எச்சரிக்கை!!!
இந்தப்
பதிவு, இதிலுள்ள படங்கள், இணைப்புகள் ஆகியவை மனித உடலைக்
காட்சிப்படுத்துதல் தொடர்பானவை. எனவே, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்கவோ
பார்க்கவோ வேண்டா!
அன்று பகல் நான் சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் திடீரெனத் தொலைக்காட்சியில் ஓடியது அந்தச் செய்தி - “பிரதமர் அலுவலகத்தின் முன்னால் தமிழ்நாட்டு உழவர்கள் முழு அம்மணப் போராட்டம்” என்று.
அப்படியே உறைந்து போய்விட்டேன்! இதற்கு மேலும் ஒரு போராட்டம் நடத்த முடியுமா? மானத்தை உயிரினும் மேலாய்ப் போற்றுபவர்கள் தமிழர்கள். ஆனால், இதோ எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றுவதற்காக அந்த மானத்தையும் இழந்தாகி விட்டது! இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது தமிழர்களிடம்?... இதற்கு மேலும் என்ன செய்தால் நியாயம் கிடைக்கும் நம் உழவர்களுக்கு?...
ஆனால், இவ்வளவும் நடந்த பிறகும், இன்றளவும், போராடுகிற வேளாண் பெருமக்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நல்லவர்கள் சிலர்.
தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் போராட்டம் சரியா தவறா?
“உழவர்கள் போராட வேண்டியது மாநில அரசிடம்தான். நடுவணரசிடம் இல்லை” எனப் பெரிய அரசியல் அறிஞர் போல் பேசுகிறார்கள் சிலர். அவர்களிடம் போய், “ஐயா! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதையும் உழவர்கள் தங்கள் கோரிக்கைகளில் ஒன்றாக வைத்திருக்கிறார்களே! அதை எப்படி மாநில அரசிடம் கேட்பது?” எனக் கேட்டால் அதற்கு மட்டும் பதிலைக் காணோம்.
“தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகள்தாம் உழவுத் தொழிலின் இன்றைய நிலைமைக்குக் காரணம். எனவே, மாநில அரசுதான் இதில் பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூவுகிறார்கள் வேறு சிலர்.
உண்மைதான். ஆனால், உழவர்கள் இன்று போராடுவது தீர்வு வேண்டி. இன்றைய நிலைமைக்கு யார் காரணம் எனப் பார்த்துத் தண்டிக்கக் கோரி இல்லை. வாழ்வின் இறுதி விளிம்பில் நின்று தங்களைக் காப்பாற்றச் சொல்லி வேண்டுபவர்களுக்குக் கை கொடுக்காமல், மாறாக அவர்களுடைய அந்த நிலைமைக்குக் காரணம் யார் என அவர்களிடம் போய் வெற்று நியாயம் பேசிக் கொண்டிருப்பது நெஞ்சில் ஈரம் என்பதே இல்லாதவர்களின் செயல்!
கங்கை அமரன் கேட்கிறார், “பிரதமர் வந்து உங்களைப் பார்க்க வேண்டுமா?” என்று. அதாவது, ‘பிரதமர் என்பவர் எப்பேர்ப்பட்டவர்! அவர் வந்து போயும் போயும் இந்த ஏழை உழவர்களைச் சந்தித்துக் கொண்டிருப்பாரா?’ என்பது அவர் கேள்வி. அவரைச் சொல்லிக் குற்றமில்லை; சேர்ந்திருக்கும் இடம் அப்படி. பிரதமர் என்றால் ஏதோ பெரிய கடவுள் என நினைத்துக் கொண்டிருக்கிறார் அமரனார். அவர் கனடியப் பிரதமர் ஜசுடின் டுரூடோவின் பெயரையாவது கேள்விப்பட்டிருப்பாரா எனத் தெரியவில்லை!
உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு யார் யாரோ எழுப்பும் கேள்விகளைக் கூட மதித்துக் கோரா இணையத்தளத்தில் விடை அளித்துக் கொண்டிருக்கிறார் கனடாவின் 23-ஆவது பிரதமர் ஜசுடின் டுரூடோ (Justin Trudeau). அதிலும் ஒருவர், “இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்களேதாம் நேரிடையாக விடை அளிக்கிறீர்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக ஒளிப்படம் ஒன்றை இணைக்க முடியுமா?” என்று கேட்டதும் அதையும் அனுப்பி வைத்திருக்கிறார். இவரெல்லாம் பிரதமர் இல்லையா?
“உழவர்கள் நடத்திய அம்மணப் போராட்டம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு” என்றிருக்கிறார் ‘இந்தியாவின் ஒரே நாட்டுப்பற்றாளரான’ எச்.ராஜா.
எச்.ராஜா மட்டுமில்லை, இந்த நேரத்தில் நாட்டிலுள்ள அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை என்னவெனில் - இந்தியாவுக்கு ஆடையில்லாப் போராட்டம் புதிதில்லை! ஆம்! இதற்கு முன்பும் சிலமுறை நடந்திருக்கிறது.
இந்திய வரலாற்றில் அம்மணப் போராட்டங்கள் (Nude Protests in India)
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஆயுத அடக்குமுறைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியப் படையினர் அங்குள்ள பெண்களைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வருவது நாம் அறிந்தும் அறியாதது போல் காட்டிக் கொள்ளும் பல உண்மைகளுள் ஒன்று! அப்படி ஒருமுறை, 2004-ஆம் ஆண்டு, மணிப்பூரில் தஞ்சம் மனோரமா என்ற பெண் இந்தியப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கேட்டதற்கு, அந்தப் பெண் தீவிரவாதி என முத்திரை குத்தினார்கள், வழக்கம் போல். அந்தக் கொடுமையைத் தாள முடியாத மணிப்பூர் தாய்மார்கள் 30 பேர், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள அசாம் ரைபிள் எனும் இந்தியத் துணைப்படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தின் முன்பு முழு அம்மணமாகப் போராடினார்கள்!
“இந்தியப் படையினரே! நாங்கள் எல்லாரும் மனோரமாவின் அன்னைகள். எங்களையும் வன்புணர்ந்து (Rape) கொள்ளுங்கள்!” என்கிற முழக்கத்தோடு அவர்கள் நடத்திய அந்தப் போராட்டம், காவல் தெய்வங்களாகப் போற்றப்படும் இந்தியப் படையினருடைய உண்மை முகத்தைத் தோலுரிக்கும் முதன்மையான இந்திய வரலாற்றுப் பதிவு!
எச்.ராஜா போன்றோர் இதற்கு என்ன சொல்வார்கள்? அந்தப் போராட்டமும் மணிப்பூருக்கு நேர்ந்த தலைக்குனிவு; இந்தியப் படையினருக்கோ நாட்டுக்கோ இல்லை என்பார்களா?
இதே போல் 2014-இல், அடையாளம் தெரியாத கணவனும் மனைவியுமான இருவர், இந்தியாவும் பாகித்தானும் ஏன் பிரிந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு முன்னர் ஆடையின்றிப் போராட்டம் நடத்தியதும் உண்டு.
அதே நேரம், ஆடையில்லாப் போராட்டம் என்பது இந்தியாவில் மட்டுமில்லை, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்கெனவே எத்தனையோ முறை நடந்ததுதான், நடப்பதும்தான்.
ஆடையில்லாப் போராட்டங்கள் வரலாறு (Nude Protests in the History)
2005 மே 16 அன்று, ‘400 பேர் இயக்கம்’ (400 People Movement) எனும் அமைப்பைச் சேர்ந்த பெண்கள், தங்கள் நிலத்தை அரசுப் பிரதிநிதிகள் கையகப்படுத்துவதை எதிர்த்து, மெக்சிகோவில் உள்ள அந்நாட்டுக் குடியரசுத்தலைவர் மாளிகை முன்பாக முழு அம்மணப் போராட்டம் நடத்தினார்கள்.
2007-ஆம் ஆண்டு, உலகப் புகழ் வாய்ந்த சுற்றுச்சூழல் இயக்கமான கிரீன்பீசு அமைப்பின் உறுப்பினர்கள் 600 பேர் உலக வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வுக்காக ஆல்ப்சு மலையின் கொடும் குளிரில் சிறிதும் ஆடையில்லாமல் நின்று உலகவெப்பமயமாதலுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தினர்.
2009-ஆம் ஆண்டில், பிரேசிலில் உள்ள யூனிபான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கெய்சி அருடா என்கிற பெண், குட்டைப் பாவாடை அணிந்து வந்ததற்காகப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதைக் கண்டித்து அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 250 பேர் ஆடையில்லாமலும் மிகக் குறைந்த ஆடையுடனும் வகுப்புக்கு வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.
2012-இல், உகாண்டா நாட்டின் அமுரு மாகாணத்தைச் சேர்ந்த பெண்கள், தமிழ்நாட்டு உழவர்களைப் போலவே உழவுத்தொழில் உரிமைக்காக அந்நாட்டு அரசை எதிர்த்து ஆடையில்லாமல் போராடினார்கள். தங்கள் வேளாண் நிலங்களைக் கைப்பற்றிச் சர்க்கரை ஆலைகளுக்குத் தாரை வார்க்க முயலும் அரசை எதிர்த்து அவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் 2015 ஏப்ரலில் மறுபடியும் ஒருமுறை நடத்தப்பட்டது.
இப்படி ஏராளமான நிகழ்வுகள் வரலாறு நெடுகிலும் பதிவாகியுள்ளன. மட்டுமல்லாமல், ஆடையில்லா ஆர்ப்பாட்டத்தையே தங்கள் போராட்ட வடிவமாகக் கொண்டு இயங்கும் பல இயக்கங்களே வெளிநாடுகளில் உண்டு. பெமன், அர்பனியூதிசுதா, ஆப்னல் எனப் பல.
எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், அம்மணம் என்பது போராட்ட ஆயுதங்களில் ஒன்றாகப் பல ஆண்டுகளாகவே உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்றுதான் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். பொது இடத்தில், பலர் பார்க்க ஆடையின்றி நிற்பது என்பது மானக்கேடான செயல்தான். ஆனால், எந்த ஒன்றுக்கும் இடம் - பொருள் - ஏவல் என்பவை உண்டு. அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது முதிர்ச்சியற்ற மனநிலை.
கொலை செய்வது குற்றம் என்பது பொதுவான உண்மை. ஆனால், அதையே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்தால் தவறில்லை என்பது சட்டம். அது போலத்தான், காதலியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவிழ்த்துப் போட்டுவிட்டு ஓடுவதற்கும், நியாயத்தைப் பெறுவதற்காக ஆடை துறந்து போராடுவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு! இதைத்தான் இடம் - பொருள் - ஏவல் என்பது.
அம்மணமாகப் போராடியவர்கள் என்னவோ தமிழர்கள்தாம். ஆனால், அவர்கள் தாங்களாக விரும்பியோ அல்லது தவறான எண்ணத்திலோ அம்மணப்படுத்திக் கொள்ளவில்லை. தங்கள் நாடு தங்களை எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பதை உலகிற்குக் காட்ட அவர்கள் அப்படி ஓர் எல்லைக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தச் செய்தி உலகெங்கும் பரவும்பொழுது, “இப்படி ஒரு போராட்டம் நடத்துகிற அளவுக்கா இந்தியா தன் மக்களை வைத்திருக்கிறது? இந்த அளவுக்குப் போராட்டம் நடத்தினால்தான் அந்த நாட்டு ஆட்சியாளர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியுமா?” என்று உலக மக்கள் நம் நாட்டையும் ஆட்சியாளர்களைத்தாம் தவறாகப் பேசுவார்களே ஒழிய, போராட்டம் நடத்துபவர்களை இல்லை. மாறாக, போராளிகள் மீது இரக்கப்படத்தான் செய்வார்கள். ஈகை, இரக்கம் போன்ற குணங்களைக் கொண்ட இயல்பான மனிதர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள்!
ஆடையிலாப் போராட்டங்களைப் பார்த்துப் பழகிப் போன நாடுகள் கூட, “இந்தியாவிலேயே இப்படிப்பட்ட போராட்டங்கள் நடக்கத் தொடங்கி விட்டனவா? மனித உடல் தொடர்பாக மிகவும் கட்டுப்பாடான மனப்பான்மை கொண்ட இந்தியர்களே இப்படி ஒரு போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்?” என்பதாகத்தான் இதைப் பற்றி நினைப்பார்கள்.
ஆக, எப்படிப் பார்த்தாலும், உழவர்களின் இந்த ஆடையில்லாப் போராட்டம் நாட்டுக்கும் ஆட்சியாளர்களுக்கும்தான் தலைக்குனிவே தவிர போராளிகளுக்கோ தமிழ்நாட்டுக்கோ தமிழர்களுக்கோ கிடையாது!
இவை மட்டுமல்லாமல் வேறு ஒரு வகைக் குற்றச்சாட்டும் இந்த வேளாண் போராளிகள் மீது தொடக்கம் முதலே சுமத்தப்பட்டு வருகிறது.
தலைநகரில் தமிழ் உழவர்கள் ~ பொதுநலப் போராட்டமா, தன்னல ஆர்ப்பாட்டமா?
“பணக்கார உழவர்கள் கூட வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யச் சொல்லிக் கேட்பது நியாயமா?” என ஒருபுறம் கங்கை அமரன் நீதி கேட்கிறார். இன்னொரு புறம் “இந்த உழவர் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் அய்யாக்கண்ணு ஆடி மகிழுந்து (Audi Car) வைத்திருக்கிறார்” என்கிறார் எச்.ராஜா. “வெறும் வேளாண் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்யச் சொல்லாமல் நதிநீர் இணைப்பையும் கோரிப் போராடினால் இவர்கள் ஒழுங்கானவர்கள் என நம்பலாம்” என்கிறது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அறிவு கெட்ட பிறவி ஒன்று.
இப்படி பா.ஜ.க., வகையறாவினர் தொடங்கி இந்தப் போராட்டம் பற்றி அனா ஆவன்னா கூடத் தெரியாமல் கருத்துச் சொல்ல மட்டும் கிளம்பி வந்து விடுகிற சமூக வலைத்தள வெண்ணெய்யர்கள் வரை அனைவருமே, “வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யச் சொல்லித்தான் இந்தப் போராட்டமே நடத்தப்படுகிறது” என்பது போலத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு பொய்யை உண்மையாக்கத் தலைகீழாய் நின்று தவிடு தின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை வேறு! இதோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் வெளியிட்ட அறிக்கையைக் கீழே இணைத்துள்ளேன், பாருங்கள்!
தில்லியில் போராடும் தமிழ்நாட்டு உழவர்களின் கோரிக்கைகள் |
பார்த்தீர்களா? தமிழ்நாடு பாலைக்காடாகாமல் தடுக்க வேண்டும், காவிரி வறள்வதைத் தடுக்க வேண்டும், எல்லா நதிகளையும் நீர்வழிச் சாலைகள் மூலம் இணைக்க வேண்டும், வேளாண் பொருட்களுக்கு ஆதாயகரமான விலை கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவெல்லாம் பட்டியலிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ‘வேளாண் கடன் தள்ளுபடி’ எங்கே இருக்கிறது என்று கவனித்தீர்களா? அச்சுப் பட்டியலிலேயே அஃது இல்லை! ஆம்! அறிக்கை அச்சடிக்கக் கொடுத்தபொழுது அதை மறந்து விட்டார்களோ என்னவோ! பின்னர், இரப்பர் முத்திரை மூலம் பட்டியலின் தொடக்கத்தில் தனியாக அச்சிட்டிருக்கிறார்கள்!
இதிலிருந்தே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உயர்ந்த நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். வேளாண் கடன் தள்ளுபடிதான் அவர்கள் போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கை என்பது உண்மையானால் அது பட்டியலிலிருந்து விடுபட்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக, உழவுத்தொழிலை மீட்பதும் குடிநீர், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதுமே அவர்களின் உள்ளத்தில் முதலிடம் பிடித்திருந்ததால்தான் தங்களுடைய முதன்மைக் கோரிக்கையையே அவர்கள் மறந்து போய்விட்டிருக்கிறார்கள்.
இப்படி, தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும் நிலையிலும் மொத்த சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் சிந்திக்கும் இவர்களைப் போய்த் தன்னலக்காரர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள் எனச் சொன்னால் அப்படிச் சொல்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை இதைப் படிக்கும் பொதுமக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!
(நான் கீற்று தளத்தில் ௧௬-௦௪-௨௦௧௭ அன்று எழுதியது)
⭐ ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா, ‘தில்லையகத்து கிரானிக்கிள்சு’ கீதா சகோ ஆகியோர் கீழே கூறியுள்ளதற்கேற்ப இந்தக் கருத்து தவறென உணர்ந்து நீக்கப்படுகிறது!
தகவல்கள்: நன்றி ஆங்கில – தமிழ் விக்கிப்பீடியா, கோரா, விகடன், நியூசு எக்சு, தி அஃபிங்டன் போசுடு, கிரீன்பீசு, ஆல்டர்நெட்டு.
படம்: நன்றி தினமணி, கோரா, திபெத் டைம்சு, கிரீன்பீசு, பேலியோ புகழ் நியாண்டர் செல்வன்.
தொடர்புடைய பதிவுகள்:
✎ நெடுவாசல்! – ஒரு திட்டம் ஓராயிரம் பொய்கள்!
✎ இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?
இதிலிருந்தே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உயர்ந்த நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். வேளாண் கடன் தள்ளுபடிதான் அவர்கள் போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கை என்பது உண்மையானால் அது பட்டியலிலிருந்து விடுபட்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக, உழவுத்தொழிலை மீட்பதும் குடிநீர், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதுமே அவர்களின் உள்ளத்தில் முதலிடம் பிடித்திருந்ததால்தான் தங்களுடைய முதன்மைக் கோரிக்கையையே அவர்கள் மறந்து போய்விட்டிருக்கிறார்கள்.
இப்படி, தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும் நிலையிலும் மொத்த சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் சிந்திக்கும் இவர்களைப் போய்த் தன்னலக்காரர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள் எனச் சொன்னால் அப்படிச் சொல்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை இதைப் படிக்கும் பொதுமக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!
⭐ ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா, ‘தில்லையகத்து கிரானிக்கிள்சு’ கீதா சகோ ஆகியோர் கீழே கூறியுள்ளதற்கேற்ப இந்தக் கருத்து தவறென உணர்ந்து நீக்கப்படுகிறது!
❀ ❀ ❀ ❀ ❀
தகவல்கள்: நன்றி ஆங்கில – தமிழ் விக்கிப்பீடியா, கோரா, விகடன், நியூசு எக்சு, தி அஃபிங்டன் போசுடு, கிரீன்பீசு, ஆல்டர்நெட்டு.
படம்: நன்றி தினமணி, கோரா, திபெத் டைம்சு, கிரீன்பீசு, பேலியோ புகழ் நியாண்டர் செல்வன்.
தொடர்புடைய பதிவுகள்:
✎ நெடுவாசல்! – ஒரு திட்டம் ஓராயிரம் பொய்கள்!
✎ இந்தியா எனும் முதலாளி கண்டெடுத்த பலியாடா விவசாயி?
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
தற்போதைய நிலை குறித்து, ஒவ்வொரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கட்டுரை... நன்றி...
பதிலளிநீக்குமுதல் ஆளாக வந்து கருத்திட்ட உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குதமிழில் இது போன்று நாட்டு நடப்புகள் குறித்த, சான்றாவணங்களுடன் கூடிய கட்டுரை மென்மேலும் எழுதப்பட வேண்டும்.
தமிழகம், இந்தியம் உலகம் என விரித்து, இவ்வகைப் போராட்டங்கள் குறித்து விரித்துச் சென்றவிதம் அருமை. தமிழகப் போராட்டம், கனடியப் பிரதமரின் செயல்பாடு குறித்த செய்திகள் தவிர ஏனைய செய்திகளைத் தங்களின் பதிவினூடாகத்தான் அறிந்தேன்.
அரசனை வாழ்த்தச்சென்ற அவையில், அவ்வை, “ வரப்புயர ” என்று சொல்லி வாழத்தினாளாம். அப்பாடல், இறுதியில் கோனுயர்வான் என்று முடியும்.
நாட்டின் உண்மையான வளம் எதனைச் சார்ந்து இருக்கிறது என்ற அறிவற்ற, உழவை, உழவரை இழிவாக எண்ணுகின்ற அரசியலாளர் ( ஒருபால் சமூகத்தினரும் ) இருக்க, இது போன்ற எத்தனை கவனம் ஈர்க்கும் போராட்டங்கள் நடைபெற்றாலும் பயன் விளையுமா?
இங்குத் தமிழகத்திலும், தன்னலனே பார்க்கின்ற அரசு!
இந்நிலையில், சமூகத்திற்கு இந்தப் போராட்டம், யாருக்காக என்றும் எதற்காக என்றும் விளங்கச் செய்கின்ற இதுபோன்ற கட்டுரைகள் தமிழுக்கு வரம்.
கண்ணுள்ளவர்கள் காணட்டும்!
““இந்து சமயத்துக்கு எதிராக எழுந்த சமண சமயம் ஆடை துறப்புச் சமயமாக உருவெடுத்தது கூட ஒரு வகையில் எதிர்ப்புணர்வின் குறியீடுதானோ எனத் தோன்றுகிறது.””
என்னும் தங்களின் தோன்றலோடு எனக்கு மாற்றுக் கருத்துண்டு.
இந்து என்னும் சமயம், ( சைவம்/வைணவம் ) தோற்றம் பெறும் முன்னே, சமணம் இந்தியப் பெருநிலத்தில் வேரூன்றி விட்டது. அவர்களின் இந்( நிர்வாண ) நெறியும்.
வைதிக(இந்து) சமயங்களே, சமணர் போன்றோரின் கொள்கைகள் பலவற்றைத் (தெய்வங்கள் உட்பட) தமதாக்கித் தழுவிக்கொண்டோர்.
சைவத்திலும் இதுபோன்ற ஆடைதுறந்து வாழும் பிரிவினர் உண்டு.
நிர்வாணம், அல்லது அம்மணம் என்ற சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொல் இருக்கிறது.
அது, உரிகூறை என்பது.
திருவாய்மொழி ஈடின் உரையாசிரியர் காட்டும் சொல்லாட்சி இது.
ஆடையின்மை என்பதைவிட, ஆடைஉரிதல் அல்லது ஆடைதுறத்தல் என்பதனோடு பொருந்தும் நற்றமிழ் சொல்லாட்சி இதனைக் காண்கிறேன்.
தமிழுக்கு இதுபோன்ற கட்டுரைகள்தான் தற்பொழுதைய தேவை.
தொடர்கிறேன்.
நன்றி.
ஆகா! ஆகா! எவ்வளவு தகவல் நிறைந்த கருத்துரை! மிக்க நன்றி ஐயா!
நீக்குமுதலில், கட்டுரையைப் பற்றி நீங்கள் அளித்திருந்த விரிவான பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்! அதே நேரம், இதைத் தமிழுக்கு வரம் எனவெல்லாம் தாங்கள் கூறுவது மிகவும் மிகையானது என்பதே சிறியேன் கருத்து.
அடுத்ததாக, சமணம், ஆசீவகம் ஆகியவை இந்து சமயத்தை விடக் காலத்தால் மூத்தவை என்று தங்கள் வலைப்பூவில் படித்ததாக நினைவு. ஆனால், விக்கிப்பீடியா போன்றவற்றில் இந்து சமயம்தான் மூத்தது போலக் காட்டப்பட்டிருக்கிறது; மேலும், இந்து சமயத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகள், மூடநம்பிக்கைகள் மிகுந்த போக்கு ஆகியவற்றுக்கு எதிராகத்தான் சமணம், பௌத்தம் ஆகியவை தோன்றியதாகச் சிறு வயதிலிருந்து பல நூல்களில் படித்திருக்கிறேன். மேற்கண்ட கருத்தை எழுதும் முன் இவை அனைத்தையும் சிந்தித்தேன். உங்கள் வலைப்பூவைத் தவிர வேறெங்கும் சமணம் மூத்தது எனப் படித்த நினைவு இல்லாததாலும், உங்கள் தளத்தில் எந்தப் பதிவில் தாங்கள் அப்படிக் குறிப்பிட்டீர்கள் என்பது தெரியாததாலும் ஒருவேளை தாங்கள் வேறு ஏதோ பொருளில் கூறியதை நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேன் போல என்று நினைத்து மேற்படி கருத்தை எழுதி விட்டேன் ஐயா! பொறுத்தருள வேண்டும்! விரைவில் இது குறித்து நான் தங்களுடன் பேசித் தெளிவு பெற விரும்புகிறேன்!
நிர்வாணம் தமிழ்ச் சொல் இல்லை என்பதை அறிவேன். ஆனால், அம்மணம் தமிழ்தானா இல்லையா என்பது தெரியாமல் இருந்தது. இன்று உங்கள் கருத்துரையில் தாங்கள் தெரிவித்த கருத்து மூலம் அதுவும் தெளிவானது. உரிகூறை - இதுவரை கேள்விப்படாத சொல்! மிக்க நன்றி ஐயா! தங்கள் செறிவார்ந்த கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்குஅருமையான எண்ணங்கள்
சிறப்புக் கண்ணோட்டம்
சிந்திக்க வேண்டிய செய்தி
மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவு கண்டு மிக்க மகிழ்ச்சி!
நீக்குவழக்கம் போல நல்ல விரிவான தகவல்கள் அடங்கிய எல்லோரும் அறிய வேண்டியக் கட்டுரை. ஆழமானதும் கூட. இரு கருத்துகளை முன்வைக்க நினைத்திருந்தேன். ஒன்று ஔவையின் பாடல். வேளாண்மை பற்றி வாசிக்க நேரிடும் போதெல்லாம் இப்பாடல்தான் நினைவுக்கு வரும் என்பதால் அதைச் சொல்லுவது வழக்கமாகிவிட்டது. அதை விஜு சகோ அவர்கள் அழகாகக் குறிப்பிட்டுவிட்டார். நான் சொல்ல நினைத்ததை அவர் மிகவும் அழகாகக் குறிப்பிட்டுவிட்டார்.
பதிலளிநீக்குஇரண்டாவது கருத்து சமணத்தின் பல கொள்கைகளைத் தழுவியதுதான் இந்துமதமோ என்று எனக்குத் தோன்றியதை நான் வாசித்த தமிழர் வரலாறு, பண்பாடு பற்றி வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்து அறிந்த நினைவு...அதோடு நம் விஜு சகோ அவர்களும் தனது தளத்தில் பதிந்திருந்தார். நான் அப்புத்தகத்தை வாசித்ததும் எனது தளத்தில் அதைப் பற்றி எழுதியிருந்தேன் குறிப்பாக மது அருந்துதல் பற்றி அப்போதும் விஜு சகோ அவர்கள் பின்னூட்டக் கருத்தில் சொல்லியிருந்ததும் நினைவுக்கு வந்தது. அவர் இங்கு அதையும் அழகாகக் குறிப்பிட்டுவிட்டார். எனவே அவரைவிட நான் என்ன சொல்லிவிடமுடியும்!!! நீங்களும் இதைப் பற்றி இன்னும் விளக்கமாக அறிந்ததும் எழுதுங்கள். மாற்றுக் கருத்துகள் உருவாகும் போதுதான் நாம் கற்றுக் கொள்ளவும் மேலும் அறிந்து கொள்ளவும் முடிகிறது.
இப்போது புதிய தமிழ்ச்சொல் கற்றுக் கொண்டாயிற்று உரிகூறை! அதற்கும் தங்களுக்கு மிக்க நன்றி. விஜு சகோ அவர்களுக்கும் மிக்க நன்றி. அவரது கருத்துகள் எப்போதும் புதுத் தகவல்கள் அடங்கியதாகவே இருக்கும். நமக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்லிச் செல்லும். ஆகச் சிறந்த ஆசிரியர்!!!!
வேறு என்ன சொல்ல? இந்தியாவின் பொருளாதாரமே அதன் ஆணிவேரான, முதுகெலும்பான விவசாயம் தான். அதை நம் ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாத போது எனன்வென்று சொல்ல? வேதனைதான் மேலிடுகிறது. நாற்காலிகளுக்குச் சுற்றி வரும் கட்சிகள் இருக்கும் வரை நாற்று நடுதலுக்கு கவனம் கிடைக்கப் பெறுமா என்ன? என்னவோ போங்கள். நீங்கள் பதிந்துவிட்டீர்கள்.
கீதா
விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோ!
நீக்குஔவையாரின் "வரப்புயர நீர் உயரும்" பாடலை உங்களுக்கு முன்பே விஜு ஐயா குறிப்பிட்டு விட்டாலும் நீங்களும் அதை வழிமொழிந்திருப்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன்! மகிழ்ச்சிதானே?
ஆனால், ஔவையார் காலத்தில் கோன் உயர வரப்பு உயர வேண்டியது இன்றியமையாததாக இருந்தது. ஆனால், அறிவியலும் தொழில்நுட்பமும் பெருகி விட்ட இக்காலத்தில் வரப்புயர்ந்தோ குடி உயர்ந்தோதான் கோன் உயர வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. வரப்பும் நீரும் நெல்லும் குடியும் நாடும் எதுவும் எப்படியும் பாழாகிப் போனாலும் தாங்கள் மட்டும் உயர நம் (கொடுங்)கோன்கள் வழி கண்டுபிடித்து விட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை, இன்று வரப்பையும் வயலையும் காட்டையும் கழனியையும் தனியார் நிறுவனங்களுக்கு விற்று அதில் வருகிற ஆதாயத்தை அடைவதுதான் அவர்களை உயர்த்திக் கொள்ளும் சிறந்த வழிமுறை. ஆகவே, இனி எத்தனை ஔவையார்கள் வந்து வாழ்த்தினாலும் இயற்கையே இசைந்து கொடுத்தாலும் இந்தியாவில் இனி இந்த ஆட்சியாளர்கள் வரப்பையோ நீரையோ நெல்லையோ குடியையோ உயர விடப் போவதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தாம் நம் மக்கள் கட்டியிருக்கும் கோவணத்தையும் அவிழ்த்து வீசும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சமணம் பற்றிய என் கருத்தின் பிழையை நீங்களும் சுட்டிக் காட்டியிருப்பது புரிகிறது. விஜு ஐயா சொன்னவுடனேயே அந்தக் கருத்தை அடித்து விட எண்ணினேன். ஆனால், எதற்கும் ஒருமுறை அவரிடம் பேசி விட்டுச் செய்யலாம் என்று நினைத்தேன். நேரமே கிடைக்கவில்லை. விரைவில் செய்து விடுகிறேன்.
பார்ப்போம்! காலச் சக்கரத்தை யாராலும் நிறுத்த இயலாது. மீண்டும் உழவோர் பின்னால் உலகோர் தொழுவோராய்ச் செல்லும் காலம் வராமல் போகாது! காத்திருப்போம்!
நண்பருக்கு வணக்கம்
பதிலளிநீக்குபொதுநல சிந்தனையோடு அனைவருக்கும் பயன்தரக்கூடிய, அறிந்து கொள்ள வேண்டிய விடயத்தை ஆதாரங்களோடு பகிர்ந்தமைக்கு முதற்கண் நன்றி.
அம்மணம் குறித்து சொன்ன இடம் - பொருள் உவமைக்கு திரைப்படத்தின் காட்சியை கையில் எடுத்தது நல்லதொரு நகைச்சுவை.
மேலும் எல்லோருமே காலம் காலமாக அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதை தவிர்க்க வேண்டும் மனிதம் மரித்து விட்ட இக்காலத்தில் அவர்களிடம் மனிதாபிமானம் காண நினைப்பது தவறே...
நான் தொடக்கத்தை காண்கிறேன் ஆம் மக்கள் அனைவருமே கொம்பை விட்டு, விட்டு வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம் மக்கள் இன்னும் தெளிவான அரசியல் விழிப்புணர்வுக்கு வரவில்லை மாறும் என்றே நம்புவோம்.
செல்லில் டைப்புவதால் விரிவாக கருத்துரை தர இயலாமைக்கு வருந்துகிறேன்.
த.ம.2
தாங்கள் இப்பொழுது அளித்திருப்பதே நல்ல கருத்துரைதான் நண்பரே! நன்றி!
பதிலளிநீக்கு//அம்மணம் குறித்து சொன்ன இடம் - பொருள் உவமைக்கு திரைப்படத்தின் காட்சியை கையில் எடுத்தது நல்லதொரு நகைச்சுவை// - ஹாஹ்ஹா! ஆனால், உண்மையில் நான் அதைத் தீவிரமாகத்தான் (serious) சொன்னேன் நண்பரே!
//எல்லோருமே காலம் காலமாக அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதை தவிர்க்க வேண்டும் மனிதம் மரித்து விட்ட இக்காலத்தில் அவர்களிடம் மனிதாபிமானம் காண நினைப்பது தவறே// - அப்படியெல்லாம் மனிதம் ஒன்றும் பெரிதாக மரித்து விட்டதாய்த் தோன்றவில்லை நண்பரே! நிறைய நல்லவர்கள் அன்றாட வாழ்வில் காணக் கிடைக்கவே செய்கிறார்கள். அப்படியே ஒருவேளை மனிதம் மரித்திருந்தாலும், அதற்குக் காரணமும் அரசியல்வாதிகளைப் பார்த்துக் கெட்டுப் போனதுதானே?!
//ஆம் மக்கள் அனைவருமே கொம்பை விட்டு, விட்டு வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுகிறோம்// - நன்றாகச் சொன்னீர்கள்! நம் மக்கள் வாக்களிக்கும் அழகே இதை உறுதிப்படுத்துகிறதே!
நம்புவோம்! மாற்றம் வரும்!