்டதாக எழுதி விட்டேன். துவிட்டரில் நண்பர் தமிழறிவன் AJ முதலானோர் சுட்டிக்காட்டியதை அடுத்துத் திருத்திக் கொண்டேன். நாட்டு நடப்பு குறித்து எழுத அக்கறை மட்டும் போதாது மிகுந்த கவனமும் வேண்டும் என்பதை இந்நிகழ்வு உணர்த்தியது. இதற்காக என் வருத்தத்தை இங்கு பதிவு செய்கிறேன்!

இதன் பின்னர் உலகத் தாய்மொழித் திருநாளை முன்னிட்டு ‘English ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை! - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம்’ எனும் கட்டுரையை வெளியிட்டிருந்தேன்.

தமிழில் நாம் அனைவரும் செய்யும் மிகப் பெரிய பிழையான கிரந்த எழுத்துப் பயன்பாடு பற்றியும் அதற்குக் காரணமாக இருக்கும் நம் தவறான மொழியியல் அணுகுமுறை பற்றியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் ‘தினச்செய்தி’ நாளேட்டில் எழுதியது இது. வெளியிடச் சரியான வேளை பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் தாய்மொழி நாளதுவுமாய் வெளியிட்டும் எதிர்பார்த்த அளவுக்கு இது பார்வை பெறாதது வருத்தமே!

எனினும் நான் பெரிதும் மதிக்கும் இராம.கி., ஐயா, நெல்லை சித்திக் ஐயா ஆகிய தமிழறிஞர்களிடம் இஃது ஏற்பிசைவு (recognition) பெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் வெகுவாகப் பாராட்டியதையும் மறக்க முடியாது. அனைவருக்கும் இங்கு மீண்டும் என் நன்றி!

இவற்றுக்கிடையே பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், தமிழாய்வாளர் எனப் பன்முகம் கொண்ட நம் பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன் அவர்கள் கடந்த ஆண்டு தன் மகள் திருமண விழாவில் வெளியிட்ட ‘இலக்கணம் இனிது’ நூலை அச்சிடும் முன்பே எனக்கு அனுப்பிக் கருத்துக் கேட்டது இன்ப அதிர்ச்சி!
'Ilakkanam Inithu' wrapper
 
ஐயாவின் நட்பு வட்டம் எப்பேர்ப்பட்டது என்பதை நான் நன்கறிவேன். அப்படியிருக்க ஏதுமறியாத என்னிடம் அவர் தன் நூலைப் பற்றிக் கருத்துக் கேட்க முன்வந்தது முழுக்க முழுக்க அவருடைய பெருந்தன்மை மட்டுமே!

நூல் பற்றி நான் எழுதிய விரிவான கருத்துரையை ஐயா தன் வலைப்பூவிலும் வெளியிட்டது எனக்குக் கிடைத்த பெருமை! பார்க்க விரும்புவோர் அழுத்தலாம் இங்கே!

இதே போல் என் பெருமதிப்பிற்குரியவரும் மூத்த பதிவருமான தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் ஐயாவும் கடந்த ஆண்டு தன் நூல்களின் தொகுப்பை அனுப்பி வைத்து, அவை குறித்துத் தன் நூல்கள் பற்றிய திறனாய்வரங்கில் பேச என்னை அழைத்திருந்தார்.

முனைவர்களும் ஆய்வாளர்களும் செயற்பாட்டாளர்களும் நிரம்பிய அவ்வரங்கில் ‘எழுத்தாளர்’ என என்னை அறிமுகப்படுத்தி ஐயா அவர்கள் அளித்த வாய்ப்புக்கு என்றென்றும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்! அரங்கில் நான் ஆற்றிய உரை கீழே. முழுக் காணொலி இங்கே!


நன்றிக்கினியோர்!

இணையமே சமுக ஊடகங்களுக்குக் குடிபெயர்ந்து விட்ட இந்நாளிலும் வலைப்பூவில் படைப்புகளை வெளியிட்டு வரும் பதிவுலக அன்பர்கள்…

இன்னும் என் வலைப்பூவை நாடி வரும் அகச் சிவப்புத் தமிழர்கள்...

தாங்கள் விரும்பும் வலைமனைகளின் பட்டியலில் இந்தத் தளத்தையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தும் பதிவுலகத் தோழமைகள்...

பதிவுகளின் வெற்றிக்கு இன்றியமையாக் காரணர்களான வலையுலகத் தோழர்கள்...

தங்கள் பாராட்டுகளாலும் திறனாய்வுகளாலும் தொடர்ந்து எனக்கு ஊக்கமூட்டும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், வழிகாட்டிகள், உடன் பணியாற்றுபவர்கள்...

சோம்பல்பட்டு நான் சும்மாயிருந்தாலும் ஏதாவது ஏடாகூடம் பேசி என்னைச் சீறியெழுந்து எழுத வைக்கும் இனிய எதிரிகள்...

பதிவுகளை மக்கள் கண்ணில் காட்ட உதவும் திரட்டிகள், சமுக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

வலைப்பூவின் ஏறுமுகமும் இறங்குமுகமும் அறிய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...

தளத்துக்குப் பதிப்புரிமை வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனம்...

பதிவுகளுக்கான படங்களும் பிறவும் தந்து உதவும் பல்வேறு இணையத்தளங்கள்...

படைப்புகளை எழுதத் துணை செய்யும் இணையத்தளங்கள், இதழ்கள், நூல்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாக, இணையத்தமிழ் வளர்க்க நமக்கு பிளாகர் எனும் இந்த நற்சேவையை இலவசமாக அளித்து வருவதோடு இதற்குப் பொருளாதார மதிப்பும் வழங்கி வரும் கூகுள் நிறுவனம்...

என யாவருக்கும்...

யாரையாவது இங்கு நான் குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...

Thanks

காணிக்கை


வலைப்பூ என்கிற ஒன்றை நான் தொடங்கும் முன்பாகவே என் எழுத்துக்களுக்குக் களம் அமைத்துத் தந்த ஏந்தல்

பரந்து விரிந்த தன் தமிழ்ப் புலமை முன் சின்னஞ் சிறுவனான என்னிடம் தன் ஆய்வு முடிவுகள் குறித்துக் கருத்துக் கேட்கும் தனிப்பெரும் தகைமையாளர்

நல்லதோ கெட்டதோ என் குடும்பத்தில் எது நடந்தாலும் ஓடோடி வந்து நிற்கும் மாண்புமிகு பெருமனிதர்

இதழாளர், ஊடகவியலர், எழுத்தாளர் எனவெல்லாம் என்னை அடுத்தடுத்த உயரங்களில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் அன்புசால் ஆசான்

ஆட்சித் தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு இந்த ஆண்டுப் பதிவுலகத் துய்ப்பைப் (experience) காணிக்கையாக்குகிறேன்! 

திருவள்ளுவன் இலக்குவனார்
படம்: நன்றி இமேச்சசு.எசார்கேயெச்.

முந்தைய ஆண்டுகளில்:
✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
✎ உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
✎ உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்குங்களேன்! 
 

ஞாயிறு, பிப்ரவரி 14, 2021

#GoBackModi, #PoMoneModi - தமிழ்நாட்டுடன் கைகோத்த மலையாள நாடு

வழக்கமாக மோடியின் வருகையைக் கண்டித்துத் தமிழர்கள்தாம் #GoBackModi எனச் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு எதிர்ப்பார்கள். ஆனால் என்றும் இல்லாத புதுமையாக, இன்று மலையாளிகளும் தமிழர்களுடன் சேர்ந்து கொண்டு #PoMoneModi எனச் சிட்டையிட்டு (tag) அலைவீசச் (trend) செய்து கொண்டிருக்கிறார்கள்! இதற்காக நான் உருவாக்கிய ஒரு போன்மிப் படம் கீழே!

#GoBackModi & #PoMoneModi
 

படம்: நன்றி சிறீ சூரியா மூவீசு

சனி, ஏப்ரல் 11, 2020

ரகுராம் ராசன் எனும் திறமைசாலி!

நமது முன்னாள் சேமவங்கி ஆளுநர் (Reserve Bank Governer) இரகுராம் ராசன் அவர்கள் பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிவுரைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் எனும் செய்தியைக் கேட்டதும் எனக்குப் பழைய ‘எதிர்நீச்சல்’ படத்தில் வரும் உரையாடல்தான் நினைவுக்கு வந்தது.

அதைக் கொஞ்சம் மாற்றி இதோ ஒரு போன்மி (meme) இங்கே உங்கள் பார்வைக்கு!

Raghuram Rajan selected as a consultant in IMF

சனி, ஆகஸ்ட் 24, 2019

இந்தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் - பகடிக் காணொலி (Troll Video)


"இடுக்கண் வருங்கால் நகுக" என்றார் வள்ளுவர். ஆனால் அண்மைக்காலமாக நாட்டில் நடப்பவற்றையெல்லாம் பார்த்தால் சிரித்துச் சிரித்தே பித்துப் பிடித்து விடும் போல் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஓரிரு நாட்களாகப் பெரிதும் விவாதத்துக்குள்ளாகி இருக்கும் பொருளாதாரச் சரிவு. 

பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, எரிபொருள் விலைத் தீர்மானத்தைத் தனியாரிடம் கையளித்தல் என அடுக்கடுக்காக இவர்கள் கொண்டு வந்த பொருளாதாரச் மாற்றங்களால் மக்களான நாம் ஓட்டாண்டிகளானபொழுது எல்லாம் நாட்டுக்காகத்தானே என்று பொறுத்துக் கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது நாட்டுப் பொருளாதாரமும் தள்ளாடுகிறது என்றால் மேலே உள்ள நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அதையே இன்றைய நாட்டு நிலைமைக்கேற்பப் பகடிக் காணொலியாக (Video Troll) மாற்றியிருக்கிறேன். ஏதோ இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் உங்களைச் சிரிக்க வைக்க என்னாலான முயற்சி.
❀ ❀ ❀ ❀ ❀
காணொலி பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து அவர்களையும் சிரிக்க வையுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

வியாழன், ஜூலை 25, 2019

வானதி சீனிவாசன் சொன்ன பச்சைப் பொய்! | பகடிச்சித்திரப் பதிவு (IMAGE POST)

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக அண்மையில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் அதனால் ஏற்படக்கூடிய கேடுகள் பற்றிப் புள்ளிவிவரங்களுடனும் அசைக்க முடியாத வாதங்களுடனும் மிகச் சிறப்பாகப் பேசியிருந்தார். சமூக அக்கறையாளர்கள் சிலர் அவர் பேச்சிலிருந்து பத்துக் கேள்விகளை மட்டும் தொகுத்து வெளியிட்டனர்.

பா.ஜ.க-வின் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள் இன்று அந்தப் பத்துக் கேள்விகளுக்கு விடைளிக்கிறேன் பேர்வழி என்று வெளியிட்ட பத்துப் படப் பதிவுகள் வெறுப்பேற்றலின் உச்சம். எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை. அவ்வளவு தாங்குத்தன்மை (சகிப்புத்தன்மை) எனக்கு இல்லை. சிலவற்றுக்கு மறுமொழி அளித்தேன். ஒன்றே ஒன்றை மட்டும் படப்பதிவு செய்து வெளியிட்டுள்ளேன். அந்தப் பதிவைக் கீழே நீங்களே பாருங்கள்!

வியாழன், மே 02, 2019

ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!

6th Birthday of your AgaSivappuThamizh
உலகத் தமிழ் உள்ளங்களே, ‘அகச் சிவப்புத் தமிழின்’ ஆறாவது பிறந்தநாள் பதிவுக்கு உங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன்!

ஆம், நண்பர்களே! உங்கள் அன்புக்குகந்த இந்த வலைமனை ஏப்ரல் 23, 2019 அன்று ஆறு ஆண்டுப் பயணத்தை நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் நுழைந்து விட்டது. அதையொட்டி ஆறாண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டில் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை உங்களுக்குப் பந்தி வைக்க வந்திருக்கிறேன். முதலாவதாகப் புள்ளிவிவரங்கள். 



பதிவுகள்
கருத்துக்கள்★
பார்வைகள்
அகத்தினர்கள்★★
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 -
ஏப்ரல் 2019
13
120
38949+
-183
மொத்தம்
125
1525
3,09,565+
▽2009
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.
▽ எண்ணிக்கையில் இறக்கம்.


நம் நேச(ர்) நாடுகள் :-P 

 
உள்ளீடு
பக்கக்காட்சிகள்
இந்தியா
132003
அமெரிக்கா
81228
இரசியா
14411
பிரான்சு
8641
ஐக்கிய அரபு நாடுகள்
5734
ஆறாமாண்டில் அதிகம் படிக்கப்பட்ட ஐந்து பதிவுகள்

❋ இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (12016 பார்வைகள்)

❋ சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (11361 பார்வைகள்)

❋ காசுக்கு வாக்களிப்பது தவறா? – ஆர்.கே நகர் நியாயங்கள் (10856 பார்வைகள்)

❋ கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? (9739 பார்வைகள்)

❋ தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்! (7460 பார்வைகள்)

வழக்கமாக, அதிகம் பார்வையிடப்பட்ட முதல் ஐந்து பதிவுகளைப் பட்டியலிடும்பொழுது அந்தப் பதிவுகள் எழுதப்பட்ட நேரம், அவை கடந்து வந்த வழி, ஈட்டிய வெற்றி குறித்தெல்லாம் எழுதுவேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் எழுதவில்லை. காரணம், இவை அனைத்துமே பழைய பதிவுகள். போன ஆண்டு நான் எழுதிய எந்தப் பதிவும் பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை sad. 

போன ஆண்டு நான் எழுதிய பதிவுகளே மிகவும் குறைவுதான். அதுவும் மிகவும் இடைவெளி விட்டு. இதனால் முந்தைய ஆண்டு (2017-18) ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்ற நம் தளம் போன ஆண்டு (2017-18) அதில் பாதியைக் கூட எட்டவில்லை.

இருப்பினும் வலைப்பூவின் தொடக்க ஆண்டுகளில் 20, 30 எனப் பதிவுகள் எழுதிப் பெற்ற பார்வைகளைக் காட்டிலும் இது கூடுதல்தான். அன்று அத்தனை பதிவுகள் வெளியிட்டு முப்பதாயிரம், முப்பத்தையாயிரம் எனக் கிடைத்த பார்வைகள் இன்று வெறும் 13 பதிவுகளை வெளியிட்டும் சற்றேறக்குறைய அதே அளவிலான பார்வைகளை ஈட்டுகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த அளவுக்கு இன்று இந்தத் தளம் மக்களிடையே போய்ச் சேர்ந்திருப்பதுதான் என நினைக்கிறேன். புதிதாக ஏதும் எழுதாவிட்டாலும் முன்பு எழுதிய பதிவுகள் அடைந்த புகழ் தொடர்ந்து இந்தத் தளத்துக்கு மக்களை அழைத்து வந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் பார்க்கையில் நானும் ஏதோ பயனுள்ள வகையில் எழுதித்தான் இருக்கிறேன் என எண்ணி மகிழ்கிறேன்.

இறங்குமுகப் பயணத்திலும் சில மறக்க முடியா நினைவுகள்

கடந்த ஆண்டுப் பதிவுலகப் பயணம் இப்படி இறங்குமுகமாக இருந்தாலும், சில மறக்க முடியா நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை. வெற்றி என்பது வெறும் பார்வை எண்ணிக்கையில் மட்டும் இல்லை அன்றோ? அதைத் தாண்டி வேறு சில வெற்றிகளை இந்தாண்டு சந்தித்தேன். கூடவே, வழக்கம் போல் சில கசப்பான நிகழ்வுகளும் உண்டு. உண்மையில், இவற்றைப் பதிவு செய்யவே இந்தப் பிறந்தநாள் பதிவு.

கடந்த ஆண்டு நெஞ்சை நொறுங்கச் செய்த முதல் நிகழ்வு ஸ்டெர்லைட் படுகொலை. அந்தப் படுகொலையை விடப் பெருங்கொடுமை, அதைத் தட்டிக் கேட்டவர்களே கூட “மக்கள் வரம்பு மீறவில்லை. எனவே சுட்டது தவறு” என்பதாகவே திரும்பத் திரும்ப வாதாடியதுதான். இது, “மக்கள் வரம்பு மீறியிருந்தால் சுட்டது சரியே” என மறைமுகமாகச் சொல்வது போல் இருந்தது. எனவே இது தவறு; மக்கள் வன்முறையில் இறங்கினால் கூட அதை இரப்பர்க் குண்டு, கண்ணீர்ப் புகை போன்றவற்றின் மூலம் அடக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய, சுட்டுக் கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி ‘ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!’ என்ற பதிவை எழுதினேன்.

இதைத் துவிட்டரில் படித்துவிட்டு, நான் பெரிதும் வியக்கும் தமிழறிஞர் கண்ணபிரான் இரவிசங்கர் (KRS) அவர்கள் தன் நண்பர்களுக்கும் பகிர, அதுவரை துவிட்டரில் என்னுடைய வேறெந்த வலைப்பதிவும் பெறாத அளவுக்கு 55 விருப்பக்குறிகளும் 69 மறுகீச்சுகளும் பெற்றுப் பரவலான கவனத்தை ஈர்த்தது இப்பதிவு.

இத்தோடன்றி, பதிவுலகத் தோழர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்கள் ‘மக்களைக் கொலை செய்ய அரசுக்கு உரிமை இருக்கிறதா?’ எனும் தலைப்பில் இதைக் காணொலியாக வெளியிட அஃது ஏறக்குறைய 2000 பார்வைகளைப் பெற்றது. 

 
ஆனால் இவற்றையெல்லாம் விட, இனியாவது அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் மக்கள் அதை எதிர்த்துச் சரியான கேள்விகளை எழுப்ப இப்பதிவு ஒரு சிறு தூண்டுதலாக அமைந்தால், அப்படி ஒரு மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் அதுவே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவை ஒட்டி சமூக ஊடகங்களில் தமிழ்த் தேசியவாதிகள் – திராவிடவாதிகள் சொற்போர் மீண்டும் உச்சம் அடைந்தது. தமிழினப் படுகொலையின்பொழுது கருணாநிதி நடந்து கொண்ட விதத்தை நினைவூட்டித் தமிழ்த் தேசியவாதிகள் மீண்டும் திட்ட, அதை எதிர்த்துத் திராவிடவாதிகள் பச்சையான புளுகுகளை அவிழ்த்து விட மிகவும் கீழ்த்தரமாகப் போனது.

எனவே கருணாநிதி மீதான இந்தக் குற்றச்சாட்டை முறையாக எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்தால் இந்தப் பழி அவரை விட்டு நீங்கும் என்பதைச் சொல்லும் விதமாய்க் ‘கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?’ எனும் கட்டுரையை எழுதினேன். உண்மையிலேயே உளமார்ந்த அக்கறையோடு எழுதிய இந்தப் பதிவைக் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் துவிட்டரில் பெரும்படையாய் வந்து சண்டை பிடித்தார்கள் திராவிடவாதிகள். எவ்வளவு பேசினாலும் என்னை மடக்க முடியவில்லை என்றானதும் தங்கள் மனதில் இருந்த சாக்கடையையும் என் மேலே வாரி வீசி விட்டுப் போனார்கள்.

பச்சைப் பொய்களையே எதிர்வாதங்களாய் முன்வைத்த இவர்களின் பேச்சை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், யாருக்காக இதை எழுதினோமோ அவர்களே சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே, அந்த அளவுக்குத் தவறான கோணத்தில் எழுதி விட்டோமோ என்று வருந்தினேன். அந்த நேரத்தில்தான் வந்தது அந்த மடல்! தலைசிறந்த பெரியாரியவாதியும் முதிர்ந்த பகுத்தறிவாளருமான ‘கீற்று’ இதழின் ஆசிரியர் நந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு “இதை ஏன் கீற்றிற்கு அனுப்பவில்லை, தோழர்?” என்று உரிமையோடு கேட்டிருந்தார்.

Keetru Nandhan mail for ask that why I did not send the "Solution for the treacherous accusation against Karunanidhi" article to Keetru

அவருடைய அந்த மடல் இந்தக் கட்டுரையால் எனக்கு ஏற்பட்ட அத்தனை காயங்களையும் ஒரு நொடியில் போக்கியது. திராவிட இயக்கச் சிந்தனைகளில் வெகுவாக ஊறியவர், கருணாநிதி போன்ற திராவிடத் தலைவர்கள் இந்த சமூகத்துக்கு எந்த அளவுக்கு முக்கியமானவர்கள் என்பற்றையெல்லாம் நன்கறிந்தவர் நந்தன் அவர்கள். அவரே இந்தக் கட்டுரை தன் இதழில் வெளிவந்திருக்க வேண்டும் என விரும்பிக் கேட்கிறார் என்றால் அதை விட ஒரு நற்சான்றிதழ் இதற்குத் தேவையில்லை. இது தமிழ்த் தேசியச் சார்புத்தன்மை காரணமாகவோ கருணாநிதி மீதான காழ்ப்புணர்வு காரணமாகவோ எழுதப்பட்டது இல்லை; ஈழ இரண்டகக் (துரோகக்) குற்றச்சாட்டை முறையாகத் தி.மு.க., எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் எழுதப்பட்டதுதான் என்பதற்கு நந்தன் அவர்களின் அந்த ஒரு வரி மடலே போதுமானது.

இதற்கு அப்புறம் செப்டம்பர், அக்டோபர் மாதமெல்லாம் அலுவல்கள் மூச்சு முட்ட இருந்ததால் புதிதாக ஏதும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஏற்கெனவே பிரதிலிபியும் - அகம் மின்னிதழும் இணைந்து ‘இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன, அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்’ என்ற கருப்பொருளில் நடத்திய ‘ஞயம்பட வரை’ என்ற கட்டுரைப் போட்டியில் ௩௦.௦௧.௨௦௧௬ அன்று இடம்பெற்று வலைப்பூவில் அதுவரை வெளியிடாமல் வைத்திருந்த ‘தமிழின் இன்றைய நிலைமையும் தமிழர் நமது கடமையும்’ என்ற கட்டுரையை மேலும் செழுமையூட்டி ‘உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் வெளியிட்டேன்.

இதன் முதல் பாகத்தைப் படித்து விட்டுத் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவரான இராம.கி., எனும் இராமசாமி கிருஷ்ணன் ஐயா பாராட்டியிருந்தது எனக்குப் புளகாங்கிதத்தை (goose bumps) ஏற்படுத்தியது. தமிழில் அரிதினும் அரிதான வரலாற்று ஆராய்ச்சிகளையும் கற்பனைக்கும் எட்டாத சொல்லாய்வுகளையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற ‘வளவு’ இராம.கி., அவர்கள் நான் கொண்டாடும் அறிஞர்களில் ஒருவர். அவரே இந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் அதை விடச் சிலிர்ப்பான ஒரு பாராட்டும் இதற்குக் கிடைத்தது. இதோ நீங்களே அதைப் பாருங்கள் கீழே! 

Unforgettable feedback received for "Place of the mother tongue in Tamil lifestyle (1/2)" article

தமிழ்ப் பயன்பாடு குறித்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டுத் தன் தமிழ்ப் பயன்பாட்டுத் திறனை ஒருவர் சோதித்துப் பார்த்துக் கொள்கிறார் என்றால் அதை விட எழுதியவனுக்கு நிறைவு தருவது வேறென்ன இருக்க முடியும்? தங்கள் எழுத்து மக்களின் மனதில், வாழ்வில் குறிப்பிட்ட மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எழுதும் ஒவ்வொருவரின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு! அதையே இக்கட்டுரை சாதித்து விட்டது எனும்பொழுது இதை விடப் பெரிய வெற்றி வேறு எதுவுமே இல்லை. இதுவரை நான் எழுதியவற்றிலேயே மாபெரும் வெற்றி பெற்ற படைப்பு இதுதான் என்பேன்.

இதன் பின், கடந்த பிப்ரவரி மாதம் எழுதிய ‘தி.மு.க., தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள்! - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்!’ பதிவை ‘2019 தி.மு.க., தேர்தல் அறிக்கைக் குழுவினர்’ படித்து விட்டுத் தனிப்பட மின்மடல் அனுப்பியிருந்தது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

“2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக்கு மக்களும் தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம்” என்று ஸ்டாலின் அறிவித்தார். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே முடிவெடுத்து விட்டேன், நானும் அனுப்புவதாக. ஈழ இனப்படுகொலையில் தி.மு.க., செய்த இரண்டகத்தால் அவர்கள் மீது மாறா வெறுப்புக் கொண்ட கோடிக்கணக்கான தமிழர்களில் ஒருவனான நான் திடீரென இப்படி ஒரு முடிவுக்கு வரக் காரணம் உண்டு. இந்த நேரத்தில் யாரும் தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பைத் தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியாக அளிக்க வேண்டும் என வலியுறுத்தாவிட்டால் நாளைக்கே இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் “எங்கள் தேர்தல் அறிக்கையை வடிவமைக்கும் பொறுப்பையே நாங்கள் மக்களிடம் ஒப்படைத்தும் யாருமே தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை” எனக் கூசாமல் சொல்வார்கள் என்பதால்தான்.

அதனால்தான் பரிந்துரைகளை ஸ்டாலின் சொன்னபடி மின்னஞ்சலில் அனுப்பியது மட்டுமின்றித் துவிட்டரிலும் குறிப்பிட்ட சிட்டையின் (tag) கீழ் பொதுப் பார்வைக்கு வைத்தேன். அதுவும் போதாதென்று என்றும் இது நிலையாக மக்கள் பார்வைக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே வலைமனையிலும் பதிந்தேன்.

ஆனால் எதிர்பாராத வகையில், மின்மடலைப் படித்ததோடு மட்டும் நில்லாமல் வலைமனைக்கும் வந்து பார்வையிட்ட தி.மு.க-வின் தேர்தல் அறிக்கைக் குழுவினர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தனிப்பட்ட முறையில் விரிவாக மறுமடல் எழுதியது உண்மையாகவே மிகவும் வியப்பை அளித்தது. யார் எது சொன்னாலும் மதித்துச் செவிமடுக்கும் கட்சி எனத் தி.மு.க., பற்றி மற்றவர்கள் சொல்வது வெற்றுப் புகழ்ச்சியில்லை போலும் என்று தோன்ற வைத்தது.

பொதுவாகப் பெரிய பெரிய எழுத்தாளர்கள்தாம் “இந்த நூல் அந்தப் பதிப்பகத்தார் கேட்டதால் எழுதியது... அந்த நூல் இந்த இதழினர் கேட்டதால் எழுதியது” எனவெல்லாம் குறிப்பிடுவார்கள். ஆனால் என்னை நானே மீண்டும் மீண்டும் கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் விதமாக என் வாழ்விலும் அப்படி ஒன்று நடந்தது! அதைத்தான் அடுத்துக் குறிப்பிடப் போகிறேன். அதுவும் ஒரு மின்மடல்தான். இதோ கீழே பாருங்கள்! 

Keetru Nandhan asked me to write an article for Keetru - One of the Best Moment in my life

இப்படியெல்லாம் என் வாழ்க்கையிலும் நடக்கும் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை! ஆனானப்பட்ட ‘கீற்று’ ஆசிரியர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்கிறார் என்றவுடன் “மவனே, எழுத்தாளனாயிட்டேடா நீ!” என்று யாரோ என் முதுகில் தட்டுவது போல் இருந்தது.

கோரிக்கை என அவர் குறிப்பிட்டாலும் அதை மாபெரும் பெருமிதமாகச் (கௌரவம்) சிரமேற்கொண்டு நான் எழுதியதுதான் ‘ஏன் தோற்கடிக்கப்பட வேண்டும் பா.ஜ.க? - வாக்களிக்கும் முன் நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்’ எனும் பதிவு. படித்துவிட்டு நந்தன் அவர்கள் மிகவும் பாராட்டியிருந்தார்.

இவற்றுக்கிடையில் போன ஆண்டில் இரண்டு போன்மிகளையும் (memes) வெளியிட்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக இணையவுலகையே ஆட்சி செய்பவை போன்மிகளும் வாரல்களும்தாம் (trolls). நானும் கூட முன்பு சிலமுறை வெளியிட்டிருக்கிறேன். இருந்தாலும் முன் எப்பொழுதையும் விடக் கடந்த ஆண்டு இவை அதிகம் கொடி கட்டிப் பறந்ததால், அந்தத் தாக்கம் காரணமாக நானும் இரண்டு வெளியிட்டேன். சமூக ஊடகங்களில் மட்டுமே நான் பகிர்ந்து கொண்ட அவை இப்பொழுது இங்கே உங்கள் பார்வைக்கு! 




ஏப்ரல் 2018-19 எனும் இக்காலக்கட்டத்தில் பதிவுலகம் இரண்டு இழப்புகளைச் சந்தித்தது. முதலாவது ‘எனது எண்ணங்கள்’ தி.தமிழ் இளங்கோ அவர்களின் மறைவு. பலமுறை நம் வலைமனைக்கு வந்து அவர் கருத்திட்டிருக்கிறார். கடந்த ஐந்தாம் ஆண்டுப் பிறந்தநாள் பதிவில் கூட வந்து வாழ்த்தியிருந்தார். ஆனால் இந்த ஓராண்டுக்குள் அவர் நம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் வருந்துகிறேன்! அவருக்கு என் அன்பார்ந்த அஞ்சலி!

அடுத்தது ‘வலைச்சரம்’ சீனா ஐயா அவர்களின் இறப்பு.

பொதுவாக யாருடைய வலைமனையையும் தொடர்ந்து படிக்கிற, கருத்துரைக்கிற வழக்கம் எனக்குக் கிடையாது. அதையும் மீறி இன்று தமிழ்ப் பதிவுலகில் என்னை நான்கு பேருக்குத் தெரியும் என்றால் அதற்கு முக்கிய காரணம் வலைச்சரம் இதழும் அதில் என்னைப் பற்றி நம் நண்பர்கள் எழுதியதும்தாம். உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ப் பதிவுலகை ஒரே குடும்பம் போல இறுகப் பிணைத்த அரும்பெருமைக்கு உரியது வலைச்சரம். அதை நிறுவிய ‘அன்பின்’ சீனா ஐயாவோடு எனக்குத் தொடர்பு ஏதும் இல்லை என்றாலும் இப்பேர்ப்பட்ட ஒரு சாதனையை நிகழ்த்திய அம்மாமனிதரின் மறைவு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை என்னால் உணர முடிகிறது. ஐயாவுக்கு எனது உளமார்ந்த அஞ்சலி!

அதே நேரம், உலகத் தமிழ்ப் பதிவர்களுக்கான ஒரு பெரும் வலைப்பின்னலாகச் (network) செயல்பட்ட அவரது வலைச்சரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்பதையும் இங்கே வலியுறுத்திச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். தொழில்நுட்பம் சார்ந்தோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ இதற்கு என்னால் ஆகக் கூடியது ஏதும் இருப்பின் தயங்காமல் கேளுங்கள், கட்டாயம் கை கொடுக்க ஓடோடி வருவேன் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவை தவிர, இன்னோர் இழப்பும் போன ஆண்டு நடந்தது – கூகுள் பிளசின் மூடுவிழா. சக மனிதர்களை நம்பாமல் சமூக ஊடகங்களையே நம்பும் என்னைப் போன்றவர்களுக்கு இது பெரிய அடி! அகச் சிவப்புத் தமிழுக்கு வரும் பார்வைகளில் சரிபாதி கூகுள் பிளசிலிருந்துதான். அது அப்படியே பறிபோய் விட்டது. தவிர, ஏறக்குறைய இருநூறு தொடருநர்களையும் (followers) இழந்து விட்டேன் (அதனால்தான் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டு திடீர் இறக்கம்). தனிப்பட்ட இந்தப் பாதிப்புகளைத் தாண்டி மெய்யாகவே கூகுள் பிளசின் இந்த மூடுவிழா கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

மூடப்படும் செய்தி முந்தைய ஆண்டே தெரியும்; என்றைக்கு மூடப்படப் போகிறது என்பதும் முன்பே தெரியும். அப்பொழுதெல்லாம் ஏதும் தோன்றவில்லை. ஆனால் கடைசி நாளுக்கு முந்தைய நாள் இரவு, படுத்த பின் ஏனோ கொஞ்சம் வேதனையாக இருந்தது, ஒரு நல்ல நண்பனைப் பிரிவது போல. அப்பொழுது உடனே எழுந்து கூகுள் பிளசில் எழுதிய கடைசி வரிகள் இவை.

My last post in G+

வருந்தத்தக்க இத்தகைய நிகழ்வுகளுக்கிடையில் நடந்த ஒரே நல்லது, எனக்கு மிகவும் பிடித்தமான பதிவரும் அருமை நண்பருமான சகா ‘மகிழ்நிறை’ மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்தது (மூன்றாம் பிறந்தநாள் பதிவில் கூட இதையேதான் சொல்லியிருந்தேன். நான் சொன்ன நேரமோ என்னவோ மறுபடியும் பதிவுலகை விட்டுப் போய்விட்டார் அவர். இந்த முறை அப்படிச் செய்ய மாட்டார் என நம்புகிறேன்).

கலைக்குடும்பம் எனக் கேள்விப்பட்டிருப்போம். அது போல, எனக்குத் தெரிந்த ‘பதிவர் குடும்பம்’ மைதிலி அவர்களுடையது. அவரும் அவர் கணவர் கஸ்தூரிரங்கன் அவர்களும் மட்டுமில்லை அவர்கள்தம் மூத்த மகள் நிறைமதிவதனா அவர்கள் கூடப் பதிவர்தாம். ‘மைதிலியின் புன்னகை’ எனும் வலைப்பூவை நடத்தி வரும் தமிழ்ப் பதிவுலகின் குட்டிப் பதிவர்களுள் ஒருவர்! ஓரிரு வாரங்களுக்கு முன் அவருடன் பேசியில் உரையாடினேன். பொதுவாகக் குழந்தைகளோடு பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நிறையோடு நிறையவே பேசினேன். கூடவே மீண்டும் அவர் பதிவு எழுத வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். “நீங்க சொல்லிட்டீங்கள்ல, எழுதிட வேண்டியதுதான்” என்று அவர் தோரணையாகச் சொன்னதை மிகவும் ரசித்தேன். தவிர, “பரவாயில்ல, நீங்க கொஞ்சம் எல்லாத்தைப் பத்தியும் நல்லாப் பேசறீங்க” என்ற அவர் பாராட்டை இப்பொழுது கூட நினைத்து நினைத்துச் சிரித்துக் கொள்கிறேன். மைதிலி அவர்கள் மீண்டும் எழுத வந்து விட்டதால் அவரது ‘புன்னகை’யும் மறுபடி பூக்கும் என நம்புவோம்.

நன்றிக்குரியோர்!

வாட்சப், உயூடியூபு என உலகமே வேறு திசையில் பயணிக்கத் தொடங்கி விட்ட இக்காலத்திலும் இந்த வலைமனைகளைத் தேடி வந்து பெருமையூட்டும் தமிழ்ப் பறவைகள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை ஆதரித்து வரும் பழைய, புதிய அகத்தினர்கள்...

தாங்கள் விரும்பிப் படிக்கும் வலைமனைகளின் பட்டியலில் இந்த மனைக்கும் ஒரு மணை அளித்துக் கவனம் ஏற்படுத்தித் தரும் எனதன்புப் பதிவுலக நண்பர்கள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டு, அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துரைப்பதன் மூலம் என்னைச் செதுக்கி வரும் கீற்று, அகரமுதல இதழ்களின் ஆசிரியர்கள்...

இப்பதிவுகளைப் படைக்கப் பல்வேறு வகைகளிலும் உதவி புரிந்த ஊக்கமளித்த என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள்...

என்னை அடக்க முயல்வதாக நினைத்து மீண்டும் மீண்டும் கொம்பு சீவி விடும் என் பகைச் செல்வத்துக்குரிய எதிரிகள்...

தளத்துக்குப் பார்வைகள் கிடைக்க வகை செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

தளத்தின் உயர்வும் தாழ்வும் அறிந்து சரி செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்கள் (Data Analyzing Sites)...

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம்...

பதிவுகளை அழகூட்டும் படங்களையும் அவற்றை மெருகூட்டும் சேவைகளையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்கள்...

பதிவுகளின் தரத்தை உயர்த்த உரிய தகவல்களை அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாய், தமிழ் வளர்க்க பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை நமக்குத் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருவதோடு கடந்த ஆண்டு முதல் பொருளாதார முக்கியத்தையும் நமக்கு அளிக்க முன்வந்திருக்கும் கூகுள் நிறுவனத்தினர்...

ஆகிய அனைவருக்கும்...

இன்னும் யாரையாவது இங்கு நான் குறிப்பிடத் தவறியிருந்தால் அவர்களுக்கும்...

Thanks

காணிக்கை!

தண்டவாளத் தொடரியைப் போல்
ஒரு கட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்த
என் சிந்தனை ஊர்திக்கு
இறக்கை பொருத்திப் பறக்க வைத்தவன்...

ஒரு விதயத்தை
இத்தனை கோணங்களில் பார்க்க இயலுமா
இவ்வளவு ஆழமாக அலச இயலுமா
இப்படியெல்லாம் கூடப் பேச இயலுமா
என என்னை வியக்க வைத்தவன்...
தன்னோடு சேர்த்து என்னையும் இவ்வழிகளில்
நடக்க வைத்தவன்...

என் எழுத்துக்களில் தென்படுவதாக
இன்று பிறர் குறிப்பிடும்
நுட்பத்துக்கும் செறிவுக்கும் காரணமானவன்...
உடன் பிறவாத் தம்பி...
உளம் பிரியாத் தோழன்...
உணர்வால் குடும்ப உறுப்பினன்...
அஷ்வின் சத்யா அவர்களுக்கு
இந்த ஆண்டு பெற்ற
வலைப்பதிவு வெற்றிகளை
காணிக்கையாக்குகிறேன்!


படங்கள்: நன்றி அலேசியோடெவேச்சி, எழுத்து.காம்.
காணொலி: நன்றி எஸ்.பி.எஸ் மீடியா

முந்தைய ஆண்டுகளில்:
✎ ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!  
✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
✎ உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
✎ உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
✎ உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே! 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (46) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) ஆய்வு (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கண்ணதாசன் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (40) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (10) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (4) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்