தமிழுலகினரே! ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்க நாம் இதுவரை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் மிக மிக முக்கியமான ஒரு முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது என்பதே உண்மை! நடந்த தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதோடில்லாது தமிழீழ விடுதலைக்கும் திறவுகோலாக அமையக்கூடிய அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தித் தமிழினத் தலைவர்களுக்கு நான் அனுப்பிய மடல் இங்கே உங்கள் பார்வைக்கு!
☟ ☟ ☟
தனிப்பெருமதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய உயர்திரு.திருமுருகன் காந்தி அவர்களுக்கு நேச வணக்கம்! இனப்படுகொலை நடந்து இந்தாண்டோடு பத்தாண்டுகள் முடிவடைகின்றன. இன்னும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்தபாடில்லை. தாங்களும் ஐ.நா-வில் உரையாற்றுவது, உலக நாடுகளிடம் வலியுறுத்துவது போன்ற பல முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். அதற்காகத் தமிழன் எனும் முறையில் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
இருப்பினும் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய இன்னோர் இன்றியமையாத முயற்சி இன்னும் மிச்சமிருக்கிறது. அதைத் தங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டு வரவே இதை எழுதுகிறேன்! எனவே அருள் கூர்ந்து இக்கடிதத்தை முழுமையாகப் படிக்க வேண்டுகிறேன்!












