.
கிண்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிண்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2022

நம் பரதேசி அவர்களின் நூல்கள் - ஓர் அறிமுகம்

'Paradesi' Alfred Rajasekaran Thiyagarajan's Book releasing function notice

ரதேசி என்றதும் எல்லாருக்கும் ஏழ்மையான ஒருவரின் தோற்றம் நினைவுக்கு வரும்; சிலருக்கு இயக்குநர் பாலா அவர்களின் திரைப்படம் நினைவுக்கு வரலாம்; ஆனால் பதிவர்களான நம் நினைவுக்கு வருபவர் பரதேசி @ நியூயார்க் என்கிற வலைப்பூவை நடத்தும் ஆல்ஃபிரட் தியாகராசன் அவர்கள்.

அமெரிக்க வாழ் தமிழரான ஆல்ஃபி அவர்கள் ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக நகைச்சுவை, வாழ்வியல், சுற்றுலா, கவிதை எனப் பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகிறார். பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர் எனப் பன்முகங்கள் கொண்ட இவர் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழுத் தலைவராகவும் திகழ்வதில் வியப்பில்லை.

வலைப்பூவில் மட்டுமே மணம் வீசிக் கொண்டிருந்த தன் எழுத்துக்களை நூலாய் வெளியிட ஆர்வம் கொண்டு ஆல்ஃபி அவர்கள் நம் பதிவுலகப் பெருமகனார் நா.முத்துநிலவன் அவர்களை நாட, முத்துநிலவன் ஐயா என்னைக் கை காட்ட, அப்படித்தான் முகிழ்த்தது எங்கள் இருவருக்குமான நட்பு.

திருத்தப் (proof reading) பொறுப்பை நானும், தொகுக்கும் பணியைத் தோழர் கோமதி அவர்களும் அட்டை வடிவமைப்பை நண்பர்கள் சந்தோஷ், ஜெகதீஷ் ஆகியோரும் ஏற்றுக் கொள்ள வண்ணமயமான வானவில் போல இதோ ஆல்ஃபி அவர்களின் ஏழு நூல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் பரதேசி, இலங்கையில் பரதேசி, மெக்சிகோவில் பரதேசி, இஸ்தான்புல்லில் பரதேசி, போர்ட்டோ ரிக்கோவில் பரதேசி, டெக்சாசில் பரதேசி எனத் தான் சுற்றிப் பார்த்த துய்ப்புகளைப் (experience) பற்றி ஆறு சுற்றுலா நூல்களையும் 22 ஆண்டுக் கால அமெரிக்க வாழ்க்கை பற்றி நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1) எனும் ஒரு வாழ்வியல் நூலையும் இத்தொகுப்பில் வெளியிட்டுள்ளார் ஆல்ஃபி அவர்கள்.

கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 35ஆவது ஆண்டு விழாவில் ஓர் இணை அமர்வாக ஆல்ஃபி அவர்களின் இந்நூல்களைப் புகழ் பெற்ற எழுத்தாளரும் தென்சென்னைத் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள் வெளியிட சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளரும் மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் பெற்றுக் கொண்டது என்றென்றும் இனிக்கும் நிகழ்வு!

Famous writer Dr.Thamizhachi Thangapandian MP releasing the books written by 'Paradesi' Alfred R.Thiyagarajan and the celebrity writer Su.Venkatesan MP receiving the first copies

உங்கள் பதிவுலக நண்பர் எழுதிய இந்நூல்களை, பதிவுலகில் உங்கள் இன்னொரு நண்பனான எனக்கும் தனிப்பட்ட முறையில் மனதுக்கு நெருக்கமான இந்நூல்களைப் படித்து மகிழுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்!

இதில் ஒவ்வொரு சுற்றுலா நூலிலும் அந்தந்த நாடுகளையே நாம் மனக்கண்ணால் பார்க்க முடிகிறது. வெறும் இடங்களைச் சுற்றிக் காட்டுவதாக மட்டுமின்றி அந்த இடங்களின், நாடுகளின் வரலாற்றையே மிகச் சில பக்கங்களில் மணிச் சுருக்கமாகத் தரும் ஆல்ஃபியின் எழுத்துக்களில் இதுவரை அறியாத பல புதிய, அரிய தகவல்களை நாம் சுவைக்க முடிகிறது. மேலும் மொழி தெரியாமல், பழக்க வழக்கம் புரியாமல் ஒவ்வொரு நாட்டிலும் சிக்கிக் கொண்டு ஆல்ஃபி படும் அவதிகளை அவர் விவரித்துள்ள விதம் நம்மை விலாநோகச் சிரிக்க வைக்கிறது.

சீனாவில் பரதேசி’ நூல் இவற்றில் உச்சம்! இது வெறும் சீனா பற்றிய சுற்றுலா நூல் மட்டுமில்லை அந்நாட்டைச் சுற்றிப் பார்க்க விழையும் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் ஒருமுறை படிக்க வேண்டிய வழிகாட்டியும் கூட!

அதே போல் ‘நியூயார்க் பக்கங்கள் (பாகம்-1)’ நூல் அமெரிக்கா செல்லத் துடிக்கும் தமிழர்களுக்கான கையேடு! அங்கு நிலவும் தட்பவெப்பச் சூழல், விந்தையான பழக்க வழக்கங்கள், மேலைநாட்டு வாழ்க்கைப் பாணி, மண் மணத்தை நினைத்துப் பார்க்கும் தமிழர் ஏக்கங்கள், கடல் தாண்டியும் தாய்மொழி வளர்க்கும் தமிழர் நிகழ்ச்சிகள் என அயல்நாட்டு வாழ்வியலையும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் பாதிப்புகள் ஆகியவற்றையும் ஒரு தமிழர் பார்வையில் நகைச்சுவை கொப்பளிக்க விவரிக்கும் இந்நூல் அமெரிக்கத் தூதரகத்தின் வாசலில் தவம் கிடக்கும் தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

அமேசானில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்களை நீங்கள் மின்னூல் (E-Book), அச்சுநூல் என உங்கள் வசதிக்கேற்ப எந்த வடிவில் வேண்டுமானாலும் வாங்கலாம். இதோ அதற்கான இணைப்பு - https://amzn.to/3Jvafb2.

படித்துப் பாருங்கள்! கூடவே உங்கள் மேலான கருத்துக்களை அந்தந்த நூலுக்கான அமேசான் பக்கத்தில் பதிவு செய்து உதவுங்கள்!

சனி, டிசம்பர் 14, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் பற்றி எழுத்தாளர் தேமொழி அவர்களின் மதிப்புரை (Review)!

13aam ulagil oru kaadhal Book Review

ட்புக்கினியவர்களே! 

நான் எழுதிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் பற்றி அண்மையில் எழுத்தாளரும் தமிழ்த் தொண்டருமான தேமொழி அவர்கள் ‘சிறகு’ இதழில் ஒரு மதிப்புரை (review) வழங்கியிருந்தார். படித்த உடனேயே உள்ளக் கிளர்ச்சியால் என் உடம்பையே படபடக்கச் செய்த அந்தக் கட்டுரை, அன்னாருக்கு நெஞ்சம் நெகிழ்ந்துருகும் நன்றியுடன் இதோ உங்கள் பார்வைக்கு! 

ஒரு நிமிடம்! கட்டுரைக்குள் செல்லும் முன் ஒரு முக்கிய தகவல்! புதினத்தைப் படித்துக் கருத்துரைக்க இன்றுதான் (14.12.2019) கடைசி நாள் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு நண்பர்களே! தவறான தகவலுக்காக மீண்டும் என்னைப் பொறுத்தருள வேண்டும்! இந்த மாதக் கடைசி வரை நேரம் இருக்கிறது.

எனவே இதுவரை நூலைப் படிக்காதவர்கள் இனியாவது படித்து டிசம்பர் 31, 2019 அன்றுக்குள் உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் அமேசானில் வழங்கி இந்தப் போட்டியில் என்னை வெல்லச் செய்ய வேண்டுகிறேன்! நூலை வாங்க - https://amzn.to/2qFuL4z

நூலை எப்படி வாங்கிப் படிப்பது, எப்படிக் கருத்து அளிப்பது என்பது பற்றிய விவரங்கள் 13ஆம் உலகில் ஒரு காதல் - என் முதல் புதினம்! வெற்றி பெறக் கை கொடுப்பீர்! எனும் கட்டுரையில் உள்ளன. 

மிக்க நன்றி! இனி மதிப்புரை உங்கள் பார்வைக்கு!

❤ ❤ ❤ ❤ ❤ 


தமிழில் அறிவியல் படைப்புகள் வெளியிடுபவர் எண்ணிக்கை குறைவு. அறிவியல் அடிப்படையில் கற்பனை செய்து அறிவியல் புதினம் உருவாக்குவோர் எண்ணிக்கை அதனினும் மிக மிகக் குறைவு. ஜூல்ஸ்வெர்ன், எச்.ஜி. வெல்ஸ் போன்ற மேலைநாட்டு அறிவியல் புதின எழுத்தாளர் போன்ற ஒரு படைப்பாளிகள் வரிசை தமிழ் மொழியில் இல்லை. அறிவியல் புதினம் என்றால் எழுத்தாளர் சுஜாதா பெயர் மட்டுமே அனைவருக்கும் சட்டென நினைவு வரும் அளவிற்கு ஒரு வறட்சி நிலை தமிழ் இலக்கியத்தில்.

தனது “13ஆம் உலகில் ஒரு காதல்” என்ற நூலின் மூலம் இக்குறையை நீக்க முயன்றுள்ளார் இ.பு.ஞானப்பிரகாசன். இவர் ‘நமது களம்’ இணைய இதழில் துணையாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பல இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. அமேசான் கிண்டில் நடத்தும் ‘Pen to Publish 2019′ போட்டியில் கலந்துகொண்டு ஆசிரியர் எழுதியுள்ள இந்த நூலை அவர் தமது முதல் புதினம் என்று குறிப்பிட்டாலும் விறுவிறுப்பாகக் கதை சொல்லும் எழுத்தின் நடையும், தொய்வில்லாது கதையை நடத்திச் செல்லும் பாங்கும் ஒரு சிறந்த அறிவியல் புதின எழுத்தாளர் தமிழ் இலக்கிய உலகில் உருவாகியுள்ளார் என்றே கட்டியம் கூறுகின்றன. 

உலகம் தழுவிய மனிதநேயம் கொண்டாட விரும்பும் ஒரு தமிழ்ப்பற்றாளரின் அறிவியல் கற்பனை அதையன்றி வேறெதைக் கதையின் கருவாகக் கொண்டிருக்கும்? கதையின் தலைவி மகிழினி எடுக்கும் முடிவு உலகம் கடந்த மனிதநேயத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு. ஞானப்பிரகாசனின் தாய்மொழிப் பற்றும் தமிழினக் கனவுகளும் அத்துடன் இணைந்ததில் 13ஆம் உலகமான வேற்றுலகில் வாழும் மனிதர்களின் நலனுக்காக, அவர்களின் அறிவியல் ஆய்வுகளுக்காகத் தன்னையே ஒப்புக்கொடுக்கவும் தயங்காதவளாக மகிழினி உருவாகியுள்ளாள். 

“மகிழினி அவன் கையை உதறி விட்டுப் பறக்கும் தட்டின் உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்!” என்று ஆர்வமூட்டும் துவக்கத்துடன் கதை துவங்கிப் பின்னோக்கிச் சென்று அவள் அந்த முடிவெடுக்க என்ன காரணம் என்று கூறும் கதை அமைப்பு. 

துறுதுறுப்பும், அறிவுக்கூர்மையும், துணிச்சலும் நிரம்பிய இதழியல் மாணவி மகிழினி தனது பயணத்தின் இடையில் பல ஆண்டுகளாகச் சென்றிராத தனது சொந்த கிராமமான கோட்டைப்பட்டினத்தில் உள்ள தாத்தா பாட்டியின் வீட்டிற்குச் செல்கிறாள். அங்கு இயற்கை உழவில் ஈடுபாடு கொண்டுள்ள விவசாயக் கல்லூரிப் பட்டதாரியான தனது சிறுவயதுத் தோழன் மதியைச் சந்தித்து, அவனுடன் சென்று ஊரில் உள்ள தனது மற்ற சிறுவயது தோழர்களையும் சந்தித்து அளவளாவி மகிழ்கிறாள். “முதல் கேள்வியே தப்பு. ஏலியன்ஸ் இருக்காங்களான்னு கேக்கக்கூடாது. எங்க இருக்காங்கன்னு கேளு!” என்று கூறும் ஓய்வுபெற்ற அறிவியல் பேராசிரியரான மதியின் தாத்தாவையும் சந்திக்கிறாள். 

மீண்டும் அவள் தொடர்வண்டியில் தனது பயணத்தைத் தொடர்கையில் மகிழினி வேற்றுலகில் வாழும் மனிதர்களால் கடத்தப்பட்டுவிட்டாள் என்பதை மதியின் தாத்தா கண்டுபிடித்து மகிழினியைக் காப்பற்ற முயல்கிறார். அவருடன் சென்ற மதி தனது காதலி மகிழினியைக் காப்பாற்ற தானும் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் திட்டத்திற்கு முன்வருகிறான். வேற்றுலகின் அரசியல் போராட்டத்திலும் சிக்கிக்கொண்டு இருவரும் பகடைக்காய்களாகவும் மாறுகிறார்கள். 

மகிழினியின் நோக்கம் நிறைவேறுகிறதா? மதியின் காதல் வெற்றிபெறுகிறதா? என்பதுதான் கதையின் முடிவு. மகிழினியைக் காதலிக்கும் மதி அவள் நலனுக்காகத் தன்னையும் தனது வாழ்வையும் பணயம் வைக்கத் தயங்காத வீரத் திருமகனாகச் சுடர் விடுகிறான். கதை மாந்தர்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாக மகிழினி, மதி எனவும், அதிலும் வேற்றுலக மனிதர்களின் பெயர்கள் ழகரன், கொற்றவன், இன்முகை, கமழ்நன், செழினி, மின்மதி என தூய தமிழ்ப் பெயர்களாக அமைந்தாலும் அவையாவும் கதையின் கருவினால் சிறப்பாகக் கதையில் பொருந்தி விடுகிறது. 

“மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக, பல காலத்துக்கு முன்னாடியே யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்க” என்று அறிவியல் தாத்தா கூறும் டயனோசார்களின் அழிவு குறித்த ஊகம் பரிணாமவியல் காலக்கோட்டில் நெருடுகிறது. டயனோசார்களின் அழிவுக்குப் பிறகு சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் கடந்த பின்னரே புவியின் மனித இனம் தோன்றியது என்பதே அறிவியல். 

தமிழி எழுத்து, சீன அதிபரின் மாமல்லை வருகை, ஐயப்பன் கோயிலில் நுழையப் பெண்களுக்குத் தடை, ஈழப்போர் என்ற தற்கால நிகழ்வுகளை ஒட்டிய செய்திகள் இடம் பெறுவது ஆர்வத்தைக் கதையில் ஊன்ற வைக்கிறது. “பேரலல் வேர்ல்டுங்கிறீங்க? அப்புறம் எப்படி இவ்ளோ பெரிய டிஃபரன்ஸ்?” என்று மகிழினி கேட்கையில், தமிழ்பேசும் வேற்றுலகின் மனிதர், “அதற்குக் காரணம் தாய்மொழிப் பண்பாட்டை மறக்காத எங்கள் வாழ்க்கை முறை. சாதி, சமயம் எல்லாம் வேண்டா என்று பெரியார் என்று ஒருவர் வந்து சொல்லும் வரை நீங்கள் கேட்கவில்லை” என்று விளக்கம் கூறுவது கருத்தைக் கவரும் ஒரு குறிப்பு. 

“இரவு வானம், பஞ்சு மெத்தை மேலே மறந்து விட்டுப் போன கைப்பேசி போல் முழு நிலா மேகத்தில் படுத்துக் கிடக்க” என்ற கற்பனையும், “ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் கொத்தாகக் கைது செய்யுங்கள்! குண்டுகள் தீர்ந்து போனால் அப்புறம் துப்பாக்கியைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. எளிதாகக் கைப்பற்றலாம்” என்ற உவமையும் ஆசிரியரின் எழுத்துத் திறனுக்குச் சான்றுகள்.
 
மனிதர்கள் வேற்றுலகிற்குக் கடத்தப்படும் நோக்கம் குறித்து மகிழினியும் மதியும் வேறு வேறு மனிதர்களால் விளக்கம் பெறும்பொழுது அதைத் திரைப்படப் பாணியில் வெட்டி வெட்டி வெவ்வேறு காட்சிகளாக அமைக்கும் பாணியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ள முறை, இக்கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டாலும் சிறப்பாகவே அமையும் என்ற எண்ணத்தை எழுப்பத் தவறவில்லை. கதையும் தமிழ்ப்பட மசாலாக் கூறுகளுடனும் சிறப்பான கதைமாந்தர்கள் உருவாக்கமும் கொண்டுள்ளதாகவே அமைந்துள்ளது. 

கற்பனைக்கு எடுத்தாண்ட கதையின் திருப்பங்களும் நிகழ்வுகளும் ஏரண அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் பொருந்துகின்றன. மேலும் நமக்கு வரக்கூடிய ஐயங்களைக் கதை மாந்தர்களே கேட்டுத் தெளிவு பெறும் வகையில் விளக்கம் தரும் முறையும் ஒரு சிறப்பான முயற்சி. நம்பிக்கை தரும் வகையில், பாராட்டப்படவேண்டிய எழுத்து நடையில், சிறப்பாகக் கதை கூறும் அறிவியல் புதின எழுத்தாளர் ஒருவர் உருவாகியுள்ளார் என நாம் மகிழலாம், இ.பு.ஞானப்பிரகாசனுக்குப் பாராட்டுகள்.


நான் கனவிலும் எதிர்பார்க்காத இப்பேர்ப்பட்ட ஒரு மதிப்புரையை வழங்கிய 
தேமொழி அவர்களுக்கு நெஞ்சம் ததும்பி வழியும் நன்றி!

சனி, டிசம்பர் 07, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் - அமேசானின் அறிவியல் புனைவு நூல்களில் முதல் இடத்தில்!

13aam ulagil oru Kaadhal is No.1 rank in Amazon

கிலத் தமிழ் அன்பர்களே!

உங்கள் விருப்பத்துக்குரிய 13ஆம் உலகில் ஒரு காதல் புதினம் நேற்று வரையில் தொடர்ந்து மூன்று நாட்களாக அமேசான் அறிவியல் புனைவு நூல்களிலேயே முதல் இடத்தில் வீற்றிருந்தது என்பதை உச்சக்கட்டக் குதூகலத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

நூலை இலவசமாக விற்பனைக்கு வைத்த பின்னர்தான் இப்படி ஓர் இடம் கிடைத்தது; இலவச விற்பனையால் முதலிடம் என்பது பெரிய விதயம் ஒன்றும் இல்லை என்றாலும் அமேசான் கிண்டிலில் விற்கும் எத்தனையோ அறிவியல் புனைவுகளில் இது முதலிடத்தில் இருப்பதைக் காண்கையில் காரணங்களெல்லாம் மறந்து பார்க்கவே அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது.

வாழ்விலேயே நான் மறக்க முடியாத இந்தத் தறுவாயில், இந்த நூல் குறித்து முதன் முதலில் பாராட்டுரை அளித்துப் பதிவுலகம் முழுவதும் அறியச் செய்தவரான பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஐயா கரந்தை ஜெயகுமார் அவர்கள், பேசுபுக்குப் பதிவு எழுதித் தன் நேயர்கள் அனைவருக்கும் இந்நூலை அறிமுகப்படுத்தியவரான வாண்டுமாமா அவர்களுக்குப் பிறகு நான் பெரிதும் ரசிக்கும் குழந்தைகள் எழுத்தாளர் புகழ்மிகு விழியன் (எ) உமாநாத் செல்வன் அவர்கள், இந்த நூலைத் தான் எழுதிய நூல் போல எண்ணி வாய்மொழியாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் முடிந்த அளவுக்கு  அதிகமானோரிடம் கொண்டு சேர்த்த அன்பு நண்பர் ஷியாம் சுந்தர் முதலான பலருக்கும் என் அகம் குளிர்ந்த நன்றியைத் தெரிவித்து நிறைவடைகிறேன்! 

அதே நேரம், நண்பர்களே! இது வெறும் தரநிலைதான் (Ranking). போட்டி இன்னும் முடியவில்லை. முடியும்பொழுது வெறுமே இலவசமாகக் கொடுத்து முதலிடத்தில் வந்து விட்டதால் இந்த நூலை வெற்றி பெற்றதாக அறிவிக்க மாட்டார்கள். எந்த நூல் மக்களால் அதிகம் விரும்பப்பட்டது என்பதை வைத்துத்தான் வெற்றி பெறும் நூலை முடிவு செய்வார்கள். எனவே புதினத்தை நீங்கள் வாங்கினால் மட்டும் போதாது. படித்துப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் அளித்தால் மட்டும்தான் இந்த நூல் போட்டியில் வெல்ல முடியும்.

இப்படி ஒரு நூல் எழுதியிருப்பதாக உங்கள் அனைவரிடமும் நான் முதன் முதலில் தெரிவித்தபொழுது கூடவே ஒரு தவறான தகவலையும் தந்து விட்டேன். அதாவது கடந்த ஓராண்டில் அமேசானில் ரூ.1500/- தொகைக்குப் பொருட்கள் வாங்கியவர்கள் மட்டுமே நூலைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டு விட்டேன். அதனாலோ என்னவோ இதுவரை எனக்குக் கருத்துக்களும் தரக்குறியீடுகளும் அவ்வளவாகக் கிடைக்கவில்லை.

ஆனால் நண்பர்களே! மீண்டும் சொல்கிறேன். அது முற்றிலும் தவறான தகவல்! நூலை வாங்கும் யார் வேண்டுமானாலும் உங்கள் கருத்தையும் தரக்குறியீட்டையும் தாராளமாக அளிக்கலாம்.

நூலை வாங்க நீங்கள் சென்ற https://amzn.to/2qFuL4z இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் Write a product review என இரண்டு பொத்தான்கள் இருக்கும். இரண்டில் எதை வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்தலாம். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.

கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டுமாவது அளித்து உதவலாம்.

போட்டியில் கலந்து கொள்ளும் பல நூல்கள் ஏறக்குறைய நூறு எண்ணிக்கை அளவுக்குத் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் பெற்றுள்ளன. ஆனால் உங்களுக்குப் பிடித்தமான இந்தக் கதை இதுவரை பெற்றிருக்கும் தரக்குறியீடுகள் மூன்றே மூன்றுதான். கருத்துக்களோ இரண்டே இரண்டுதான். இதுவரை 150 எண்ணிக்கைக்கும் மேல் நூல் விற்றிருக்கும் நிலையில் இப்படிக் கருத்துக்கள் குறைவாக இருந்தால் வாங்கியவர்களில் பெரும்பாலானோருக்குக் கதை பிடிக்கவில்லை எனப் பொருளாகி விடும்.

ஆகவே நூலை வாங்கிய அன்பர்கள் அனைவரும் அதை முழுமையாகப் படித்துத் தவறாமல் தங்கள் கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் பதிவு செய்ய வேண்டுகிறேன்!

அதே சமயம், நூல் இப்பொழுது இலவசச் சலுகையின் கீழ் இருக்கிறது என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறேன். சலுகை இந்திய நேரப்படி நாளை (08.12.2019) மதியம் 1.29 மணியுடன் நிறைவடைகிறது என்பதை மறந்து விடாதீர்கள்! 

செவ்வாய், டிசம்பர் 03, 2019

13ஆம் உலகில் ஒரு காதல்! - இப்பொழுது முழுக்க முழுக்க இலவசமாய்!

13aam ulagil oru kadhal in Top 100 Best selling Kindle version Sci-fi books list of Amazon
லகத் தமிழ் உள்ளங்களே!

உங்கள் விருப்பத்துக்குரிய ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ புதினம் நேற்று அமேசானின் அதிகம் விற்பனையாகும் அறிவியல் புனைவு கிண்டில் பதிப்பு நூல்கள் (Science fiction Kindle version Books) பட்டியலில் முதல் 100க்குள் இடம் பிடித்தது! மேலே உள்ள படத்தைப் பாருங்கள்!

இதற்கு முழுக் காரணம் உங்கள் பேராதரவுதான்! அதற்கு நன்றியறிதலாகவும் இதைக் கொண்டாடும் வகையிலும் உங்களுக்குப் பிடித்தமான இந்தப் புதினம் இன்று முதல் இலவசம்! ஆம்! இதுவரை கிண்டில் அன்லிமிட்டெட் திட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் இலவசமாக இருந்து வந்த நூல் இப்பொழுது முழுக்கவே இலவசம்!!

ஏற்கெனவே காசு கொடுத்து வாங்கிய நண்பர்கள் இதற்காக என் மீது சினம் கொள்ளாமல் தங்களுக்குப் பிடித்த இந்த நூல் இதன் மூலம் இன்னும் பலருக்கும் சென்று சேர இருப்பது குறித்து மகிழ்ந்து வாழ்த்த வேண்டுகிறேன்!

இந்தச் சலுகையால் நூலை வாங்குவது இப்பொழுது மிக மிக எளிதாகி விட்டது. வெறும் மூன்றே மூன்று சொடுக்குகள் போதும்! வாங்கி விடலாம்.

1) இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் https://amzn.to/2qFuL4z

2) இப்பொழுது வரும் பக்கத்தில் ‘Buy Now’ பொத்தானை அழுத்துங்கள்!

3) உள்நுழையச் (Login) சொல்லும். உங்கள் அமேசான் கணக்கின் மின்னஞ்சல் முகவரி அல்லது கைப்பேசி எண் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றையும் அமேசான் கணக்கின் கடவுச்சொல்லையும் இட்டுப் பொத்தானை அழுத்துங்கள்.

இப்பொழுது நூலை வாங்கியதற்காக உங்கள் பெயரைக் குறிப்பிட்டு நன்றி எனக் காட்டும். அவ்வளவுதான்! நீங்கள் புதினத்தை வாங்கி விட்டீர்கள்!

இனி கூகுள் பிளே ஸ்டோருக்குள் சென்று Kindle எனத் தேடியெடுத்து அந்தக் குறுஞ்செயலியை உங்கள் ஆன்டிராய்டு கைப்பேசியில் நிறுவி விட்டால், மேலே சொன்னபடி உங்கள் அமேசான் கணக்கு விவரங்களைக் கொடுத்து அதில் உள்நுழைந்து லைப்ரரி எனும் பிரிவில் கதையைப் படிக்கலாம்.

ஆன்டிராய்டு கைப்பேசி மட்டுமில்லை ஆப்பிள் கைப்பேசி, ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் குளிகைகள் (tablets), விண்டோஸ் மற்றும் மேக் கணினிகள், கிண்டில் மின்-படிப்பான் (Kindle E-Reader) ஆகிய கருவிகளிலும் கிண்டில் குறுஞ்செயலி (Kindle app) வழியே நீங்கள் இந்த நூலைப் படிக்க முடியும்.

விரையுங்கள்! இந்தச் சலுகை (இந்திய நேரப்படி) டிசம்பர் 08, 2019 அன்று மதியம் 1.29 வரை மட்டுமே!

ஏற்கெனவே நூலை வாங்கியவர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் மற்றும் வேண்டுகோள்!

நூல் பற்றிக் குறிப்பிட்ட சிலர் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். பொறுத்தருள வேண்டும்! அது முற்றிலும் தவறான தகவல்! நூலை வாங்கும் யார் வேண்டுமானாலும் உங்கள் கருத்தையும் தரக்குறியீட்டையும் தாராளமாக அளிக்கலாம்.  

மேலே உள்ள https://amzn.to/2qFuL4z இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் ஏற்கெனவே அளிக்கப்பட்ட கருத்துக்கள், தரக்குறியீடுகள் இருக்கும். அவற்றின் கீழே Write a product review என இரண்டு பொத்தான்கள் இருக்கும். இரண்டில் எதை வேண்டுமானாலும் அழுத்தலாம். அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் எனக்குத் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள். 

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும்.  

கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டும் அளித்து உதவலாம்.

இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! 

சனி, நவம்பர் 23, 2019

13ஆம் உலகில் ஒரு காதல் - என் முதல் புதினம்! வெற்றி பெறக் கை கொடுப்பீர்!

13aam ulagil oru Kadhal

ன்பிற்கினிய நண்பர்களே!

அமேசான் கிண்டில் நடத்தும் Pen to Publish 2019 போட்டியில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன் உங்களை நம்பி! வாழ்வில் முதன் முதலாக ஒரு முழு நீளப் புதினம் எழுதி இந்தப் போட்டியில் வெளியிட்டிருக்கிறேன். வெளியிடப்பட்டிருக்கும் நூல்களில் அதிகமாக விற்பனையாகும் முதல் சில நூல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்துதான் வெற்றி பெறும் நூல்களைத் தேர்ந்தெடுப்பார்கள் இந்தப் போட்டியில். எனவே உங்கள் நண்பன் நான் வெற்றி பெற வேண்டுமானால் நீங்கள் மனம் வைத்தால்தான் முடியும்!  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சொல்லும் முன் உலகளாவிய இந்தப் பெரும் போட்டிக்குத் துணிந்து அனுப்பும் அளவுக்கு அப்படி என்ன கதை இது என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்.

13ஆம் உலகில் ஒரு காதல்!

‘மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்னும் கவிதையில் உலகம் தழுவிய மனிதநேயத்தை வலியுறுத்தினார் பாவேந்தர். அதையும் தாண்டி ஒரு சிறு அடி எடுத்து வைக்கும் முயற்சியே இந்தக் கதை. ஆம்! இது உலகம் கடந்த மனிதநேயம்! அதே நேரம் நம் தாய்மொழிப் பற்றும் தமிழினக் கனவுகளும் கூடத் தொடக்கம் முதல் நிறைவு வரை இதில் இழையோடுவதை நீங்கள் உணரலாம். 

கதையின் தொடக்கத்திலேயே ஒரு பெண் தன் காதலன் தடுத்தும் கேட்காமல் பறந்து கொண்டிருக்கும் பறக்கும் தட்டிலிருந்து - பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து - கீழே குதித்து விடுகிறாள்.

ஏன்?...

தன் உயிரையும் துச்சமாக நினைத்து அவள் அப்படிச் செய்ய வேண்டிய காரணம் என்ன?...

காதலனைக் கூடப் பிரிந்து செல்லும் அளவுக்கு அவளைக் கீழ் நோக்கி இழுக்கும் அந்தக் கடமை எது?...

முதலில் அவளும் அவனும் பறக்கும் தட்டில் பயணிக்க வேண்டிய சூழல் வந்தது எப்படி?... 

உயரமான கட்டடத்திலிருந்தோ மலையுச்சியிலிருந்தோ கூட அல்ல, நேரடியாக வானத்திலிருந்து குதிக்கும் அந்தப் பெண்ணின் நிலைமை என்னாகும்?...

இந்தக் கேள்விகளுக்கான சுவையான விடைகள்தாம் இந்தக் கதை!

அடிப்படையில் இஃது ஒரு அறிவியல் புனைவு. வேற்றுலகில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிக் கதையில் வரும் விளக்கங்கள் வெறும் சுவைக்காகச் சேர்க்கப்பட்டவை அல்ல என்பதை, அவற்றுக்கான ஆதாரங்களை இன்றும் நீங்கள் இணையத்தில் காணலாம். தவிர, சங்கக் காலம் முதல் நாம் போற்றிப் பாதுகாத்து வரும் நம் தமிழ்ப் பண்பாட்டின் இரு கண்களான காதலும் வீரமும் இக்கதையின் அகமாகவும் புறமாகவும் திகழ்வதையும் பார்க்கலாம்.
 
இதிலுள்ள மனிதநேயமும் தியாகமும் உங்களைத் திகைக்க வைக்கும்... 
தமிழ் உணர்வு உங்களை நெகிழ வைக்கும்... 
காதல் உங்களை உருக வைக்கும்... 
அறிவியல் உங்கள் சிந்தனைக்கு விருந்தாகும்... 

ஒருமுறை படித்துப் பாருங்கள்! இதில் வரும் என் கதை மாந்தர்களை, குறிப்பாக என் மகிழினியையும் மதியையும் ழகரனையும் நீங்கள் காலத்துக்கும் மறக்க முடியாது. தாய்க்குத் தலைப் பிள்ளை போல  என் முதல் புதினமான இந்தத் தமிழ் மணக்கும் படைப்பை என் நண்பர்களான நீங்கள் கட்டாயம் கைவிட மாட்டீர்கள் எனும் நம்பிக்கையுடன் உங்கள் முன் தவழ விட்டிருக்கிறேன்!

நூலைப் படிப்பது எப்படி? 

நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் இந்த நூலை இலவசமாகவே படிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

1) கைப்பேசியில் உள்ள உங்கள் கிண்டில் குறுஞ்செயலியை (Kindle app) திறவுங்கள்.

2) அதில் Gnaanapragaasan என்றோ 13ஆம் உலகில் ஒரு காதல் என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும்.

3) அந்தப் பக்கத்தில் உள்ள Read for Free பொத்தானை அழுத்தினால் போதும். அந்தக் கைப்பேசியிலிருந்து மட்டுமில்லை கணினி, குளிகை (Tablet) என எந்தக் கருவியிலுள்ள கிண்டில் குறுஞ்செயலி வழியாகவும் அல்லது கிண்டில் மின் படிப்பான் (Kindle E-Reader) வழியாகவும் இந்த நூலை நீங்கள் இலவசமாகப் படிக்கலாம்.

நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைக் காசு கொடுத்து வாங்கிக் கிண்டில் வழியாகப் படிக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

1) உங்கள் கைப்பேசியை எடுங்கள். அதில் உள்ள உலவியில் (browser) https://amzn.to/2qFuL4z என எழுதிச் சொடுக்குங்கள்.

2) இப்பொழுது வரும் பக்கத்தில் உள்ள Buy Now with 1-Click எனும் பொத்தானை அழுத்துங்கள். 

3) உள்நுழைய (Log in செய்ய) கேட்கும். உங்கள் அமேசான் கணக்கில் நீங்கள் எந்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த மின்னஞ்சல் முகவரி அல்லது எந்தக் கைப்பேசி எண்ணைக் கொடுத்திருக்கிறீர்களோ அந்த எண் - இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கொடுத்து, கடவுச்சொல்லையும் (password) கொடுத்தால் உள்நுழைந்து விடலாம்.

4) அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டை (Credit Card), பண அட்டை (Debit Card), இணைய வங்கிச் சேவை (Net Banking), அமேசான் இருப்புத் தொகை (Amazon Pay Balance) போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நூலை வாங்கிக் கொள்ளலாம். 

5) இப்பொழுது கூகுள் பிளே ஸ்டோருக்குள் சென்று கிண்டில் குறுஞ்செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவி, மேலே சொன்னபடி உங்கள் அமேசான் கணக்கு விவரங்களைக் கொடுத்து உள்நுழைந்து விட்டால் அதில் உள்ள லைப்ரரி எனும் பிரிவுக்குள் சென்று நூலைப் படிக்கலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றும் நான் சொல்ல வேண்டும். 

நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால் கூட இலவசமாக இந்த நூலைப் படிக்க முடியும். அதற்கு நீங்கள் இதுவரை அந்தத் திட்டத்தில் ஒருமுறை கூட இணையாதவராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பின்வரும் வழிமுறைகளைப் பாருங்கள்.

1) கிண்டில் அன்லிமிட்டெட் உறுப்பினர்களுக்காக மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் 3ஆவது படிநிலைக்கு வந்ததும் Read for Free பொத்தானை அழுத்துங்கள்.

2)  இப்பொழுது கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் இணைவதற்கான பக்கம் வரும். அதில் உள்ள Join Kindle Unlimited எனும் பொத்தானை அழுத்துங்கள்.

3) உள்நுழைய (Log in செய்ய) கேட்கும். மேலே கூறியபடி உங்கள் அமேசான் கணக்கின் விவரங்களைக் கொடுத்து உள்நுழையுங்கள்.

4) இப்பொழுது வரும் பக்கத்தில் உங்கள் பற்று அட்டையையோ (Credit Card) ICICI, சிட்டி பாங்க், கோடக் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றின் பண அட்டையையோ (Debit Card) பயன்படுத்தி ரூ.2/- செலுத்தினால் அடுத்த ஒரு மாதத்துக்கு நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் திட்டத்தில் உள்ள நூல்களை இலவசமாகப் படிக்கலாம். அந்த வகையில் இதையும் படிக்கலாம். 

5) இதைச் செய்து முடித்தவுடன் பணம் செலுத்தப் பயன்படுத்திய அட்டையைக் கணக்கிலிருந்து நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால் மாதந்தோறும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.169/- தானாகவே எடுத்துக் கொள்ளப்படும். அட்டையை நீக்குவது எப்படி என்பதை அறிய இந்தக் காணொலியைப் பாருங்கள் - https://www.youtube.com/watch?v=r-7KIw3tG74.

ஆனால் நண்பர்களே! இந்தப் போட்டியைப் பொறுத்த வரை எந்தெந்த நூல்கள் மிகுதியாக விற்பனையாகி, நிறைய கருத்துரைகளையும் நல்ல தரக்குறியீடுகளையும் (Ratings) பெறுகின்றனவோ அந்தச் சில நூல்கள் மட்டும்தான் நடுவர்களால் பரிசீலிக்கப்படும். அவற்றில் மூன்றுதான் முதல் மூன்று பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் மூலம் படிப்பதை விடக் காசு கொடுத்து வாங்கிப் படிப்பது என் வெற்றி வாய்ப்புக்கு அதிக உதவியாக இருக்கும். விலை வெறும் ரூ.49/- மட்டுமே. இதை விடக் குறைவாக விலை வைக்கப் போட்டியின் நெறிமுறைகள் இடமளிக்காது என்பதால்தான் இந்த விலை வைத்திருக்கிறேன். என்றாலும் கதையைப் படித்துப் பார்த்தால் கண்டிப்பாக விலை குறைவு என்றுதான் நினைப்பீர்கள்.

அதற்காக நீங்கள் எல்லோருமே நூலைக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என நான் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் கிண்டில் அன்லிமிட்டெட் மூலம் படிப்பதும் என் வெற்றி வாய்ப்புக்கான உதவிதான். இரண்டில் இதைத் தேர்ந்தெடுப்பது என்பது முழுக்க முழுக்க உங்கள் விருப்பமே! படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் தரக்குறியீடுகளையும் மறவாமல் அளிக்க வேண்டுகிறேன்! 

*கருத்தும் தரக்குறியீடும் அளிப்பது எப்படி?

மேலே உள்ள https://amzn.to/2qFuL4z இணைப்பு வழியாக மீண்டும் போனால் அந்தப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் Write a product review என ஒரு பொத்தான் இருக்கும். அதை அழுத்தினால் அடுத்து வரும் பக்கத்தில் முதலில் ஐந்து விண்மீன்கள் (Stars) இருக்கும். உங்களுக்கு எந்த அளவுக்குக் கதையைப் பிடித்திருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமான விண்மீன்களை அழுத்துங்கள். சில நொடிகள் காத்திருந்தால் Submitted எனக் காட்டும். அவ்வளவுதான் நீங்கள் எனக்குத் தரக்குறியீடு அளித்து விட்டீர்கள்.

பின்னர் அடுத்த கட்டத்தில் கருத்தை எழுதி, அதன் அடுத்த கட்டத்தில் கருத்துக்கான தலைப்பை எழுதி முடிவில் உள்ள Submit பொத்தானை அழுத்தினால். உங்கள் கருத்துக்களும் பதிவாகி விடும். 

கருத்துக்களை ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆங்கிலம் தெரியாதவர்கள் தமிழ்க் கருத்தையே ஆங்கில எழுத்துக்களால் எழுதலாம். அப்படிச் செய்யப் பிடிக்காதவர்கள் வெறும் தரக்குறியீடு மட்டும் அளித்து உதவலாம்.

இதுவரை நூலைப் படித்த அனைவரும் தவறாமல் இதைச் செய்து உதவ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! 

கடைசி நாள்: டிசம்பர் 14, டிசம்பர் 31, 2019. அதற்கு முன் படித்து விட வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
காதலைச் சொல்லிவிட்டு, ஒப்புதல் தருவாளோ மாட்டாளோ எனும் பரிதவிப்போடு விரல்நுனியில் நிற்கும் இளைஞனின் மனநிலையுடன் உங்கள் கருத்துக்களுக்காகக் காத்திருக்கும் நண்பன். 

* பி.கு.: கட்டுரையில் முன்பு இருந்த தவறான தகவல் நீக்கப்பட்டு இந்தப் பகுதி புதிதாகச் சேர்க்கப்பட்ட நாள்: 05.12.2019.

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்