.
புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புனைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 10, 2026

இயக்குநர் இமயத்துக்குப் புகழஞ்சலி!


சிலைகளை வடிக்கும் சிற்பிகளுக்கிடையில்
சிற்பிகளையே படைத்த
அற்புதனே!

ஏ.வி.எம்., விசயா வாகினி என
படப்பிடிப்புக் கூடங்களுக்குள்
சிறைப்பட்டுக் கிடந்த திரைமொழியை
விடுதலை செய்ய வந்த
தமிழ்மகனே!

உலகத் திரைப்படங்களைப் பார்த்து
தமிழில் சூடுபோட்டுக் கொண்ட
இயக்குநர்களின் மத்தியில்
தமிழ் நிலத்தின் கதைகளை
உலகத் தரத்தில் சொன்ன
மண்வாசனைப் படைப்பாளியே!

உன் இனிய தமிழ் மக்களுக்கு
🙏🏽வணக்கம் கூடச் சொல்லாமல்
எங்கு சென்றாய்?😭

நீ
அடித்து அழ வைத்தவர்களெல்லாம்
இன்று
நடிக்காமலே அழுது கொண்டிருக்கிறார்கள்!
எப்பொழுது கேட்கும்
அந்தக் கரகரத்த குரலில் ஒரு
“கட், டேக் ஓகே”?

கல்லுக்குள் ஈரம் கண்டவனே
பதினாறு வயதினிலே
முதல் மரியாதை
என உன்
காதல் ஓவியங்களை நீ
அயல்நாட்டில் பிறந்து
ஆலிவுட்டில் தீட்டியிருந்தால்
உலகெங்கும்
கொடி பறந்திருக்கும்
உன் புகழ்!
வாசலில்
தவமிருந்திருக்கும்
ஆசுகார்!

மாறாக,
தீந்தமிழ் மண்ணில்
தேனியிலே பிறந்தாய்
தேனினும் இனிய
கலைத்தமிழ் சுரந்தாய்!
அது
நாங்கள் பெற்ற பேறு!
உனகென்றுமில்லை ஈறு!!

காதலும் பாசமும்
வீரமும் ஈகமும்
தமிழ் மண்ணில்
கமழும் வரைக்கும்
சப்பாணியும் மயிலும்
விருமாயியும் மாயாண்டியும்
பாலு தேவரும் சங்கரனும்
குயிலும் மலைச்சாமியும்
வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்
அவர்கள் வாழும் வரைக்கும்
உன் நினைவின்
அலைகள் ஓய்வதில்லை!🌊

சனி, அக்டோபர் 11, 2025

வானத்தின் சொத்து | சிறுகதை

Vaanathin Sothu

உறவு தந்த கண்ணீரோடு காலம் வகுத்த பாதையில் போய்க் கொண்டிருக்கிறேன். இருங்கள்! சாலையோரத்தில் ஏதோ மின்னுகிறதே? நெருங்கி, குனிந்து கையில் எடுத்துப் பார்த்தால்... ஓ! இது... இது... ஒரு விண்மீன்!!!

எப்படிக் கீழே விழுந்தது?! அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். முட்டாள் நான்! உதிர்ந்த தடம் தெரியுமா என்ன?

கையிலிருந்த விண்மீனை மறுபடியும் பார்த்தேன். ஆறு கரங்களோடு ஒளிப்பிழம்பாய்த் தகதகத்தது! அதன் மேலே ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்து ஊதினேன். பளிச்சென இரு விழிகள் திறந்தன. மிரண்டு போனேன்!

எப்படிக் கீழே விழுந்தாய்? அதனிடமே கேட்டேன். சோகமாக என்னையே பார்த்தது. வாய் ஏதும் இல்லை. எப்படி மறுமொழி சொல்ல முடியும்!

அக்கம் பக்கம் பார்த்தேன். யாருமில்லை. சட்டைப்பையில் போட்டுக் கொண்டு, திரும்பி வீடு நோக்கி நடந்தேன்; ஒரு முடிவோடு.

நுழைவாயில் இரும்புக்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். வீட்டுக்குள்ளே போன பின் தலையை மட்டும் வெளியே நீட்டிச் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஈ காக்கை இல்லை. கதவைச் சாத்தி இரண்டு தாழ்ப்பாள்களையும் போட்டேன்.

வலப்பக்கம் பார்த்தேன். மகள் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவர்க்கடிகாரத்தில் மணி ஒன்று. இன்னும் தூங்காமல் என்ன செய்கிறாள்? கேட்க வந்ததைக் கட்டுப்படுத்திக் கொண்டு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டேன்.

சட்டைப்பையிலிருந்து அதை வெளியே எடுத்தேன். அறை முழுவதும் விளக்கே இல்லாமல் ஒளிர்ந்தது. சட்டைப்பையில் இருந்தபொழுது வெளிச்சம் தெரியவில்லையே? நாம் ஒளித்து வைப்பதை உணர்ந்து தன்னைத் தானே அணைத்துக் கொள்கிறதோ!

எங்கே வைப்பது இதை? சுவரில் மாட்டலாம் என்றால் துளையிட வேண்டும். மேசையில் வைக்கலாம் என்றால்... சேச்சே! சரி வராது. சிந்தித்தபடி நாற்காலியில் அமர்ந்தேன். கூரைச் சுவர் முழுக்கப் பரவிக் கிடந்த செயற்கை வானம் தென்பட்டது. இணையத்தில் வாங்கிய மாபெரும் சுவரொட்டி (wallpaper).

நாற்காலியை அறையின் நடுப்பகுதிக்கு எடுத்துப் போட்டு, முட்டியில் கையூன்றியபடி கடினப்பட்டு மேலேறி, நுனி விரல்களில் நின்றபடி படாதபாடுபட்டு உடலைச் சமன் செய்து, எப்படியோ எட்டி உயர்ந்து ஒட்டி விட்டேன் அதைக் கூரையில். இரவில் மட்டும் மினுங்கும் செயற்கை விண்மீன்களுக்கு இடையே இப்பொழுது இதுவும். ஆனால் பெரிதாக, மிகப் பெரிதாகத் தனித்துத் தெரிந்தது. யாராவது கேட்டால்? அ... சொல்லிக் கொள்ளலாம்.

போர்த்திக் கொண்டு படுத்தேன். அறை முழுக்க ஒளியை உமிழ்ந்தபடி அது என்னையே பார்த்தது. நான் அதையே பார்த்திருந்தேன். எப்பொழுது உறங்கிப் போனேன்? தெரியவில்லை.

திடீரெனத் தூக்கம் கலைந்து விழித்துப் பார்த்தபொழுது கூரைச் சுவரில் அது இல்லை. பதறி எழுந்தேன். நேர் கீழே இருந்த நாற்காலியின் சாய்மான விளிம்பில் நின்றபடி சாளரம் வழியே கொட்டக் கொட்டப் பார்த்துக் கொண்டிருந்தது.

எங்கே பார்க்கிறது? நானும் பார்த்தேன். நீல வானம் பரந்து விரிந்து தெரிந்தது. கடிகாரம் பார்த்தேன். நாலரை. இன்னும் சிறிது நேரத்தில் பொழுது புலரத் தொடங்கி விடும். விண்மீனைப் பார்த்தேன். அதன் கண்களில் சோகம் கூடியிருந்தது. ஒளி மிகவும் குறைந்திருந்தது. சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு எழுந்து அதனை நெருங்கினேன்.

மொட்டைமாடி வந்து விட்டேன். கையைத் திறந்தேன். விண்மீனும் கண்ணைத் திறந்தது. வானத்தைப் பார்த்ததும் இன்னும் விழிகளை அகலத் திறந்தது. அதன் ஒளி கூடியது. என் உதடுகளில் கீற்றாக ஒரு புன்னகை.

ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் சேர்த்து விண்மீனின் மையப்பகுதியைப் பிடித்துக் கொண்டேன். மூச்சை இழுத்துப் பிடித்து முடிந்த அளவுக்குக் கையை வேகமாகக் கரகரவெனச் சுழற்றி வானை நோக்கி வீசி எறிந்தேன்.

விண்மீன் வானோக்கி எகிறியது!! கீழே விழுந்து விடுமோ? அஞ்சியபடி பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை. அது போனது... போனது... போய்க் கொண்டே இருந்தது. ஒரு புள்ளியில் என் கண்ணை விட்டு மறைந்தது.

சிறிது நேரம் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாடியிலிருந்து இறங்கினேன். வீட்டுக்குள் போனதும் இப்பொழுதும் வலப்பக்கம் பார்த்தேன். அவள் அறையில் விளக்கு எரியவில்லை.

மெல்லமாக மிக மிக மெல்லமாகக் கதவைத் திறந்து பார்த்தேன். அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். கதவை விரியத் திறந்து அருகில் நெருங்கி குனிந்து பார்த்தேன். வாயருகே என்னவோ போலிருந்தது. தொட்டுப் பார்த்தால் எச்சில். தற்செயலாய் என் இடக்கை என் மார்புமுடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது. சை! குழந்தையில் என் மார் மீது படுத்துத் தூங்கியபொழுது எச்சில் விட்டால் அவள் வாயைத் துடைத்து விட்ட கையோடு என் மார்பு நனைந்திருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொள்வேனே? அதே நினைவு.

அவள் மேசை நோக்கி நடந்தேன். என் சட்டைப்பைக்குள் கைவிட்டேன். ஒளித்து வைத்திருந்த அவளுடைய கடவுச்சீட்டை (Passport) மேசை மீது வைத்தேன். திரும்பி நடந்து அவள் அருகில் வந்து பார்த்தேன். குண்டுக்கட்டாக உடம்பைச் சுருட்டிக் கொண்டு படுத்திருந்தாள். பக்கத்திலிருந்த தொலை இயக்கியை (Remote control) எடுத்து அறைப்பதனியின் (Air conditioner) குளிர்ச்சியை மட்டுப்படுத்தினேன். விறுவிறுவெனத் திரும்பி நடந்து என் அறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டேன்.

விரல்நுனியில் ஒட்டியிருந்தன விண்மீனின் துகள்களும் மகளின் எச்சில் மணமும். இவை போதும்!

- பன்னாட்டுப் பெண்குழந்தை நாள் சிறப்புச் சிறுகதை

படம்: செய்யறிவில் (AI) சித்தரிக்கப்பட்டது.

வெள்ளி, ஜூன் 07, 2019

தாய்மொழி - சிறுகதை

Thaaimozhi - Short story
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன்.

“நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல பாத்தா…” - அதற்கு மேல் பேச முடியாமல் அவனுக்குத் தொண்டையை அடைப்பதை என்னால் உணர முடிந்தது. எனக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சில நொடிகள் மௌனத்துக்குப் பின் அவனே தொடர்ந்தான்.

“உன்னால வர முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் டிரை பண்ணிப் பாருடா! அம்மா… அம்மா உன்ன கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க” என்றபோது அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை அவனுக்குப் பீறிட, நானும் நாத் தழுதழுத்தபடி,

“சரிடா… சரி!... நீ தைரியமா இரு! நான் எப்படியாவது வரப் பாக்கறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தேன்.

ராகேஷ் அம்மா இறந்து விட்டார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. மூன்று நாட்களுக்கு முன்புதான் பக்கத்திலேயே உட்கார்ந்து கையைப் பிடித்தபடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். வாழ்விலேயே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் போகிறேன் என்று சொல்லி அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டுதான் இலண்டனுக்கே கிளம்பினேன். அதைக் கேட்டு அவர்கள் முகத்தில் பூத்த மகிழ்ச்சி கூட என் மனதில் இன்னும் அப்படியே தெரிகிறது. இப்பொழுது, நான் அவர்களைப் பார்த்தது அதுவே கடைசி எனச் சொன்னால் எப்படி நம்புவது!...

ராகேஷ் அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது உயிர்த்தோழனின் உச்சக்கட்டத் துக்கத்தில் தோள் கொடுக்க முடியாத ஒரு நண்பனின் துயரம் மட்டுமில்லை, அம்மாவின் முகத்தைக் கடைசியாகப் பார்க்கத் துடிக்கும் ஒரு பிள்ளையின் பரிதவிப்பும் கூட! 


ஆம்! ராகேஷ் அம்மா எனக்கும் அம்மா மாதிரிதான். சொல்லப் போனால், ராகேஷை விட அவர்களுக்கு நான்தான் நெருக்கமானவன். அவனிடம் கூடச் சொல்லாத தன் அடி மனத்து ஆவல்களை, குடும்பச் சிரமங்களை, சின்னச் சின்ன ரசனைகளை எல்லாம் சிறு வயதிலிருந்தே என்னிடம்தான் அம்மா பகிர்ந்து கொள்வார்கள். பள்ளி வயதிலிருந்தே படிக்கும் பழக்கமும் எழுத்தார்வமுமாய் வளர்ந்த எனக்குத் தமிழ் ஆசிரியரான அவரின் இலக்கிய ரசனையும் இலக்கண அறிவும் வரலாற்று ஆர்வமும் நிரம்பவே பிடித்துப் போனதால் எனக்கும் அவர்களிடம் பேசவும், தெரிந்து கொள்ளவும் நிறையவே இருந்தன. இருவரும் சம வயதுத் தோழர்களைப் போல் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்த கணங்கள் இப்பொழுது கண்ணீரின் ஈரம் படர்ந்த என் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு தாய்… ஆசிரியர்… தோழி… அங்கே பிணமாகக் கிடக்க, நானோ உலகின் இன்னொரு மூலையில்! அவருடைய கடைசி மணித்துளிகளில் அவரோடு இருக்க முடியாத எனக்கு, கடைசியாக அவருடைய முகத்தைக் பார்க்கவாவது வாய்ப்புக் கிடைக்குமா?... 

**********

இல்லை, கிடைக்கவில்லை. இதோ, ராகேஷின் வீட்டுக்குள் நுழைகிறேன். வீட்டு வாசலின் ஈரம், எல்லாம் முடிந்து இப்பொழுதுதான் கழுவித் தள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. உள்ளே போகிறேன். நான் பார்க்க விரும்பாத அந்தக் காட்சி. வீட்டின் நட்டநடுக் கூடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருக்கிறது. அதையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருக்கிறேன். உள்ளறையிலிருந்து எதற்காகவோ வெளியே வந்த ராகேஷ் “முகில்!...” என்று குரலெடுத்து அழைத்தபடி என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டான். அப்பொழுதுதான் எனக்குத் தன்னுணர்வே வந்தது. என் கண்ணீரை மறைத்துக் கொண்டு நான் அவனை அமைதிப்படுத்த, யாரோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள்; உட்கார்ந்தோம்.

“லாஸ்ட் செகண்ட் வரைக்கும் உன்ன எதிர்பார்த்தேன்டா!” என்றான் ராகேஷ்.

“சாரிடா! நீ விஷயத்தை சொன்ன உடனே அடுத்த நான்-ஸ்டாப் பிளைட்டையே புக் பண்ணிட்டேன். ஆனா, அது கிளம்பறதுக்கே நாலு மணி நேரம் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் ஜர்னி டைம், ஏர்போர்ட்ல இருந்து இங்க பாரீஸ் வர்றதுக்கான டைம் அது இதுன்னு… முடியலடா!... என்னதாண்டா நடந்தது” என்று நான் கேட்க,

“நல்லாத்தாண்டா இருந்தாங்க. நைட் கூட நல்லாப் பேசி சிரிச்சிக்கிட்டு, டி.வி-யெல்லாம் பாத்துட்டுதான் போய்ப் படுத்தாங்க. நைட் ஒரு திரீ ஓ கிளாக், திரீ தர்ட்டி இருக்கும். கதவத் தட்டி என்னை எழுப்பி மார் ரொம்ப வலிக்கற மாதிரி இருக்குன்னாங்க. உடனே, கார் எடுத்துக்கிட்டு பக்கத்துல இருக்குற அந்த நிஷாந்த் ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டோம். மைல்ட் அட்டாக்னு சொல்லிதான் ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணாங்க. ஆனா, காலையில பார்த்தா உயிர் போயிடுச்சுன்றானுங்கடா!...”

வருத்தத்துடன் நான் தலைகுனிந்து கொள்ள, அப்பொழுது வந்த ராகேஷின் மனைவி வர்ஷா,

“ராக்கி! ஆண்ட்டி ஏதோ லெட்டரைப் பத்தி சொல்லிட்டிருந்தாங்களே!...” என்று நினைவூட்டினார். நான் கேள்விக்குறியோடு நிமிர்ந்து பார்க்க,

“ஏ, ஆமாண்டா! மறந்தே போயிட்டேன்” என்றபடி பரபரப்பாக எழுந்து போனான் ராகேஷ்.

“என்னடா லெட்டர்?” என்று கேட்டேன்.

செவ்வாய், ஆகஸ்ட் 01, 2017

புத்தம் புதிய பூமி (அறிவியல் சிறுகதை)

The New Planet

தோ, இதுதான் நாம் கண்டுபிடித்துள்ள புதிய கோள்!” என்று பெருமிதப் புன்னகையோடு தன் இடப்புறம் இருந்த திரையைக் காட்டினார் அந்த விண்வெளிக் கூடத்தின் தலைமை அறிவியலாளர்.

அங்கே நூற்றுக்கு எழுபத்தைந்து அடி நீள அகலம் கொண்ட மாபெரும் திரையில், பல்லாயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து நேரலையில் தெரிந்தது அந்தப் புதிய பூமி. ஊடகங்களின் ஒளிப்படக் கருவிகள் படபடவென அதைப் பார்த்துக் கண் சிமிட்டின. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பிற அறிவியலாளர்கள், உதவியாளர்கள் புடைசூழ அமர்ந்திருந்த மூத்த அறிவியலாளரின் முன்னால் ஆர்வத்தோடு அமர்ந்த செய்தியாளர்கள் கேள்விகளைத் தொடங்கினர்.

“சார், இந்தப் புது கிரகத்தை பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்!”

“இந்தக் கிரகம் பூமியிலேயிருந்து கிட்டத்தட்ட 3000 ஒளியாண்டுகள் தொலைவில இருக்கு. இதுக்கு ஒரு நிலாவும் இருக்கு. ரொம்பப் பெரிய கிரகம்...” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர்,

“சார்! இது வரைக்கும் எத்தனையோ புதிய கிரகங்களைக் கண்டுபிடிச்சிருக்கீங்க. இந்தக் கிரகத்துல என்ன சிறப்புன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

“கண்டிப்பா! இது வரைக்கும் நாம 1317 கிரகங்களை கண்டுபிடிச்சிருக்கோம். ஆனா, அதுல எதிலேயுமே உயிரினங்கள் இல்லை. ஆனா, இந்த கிரகம் அப்படி இல்ல... லொக் லொக்...” என்ற அவர் தண்ணீரை எடுத்துக் குடிக்க, ஆர்வம் தாங்காத ஊடகர்கள் நாற்காலியின் நுனிக்கு வந்து,

“என்ன சார், சொல்றீங்க! அப்படீன்னா இந்த கிரகத்துல உயிரினங்கள் இருக்கா?” என்று கேட்டனர்.

புதன், நவம்பர் 11, 2015

அந்த ஒரு துளி!



Boy in wheelchair watching something sad
மழையில் கொட்டமிடும்
நண்பர்களை
ஏக்கத்துடன் பார்த்திருக்கும்
சக்கர நாற்காலிச் சிறுவனின்
பாதத்தை முத்தமிடுகிறது
எங்கிருந்தோ தெறித்து விழும்
ஒற்றை மழைத்துளி! 

(நான் 0..௨0௫ (9/11/2015) அன்றைய கீற்று இதழில் எழுதியது).

❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி ரிவர்வியூ சர்ச்

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!


திங்கள், அக்டோபர் 12, 2015

ஏனெனில் நாங்கள் தமிழர்கள்!



US - Srilanka - UN
ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக் குறித்துப் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளோடு இணைந்து இலங்கையே விசாரித்தால் போதும்! - ஐ.நா-வில் தீர்மானம்


உலகின் பிற நாடுகளில்

சொந்த நாட்டு மக்கள் மீது

அந்த நாடே இராணுவம் ஏவினால்

அதற்குப் பெயர் ‘இனப்படுகொலை’!

ஆனால்,

அதுவே எங்களுக்கு நடந்தால்

செவ்வாய், ஜனவரி 13, 2015

எங்கே ஓடுகிறாய்? (இனப்படுகொலையாளியை நோக்கிச் சில கேள்விகள்!)



Rajapaksha

எங்கே ஓடுகிறாய்?...
ஈனர்களின் தானைத் தலைவனே!
ஏன் இப்படி ஓடுகிறாய்?

இழிகுலத்துப் பெருமகனே!
எங்கே இப்படி ஓடுகிறாய்?

தமிழர் வாக்குகளால்
எதிராளி பெற்ற வெற்றியை
ஏற்க முடியாது என்றாயே,
அப்புறம் ஏன் ஓடுகிறாய்?...

அட!
அடடே!
அடேய்!
என்ன இவ்வளவு அவசரம்?
மீசையைக் கூடத் துடைக்க நேரமில்லாமல்
ஏன் இந்த அவசரம்?

தமிழர் நண்பனாய்க் காட்டிக் கொள்ள
ஆண்டு தவறாமல் பொங்கல் வைப்பாயே
அதற்காகக் கூட இரண்டு நாள் பொறுக்காமல்
எதற்கு இந்த அவசரம்?...

செவ்வாய், நவம்பர் 11, 2014

கலையுலகில் கமலியல்! (Kamalism in Tamil Cinema!) - கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் முழுமையான உரையுடன் (with full script)!


Kamalism in Tamil Cinema! - Kamalhaasan Diamond Jubilee Birthday Documentary!

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் கலைமணம் கமழ்த்தி வரும் உயர்திரு.கமல்ஹாசன் அவர்கள் வைர விழாப் பிறந்தநாள் காணுவதை முன்னிட்டு, நான் துணையாசிரியராகப் பணியாற்றும் யுவா தொலைக்காட்சியின் நிறுவனரும் என் ஆருயிர் நண்பருமான பிரகாஷ் அவர்கள் எங்கள் தொலைக்காட்சி சார்பாக விழியம் ஒன்றை வெளியிட்டு அந்த மாபெரும் கலைஞரைச் சிறப்பிக்க விரும்பினார். அதற்கு நான் எழுதிக் கொடுத்த படைப்பு இதோ உங்கள் கண்முன்! 

கமல்ஹாசன்!
தமிழ்த் திரையுலகம் எனும் அற்புத விளக்கைத்
தன் பொற்கரங்களால் உயிர்ப்பிக்கப் பிறந்த அலாவுதீன்!
தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்திய புகழ் ஏணி!
உலகநாயகன் எனத் தமிழ் மக்கள் கொண்டாடும் கலைஞானி!

இந்திய சினிமாவின் வயதில் பாதி
இவருடைய அனுபவம்!
பேச்சு மூச்சு இரத்தம் சதை என
ஒவ்வோர் அணுவிலும் கலைத்தாயைக் கருச்சுமக்கும்
இந்தத் தமிழ்க்குழந்தையின் பயணம்
ஆறு வயதில் தொடங்கியது!

1960இல் ஆளவந்த அந்தக் குழந்தை நட்சத்திரம், தமிழ்த் திரைவானின் துருவ நட்சத்திரமாய் இன்று அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இதோ அவருடைய விசிறிகளின் ஒரு சிறு காணிக்கை!

திங்கள், ஜூலை 22, 2013

தமிழ்த்தாயின் தூவல் உடைந்துவிட்டது! – கவிஞர்.வாலிக்கு ஒரு கண்ணீர்க் கவிதாஞ்சலி



Kavingyar.Vaali

இயைபின் கொற்றவனே! 
தன்னிகர் அற்றவனே! 
உனைப்போல் எழுத இங்கு 
ஏது மற்றவனே! 
நீ இன்றித் தமிழன் இனி 
ஏதுமற்றவனே!

உனக்கு இரங்கல் பா எழுதவா 
வலைப்பூ தொடங்கினேன் 
என்று 
எனக்குள்ளாக அழுது - மன 
மூலையில் முடங்கினேன்! 
ஆனால் 
நடமாடிய தமிழே! 
உனக்கே இரங்கல் பா 
எழுதாததற்கு 
நான் கற்ற தமிழ் 
எனக்கெதற்கு?

சிலப்பதிகாரம், 
மணிமேகலை... 
என 
புதுக்கவிதையால் நீ 
புதுப்பிக்க வேண்டிய 
பழந்தமிழ்க் கருவூலங்கள் 
இன்னும் எவ்வளவோ 
இருக்க 
அதற்குள் என்ன அவசரம் 
இறக்க? 
எப்படி மனம் வந்தது 
தமிழுலகைத் 
துறக்க? 
இனி எங்கு போவோம் 
அப்படியொரு தமிழைச் 
சுவைக்க?!

கருணாநிதியுடன் ஒரு கையைக் 
குலுக்கிக் கொண்டே 
பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பியதைக் 
கண்டித்து 
மறுகையால் 
பாட்டெழுதிய 
தமிழ்ப் பொற்செண்டே! 
நீயன்றோ 
உண்மைக் கவி! 
உனையிழந்து 
இனி என் செய்யும் 
தமிழ்ப் பெரும் புவி?!

விருப்ப மொழியாய்த் 
தமிழ் படிக்கும் 
காலத்தில் 
அதை 
விருப்பு மொழியாய் 
ஆக்கியது 
உன் தமிழ்! 
இனி எங்களுக்கு 
எங்கு கிடைக்கும் அந்தச் 
செந்தமிழ்?!

‘முக்காலா முக்காபுலா’ 
‘கலாசலா கலசலா’ 
என்றெல்லாம் 
இளைஞர்களுக்கு வைப்பாய் 
சொக்குப்பொடி மருந்து 
பின்னர் 
‘முன்பே வா! அன்பே வா’ 
‘நங்காய்! நிலாவின் தங்காய்!’ – என்று 
அவர்களுக்குப் படைப்பாய் 
இலக்கிய விருந்து!

இப்படித் 
திட்டமிட்டுத் திட்டமிட்டு
இலக்கிய ரசனை வளர்த்தது 
வாலி பாணி! 
உனக்குப் பின்னே 
இந்தச் 
சேவை செய்ய 
யாரும் 
பிறக்கும் முன்னே 
போகலாமா 
வாலிபா நீ?

தீர்ந்து விட்டதா 
இதற்குள் 
உன் மை? 
சொல்லியிருந்தால் 
எங்கள் உதிரத்தைக் கொடுத்திருப்போம்! 
இது உண்மை!

வந்திருக்கலாம் 
உன் உடலுக்கு 
முதுமை! 
ஆனால் 
உன் எழுத்திலே 
தீரவில்லையே இன்னும் அந்த 
இளமை! 
அதற்குள் நீ 
ஓய்வெடுத்துக் கொண்டதென்ன 
புதுமை!

பாடியிருக்கலாமே 
காலனை நோக்கி 
அறம்? 
காட்டியிருப்பானே 
அவன் உனக்குப் 
புறம்!

மறந்ததேன்? – எங்களைப் 
பிரிந்ததேன்?

நீ போனாலும் 
உன் படைப்புகள் இருப்பதாக 
ஆறுதல் கொள்வதா? 
அதைப்போல் வேறு 
மடத்தனம் உள்ளதா?

நீ எழுதியவையெல்லாம் அமுதம்தான் 
மறுக்கவில்லை; 
ஆனால் 
சுரபியே போய்விட்டதே 
அதுதானே 
பொறுக்கவில்லை!

பார்வதியை வேண்டினாய் 
கவிதையில் ஒருமுறை 
“திருஞான சம்பந்தன் 
அருந்தியது போக 
மிச்சத்தை எனக்குக் கொடு” 
என்று! 
நினைவை அது 
தீண்டுகிறது இன்று

சம்பந்தன் அருந்தியது 
உமையவள் 
கிண்ணத்தில் தந்த ஞானப்பால்; 
ஆனால் 
எங்கள் வாலிநீ பருகியதோ 
தமிழ்த்தாய் 
மடியமர்த்தி ஊட்டிய சொந்தப்பால்! 
அப்பேர்ப்பட்ட உனக்கும் 
இறப்பு என ஒன்றிருக்கும் – என 
நினைக்கவில்லை இதுவரைக்கும்!

ஆனால் 
அது நடந்தே விட்டது! 
உயிருள்ள தமிழ்ப் பேரகராதி எரிந்தே விட்டது! 
கடைசியில் 
தமிழ்த்தாயின் தூவல் உடைந்தே விட்டது!


*********

பெருங்கவிஞர்.வாலி அவர்கள் பற்றி முழுமையாக அறிய: http://ta.wikipedia.org/wiki/வாலி
வாலி அவர்களின் பாடல்களைப் படித்து மகிழ: http://www.tamilpaa.net/tamil-lyricist-list/vaali 

படம்: நன்றி http://www.moviegallary.in/ 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (24) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (44) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (38) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (20) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்