"அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! இனிய குழந்தைகளே!" என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குறள் தமிழ் வளர்த்த கனித் தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைந்தார்!
சனி, செப்டம்பர் 12, 2026
'திருக்குறள் அறிஞர்' சாலமன் பாப்பையா அவர்களுக்குப் புகழஞ்சலி
சனி, ஜூன் 27, 2026
திரைக்கதை மன்னனுக்குப் புகழஞ்சலி!
கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் என 'நாலும் தெரிந்த' ஒருவரை இன்று இழந்திருக்கிறோம்!😭
பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1️⃣ ஒன்று, நாயகரை (protagonist) மையமாகக் கொண்ட படம்.
2️⃣ அடுத்தது, கதையை மையமாகக் கொண்ட படம்.
தொண்ணூறுகளில் பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் ஒருபுறம் கதையை மையமாகக் கொண்ட படங்களைப் படைத்து வந்தனர். மறுபுறம் ரஜினி, கமல், விஜயசாந்தி போன்றோரை வைத்து நாயகரை மையமாகக் கொண்ட படங்களும் வந்து கொண்டிருந்தன.
ஆனால் இந்த இரண்டு வகைக்கும் நடுவில், கதை - நாயகர் இரண்டுக்கும் சரிசம முக்கியம் கொடுத்துப் புதுமையான வகையில் படங்களை வழங்கியவர் பாக்யராஜ்.
அவர் படங்களிலும் நாயகன் சண்டை போடுவான், எதிரிகளை அடித்து நொறுக்குவான். ஆனால் படத்தில் அவன் பெறும் இறுதி வெற்றி, உடல்வலிமையால் பெற்றதாக இருக்காது. அவனுடைய அறிவுக்கூர்மையாலோ ஈக (sacrifice) மனப்பான்மையாலோ பெற்றதாகத்தான் இருக்கும்.
எடுத்துக்காட்டாக, 'ஆராரோ ஆரிரரோ', 'ராசுக்குட்டி' ஆகிய படங்களைச் சொல்லலாம்.
பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான எனக்கு, "நாயகன் என்பவன் நாலு பேரை அடித்துத் துவைப்பவன் இல்லை. நாலும் தெரிந்த அறிவாளிதான் உண்மையான நாயகன்" எனத் திரும்பத் திரும்பச் சொன்ன இவரது படங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
தமிழ்த் திரைப்பட நாயகன் என்றாலே பக்கம் பக்கமாக உரையாடல் பேச வேண்டும் என்றிருந்த காலத்தில், பேச முடியாத மாற்றுத்திறனாளியை நாயகனாக்கி, 'ஒரு கை ஓசை' என்று படம் கொடுத்தவர் கதையாசிரியர் பாக்யராஜ். 90-களில் வெளியான ஈகமே உருவான காதல் நாயகர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடி ஒரு கை ஓசையின் நாயகன் சின்னப் பண்ணைதான். பாக்யராஜ் என்பவர் எப்பேர்ப்பட்ட உலகத்தரமான கதைசொல்லி என்பதைக் காட்டும் படைப்பு இது. (விரும்புவோர் பாருங்கள் இங்கே - https://youtu.be/0F9ErB74lik?si=caNb7sIpcoMM41uy)
இன்றைய செய்மதி (AI) உலகில் யாரை வைத்து வேண்டுமானாலும் நாம் படமெடுத்துவிட முடியும். ஆனால் போதுமான கணினித் தொழில்நுட்பம் கூடப் பிறக்காத 1990-இலேயே, இறந்து போன எம்ஞ்சியாரை மீண்டும் திரையில் உலவ விட்டவர் திரைக்கதையாசிரியர் பாக்யராஜ்!
1977-இல் ஶ்ரீதர் இயக்கத்தில் எம்ஞ்சியார் நடித்து, திரைக்கு வராமல் போன 'அண்ணா நீ என் தெய்வம்' படத்தின் படச்சுருளைப் பயன்படுத்தி, அந்தக் காட்சிகளுக்கு ஏற்றவாறு ஒரு திரைக்கதையை எழுதி அசத்தலான ஒரு முழுப்படத்தையே உருவாக்கிக் காட்டிய சூராதி சூர எழுத்தாளர் இவர்! அதனால்தான் 'திரைக்கதை மன்னன்' என இவரைப் புகழ்கிறோம்.
'தாவணிக் கனவுகள்' படத்தின் ஒரு காட்சியில், ஒரு திரைப்படத்தின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும் எனப் பாடமே எடுத்திருப்பார் உரையாடலாசிரியர் பாக்யராஜ்!
'எங்க சின்ன ராசா' படத்தில், நாயகன் சின்னராசைச் சிறுவனாயிருக்கும் பொழுதிலிருந்தே அவன் சித்தி தவறாக வழிநடத்திக் கொஞ்சம் கொஞ்சமாகத் தனக்கு அடிமையாக்கிக் கொள்வதை அந்த ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் பானை வனையும் காட்சியோடு ஒப்பிட்டுக் காட்டிக் கொண்டே வருவார் இயக்குநர் பாக்யராஜ். கடைசியில், சித்தி சொல்லாமலே அவள் விருப்பம் அறிந்து, பாம்பைத் தன் கையில் பிடித்து வருவான் சின்னராசு. உடனே, பானை முழுவதுமாய் உருவாக்கப்பட்டு விட்டதாகக் காட்சியமைத்து 'இயக்குநர் முத்திரை' (Directorial touch) என்றால் என்ன என்பதைக் காட்டியிருப்பார்!
இப்படித் திரைத்துறையில் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் என நான்கிலும் முத்திரை பதித்ததோடு மட்டுமின்றி பாக்யராஜ் அவர்கள் 'முந்தானை முடிச்சு' படத்துக்காக 1983-இல் பிலிம்பேர் விருது பெற்ற சிறந்த நடிகரும் கூட.
மேலும், 'பாக்யா' வார இதழை நிறுவி, நடத்தி இதழாளராகவும் திகழ்ந்தார். வாரந்தோறும் 'பாக்யா பதில்கள்' எனும் பகுதியில் நேயர்கள் கேள்விக்கு அவர் அளிக்கும் விடைகள் புகழ் பெற்றவை. இரண்டு வரிக் கேள்விக்கு ஒரு குட்டிக் கதையே சொல்லி விடை தருவார். இந்த விடைகள் பின்னர் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாகவும் வெளியாயின.
அறிவியல் செய்திகள், அயல்நாட்டில் நடக்கும் விந்தை நிகழ்வுகள் ஆகியவை பற்றிய இரண்டு தொடர்கள் பாக்யா இதழில் எப்பொழுதும் இடம்பெறும். என் மாமா மணிவண்ணன் அவர்கள் அந்த இரு தொடர்களுக்காகவே சில காலம் எனக்குத் தொடர்ந்து பாக்யா வாங்கித் தந்து கொண்டிருந்தார். பின்னாளில் அந்தத் தொடர்களைக் கிழித்து, ஒரு சிறு புத்தகமாக்கினேன். இப்பொழுதும் அது என் சேமிப்பில் இருப்பதை ஆற்றாமையோடு இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்😢
தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் அமிதாப்பச்சனை இயக்கித் தமிழன் திறமையை வடக்கன்களுக்கு அன்றே எடுத்துக்காட்டினார்.
இப்படி பாக்யராஜ் தான் தொட்ட அனைத்திலும் வெற்றிக்கொடி நாட்டியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட எனக்கு அவரிடத்தில் பிடித்தது அவருடைய மனிதநேயமும் சமுகச் சிந்தனையும்தான்.
மறுமணம் என்பது பெரிய அறைகூவலாக இருப்பதை 'நூறு சாமி' போன்ற படங்கள் மூலம் இன்றைக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிற சமுகம் இது. ஆனால் 1989-இலேயே 'ஆராரோ ஆரிரரோ' படத்தின் மூலம், பாலியல் கொடுமைக்கு ஆளாகிக் கருவுற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் இளைஞனை நாயகனாக்கியவர் பாக்யராஜ்.
அதிலும் இறுதிக்காட்சியில் குழந்தை இறந்துவிட்டதாக அனைவரும் நினைக்கும்படி ஒரு காட்சி வைத்திருப்பார். படம் பார்ப்பவர்கள், "என்ன இருந்தாலும், இப்படிப்பட்ட பெண்ணை வேண்டுமானால் ஒருவன் திருமணம் செய்து கொண்டு வாழலாம். அவளுக்குப் பிறந்த குழந்தையை அவன் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முடிவு சரிதான்" என ஒரு நிமையம் நினைப்போம். ஆனால் அடுத்த நிமையமே மறைக்கப்பட்ட குழந்தை உயிரோடு நலமாகத் திரும்பக் கிடைக்கும். அந்தப் பெண்ணோடு குழந்தையையும் முழு அன்புடன் நாயகன் ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான முடிவு.
"கொஞ்ச நேரம் உங்க புத்தி எப்படிப் போச்சு பார்த்தீங்கள்ல? ஏன், அந்தக் குழந்தையையும் அவன் வளர்க்க முடியாதா? இன்னொருத்தனுக்குப் பொறந்த குழந்தைய வேறொருத்தர் அப்பாவா இருந்து வளர்க்கறதுல என்ன தப்பு?" எனக் கேட்காமல் கேட்கும் விதமாய் அவர் வைத்த அந்தத் திருப்பமில்லாத திருப்பம் சமுகத்தின் பொதுப்புத்திக்கு பாக்யராஜ் எனும் படைப்பாளி வலிக்காமல் வலித்த சூடு!
தான் எடுத்த படம், நடித்த படம் எனப் பலவற்றில் பார்ப்பனியத்துக்கு ஒத்து ஊதும் காட்சிகளையும் பிற்போக்குக் கருத்துக்களையும் காட்சிப்படுத்தியவர்தாம் பாக்யராஜ் என்றாலும் அவருடைய பல படங்களில் மேலே சொன்னது போல் பல சமுக அக்கறை மிக்க, சாதியத்துக்கு எதிரான, முற்போக்கான பல காட்சிகளையும் பார்க்க முடியும்.
🔥 'இது நம்ம ஆளு' படத்தில் "சிவன் மனைவி பார்வதி ஒரு தாழ்த்தப்பட்ட பெண்" என வெளிப்படையாகவே வைத்த உரையாடல்...
🔥 'ஒரு கை ஓசை' படத்தில் இரட்டைக் குவளை முறையைச் சாடி வைத்த காட்சி...
🔥 'வேட்டிய மடிச்சுக் கட்டு' படத்தில் "ஈழத் தமிழர்களும் வாழப் பிறந்தவர்கள் ஐ.நா., சபையில் இதைக் கூறு" என்று வைத்த பாட்டு...
- போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.
அவருடைய படங்கள், கதைமாந்தர் வடிவமைப்பு, எழுத்தாற்றல் பற்றி எழுதிக் கொண்டே போனால் இந்தப் பதிவு இன்றைக்கு முடியாது. இருந்தாலும் இத்தோடு நிறைவு செய்கிறேன் வருத்தத்துடன்!🙏🏽
புதன், ஜூன் 10, 2026
இயக்குநர் இமயத்துக்குப் புகழஞ்சலி!
சிற்பிகளையே படைத்த
அற்புதனே!
ஏ.வி.எம்., விசயா வாகினி என
படப்பிடிப்புக் கூடங்களுக்குள்
சிறைப்பட்டுக் கிடந்த திரைமொழியை
விடுதலை செய்ய வந்த
தமிழ்மகனே!
உலகத் திரைப்படங்களைப் பார்த்து
தமிழில் சூடுபோட்டுக் கொண்ட
இயக்குநர்களின் மத்தியில்
தமிழ் நிலத்தின் கதைகளை
உலகத் தரத்தில் சொன்ன
மண்வாசனைப் படைப்பாளியே!
உன் இனிய தமிழ் மக்களுக்கு
🙏🏽வணக்கம் கூடச் சொல்லாமல்
எங்கு சென்றாய்?😭
நீ
அடித்து அழ வைத்தவர்களெல்லாம்
இன்று
நடிக்காமலே அழுது கொண்டிருக்கிறார்கள்!
எப்பொழுது கேட்கும்
அந்தக் கரகரத்த குரலில் ஒரு
“கட், டேக் ஓகே”?
கல்லுக்குள் ஈரம் கண்டவனே
பதினாறு வயதினிலே
முதல் மரியாதை
என உன்
காதல் ஓவியங்களை நீ
அயல்நாட்டில் பிறந்து
ஆலிவுட்டில் தீட்டியிருந்தால்
உலகெங்கும்
கொடி பறந்திருக்கும்
உன் புகழ்!
வாசலில்
தவமிருந்திருக்கும்
ஆசுகார்!
மாறாக,
தீந்தமிழ் மண்ணில்
தேனியிலே பிறந்தாய்
தேனினும் இனிய
கலைத்தமிழ் சுரந்தாய்!
அது
நாங்கள் பெற்ற பேறு!
உனகென்றுமில்லை ஈறு!!
காதலும் பாசமும்
வீரமும் ஈகமும்
தமிழ் மண்ணில்
கமழும் வரைக்கும்
சப்பாணியும் மயிலும்
விருமாயியும் மாயாண்டியும்
பாலு தேவரும் சங்கரனும்
குயிலும் மலைச்சாமியும்
வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்
அவர்கள் வாழும் வரைக்கும்
உன் நினைவின்
அலைகள் ஓய்வதில்லை!🌊
புதன், ஏப்ரல் 01, 2026
வீட்டிலிருந்தே வாக்களிக்க வேண்டுமா? - மாற்றுத்திறனாளிகள், முதியோர் ஆகியோருக்கு முக்கிய அறிவிப்பு
வெள்ளி, பிப்ரவரி 13, 2026
பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பொய்யா? இதோ ஆதாரம் - 'தி இந்து' நாளிதழே, மன்னிப்புக் கேள்!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்பொழுது பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் 'பராசக்தி' படத்தில் காட்டியிருப்பது பொய் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் இந்தியப் படை அலுவலர் (Ex-Army officer) தேவசகாயம் (இணைப்பு - tinyurl.com/DevasagayamInterview)
தி இந்து நாளிதழில் கடந்த சனவரி 17 அன்று வெளியாகியிருக்கும் மேற்படி செவ்வியில் (interview) அவர் மேலும் கூறுகையில், "இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்வதும் பொய். போல்ட்-ஆக்சன் .303 ரைஃபிள் வகைத் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இறந்தோர் எண்ணிக்கை 10 மட்டுமே" என்கிறார்.
அப்படியானால் இது என்ன தோழர்களே?👇🏽
இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது 'பொள்ளாச்சிப் படுகொலை' எனக் குறிப்பிடப்படும் மேற்கண்ட கொடூர நிகழ்வு நடந்த மறுநாள் (13.02.1965) வெளியான தி இந்தியன் எக்சுபிரசு நாளேட்டின் முகப்புப் பக்கம். (இணைப்பு: tinyurl.com/Feb13-1965-IE)
இதில் "எளிய-இயந்திரத் துப்பாக்கிச் சூடு [Light machine gun (LMG) fire]" என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பாருங்கள்!
"அப்படியே இருந்தாலும் எண்ணிக்கை தவறுதானே? நீ காட்டும் இந்தியன் எக்சுபிரசு நாளேட்டிலேயே உயிரிழந்தோர் 10 பேர் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவசகாயமும் அதே எண்ணிக்கையைத்தானே கூறுகிறார்? அப்படியானால் அவர் சொல்வது சரிதானே?" என்று நீங்கள் கேட்கலாம்.
இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டால் வெறும் 10 பேர் மீதுதானா படும்? இதை நான் கேட்கவில்லை, அதே செவ்வியில் தேவசகாயமே சொல்கிறார்.
"நாங்கள் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால் சில பல நூறு சுற்றுகள் சுடக்கூடிய அவை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றிருக்கும்" என்கிறார்.
இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மறுநாளே வெளியான செய்தித்தாள் மூலம் இப்பொழுது நமக்கு உறுதியாகிவிட்டதால் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டின் விளைவு பற்றி இவர் சொல்லும் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்திருக்கும் என்ற முடிவுக்குத்தானே நாம் வர வேண்டியிருக்கிறது? என்ன இருந்தாலும், இவ்வளவு பெரிய கலவரம் நடந்த மறுநாளே கொல்லப்பட்டோர் எண்ணிக்கை செய்தித்தாளில் சரியாக வரும் என நாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?
சரியாக இதே நாளில் 61 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நாளிதழ் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கிறது. உண்மை இப்படி வெட்டவெளியில் இருக்கும்பொழுது, இவை எதையுமே ஆராயாமல் முன்னாள் படைவீரர் என்பதற்காக, ஒருவர் சொன்னதை அப்படியே வெளியிட்டுப் பொய்த்தகவல் பரப்பிய தி இந்து நாளிதழ் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!
இப்படி விரல்நுனியில் அனைத்து விவரங்களும் கிடைக்கும் இந்தத் தகவல் ஊழியிலேயே (information era) இவன்கள் இப்படிப் பச்சைப் பொய்யை வாய்கூசாமல் சொல்கிறான்களே, இப்படி எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவன்கள் என்னென்ன பொய்களைச் சொல்லியிருப்பான்கள்? எப்பேர்ப்பட்ட உண்மைகளையெல்லாம் மூடி மறைத்திருப்பான்கள்?😡
அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தேவை இன்னும் பல 'பராசக்திகள்'! தீ பரவட்டும்!🔥
படம்: நன்றி தி இந்தியன் எக்சுபிரசு, கூகுள் புக்சு.
புதன், ஜனவரி 14, 2026
ஞாயிறு, ஜனவரி 11, 2026
எப்படிப் பெரும்பான்மை மொழியானது இந்தி? - ஒரு வெட்கங்கெட்ட வரலாறு! | காணொளி
வெள்ளி, ஜனவரி 02, 2026
திருத்தணி சிராஜ் தாக்குதல்! - திரைப்படங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா?
திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளர் சிராஜ் தாக்கப்பட்ட வேதனையில் வெளியிடும் காணொளி! 😟😢
திரைப்படங்களைக் குற்றம் சாட்டுவது என் நோக்கமில்லை. உண்மையில் திரைப்படங்கள் மீதான நம்பிக்கைதான் இப்படி ஒரு காணொளியை வெளியிட என்னைத் தூண்டியது.
நான் சொல்லியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்!

















