.

திங்கள், அக்டோபர் 23, 2017

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

The Tamil forefathers who fought for the Temple Worship Rights of Non-Brahmins
பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள்
முன்குறிப்பு: பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக அமர்த்தி வரலாறு படைத்துள்ளது கேரளம். ஆனால், இதற்கு முன்னோடியாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்று சட்டமே இயற்றிய தமிழ்நாடு இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி, பார்ப்பனரல்லாதோரின் கோயில் பூசை உரிமைகள் குறித்து உண்மையான தகவல்களை வெளிக்கொணரும் நோக்கில் ‘தமிழ்க் காப்புக் கழக’த் தலைவரும் ஆட்சித் தமிழறிஞருமான திருவள்ளுவன் இலக்குவனார் ஐயா அவர்கள் நடத்திய ‘நமக்குத் தேவை தமிழ்ப் பூசைகளும் தமிழ்ப் பூசாரிகளும்’ எனும் கட்டுரைப் போட்டியில் ஐயா அவர்களால் பாராட்டப் பெற்றதும் ‘இலக்குவனார் இலக்கிய இணையம்’ சார்பில் 30.01.2016 அன்று வள்ளல் மாம்பலம் ஆ.சந்திரசேகர் அவர்களால் உரூ.3000/- பரிசில் வழங்கப்பட்டதுமான சிறுவன் என் ஆய்வுக் கட்டுரையை இந்த நேரத்தில் உலகத் தமிழ் நெஞ்சங்களின் மேலான பார்வைக்கு விருந்தாக்க விழைகிறேன்! 

டவுளை நம்ப உலகில் உள்ள எல்லோருக்கும் உரிமை இருக்கும்பொழுது, அந்தக் கடவுளைப் பூசை செய்யவும் நம்புகிற எல்லோருக்கும் உரிமை இருப்பதுதானே முறை? ஆனால், இங்கு நடப்பது என்ன?...

கடவுள் மீது அன்பு (பக்தி) செலுத்த எல்லாரும் வேண்டும்; அந்தக் கடவுளுக்குக் கோயில் கட்ட எல்லா சாதியினரும் வேண்டும்; உண்டியலில் காசு போட எல்லாத் தரப்பு மக்களும் வேண்டும்; ஆனால், கடவுளின் அறைக்குள் (கருவறை = அகநாழிகை) செல்லவும் தொட்டுப் பூசை செய்யவும் மட்டும் குறிப்பிட்ட சிலருக்குத்தான் உரிமை! மனச்சான்றுள்ள மனிதர் யாராவது இதை ஏற்க முடியுமா? ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் இதை மனமுவந்து ஏற்றுக் கொண்டுதான் வாழ்ந்து - வழிபட்டு வருகிறார்கள். ஆம்! பார்ப்பனரல்லாதாருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை பார்ப்பனரல்லாதவர்களிலேயே பெரும்பான்மை மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. “கோயில் பூசாரி போன்ற புனிதமான வேலைகளில் பார்ப்பனர்கள் இருப்பதே சரி” என்பதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து.

இது சரியா? தமிழர்கள் கடவுளைப் பூசிக்கக்கூடாதா? அப்படிப் பூசிப்பது சமய நம்பிக்கைகளுக்கோ வேறு ஏதேனும் நெறிமுறைகளுக்கோ எதிரானதா? இது பற்றி சமயம் - சட்டம் - வரலாறு - குமுகம் (சமூகம்) - இறையியல் என எல்லாக் கோணங்களிலிருந்தும்  அலசுவதே இக்கட்டுரையின் மைய நோக்கம். கூடவே,

தமிழர்கள் இந்துக்களா?...

தமிழர் சமயத்துக்கும் இந்து சமயத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன?...
 
கோயில் பூசை முறைகளை உருவாக்கியவர்கள் தமிழர்களா பார்ப்பனர்களா?...

உலகில் எங்குமே இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தெய்வச் சிலைகளுக்குத் துணியாலான ஆடை ஏன்?...

தமிழர்களின் சாவுச் சடங்குகளுக்கும் கோயில் பூசைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

தமிழர் இல்லங்களில் உள்ள ‘நடுவீடு’ என்பது என்ன?...

தமிழர்களின் நடுகல் வழிபாட்டு முறைக்கும் நடுவீட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?...

இது போன்ற பல்லாண்டுக் காலக் கேள்விகள் அனைத்துக்குமான திடுக்கிடும் விடைகளையும் காணலாம் வாருங்கள்!...

ஆகமங்கள் கூறுவது என்ன? 
 
The Agamas state about the Temple Worship Rights of Non Brahmins

“பார்ப்பனர்கள்தாம் கோயில் பூசாரிகளாக இருக்க வேண்டும்! மற்றவர்கள் அப்பணிக்கு வரக்கூடாது” எனக் கடுமையாக எதிர்ப்பவர்கள் அதற்குச் சான்றாகக் கைகாட்டுவது ஆகமங்களை. அப்படியானால், வடநாட்டில் மட்டும் மக்கள் நேரடியாக அகநாழிகைக்குள் போய்க் கடவுளைத் தங்கள் கைகளாலேயே தொட்டுப் பூசை செய்கிறார்களே எனக் கேட்டால், ஆகமங்கள் தென்னாட்டினருக்கு மட்டும்தான் எனக் கூசாமல் புளுகுகிறார்கள். ஆனால், ஆகமங்களில் அப்படி எங்கேயும் குறிப்பிடப்படவில்லை என்பதே உண்மை.

கோயில் கட்டும் முறைகள், கோயில்களின் வழிபாட்டு முறைகள் முதலான அனைத்துக்கும் வழிகாட்டியாக இருப்பவை ஆகமங்கள். ஆனால், அவற்றில் எங்குமே இன்ன சாதியினர்தாம் பூசை செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை எனப் பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆகமங்களையும் கோயில்களையும் பற்றி ஆராய்ந்து ‘கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்’ எனும் நூலை எழுதியிருக்கும் நீதியரசர் ஏ.கே.இராசன் அவர்கள் “ஆகமங்கள் எவற்றிலும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான் பூசை செய்ய வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை” என்று அந்நூலில் தெளிவாகக் கூறியுள்ளார்.

“ஒரு கோவிலில் ஒருவர் அர்ச்சகராக அல்லது பூசாரியாக வருவதற்குள்ள ஒரே சோதனை தீட்சை மட்டுமேயன்றி சாதியோ, வகுப்போ அல்ல” என ‘ஆலயபிரவேச உரிமை’, பக்க எண்: 75-இல் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. கோபால மூப்பனார் வழக்கில், “கோயில் அகநாழிகைக்குள் ஆகமம் ஒப்புதலளிக்காத நிலையில் பார்ப்பனர்கள் கூட நுழையக் கூடாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புரைத்திருப்பதும், ‘அனைத்து சாதியினரும் பூசாரியாகலாம் (அர்ச்சகராகலாம்)’ என்ற தமிழ்நாடு அரசுச் சட்டத்துக்கு எதிரான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டியிருப்பதும் இக்கருத்தை ஐயம் திரிபற உறுதிப்படுத்துகின்றன.

உண்மை இவ்வாறிருக்க, பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் கோயில் அகநாழிகைக்குள் நுழையக்கூடாது, கடவுளைத் தொட்டுப் பூசை செய்யக்கூடாது என ஆகமம் கூறுவதாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருவது எப்பேர்ப்பட்ட பொய் என்பதையும், இதை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை “வேண்டுமானால், நீங்கள் சொந்தமாக ஒரு கோயில் கட்டி, உங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் பூசாரியாக வைத்துக் கொள்ளுங்கள்” எனச் சிலர் நக்கலடிப்பது எவ்வளவு இழிவான சாதியத் திமிர் என்பதையும் மக்கள் சிந்திக்க வேண்டும்!

அடுத்தது மரபு!...

கோயில் பூசை குறித்துத் தமிழ்நாட்டு மரபு சொல்வது என்ன?

முதலில் மரபு என்பது என்ன? வெகு காலமாகத் தொடர்ந்து பின்பற்றப்படும் வழக்கத்தையே மரபு என்கிறோம். கி.பி 8ஆம் நூற்றாண்டிலிருந்துதான் பார்ப்பனர்கள் கோயிலில் பூசை செய்யத் தொடங்கினார்கள் என்கிறது வரலாறு. (‘இந்தியாவில் மட்டும் சாதி இருப்பது ஏன்?’ - வே.கன்னுப்பிள்ளை இ.ஆ.ப). ஆனால், தமிழர் வரலாறோ கி.மு 1000-இலிருந்து தொடங்குகிறது. ஆக, கிறித்து பிறக்கும் முன் ஆயிரம் ஆண்டுகள், கிறித்து பிறந்த பின் 800 ஆண்டுகள் (கி.பி 8ஆம் நூற்றாண்டு) என 1800 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதவர்கள்தாம் - தமிழர்கள்தாம் எல்லாக் கோயில்களிலும் பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதும், கி.பி 8ஆம் நூற்றாண்டு முதல் தற்பொழுதைய 21ஆம் நூற்றாண்டு வரை 1300 ஆண்டுகளாகத்தான் பார்ப்பனர்கள் கோயில் பூசைகளைச் செய்து வருகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. ஆகவே, பார்ப்பனரல்லாத தமிழர்களைப் பூசாரிகளாகப் பணியமர்த்துவது மரபுப்படி சரியானதே என்பதில் ஐயமே தேவையில்லை.

ஒருவேளை, மரபு என்பது எத்தனை ஆண்டுக்காலமாக ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது என்பதைப் பொறுத்ததில்லை; குறிப்பிட்ட குமுகாயத்தின் (சமுதாயத்தின்) தொன்மையான வழக்கம் அல்லது நாகரிகம் எதுவோ அதுவே மரபு எனச் சிலர் கூறலாம். அப்படி வைத்துக் கொண்டாலும், தொன்மைப் பழங்காலத்தில் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களில் பூசாரிகளாக இல்லை, தமிழர்கள்தாம் அவ்வாறு இருந்திருக்கிறார்கள் என்பதால், அவ்வகையிலும் பார்ப்பனரல்லாத தமிழர்களைப் பூசாரிகளாகப் பணியமர்த்துவது மரபுப்படி சரியானதே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

ஒருக்கால், கோயில்களின் ‘சம்பிரதாயம்’ இதற்கு எதிராக இருக்குமோ எனப் பார்த்தால் அதுவும் இல்லை. காரணம், வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படும் வழக்கம்தான் ‘சம்பிரதாயம்’ எனப்படுகிறது. அப்படிப் பார்த்தால், தொடக்கத்திலிருந்து பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தமிழ்ப் பூசாரிகளைக் கோயில்களில் பணியமர்த்தும் வழக்கம் இடையில் முறிக்கப்பட்டுத்தான் இன்றைய வழக்கம் - அதாவது, பார்ப்பனர்கள் மட்டுமே பூசாரிகளாக இருக்கும் வழக்கம் - திணிக்கப்பட்டுள்ளது என்பதால், ‘சம்பிரதாயம்’ என்கிற அடிப்படையில் பார்த்தாலும் தமிழர்கள் பூசாரிகளாக அமர்வது சரியெனவே ஆகிறது.

சட்டம் என்ன சொல்கிறது?
The Law

தமிழர்களின் பூசை உரிமையை நிலைநாட்ட 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ‘அனைத்து சாதியினரும் பூசாரியாகலாம்’ என்று சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கத்தினரும் பிறரும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சிவாச்சாரியர்கள் முதலானோரின் விண்ணப்பத்தைத் (மனுவை) தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அதே நேரத்தில் “ஆகம நெறி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே பூசாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டு அரசின் சட்டத்தைத் தள்ளுபடி செய்யாமல், அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர்களின் தரப்பையே உச்சநீதிமன்றம் புறந்தள்ளி இருப்பதால், குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு (நிபந்தனைக்கு) உட்பட்டுத் தமிழ்நாட்டு அரசு பார்ப்பனர் அல்லாத தமிழர்களையும் பூசாரிகளாக்க நடவடிக்கை எடுக்கலாம் என இதன் மூலம் சட்டப்படி வழி வகுக்கப்பட்டுள்ளது. தவிர, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டின்படி பார்த்தாலும் தமிழ்ப் பூசாரிகளைப் பணியமர்த்துவதில் எந்தத் தடையும் இல்லை; ஆகமமோ மரபோ சம்பிரதாயமோ தமிழர்களைப் பூசாரிகளாக்க எவ்விதத்திலும் குறுக்கே நிற்கவில்லை என்பதையும் பார்த்தோம்.

இதே போல, 2002ஆம் ஆண்டு, கேரளாவில் ஈழவ வகுப்பைச் சேர்ந்த இராசேசு என்பவரை அம்மாநில தேவசம் வாரியம் பூசாரியாகப் பணியமர்த்தியபொழுதும், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், “சாதிப் பாகுபாடுகளை நிலைநிறுத்தும் எந்த வழிபாட்டு முறையையும் ஏற்க முடியாது” என்று கூறி இராசேசின் பணியமர்த்தலை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, சட்டப்படி பார்த்தாலும் தமிழர்கள் பூசாரிகளாவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே உண்மை!

கடவுளுக்கு அடுக்குமா?

பார்ப்பனர் அல்லாதோர் கடவுளைத் தீண்டுவதையோ பூசை செய்வதையோ கடவுள் ஏற்க மாட்டார், விரும்ப மாட்டார் எனப் பலரும் கருதுகின்றனர். அப்படி நினைப்பவர்கள் கண்ணப்ப நாயனார் கதையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

பார்ப்பனர் அல்லாதவரும் சாதியால் தாழ்த்தப்பட்டவருமான கண்ணப்பர் செய்த பூசையைச் சிவபெருமான் ஏற்கவில்லையா? இத்தனைக்கும் கண்ணப்பர் எப்படி அந்தப் பூசையைச் செய்தார்? இன்று நீதிமன்றங்களும் பழமையாளர்களும் மாய்ந்து மாய்ந்து வலியுறுத்தும் ஆகம நெறிகளின்படியா? இல்லை!

இறைவனுக்குச் சாற்றுவதற்கான மலர்களைத் தன் தலையில் செருகிக் கொண்டு, திருமுழுக்குக்கான (அபிசேகம்) நீரைத் தன் வாயில் நிரப்பிக் கொண்டு, படையலுக்குப் பன்றிக் கறியை - அதுவும், சுவையான கறித் துண்டங்கள் எவை என்று மென்று பார்த்துச் சேகரித்து - எடுத்துக் கொண்டு போய் இவற்றை வைத்துத்தான் சிவலிங்கத்துக்குப் பூசை செய்தார் கண்ணப்பர்! இந்தப் பூசையைத் தனக்கு உவப்பானது என்று இறைவனே அந்தக் கோயிலுடைய பட்டரின் கனவில் வந்து உரைத்ததாக, நான் சொல்லவில்லை; பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதோர் ஆகிய இரு தரப்பினரும் புனித நூலாகப் போற்றும் பெரிய புராணம் கூறுகிறது.

சிவன் மட்டுமில்லை, இன்ன பிற தெய்வங்களும் கூட சாதியை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்பதற்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் புராண - இதிகாச - வரலாற்று நூல்களிலிருந்தே சுட்டிக்காட்ட முடியும்.

தீண்டத்தகாத குலம் என்று குறிக்கப்பட்ட பாணர் குலத்தைச் சேர்ந்தவரான திருப்பாணாழ்வாரைப் பெருமாள் கோயில் பட்டர் கல்லால் அடித்தபொழுது அவர் மீது பட்ட காயத்தால் தன் மேனியில் குருதி வடிவதாகவும், திருப்பாணாழ்வாரும் தானும் வேறு வேறு இல்லை என்றும் திருமால் ஒருமுறை திருவிளையாடல் நிகழ்த்திக் காட்டியதாக ஆழ்வார்கள் வரலாறு கூறுகிறது.

இன்று தாழ்த்தப்பட்ட வகுப்பாகக் கற்பிக்கப்படும் மலைவாழ் வகுப்புப் பெண்ணான வள்ளியை முருகன் தேடி வந்து காதலித்து மணம் புரிந்ததாகக் கந்த புராணம் காட்டுகிறது. 
Lord Shiva came as Panchma and give enlightment to Adi Sankaracharya
ஆதிசங்கரருக்கு அறிவு புகட்ட சண்டாள வடிவில் வந்த சிவன்
என்னதான் இறையியலில் கரை கண்டிருந்தும் ஆதிசங்கரருக்கு சாதி வேறுபாடு பார்க்கும் குணம் போகாததால் இறைவன் தானே சண்டாள வடிவில் வந்து அறிவு புகட்டி அவரை அடிபணியச் செய்ததாக ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்துள்ளது.

அம்மன்களைப் பொறுத்த வரை கேட்வே வேண்டா! அன்று முதல் இன்று வரை எத்தனையோ அம்மன் கோயில்களில் தமிழர்கள்தாம் பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படி, தன்னை நெருங்கவும், தன்னோடு இரண்டறக் கலக்கவும் கூட சாதியோ பிறப்போ தொழிலோ இது போன்ற வேறு எதுவுமோ ஒருநாளும் பொருட்டில்லை; தன் மீதான உண்மை அன்பு ஒன்றே அதற்கான தகுதி என்று வெவ்வேறு காலக்கட்டங்களில் கடவுள் மீண்டும் மீண்டும் பலமுறை உணர்த்தியும் கடவுளைத் தொட்டுப் பூசை செய்ய சாதியை ஒரு தடையாக நினைப்பது எந்தளவுக்குக் கடவுளுக்கு எதிரான நிலைப்பாடு என்பதைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் முதலில் உணர வேண்டும்!

“தமிழர்களின் பூசை உரிமை பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே, தமிழர்களுக்கெனப் பூசை முறைகள் உண்டா? தனிப்பட்ட இறைக் கொள்கை உண்டா?” எனச் சிலர் கேட்கலாம். அதற்கான விடைகள் இனி.

கடவுளைப் பூசிப்பதில் தமிழர்களுக்கே உரிய தனித்தகுதிகள்!
Nature worship festivals of Tamils
இயற்கைக் கூறுகளை வழிபடும் தமிழர் பண்பாடு
“தமிழர்களுக்கு எனத் தனிச் சமயம் கிடையாது. இந்து சமயமே தமிழர் சமயம்! தமிழர்கள் இந்துக்களே! தமிழ்ச் சமயம் என்பதும் இந்து சமயத்தின் ஒரு பகுதியே!” என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள் இந்து சமய அடிப்படையாளர்கள். ஆனால், இந்து சமயத்துக்கும் தமிழர் சமயத்துக்கும் அடிப்படையிலேயே பெருத்த முரண்பாடு உண்டு!

“கடவுள் என்பவர் அனைத்து வல்லமைகளும் கொண்டவர். அவர் மேலுலகில் வாழ்கிறார். அவருக்கு அழிவு என்பதே கிடையாது. அவர்தான் உலகத்தையும் உயிர்களையும் படைத்தார்” - இதுதான் உலக சமயங்கள் அனைத்துக்கும் பொதுவான இறைக் கொள்கை.

இந்து சமயமும் இதற்கு விலக்கில்லை. பிரம்மன் இருப்பது பிரம்மலோகம்; திருமால் வாழ்வது வைகுண்டம்; தேவர்கள் உறைவது தேவலோகம் என ஒவ்வொரு கடவுளும் வெவ்வேறு உலகங்களில் இருப்பதாக இந்து சமயம் கூறுவதே இதன் அடையாளம். கடவுளுக்குப் படைக்க விரும்பும் பொருட்களை அந்தந்தக் கடவுளுக்கான வேள்வித் தீயில் போட்டால் எரிந்து புகையாக மேலெழுந்து மேலுலகில் உள்ள கடவுள்களை அடையும் எனும் கோட்பாட்டைக் கொண்ட வேள்வி முறைகளை இன்றும் பார்ப்பனர்கள் கடைப்பிடித்து வருவதும் இதன் அடிப்படையில்தான். கடவுள்தான் உலகத்தையும் உயிர்களையும் படைத்து - காத்து - அழித்து வருகிறார்; அவருக்கு அழிவே இல்லை எனும் கோட்பாடுகளும் இந்து சமயத்தில் ஆழமாக வேரூன்றியவையே.

ஆனால், தமிழர் கடவுள் கொள்கை இதற்கு முற்றிலும் நேர்மாறானது. இயற்கை வழிபாடும், தம்மிடையே வாழ்ந்து மறைந்த மனிதர்களை - அவர்தம் நினைவைப் - போற்றுவதும்தாம் தமிழர் இறைக் கொள்கை.

கதிரவனைத் தொழும் பண்டிகையான பொங்கல் விழா, காவிரி முதலான நீர்நிலைகளை வணங்கும் ஆடிப்பெருக்கு ஆகியவை இயற்கையையே இறையாய்ப் போற்றும் தமிழர் மரபுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் தாண்டி இன்றும் சான்று பகர்கின்றன. வேப்பமரம், அரசமரம் போன்ற தெய்விக மரங்களைத் தமிழர்கள் இப்பொழுதும் வணங்கி வருவதும், எல்லாக் கோயில்களிலும் தலமரம் என ஒன்று இக்காலத்திலும் இருப்பதும் இதற்கான மேலும் சில சான்றுகள். இவை போக, பண்டைத் தமிழ்க் கடவுள்களாகச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மாயோன் என்கிற திருமால், சேயோன் என்கிற முருகன், வேந்தன், வருணன் ஆகியோரும் உண்மையில் இயற்கையின் வடிவங்களே எனத் தமிழறிஞர்கள் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். (இதன் மூலம் இந்தக் கடவுள்கள் யாவரும் தமிழ்க் கடவுள்களே என்பதும் உறுதியாகிறது!).

இதே போல் உயிர் நீத்தவர்களை - அவர்களின் நினைவைப் - போற்றுவதையும் தமிழர்கள் இறைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் நிறையவே உள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களிடையே இன்றும் நீடித்திருக்கும் சாவுச் சடங்குகள் இதற்குக் கண்கூடான சான்றாய் விளங்குகின்றன!
Nadu Veedu - The Ethnic Identity which stands still in each and every Tamil Homes to prove Tamils are not Hindus
நடுவீடு - தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்பதன் அத்தாட்சியாய்
இன்றும் தமிழர் இல்லந்தோறும் தவறாமல் இடம்பிடித்திருக்கும் பண்பாட்டு அடையாளம்
தம் குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்த பின், அவர் உயிர் விட்ட இடத்தில் (அல்லது உயிர் போன பின் அவரைக் கிடத்தி வைத்திருந்த இடத்தில்) சுவரில் மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டிட்டு, அந்த வரைபடத்தையே இறந்தவரின் உருவமாகக் கருதி அதற்கு முன்பு விளக்கேற்றி வைத்தும் படையலிட்டும் வழிபடுவது தமிழர் இல்லங்களில் இன்றும் உள்ள வழக்கம். அதன் பிறகும் ஓராண்டுக் காலத்துக்கு வேறு கடவுள் எதையும் தொழாமல், பண்டிகை நாட்கள் அனைத்திலும் இந்த வரைபட உருவத்தையே கடவுளாக எண்ணி வழிபடுவார்கள். இதுவும் தவிர, இதே போன்ற சுவர் வரைபடம் ‘நடுவீடு’ என்கிற பெயரில் தமிழர் இல்லங்கள் அனைத்திலும் இடம்பெற்றிருப்பதும், வீட்டில் எத்தனை கடவுள் படங்கள் இருந்தாலும் தமிழர் பண்டிகைகள் அனைத்தும் இந்த நடுவீட்டு உருவத்தின் முன்னிலையிலேயே கொண்டாடப்படுவதும் இறந்தவர்களைப் பூசிப்பதே தமிழர் மரபு என்பதன் கண்கூடான அத்தாட்சிகள்! 

தன் குடும்பத்துக்காக வாழ்ந்து மறைந்த ஒருவர் இறந்தால் அவர் வீட்டில் உள்ளவர்கள் அவரை இப்படிப் பூசிக்கிறார்கள். இதே போல நாட்டுக்காக, மக்களுக்காக, குமுகத்துக்காக (சமூகத்துக்காக) வாழ்ந்த / உயிர் விட்ட ஒருவர் இறந்தால் இது மாதிரியே அவர் நினைவாகப் பொது இடத்தில், வெட்டவெளியில் ஒரு கல்லை நட்டு, அதில் மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்து அதற்கு முன்னே விளக்கேற்றிப் படையலிடுவது தமிழ்க் குமுகத்தின் வழக்கமாக இருந்துள்ளது. இதையே ‘நடுகல் வழிபாடு’ என்கிறோம். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்று திருவள்ளுவர் பாடியதும் இதைத்தான் என்றால் அது மிகையில்லை.

எல்லாக் கடவுளரும் தமிழ்க் கடவுளரே! 
 
Hero Stones - Which can be find everywhere in Tamil Nadu
தமிழர் மண்ணெங்கும் நிறைந்திருக்கும் நடுகற்கள்
‘நடுகல் வழிபாடு’ தமிழர்களின் மிகப் பழமையான பூசை முறை. பழந்தமிழ் இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புகள் விரவிக் கிடக்கின்றன. தொடக்கத்தில், போரில் வீரச் சாவைத் தழுவியவர்களைப் போற்றுவதற்காக ஏற்பட்ட இவ்வழிபாடு பிற்காலத்தில், குமுகத்துக்காகவும் மக்களுக்காகவும் கொள்கைக்காகவும் போற்றுதலுக்குரிய வகையில் வாழ்ந்த / மறைந்த எல்லோரையும் வணங்கும் முறையாக வளர்ந்தது. இன்று கோயில்களில் வழிபடப்பெறும் பெரும்பாலான தெய்வங்கள், தொடக்கத்தில் இப்படி நடுகற்களாகப் பூசிக்கப்பட்டவையே! இது வெறும் கற்பனையில்லை. தக்க சான்றுகள் உள்ளன.

புறப்பொருள் வெண்பா மாலை என்னும் பழந்தமிழ் நூல் ஒன்றில்,

வேத்த மருள் விளிந்தோன் கல்லென
ஏத்தினர் துவன்றி இற்கொண்டு புக்கன்று
 

என ஒரு வரி வருகிறது. “வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்று கூடிக் (அந்தக் கல்லுக்குக்) கோயில் எடுத்தல்” என்பது இதன் பொருள். நடுகற்களாக வழிபடப்பட்டவைதாம் பின்னர் கோயில்களாயின, கோயில் சிலைகளாயின என்பதற்கான சான்றாவணம் இது!

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் 
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்று 
இருமூன்று மரபில் கல்லொடு புணர - (புறத்திணை இயல், 5)

என்று நடுகல் வழிபாட்டு முறை பற்றிப் படிப்படியாக விளக்கும் தொல்காப்பியப் பாடலும் இந்த வழக்கத்தை உறுதிப்படுத்துகிறது.

சிவபெருமான் என்பவர் அனைத்து வல்லமைகளும் பொருந்திய பெருந்தெய்வம் என்பது இன்றைய நம்பிக்கை. ஆனால், தமிழ்ச் சூழலில் இவர் சித்தராகவே அறியப்படுகிறார்.

சங்க காலத் தமிழ்க் கடவுளான கொற்றவை கூட நடுகல் வழிபாட்டுத் தெய்வமாகவே அறியப்படுகிறார். இந்தக் கொற்றவையே ஆரிய - தமிழ் இனக்கலப்புக் காரணமாகப் பின்னாளில் துர்க்கை, உமையவள், அம்பிகை, அம்பாள், பராசக்தி என்ற பெயர்களால் வழிபடப்பட்டார் என்பதை இந்தப் பெண் கடவுள்களுக்கும் கொற்றவைக்கும் இடையிலுள்ள தோற்றம் - இயல்பு - வழிபாட்டு முறை ஆகியவற்றின் ஒற்றுமைகளைக் கொண்டு நன்கு அறியலாம்.

‘மலைமகள்’ என்றழைக்கப்படும் இந்தப் பெண் கடவுளின் மகனே இன்னொரு தமிழ்க் கடவுளான ‘முருகன்’ எனக் குறிப்பிடப்படுவதும், மலைமகளின் மகனான இவனே மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிக்குக் கடவுள் என்று சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருப்பதும் ஒப்பு நோக்க வேண்டியவை. இன்றும் முருகன் கோயில்கள் பலவும் மலை மேல் அமைந்திருப்பதும், ‘குன்றுதோறும் குடி கொண்ட குமரன்’ என முருகன் போற்றப்படுவதும் சிந்திக்கத்தக்கவை.

தமிழர்களுடைய இயற்கை வழிபாட்டு முறைக் கடவுளே திருமால் என்று முன்னரே பார்த்தோம். இதற்கு ஏதுவாக, “தங்கள் கண்ணுக்குப் பச்சைப் பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, ‘மால்’ என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்” என்ற தமிழறிஞர் திரு.வி.க அவர்களின் கூற்றையும், “மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றாகும்; மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்” என்ற ஈழத்து அறிஞர் கா.சிவத்தம்பி அவர்களின் சொற்களையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ஆக, இன்று கோயில்களில் பூசிக்கப்படும் கடவுளர்கள் எல்லாரும் தமிழ்க் கடவுளர்களே! நடுகற்களாக ஒருகாலத்தில் தமிழர்களால் பூசிக்கப்பட்டவர்களே! அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் இதே தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்த இம்மண்ணின் மைந்தர்களே!

கோயிலிலுள்ள கடவுள்கள் பற்றி இதுவரை பார்த்தோம். இனி, கோயில் பூசை முறைகள் பற்றிப் பார்ப்போம்.

எல்லாப் பூசைகளும் தமிழ்ப் பூசைகளே!

அன்றைய நடுகல் கடவுள்களும் இன்றைய கோயில் கடவுள்களும் வேறல்ல என்பது மட்டுமில்லை, அந்த நடுகல் பூசை முறைக்கும் ஆகம முறைப்படி இன்று கோயில்களில் பார்ப்பனர்கள் செய்யும் பூசை முறைக்கும் கூட ஏறத்தாழ வேறுபாடு என்பதே இல்லை!

நடுகல்லாக இருந்தபொழுது ஆண்டுக்கு ஒருமுறையோ சிலமுறையோ மட்டும் அந்தக் கற்கடவுளை வணங்குவார்கள். அதனால், மாதக்கணக்கில் மழையிலும் வெயிலிலும் கிடந்து அழுக்கடைந்து போன கல்லை ஒவ்வொரு பூசைக்கு முன்பும் கழுவித் தூய்மைப்படுத்திப் பின் வணங்கும் வழக்கம் ஏற்பட்டது. அதுவே கோயிலுக்குள் சென்ற பின்னும் அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள மனம் வராததால், திருமுழுக்கு எனும் பெயரில் நாள்தோறும் அந்த வழக்கம் தொடர்ந்தது. பின்னர், வெறும் நீர் மட்டுமில்லாமல் பால், தேன், தயிர் போன்ற உணவுப் பொருட்களும் திருநீறு, சந்தனம், பன்னீர் போன்ற நறுமணப் பொருட்களும் திருமுழுக்குக்கான பட்டியலில் இடம் பிடித்தன.

இறந்தவரின் உருவத்தை நினைத்து நடுகல்லில் மஞ்சளைப் பூசிய வழக்கம் பின்னாளில் சிலைக்கு மஞ்சள் காப்புச் சாற்றுவதாக மாறியது. அதுவே பிறகு சந்தனக் காப்பு, தங்கக் காப்பு, வைரக் காப்பு எனப் பரிணமித்தது.

உயிர் நீத்தவரின் உருவத்தை நினைவூட்ட மஞ்சளைப் பூசிப் பொட்டு வைத்து முகம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தவர்கள், உடல் போன்ற தோற்றத்தைக் கொண்டு வர அந்தக் கல்லுக்குத் துணியைச் சுற்றி ஆடையும் அணிவித்தார்கள். இதுவே பிற்பாடு கோயில் சிலைகளுக்கும் ஆடை சாற்றும் வழக்கமாக உருவெடுத்தது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத, சிலைக்கு ஆடை அணிவிக்கும் வழக்கம் இங்கு மட்டும் இருக்கக் காரணம் இதுவே! கோயில் சிலைகள் அனைத்தும் ஆடையணிந்த உருவமாகவே வடிக்கப்பட்டிருந்தும் இன்றும் நாம் அதற்குத் தனியாகத் துணியாலான ஆடை ஒன்றைச் சாற்றியே வழிபடுவது பண்டைத் தமிழர்களின் நடுகல் பூசை முறையின் தொடர்ச்சியே இஃது என்பதன் அசைக்க முடியாத அத்தாட்சி! (இந்நாளில், தலைவர்கள் இறந்தால் அவர்களுக்குச் சிலை வைப்பதும், அவர்களுடைய பிறந்தநாள் - இறந்தநாள் ஆகியவற்றின்பொழுது அந்தச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதும் மேற்படி தமிழ் மரபின் நீட்சிகளே!). 
Tamil - Indian Gods which only wearing cloth dresses even the statue contains dress
துணியாலான ஆடை அணிந்திருக்கும் தமிழ் - இந்தியக் கடவுள்களும்
சிலையில் இருக்கும் ஆடையே போதுமென இருக்கும் வெளிநாட்டுக் கடவுள்களும்
இரு பூசை முறைகளுக்குமான ஒற்றுமைகளைப் பட்டியலிடுவதாலேயே இவை இரண்டும் ஒன்றென ஆகிவிடுமா எனக் கேள்வி எழலாம்.

பார்ப்பனர்களிடம் உருவ வழிபாட்டு முறையே கிடையாது; அவர்தம் புனித நூல்களான மறை (வேதம்) நூல்களிலும் உருவ வழிபாடு பரிந்துரைக்கப்படவில்லை; வேள்வி செய்வதே பார்ப்பனர்களின் இறை வழிபாட்டு முறை என ஆய்ந்தறிந்த ஆன்றோர் பெருமக்கள் பலரும் கூறியுள்ளனர். பார்ப்பனர்களின் தொழில்கள் எனத் தொல்காப்பியர் ஆறு தொழில்களைப் பட்டியலிடுகிறார். அவை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். அதாவது, ஓதல் - நான்மறைகளை வாய்விட்டு ஒலித்தல், ஓதுவித்தல் - மற்றவர்களும் நான்மறைகளை ஓதுமாறு செய்தல், வேட்டல் - வேள்வி நடத்துதல், வேட்பித்தல் - மற்றவர்களும் வேள்வி நடத்தச் செய்தல், ஈதல் - தானம் செய்தல், ஏற்றல் - பிறர் தரும் தானங்களை ஏற்றுக் கொள்ளுதல். இதில் எங்குமே ‘இறை வழிபாடு’ செய்வதைப் பார்ப்பனர்களின் தொழிலாகவோ கடமையாகவோ தொல்காப்பியர் குறிப்பிடாததைப் பார்க்கலாம்.

ஆக, பார்ப்பனர்களுக்குப் பூசை செய்யும் வழக்கமே இல்லாத நிலையில் இன்று கோயில்களில் காணப்படும் பூசை முறைகளைத் தமிழர் அல்லாமல் வேறு யார் இந்நாட்டில் உண்டாக்கியிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மட்டுமின்றி, கோயில் பூசை முறைகள் தமிழர்களுடையவையே என்பதற்குப் பழந்தமிழ் நூல் ஒன்றிலிருந்தும் சான்று இதோ:

மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் 
பீலி அணிந்து பெயர்பொறித்து - வேல்அமருள் 
ஆண்தக நின்ற அமர்வெய்யோற்(கு) ஆகுஎன்று 
காண்தக நாட்டினார் கல்

என்று புறப்பொருள் வெண்பா மாலையில் பாடப்பட்டுள்ளது. “மாலை சூட்டி, மணி ஒலித்து, மதுவைத் தெளித்து, மயிற்பீலியைச் சூட்டி, அவன் பெயரை எழுதி வேல் போரில் ஆண்மைத்தன்மை வெளிப்படப் போரிட்ட வீரனுக்கு இது உருவமாகட்டும் என்று காணுமாறு கல்லை நட்டார்கள்” என்பது இதன் பொருள்.

ஆக, குறிப்பிட்ட ஒருவரின் உருவமாக இந்தக் கல் அமையட்டும் என நிறுவுதல் (பிரதிட்டை), திருமுழுக்காட்டுதல், மாலை சூட்டுதல், காப்புச் சாற்றுதல், ஆடை அணிவித்தல், படையல் (நிவேதனம்) இடுதல் என இன்று கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் பூசை முறைகள் அத்தனையும் தமிழர் உருவாக்கியவையே! இவை அனைத்தும் தமிழ்ப் பூசை முறைகளே!

கடவுள்கள் எல்லாம் தமிழ்க் கடவுள்களே! அவர்களைப் பூசிக்கும் முறைகள் எல்லாம் தமிழ்ப் பூசை முறைகளே! ஆனால், இந்தத் தமிழ்க் கடவுள்களைத் தொடவும் தமிழ்ப் பூசைகளைச் செய்யவும் தமிழர்களுக்கு மட்டும் தகுதியில்லை என்பது எப்பேர்ப்பட்ட அட்டூழியம்! இதைத் தமிழர்களும் நம்புவது எப்பேர்ப்பட்ட மடத்தனம்! உலகில் மற்ற எல்லாரும் கடவுள் என்பது எங்கோ வாழும் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் என்றே நம்பிக் கொண்டிருந்த காலத்தில், கண்ணெதிரே இருந்த இயற்கைக் கூறுகளையும், கண் முன்னே வாழ்ந்து மறைந்த நல்ல மனிதர்களையுமே கடவுளாகப் போற்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பகுத்தறிவுக்கு உவப்பான கடவுள் கொள்கையைப் படைத்த தமிழர்களுக்கா கடவுளைத் தீண்டும் தகுதி இல்லை?

இதுவரை, கடவுளைப் பூசை செய்வதில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகள், தகுதிகள் குறித்துப் பார்த்தோம். இவையெல்லாம் உண்மையாக இருந்தாலும் இவற்றின் பெயரால் வழிபாட்டு உரிமையை வலியுறுத்துவது என்பது நல்லதில்லை. இந்த ஆகமங்கள், மரபுகள், சட்டங்கள், சான்றுகள், காரணங்கள், ஏரணங்கள் எல்லாம் ஒருவேளை தமிழர்களுக்கு எதிராக இருந்தால் தமிழர்களுக்குத் தெய்வச் சிலைகளைத் தீண்டும் தகுதியோ உரிமையோ இல்லை என ஆகிவிடுமா? நாம் அதை வலியுறுத்தக் கூடாது எனச் சொல்லி விட முடியுமா? முடியாது! காரணம், தொடக்கத்திலேயே பார்த்தபடி, கடவுளைத் தொட்டுப் பூசை செய்வது என்பது கடவுளை நம்பும் அனைவர்க்குமான அடிப்படை உரிமை! உலகில் எல்லோருக்குமே இருக்கிற உரிமை! சமயங்கள் சிலவற்றில், இறையன்பர் எனும் நிலையிலிருந்து பூசாரி எனும் நிலைக்கு உயரச் சில நெறிமுறைகளை நிறைவேற்றச் சொல்வதும், சில படிநிலைகளைக் கடக்க வேண்டும் என்பதும் உண்டு. அப்படி வேண்டுமானால் சில கட்டுப்பாடுகள் வைக்கலாமே ஒழிய, சாதி - பிறப்பு போன்ற காரணங்களைக் காட்டிக் குறிப்பிட்ட சிலரை முற்றிலுமாக விலக்கி வைப்பது என்பது ஒருபொழுதும் ஏற்க முடியாதது! அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானது!

எனவே, வழிபாட்டு உரிமை என்பதை இப்படித் தகுதிகளின் பெயரால் வலியுறுத்துவதை விட அறத்தின் பெயரால் வலியுறுத்துவதே சாலச் சிறந்தது! தமிழ் ஆண்களுக்கு மட்டுமில்லை, தமிழ்ப் பெண்கள், திருநங்கைகள் என அனைவருக்கும் இங்கே கடவுளரைத் தொட்டுப் பூசிக்கும் உரிமை வேண்டும்! அதுவரை இதற்கான போராட்டங்கள் தொடர வேண்டும்! கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் எனத் தாங்கள் நம்புவது உண்மையாக இருந்தால் இறையன்பர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்!
(நான் ‘அகரமுதலதனித்தமிழ் இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்)
❀ ❀ ❀ ❀ ❀
உசாத்துணை: நன்றி தமிழ் விக்கிப்பீடியா, விடுதலை இதழ், தமிழ்த் தேசப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களது அறிக்கை, குங்குமம் இதழ், தினம் ஒரு சங்கத்தமிழ் வலைப்பூ, தமிழ் இணையக் கல்விக்கழகம்.

படங்கள்: நன்றி ௧) தமிழ் ஓவியா, வினவு ௨) சென்னை டுடே நியூஸ் ௩) விக்கிப்பீடியா ௪) விகடன் ௫) அனைத்திந்திய ஆசிரியர் பேரவை, ஜாட்டிசைட்டு, கள்ளழகர் திருக்கோயில் ௬) அகச் சிவப்புத் தமிழ் ௭) தமிழ் மரபு அறக்கட்டளை, தினமணி, கீற்று, தமிழ் இணையக் கல்விக்கழகம், உலகத் தமிழர் பேரவை, ௮) துளசி ஆர்ட், அஞ்சு அப்பு, தினச்சுடர், விர்ச்சுவல் வினோத், விசன் ஆப் ஜீசசு கிரைசுட்டு, எல்லாப் புகழும் இறைவனுக்கே.

தொடர்புடைய பதிவு:
பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?!
 
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

12 கருத்துகள்:

  1. மிக விரிவான அலசல் ஐயா
    கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்பது உண்மையானால், அனைவருக்கும் அவரைத் தொட்டு, கருவறைக்குள் சென்று பூசை செய்ய உரிமை உண்டல்லவா,
    தமிழகத்தில் ஓம் சக்தி கோயில்களில் இத்தகைய உரிமை வழங்கப் படுகிறது, இதனால்தான் ஓம் சக்தி கோயில்களில், பெண்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதுமட்டுமல்ல மாதவிடாய் காலங்களிலும் கோயிலுக்குள் வருவதை இவர்கள் அனுமதிக்கிறார்கள்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் இசைவான கருத்துக்கு கண்டு மகிழ்ச்சி ஐயா!

      ஓம் சக்தி கோயில்கள் பற்றிய தகவல் மனதுக்கு ஆறுதலாக உள்ளது. இயக்குநர் திரு.வசந்தபாலன் அவர்களின் ‘அங்காடித் தெரு’ படத்தில் கூட அம்மன் கோயில் ஒன்றைப் பற்றி இப்படிக் காட்டியிருந்தார்கள். தெய்வம் என ஒன்றிருப்பது உண்மையானால் இப்படிப்பட்ட கோயில்கள் அல்லவா அதன் அருளிடமாக இருக்க முடியும்?

      மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. ஓம் சக்தி கோவில்களில் பெண்கள் சாமியைத்தொட்டு பூசை செய்கிறார்கள் என்றாலும் அங்கிருக்கும் தலைமைப் பூசாரி அம்மா என்றழைக்கப்படும் பங்காரு அடிகளாரே தமிழக கோவில்களில் கடவுள்களிலும் பேதம் பார்க்கப்படுகிறதுஹிந்து மதமே பிராம்மணியம் என்றும் சிறு தெய்வங்கைன் வழிபாடு என்றும் பிரிந்திருக்கிறது பிராம்மணனாகப் பிறந்தவன் எல்லாம்கர்ப்பக் கிருகத்துக்குள் செல்ல முடியாது நான் வாசிக்கும் பலரது பதிவுகளில் இந்தார்ச்சகர் விஷயமே இப்போது அதிகமாக எழுதப்படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தங்கள் கருத்துக்கு முதலில் என் நன்றி!

      ஓம் சக்தி கோயில்கள் எனப்படும் எல்லாக் கோயில்களுமே பங்காரு அடிகளாருடையவையா என்பது எனக்குத் தெரியாது. மேலே கருத்தில் கூறியிருந்தபடி, கரந்தை ஜெயகுமார் ஐயா அவர்களின் கருத்துரை மூலம்தான் ஓம் சக்தி கோயில்களில் அப்படி ஒரு நடைமுறை இருப்பதை அறிந்தேன். மற்றபடி, திரைப்படம் ஒன்றின் மூலமும் அம்மன் கோயில்கள் சிலவற்றில் மேற்படி வழக்கம் இருப்பது முன்பே தெரியும் என்றாலும் அவை ஓம் சக்தி கோயில்களா என்பது தெரியவில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகளால் கறை படிந்து கிடக்கும் பங்காரு அடிகளார் போன்ற போலி இறைமையாளர்களை நான் மதிப்பதும் இல்லை என்பதை இங்கே முதலில் கூறி விடுகிறேன்.

      இந்து சமயம்தான் பெருந்தெய்வ வழிபாடு (தங்கள் சொற்களில் கூறுவதானால் பிராமணியம்) என்றும் சிறுதெய்வ வழிபாடு என்றும் பிரிந்திருக்கிறது என்பதுதான் இத்தனை ஆண்டுகளாக அடியேன் உட்பட அனைவருக்கும் இருந்த புரிதல். ஆனால், அது தவறு என்பதைத்தான் மேற்படி கட்டுரையில் விளக்கியுள்ளேன். பார்ப்பனர்கள் கோயிலில் பூசை செய்யத் தொடங்கிய காலக்கட்டத்தையும் சான்றுடன் குறிப்பிட்டுள்ளேன். எனவே, தங்களுடைய இக்கருத்தைப் பணிவன்புடன் மறுதலிக்கிறேன்.

      அடுத்ததாக, "பார்ப்பனராகப் பிறந்த எல்லாரும் கோயில் அகநாழிகைக்குள் சென்று விட முடியாது" என்று கூறியிருந்தீர்கள். பார்ப்பனரல்லாதோரின் கோயில் பூசை உரிமை பற்றிய பேச்சுக்கள் எழும்பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் இந்த வழமையான எதிர்க் கருத்தையே தாங்களும் கூறுவது கண்டு வேதனைப்படுகிறேன்! ஐயா! பார்ப்பனர்கள் எல்லாரும் கருவறைக்குள் செல்லவோ தெய்வத் திருமேனியைத் தொட்டுப் பூசை செய்து விடவோ இயலாது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்கெனச் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள் இல்லையா? முறையான சில கல்வி / பாட முறைகளையும் தகுதிகளையும் வலியுறுத்துகிறார்கள் இல்லையா? அதே தகுதிகளைப் பாரப்பனரல்லாதோருக்கும் வரையறுத்து அந்தப் படிநிலைகளைக் கடந்து வந்தால் அவர்களும் கருவறைக்குள் நுழைய விட வேண்டும் இல்லையா? அப்படி இல்லையே! பார்ப்பனர் எனும் பிறப்புத் தகுதியும் இங்கே வலியுறுத்தப்படுகிறதே! அது தவறு இல்லையா? அதைத்தான் கண்டிக்கிறோம். அதற்கு எதிராகத்தான் இப்படிப்பட்ட குரல்களை எழுப்புகிறோம். பார்ப்பனர்கள் எல்லாரும் கருவறைக்குள் சென்று கடவுளைத் தொட்டு வழிபாடு செய்வதாக நாங்கள் கூறவில்லை; அப்படி ஓர் உரிமை மற்றவர்களுக்கும் வேண்டும் என வலியுறுத்தவில்லை. என்னென்ன கட்டுப்பாடுகளோடு பார்ப்பனர்கள் கருவறைக்குள் நுழைய விடப்படுகிறார்களோ அதே கட்டுப்பாடுகளோடு மற்றவர்களையும் விட வேண்டும் எனத்தான் கேட்கிறோம். இதிலுள்ள நியாயத்தைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்!

      அண்மையில், கேரளத்தில் பார்ப்பனரல்லாதோர் கோயில் பூசாரிகளாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதால்தான் தற்பொழுது இது குறித்து அதிகமாக எழுதப்படுகிறதே தவிர வேறொன்றுமில்லை.

      நீக்கு
  3. உங்கள் பதிவு நல்ல விவரமான, சான்றுகளுடன் கூடிய அலசல்..

    நீதிமன்றத்தில், தமிழ் ஆகம விதிகளில் இன்ன ஜாதியினர்தான், குறிப்பாக பிராமணர்கள் மட்டும்தான், அர்ச்சகர் ஆக வேண்டும் என்று எங்கும் இல்லை என்று சான்றுகளோடு சொன்னாலும், மையக் கருத்து திசை திருப்பப்பட்டு அவ்வாறு இல்லை என்றே அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பும் வந்து விடுகிறது.

    // பார்ப்பனரல்லாதாருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை பார்ப்பனரல்லாதவர்களிலேயே பெரும்பான்மை மக்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. “கோயில் பூசாரி போன்ற புனிதமான வேலைகளில் பார்ப்பனர்கள் இருப்பதே சரி” என்பதுதான் இங்குள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து.//

    என்ற உங்களது கருத்தை அப்படியே வழிமொழிகின்றேன்.

    என்னதான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதில் ஆட்சேபனை இல்லை என்று தமிழ்நாட்டில் பலரும் வெளியில் சொன்னாலும், உள்ளுக்குள் பெரும்பாலோர் கோயில்களில் பூஜை புனஷ்காரம் செய்வதற்கு பிராமண அர்ச்சகர்களே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். என்பதே உண்மை. ஒருவேளை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் நிலைமை வந்து விட்டாலும், இங்குள்ள தமிழர்கள், அர்ச்சகர்கள் என்ன ஜாதி, இது நம்ம ஆளா என்று விசாரித்துக் கொண்டே அவரிடம் அல்லது அந்த கோயிலுக்கு செல்லுவார்கள்.

    அதே போல, இறைவனுக்கு சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என்று எங்கனும் இல்லை. இவர்களாகவே சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லி, தமிழில் அர்ச்சனை செய்வதை நிறுத்தி விட்டனர். திருநாவுக்கரசரே தனது தேவாரத்தில் ஓரிடத்தில் ”ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் ” - (திருமறைக்காடு – திருத்தாண்டகம்) என்று பாடி இருப்பார். பிற்பாடு தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று ’உம்’ போட்டு ஏற்றுக் கொண்டார்கள்.

    // ஆக, பார்ப்பனர்களுக்குப் பூசை செய்யும் வழக்கமே இல்லாத நிலையில் இன்று கோயில்களில் காணப்படும் பூசை முறைகளைத் தமிழர் அல்லாமல் வேறு யார் இந்நாட்டில் உண்டாக்கியிருக்க முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மட்டுமின்றி, கோயில் பூசை முறைகள் தமிழர்களுடையவையே //

    உண்மையில் இதுதான் வரலாற்று உண்மை. ஆனால் இங்குள்ள பகுத்தறிவுவாதிகள் பலரும், பிராமணீயத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், பல தமிழர் இறை வழிபாட்டு முறைகளையும், தமிழர் விழாக்களையும், ஆரியர் கலாச்சாரம் என்று ஒதுக்கி விட்டனர். உண்மையில் பிராமணர்களும் தமிழர்களே. ஆனால் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆரிய மத ( கிறிஸ்தவத்தில் அல்லேலுயா போல ) வழிபாட்டுமுறைதான் வேறுபாட்டினை உண்டாக்கி விட்டது எனலாம்.

    இங்கு தமிழ்நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் பலரும் திராவிட இயக்கங்களோடு தொடர்பு உள்ளவர்களாக இருப்பதனால், கோயில், கடவுள் நம்பிக்கை இல்லாத உங்களுக்கு, கோயிலில் யார் அர்ச்சகர்களாக இருந்தால் உங்களுக்கு என்ன என்ற வாதம் முன் வைக்கப்பட்டு ஓரம் கட்ட நினைக்கிறார்கள். ( எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும், நான் பிராமண விரோதி இல்லை என்பதனையும் இங்கு சொல்லி விடுகிறேன் )

    ( நானும் ‘ஆகமவிதிகள் பற்றிய சர்ச்சை’ என்ற தலைப்பினில் ஒரு கட்டுரையை எனது http://tthamizhelango.blogspot.com/2017/10/blog-post_6.html வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தங்கள் விளக்கமான செறிவார்ந்த கருத்துக்கு என் உளமார்ந்த நன்றி!

      //குறிப்பாக பிராமணர்கள் மட்டும்தான், அர்ச்சகர் ஆக வேண்டும் என்று எங்கும் இல்லை என்று சான்றுகளோடு சொன்னாலும், மையக் கருத்து திசை திருப்பப்பட்டு அவ்வாறு இல்லை என்றே அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பும் வந்து விடுகிறது// - உண்மைதான் ஐயா! ஆனால், கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபொழுது எதிர்த் தரப்பின் விண்ணப்பம்தான் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதால் பார்ப்பனரல்லாதோர் பூசை செய்ய நீதிமன்றம் ஏற்பளித்ததாகவே ஆகிறது. ஆனால், என்ன காரணத்தாலோ தமிழ்நாடு அரசுகள் அதை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வருகின்றன.

      //ஒருவேளை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகும் நிலைமை வந்து விட்டாலும், இங்குள்ள தமிழர்கள், அர்ச்சகர்கள் என்ன ஜாதி, இது நம்ம ஆளா என்று விசாரித்துக் கொண்டே அவரிடம் அல்லது அந்த கோயிலுக்கு செல்லுவார்கள்// - நன்றாகச் சொன்னீர்கள்! :-)

      //பிராமணீயத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், பல தமிழர் இறை வழிபாட்டு முறைகளையும், தமிழர் விழாக்களையும், ஆரியர் கலாச்சாரம் என்று ஒதுக்கி விட்டனர்// - முற்றிலும் உண்மை! ஆனால், அதே நேரம், பகுத்தறிவு இயக்கங்கள் தோன்றிய காலம் என்பது தமிழ் - தமிழர் எனும் உணர்வும் இவை தொடர்பான வரலாற்று உண்மைகளும் அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கிய காலக்கட்டம். எனவே, இறைமைத்துறையில் தமிழர் பங்களிப்பு பற்றிய உண்மைகள் அப்பொழுது வெளிவரவில்லை. சொல்லப் போனால், இன்று நாம் போற்றிப் புகழும் தமிழர் வரலாற்று உண்மைகள் பெரும்பாலானவை அண்மைக் காலச் செய்திகளே! அவை கூட அன்று வெளிவரவில்லை, இல்லையா ஐயா? எனவே, இறைமைத்துறையில் இருந்த பார்ப்பனிய ஆதிக்கம் பகுத்தறிவாளர்கள் கண்ணையும் கட்டி விட்டது எனலாம். எனவே, இதற்கு அவர்களைப் பெரிதாக நாம் குறை சொல்ல இயலாது என நினைக்கிறேன்.

      //பிராமணர்களும் தமிழர்களே. ஆனால் அவர்கள் ஏற்றுக் கொண்ட ஆரிய மத ( கிறிஸ்தவத்தில் அல்லேலுயா போல ) வழிபாட்டுமுறைதான் வேறுபாட்டினை உண்டாக்கி விட்டது எனலாம்// - முற்றிலும் புதுமையான கருத்து! பார்ப்பனர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்தாமே ஐயா? ஆரியத்தைத் தழுவியர்கள் இல்லையே! பிறகு எப்படி இவ்வாறு சொல்ல முடியும்? புரியவில்லையே!

      //கோயில், கடவுள் நம்பிக்கை இல்லாத உங்களுக்கு, கோயிலில் யார் அர்ச்சகர்களாக இருந்தால் உங்களுக்கு என்ன என்ற வாதம் முன் வைக்கப்பட்டு ஓரம் கட்ட நினைக்கிறார்கள்// - ஹாஹ்ஹா! அஃது அவ்வளவு எளிதில்லை ஐயா! கவலைப்படாதீர்கள்! இன்றைய தலைமுறை கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறது.

      //எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும், நான் பிராமண விரோதி இல்லை என்பதனையும் இங்கு சொல்லி விடுகிறேன்// - ஆனால், நான் இறைமறுப்பாளன்தான் ஐயா! ஆனால், கண்டிப்பாகப் பார்ப்பன எதிரி இல்லை. :-)

      கட்டாயம் தங்கள் கட்டுரை காண வருவேன் ஐயா! பகிர்ந்தமைக்கு நன்றி!

      நீக்கு
  4. இபுஞா அவர்களுக்கு இப்பதிவை முன்பே வாசித்துவிட்டோம். கருத்து இடுவதற்குள் கணினி பிரச்சனை வந்துவிட்டது. க்ரோம் சரியாக வேலை செய்யவில்லை. கணினியிலும் பல பிரச்சனைகள். அடிக்கடி நின்றுவிடும். இப்போதும் அது தொடர்ந்துகொண்டிருந்தாலும், கணினி வேலை செய்யும் கொஞ்ச நேரத்தில் கருத்து இடல் என்று தொடர்கிறோம். அது நின்றுவிடுவதற்குள். மீண்டும் அதை உயிர்ப்பித்து இயக்கி ஒரு நிலைக்கு வருவதற்குள்...வந்தாலும் கொஞ்ச நேரம் தான்...

    அருமையான அலசல். பல மேற்கோள்கள், உதாரணங்கள் என்று மிக மிக விரிவான கட்டுரை. உங்களின் உழைப்பும் பளிச்சிடுகிறது. வாழ்த்துகள்! நாங்கள் சொல்ல நினைத்த கருத்துகள் பெரும்பாலும் கரந்தையார் அவர்களும், தமிழ் இளங்கோ அவர்களும் சொல்லிவிட்டார்கள் உங்கள் பதிலையும் பார்த்துவிட்டோம். உங்கள் பதிலும் சரியாக உள்ளதாகவே படுகிறது.

    தமிழ்நாட்டில் பல அம்மன் கோயில்களில் கரந்தையார் சொல்லியிருப்பது போலத்தான் நடந்து வருகிறது. சிறு சிறு கோயில்கள் பலவற்றிலும் கூட. சிறிய சிவன் கோயில்களில் கூட. அதைப் பற்றி சகோ கீதாசாம்பசிவம் அவர்கள் கூட குறிப்பிட்டிருந்தார்கள். (கீதா: எங்கள் வீட்டருகில் உள்ள கோயில்களில் எல்லாம் பார்க்கலாம்...அது போன்று நான் சென்றிருக்கும் ஒரு சில கோயில்களில் கூட. அவர்கள் பூணூல் அணிந்திருப்பார்கள் அவ்வளவே! பூணூல் அணிந்திருப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனர் அல்லவே!!!! அம்மன் கோயில்களிலும் பார்க்கலாம். அர்ச்சகர்களில் கூடப் பல பிரிவுகள் இருப்பதாகவும் தெரிகிறது. நானும் கோயிலுக்குச் செல்பவள் தான் ஆனால் இதுவரை அங்கு யார் பூசை செய்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்ததே இல்லை!! நான் பணம் கட்டிப் போக வேண்டிய கோயில்கள் செல்வதில்லை. தட்டில் பணம் போடும் பழக்கமும் இல்லை. நான் எதையும் கவனித்ததும் இல்லை. செல்வேன் அமைதியாக இருந்துவிட்டு வருவேன்.)

    கேரளத்தில் இப்போது ஏற்பட்டிருப்பதை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். எனவே அதைப் பற்றி விவரிக்கவில்லை..இங்கு.

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசி ஐயா! கீதா சகோ! இத்தனை தொழில்நுட்ப இடையூறுகளுக்கு மத்தியிலும் தவறாமல் வந்து விளக்கமாகக் கருத்திட்டுச் செல்லும் உங்கள் அன்பிற்குத் தலைவணங்குகிறேன்!

      உங்கள் பாராட்டுக்கு முதலில் என் மனம் கனிந்த நன்றி! கீதா சகோ கோயிலைத் தனிப்பட்ட முறையில் அணுகுபவர் என்பது எனக்குத் தெரியும். இப்பொழுது அது பொதுவெளியிலும் பதிவாகி மற்றவர்களின் சிந்தனைக்கும் தூண்டுகோலாக அமைய என் பதிவு உதவியதை எண்ணி மகிழ்கிறேன்!

      பூணூல் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். நான் வீரமணி போல் பார்ப்பன எதிரி இல்லை, பூணூலைக் கிண்டலடிக்க. உலகில் எத்தனையோ பழக்கங்கள் உள்ளன. அதில் பூணூல் அணிவதும் ஒன்று, அவ்வளவுதான். மற்றபடி, பூணூல் அணிந்தால்தான் உயர்வு எனக் கருதுவது எப்படித் தவறானதோ அதே போலப் பூணூல் அணிவதை இழித்துரைப்பதும் தவறானதே! இரண்டையுமே நான் கண்டிக்கிறேன். உடனே யாராவது, "பாரதியார் எல்லாருக்கும் பூணூல் அணிவித்தாரே" எனக் கேட்டால், அவர் செய்ததன் நோக்கம் வேறு, அன்றைய புரிதல் வேறு என்பதே என் மறுமொழி.

      கோயில் பூசை செய்யப் பூணூல் அணிய வேண்டும் என்பதில்லை. அப்படி அணிந்து பூசை செய்தால்தான் கடவுள் ஏற்கும் என நினைத்துத் தமிழர்கள் யாராவது பூணூல் அணிந்தால் அது வெறும் வெளி வேடமே!

      தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் மீண்டும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. ஐயா, மிகவும் அற்புதமான கட்டுரை. ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய கட்டுரை. வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்து, தக்க சான்றுகளுடன் விளக்கியிருப்பதை யாரும் மறுதலிக்க முடியாது. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! உங்கள் மனம் திறந்த விரிவான பாராட்டுக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிகவும் நன்றி! அனைவரும் இதைப் படிக்க விரும்பும் நீங்கள் இதைச் சமுக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்தால் அதற்கு ஏதுவாக இருக்கும். மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்