.

வியாழன், மே 18, 2017

தமிழினப் படுகொலை எட்டாம் ஆண்டு நினைவேந்தலும் நீதிக்கான புதிய வாய்ப்பும்!

Eelam Tamil Genocide 8th Memorial
தோ, எட்டாவது ஆண்டும் முடிந்து விட்டது! ஆனால், நடந்த அந்த மாபெரும் கொடுமைக்கான நீதியை நாம் இன்னும் எட்டியபாடில்லை.

தமிழர்களாகப் பிறந்தது தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யாத ஏதுமறியாப் பொதுமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியும் வேரும் விழுதுமாய்ச் செத்து மடிந்து இன்றோடு எட்டு ஆண்டுகள் முடிகின்றன. வியட்நாம் போரின்பொழுது, போரின் கொடுமையைக் காட்டும் விதமாக ஒரே ஒரு புகைப்படம் வெளிவந்ததற்கே கொதித்தெழுந்த உலக சமுதாயம், அதுபோல் எத்தனையோ நூற்றுக்கணக்கான படங்களும் விழியங்களுமே (videos) வெளிவந்தும் இன்று வரை ஈழத் தமிழர்களின் நிலைமையை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், என்ன?...


வியட்நாம் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நேச நாட்டுப் படைகள் ஒருபுறமும் சீனம், சோவியத் ஒன்றியம் போன்ற பொதுவுடைமை நாடுகள் எதிர்ப்புறமும் இருந்தன. (இந்த ஒரு போரில் மட்டுமில்லை, உலகப் போர்கள் முதல் பன்னாட்டு மேடைகள் வரை, எல்லாவற்றிலுமே எப்பொழுதுமே மேற்கத்திய நாடுகளும் அவற்றின் எதிரி நாடுகளான பொதுவுடைமை நாடுகளும் எதிரெதிராக நிற்பதுதான் வரலாறு). ஆனால், ஈழத் தமிழினப் படுகொலையில் அமெரிக்கா – இரசியா, இங்கிலாந்து – இசுரேல், இந்தியா – பாகிஸ்தான் எனப் பகைமையில் வரலாறு படைத்த நாடுகளெல்லாம் ஒன்றாகத் தோள் மீது கை போட்டுக் கொண்டு வந்தன தமிழர் சதையைச் சுவை பார்க்க!

வல்லரசு நாடுகள்தாம் இப்படி என்றால், போராளித்தனத்துக்கே பிறந்த பொதுவுடைமைக் குழந்தைகளாகக் காட்டிக் கொள்கிற கியூபா, வியட்நாம், வெனிசுலா போன்ற வல்லாதிக்க எதிர்ப்புக்குப் பெயர் பெற்ற நாடுகள் கூடத் தமிழ் இனப்படுகொலை தொடர்பான பன்னாட்டு அமர்வுகளில் இலங்கையின் நாற்காலிக்கு ஆணி அடிக்கத்தான் சுத்தியல் தூக்குகின்றன! காரணம், அவர்கள் தரப்பிலிருக்கும் ஒரே ஒரு வல்லரசான ரஷ்யாவின் கரங்களிலும் தமிழர்களின் கண்ணீர் உப்புப் படிந்து கிடக்கிறது!

இப்படி, உலகப் பந்தையே வழிநடத்தும் இரு தரப்பு நாடுகளும் ஏதோ ஒரு வகையில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தமிழர் குருதியில் கை நனைத்தவையாகவே இருக்கும் நிலையில், தமிழருக்காகக் குரல் கொடுக்க நாடு ஏது? குற்றவாளிகளாலேயே நிறைந்து கிடக்கும் இவ்வுலகத்தில் நீதியரசர் அரியணைக்கு ஆள் ஏது?

அப்படியே தப்பித் தவறி இங்கிலாந்தோ அமெரிக்காவோ தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது ஈழப் பிரச்சினையில் ஏதாவது நடவடிக்கை எடுக்கலாம் என முன்வந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய இருக்கவே இருக்கிறது புத்தரும் காந்தியும் பிறந்த புனித பூமியாம் இந்தியா!

பன்னாட்டுச் சட்டங்களின்படி, இலங்கையின் அண்டை நாடு எனும் முறையில் அதன் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட உரிமை உடைய ஒரே நாடு இந்தியா. அதையே தன் கூட்டாளியாக்கி விட்ட நிம்மதியில்தான் எந்தக் காலத்திலும் தன்னை யாரும் அசைத்து விட முடியாது எனும் இறுமாப்பில் இருக்கிறது இலங்கை.

இந்தியா வல்லரசாகவில்லை என ஏங்குகிறார்கள் எல்லாரும். உண்மையில் இந்தியாவை விடப் பெரிய வல்லரசு உலகில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

அமெரிக்கா, இங்கிலாந்து முதலான வல்லரசு நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் தங்கள் நுகர்பொருள் வாணிகத்துக்கு முழுக்க முழுக்க நம்பியிருப்பது இந்தியச் சந்தையைத்தான். இந்தியா மட்டும் தன் வாசலைப் பூட்டிவிட்டால் இவர்கள் கதை காலி. அதனால்தான் இனப்படுகொலையின் கடைசி நாளன்று தமிழர்களைக் காப்பாற்ற அமெரிக்கா தன் படைகளை இறக்க முடிவெடுத்தபொழுது ஒற்றைத் தொலைபேசி அழைப்பு மூலம் அதைத் தடுக்க முடிந்தது சோனியா காந்தியால். இதனால்தான் ‘பன்னாட்டு நீதிக் காவலர்’ எனும் தன் முகமூடி கிழிந்து தொங்கினாலும் கவலையில்லை என ஈழப் பிரச்சினையில் இந்தியா சொல்கிறபடியெல்லாம் இலங்கைக்குத் தாலாட்டுப் பாடுகிறது அமெரிக்கா.

அட, அமெரிக்கா, இந்தியா என நாடுகளைச் சொல்லி என்ன பயன்? தமிழர்களான நாம் மட்டும் என்ன செய்து விட்டோம்?

இவ்வளவு பெரிய இனப்படுகொலை நடந்து எட்டு ஆண்டுகள் ஆகியும் உலகத் தமிழர்கள் அனைவருக்குமான பன்னாட்டு அமைப்பு ஒன்றைக் கட்டியெழுப்ப இயலவில்லை நம்மால்! தமிழர்களுக்கு என ஒரு நாடு உருவாக்குவது அவ்வளவு எளிது இல்லைதான். ஆனால், குறைந்தது நமக்கான பன்னாட்டு அமைப்பைக் கூடவா நம்மால் நிறுவ முடியாது? ஆனால், அதைக் கூட இன்று வரை நாம் செய்தபாடில்லை.

“(எவ்வளவுதான் முயற்சி செய்தாலும்) ஜெயலலிதா ஒரு மாநிலத்தின் முதல்வர்தான். நாடுகள் எல்லாம் எங்களுக்குத்தான் ஆதரவாக இருக்கின்றன” என்று கோத்தபயா இராசபக்ச கொக்கரித்து ஆறு ஆண்டுகள் ஆகப் போகின்றன. ஆனாலும் இன்று வரை நாம், அவன் சொன்னதுதான் சரி என உறுதிப்படுத்தும் வகையில், இன்னும் மாநில அளவிலான முயற்சிகளைத்தான் மேற்கொண்டு வருகிறோம். தமிழர்கள் ஆளும் நாடுகள், தங்கள் நாட்டிலுள்ள தமிழர்களுக்காக எதையும் செய்யக்கூடிய நாடுகள் உலகில் உள்ளன. அத்தகைய தமிழர் செல்வாக்கு மிகுந்த நாடுகளை ஒருங்கிணைத்துப் பன்னாட்டு அளவிலான கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்க இன்று வரை நாம் முயலவில்லை.

வைகோ, திருமுருகன் காந்தி, அன்புமணி இராமதாசு ஆகியோர் வெறும் போராட்டம், பொதுக்கூட்டம் என்று மட்டும் இல்லாமல் ஐ.நா-விலும் உலக நாடுகளின் மாநாடுகளிலும் அவ்வப்பொழுது ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பி வருவது போற்றுதற்குரியதே. ஆனால், அது மட்டும் போதாது. மேற்சொன்னபடி, நமக்கெனப் பன்னாட்டு அளவிலான அமைப்புகள் இருந்தால், அவற்றின் மூலம் ஐ.நா-வில் நம் உரிமையை நாம் முறைப்படி (officially) முன்வைக்க முடியும். உலக நாடுகளுக்குத் தமிழர்களின் தொகை வலிமையைக் காட்ட முடியும். பன்னாட்டளவில் நமக்கு இருக்கும் அரசியல் வலிமையை உணர்த்த முடியும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, தமிழ்நாடு எனும் ஒரே ஒரு மாநிலத்தின் ஆட்சியை மாற்றுவதன் மூலமே பன்னாட்டுப் பிரச்சினையான ஈழப் பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என நாம் நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது என்பதே கசப்பான உண்மை.

குறிப்பாக, ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, தற்பொழுதைய காலக்கட்டம் ஓரளவுக்கு நலமானது. காரணம், ஈழத்தில் இன அழிப்பு நடந்தது முதல் கடந்த ஆண்டு வரை ஐ.நா-வின் பொதுச்செயலாளராக இருந்த பான் கீ மூன் இப்பொழுது இல்லை. தமிழினப்படுகொலை, மத்திய கிழக்குப் புரட்சி, உணவுக் கலவரம் என உலகில் எங்கு உயிர்கள் காவு வாங்கப்பட்டாலும் கவலை தெரிவிப்பதும் அறிக்கை விடுவதும் தவிர வேறு ஏதும் செய்யாமல் இருந்ததற்காகவே மறுபடியும் பொதுச்செயலர் பதவி பெற்ற பான் கீ மூன் மாறிப் புதிய பொதுச்செயலாளராக அந்தோணியோ குத்தேரஸ் பதவியேற்றுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் தலைமையமைச்சரான (பிரதமரான) அந்தோணியோ குத்தேரசு அவர்கள் ஏதிலியர்களுக்கான (அகதிகளுக்கான) ஐ.நா., தூதராகப் பத்து ஆண்டுகள் செயலாற்றியவர். இப்படிப்பட்ட ஒருவர் ஐ.நா-வின் தலைமைப் பதவியில் அமர்ந்திருப்பது தமிழர்கள் நமக்குக் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பு! ஏதிலியர்கள் உருவாகக் காரணமே போர்கள்தாம் என்பதை அவர் அறியாதிருக்க மாட்டார். அப்படிப் போர் எனும் பெயரில் நடத்தப்பட்ட இந்த இனப்படுகொலை குறித்தும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் இந்த இனச் சிக்கலால் ஓர் இனத்தின் பெரும்பகுதியினர் ஏதிலியர்களாக மாறியிருப்பது குறித்தும் அவர் கவனத்துக்குக் கொண்டு சென்றால் ஏதாவது நல்ல திருப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. அதைச் செய்ய வேண்டியது தமிழர்களான நமது இன்றைய தலையாய கடமை.

எனவே, தமிழ் மக்கள் - தமிழர் நாடுகள் ஆகியவற்றுக்கான பன்னாட்டு அமைப்புகளை உருவாக்கவும், ஐ.நா-வின் புதிய பொதுச் செயலரைச் சந்தித்து ஈழப் பிரச்சினை குறித்து எடுத்துரைக்கவும் ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராடி வரும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் மே 17, இளந்தமிழகம் (சேவ் தமிழ்சு), தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு போன்ற இயக்கத்தினர் ஆகியோர் அருள் கூர்ந்து முன்வர வேண்டும்!

நீங்கள் முன்வருவீர்கள் எனும் நம்பிக்கையோடு நானும் இந்தாண்டு அஞ்சலியைச் செலுத்துகிறேன் உங்கள் தலைமையின் கீழ்!


Eelam Tamil Genocide 8th Remembrance

வாழ்க தமிழ்! 
 வெல்க தமிழர்!
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி மே பதினேழு இயக்கம்.

முந்தைய ஆண்டுகளில் இதே நாள்:
தமிழினப் படுகொலை ஏழாம் ஆண்டு நினைவேந்தல் - செய்ய வேண்டியவை என்ன?
தமிழினப் படுகொலை ஆறாம் ஆண்டு நினைவேந்தலும் காத்திருக்கும் கடமைகளும்!
2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!
பிறக்குமடா தமிழீழம்! பறக்குமடா புலிக்கொடி!

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து ஈழத் தமிழர்களின் கனவு நினைவேற உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

பதிவுகள் உடனுக்குடன் மின்னஞ்சலில் வந்து சேர...

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அதே ஏக்கம்தான் ஐயா எனக்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடங்கி அடுத்த ஆண்டோடு அறுபது ஆண்டுகள் முடிவடைகின்றன. உலகின் மிக நீண்ட இனப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. ஆனால், உலகின் பிற பகுதிகளில் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் நீதி வழங்கும் உலக சமுதாயம் இந்தியாவை முன்னிட்டு இப்பிரச்சினையில் மட்டும் எந்தக் கவலையும் கொள்ளாதிருக்கிறது. இது கொடுமை இல்லையா?

   உணர்வார்ந்த கருத்துக்கு நன்றி ஐயா!

   நீக்கு
 2. உலகில் மே-18 ஆம் நாள்
  ஈழத் தமிழர் உறவுகள்
  முள்ளிவாய்க்காலில்
  செந்நீர் (குருதி) வெள்ளத்தில் மூழ்கிய போதும்
  உலகமே இரங்காத நாள்! - ஆயினும்
  ஈழத் தமிழரின் உண்மை நிலையை
  உலகம் எங்கும்
  ஆழப் பதித்த நாள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! என்றாவது ஒருநாள் இதற்கான நீதியை உலக சமூகம் வழங்கியே ஆக வேண்டும்! அப்படி இல்லாவிட்டால் அது நமக்கு மட்டும் தோல்வியில்லை உலக அறத்துக்கு ஏற்பட்ட தோல்வியே!

   இலங்கைத் தமிழரான நீங்கள் இப்பதிவுக்குக் கருத்துரைத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி! மிக்க நன்றி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி நண்பரே! உங்கள் முதல் வருகைக்கு அன்பான நல்வரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்! தொடர்ந்து படியுங்கள் உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! பதிவின் இறுதியில் உள்ள வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலம் தங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!

   நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (87) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (35) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (21) இனம் (44) ஈழம் (43) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கவிஞர் தாமரை (1) கவிதை (17) காங்கிரஸ் (6) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (10) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (29) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (2) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (1) திரையுலகம் (8) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (10) நிகழ்வுகள் (2) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (5) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (21) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (1) போட்டி (1) போர் (1) போராட்டம் (9) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மணிவண்ணன் (1) மதிப்புரை (3) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (5) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்