.

ஞாயிறு, மே 27, 2018

ஸ்டெர்லைட் படுகொலை! - நாம் கேட்கத் தவறும் ஒரு முக்கியமான கேள்வி!

Sterlite Shoot out
ந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது! இம்முறை குருதி தோய இந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டியிருப்பது மனித உரிமைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு! 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு நூறாவது நாளில் துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

“வன்முறையில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுட்டோம்” என்கிறது காவல்துறை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூக அக்கறையாளர்களோ, “மக்கள் அமைதிப் பேரணிதான் நடத்தினார்கள். காவல்துறைதான் எடுத்த எடுப்பிலேயே சுடத் தொடங்கி விட்டது” என்கிறார்கள். காவல்துறை சொல்லும் சாக்கை விட அக்கறையாளர்களின் இந்த வாதம்தான் அதிக ஆபத்தானது!

நண்பர்களே, இது என்ன நிலைப்பாடு? அப்படியானால், மக்கள் வன்முறையில் இறங்கினால் சுட்டுத் தள்ளலாம் என்கிறீர்களா? எனில், மக்கள் வன்முறையில் ஈடுபட்டது உண்மைதான் எனக் காவல்துறையினர் சான்றுகள் காட்டி விட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தியது சரிதான் என ஏற்றுக் கொள்ளப் போகிறோமா நாம்?

உண்மையில், இந்த நேரத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, “கலவரங்களை அடக்குவது குறித்த இந்தியச் சட்டங்கள் சரியானவையா?” என்பதுதான்.

மேலை நாடுகளில் கலவரங்கள் கைமீறிப் போனால் இரப்பர் குண்டுகளைக் கையாளும் வழக்கம் இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினரோடு தங்களை ஒப்பிட்டுக் கழுத்துப்பட்டை நுனியைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு இரப்பர் குண்டு என ஒன்று இருப்பதாவது தெரியுமா?

கேட்டால், நம் நாடு இன்னும் அந்தளவு முன்னேறவில்லை என்பார்கள் நம் ‘தினமலர்’ படிப்பாளிகள். அட நாதாறிகளே! செவ்வாய்க் கோளுக்குச் செயற்கைக்கோள் விடுமளவுக்குத் தொழில்நுட்பத்தில் தொக்குத் தாளிக்கும் நாடு மனித உரிமை சார்ந்த விதயங்களில் மட்டும் முடியாட்சிக் காலத்தை விட்டு முடியளவும் முன்னேறவில்லை எனச் சொல்ல உங்களுக்கு நாக் கூசவில்லை?

ஆக, இந்த நாடு பொருளாதாரமும் வெட்டி வீராப்பும் சார்ந்த துறைகளில் மட்டும்தான் முன்னேறத் துடிக்கிறது; தனி மனித நலனும் குடிமக்கள் உரிமையும் சார்ந்த விதயங்களில் வளர எந்தவிதமான ஆர்வமும் இந்நாட்டுக்கு இல்லை என்பதுதானே இதன் பொருள்? இந்தப் போக்கை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதுதானே இந்த நேரத்தில் நம் கடமை? மாறாக நாமோ, முதலில் வானத்தை நோக்கிச் சுடுவது, பின்னர் இடுப்புக்குக் கீழே சுடுவது முதலான துப்பாக்கிச் சூடு நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோமே, இதை விட ஏமாளித்தனம் உண்டா?

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தோழர்களே, சிந்தித்துப் பாருங்கள்! அதிகார அமைப்பு நம் உயிரைக் காவு வாங்குகிறது; ஏன் என்னைக் கொல்கிறாய் எனக் கேட்க வேண்டிய நாம் தகுந்த காரணத்தோடுதான் என்னைக் கொல்கிறாயா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! இதுதான் இந்தக் கட்டமைப்பின் (structuralism) வெற்றி! கட்டமைப்பியலாளர்களின் (structuralists) வெற்றி!

தவறு செய்தால் சொந்தக் குடிமக்களையே சுட்டுக் கொல்லலாம் என ஒரு சட்டம் இருப்பதே வெட்கக்கேடு! ஆனால் அதுதான் சரி என இந்தக் கட்டமைப்பும் கட்டமைப்பியலாளர்களும் நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு கொடூரம் நம் கண் முன்னே நடந்து முடிந்த பின்னும் இதற்கு ஆதரவாக இருக்கும் அந்தச் சட்டத்தைக் குறித்த கேள்வியை நாம் எழுப்பாமல், நடந்த கொடூரம் அந்தச் சட்டப்படி ஏற்கத்தக்கதுதானா என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்! தவறான சட்டத்தைத் தூக்கி எறிவதற்கு மாறாக அதற்குள்ளேயே நமக்கான நீதியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்! இது நடந்தேறிய அந்தப் படுகொலையை விடவும் கொடூரமானது!

எனவே தொலைக்காட்சி விவாதங்களில் அமரும் மனித உரிமை ஆர்வலர்களே, ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் ஊடக நண்பர்களே, சமூக அக்கறையாளர்களே, கட்சித் தோழர்களே, தலைவர்களே, பொதுமக்களே இந்தத் தமிழ்நாட்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிரான உங்கள் வாதங்களை அருள் கூர்ந்து மாற்றுங்கள்!

எப்படிப்பட்ட சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் எனச் சட்டம் சொல்லும் முறைப்படிதான் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறதா எனக் கேட்காதீர்கள்! எப்பேர்ப்பட்ட சூழலாயிருந்தாலும் சொந்த நாட்டு மக்களையே சுட்டுக் கொல்வது மன்னிக்க முடியாத குற்றம் எனக் கூறுங்கள்!

மக்கள் கட்டிய வரிப் பணத்தில் வாங்கிய துப்பாக்கியை வைத்து அவர்களையே சுடுவது மானங்கெட்ட செயல் எனச் சுட்டிக் காட்டுங்கள்!

அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், மண்ணாங்கட்டி என அத்தனையையும் மேலை நாடுகளைப் பார்த்துப் படியெடுக்கும் (copy) நம் அரசுகள் மக்களை நடத்தும் விதத்தை மட்டும் அங்கிருந்து ஏன் கற்றுக் கொள்ள மறுக்கின்றன என்பதைக் கேளுங்கள்!

மற்ற துறைகளில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் பற்றி மட்டும் வக்கணையாகப் பேசும் நம் ஆட்சியாளர்கள் மனித உரிமைத்துறையில் மட்டும் இன்னும் தமது கற்காலக் காட்டாட்சி முறைகளை விட்டு வெளியில் எட்டிக் கூடப் பார்க்க மறுப்பது ஏன் என வினவுங்கள்!

தீர ஆராய்ந்து, முறையாக விசாரித்த பின்னும் அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே அளிக்கச் சொல்லியிருக்கும் தூக்குத் தண்டனையையே ஒழிக்கும்படி கேட்குமளவு முன்னேறிவிட்ட சமூகத்தில், கலவரக்காரர் எனக் குற்றம் சுமத்திவிட்டால் எத்தனை பேரை வேண்டுமானாலும் கேள்விமுறையே இல்லாமல் கொல்லலாம் என ஒரு சட்டம் அமலில் இருப்பதே சமூகப் பேரிழிவு என்பதை எடுத்துரையுங்கள்!

இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவற்றையெல்லாம் புரிய வைப்பது எளிதில்லைதான். நாட்டின் கணிசமான பகுதியைத் துப்பாக்கி முனையிலேயே ஆளும் இந்த அதிகார அமைப்புக்குக் கலவரத்தை அடக்கக் கூடத் துப்பாக்கி எடுப்பது தவறு என உணர்த்துவது மிகக் கடினம்தான்.

ஆனால் நண்பர்களே, பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு மறுநாள் வருமென எதிர்பார்த்திருந்த பள்ளிச் சிறுமி, திருமணமாகி மூன்று மாதங்களே ஆன கருச்சுமந்த மனைவியை விட்டு வாழ வேண்டிய வயதில் மறைந்த கணவன் எனப் பதின்மூன்று பேர் துடிதுடிக்கப் படுகொலை செய்யப்பட்ட பிறகு கூடக் கேட்காவிட்டால் இதை நாம் இனி எப்பொழுதுதான் கேட்பது?!

பி.கு: “முழுக்க முழுக்கச் சட்டத்திருத்தம் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறாயே? அது மட்டும் போதுமா? நடந்த படுகொலைக்குக் காரணம் யார், இதற்கு உத்தரவிட்டது யார் என்பவையெல்லாம் தெரிய வேண்டாவா?” எனக் கேட்பவர்களுக்கு என் மறுமொழி, அவையெல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை; கட்டுரையின் முதல் எழுத்துடைய நிறத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து இந்தப் பிரச்சினை சரியான திசையில் செல்ல உதவுங்கள்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! நமது சிந்தனை கேள்வி வடிவமும் பெற வேண்டும்! மிக்க நன்றி!

      நீக்கு
  2. நல்ல கட்டுரை நண்பர் இபு/ சகோ.

    எப்படியானாலும் சுட்டது தவறுதான். வன்முறையை அடக்க எத்தனையோ வழிமுறைகள் இருக்க இப்படிச் சுட்டுத் தள்ளுவது கற்கால மனிதன்செய்வது போலானது.

    கீதா: அக்கருத்துடன் நம் வீட்டுக் குழந்தைகள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக அவர்களை மிரட்டுவோம் மிஞ்சிப் போனால் ஒரு சிறு அடி கொடுப்போம். இது குழந்தையை பெல்டால் விளாசிக் கொல்லும் வன்மையான பெற்றோரைப் போன்று மக்களைக் காத்து, நல்வழியில் வாழ வழிகாட்டியாய் இருக்க வேண்டிய அரசு இப்படிச் செய்வது கொஞ்சம் ஓவர்தான். இது முழுக்க முழுக்க பொலிட்டிக்கலை ட்ரிவன் என்றே தோன்றுகிறது.

    சுமூகமாகப் பேசித் தீர்த்திருக்கலாம். 99 நாட்கள் வரை கூட போராட ஏன் அரசு விட வேண்டும். போராட்டம் என்று தெரிந்ததுமே அரசு மக்களிடம் கூடிப் பேசி வழி வகுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது. அது சரி நம் அரசியலாளர்கள் மக்களின் நன்மைக்காக, நட்புடன் மக்களுடன் கலந்து கட்டி ஆட்சி புரிபவர்கள் என்றால் நாடு நல்ல ஆட்சியை அல்லவா பெற்றிருக்கும்..வேதனைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துளசி ஐயா, கீதா சகோ இருவருக்கும் முதலில் என் அன்பு நன்றி!

      கீதா சகோ, நீங்கள் கூறியது போல் முழுக்க முழுக்க இது அரசியல் தூண்டல்தான். சுடச் சொல்லி உத்தரவிட்டதே தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்தான் என்றும் எடப்பாடியார் சொன்னது போல் உண்மையிலேயே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதே அந்தாளுக்குத் தெரியாது என்றும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

      மேலும், பேசித் தீர்த்திருக்கலாம் எனக் கூறியிருந்தீர்கள். பேசினால் தீர்ந்து விடும்; அப்புறம் மக்களைத் தீர்த்துக் கட்ட முடியாது என்பதால்தான் பேசவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

      இதோ, இன்று ரஜினி வேறு வெகு அரிய கருத்து முத்துக்களை உதிர்த்திருக்கிறார். போராட்டத்தில் சமுதாயப் பகைவர்கள் ஊடுருவி விட்டார்களாம். அதனால்தான் போராட்டம் இப்படிக் குருதிக் களறியில் முடிந்திருக்கிறதாம். வன்முறை செய்தது, தீ வைத்தது எல்லாமே காவல்துறையினர்தாம் என்பதற்கான காணொலிச் சான்றுகளே எப்பொழுதோ வெளிவந்து உலகம் முழுக்க நாறிக் கொண்டிருக்கின்றன; இவர் புதுக் கதை சொல்கிறார். பேசாமல், இனி இவர் படங்களுக்கு இவரே கதை எழுதலாம்.

      என்னவோ! மனித உயிரின், அதுவும் தமிழ் உயிரின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது!

      நீக்கு
  3. செம கேள்வி தோழா? பதில் கிடைக்காது என்று தெரிந்தும் கேள்வி கேட்டுக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் சோர்வு தட்டுகிறது... இருந்தாலும் கேட்டுக் கொண்டே இருப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பதில் கிடைக்காது என்று தெரிந்தும் கேள்வி கேட்டுக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் சோர்வு தட்டுகிறது// - நூற்றுக்கு நூறு உண்மை தோழா! பலமுறை அப்படிப்பட்ட மனச்சோர்வினால் தவிப்பவன்தான் நானும். ஆனாலும் என்ன செய்ய, நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் கொடுமைகளைக் காண மனம் பொறுக்கவில்லையே! எனவே இப்பொழுதெல்லாம் கேள்வி கேட்பது விடை கிடைக்கும் என்பதற்காக இல்லை; அப்படியாவது மனப்புண்ணுக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்பதால்தான்.

      தங்கள் முதல் வருகைக்கு என் அன்பான நல்வரவு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு
  4. நானெழுதீருந்த நீண்ட கருத்து காக்கா கொண்டு போயிற்றோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்துகிறேன் ஐயா! இந்தப் பதிவுக்கு நீங்கள் எழுதி என் பார்வைக்கு வந்த முதல் கருத்து இதுதான்.

      கருத்தை எழுதிய பின்பு புகுபதிகை (signin) செய்து கருத்தை அனுப்பினால் பிளாகரில் இவ்வாறு ஆவதைப் பார்த்திருக்கிறேன். உங்களுடையதும் அப்படி ஆகியிருக்கலாம். நீங்கள் விரும்பினால் மீண்டும் கருத்திடுங்கள்! வெளியிடக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. நீங்கள் மலாய் மொழியில் ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் என்ன சொல்கிறீர்கள் என்பது புரியவில்லை. எதுவாக இருப்பினும் தமிழிலோ ஆங்கிலத்திலோ மட்டும் சொல்ல வேண்டுகிறேன். தமிழில் எழுதுவதற்கு உதவக் கீழே தமிழ்ப் பலகை காத்திருக்கிறது.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்