நீருக்காக நெருப்பாய் எரிகிறது தமிழ் மண்! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மொத்தத் தமிழ்நாடும் பிடரி சிலிர்த்து நிற்கிறது! தமிழன் எனச் சொல்லிக் கொள்ளப் பெருமை தரும் இன்னொரு வரலாற்றுத் தறுவாய் இது!
ஆனால் இதே நேரத்தில், போராட்டம் எனும் பெயரில் நம்மைத் துணுக்குறச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை.
காவிரிக்காகச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம், தீக்குளிப்பு போன்ற செய்திகளைப் பார்க்கும்பொழுது, நடக்கும் போராட்டங்கள் சரியான திசையில்தான் செல்கின்றனவா எனும் ஐயம் எழாமல் இல்லை.
கடந்த 2016ஆம் ஆண்டுக் காவிரிப் பிரச்சினையின்பொழுது கருநாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துச் சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சிப் பேரணியில் அக்கட்சி மாணவர் அணி மேலாளர் விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஈரோடு மாவட்டம், சித்தோட்டைச் சேர்ந்த பொம்மை விற்பனையாளர் தருமலிங்கம் என்பவர் கடந்த வாரத்தில் (12.04.2018) தீக்குளித்து இறந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அதற்கு அடுத்த நாள் (13.04.2018) விருதுநகரில் சரவண சுரேஷ் என்பவரும் தீக்குளித்தார்.
இவர்கள் தவிர, புகழ் பெற்ற சமூக ஆர்வலரான டிராபிக் இராமசாமி அவர்கள் முதற்கொண்டு பலரும் இதே கோரிக்கைக்காக ஆங்காங்கே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள்.
கொண்ட கொள்கைக்காக உயிரையே அளிப்பது என்பது சிரமேற்கொண்டு வணங்க வேண்டிய ஈகைதான் (தியாகம்தான்); அதில் அணுவளவும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஈகையர்களே! இப்படி உயிரைத் தருவதால் காவிரி கிடைத்து விடும் என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? அப்படிக் கிடைத்து விடும் என்றால் சொல்லுங்கள், நீங்கள் மட்டுமில்லை இன்னும் ஆயிரம் ஆயிரம் பேர் வரிசை கட்டி வரக் காத்திருக்கிறோம் காவிரிக்காகவும் நம் வேளாண் பெருமக்களுக்காகவும் உயிரைக் கொடுக்க. ஆனால், தமிழர்கள் நாம் எத்தனை இலட்சம் பேர் உயிர் விட்டாலும் அதையெல்லாம் ஒரு செய்தியாகக் கூட யாரும் இன்று மதிக்க மாட்டார்கள் என்பதே வலிக்க வைக்கும் உண்மை.
“உணவு இல்லாமல் தமிழர்கள் செத்தாலும் கவலையில்லை, நாட்டுக்கு எரிபொருள் கிடைப்பதுதான் முக்கியம்” எனச் சொல்லாமல் சொல்லும் விதமாகத்தான் இவ்வளவு எதிர்ப்பையும் மீறிச் சாணவளித் திட்டம் (மீத்தேன் திட்டம்) கொண்டு வருகிறார்கள்!
“குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தமிழினம் செத்து மடிந்தாலும் சரி, கருநாடகத்தின் நாற்காலியை விட்டுக் கொடுக்க முடியாது” எனக் குறிப்பால் உணர்த்தும் வகையில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தவிர்த்து வருகிறார்கள்!
அவ்வளவு ஏன், ஸ்டெர்லைட் வழக்கில், தமிழ் மக்கள் உயிரை விடத் தாமிரமே இந்நாட்டுக்குத் தேவை எனத் தீர்ப்பே எழுதிய வரலாறு இங்குண்டு!
இப்படி, தமிழர் இனமே அழிந்தாலும் தங்கள் பேரழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பவர்கள், நம்மில் சிலர் தீக்குளிப்பதாலோ, உண்ணாநிலை இருந்து உயிரை விடுவதாலோ மட்டும் மனமிரங்கித் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்பது எனக்கு இம்மியளவும் புரியவில்லை போராளிகளே!
அதற்காக நான் உங்களை வன்முறையில் ஈடுபடச் சொல்லவில்லை; அறவழிப் போராட்டங்களைக் கைவிட்டுப் போர்க்கருவிகளை நாடச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அதை விடப் பித்துக்குளித்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனெனக் கேட்டால்...
கற்கால ஆட்சி முறையாகக் கருதப்பட்ட அரசாட்சிக் காலங்களில் கூட மக்களுக்கு அரசர்களை எதிர்த்துப் போர் செய்யும் ஆற்றல் இருந்தது. ஆனால், நாகரிக நாற்றம் மிகுந்த இன்றைய மக்களாட்சி முறையில் தேசியம் எனும் அமைப்பை எதிர்த்து நாம் நம் நகத்தைக் கூடப் பயன்படுத்த முடியாது. பல்குழல் பீரங்கிகள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுக்குண்டுகள் எனப் பேரழிவுப் போர்க்கலன்களைப் போர் போராகக் குவித்து வைத்திருக்கும் இன்றைய உலக நாடுகளுக்கு எதிராக மக்கள் நாம் எத்தனை கோடிப் பேர் திரண்டாலும் ஒரு நொடி ஆகாது சாம்பலாக்க.
எனவே, எல்லா வல்லமையும் பொருந்திய தேசியம் எனும் அமைப்புக்கு எதிராக ஏதுமறியாப் பொதுமக்கள் நாம் ஏந்தக்கூடிய ஒரே படைக்கருவி, அண்ணல் காந்தி நமக்களித்த அறவழிப் பெருமுறைதான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆனால், அறவழி எனும் பெயரில் நம்மை நாமே கொன்று கொள்வதைத்தான் வேண்டா என்கிறேன்! போராட்டம் எனும் பெயரால் நம்மை நாமே சிதைத்துக் கொள்வதைத்தான் தவறு என்கிறேன்! தான், தன் குடும்பம் என்றே வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கிடையில், அடுத்தவர்களுக்காகப் போராடும் மனம் படைத்த மிகச் சிலரும் இப்படித் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டால் சமூகத்துக்காகப் பாடுபடுவது யார் என்கிற ஒரே ஒரு கேள்வியைத்தான் சிந்திக்க வேண்டுகிறேன்!
முத்துக்குமார் தீக்குளித்தாரே என்பீர்கள். இல்லையெனச் சொல்லவில்லை. ஈழத்தில் தமிழினப் படுகொலை நடந்தபொழுது ஈழத் தமிழர்களுக்காக வழக்கமாகப் போராடும் கட்சிகளும் தலைவர்களும்தாம் அப்பொழுதும் போராடினார்கள்; பொதுமக்கள் தரப்பில் பெரிய எழுச்சி ஏதும் இல்லை. ஏனெனில், பொதுமக்களின் பார்வை படுகொலை செய்யப்படும் தமிழர்கள் பக்கம் திரும்பாமல் ‘விடுதலைப்புலிகள் நல்லவர்களா, கெட்டவர்களா?’ என்ற ஆராய்ச்சியிலேயே நிலைபெற்றிருக்குமாறு சில ஊடகங்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டன. அதை உடைத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வுத் தீயைப் பற்ற வைக்கத் தன் மேனியில் நெருப்பு வைத்துக் கொண்டார் மாவீரர் முத்துக்குமார். அதன் பிறகுதான் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலக அளவில் தமிழினப் படுகொலைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்து வேகமெடுத்தன.
அதற்காக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமானால் தீக்குளிக்கலாம் என்பது பொருளில்லை. அப்படி முத்துக்குமார் தன் உயிரையே கொடுத்தும் அவர் விருப்பம் நிறைவேறியதா என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்! முத்துக்குமார் மட்டுமில்லை, அதே காலக்கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காக அதே முறையில் தங்கள் இன்னுயிரை நீத்த பதினைந்துக்கும் மேற்பட்ட ஈகிகள், மூவர் விடுதலைக்காகத் தன்னையே எரித்துக் கொண்ட ஈகையர் செங்கொடி, இராசபக்ச வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தன்னைத் தானே கொளுத்திக் கொண்ட ஈகி சேலம் விஜயராஜ் எனத் தீக்குளித்த யாருடைய கோரிக்கையும் இன்று வரை நிறைவேறவில்லை.
ஒற்றைப் பொறி பட்டாலே துடித்துப் போகும் இந்த உடம்பை முழுக்க முழுக்க வெந்து அவியும்படி எரித்துக் கொள்ளும் அளவுக்கு ஈக உணர்வு கொண்ட இவர்கள், உயிர் நீத்ததற்கு மாறாகப் போராட்டக் களத்தில் தொடர்ந்து இயங்கியிருந்தால் இவர்களை விடச் சிறந்த முறையில் வேறு யாரும் அந்தப் போராட்டங்களை வழிநடத்தியிருக்க முடியாது. அதன் பலனாக வெற்றி கிடைத்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், அதைச் செய்யாமல் இவர்கள் தங்கள் உயிரைக் கொடுப்பதையே போராட்டமாகக் கருதியதால் உயிர், உடல், வாழ்க்கை, குடும்பம் என எதையுமே பொருட்டாகக் கருதாமல் போராடக்கூடிய தலைசிறந்த போராளிகளை இந்த இனம் இழந்ததுதான் மிச்சம்!
மேலும், இப்படித் தற்கொலைப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இதை அறவழிப் போராட்டமாகக் கருதிச் செயல்படுகிறீர்கள். ஆனால், உண்மை என்னவெனில், அறவழிப் போராட்டத்தில் தீக்குளிப்பு போன்ற தற்கொலைச் செயல்களுக்கு ஒருபொழுதும் இடமில்லை என்பதே. காந்தியடிகள் தலைமையில் இந்திய விடுதலைக்காகப் போராடிய யாரும் தீக்குளித்ததாகப் பதிவு இல்லை. பின்னாளில், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்பொழுது இந்த வழக்கம் தொடங்கியது என்றாலும், அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, இவ்வாறு தீக்குளித்தவர்களை ஈகையர்களாகப் (தியாகிகளாகப்) போற்ற மட்டும்தான் நம் தலைவர்கள் முன்வந்தார்களே தவிர, போராட்ட வடிவமாக எந்தத் தலைவரும் இதுவரை இதை ஏற்கவில்லை என்பதைத் தமிழ் மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்!
தற்கொலையால் உரிமைகளைப் பெற முடியுமானால் நானே தீக்குளித்திருப்பேன்
தற்கொலை போராட்ட வடிவம் இல்லை! - சீமான்
தற்கொலை போராட்ட வடிவம் இல்லை! - சீமான்
ஆக, போராட்ட வடிவமாகவே ஏற்கப்படாத ஒன்றை, எந்தக் கோரிக்கை நிறைவேறவும் பயன்படாத ஒன்றை, தனக்காகப் பாடுபடும் மிகச் சிலரையும் இழந்து இந்த சமூகம் மேலும் சீர்கெடக் காரணமாக இருக்கிற ஒன்றை, போராட்டம் எனத் தவறாக நினைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாட்களுக்கு நம்மை நாமே அழித்துக் கொள்ளப் போகிறோம்?!... சிந்தியுங்கள் நண்பர்களே!
இவ்வளவுக்கும் பிறகும், “இல்லையில்லை, தீக்குளிப்பு என்பது போராட்ட வடிவம்தான். அதில் நான் ஈடுபடத்தான் போகிறேன்” என்பவரா நீங்கள்? அப்படியானால், அதைச் செய்யும் முன் ஒரே ஒரு தகவலை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவிலேயே தற்கொலைப் போராட்டம் நடத்தி உயிரை விடுபவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் யார் தெரியுமா? தமிழர்கள்தாம்! (பார்க்க: Self-Immolation, Wikipedia)
இதன் பொருள் என்ன நண்பர்களே? தமிழர்களை அழிக்கப் பார்க்கிறார்கள் என மற்றவர்களைக் குற்றம் சாட்டும் நாம், அதை எதிர்க்கிறோம் எனும் பெயரில் நம் கையாலேயே அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான். ஆம், தற்கொலையைப் போராட்ட வடிவமாக எண்ணி நம் இனத்தை நாமே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இதன் பொருள்! தமிழினத்தை அழித்து ஒழிப்பதையே முழு நேரப் பணியாக ஏற்றுக் கொண்டு இங்கே எத்தனையோ வெறியர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தோற்கடிக்க வேண்டிய நாம், தீக்குளிப்புப் போராட்டம் எனும் பெயரில் அவர்கள் விருப்பத்தைத்தான் நிறைவேற்றி வைத்துக் கொண்டிருக்கிறோம். இதை விடத் தமிழினப் பகைவர்களின் வேலையை எளிதாக்கும் நடவடிக்கை வேறு எதுவும் இல்லை.
எனவே தமிழர்களே,
தமிழர் உடல் தின்ன வட்டமிடும் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு விருந்து படைக்க நீங்கள் விரும்பினால்...
தமிழர் குருதியைச் சுவை பார்க்கத் துடிக்கும் குள்ளநரிகளைக் கொழுக்க வைக்க நீங்கள் விழைந்தால்...
தமிழர் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாவற்றிலும் தனித்தன்மை குலைக்க ஊடுருவி நிற்கும் கருவேல மரங்களின் வேருக்கு நீர் வார்ப்பதுதான் உங்கள் ஆர்வமானால்...
வாருங்கள் தீக்குளிப்போம் கொத்துக் கொத்தாக!
கடைப்பிடிப்போம் உண்ணாநிலை அணி அணியாக!
❀ ❀ ❀ ❀ ❀
தொடர்புடைய பதிவுகள்:
பதிவின்
கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம்
மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான
கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால்
இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க
விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
நல்ல பதிவு குறிப்பாக அறவழிப் போராட்டம் பற்றிச் சொல்லியதும் தீக்குளிப்பு தற்கொலை என்பது போராட்டமல்ல என்று சொல்லியதும். ஆம்!தீக்குளிப்பு தற்கொலை என்பதைப் போராட்டமாக ஏற்க முடியவில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போலத் தொடர்ந்து அறவழிப் போராட்டமே சிறந்தது என்ற கருத்தே. பொதுவாக அது எந்தப் போராட்டமாக இருந்தாலும் சரி...ஏனென்றால் இது போன்றவை போராட்டம் என்பதை விட ஏதோ ஒரு மன அயற்சி என்றே கொள்ளப்படும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ! ஆம், நீங்கள் கூறுவது போல் இதை மன அயர்ச்சியாகத்தான் சீமானும் வருணிக்கிறார். தமிழ்த் தலைவர்கள் யாரும் இதை ஒரு போராட்ட வடிவமாக எந்நாளும் ஏற்றதில்லை. சமூகத்துக்காக உயிரையே தருபவர்களைப் போற்ற வேண்டியது நம் கடமை; அதிலும் தமிழர்களைப் பொறுத்த வரை, அதுதான் நமது சமயமாகவும் உள்ளது. அதனால்தான் தீக்குளித்த போராளிகளுக்கு வீரவணக்கம், அஞ்சலி போன்றவை செலுத்தப்படுகின்றன. ஆனால், இதனாலேயே பலர் இதை ஏற்பிசைவளிக்கப்பட்ட போராட்ட வடிவங்களில் ஒன்றாகக் கருதுவது வேதனையானது. எனவே, இது குறித்து எழுத வேண்டும் என வெகுநாட்களாக நினைத்திருந்தேன். தற்பொழுது காவிரி மேலாண்மை வாரியம் கோரும் போராட்டங்கள் நடைபெறுவதால் இப்பொழுது இதைச் சொல்வது பலனளிக்கும் என்பதோடு இதைப் பார்த்த பிறகாவது காவிரிக்காகத் தீக்குளிக்கும் எண்ணம் உள்ளவர்கள் அதைக் கைவிடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
நீக்குமுதல் ஆளாக வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ!
அருமை.... 👌
பதிலளிநீக்குஅருமை.... 👌
பதிலளிநீக்குஅட! நீயே பாராட்டும் அளவுக்கு எழுதி விட்டேனாப்பா!! மிக்க மகிழ்ச்சி! இதற்காக நீ பிளாகர் கணக்கே துவங்கி வந்து பாராட்டியிருப்பது எந்த அளவுக்கு நீ இந்தக் கட்டுரையைச் சிறப்பானதாகக் கருதுகிறாய் என்பதைக் காட்டுகிறது. மிக மிக மகிழ்ச்சி தம்பி!!!
நீக்குநல்ல ப்ராக்டிகல் எண்ணங்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! நேர்மறையான இந்தப் பதிவு உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று எதிர்பார்த்தேன். மகிழ்ச்சி!
நீக்குக்குளிப்புத் தவிர்க்கப்பட வேண்டும் ஐயா
பதிலளிநீக்குதொடர்ந்து போராடி வெற்றிபெறுவோம்
அருமையான பதிவு
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா!
நீக்குவெகு நாட்களாக எழுத நினைத்திருந்த பதிவு. தங்கள் பாராட்டைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி! தாங்களும் காவிரிப் போராட்டங்களையும் தமிழர் உரிமைகளையும் குறித்து எழுத வேண்டும் என்பது சிறியேனின் வேண்டுகோள்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அறவழிப் போராட்டங்கள் மட்டுமே தேவை. உணர்ச்சிவசப்பட்டு தீக்குளித்தல் தற்கொலை செய்துகொள்ளுதல் போன்றவை தேவைதானா? உங்கள் பதிவு இக்கருத்தை விளக்கியுள்ளது. போராட்டக்காரர்கள் உணரவேண்டும்.
பதிலளிநீக்குஆம் ஐயா! அதுதான் என் விருப்பமும். இதைப் படித்து யாராவது ஒரே ஒருவராவது தன் தீக்குளிப்பு, சாகும் வரை உண்ணாநிலை போன்ற எண்ணங்களை மாற்றிக் கொண்டால் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவேன். பெருமக்கள் சிலரின் பார்வைக்கு இதை அனுப்பி வைத்துள்ளேன். எனவே, உரியவர்களின் பார்வைக்குச் சென்று சேரும் என நம்புகிறேன். உங்கள் இசைவான கருத்துக்கு மிக்க நன்றி!
நீக்குதீக்குளிப்பு / தற்கொலை
பதிலளிநீக்குதமிழரின் உரிமைகளை வென்றெடுக்க
ஏற்ற போராட்ட வடிவமல்ல - அது
தமிழரின் எண்ணிக்கையைக் குறைக்குமே தவிர
தமிழரின் இலக்கை அடைய இடம் தராது!
தமிழரின் இலக்கை அடைய
ஓரணியில் பொங்கியெழும் மக்கள் எழுச்சியே வழி!
எடுத்துக்காட்டு:
மரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்காக
பொங்கியெழுந்த மக்கள் அலை வீச்சு - அதை
கண்ணுற்ற உலகே அதிர்ந்தது!
சரியாகச் சொன்னீர்கள் ஐயா! ஆனால், சல்லிக்கட்டுப் போராட்டம் போல் மீண்டும் ஓர் எழுச்சி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆளும் தரப்புகள் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன. அதனாலேயே தங்கள் உணர்வை வெளிக்காட்ட இயலாத மக்கள் பலர் தீக்குளிப்புப் போன்ற தற்கொலைப் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். என்ன செய்வது? ஆள்பவர்கள் மனிதர்களாக இருந்தால் மனிதர்கள் உயிரிழப்புப் பற்றிக் கவலைப்படுவார்கள்! அதுதான் இங்கு இல்லையே!
நீக்குகண்டிப்பாய்ப் பகிர்கிறேன்! அழைப்புக்கு நன்றி!
பதிலளிநீக்கு