.
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 12, 2026

'திருக்குறள் அறிஞர்' சாலமன் பாப்பையா அவர்களுக்குப் புகழஞ்சலி

Tribute to Solomon Pappaiah

"அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! இனிய குழந்தைகளே!" என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குறள் தமிழ் வளர்த்த கனித் தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைந்தார்!

இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப வசதியால், திருக்குறளில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்பதைக் கூட எளிதில் சொல்லி விடலாம். ஆனால் இதுவரை எத்தனை பேர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள் என்பதை எண்ணவே முடியாது. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மணக்குடவரில் தொடங்கி 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் புனைவு எழுத்தாளர் சுஜாதா வரை குறளுக்கு உரை எழுதிய பெருமக்களின் பெயர்ப் பட்டியல் அவ்வளவு நீளம். இருந்தாலும் திருக்குறளை எழுதியவர் யாரென்று கேட்டால் சாலமன் பாப்பையா என்று குழந்தைகள் சொன்னாலும் சொல்லும் என்கிற அளவுக்குக் குறளமுதை வீட்டுக்கு வீடு கொண்டு சேர்த்தவர் ஐயா அவர்கள்.

குறளுக்கு உரை எழுதிய அத்தனை பேருமே தன் தமிழ்த் திறமையைக் காட்டவே அந்தக் களத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் பாப்பையா அவர்கள், குறளின் பின்பாதியையும் முன்பாதியையும் மாற்றிப் போட்டுப் படித்தாலே பெரும்பாலான குறள்கள் புரிந்து விடும் என்று குறளைக் குறளாலேயே விளக்கியதைச் சிறு வயதில் கேட்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.

எடுத்துக்காட்டாக, "தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்" என்ற குறளை ஐயா எப்படி விளக்குவார் தெரியுமா? "வானம் வழங்கா தெனின் தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்" என்பார். "வானம் கொடுக்காவிட்டால் - அதாவது மழை பெய்யாவிட்டால் - தானமும் தவமும் வியன் உலகத்தில் தங்காது" என்பது அவர் அப்படிக் குறளைப் புரட்டிப் போட்டதிலேயே பாதி புரிந்து விடும். அதன் பிறகு வியன் உலகம், தங்கா போன்ற புரியாச் சொற்களுக்கான விளக்கம் அவர் மேற்கொண்டு தொடர்கையில் விளங்கிவிடும்.

இப்படித்தான்... இப்படித்தான் இவர் உரையாசிரியர்களே இல்லாமல் திருக்குறளை நாமே படிக்க முடியும் எனும் நம்பிக்கையை நமக்கு ஊட்டினார். காலங்காலமாக உரையாசிரியர்களெல்லாரும் தங்கள் விழிகளின் வழியாகவே வள்ளுவரைக் காட்டியபொழுது இவர் மட்டும்தான் நம் விழியாலேயே வள்ளுவரைப் பார்க்க வைத்தார். "இவ்வளவுதான்யா... இதுக்காய்யா இவ்வளவு கஷ்டம்? இதுக்காகவாய்யா திருக்குறளைப் படிக்காம இருக்கீக? படிங்கய்யா" என்று சொல்லாமல் சொன்னார்.

உலகெங்கும் பறந்து பறந்து பட்டிமன்றம் நடத்தினார். அதனால் ஊடகங்களெல்லாம் இந்த நேரத்தில், 'பட்டிமன்றப் பேரரசர்', 'பட்டிமன்ற அறிஞர்' என்றே ஐயாவைக் குறிப்பிடுகின்றன. பட்டிமன்ற நடுவர் மட்டுமில்லை புறநானூற்றை வரிசை புதுப்பித்தவர், சங்க இலக்கியங்களுக்கும் திருக்குறளுக்குச் செய்தது போலவே காணொளி உரை வழங்கியவர் என அவருக்குப் பல பெருமைகள் இருந்தாலும் உண்மையில் 'திருக்குறள் அறிஞர்' என்பதுதான் அவர்தம் சரியான அடையாளம்.

ஆனால் அவர் நம்மை விட்டுப் பிரிந்திருக்கும் இன்றைய நிலையிலும் 'சிவாஜி' படத்தின் அங்கவை - சங்கவை நகைச்சுவையைக் குறிப்பிட்டுக் கீழ்த்தரமாக நினைவுகூர்கிறார்கள் சிலர்.

என் வயதின் இருபதுகளில் அந்த நகைச்சுவையைப் பற்றிய இத்தகைய எதிர்வினைகள் என்னிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால் இந்த நாற்பது வயதில் நினைத்துப் பார்க்கும்பொழுது அந்த நகைச்சுவை வேறு கோணத்தில் தென்படுகிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் காதலையும் வீரத்தையும் இரு கண்ணெனப் போற்றி வளர்த்த ஒரு சமுகம், இடைக்காலத்தில், வெளியிலிருந்து வந்த தவறான பண்பாட்டின் தாக்குதலால் காதல் எனும் சொல்லைக் கூடத் தவறானதாகப் பார்க்கும் அளவுக்குக் குழம்பிக் கிடக்கிறது இன்று வரையில். இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், "அங்கவை சங்கவைன்னு எங்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு. பழகிப் பாருங்க! புடிச்சா கட்டிக்குங்க! இல்லேன்னா ஃபிரெண்ட்சா இருப்போம்" என்று ஐயா பேசியது மறந்து போன தமிழ்ச் சமுகத்தின் உண்மையான காதல் பண்பாட்டை மீண்டும் நினைவூட்டும் நற்பணி என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பழகிப் பார்த்துத் திருமணம் செய்யும் பழந்தமிழர் காதல் மரபை மீட்டெடுக்கும் இந்த வேலையை சாலமன் பாப்பையா போல ஒரு தமிழறிஞர் செய்யாமல் வேறு யார் செய்ய முடியும்? பாரி மகளிரை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று குதிக்கும் அரைகுறைகளே, ஆனானப்பட்ட பாப்பையாவுக்குத் தெரியாத பாரி மகளிரையா நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள்? அப்படி ஒரு காட்சியில் நடிக்கும் முன் உங்கள் அளவுக்குக் கூடவா அவர் சிந்தித்திருக்க மாட்டார்?

நீங்கள் எவ்வளவுதான் தூற்றினாலும் நம் தமிழர் திசைகாட்டியாம் திருக்குறள் இருக்கும் வரை பாப்பையாவின் பெயரும் இருக்கும்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் வானுறையும் தெய்வத்துள் கட்டாயம் வைக்கப்படுவார்.

எனவே இரண்டாயிரத்துக் குழந்தைகளிடமும் (2K kids) குறள் வளர்த்த தமிழ்ப் பெருமகனாரைப் போற்றுவோம்!

வாழ்க சாலமன் பாப்பையா புகழ்! 🙏🏽

புதன், ஜூன் 10, 2026

இயக்குநர் இமயத்துக்குப் புகழஞ்சலி!


சிலைகளை வடிக்கும் சிற்பிகளுக்கிடையில்
சிற்பிகளையே படைத்த
அற்புதனே!

ஏ.வி.எம்., விசயா வாகினி என
படப்பிடிப்புக் கூடங்களுக்குள்
சிறைப்பட்டுக் கிடந்த திரைமொழியை
விடுதலை செய்ய வந்த
தமிழ்மகனே!

உலகத் திரைப்படங்களைப் பார்த்து
தமிழில் சூடுபோட்டுக் கொண்ட
இயக்குநர்களின் மத்தியில்
தமிழ் நிலத்தின் கதைகளை
உலகத் தரத்தில் சொன்ன
மண்வாசனைப் படைப்பாளியே!

உன் இனிய தமிழ் மக்களுக்கு
🙏🏽வணக்கம் கூடச் சொல்லாமல்
எங்கு சென்றாய்?😭

நீ
அடித்து அழ வைத்தவர்களெல்லாம்
இன்று
நடிக்காமலே அழுது கொண்டிருக்கிறார்கள்!
எப்பொழுது கேட்கும்
அந்தக் கரகரத்த குரலில் ஒரு
“கட், டேக் ஓகே”?

கல்லுக்குள் ஈரம் கண்டவனே
பதினாறு வயதினிலே
முதல் மரியாதை
என உன்
காதல் ஓவியங்களை நீ
அயல்நாட்டில் பிறந்து
ஆலிவுட்டில் தீட்டியிருந்தால்
உலகெங்கும்
கொடி பறந்திருக்கும்
உன் புகழ்!
வாசலில்
தவமிருந்திருக்கும்
ஆசுகார்!

மாறாக,
தீந்தமிழ் மண்ணில்
தேனியிலே பிறந்தாய்
தேனினும் இனிய
கலைத்தமிழ் சுரந்தாய்!
அது
நாங்கள் பெற்ற பேறு!
உனகென்றுமில்லை ஈறு!!

காதலும் பாசமும்
வீரமும் ஈகமும்
தமிழ் மண்ணில்
கமழும் வரைக்கும்
சப்பாணியும் மயிலும்
விருமாயியும் மாயாண்டியும்
பாலு தேவரும் சங்கரனும்
குயிலும் மலைச்சாமியும்
வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்
அவர்கள் வாழும் வரைக்கும்
உன் நினைவின்
அலைகள் ஓய்வதில்லை!🌊

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பொய்யா? இதோ ஆதாரம் - 'தி இந்து' நாளிதழே, மன்னிப்புக் கேள்!

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்பொழுது பொள்ளாச்சியில் 200 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் 'பராசக்தி' படத்தில் காட்டியிருப்பது பொய் என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் இந்தியப் படை அலுவலர் (Ex-Army officer) தேவசகாயம் (இணைப்பு - tinyurl.com/DevasagayamInterview)

தி இந்து நாளிதழில் கடந்த சனவரி 17 அன்று வெளியாகியிருக்கும் மேற்படி செவ்வியில் (interview) அவர்  மேலும் கூறுகையில், "இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்வதும் பொய். போல்ட்-ஆக்சன் .303 ரைஃபிள் வகைத் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இறந்தோர் எண்ணிக்கை 10 மட்டுமே" என்கிறார்.

அப்படியானால் இது என்ன தோழர்களே?👇🏽

13.02.1965 dated 'The Indian Express' says light machine guns used in Pollachi Massacre

இங்கே படத்தில் நீங்கள் பார்ப்பது 'பொள்ளாச்சிப் படுகொலை' எனக் குறிப்பிடப்படும் மேற்கண்ட கொடூர நிகழ்வு நடந்த மறுநாள் (13.02.1965) வெளியான தி இந்தியன் எக்சுபிரசு நாளேட்டின் முகப்புப் பக்கம். (இணைப்பு: tinyurl.com/Feb13-1965-IE)

இதில் "எளிய-இயந்திரத் துப்பாக்கிச் சூடு [Light machine gun (LMG) fire]" என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பாருங்கள்!

"அப்படியே இருந்தாலும் எண்ணிக்கை தவறுதானே? நீ காட்டும் இந்தியன் எக்சுபிரசு நாளேட்டிலேயே உயிரிழந்தோர் 10 பேர் என்றுதானே குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேவசகாயமும் அதே எண்ணிக்கையைத்தானே கூறுகிறார்? அப்படியானால் அவர் சொல்வது சரிதானே?" என்று நீங்கள் கேட்கலாம்.

இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மக்கள் கூட்டத்தைப் பார்த்துச் சுட்டால் வெறும் 10 பேர் மீதுதானா படும்? இதை நான் கேட்கவில்லை, அதே செவ்வியில் தேவசகாயமே சொல்கிறார்.

"நாங்கள் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால் சில பல நூறு சுற்றுகள் சுடக்கூடிய அவை நூற்றுக்கணக்கானோரைக் கொன்றிருக்கும்" என்கிறார்.

இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மறுநாளே வெளியான செய்தித்தாள் மூலம் இப்பொழுது நமக்கு உறுதியாகிவிட்டதால் இயந்திரத் துப்பாக்கிச் சூட்டின் விளைவு பற்றி இவர் சொல்லும் கருத்தையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கொல்லப்பட்டோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்திருக்கும் என்ற முடிவுக்குத்தானே நாம் வர வேண்டியிருக்கிறது? என்ன இருந்தாலும், இவ்வளவு பெரிய கலவரம் நடந்த மறுநாளே கொல்லப்பட்டோர் எண்ணிக்கை செய்தித்தாளில் சரியாக வரும் என நாம் எதிர்பார்க்க முடியாது இல்லையா?

சரியாக இதே நாளில் 61 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நாளிதழ் இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கிறது. உண்மை இப்படி வெட்டவெளியில் இருக்கும்பொழுது, இவை எதையுமே ஆராயாமல் முன்னாள் படைவீரர் என்பதற்காக, ஒருவர் சொன்னதை அப்படியே வெளியிட்டுப் பொய்த்தகவல் பரப்பிய தி இந்து நாளிதழ் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்!

இப்படி விரல்நுனியில் அனைத்து விவரங்களும் கிடைக்கும் இந்தத் தகவல் ஊழியிலேயே (information era) இவன்கள் இப்படிப் பச்சைப் பொய்யை வாய்கூசாமல் சொல்கிறான்களே, இப்படி எந்த வசதியுமே இல்லாத அந்தக் காலத்தில் இவன்கள் என்னென்ன பொய்களைச் சொல்லியிருப்பான்கள்? எப்பேர்ப்பட்ட உண்மைகளையெல்லாம் மூடி மறைத்திருப்பான்கள்?😡

அனைத்தையும் வெளியில் கொண்டு வரத் தேவை இன்னும் பல 'பராசக்திகள்'! தீ பரவட்டும்!🔥

படம்: நன்றி தி இந்தியன் எக்சுபிரசு, கூகுள் புக்சு

ஞாயிறு, ஜனவரி 11, 2026

எப்படிப் பெரும்பான்மை மொழியானது இந்தி? - ஒரு வெட்கங்கெட்ட வரலாறு! | காணொளி

என்ன இருந்தாலும் இந்தி இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி, அதை நாம் கற்றுக் கொள்வது நல்லதுதானே என நினைக்கிறார்கள் சிலர். இந்தியைப் பெரும்பான்மை மொழி என நாம் சொல்வதே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு காட்டும் புள்ளிவிவரங்களை வைத்துதான். ஆனால் இந்தித் திணிப்பு முதன் முதலில் புகுந்து விளையாடியதே அந்தப் புள்ளிவிவரங்களில்தான் என நான் சொன்னால் நம்புவீர்களா? காணொளியைப் பாருங்கள்! இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்! 🙏🏽 நன்றி! வணக்கம்!! 🙏🏽

வெள்ளி, ஜனவரி 02, 2026

திருத்தணி சிராஜ் தாக்குதல்! - திரைப்படங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா?


திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளர் சிராஜ் தாக்கப்பட்ட வேதனையில் வெளியிடும் காணொளி! 😟😢

திரைப்படங்களைக் குற்றம் சாட்டுவது என் நோக்கமில்லை. உண்மையில் திரைப்படங்கள் மீதான நம்பிக்கைதான் இப்படி ஒரு காணொளியை வெளியிட என்னைத் தூண்டியது.

நான் சொல்லியிருப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள்!

வெள்ளி, டிசம்பர் 19, 2025

மம்மது – நூல் மதிப்புரை

Mammadhu

“உன்னை நீ மேம்படுத்திக் கொள்வதே ஆகச் சிறந்த பழிவாங்கும் முறை” – என்பது இன்றைய புத்துலக வாழ்க்கைமுறையில் பெரிதும் போற்றப்படும் பொன்மொழிகளுள் ஒன்று. இதையே ஒரு கதையாகச் சொன்னால்...? அதுதான் மன்சூரா பீவி அம்மையார் எழுதியுள்ள ‘மம்மது’ புதினம்.

மன்சூரா பீவி அவர்கள் இந்திய அஞ்சல் தொலைவரித் (Postal and Telegraph) துறையில் பணியாற்றியவர். இவர் கணவர் துவிட்டர் புகழ் தமிழறிஞர் நெல்லை க.சித்திக் அவர்கள். அவர் மகுடைத் (Corona) தொற்றால் காலமான பின்னர் அன்னார் பல ஆண்டுகள் உழைத்துத் தொகுத்திருந்த ‘அயற்சொல் அகரமுதலி’ எனும் நூலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார் பீவி அவர்கள். அப்பொழுது அவரைக் கணவரின் கனவை நிறைவேற்றி வைத்த அன்பான மனைவி என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அடுத்து அவர் எழுதிய சிறுகதைகளைப் படித்த பிறகுதான் அவர் எப்பேர்ப்பட்ட எழுத்துத்திறம் படைத்தவர் என்பதை அறிய முடிந்தது.

தற்பொழுது பணியோய்வுக்காலத்தில் இருக்கும் பீவி அவர்கள் அடுத்தடுத்துத் தன் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். அவற்றுள் ஒன்றுதான் மம்மது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களம். வலியகுளத்துவிளை எனும் சிற்றூரில் வாழும் இளைஞன் மம்மதும் காசிமும் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இல்லை இல்லை, நண்பர்கள் ஆவதற்கு முயல்பவர்கள். ஆனால் அவர்கள் பழகக்கூடாது என்று தொடக்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்புகிறது இருவர் வீட்டிலிருந்தும்.

ஓரிரு கசப்பான நிகழ்வுகளுக்குப் பின் ஒரேயடியாகப் பிரியும் இந்த நண்பர்கள், தங்கள் 18 வயதில் மீண்டும் சந்திக்கும்பொழுது காசிம் தங்கள் இரு குடும்பங்களுக்கும் இடையிலான மருமத்தைத் தெரிவிக்கிறான். நண்பன் மகிழ்வான் என்றெண்ணி அவன் சொல்லும் அந்தச் செய்தி மம்மதின் மொத்த வாழ்வையும் ஒரே நிமையத்தில் புரட்டிப் போட்டு விடுகிறது.

❔ காசிம் சொன்ன அந்த மருமம் என்ன?

❔ மம்மதின் குடும்பத்துக்கும் காசிம் குடும்பத்துக்கும் அப்படி என்ன பகை

❔ மொத்தமாகத் தன்னை நிலைகுலைய வைத்த அந்த உண்மையை மம்மது எப்படி எதிர்கொண்டான்?

திங்கள், ஜூன் 30, 2025

தங்கிலீஷ் | "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து - காணொளி

தங்கிலீஷ் | நேற்றைய (29.06.2025) "நீயா நானா?" நிகழ்ச்சியின் விவாதம் பற்றி என் கருத்து காணொளியாக 👇🏽👇🏽👇🏽

பாருங்கள்! தங்கள் கருத்துக்களையும் அறியத் தாருங்கள்!😊
சரியாகத்தான் பேசியிருக்கிறேன் எனத் தோன்றினால் விருப்பக்குறியை அழுத்துங்கள்👍🏽
பயனுள்ள வகையில் பேசியிருக்கிறேன் எனத் தோன்றினால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்🔄

புதன், ஏப்ரல் 10, 2024

சிற்றலை மீதமர் தும்பி – நூல் மதிப்புரை

sitralai meethamar thumbi wrapper

சிற்றலை மீதமர் தும்பி! அன்புத் தோழரான கவிஞர் ரேவதி ராம் அவர்கள் அண்மையில் வெளியிட்ட மூன்று மணமிக்க படைப்புகளுள் குட்டிப்பூ!

பொதுவாக, கவிதைகள் அதிகம் படிக்கும் வழக்கமில்லை எனக்கு. ஆனால் கவிஞர்கள் அதிகம் பழக்கமாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் கவிதைகளிலேயே எந்நேரமும் நீச்சல்.

ஆனால் குளம், ஆறு, கடல் என எவ்வளவுதான் நீந்தினாலும் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு காட்டுத் தடாகத்தில் நீந்தக் கிடைக்கும் ஒரு பகல், வாழ்நாளில் எந்நாளும் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கும். அப்படி ஒரு மறக்க முடியாத பகல்தான் சிற்றலை மீதமர் தும்பியைப் படித்தது!

பார்க்கும்பொழுதே கையில் எடுக்கத் தூண்டும் சின்னஞ்சிறு வடிவம்! ஒவ்வொரு பக்கமும் பிறந்த குழந்தை போலக் குட்டிக் குட்டியாய்க் கவிதைகள்.

முதல் பக்கத்தில் “அன்பின் அஞ்சிறைத் தும்பிக்கு” எனும் தலைப்பில் கவிதை சொட்டச் சொட்ட ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார் நம் பேரன்புத் தோழரான கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள். அதில் அவர் எடுத்துக்காட்டியுள்ள கவிதைகளும் அவை பற்றிய பாராட்டுக்களும் எப்படிப்பட்ட நூலைப் படிக்க இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே உணர்த்தி நம் மனத்தை ஆயத்தப்படுத்தி விடுகின்றன! இதையடுத்து நம் அருமைத் தோழர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையும் கவர்கிறது.

அடுத்துக் கவிஞர் எழுதியுள்ள என்னுரையில், தான் இந்த இடத்துக்கு வரக் காரணமானவர்களுள் ஒருவர் விடாமல் நன்றி நவின்றிருக்கிறார், தன் மூன்று வயது மகனுக்கு உட்பட!

காணிக்கைப் பக்கத்திலிருந்தே (Dedication page) தும்பி தன் கவிதைச் சிறகைப் படபடக்கத் தொடங்கி விடுகிறது. அப்படி என்ன காணிக்கை எழுதியிருக்கிறார்?... சொல்ல மாட்டேன், படித்து விழி விரியுங்கள்!

இதில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் இயற்கையைப் பாடுகின்றன; சில வாழ்வின் அழகியலைப் பதிவு செய்கின்றன; காதல், காமம், பெண்ணியம், நகைச்சுவை எனப் பல பாடுபொருள்களின் இடையிடையே மெய்யியல் பேசும் கவிதைகளும் நிறையவே உள்ளன! இதோ எடுத்துக்காட்டுகிறேன் ஒன்றை:

சனி, ஜூலை 15, 2023

இலக்குவனார் திருவள்ளுவனின் கலைச்சொல்லாக்க வழிகாட்டி! | 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை

chollAkkam - neRimuRaiyum vazhimuRaiyum
உலகத் தமிழ் நேசர்களே!

கடந்த வாரம் - அதாவது 2023 சூலை மாதம் 7, 8, 9 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு எனது கட்டுரை ஒன்றும் தேர்வாகியிருந்தது. எனக்கு மாறாக என் அம்மா புவனேசுவரி அவர்கள் கட்டுரையை முன்வைக்க தம்பி ஜெயபாலாஜி, சித்தி சியாமளா, தங்கை ஸ்ரீதேவி, மைத்துனர் ரசாக் ஆகியோர் உடன் இருந்தனர். வாழ்வில் முதன் முதலாக உலகளவிலான மாநாடு ஒன்றில் என் படைப்பு இடம்பெற்றது மிகவும் பூரிப்பாக இருந்தது! இந்த ஆய்வுக் கட்டுரையை எழுத ஊக்கமளித்து, முறையாக எப்படி அனுப்ப வேண்டும் என்பது வரை எனக்கு வழிகாட்டியாக விளங்கி இந்தப் பெருமைக்கு மூலக்காரணராக இருந்த உயர்திரு.இலக்குவனார் திருவள்ளுவன் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியுடன் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்காக.

சனி, ஜனவரி 14, 2023

பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு 2054 நல்வாழ்த்துக்கள்

Pongal and Tamil New Year 2054 wishes


கச் சிவப்புத் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் நேச வணக்கம்!

இன்று பிறந்திருக்கிறது தி.பி.2054!

தொற்றுநோய்கள் ஒழிய
போர்களெல்லாம் முடிய
உலகெங்கும்
நலமும் வளமும்
மட்டுமே நிறைய
வழியட்டும் பொங்கல்!

அனைவர்க்கும் அன்பு கமழ் போகி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

படம்: நன்றி Image by Creative_hat - பிரீபிக்.

வெள்ளி, ஜூலை 01, 2022

என் படைப்புக்கு உங்கள் மதிப்பீடு என்ன?

Mannukkulle Sila Moodar-Short Story

ன்புசால் நட்புலகே!

‘இந்தியாவின் அடுத்த மாபெரும் எழுத்தாளருக்கான தேடல்’ எனும் முழக்கத்துடன் தேசிய அளவிலான ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறது Notion Press இணையத்தளம். படைப்பார்வம் கொண்டவர்கள் தங்கள் நூலை இணையத்தில் தாங்களே வெளியிட்டுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இது, ஒரு தமிழ்நாட்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இவர்கள் நடத்தும் சிறுகதைப் போட்டியில் இதோ உங்கள் விருப்பத்துக்குரிய நானும்!

கதையை படித்தவர்களின் எண்ணிக்கை, அப்படிப் படித்தவர்கள் தந்த மதிப்பீடு (ratings), ஆசிரியர் குழுவின் மதிப்பெண் மூன்றையும் சேர்த்து யார் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அவர்தாம் நாட்டின் அடுத்த மாபெரும் எழுத்தாளராக அறிவிக்கப்படுவார் என்பது போட்டியின் நெறிமுறை. எனவே என் படைப்புக்கு அந்தத் தகுதி இருக்கிறதா என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் இதோ இணைப்பு உங்கள் பார்வைக்கு - https://bit.ly/3I74NKK.

போட்டி ஒருபுறம் இருக்கட்டும்! உலகின் எல்லா நாடுகளிலும்தாம் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அங்கெல்லாம் நடக்காத ஒரு கொடுமை நம் மண்ணில் மட்டும் நடப்பது ஏன்? என்னுடைய இந்த நெஞ்சக் கொதிப்புதான் இந்தக் கதை. படித்துப் பார்த்து உங்கள் மேலான தரமதிப்பீட்டையும் கருத்துரையையும் கட்டாயம் வழங்க வேண்டுகிறேன்!

மதிப்பீடும் கருத்தும் வழங்கும் முறை:

1. இந்த இணைப்பைச் சொடுக்குங்கள் - https://bit.ly/3I74NKK.

2. கதையைப் படியுங்கள்.

3. கதையின் முடிவில் ஒரு நீல நிறப் பெட்டி இருக்கும். அதன் வலப் பக்கத்தில்  கீழே காண்பது போல் ஐந்து விண்மீன் குறியீடுகள் இருக்கும். கதையின் தரம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதற்கேற்ப அந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் அழுத்தலாம். எ.டு.: 50 புள்ளிகள் தர விரும்பினால் 5-ஆவதை அழுத்தலாம்.

Rating Area-Notion Press

4. விண்மீன் குறியீட்டை அழுத்தியதும் தளத்தில் கணக்கு தொடங்கக் கோரிக் கீழ்க்காணுமாறு ஒரு பெட்டி வரும். அதில் உங்கள் பெயர் (ஆங்கிலத்தில்),  மின்னஞ்சல் முகவரி, இந்தத் தளத்தை இனி பயன்படுத்துவதற்கெனப் புதிதாக ஒரு கடவுச்சொல் (password) மூன்றையும் கொடுத்துக் ‘கணக்கைத் தொடங்கவும்’ எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

Sign Up box-Notion Press

(குறிப்பு: நீங்கள் ஏற்கெனவே இந்தத் தளத்தில் கணக்கு வைத்திருப்பவராகவோ ‘Bynge தமிழ்’ குறுஞ்செயலி (app) பயன்படுத்துபவராகவோ இருந்தால் மேற்கண்ட பெட்டியில் கீழே உள்ள ‘லாகின் செய்யுங்கள்’ எனும் பொத்தானை அழுத்தி உங்கள் பழைய கணக்கு மூலமே மதிப்பீடும் கருத்தும் இடலாம்.)

5. பொத்தானை அழுத்தியதும் நீங்கள் எத்தனை விண்மீன் குறியீடு அளித்திருக்கிறீர்கள் என்கிற  எண்ணிக்கையும் அதன் கீழே கருத்துரை இடுவதற்கான கட்டமும் வரும். தளத்தின் நெறிமுறைப்படி கருத்துரை எழுதுவது கட்டாயமில்லை என்றாலும் கதையைப் படித்த உங்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் அறிய நான் விரும்புகிறேன். எனவே உங்கள் கருத்தை எழுதி (அல்லது உங்களுக்கு நேரமில்லாவிட்டால் எழுதாமலே கூட) பெட்டியில் உள்ள ‘சமர்ப்பிக்கவும்’ எனும் பொத்தானை நீங்கள் அழுத்த வேண்டும். அவ்வளவுதான், வேலை முடிந்தது! (குறிப்பு: கருத்து வழங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ‘சமர்ப்பிக்கவும்’ பொத்தானை நீங்கள் அழுத்த வேண்டும். அதுவரை மதிப்பீடு பதிவாகாது.)

6. தரமதிப்பீடு அளித்தவுடன் ‘கதை பிடித்திருக்கிறதா?’ எனக் கேட்டு இன்னொரு பெட்டி முளைக்கும். அதில் கதையைச் சமுக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப் பொத்தான்கள் இருக்கும். நம் வீட்டுப் பெண்கள் மீதான அந்தக் கொடுமைக்கு எதிராக நீங்களும் உங்கள் பங்குக்கு ஒருமுறை சாட்டையைச் சுழற்ற விரும்பினால் அந்தப் பொத்தான்களை அழுத்தி உங்கள் நண்பர்களுக்கும் கதையைக் கொண்டு சேர்க்கலாம்.

மதிப்பீட்டைப் பதிவு செய்யக் கடைசி நாள்: சூலை 25, 2022

"சரி, இவ்வளவு சொல்கிறாயே? நீ மட்டும் போட்டியில் கலந்து கொண்டால் போதுமா?" எனக் கேட்கிறீர்களா? வருக வருக நண்பர்களே! சூலை 10,  2022 வரை கதைகளைப் பதிவேற்ற நேரம் இருக்கிறது. இதோ போட்டியில் கலந்து கொள்வதற்கான நெறிமுறைகளைக் கீழே தந்திருக்கிறேன். படித்துப் பார்த்து நீங்களும் கலந்து கொள்ளுங்கள்!

National Writing Competition Announcement-Notion Press
போட்டியில் கலந்து கொள்பவர்கள் உங்கள் கதைக்கான இணைப்பை எனக்கு இங்கே கருத்துப்பெட்டி மூலம் தெரிவியுங்கள்! சமுக ஊடகங்களில் #NWC_Tamil எனும் சிட்டையில் பதியுங்கள்! நானும் உங்கள் வெற்றிக்கு உதவக் காத்திருக்கிறேன்.

உங்கள் வசதிக்காக என் கதையின் இணைப்பு இங்கே மீண்டும்: https://bit.ly/3I74NKK.

திங்கள், பிப்ரவரி 21, 2022

நட்சத்திர எழுத்தில் பெயர் சூட்டுவது தமிழர் வழக்கமா? - ஒரு நறுக்குச் சுருக்கான ஆய்வு

Naming a child with the letter of birth star is really a Tamil culture?
ப்பொழுதெல்லாம் வலைத்தள ஊடகங்களில், குழந்தைக்குச் சூட்டுவதற்குத் தமிழில் நல்ல பெயர் பரிந்துரைக்குமாறு பலரும் அடிக்கடி கேட்கிறார்கள். பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! அதே நேரம், இப்படிக் கேட்பவர்களில் பலர் குழந்தை பிறந்த நாள்மீனைத் (நட்சத்திரம்) தெரிவித்து, அதற்குரிய எழுத்தில் தொடங்கும் பெயராகக் கேட்பதையும் பார்க்கிறோம்.

அதாவது இந்தியச் சோதிட முறையில் குறிப்பிடப்படும் 27 நாள்மீன்களில் (நட்சத்திரங்களில்) ஒவ்வோர் நாள்மீனுக்கும் உரியவையாகச் சில எழுத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன; அந்த எழுத்துக்களில் தொடங்குமாறு பெயர் வைப்பது சிறப்பானது என நம்பும் நம் மக்கள் அப்படிப்பட்ட பெயர்களை இணையத்தில் தேடித் துழாவுகிறார்கள். குறிப்பிட்ட எழுத்துக்களில் பெயர் கிடைக்காவிட்டால் அவற்றுக்கு மாற்றாகச் சோதிடம் பரிந்துரைக்கும் தொடர் எழுத்துக்களிலாவது கிடைக்குமா எனத் தவிக்கிறார்கள்.

இப்படி நாள்மீன் எழுத்தில் பெயர் வைப்பது தமிழ் மரபா?...

இதுதான் தமிழர்களின் பெயர் சூட்டும் முறையா?...

இதோ, பார்க்கலாம்!...


தமிழரசர் முதல் கவியசர் வரை – ஒரு பெயரியல் அலசல்

இது தமிழர் வழக்கமா என்பதை நாம் அறிய வேண்டுமானால் பண்டைக் காலம் முதல் அண்மைக்காலம் வரையான பலரின் பெயர்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஆனால் அதில் உள்ள பெரிய சிக்கல் என்னவெனில், நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான வரலாற்றுக் குறிப்புகள் மன்னர்களைப் பற்றியவைதாம்; வரலாற்றிலோ மன்னர்களின் பட்டப்பெயர், பட்டமேற்புப் (பட்டாபிசேகம்) பெயர் போன்றவைதாம் காணப்படுகின்றனவே தவிர இயற்பெயர்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இயற்பெயர் தெரிந்த மன்னர்கள் - அல்லது மன்னரல்லாத பிறர் - பற்றிய விவரங்களிலோ அவர்களின் பிறந்த நாள்மீன் பற்றிய குறிப்பு இல்லை. இரண்டு விவரங்களும் ஒன்றாய்க் கிடைப்பது மிக மிகச் சிலரைப் பற்றித்தாம். அப்படிச் சிலரின் பெயர்களைப் பற்றி மட்டும் இங்கு காண்போம்.

❖ முதலாம் இராசராச சோழன்:

புதன், டிசம்பர் 22, 2021

அன்றாட வாழ்வில் தமிழ்ப் பயன்பாடு - நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் என் சொற்பொழிவு

New York Tamil Sangam
ன்பு கமழ் நெஞ்சங்களே!

வட அமெரிக்காவின் மூத்த முதல் தமிழ்ச் சங்கமான நியூயார்க் தமிழ்ச் சங்கம் ‘வெள்ளிதோறும் இலக்கிய உலா’ எனும் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளரான ஆர்.பாலகிருட்டிணன், இ.ஆ.ப., அவர்கள் முதல் பார் போற்றும் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்கள் வரை தமிழுலகின் சிறப்புக்குரிய பெருமக்கள் பலரும் உரையாற்றிய அந்த மேடையில் இந்தச் சிறுவனையும் அழைத்துப் பேச வைத்தது சங்கத்தினரின் பெருந்தன்மையே தவிர வேறில்லை. கடந்த 18.12.2021 அன்று நடந்த அந்த நிகழ்ச்சியில் ‘அன்றாட வாழ்வில் தமிழ்ப் பயன்பாடு’ எனும் தலைப்பில் நான் ஆற்றிய உரையை இதோ உங்கள் மேலான பார்வைக்கு முன்வைக்கிறேன், சங்கத்துக்கு என் பெயரை முன்மொழிந்த அதன் இலக்கியக் குழுத் தலைவரான நம் வலைப்பதிவர் ‘பரதேசி’ ஆல்பிரட் தியாகராசன் அவர்களுக்கும் சங்கத் தலைவர் ராம் மோகன் அவர்களுக்கும் மேனாள் சங்கத் தலைவர் அரங்கநாதன் உத்தமன் அவர்களுக்குமான நன்றியுடன்!

 

படம்: நன்றி நியூயார்க் தமிழ்ச் சங்கம்

சனி, பிப்ரவரி 20, 2021

English ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை! - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம்

Do not use Grantha in Tamil


"வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்" என்ற என் கட்டுரையில் தமிழிலேயே ஜகர, ஸகர ஒலிகள் உண்டு என்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். முடிவில் "தமிழிலேயே இப்படி ஜ, ஸ எல்லாம் இருக்கிறது என்றால் ஏன் கிரந்த எழுத்துக்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்?" என்று கேட்டு அதற்கான விடையைத் தனிப்பதிவாக எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன். இதோ உலகத் தாய்மொழி நாளின் சிறப்புப் பதிவாக அக்கட்டுரை பின்வருமாறு! 
 
☟    ☟    ☟ 

திங்கள், டிசம்பர் 28, 2020

தி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்

stalin invites suggestions from people for DMK manifesto 2021
டந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்கும் தங்கள் தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகளை அனுப்புமாறு மக்களிடம் கேட்டிருந்தார் தி.மு.க., தலைவர்.
 
கடந்த முறை எழுதி அனுப்பியதற்கு அவர்களிடமிருந்து நல்ல வரவேற்பிருந்ததால் இந்த முறையும் அனைத்துத் தரப்புத் தமிழ் மக்கள் சார்பாகவும் நான் சில பரிந்துரைகளை அனுப்பியுள்ளேன். வழக்கம் போல் இதோ மக்களாகிய உங்கள் பார்வைக்கும் அவற்றை முன்வைத்துள்ளேன். இவை வெறும் பரிந்துரைகள் அல்ல, இந்திய அரசின் புதிய வேளாண் சட்டம் போன்ற வல்லாதிக்கச் சட்டங்களைத் தவிடுபொடியாக்கி மக்களைக் காப்பதற்கான அதிரடித் திட்டங்கள்! சாதியில்லாத் தமிழ்நாடு போன்ற நம் பல்லாண்டுக் காலக் கனவுகளை நனவாக்குவதற்கான கூர்மிகு வழிமுறைகள்! படித்துப் பாருங்கள்! உங்கள் ஆதரவைத் தாருங்கள்!

புதன், அக்டோபர் 21, 2020

வக்கற்ற மொழியா தமிழ்? தமிழில் ஏன் இல்லை வல்லின எழுத்து வகைகள்? – சில புல்லரிக்கும் தகவல்கள்

போன வாரம் துவிட்டரில் "தமிழ் வக்கற்ற மொழி" என்றான் சமற்கிருத வெறியன் ஒருவன். ஏனடா என்றால், மற்ற இந்திய மொழிகளில் நான்கு க, நான்கு ச என வகை வகையாக வல்லின எழுத்துக்கள் இருக்கின்றன; தமிழில் இல்லையே என்றான் சிறுபிள்ளைத்தனமாக.

உண்மையிலேயே தமிழில் வல்லின எழுத்து வகைகள் இல்லையா?

ஆம் எனில் அதற்குக் காரணம் என்ன?

இது தமிழின் குறைபாடா இல்லையா?

இவற்றுக்கான விடையே இப்பதிவு. ஆனால் தொடங்கும் முன், “அப்படியா கேட்டான்! தமிழையா இழித்துரைத்தான்!” என உங்கள் நெஞ்சு கொதிக்கும் இல்லையா? அதைத் தணிவிக்கும் முயற்சியாக இதோ அந்த அறிவிலிக்கு நான் தந்த எதிரடிகள் சில உங்கள் பார்வைக்கு.

Tamil is not an worthless language! - counterlow for a linguistic maniac

என்ன, பார்த்து விட்டீர்களா? ஆனால் என்னதான் நாம் இப்படி எதிரடி அடித்தாலும், “எல்லா மொழிகளிலும் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் தமிழில் இல்லாதது ஒரு குறைதானே?” எனும் எண்ணம் நம்மவர்களுக்கே இங்கு இருக்கிறது என்பது உண்மையே!


அதுவும் அண்மைக்காலமாக இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றோடு தமிழையும் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு மற்ற மொழிகளில் இருக்கும் இத்தனை எழுத்து வகைகள் நம் தாய்மொழியில் மட்டும் ஏன் இல்லை எனத் தோன்றத்தான் செய்யும். அதற்கு விடையளிக்க வேண்டியது நம் கடமை என்பதால் மட்டுமில்லை உண்மையில் இதற்கான விளக்கம் மிகச் சுவையானது! தமிழ் மொழியின் கட்டமைப்பு குறித்த பெருமையான தகவல்களை உள்ளடக்கியது! எனவே தமிழர்கள் நாம் அனைவரும் இது குறித்துக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்! பார்ப்போமா?
 

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2020

என் யுவர் கோட் (Your Quote) கவிதைகள்

Your E.Bhu.Gnaanapragaasan in YourQuote
லகத் தமிழ் உள்ளங்களே!

எப்படி இருக்கிறீர்கள் அனைவரும்?

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சில சிக்கல்களால் வெகு நாட்களாக வலைப்பூப் பக்கம் வர முடியவில்லை. அனைவரும் நலமா?

இந்த ஊரடங்குக் காலக்கட்டத்தில் யுவர் கோட் எனும் புதிய ஒரு சமுக ஊடகத்தில் இணைந்தேன். நம் பதிவுலகின் குட்டிப் பதிவரும் நம் அனைவரின் பேரன்புக்குரிய பதிவுலக இணையர் மைதிலி - கஸ்தூரிரெங்கன் ஆகியோரின் மகளுமான நிறைமதிவதனா அவர்கள்தாம் இந்த ஊடகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆம்! நான் அவரை வலைப்பூ எழுத அழைத்தது போய், அவர் என்னை சமுக ஊடங்களுக்கு எழுத அழைக்கும் காலம் வந்து விட்டது. நாம் பார்த்த குட்டிப் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்! 💗

நிறைமதியின் அன்பு அழைப்புக்காகத்தான் யுவர் கோட் பயன்படுத்தத் தொடங்கினேன். ஆனால் தொடங்கிய பின் எனக்கே மிகவும் பிடித்துப் போய்விட்டது. துவிட்டர் (twitter) போலச் சிறு சிறு பதிவுகளை எழுத அருமையான களம்! வெறும் பனுவல் (text) பதிவுகள் அல்ல; படக்கோப்புகளாகவே (images) பதிவுகளை வெளியிடலாம்! அதற்கான படங்களையும் இந்தக் குறுஞ்செயலியே (app) இலவயமாக வழங்குகிறது. நீங்கள் இணையத்தில் எழில் கொஞ்சும் படங்களின் பின்னணியிலான கவிதைகள், துணுக்குகள், மேற்கோள்கள் (quotes) போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப்பட்ட படங்களை நாமும் ஒரே நிமிடத்தில் உருவாக்கிக் கொள்ள இந்தக் குறுஞ்செயலி உதவுகிறது.

இனி நாமும் நம் கவிதைகள், மேற்கோள்கள் போன்றவற்றை அழகிய படக்கோப்புகளாக உருவாக்கி நம் பெயருடனே இணையத்தில் பகிரலாம்; வாட்சப் நிலைப்பாட்டுப் படங்களாகக் காட்சிப்படுத்தலாம். இதில் உள்ள ஒத்திசைவு (Collabaration) எனும் வசதி மூலம் நண்பர்களுடன் இணைந்து பதிவு எழுதலாம்.  ஒரு பதிவுக்கான தலைப்பைக் கொடுத்து அது பற்றி மற்றவர்களை எழுதத் தூண்டலாம். இதன் மூலம் மற்ற எந்த சமுக ஊடகத்தையும் விட இதில் நண்பர்களைச் சேர்த்தல் மிக எளிது. தவிர, நன்றாக எழுதும் நண்பர்களுக்கு நாம் சான்றுரை (testimonial) வழங்கி ஊக்குவிக்கும் வசதியும் உண்டு.

இப்படிப் பல்வேறு வகைகளிலும் மிகவும் புதுமையாக இருக்கிறது இந்த யுவர் கோட்! நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்!

இதோ யுவர் கோட்டில் நான் எழுதிய சில கவிதைகள் இங்கே உங்கள் பார்வைக்கு! 👇

செவ்வாய், மே 05, 2020

ழகரத்துக்கு ஆபத்து! - ஒருங்குறிக் கூட்டமைப்பின் (Unicode Consortium) தான்தோன்றித்தனமான முடிவு

Zha is in Danger because of the arbitrary decision of Unicode Consortium

மிழின் தனித்தன்மை, அடையாளம், பெருமை என்றெல்லாம் காலங்காலமாக நாம் போற்றுவது சிறப்பு எழுத்தான ழகரம்.

அப்பேர்ப்பட்ட தமிழ்ச் சொத்தைப் போகிற போக்கில் பிள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல் தெலுங்குக்குத் தூக்கிக் கொடுத்திருக்கிறது ஒருங்குறிக் கூட்டமைப்பு (Unicode Consortium)!

உண்மையாகத்தான் சொல்கிறேன் நண்பர்களே! இதோ கீழே பாருங்கள்!

சனி, ஜனவரி 25, 2020

Pen to Publish போட்டியில் தி.மு.க-வினர் மட்டும் தேர்வானது எப்படி? - தி.மு.க-காரரே வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

Amazon Pen to Publish 2019 controversy

மேசான் நடத்திய ‘பென் டூ பப்ளிஷ் 2019’ போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான கதைகளை ஊருக்கே தெரியும். ஆனால் அவை எப்படித் தேர்வாயின என்ற கதை தெரியுமா? இதோ தி.மு.க., எனும் மாபெரும் கட்சியின் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி இவர்கள் வென்ற கதையைத் தி.மு.க-காரர் ஒருவரே நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் விவரித்திருக்கிறார். 

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு நூலை வெளியிட்ட உடனேயே இலக்கிய உலக அரசியல் தெரிந்த என் தோழியார் ஒருவர் என்னை எச்சரித்தார், "இந்தப் போட்டியில் தி.மு.க-வினரின் உள்ளடியரசியல் (lobby) அதிகம். எச்சரிக்கையாக இருங்கள்" என்று. அப்பொழுது எனக்கு அதன் தீவிரம் உரைக்கவில்லை. 

எனக்குத் தெரிந்த, என் எழுத்துக்களைப் பெரிதும் விரும்பும் நண்பர் ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர் நான் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதை அறிந்து இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களின் முகநூல் குழு ஒன்றில் என்னைச் சேர்த்து விட்டார். உள்ளே போன பிறகுதான் அது முழுக்க முழுக்க தி.மு.க எழுத்தாளர்களின் குழு என்பது தெரிந்தது. என் நூலை அந்தக் குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்ட நான், கைம்மாறாக அவர்களின் நூல்களையும் படித்துப் பார்த்தேன். தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன். நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் பெற்ற அந்தக் குழுவினரின் பல கதைகள் உண்மையில் நன்றாகவே இல்லை. சொல்லப் போனால், கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களுடன்.

போகப் போக, போட்டியில் முன்னணியிலிருந்த எல்லாப் படைப்புகளையும் - புகழ் பெற்ற எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அவர்களின் நூல் உட்பட - அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிக் குறிப்பிட்ட முகநூல் குழு உறுப்பினர்களின் நூல்கள் முன்னணிக்கு வந்தன. 

அப்பொழுது கூட நான் அதை ஓரளவுக்கு மேல் தவறாக நினைக்கவில்லை. "என்ன இருந்தாலும் அவர்கள் கட்சிக்காரர்கள். அவர்கள் நட்பு வட்டம் பெரிது. ஆகவே அவர்கள் நூற்றுக்கணக்கில் தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ள முடிகிறது. நம்மைப் போன்ற தனி ஆட்களால் அஃது எப்படி முடியும்?" என்றுதான் நினைத்தேன். என் நண்பர்களிடம் கூட அப்படித்தான் புலம்பினேன். அதனால்தான் இறுதிச்சுற்றுப் பட்டியல் வெளியானபொழுது கூட என் முகநூல் பதிவு, இவர்கள் செய்த வேலையால் தரக்குறைவான படைப்புகளிடம் தோற்க வேண்டியதாகி விட்டதே என்பதாக அமைந்திருந்ததே தவிர, இவர்கள் செய்தது தவறு என வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை. காரணம் இவர்கள் எப்படி இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என விவரமாகத் தெரியாததால் அது தவறுதான் என என்னால் உறுதியாக எண்ண முடியவில்லை. 

ஆனால் இப்பொழுது இணையத்தில் வரும் குறிப்பிட்ட பதிவைப் படிக்கும் பொழுதுதான் தெரிகிறது, இவர்கள் எப்பேர்ப்பட்ட கீழ்த்தர வேலையில் ஈடுபட்டு இந்த வெற்றியைக் களவாடியிருக்கிறார்கள் என்று. 

தி.மு.க., தலைவருக்கு முகவரியிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடித வடிவிலான பதிவில், தி.மு.க., எனும் பெரிய கட்சியின் மாநிலம் தழுவிய வலையமைப்பைப் (network) பயன்படுத்தி அதில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் பென் டூ பப்ளிஷ் 2019 போட்டியையே அப்படியே கபளிகரம் செய்தது பற்றிச் சுளிரிடும் சொற்களால் குமுறித் தள்ளியிருக்கிறார் முகம் தெரியாத அந்த மனிதர். 

"தலைவர் அவர்களுக்கு, ஒரு பாமர தி.மு.க தொண்டன் எழுதிக் கொள்வது" என்று தொடங்கும் அவர், "அமேசான் நிறுவனம் உலக அளவில் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டியில், இந்தியப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் போட்டி நடக்கிறது. முதல் பரிசு ஐந்து லட்சம், தேர்வாகும் கதைகள் அமேசான் பிரைமில் தொடராக வெளியாகும் வாய்ப்பு இருக்கிறது என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் மற்ற நாடுகளிலோ, இந்தியாவின் பிற மாநிலங்களிலோ, ஓர் அரசியல் கட்சி போட்டியைக் கையகப்படுத்தியுள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. தமிழகத்தில் இரண்டாவது முறையாக நமது திராவிட முன்னேற்றக் கழகம் இதைச் செய்கிறது" என்று வெளிப்படையாகப் போட்டு உடைத்து விட்டார். 

"...படைப்பாளிகளாக இவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான புரிதல் இருக்கிறது. ஆனால் கட்சிப் பதவிகளையோ, உறுப்பினர்களையோ வைத்துக் கூட்டம் நிகழ்த்தி, குழு சேர்ந்து, விதிகளை வளைத்து, வெற்றியை அடித்துப் பறிப்பது அறமல்ல. இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஒரு பரிசுத் தொகைக்காகத் தமிழின் பிற எழுத்தாளர்களை ஒதுக்கி, இலக்கியவாதிகளை அவமானப்படுத்தி, மூர்க்கத்தனமான கும்பலாய் நகர்வது அழகல்ல" என்று நடுநிலை தவறாமல் குறிப்பிடும் அவர், "...தி.மு.க மட்டுமே பென் டூ பப்ளிஷ் போட்டியின் அனைத்து இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இதை எழுத்தால் கிடைத்த வெற்றியாகக் கருத முடியாது. கட்சியின் உதவியின்றி, நாம் தந்த பதவிகளின் செல்வாக்கின்றி இவர்களால் நிச்சயம் இந்த இடத்தை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது" என்று தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார். 

மேலும் "...போட்டிக்கான இளைஞரணிப் புத்தகங்களைப் பரிந்துரைத்து, திரு.உதயநிதி அவர்களே இணையப் பிரச்சாரம் செய்கிறார். இதுதான் வேதனையின் உச்சம். ஒரு நல்ல புத்தகத்தைப் பாராட்டுவது தவறா என்றால், போட்டியில் இருக்கும் புத்தகத்தைத் தலைமை பரிந்துரைப்பது அறமன்று. இது பாரபட்சம்!" என்றும் சாடுகிறார். 

அதைத் தொடர்ந்து, "மக்கள் போட்டியின் அடிப்படைப் புரிதலே சிதைக்கப்பட்டு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்டச் செயலாளர், இளைஞரணி என மொத்தமாக இறங்கியதால், ஓர் எழுத்துப் போட்டியை இப்போது தேர்தலாக மாற்றியிருக்கிறோம். இளம் எழுத்தாளர்களுக்கான ஒரு மிகப் பெரிய வெளியை, வாய்ப்பை இவர்கள் அரக்கத்தனமாய்த் தட்டிப் பறித்திருக்கிறார்கள். இதனால் வரும் ஆபத்து என்னவெனில் வரும் வருடங்களில் பிற அரசியல் கட்சிகளும், ஆள் பலமும், அதிகாரமும் கொண்டவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்வார்கள். ஒரு சாமான்ய எழுத்தாளன் போட்டியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இந்தத் துயர வரலாற்றைத் துவங்கி வைத்தவர்கள் நிச்சயம் நாமாகத்தான் இருப்போம்" என்றும் வேதனைப்படுகிறார். 

"...நல்ல படைப்புகளுக்கான வியாபாரமும் வெளியும் என்றும் இருக்கிறது. பிறகு ஏன் மக்கள் போட்டியை ஒரு பெரும் அரசியல் கட்சி கைப்பற்ற வேண்டும்? உங்களை உயரத்தில் அமர்த்த வேண்டும் எனக் காத்திருக்கும் கைகளைத்தான் இவர்கள் உடைக்கிறார்கள். போட்டி தர்மங்களையும் அறத்தையும், கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்தி நசுக்கி மிதித்து முன்னேறுகிறார்கள்" என்று மிகக் கடுமையான சொற்களால் விளாசியிருக்கிறார். 

இவ்வளவு எழுதிய அவர் இடையில் முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி பற்றிக் குறிப்பிடுகையில் "தலைவர் கலைஞர் இருந்திருந்தால் நிச்சயமாக இதை அனுமதித்திருக்க மாட்டார். மாற்றானுக்குப் போட்டியாக நாம் இருக்க வேண்டுமே அன்றி, நம் மக்களிடத்தில் போட்டியிடக்கூடாது என்றிருப்பார். மேலும் கட்சி எழுத்தாளர்கள் பரிசு பெறுவதற்குக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்த அவர் அனுமதித்திருக்கவே மாட்டார்" என்றும் கூறியுள்ளார். 

இவ்வளவு தீவிரமான கருணாநிதி விரும்பியாக இருந்து கொண்டு, அந்தக் கட்சியின் உள்ளேயே அமர்ந்தபடி அவர்களின் முறைகேட்டை நடுநிலை தவறாமல் இவ்வளவு வெளிப்படையாகவும் கடுமையாகவும் சாடிப் பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கும் முகம் தெரியாத அந்த நண்பரின் பண்புநலன் போற்றுதலுக்குரியது. அவருக்கு என் நெஞ்சம் நெகிழும் நன்றி! 

அவரது பதிவை முழுமையாகப் படிக்க: 

 

ஆனால் இவ்வளவு அம்பலப்படுத்திய பிறகும் தி.மு.க-வினர் கொஞ்சமும் வெட்கமின்றி இதைச் சரி என வாதாடுகிறார்கள். இதோ கீழே உள்ள பதிவு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

அதாவது பார்ப்பனர்கள் சொல்வார்கள் இல்லையா? "நாட்டின் எல்லா உயர் பதவிகளையும் நாங்களே வகிக்கிறோம், எல்லா உயர்கல்விகளிலும் நாங்களே முதலிடத்தில் இருக்கிறோம், எல்லாக் கோயில்களிலும் நாங்களே வழிபாடு நடத்துகிறோம் என்றால் அவையெல்லாம் காலம் காலமாக எங்களுக்கு இருந்து வரும் உரிமை, தகுதி. அவை உங்களுக்கு வாய்க்காவிட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று? அதையேதான் இவர்களும் சொல்கிறார்கள்.

இதற்கு எதற்கடா கருப்புச் சட்டையுடன் திரிகிறீர்கள்? காவி கட்டிக் கொண்டே பா.ச.க-காரன் போல் திரிவதுதானே? ஏனடா, இப்படி எல்லாரும் அவரவர் செல்வாக்கை, ஆற்றலை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றால் அப்படிச் செய்ய எங்களுக்கு மட்டும் தெரியாதா? இது என்ன பெரிய ஊரில் இல்லாத அதிசய ஆற்றலா? உன்னிடம் கட்சி என ஓர் ஆயுதம் இருக்கிறது என்றால் உடனே அதைப் பயன்படுத்திப் போட்டியில் வென்று விட்டு அதுவே சரி என வாதாடுகிறாயே! இதே போல் நான் செய்யட்டுமா? அதற்கு இந்தக் கட்சிக் கழிசடையெல்லாம் தேவையேயில்லை. ஒற்றை வரி விளம்பரம் போதும்!

"வீட்டிலிருந்தபடியே வேலை! அரை மணி நேரம் பணியாற்றினால் ரூ.1500/- ஒரு முறை மட்டுமே வாய்ப்பு" என்று சொன்னால் அவனவன் விழுந்தடித்துக் கொண்டு தொடர்பு கொள்வான். அனைவரையும் என் நூலைத் தரவிறக்கச் சொல்லி, கருத்துரையும் தரக்குறியீடும் அளித்துத் திரைச்சொட்டை (screenshot) எனக்கு அனுப்பினால் 1500 ரூபாய் தருவதாகக் கூறினால் முடிந்தது வேலை.

ஒற்றை ஆள் நான்! வீட்டு வாசற்படியைக் கூடத் தாண்டாமல் உட்கார்ந்த இடத்திலிருந்து இதைச் செய்து காட்டவா? ஒரு மாபெரும் கட்சியின் செல்வாக்கை இத்தனை பேர் சேர்ந்து பயன்படுத்தி நீங்கள் வென்றீர்களே! உங்கள் அத்தனை பேரையும் அரை நூற்றாண்டு தாண்டிய உங்கள் மாபெரும் கட்சியையும் நான் ஒற்றை மனிதன் அடுத்த ஆண்டுப் போட்டியில் வீழ்த்திக் காட்டவா? 

மிரளாதீர்கள்! அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் உங்களைப் போல் மானங்கெட்டவன் இல்லை.

இவ்வளவுக்கும் பிறகும் இந்தப் பதிவைப் படிக்கும் உங்களில் யாருக்காவது நான் சொல்வது உண்மைதானா என ஐயம் ஏற்பட்டால் அவர்களுக்காகக் கடைசியாக ஒரு தகவல்! 

இப்பதிவின் தொடக்கத்தில், "கதை என்று சொல்ல அடிப்படைத் தகுதி கூட இல்லாத ஒரு கதை கூட ஏராளமான தரக்குறியீடுகளையும் கருத்துக்களையும் அள்ளியிருந்தது. அதுவும் ஆகா ஓகோ, கட்டாயம் படிக்க வேண்டிய கதை, வாழ்க்கையில் தவற விடவே கூடாத கதை எனவெல்லாம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது" என்று கூறியிருந்தேன் இல்லையா? அதுவும் இப்பொழுது போட்டியின் இறுதிச்சுற்றில் இருக்கிறது. 

இந்த ஒன்றை வைத்தே, இந்தப் போட்டி எந்த அழகில் நடந்திருக்கும் என்பதையும் அந்தத் தி.மு.க., தொண்டர் சொன்னது உண்மையா இல்லையா என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி அமேசான்

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இதைப் பகிர்ந்து என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கு உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சல் வாக்கு (1) அஞ்சலி (25) அணு உலை (2) அப்பா மகள் பாசம் (1) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (45) ஆசிரியர் (1) ஆட்சென்ஸ் (1) ஆணவப்படுகொலை (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (3) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (4) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (12) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (20) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (8) காதல் (3) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) கீழடி (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (11) சாலமன் பாப்பையா (1) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (5) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தங்கிலீஷ் (1) தந்தைமை (1) தமிழ் (39) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (20) தமிழர் (48) தமிழர் பெருமை (20) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (4) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (6) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (3) திரையுலகம் (12) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (10) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தேர்தல்-2026 (1) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (11) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பராசக்தி (2) பா.ம.க (2) பா.ஜ.க (31) பாக்யராஜ் (1) பார்ப்பனியம் (14) பாரதிராஜா (1) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புதினம் (1) புறநானூறு (1) புனைவுகள் (12) பெண்ணியம் (7) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (6) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (11) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (6) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மன்சூரா பீவி (1) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (2) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (3) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (4) மொழியறிவியல் (3) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (25) வாழ்க்கைமுறை (21) வாழ்த்து (7) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டாலின் (1) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Tanglish (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்