அன்புத் தமிழ் நெஞ்சங்களே!
அதோ அவர்கள் வருகிறார்கள்!
நம் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
யார் அவர்கள்?...
கொஞ்சம் நன்றாகப் பாருங்கள்!
திருவள்ளுவர் மீது காவிக்கறை பூசியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
பெரியார் சிலையின் தலையை உடைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் உயர்நீதி மன்றத்தையே மயிரென்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
சல்லிக்கட்டுப் போராட்டத்தில்
நம் பிள்ளைகளை அடித்து நொறுக்கியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை அனிதாவின்
தற்கொலையைக் கொச்சைப்படுத்தியவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்குத்
தமிழகத்திலேயே தடை கேட்டவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“கேந்திரிய வித்தியாலயப் பள்ளிகளில்
தமிழுக்கு இடமில்லை” என்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
குழந்தை ஆசிபாவைத் துடிக்கத் துடிக்கக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தங்கை சுனோலினை வாயில் சுட்டுக் கொன்றவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
செய் சிரீராம் என்று சொல்ல மறுத்தவனை
உயிரோடு கொளுத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக
மனிதனை அடித்துக் கொன்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழ்நாட்டை இருவேறு மாநிலங்களாகப் பிரித்துக் காட்டுவோம்” என்று
சூளுரைத்திருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழை விட சமற்கிருதமே மூத்தது” என்று
நாடாளுமன்றத்திலேயே நாக்கூசாமல் புளுகியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
“தமிழுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோம்” என்று
தமிழ் மண்ணிலேயே கொக்கரித்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நம் பிள்ளைகள் படிக்கும் கல்லூரி வளாகத்துக்குள்
குண்டு வீசுவோம் என்றவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
இருமொழிக் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு
இந்தித் திணிப்புக்குப் பட்டுக் கம்பளம் விரித்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மருத்துவப் பொதுநுழைவுத் தேர்வு கொண்டு வந்து
நம் அரசுக் கல்லூரிகளில் நமக்கே இடமின்றிச் செய்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
உச்சநீதி மன்றமே சொன்ன பின்னும்
ஏழு தமிழர் விடுதலையை வேண்டுமெனவே இழுத்தடிப்பவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
முகிலன், பியூஷ் மானுஷ் என்று
சூழல் காக்கப் போராடியவர்களையெல்லாம்
சித்திரவதை செய்து முடக்கியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
தேசியக் கல்விக் கொள்கை என்று சொல்லி
நம் குழந்தைகளின் கல்வியில்
மண்ணள்ளிப் போட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
ஒரே நாடு - ஒரே வரி என்று
ஒரேயடியாக நம் சிறு-குறு தொழில்களுக்கெல்லாம்
மூடுவிழா நடத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நமது மாநில அரசுப் பணியிடங்களையெல்லாம்
வடமாநிலத்தவர்களுக்கு வாரி இறைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
இசுலாமிய உடன்பிறப்புகளையெல்லாம்
குழந்தை குட்டியோடு சிறையில் தள்ளக்
கட்டடம் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
ஊருக்கே சோறிட்ட உழவன் வீட்டுச் சோற்றுப் பானையை
எட்டு வழிச் சாலைக்காக எட்டி உதைத்தவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
நாடாளுமன்றத்தின் முன் நம் வேளாண் பெருமக்களை
ஆடையின்றி ஓட விட்டவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மொத்த நாட்டு விலைவாசியையும் தீர்மானிக்கும் உரிமையை
எண்ணெய் நிறுவனங்களுக்கே எழுதிக் கொடுத்தவர்கள்
வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
மூன்று வேளை உணவு கூட இனி
பணம் படைத்தவனுக்கே என்று
வேளாண் சட்டத்தைத் திருத்தியவர்கள் வாக்குக் கேட்டு வருகிறார்கள்!
இவர்களுக்கு வாக்களிப்பதா?!
இன்னும் ஒரு வாய்ப்பளிப்பதா?!
தமிழ்நாட்டுப் பெருமக்களே!
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!
நாம் வாழ வேண்டுமானால்
இவர்களைத் தோற்கடிக்க வேண்டும்! – அதற்கு
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
நான் சொல்லத் தேவையில்லை – ஏனெனில்
அஃது உங்களுக்குத் தெரியாததில்லை!
ஏப்ரல் 6, 2021-தான்
நமக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு!...
வாக்குரிமையே வாழ்வுரிமை!
சிந்தித்துச் செயல்படுவோம்!
நம் பிள்ளைகள் எதிர்காலம்
இன்னும் நம் விரல்நுனியில்!
(நான் ‘கீற்று’ இதழில் 24.03.2021 அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி ஏ.என்.ஐ.
கவிதையின் கருத்து சரியானது எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளை அழுத்தி மற்றவர்களுக்கும் பகிர்வதன் மூலம் வரலாற்று முக்கியம் மிக்க இந்தத் தேர்தலில் நல்லாட்சி மலர உதவுங்கள்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அருமை ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! இன்றைய அரசியல் சூழலைப் பொறுத்த வரை நீங்களும் என்னுடன் ஒத்த கருத்துடையவரே என்பதை அறிவேன்.
நீக்கு