பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும்
உரிய, தமிழினத்தின்
உண்மைத் தலைவர்களான வை.கோ, சீமான், பழ.நெடுமாறன்,
தமிழருவி மணியன், விடுதலை
இராசேந்திரன், கொளத்தூர்
மணி, பெ.மணியரசன், தோழர்
தியாகு ஆகியோருக்கும் சேவ் தமிழ்சு இயக்கம், மே பதினேழு இயக்கம், தமிழீழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆகியோருக்கும் நேசமிகு வணக்கங்கள்!
ஈழப் பிரச்சினை பற்றியும் தமிழினத்தின்
இன்ன பிற பிரச்சினைகள் பற்றியும் நீங்கள் யாரும் நான் சொல்லித் தெரிந்துகொள்ள
வேண்டியதில்லை. ஆனால், நாடாளுமன்றத்
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் உங்களில் சிலருடைய நடவடிக்கையும் பேச்சும்
ஏற்படுத்தியுள்ள கவலையே இந்தக் கோரிக்கை மடலுக்குக் காரணம்! இது, ஞானப்பிரகாசன்
எனும் தனி மனிதனின் வேண்டுகோள் இல்லை; தலைவர்களான உங்களிடம்
உலகத் தமிழர்கள் அனைவர் சார்பிலும் முன்வைக்கப்படும் தேர்தல் நேரத்துப் பணிவார்ந்த
விண்ணப்பம்! எனவே, கனிவு
கூர்ந்து நீங்கள் அனைவரும் உங்கள் பொன்னான நேரத்தைச் சற்று ஒதுக்கி இதை
முழுமையாகப் படித்துப் பார்க்குமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
ஒரு புறம் பார்த்தால், மேலே
கண்டபடி, ஈழத்
தமிழர்களுக்காகப் பல தலைவர்களும் அமைப்புகளும் இன்று உண்மையாகப் போராடி வரும்
வேளையில், இவர்கள்
யார் கருத்தையும் கேட்காமல் தலைவர் வை.கோ அவர்கள் தனியாகப் போய் பா.ஜ.க-வுடன்
கூட்டணி பேசுகிறீர்கள்!
அவர் அங்கு போய்ச் சேர முதன்மைக்
காரணராக விளங்கிய ஐயா தமிழருவி மணியன் அவர்களோ, மேற்கொண்டு அந்தக்
கூட்டணியில் நீங்கள் சேர்க்க இருக்கும் கட்சிகள் பட்டியலில் மேற்படி உண்மைத்
தமிழுணர்வுக் கட்சிகள் எதையுமே குறிப்பிடாமல், இன்றும் காங்கிரசுடன்
கூட்டணி வைக்க அலையும் பா.ம.க-வையும் தே.மு.தி.க-வையும் போய்க்
குறிப்பிடுகிறீர்கள்!
அண்ணன் சீமான் அவர்களோ, “காங்கிரசு, பா.ஜ.க
ஆகியவற்றுடன் யார் கூட்டணி வைத்தாலும் துரத்தித் துரத்தித் தோற்கடிப்போம்” எனச் சூளுரைக்கிறீர்கள்!
கருணாநிதியைத் தமிழினத் தலைவனாகக்
காலங்காலமாக நம்பி இனத்தையே வாரிக் கொடுத்துவிட்ட தமிழ் நெஞ்சங்களுக்கு இந்தக்
காட்சிகள் எந்த அளவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவையாக இருக்கின்றன என்பதைத்
தலைவர்களே உங்களால் உணர முடிகிறதா?
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தல்
தமிழினத்துக்கு எப்பேர்ப்பட்ட அரிய வாய்ப்பு என்பது நீங்கள் அறியாததில்லை. நாமும், நடத்தாத போராட்டம்
இல்லை, செய்யாத
ஈகங்கள் (தியாகங்கள்) இல்லை. ஆனாலும், ஈழத்தில் சிந்திய, சிந்துகிற
உதிரத்தில் ஒரு துளியைக் கூட நாம் இதுவரை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதுதான்
உண்மை. காரணம், உலகில்
எங்கு வாழும் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் தரப்பில் முடிவெடுக்க வேண்டிய நாடு
என்று உலகச் சமுதாயத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ள இந்தியா நமக்கு எதிராக இருப்பது.
ஆகவே, இந்திய
அரசை ஈழத் தமிழர்களுக்குச் சார்பானதாகத் திருப்பாமல் அவர்களைக் காப்பாற்ற முடியாது, ஈழப்
பிரச்சினையில் நாம் எந்த வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்கிற
அடிப்படையில்தான் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த நேரம் முதல் இன்று வரையிலான நமது
எல்லாப் போராட்டங்களும் இந்திய அரசை நோக்கியே நடாத்தப்படுகின்றன.
இப்படி, கடந்த ஐந்து
ஆண்டுகளுக்கும் மேலாக நாம் போராடியும் இந்திய அரசை அணுவளவும் ஈழத் தமிழருக்கு
ஆதரவாக நகர்த்த இயலாத நிலையில் இன்றைய நமது ஒரே நம்பிக்கை,
வரவிருக்கும் ‘நாடாளுமன்றத்
தேர்தல்’!
இந்த நேரம் பார்த்து இப்படி நீங்கள்
ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து செல்வது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா தலைவர்களே?
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, ஈழப்
பிரச்சினை என்பது ராஜீவ் படுகொலையோடு ஊற்றி மூடப்பட்டு விட்டது. எப்பொழுது அந்தக்
கொலைப் பழி விடுதலைப்புலிகள் மீது சுமத்தப்பட்டதோ அப்பொழுதே நம் மக்கள் ஈழப்
பிரச்சினை பற்றிய அக்கறையையும் கைகழுவி விட்டார்கள்! நடந்த இனப்படுகொலையைக் கூட
அவர்கள் சப்பானில் நிலநடுக்கம், பாகித்தானில் இராணுவ ஆட்சி என்பது போன்ற
ஒரு செய்தியாகத்தான் தொடக்கத்தில் பார்த்தார்கள். அப்படி இருந்தவர்களைப் பேசிப்
பேசிப் பேசி ஈழத் தமிழர்கள் நம் சொந்தங்கள், அவர்கள் வடிக்கும்
குருதி நம் குருதி, அவர்கள்
படும் வேதனை நம் வேதனை என்று உணர வைத்தவர்களே நீங்கள் எல்லோரும்தான்.
இப்படி,
சும்மா இருந்த எங்கள் எல்லோரையும் தூண்டி விட்டுவிட்டு, இப்பொழுது
தமிழ்நாடு முழுக்க ஈழத் தமிழர் ஆதரவு அலை வீசும் வேளையில், அதை
அப்படியே வாக்குகளாக மாற்றி நடுணரசை மாற்ற வேண்டிய இந்த வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த தறுவாயில் நீங்கள் ஆளுக்கொரு பக்கமாய்ப் பிய்த்துக் கொண்டு போனால் தமிழர்
வாக்குகள் சிதறடிக்கப்படுமே, அதைச் சிந்தித்தீர்களா?
- இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடுவணரசு மாற்றப்பட்டே ஆக வேண்டும்!
- மாற்றப்பட்டால் மட்டும் போதாது, தமிழ்த் தலைவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுவிட்டால் ஆட்சி கவிழ்ந்து விடக்கூடிய அளவுக்கு, அமையவிருக்கும் நடுவணரசில் தமிழர் கை ஓங்கி இருத்தல் வேண்டும்!
- அப்படி ஓங்கி இருக்கும் கைகள் கருணாநிதி போன்ற துரோகத் தமிழர்களின் கைகளாக இல்லாமல், உங்களைப் போன்ற உண்மைத் தமிழர்களின் கைகளாக இருத்தல் வேண்டும்!
இந்த மூன்றும் நடந்தால்தான் ஈழத்
தமிழர்களைக் காப்பாற்றுவது குறித்து நாம் நினைத்தாவது பார்க்க முடியும்.
இல்லாவிட்டால், இன்னும்
ஐந்து ஆண்டுகளுக்கும் நாம் இப்படியே மேடைகளில் முழங்கிக் கொண்டும், முகநூலில்
புலம்பிக் கொண்டுமே இருக்க வேண்டியதுதான்.
ஏற்கெனவே, தி.மு.க அணி, அ.தி.மு.க
அணி என இரு பெரும் கூறுகளாகத் தமிழர் வாக்குகள் பிரிய இருக்கின்றன. தவிர, பா.ம.க
போன்ற சாதிக் கட்சிகளாலும் வாக்குகள் நிறையப் பிரியும். (விடுதலைச் சிறுத்தைகள்
எப்படியும் தி.மு.க-வுடன்தான் இருக்கும் என்பதால் அதனால் வாக்கு பிரிய
வாய்ப்பில்லை). இவை போக மிச்சமுள்ள வாக்குகளையாவது ஓரணியில் திரட்டினால்தான்
நடுவணரசில் செல்வாக்கு செலுத்தக் கூடிய அளவுக்குத் தமிழர் வாக்குகள் திரளும்.
இல்லாவிட்டால், வாக்குகள்
பலவாறு சிதறி அது தி.மு.க/அ.தி.மு.க-வுக்குத்தான் சாதகமாகும். அவர்களுக்குச்
சாதகமாகிறதோ இல்லையோ கண்டிப்பாகத் தமிழர்களுக்குப் பாதகமாகும் என்பது உறுதி!
தனக்கிருக்கும் ஆதரவு வாக்குகளால்
வெல்கிறாரோ இல்லையோ, எதிராளியின்
வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலம் வெற்றியடைவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. வை.கோ, சீமான்
முதலான தலைவர்களே! வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் பிரிந்து நின்றால் இந்த
முறை அவருடைய அந்த வாக்குப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக அவர் தன் மண்டையை
உடைத்துக்கொள்ளத் தேவையே இருக்காது. இவையெல்லாம் நீங்கள் அறியாதவையல்ல.
எனவே, தமிழினத்தின் புதிய
நம்பிக்கைகளே! உலகத் தமிழர்கள் அனைவரும் உங்களைக் கைகூப்பி வேண்டிக் கொள்கிறோம்!
அருள் கூர்ந்து ஒன்று சேருங்கள்! இந்தத் தேர்தலை ஓரணியாகச் சந்தியுங்கள்!
குறிப்பாக,
இந்த வேண்டுகோள் தலைவர் வை.கோ அவர்களுக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கும்தான்.
காரணம்,
மேற்கண்ட பட்டியலில் இருப்பவர்களுள் நீங்கள் இருவரும்தாம் தேர்தல் அரசியலில்
இருப்பவர்கள். எனவே, உங்கள்
இருவரின் நிலைப்பாடுதான் இந்தப் பட்டியலில் உள்ள மற்ற தலைவர்களின் தேர்தல் கால
நிலைப்பாட்டைத் தீர்மானிக்கப் போகிறது. நீங்கள் இருவரும் ஒரே அணியில் இருந்தால், தமிழீழத்துக்காகப்
போராடி வரும் மேற்கண்ட தலைவர்கள், அமைப்பினர் அனைவரும் அதே அணிக்கு
ஆதரவாகச் செயல்படுவார்கள். அதனால், இன்று மலர்ந்துள்ள
தமிழர் எழுச்சி மொத்தமும் வாக்குகளாக மாறித் தமிழர் வாழ்வில் புதுக் கீற்று பிறக்க
ஏதுவாகும். மாறாக, நீங்கள்
இருவரும் இருவேறு வழிகளில் போனால் மற்றவர்களின் ஆதரவுகளும், நிலைப்பாடுகளும்
சிதறி, வாக்குகளும்
சிதறும்.
ஈழத் தமிழர் பிரச்சினை, மீனவத் தமிழர் பிரச்சினை, சாதியம், சமயம், முல்லைப்
பெரியாறு,
அணு உலை, மீதேன்
குழாய் பதித்தல், ஸ்டெர்லைட்
ஆலை, காங்கிரசு, தி.மு.க, அ.தி.மு.க
என எல்லா...ப் பிரச்சினைகளிலுமே நீங்கள் இருவரும் ஒத்த கருத்தோடுதான்
செயல்படுகிறீர்கள். ஆனால், ஒத்துச்
செயல்படத்தான் மறுக்கிறீர்கள். இது தமிழ்ச் சமூகம் முழுக்கவே வருத்தத்தை
ஏற்படுத்தியிருப்பதை நீங்கள் அறிவீர்களா இல்லையா எனத் தெரியவில்லை. உணர்வுள்ள
தமிழர்கள் அனைவருமே நீங்கள் இருவரும் இணைய மாட்டீர்களா என எதிர்பார்க்கிறார்கள்.
மறு புறம், தி.மு.க
– அ.தி.மு.க
– காங்கிரசு
கும்பல் நீங்கள் இணைந்துவிடுவீர்களோ என அஞ்சுகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்கும்
உங்கள் கட்சி இளைஞர்களைக் கேட்டுப் பார்த்தீர்களானால் நான் கூறுவது எந்த அளவுக்கு
உண்மை என்பது உங்களுக்குத் தெரிய வரும்.
ஆனந்த விகடன் நேர்காணல் ஒன்றில் இதே
கேள்வி ஒருமுறை அண்ணன் சீமானிடம் முன்வைக்கப்பட்டபொழுது,
“நாங்கள்
தமிழியத்தைச் சார்ந்தவர்கள்; அவர் (வை.கோ) திராவிடத்தை வலியுறுத்துபவர்.
எனவே, நாங்கள்
இருவரும் ஒன்று சேர இயலாது”
என்றார். நியாயம்தான்! ஆனால், இவ்வளவு நுணுக்கமாகக் கொள்கை வேறுபாடு
பார்க்கும் நிலையில் நாம் இப்பொழுது இல்லை. அங்கே ஈழத்தில் நம் மக்கள் செத்துக்
கொண்டிருக்கிறார்கள். இங்கேயும் நீர் உரிமை (முல்லைப் பெரியாறு பிரச்சினை), நில
உரிமை (மீதேன் குழாய் பதிக்கும் பிரச்சினை), வாழ்வுரிமை (அணு
உலைப் பிரச்சினையும் மீனவத் தமிழர் பிரச்சினையும்) என ஒவ்வொன்றாக உரிமைகள் நம்
கைவிட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. எனவே, தமிழர்களின்
உயிருக்கும் வாழ்வுக்குமே உலை வைக்கும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இந்த
நாடாளுமன்றத் தேர்தலை நீங்கள் அனைவரும் முதலில் ஒன்றுபட்டுச் சந்தியுங்கள்!
முதலில்,
அதிகாரத்துக்கு வந்துவிடுங்கள்! அதன் பிறகு மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாமே!
இன்னொரு முதன்மையான கருத்தை இந்த
இடத்தில், இந்நேரத்தில்
உங்கள் இருவரிடமும் மிகப் பணிவன்புடன் முன்வைக்க விரும்புகிறேன். அதாவது, உங்கள்
இருவருக்குமே தமிழினத்தை ஆளும் தகுதியும் வழிநடத்தும் தகுதியும் தனித் தனியே
இருக்கின்றன என்பது தமிழர்கள் அனைவரும் ஒப்புக் கொள்வதே. ஆனால் அதே நேரம், நீங்கள்
இருவருமே ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறீர்கள்!
முன்பே பார்த்தபடி, ராஜீவ்
படுகொலைக்குப் பின் தமிழ்நாட்டு மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அக்கறையில்லாதவர்களாக
ஆகிவிட்ட நிலையில், தமிழீழம், விடுதலைப்புலிகள்
என்றெல்லாம் இங்கே தொடர்ந்து இடைவிடாமல் பேசி அதைப் பற்றி நினைவூட்டிக் கொண்டே
இருந்தவர் தலைவர் வை.கோ அவர்கள்! அவர் மட்டும் அப்படிச் செய்யாமல் விட்டிருந்தால், இன்று
அண்ணன் சீமான் ஈழப் பிரச்சினை பற்றி இங்கே இவ்வளவு பெரிய விழிப்புணர்வைக்
கட்டியெழுப்பியிருக்க முடியாது; தொடக்கத்திலிருந்து தொடங்க
வேண்டியிருந்திருக்கும்.
அதே போல், இத்தனை ஆண்டுகளாக
இடைவிடாமல் பேசியும் ஐயா வை.கோ அவர்களால் ஏற்படுத்த முடியாத ஈழத் தமிழர் ஆதரவு
அலையை வந்த வேகத்தில் தட்டியெழுப்பி விட்டார் அண்ணன் சீமான். தமிழ்நாட்டு
ஊர்கள்தோறும் புதிய புயலாய்ப் புறப்பட்டுப் போய் அவர் உண்டாக்கியிருக்கும் இந்த
எழுச்சிதான், “அடடா!
இதைத்தானே இத்தனை ஆண்டுகளாக வை.கோ-வும் சொல்லிக் கொண்டிருந்தார்? நாம்
செவிமடுக்காமல் போனோமே!”
என்று தமிழினத்தை, குறிப்பாக
இளைஞர்களைச் சிந்திக்க வைத்து, ம.தி.மு.க மீது இன்று இளந்தலைமுறை
பெருமதிப்பு கொள்ள வைத்திருக்கிறது.
ஆக, என்னதான் உங்கள்
இருவருக்கும் தனித் தனித் தகுதிகள் பல இருந்தாலும், உங்கள் கொள்கைகள்
வெவ்வேறாக இருந்தாலும், உண்மையில்
நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை!
எனவே அருள்கூர்ந்து ஒன்று சேருங்கள்!
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்ளுங்கள்!
அண்ணன் சீமான் அவர்கள் ஐயா வை.கோ
அவர்களின் வழியை ஏற்றுப் பா.ஜ.க கூட்டணியில் சேருவீர்களோ, அண்ணனின்
கருத்தை மதித்து ஐயா அவர்கள் அவர் வழியில் செல்வீர்களோ,
இருவரும் இணைந்து ஐயா நெடுமாறன் சொல்படிக் கேட்பீர்களோ அல்லது அனைவரும் இணைந்து
புதிய கூட்டணி அமைப்பீர்களோ எங்களுக்குத் தெரியாது. ஆக மொத்தம், நீங்கள்
அனைவரும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும், அவ்வளவுதான்!
உலகத் தமிழர்களின் இன்றைய எதிர்பார்ப்பு
இதுதான்!
தலைவர் பிரபாகரன் அவர்கள் காத்திருப்பது
இதற்காகத்தான்!
ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற
நமக்கிருக்கும் ஒரே வழி இதுதான்!
தமிழர் பிரச்சினைகள் அனைத்தையும்
முறியடிக்கும் ஒரே மருந்து இதுதான்!
தமிழ்த்தாய் விரும்புவதும் இதைத்தான்!
அதற்கு மேல் உங்கள் விருப்பம்!
பி.கு: போன மாதம், வை.கோ அவர்கள் பா.ஜ.க-வுடன்
கூட்டணி வைத்ததை ஆதரித்தும் இதே கைகள்தாம் எழுதின; மறுக்கவில்லை. ஆனால், நானே
இன்று இப்படி மாற்றி எழுதக் காரணம், சட்சட்டென மாறும் அரசியல் காட்சிகள்தாம்.
அன்று, எப்படியாவது நடுவணரசு மாறினால் போதும் எனும் உளப்போக்கில் அப்படி
எழுதினேன். ஆனால், அதுவே ஒன்றாய் இருக்கும் தமிழர் தலைவர்களிடையில் பிரிவினையை
உண்டாக்கும் என்றால் அதை விடப் பேரிடர் தமிழினத்துக்கு வேறு எதுவும் இருக்க
முடியாது என்பதால் இன்று இப்படி எழுதியுள்ளேன்! தவறாக நினைக்க வேண்டாம்!
படம்: நன்றி trinitybcci.org
இந்தப் பதிவைச் சமூக வலைத்தளங்களில் முடிந்த அளவு பகிர்ந்து, தமிழ் மக்களாகிய நாம் இந்தத் தலைவர்களின் ஒற்றுமையை எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறோம் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்து, அடுத்த நடுவணரசாவது தமிழர் நல அரசாக அமைய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
எந்த இயக்கமும் அரசியல் தேர்தலில் வந்தபின் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படும், அதுவும் உள்ளூர் தமிழனின் குரல்வளையை நசித்துக் கொண்டு அசலூர் தமிழனின் அடையாளத்துக்காய் போராடும் இவர்கள் பலரின் பொய்முகங்கள் பாஜக போன்ற மதவாத கட்சிகள் உடன் கூட்டு வைப்பதில் தொடங்கி தலித் விரோத அரசியல், சாதிக் கட்சிக் கூட்டுக்கள், தமிழகத்தின் கூடங்குளம், சிதம்பரம் கோவில் விவகாரங்களின் கள்ள மவுனம் போன்றவற்றால் கழன்றுவிட்டது. :(
பதிலளிநீக்குஇல்லை விவரணன் அவர்களே! உங்கள் கருத்து தவறு! குறிப்பாக, "உள்ளூர் தமிழனின் குரல்வளையை நசித்துக் கொண்டு அசலூர் தமிழனின் அடையாளத்துக்காய் போராடு"தல் என்கிற உங்கள் வரிக்கு என் உறுதியான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதே வை.கோ-வும், சீமானும், பழநெடுமாறன் ஐயாவும் இன்ன பிற இயக்கங்களும் தமிழ்நாட்டுத் தமிழர் பிரச்சினைகளுக்காகவும் போராடத்தான் செய்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினைக்காகப் போராடவில்லையா? முல்லைப் பெரியாறு அணைக்காகப் போராடவில்லையா? டாஸ்மாக்கை மூடச் சொல்லிப் போராடவில்லையா? என்ன இல்லை? கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையைப் பொறுத்த வரை, மதிப்பிற்குரிய.உதயகுமார் அவர்கள் யார் என்பதே அதுவரை மக்களுக்குத் தெரியாது. அணு உலை பற்றிய அவர் கருத்துக்கள் சரியா பிழையா என்பது கூடத் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில், களத்தில் ஏற்கெனவே இருந்த சமூகப் போராளிகளான சீமான் முதலானோரும் தமிழர் பிரச்சினைகள் அனைத்திலும் முதல் ஆளாகத் தோள் கொடுக்கும் தமிழர்களின் முகவரியான ஆனந்த விகடனும் அதைப் பற்றிப் பேசியதால்தான் அதன் நம்பகத் தன்மை கூடியது. ஈழப் பிரச்சினைக்காகப் பேசினால் உடனே, உள்ளூர்த் தமிழரை மறந்துவிட்டு எங்கோ இருப்பவர்களுக்காகப் போராடுபவர்கள் எனும் குற்றச்சாட்டைக் கண்மூடித்தனமாகப் பலரும் சுமத்துகிறார்கள்; இதன் ஆபத்தான பின்விளைவை அறியாமல்! இது தமிழினத்தைச் சவக்குழியில் தள்ளக்கூடிய அளவுக்கு மிகப் பயங்கரமான ஒரு சொல்லாடல்! இது, ஈழத் தமிழர்களுக்காகப் பேசுபவர்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து பிரிக்கிறது. அதன் மூலம் ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையுமே பிரிக்கிறது. பிரிப்பது மட்டுமில்லை, ஈழத் தமிழர்களுக்காகப் பேசுவதென்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரானது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் இது, ஈழத் தமிழர்களும், தனி ஈழம் முதலான அவர்களின் கோரிக்கைகளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரானவை என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது! இது சகிக்க முடியாதது! மாபெரும் ஆபத்து! ஈழப் பிரச்சினை பற்றி இன்னும் முழுமையான புரிதல் தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் ஏற்படாத நிலையில் இது மிகவும் அபாயகரமான வார்த்தை விளையாட்டு! அருள் கூர்ந்து இப்படிப்பட்ட சொல்லாடல்களைத் தவிர்க்குமாறு உங்களை மட்டுமில்லை, உலகத் தமிழர்கள் அனைவரையுமே கேட்டுக் கொள்கிறேன்! இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கண்ட உங்களுடைய கருத்தையும் வெளியிடுகிறேன். இனி இப்படிப்பட்ட கருத்தை யாராவது கூறினால் அது கண்டிப்பாக வெளியிடப்பட மாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நீக்கு