தலைப்பைப் பார்த்துவிட்டு “என்னடா இவன், இப்படிக்
கேட்கிறான்!”
எனத் திகைக்காதீர்கள்! சுதந்திரத் திருநாள் என்பது பிறந்தநாளைப் போன்றது இல்லை,
குறிப்பிட்ட மனிதர் இருந்தாலும், மறைந்தாலும் கொண்டாடுவதற்கு. அது மணநாளைப் போன்றது.
குறிப்பிட்ட கணவரும் மனைவியும் சேர்ந்து வாழும் வரைதான் அந்த மணநாளைக் கொண்டாட
முடியும். இருவரும் உறவு கசந்து பிரிந்துவிட்டால், அதன் பிறகு அந்த மணநாளை யாரும்
கொண்டாட முடியாது; அப்படிக் கொண்டாடினால் அதை விடப் பித்துக்குளித்தனம் எதுவும்
இருக்க முடியாது!
அதே போலத்தான், சுதந்திர நாளைக் கொண்டாடுவது
என்றால், நீங்கள் கொண்டாடும்பொழுது அந்த சுதந்திரம் உங்களிடம் இருக்க வேண்டும்! ஆனால்,
தமிழர்கள் உண்மையிலேயே சுதந்திரக் குடிமக்களா?
‘பூவரசன்’
எனும் ஒரு (மொக்கை) படத்தில், கவுண்டமணியிடம் செந்தில் கேட்பார், “என்ன! இந்தியாவுக்கு
சுதந்திரம் கெடைச்சிடுச்சா?! அப்படின்னா, அந்த சுதந்திரம் இப்ப யாருகிட்டண்ணே
இருக்கு?”
என்று. அதற்குக் கவுண்டமணி, அப்பொழுது தெருவில் எடுத்துச் செல்லப்படும் பிணத்தைக்
காட்டி, “அதோ மல்லாக்கப் போறானே? அவன்கிட்ட போய்க் கேளு!” என்பார்.
அந்தப் படம் வந்தபொழுது அப்படி இருந்ததோ இல்லையோ,
ஆனால் இப்பொழுது, இந்தியாவில் சுதந்திரத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிலை பாக்கு போலப் பயனில்லாமல்!
விளையாட்டுக்கோ வெறுப்பிலோ சொல்லவில்லை.
சிந்தித்துப் பாருங்கள்! சுதந்திரக் குடிமக்களுக்கான எந்த உரிமையாவது, வசதியாவது
இங்கு நமக்கு இருக்கிறதா?