.

வெள்ளி, டிசம்பர் 05, 2014

மச்சி! நீ கேளேன்! - 3 | பூமி கண்ணைக் குத்தும்! - உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்தே ஐந்து நெறிகள்!Nature Dispose Us! - Just 5 Rules to Stop Global Warming!

சாபூமி கண்ணைக் குத்தும்! (Nature Disposes Us!)

‘டைட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ மாட்டோமோ என்று எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட நாயகனையும் நாயகியையும் துப்பாக்கியால் சுட்டபடி துரத்திக் கொண்டு ஓடுவான் அந்த வில்லன்!

அதைப் பார்க்கும்பொழுது, ‘நாம இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்போம்னே தெரியாத நேரத்துல கூட அடுத்தவங்களை வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டுத் திரியறான் பாரு’ என்று அவன் மேல் நமக்கு அப்படி ஒரு வெறுப்பு வரும். ஆனால், இன்றைய உலகில் நாம் எல்லோருமே ஏறத்தாழ அப்படித்தான் நடந்து கொள்கிறோம் எனச் சொன்னால்...

வியக்க வேண்டாம்! இப்படி நான் சொல்லக் காரணம் நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மை!...

புவி வெப்ப உயர்வால் உலகம் வெகு வேகமாக வெந்து கொண்டிருக்கிறது! இமயமலை உருகுகிறது! துருவப் பகுதிகள் உருகி ஓடுகின்றன! பல்லாயிரம் ஆண்டுகளாகப் பனிப் போர்வைக்குள்ளேயே மறைந்திருந்த பல பனிமலைகள் இன்று வெளியே எட்டிப் பார்த்து நம்மை எச்சரிக்கின்றன! “ஐயா! என் கெணத்தைக் காணோம்” என வடிவேல் சொல்வது போல, “அண்மையில்தானே பார்த்தோம் இங்கே பெரிய பெரிய பனிப் பாளங்களை! எங்கே அவை?” என அலறுகிறார்கள் சூழலியலாளர்கள் (ecologists)! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இமயக் குளிர்நீர்க்கோள்’ (Himalayan Tsunami) எனும் பெயரில், உலகம் எப்படி அழியப் போகிறது என்பதற்கு ஒரு குட்டி முன்னோட்டமே (Trailer) காட்டி விட்டது இயற்கை!

ஆனால் நாம் இன்னும் சாதி, மொழி, மதம், இனம், மாநிலம், நாடு என ஏதாவது ஒன்றின் பெயரால் அடுத்தவரிடம் சண்டை போட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்! மக்களுக்குள் எவ்வளவுதான் பிரிவினைகள் இருந்தாலும், எல்லாரின் உரிமைக்கும், வாழ்வுக்கும் பிரச்சினை என வரும்பொழுது அனைவரும் ஒற்றுமையாகி விடுவார்கள் என்பதுதான் வரலாறு. ஆனால், உயிருக்கே ஆபத்து, உலகமே அழியப் போகிறது என்கிற நிலைமை வந்தும் நாம் இன்னும் ஒன்றுபடாவிட்டால் இனியும் எப்பொழுதுதான் திருந்தப் போகிறோம்?

செவ்வாய், நவம்பர் 11, 2014

கலையுலகில் கமலியல்! (Kamalism in Tamil Cinema!) - கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் முழுமையான உரையுடன் (with full script)!


Kamalism in Tamil Cinema! - Kamalhaasan Diamond Jubilee Birthday Documentary!

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் கலைமணம் கமழ்த்தி வரும் உயர்திரு.கமல்ஹாசன் அவர்கள் வைர விழாப் பிறந்தநாள் காணுவதை முன்னிட்டு, நான் துணையாசிரியராகப் பணியாற்றும் யுவா தொலைக்காட்சியின் நிறுவனரும் என் ஆருயிர் நண்பருமான பிரகாஷ் அவர்கள் எங்கள் தொலைக்காட்சி சார்பாக விழியம் ஒன்றை வெளியிட்டு அந்த மாபெரும் கலைஞரைச் சிறப்பிக்க விரும்பினார். அதற்கு நான் எழுதிக் கொடுத்த படைப்பு இதோ உங்கள் கண்முன்! 

கமல்ஹாசன்!
தமிழ்த் திரையுலகம் எனும் அற்புத விளக்கைத்
தன் பொற்கரங்களால் உயிர்ப்பிக்கப் பிறந்த அலாவுதீன்!
தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்திய புகழ் ஏணி!
உலகநாயகன் எனத் தமிழ் மக்கள் கொண்டாடும் கலைஞானி!

இந்திய சினிமாவின் வயதில் பாதி
இவருடைய அனுபவம்!
பேச்சு மூச்சு இரத்தம் சதை என
ஒவ்வோர் அணுவிலும் கலைத்தாயைக் கருச்சுமக்கும்
இந்தத் தமிழ்க்குழந்தையின் பயணம்
ஆறு வயதில் தொடங்கியது!

1960இல் ஆளவந்த அந்தக் குழந்தை நட்சத்திரம், தமிழ்த் திரைவானின் துருவ நட்சத்திரமாய் இன்று அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இதோ அவருடைய விசிறிகளின் ஒரு சிறு காணிக்கை!

திங்கள், நவம்பர் 03, 2014

மீண்டும் அகச் சிவப்புத் தமிழ்! | Aga Sivappu Thamizh is back!Welcome!

ன்பார்ந்த நண்பர்களே! தமிழார்ந்த நெஞ்சங்களே! ‘அகச் சிவப்புத் தமிழ்’த் தோழர்களே அனைவருக்கும் நேச வணக்கம்!

நான் கற்பனை கூடச் செய்யவில்லை, மீண்டும் இந்த வலைப்பூவின் வழியே உங்களையெல்லாம் சந்திப்பேன் என்று. முதலில் எல்லோரும் என்னை மன்னியுங்கள், அறியாமல் இந்த வலைப்பூவை அழித்ததற்காக! தவறான ஒரு புரிதல் காரணமாக அப்படிச் செய்து விட்டேன்.

நடந்தது என்ன?

சொல்லி விடுகிறேன் அந்த மர்மத்தை.

அண்மையில், என் கூகுள் கணக்கு கொந்தப்பட்டது (hacked)!!

என் மேல் விழுந்த விருதுத் துளியே!’ பதிவின் கருத்துரைப் பகுதியில், இரண்டு நாட்களாக ‘அகச் சிவப்புத் தமி’ழை அணுக முடியவில்லை என்று பெருமதிப்பிற்குரிய நண்பர் ஊமைக்கனவுகள் ஜோசப் விஜு அவர்கள் கூறியதை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் (பார்க்காவிட்டால் பார்க்க: இங்கே). அதற்குக் காரணம் அந்தக் கொந்தத் தாக்குதல்தான். ஆம்! உள்ளே நுழைந்த முகம் தெரியாத அந்த ‘நலம் விரும்பி’ என் கூகுள் கணக்கு மொத்தத்தையும் முடக்கி விட்டுச் சென்று விட்டார். அல்லது, வழக்கத்துக்கு மாறான இடத்திலிருந்து (ஸ்பெயின்) கணக்கு கையாளப்பட்டதால் கூகுளே ஐயப்பட்டுக் கணக்கை முடக்கி விட்டதோ என்னவோ, நானறியேன்!

ஆனால், சிக்கல் அஃது இல்லை. ஒரு சொடுக்கில் நான் என் கூகுள் கணக்கை மீட்டுவிட்டேன். கணக்கை மீட்டவுடன் வலைப்பூவும் தானாகவே சரியாகி விட்டது. அதனால், நானும் இதைப் பெரிதாக நினைக்கவில்லை. போகட்டும் என்று கடவுச்சொல்லை மாற்றிவிட்டு வாளாவிருந்து (சும்மா) விட்டேன். ஆனால் மறுநாள், இன்னோர் அதிர்ச்சி! வார்ப்புரு மாற்றங்களைச் செய்து பார்ப்பதற்கெனவே நான் சோதனை வலைப்பூ ஒன்று வைத்துள்ளேன். மறுநாள், அந்த வலைப்பூவில் நான் வெளியிட்டிருந்த சோதனை இடுகைகள் அனைத்தும் ஒரே நாளில் மறுவெளியீடு ஆகியிருந்தன. ஆக, யாரோ அந்த வலைப்பூவிலும் கை வைத்திருப்பது தெரிந்தது! கடவுச்சொல்லை மாற்றிய பிறகும் நடந்த இந்தத் தாக்குதல் என்னைத் திகைக்க வைத்தது.

தொழில்நுட்பம், சட்டம் எல்லாம் அறிந்த நண்பர் ஒருவரை அணுகி இதற்குத் தீர்வு கேட்டேன். ஆனால், அவர் இந்தச் சிக்கலை வேறு கோணத்தில் பார்த்தார். ஏற்கெனவே நான் வலைப்பூவில் மிகவும் தீவிரமான பதிவுகளை எழுதி வருகிறேன். இப்பொழுது தளத்தின் பாதுகாப்பும் இப்படிக் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், இனி நான் கடவுச்சொற்களை மாற்றி எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஒருவேளை யாராவது மீண்டும் அதில் நுழைந்து சட்டத்துக்குப் புறம்பாகவோ, சமூகத்துக்குக் கேடு விளைக்கக்கூடிய வகையிலோ எதையேனும் வலைப்பூவில் வெளியிட்டு விட்டால் என்னாகும் என்று அவர் ஒரு கேள்வியை முன்வைத்தார். மாற்றுக் கருத்துக்காக அவரை விடத் தொழில்நுட்பத்தில் சிறந்த நண்பரான இன்னொருவரைக் கலந்தாலோசித்தேன். அவரும் இதையே ஆமோதிக்கவே நான் கொஞ்சம் மிரண்டுதான் போனேன்.

இது மட்டுமில்லாமல், கணினியில் நல்ல நச்சுநிரல் தடுப்பான் (Anti-Virus) இல்லாதது, மேலும் பல தனிப்பட்ட சிக்கல்கள், காக்காய் உட்காரப் பனம்பழம் விழுவது போல் நடந்த சில நிகழ்வுகள் என்று எல்லாமாகச் சேர்ந்து தளத்தை அழிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதாக என்னை நம்ப வைத்து விட்டன. அதனால்தான், தாள முடியாத வேதனையோடு நான் அப்படியொரு முடிவெடுத்தேன்.

ஆனால், முடிவைச் செயல்படுத்திய பிறகுதான் தெரிந்தது, சொந்த வாழ்க்கையில் நேர்ந்த சில நிகழ்வுகளுக்கும் கூகுள் கணக்குத் தாக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று. தொழில்நுட்பத்தை முழுமையாக அறியாமல், நுனிப்புல் மேய்ந்ததன் விளைவாக நான்தான் சில நிகழ்வுகளைத் தவறாக முடிச்சுப் போட்டுப் புரிந்து கொண்டேன் என்பதும், அந்தத் தவறான புரிதலின் அடிப்படையில் நான் சிக்கலை விளக்கியதால்தான் நண்பர்களும் தளத்தை அழிக்குமாறு பரிந்துரைக்க நேர்ந்திருக்கிறது என்றும் பிற்பாடுதான் புரிய வந்தது.

அவற்றுள் சில காரணங்கள் என் தலைக்கு மேல் கத்தியாக இன்றும் தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், ஓரளவுக்கு முதன்மையான சில தடைகள் நீங்கிவிட்டதால் மீண்டும் வலைப்பூவை மறுமலர்த்தியே தீருவதெனத் துணிந்து, இதோ மறுபடியும் உங்கள் முன் தோன்றி விட்டேன். இனி, வழக்கம் போல் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ தொடர்ந்து வெளிவரும்! இப்படியொரு தவறான முடிவை எடுத்து உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்ததற்குத் தண்டனையாய் முன்பை விடக் கூடுதல் பொலிவுடனும், சுவையுடனும், வீரியத்துடனும் பதிவிடுவதாக உறுதியளிக்கிறேன்!

இதனால் பெற்ற பட்டறிவு! (experience)

கொந்தத் தாக்குதலுக்கு ஆளான தளத்தை மீண்டும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் நுட்பம் பற்றி இணையத்தில் தேடினேன். சில கட்டுரைகள் சில புதிய வழிகளைக் காட்டின. அவற்றுள் முதன்மையானது கணினி, இணையம் ஆகியவற்றைச் சார்ந்திராமல் நம் கைப்பேசியின் துணைகொண்டே நம் கூகுள் கணக்கைப் பாதுகாக்கும் இரட்டைப் பாதுகாப்பு முறை (Two step verification). இது பற்றிப் பலரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும், தெரியாதவர்களுக்காக ஒரு சிறு அறிமுகம். 

இரட்டைப் பாதுகாப்பு முறை என்பது ஒவ்வொரு தடவை நாம் கூகுள் கணக்குக்குள் நுழையும்பொழுதும் இரண்டு முறை சோதிக்கும் வசதி. இதை நீங்கள் செயல்படுத்தி விட்டால், அதன் பின் வழக்கத்துக்கு மாறான கணினியிலிருந்து நீங்கள் கூகுள் கணக்குக்குள் நுழைய முனைந்தால், உடனே உங்கள் கைப்பேசிக்கு ஒரு கமுக்க எண் (secret number) அனுப்பப்படும். கடவுச்சொல்லுக்கு அடுத்தபடியாக அந்தக் கடவு எண்ணையும் (pass code number) கொடுத்த பின்னரே நீங்கள் அந்தப் புதுக் கணினியின் மூலம் கணக்குக்குள் நுழைய இயலும். ஆக, உங்கள் கணினி தவிர உலகில் வேறு எங்கிருந்தும், எவராலும் – ஏன், உங்களாலுமே கூட – உங்கள் கூகுள் கணக்கை உங்கள் கைப்பேசியின் துணையின்றித் திறக்க இயலாது! உங்கள் கணக்கை இனி எவனா(ளா)வது கொந்த (hack) வேண்டுமானால் உங்கள் கடவுச்சொல் மட்டும் தெரிந்தால் போதாது, உங்கள் கைப்பேசியையோ, கணினியையோவே தூக்கிக்கொண்டு ஓடினால்தான் முடியும். (LOL!) இஃது ஏறத்தாழ இயலாத ஒன்று என்பதால் இது மிகவும் சிறந்த வழிமுறையாகவே தென்படுகிறது. இதைச் செயல்படுத்தும்படி தொழில்நுட்பர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். எனவே, அனைவரும் – குறிப்பாக வலைப்பதிவர்கள் – இந்த இரட்டைப் பாதுகாப்பு முறையைச் செயல்படுத்தி விடுமாறு பரிந்துரைக்கிறேன். இதைச் செயல்படுத்துவது எப்படி என்பது முதலான விரிவான தகவல்களுக்கு நம் பேரன்புக்குரிய நண்பர் ‘கற்போம்’ பிரபு கிருஷ்ணா அவர்களின் இணைய இதழில் வெளிவந்திருக்கும் Google/Gmail Account Hack செய்யப்படாமல் இருக்க 2-Step Verification எனும் கட்டுரையைப் படிக்கலாம். இரட்டைப் பாதுகாப்பு முறை பற்றி மட்டுமில்லை, மேலும் சில பாதுகாப்பு வழிமுறைகளும் அதில் விளக்கப்பட்டுள்ளன.

அந்தக் கட்டுரையில் இல்லாத மேலும் சில தலையாய தகவல்கள் இந்த ஆங்கிலக் கட்டுரையில்! இதைப் படிக்கத் தவறாதீர்கள் எனச் சொல்ல மாட்டேன், தவறியும் படிக்காமல் விடாதீர்கள் என்பேன்!

ஆனால், இந்தக் கட்டுரைகள் மூலம் நான் அறிந்தவையெல்லாம் இணையத்தில் நானாகத் தேடிக் கற்றறிவு (கற்ற + அறிவு). இந்த நிகழ்விலிருந்து நான் பெற்ற பட்டறிவு என்பது வலைப்பூ நடத்துவதற்கு அதற்குண்டான தொழில்நுட்பங்கள் மட்டும் தெரிந்திருந்தால் போதாது என்பதுதான்! நுனிப்புல் மேய்வது எப்பொழுதுமே ஆபத்து என எத்தனையோ முறை பல நூல்களில் படிக்கிறோம்; பெரியவர்களின் பட்டறிவுக் கதைகளில் கேட்கிறோம். ஆனாலும், நாம் பலரும் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே! வார்ப்புருவைத் திருத்துவது, வலைப்பூவை விதவிதமாக அழகுபடுத்துவது, பட்டியலிடுதளங்கள் (directories) பலவற்றிலும் தேடித் தேடி இணைப்பது, பின்னிணைப்புகள் (back links) உருவாக்குவது போன்ற தேடுபொறி உகப்பாக்க (SEO) வேலைகள் மட்டும் தெரிந்திருந்தால் போதாது! துறையில் இறங்கி விட்டோம்; இனி முழுமையாகவே தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்ள முயல்வதே நல்லது! அதிலும், அவ்வப்பொழுது நம்மை இற்றைப்படுத்திக் கொண்டே (update) இருக்கவும் வேண்டும்! தவிர, இது சார்ந்த சட்ட நுணுக்கங்களையும் அறிந்திருத்தல் இன்றியமையாதது.

நம் தளத்தை நாம் மட்டும்தான் பயன்படுத்துகிறோமா அல்லது நாம் அறியாமல் வேறு யாராவதும் அதைப் பயன்படுத்துகிறார்களா? நம் தளம் திடீரெனக் காணாமல் போய்விட்டால், அஃது என்ன ஆனது? அதற்கு உண்மையில் நேர்ந்தது என்ன? அழிந்து போனதா, அல்லது முடக்கப்பட்டதா, அல்லது சிதைக்கப்பட்டதா? இப்படிப்பட்ட அடிப்படை விதயங்கள் நமக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருத்தல் வேண்டும்! எனவே, வெறும் பதிவர் உதவிக்குறிப்புகள் (blogger tips) படிப்பதோடு நில்லாமல் இப்படிப்பட்ட நுணுக்கமான தொழில்நுட்பங்களையும் அனைவரும் தேடிப் படியுங்கள் எனக் கேட்டுக் கொள்வதோடு, இணையப் பாதுகாப்பு (Cyber safety), இணையச் சட்டம் (Cyber law) தொடர்பான பதிவுகளையும் நிறைய எழுதுமாறும், குறிப்பாக, இவை பற்றிய ஆங்கிலப் பதிவுகளைத் தமிழ்படுத்தித் தருமாறும் தொழில்நுட்ப, சட்டப் பதிவர்களை அன்புடன் கோருகிறேன்!


Thanks for your Love!

நான் வலைப்பூவை அழிப்பதாகச் சொன்னதும் நண்பர்கள் சிலர் உடனே வந்து தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து, அன்பையும் கொட்டினர். குறிப்பாக, நண்பர்கள் ஜோசப் விஜு ஐயா, ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரி ரங்கன் ஆகியோரை நெஞ்சம் நெகிழ்வில் வழிய இப்பொழுது நினைவு கூர்கிறேன்.

மைதிலி அவர்களே! நான் மீண்டும் வர வேண்டும் என்று நீங்கள் கேட்டபொழுது கண்டிப்பாக வருவேன் என்று நான் பதிலளித்தது வேறொரு வலைப்பூ மூலம் வருவேன் என்ற பொருளில்தான்; ‘அகச் சிவப்புத் தமி’ழை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று நான் ஆணையாக நினைக்கவில்லை! ஆனால், ஜோசப் விஜு அவர்களின் நம்பிக்கை பலித்து விட்டது.

ஆம் ஐயா! நீங்கள் கூறினீர்கள், அவ்வளவு எளிதில் என்னை விட்டுவிடப் போவதில்லை என்றும், அந்த நம்பிக்கை உங்களுக்கு இருப்பதாகவும், உங்கள் நம்பிக்கை எதுவும் இதுவரை பொய்த்ததில்லை என்றும். அப்பொழுதும் நான், இன்னொரு வலைப்பூ மூலம் நான் மீண்டும் பதிவுலகுக்கு வருவதன் மூலம்தான் உங்கள் நம்பிக்கை நனவாக முடியும் என்றுதான் நினைத்தேனே தவிர, இப்படி நிகழும் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கடவுள் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், உள்ளத்து வலிமை (Power of Mind) பற்றி அறிவியலார்ந்து நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன், நேரடியாகவும் பார்த்திருக்கிறேன். அதனால், அதன் மீது கொஞ்சம் நம்பிக்கை உண்டு. இப்பொழுது அது சரிதான் என மீண்டும் ஒருமுறை உங்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது!

இவர்கள் மட்டுமின்றி, “பதிவுக் குழந்தையை அழிக்க வேண்டாம்” என்று உருக்கத்தோடு வலியுறுத்திய நண்பர் உலகளந்த நம்பி அவர்கள், வருத்தம் தெரிவித்த ‘தளிர்’ சுரேஷ் அவர்கள் என அனைவரின் நேசத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி! அனைவரும் தொடர்ந்து வருகை புரிந்து வழக்கம் போல் உங்கள் செம்மையான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்!

முதன்மைக் குறிப்பு: 'அகச் சிவப்புத் தமி'ழை மின்னஞ்சல், ஊட்டம் (feeds) ஆகியவற்றின் வழியாகப் பின்பற்றுபவர்கள் மட்டும் கனிவு கூர்ந்து மீண்டும் புதிதாகப் பின்தொடரப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்! சிரமத்திற்கு வருந்துகிறேன்!


கைதுறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இணையக் கணக்குப் பாதுகாப்பு வழிமுறைகள் சமூகப் பகைவர்களிடமிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் நோக்கிலானவை மட்டுமே! அரசு நினைத்தால் நீங்கள் இரட்டைப் பாதுகாப்பு முறையென்ன அதைவிட எப்பேர்ப்பட்ட பூட்டுப் போட்டாலும், எந்த விதத் தடயமும் இல்லாமல் உள்புகுந்து பார்த்து வெளியேற இயலும். தேவைப்பட்டால் உங்கள் கணக்குகளை முடக்கவும் அவர்களால் இயலும். இவற்றுக்கான சட்டப்பூர்வ அதிகாரமும் அவர்களுக்கு உண்டு என்பதை மறக்க வேண்டா! எனவே, முழுமையான பாதுகாப்பில் இருக்கிறோம் எனும் துணிவில் சட்டப்புறம்பான எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டா எனக் கேட்டுக் கொள்வதோடு அப்படிப்பட்ட செய்கை எதையும் தூண்டும் நோக்கில் இஃது எழுதப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்!

❀ ❀ ❀ ❀ ❀ 
படங்கள்: நன்றி ௧.Catscanman.net, ௨.சுடர் எப்.எம், ௩.மாணவன்
உசாத்துணை: கற்போம், nakedsecurity.sophos.com


வெள்ளி, அக்டோபர் 17, 2014

அடர் சிவப்புக் கண்ணீருடன் விடைபெறுகிறேன்! நன்றி! வணக்கம்!
ன்பார்ந்த நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களே, ‘அகச் சிவப்புத் தமிழ்’ அன்பர்களே அனைவருக்கும் நேச வணக்கம்!

இதுவரை நான் மொத்தம் நாற்பது பதிவுகள் வெளியிட்டுள்ளேன். இன்னும் எத்தனையோ பதிவுகளும் தொடர்களும் எழுதவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்குள் இப்படி ஒரு பதிவு எழுத நேருமென்று நான் கனவு கூடக் காணவில்லை. இதோ, இத்துடன் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ அழிக்கப்படுகிறது!

ஆம்! துளியும் ஈவிரக்கமின்றி இந்த வலைப்பூ மொத்தமாகக் கசக்கி எறியப்படுகிறது! இத்தனை காலமாக, இந்தச் சிறுவனின் எழுத்தையும் மதித்து மாதந்தோறும் 3500 முறைக்கும் மேல் வருகை புரிந்து, தொடங்கிய ஒரே ஆண்டில் இதை வெற்றிகரமான வலைப்பூவாக்கிய உங்கள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்துருகும் நன்றிகள்!

பெற்ற குழந்தையைத் தன் கரங்களாலேயே கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான தந்தையின் உளநிலையோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்! எனக்கு ஏதாவது நன்மையோ ஆறுதலோ நீங்கள் அளிக்க விரும்பினால், கனிவு கூர்ந்து ஒருபொழுதும் இதற்கான காரணத்தைக் கேட்காதிருங்கள்! அதுவே போதும்!

இந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த வலைப்பூவால் தமிழுக்கோ, தமிழர்களுக்கோ, இதர மக்களுக்கோ அணுவளவாவது நன்மை ஏதேனும் விளைந்திருக்குமானால் அதுவே என் வாழ்நாள் பெரும்பேறு எனக் கருதுவேன்!

நன்றி! வணக்கம்!

படம்: நன்றி http://www.tamilulagu.com

திங்கள், செப்டம்பர் 22, 2014

என் மேல் விழுந்த விருதுத் துளியே!


The Versatile Blogger Award!
பன்முகப் பதிவர் விருது! நன்றி: கில்லர்ஜி
திவுலகில் தற்பொழுது விருது மழை! ‘பன்முகப் பதிவர்’ என்னும் ஒரு விருதைப் பதிவுலக அன்பர்கள் ஒருவருக்கு ஐவர் எனச் சுழற்சி முறையில் பகிர்ந்து கொண்டு பதிவுலகில் குதூகலம் கிளப்பி வருகிறார்கள்.

அந்த நேச மழையில் ஒரு துளியை இந்தச் சிறியவனும் பருகப் பகிர்ந்திருக்கிறார் அன்பு நண்பர் கில்லர்ஜி அவர்கள்! பற்பல வலைப்பூக்களைப் படிக்கும் அவர் எத்தனையோ ஆயிரம் பேரை விட்டுவிட்டு நேற்று வந்த எனக்கு இந்த விருதை அளித்திருப்பதற்கு என் தகுதியைக் காட்டிலும் அவருடைய அன்பே கூடுதலான காரணமாய் இருப்பதாக உணர்கிறேன்!

இந்த விருது மழையில் நனைய நான்கு நெறிமுறைகளை இட்டிருக்கிறார்கள். அவை தலைப்புகளாக இனி கீழே:

பெற்ற விருதைத் தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்! – (நெறி: ௧)

செய்து விட்டேன். இடப்பக்கப் பட்டியில் பார்க்க!


விருதளித்த வலைப்பூவுக்கு இணைப்பளிக்க வேண்டும்! (நெறி: ௨)

நண்பர் கில்லர்ஜியின் வலைப்பூ இதோ -> http://killergee.blogspot.in/2014/09/blog-post_14.html


பெற்ற விருதை ஐந்து பேருக்காவது பகிர வேண்டும்! (நெறி: ௩)

இங்குதான் சிக்கலே! நான் பெரிதும் மதிக்கிற, விருதுக்குரியவர்களாக என் கண்களுக்குத் தென்படுகிற அனைவருமே தகுதியில் என்னை விட எங்கோ இருக்கிறார்கள்! அவர்களிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியதே இன்னும் மலைபோல் குவிந்திருக்க, அவர்களுக்கு விருதளிக்க எனக்கு என்ன தகுதி? இருந்தாலும், என் தகுதியைப் பாராமல், என் அன்பையும், நட்பையும், தமிழ் மீதும், தமிழ்ப் பெருவுலகின் மீதும் முறையே எனக்குள்ள ஆர்வத்தையும் அக்கறையையும் மட்டுமே பார்த்து இந்த விருதுகளை ஏற்றுக் கொள்ளுமாறு பின்வரும் பெருந்தகைகளைக் கேட்டுக் கொள்கிறேன்!

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?!

Koozh and Karuvaadu Sauce
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அம்மனுக்குக் கூழும் கருவாடும் படைத்து வழிபடும் தமிழர்கள் கிறுக்கர்களா?

பொதுவாக, என் சொந்த வாழ்க்கைச் சோகங்களைப் பொதுப்படையாகப் பகிர்வது எனக்குப் பிடிக்காது. அப்படி ஏதும் எழுதக்கூடாது எனும் உறுதியோடுதான் இந்த வலைப்பூவையே தொடங்கினேன். ஆனால், என்னையும் இப்படி ஒரு பதிவு எழுத வைத்து விட்டது அண்மையில் நேர்ந்த ஒரு நிகழ்வு!

என் அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் வழக்கமெல்லாம் கிடையாது; எப்பொழுதாவது ஒருமுறைதான். மற்றபடி, வீட்டிலேயே வழிபாடு நடத்துவதோடு சரி.

வெகு நாட்களுக்குப் பிறகு, கடந்த 10.08.2014 - ஞாயிறன்று உள்ளூர் குணாளம்மன் கோயிலில் கூழ் வார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, “இதுவரை நான் கூழ் ஊற்றும்பொழுது ஒருமுறை கூடக் கோயிலுக்குப் போனதில்லை. இன்று போகப் போகிறேன்” என்று ஆவலாகக் கூறிக் கிளம்பினார். திரும்பி வந்தவர் கண்களில் நான் கண்ணீரைத்தான் பார்க்க முடிந்தது.

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!
Word - The Powerful Tool!

சீசர் செத்ததைக் கொண்டாடும் உளநிலையில் இருந்த மொத்த ரோமாபுரியையும் ஒரே ஒரு மேடைப் பேச்சால் அவரைக் கொன்றவர்களுக்கு எதிராகவே திருப்பியவை மார்க் ஆண்டனியின் சொற்கள்!...

எண்ணிக்கையிலும் பலத்திலும் மிகக் குறைவாக இருந்த பிரிட்டன் விமான வீரர்கள் தங்களை விடப் பலம் வாய்ந்து விளங்கிய ஜெர்மானியப் படையை வென்ற அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவை சர்ச்சிலின் சொற்கள்!...

கடவுள்தான் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கிறார் என்கிற அளவுக்கு மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்த ஒரு மாநிலத்தில் கோடிக்கணக்கானவர்களைப் பகுத்தறிவுப் பெருவழிக்குத் திசை மாற்றியவை பெரியாரின் சொற்கள்!...

வார்த்தைகள் வரலாற்றைப் புரட்டிப் போட்டதற்கு இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அடுக்க முடியும்!

சனி, ஜூலை 12, 2014

ஒரு பொற்காலம் முடிந்துவிட்டதா?! – வாண்டுமாமாவுக்கு அஞ்சலி!


Vaandumama - The Uncrowned Emperor of Tamil Children Literature!
தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் முடிசூடாப் பேரரசர் வாண்டுமாமா அவர்கள்

மிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் துருவ விண்மீன் வீழ்ந்து விட்டது! மூன்று தலைமுறைகளாகத் தமிழ்க் குழந்தைகளின் உள்ளத்து அரியணையில் முடிசூடாப் பேரரசராக வீற்றிருந்த வாண்டுமாமா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது!

முதலில் இந்தச் செய்தியை, வலைப்பூ ஒன்றில்தான் பார்த்தேன். ஆனால், நம்பவில்லை. காரணம், வாண்டுமாமா இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவது இது முதல்முறையில்லை.

புதன், ஜூன் 25, 2014

இசுலாமியர் மீதான சிங்கள-பௌத்த வெறித் தீ! வெறியர்களுக்கு எதிராகவே திருப்புவது எப்படி?


Buddhist monks with weapons
ஆயுதம் ஏந்திய பௌத்தர்கள்
புத்தன் நிறுவிய சமயம் (religion) மீண்டும் இரத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது!

இலங்கையில் இசுலாமியத் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் ஒரு கோரத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது சிங்கள இன, பௌத்த சமய வெறி! வழக்கம் போலவே, பச்சைக் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் சிங்களர்கள் நிகழ்த்தியிருக்கும் இந்தக் கொடூர வெறியாட்டம் பார்க்கவே பதைபதைக்க வைக்கிறது!

Bloodshed by Buddhists in Srilanka
நடந்த கலவரத்தில் பௌத்தர்களால் சிந்திய குருதி!!

இலங்கை மண் இசுலாமியத் தமிழர்களின் குருதி சுவைப்பது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் 1915ஆம் ஆண்டு இதே போலொரு சூன் மாதத்தில் முசுலீம் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (தகவல் நன்றி: சேவ் தமிழ்சு இயக்கம்).

இலங்கையில் தமிழ் மக்களைச் சிறுபான்மையினராக ஆக்குவதற்காக அதன் ஆட்சியாளர்களும் பௌத்தத் துறவிகளும் செய்யாத சூழ்ச்சிகள் இல்லை.

முதலில், தமிழ்நாட்டிலிருந்து அங்கே குடியேறித் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த, அந்த மண்ணை வளம் கொழிக்கும் பகுதியாக ஆக்கிய மலையகத் தமிழர்களை, அவர்களின் தாய்நிலம் அது இல்லை என்று கூறித் தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பினார்கள்.

பிறகு, வழிபடும் கடவுள் வெவ்வேறாக இருந்தாலும் மொழிபடும் தமிழ் ஒன்றே என்ற உணர்வோடு ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த தமிழர்களைச் சமயத்தின் பேரால் பிளவுபடுத்தி, இசுலாமியர்களையும் மற்ற சமயங்களைச் சேர்ந்த தமிழர்களையும் பிரித்தார்கள். தமிழர்கள் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளவும் வைத்தார்கள்.

இப்பொழுது, எதற்காக இந்தப் பிரிவினைகளையெல்லாம் செய்தார்களோ, அந்த நோக்கத்தின் ஒரு பகுதி நிறைவேறி விட்டது. பல்வேறு வழிகளில் முயன்று, கடைசியில் இனப்படுகொலைத் தாண்டவம் ஒன்றையே நடத்தி இசுலாமியரல்லாத தமிழர்கள் அனைவரையும் அழித்து ஒழித்தாகி விட்டது. இப்பொழுது மிச்சம் இருப்பது இசுலாமியத் தமிழர்கள் மட்டும்தான். இனி அவர்கள் மட்டும் சிங்களர்களுக்கு எதற்காக? ஆகவே, அவர்களையும் தீர்த்துக்கட்டி விட்டு முழுக்க முழுக்க சிங்கள இன, பௌத்த சமயத் தனிப்பெரும் நாடாக இலங்கையைத் திகழச் (!) செய்வதற்கான அடுத்தக்கட்ட முயற்சியாகவே இந்தத் தாக்குதலை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது! இறுதியில் இதுவும் ஒரு பெரிய இனப்படுகொலையில் முடிந்தாலும் வியப்படைய எதுவுமே இல்லை.

மேலும், இசுலாமியரல்லாத தமிழர்களின் மீதான இலங்கையின் தாக்குதல்கள் இந்துக்கள் மீதான வன்முறை என அண்மைக்காலமாக முன்வைக்கப்படுவதாலும், இந்தியாவில் இந்து சமயக் கட்சியின் ஆட்சி நடப்பதாலும் இப்பொழுதுக்கு இந்துத் தமிழர்களின் மீதான தாக்குதலைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, வெகுகாலமாக ஏறுமுகத்திலேயே இருக்கிற இசுலாமியத் தமிழர்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைக்கலாமே என்கிற எண்ணமாகவும் இது தென்படுகிறது.

எது எப்படியிருந்தாலும், இலங்கையின் இன, சமய வெறியானது சிங்கள பௌத்தர்களைத் தவிர வேறு யாரையும் அந்த மண்ணில் வாழ விடாது என்பதே இந்தத் தாக்குதல் மூலம் நாம் உணர வேண்டிய உண்மை! இதை உணர்த்த வேண்டியதும், இந்தக் கொடுமைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த இன-சமய வெறித் தீயைச் சிங்களர்களுக்கு எதிராகவே திருப்பிவிடுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் தமிழினத் தலைவர்களின், தமிழீழ ஆதரவு அமைப்புகளின் முதற்பெரும் கடமை!

தமிழினத் தலைவர்கள் செய்ய வேண்டியது என்ன?

திங்கள், ஜூன் 16, 2014

மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!


Machi! Nee Kaelaen!
யுவா தொலைக்காட்சி இதழில் நான் எழுதும் புதிய தொடர்!

ச்சி... வாழ்க்கையே லைக் அண்டு ஷேரிங்தான் மச்சி! நாம் எதை எதை விரும்புகிறோம், எதை எதைப் பகிர்கிறோம் என்பதுதான் நம் வாழ்க்கையையும் உறவுகளையும் தீர்மானிக்கிறது.

புதன், ஜூன் 11, 2014

தமிழ்10 திரட்டியில் உங்கள் வலைப்பூவை இணைக்க முடியவில்லையா? – இதோ தீர்வு!


Tamil10 Aggregator

நானும் கடந்த ஓராண்டாக –அதாவது, இந்த வலைப்பூவைத் தொடங்கிய நாள் தொட்டு- இந்தத் தளத்தைத் தமிழ்10-இல் இணைக்க முயன்று வருகிறேன்; முடியவில்லை!

இணைப்பதற்காக ஒவ்வொரு முறை அந்தத் தளத்துக்குச் சென்று ‘பதிவை இணைக்க’ பொத்தானை அழுத்தும்பொழுதும் ‘பக்கம் காணப்படவில்லை’ (404 Error) என்றே காட்டும். ‘சரி, புதிய தளங்களை இணைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போல. சரியான பிறகு வரலாம்’ என நானும் திரும்பி விடுவேன். ஆனால், இப்படியே பலமுறை ஆன பின்னர், ‘சரி, வலைப்பூவை இணைக்கத்தான் முடியவில்லை. தமிழ்10-இன் வாக்குப்பட்டையையாவது நம் தளத்தில் நிறுவி வைக்கலாம். மற்றவர்கள் அதில் வாக்களிப்பதன் மூலமாவது நம் இடுகைகள் அந்தத் திரட்டியில் இணைய முடிகிறதா பார்க்கலாம்’ என்று எண்ணி ஓரிரு நாட்களுக்கு முன் வாக்குப்பட்டை தேடி அந்தத் தளத்துக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக அந்த அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது.

புதன், ஜூன் 04, 2014

இராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு சரியா தவறா? - சில விளக்கங்கள்!

Agitation against the Genocider Rajapaksha's Indian visit in Marina!
இனப்படுகொலையாளி இராஜபக்சேவின் இந்திய வருகையை எதிர்த்து மெரினாவில் போராட்டம்!

ராஜபக்சேவின் வருகை மட்டுமில்லை, அதற்கான எதிர்ப்பும் இந்த முறை கொஞ்சம் சலசலப்புகளை இங்கே ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக, ஈழப் பிரச்சினைக்கான எல்லாப் போராட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இராஜபக்சேவின் கொடும்பாவியை எரிப்பது உட்பட. ஆனால், இந்த முறை இராஜபக்சே வருகையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டங்களை மக்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை.

“தெற்காசிய நாட்டுத் தலைவர்கள் எல்லோரையும் அழைக்கும்பொழுது அவனையும் சேர்த்து அழைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்? என்பது போன்ற கேள்விகளை இந்த முறை பொதுமக்களிடமிருந்து கேட்க முடிந்தது.

மக்கள் எழுப்பும் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் என்ன? உண்மையிலேயே, இராஜபக்சே வருகைக்கான இந்த எதிர்ப்பு தேவையற்றதா? தமிழ் உணர்வாளர்கள் இந்த விதயத்தில் கொஞ்சம் மிகையாக நடந்து கொண்டு விட்டோமா? கொஞ்சம் அலசலாம் வாருங்கள்!

தமிழ்ப் பற்றாளர்கள், தலைவர்கள் ஆகியோரின் முதற்பெரும் கடமை!

எப்பொழுது ஒரு போராட்டத்துக்குப் பொதுமக்களின் ஆதரவு குறைந்து, அது தனிப்பட்ட சிலரின் போராட்டமாக மாறுகிறதோ அப்பொழுதுதான் அதற்குத் ‘தீவிரவாதம் எனும் முத்திரை குத்தப்படுகிறது. எனவே, எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு கட்டத்தின்பொழுதும், ஒவ்வொரு ஆர்ப்பட்டத்தின்பொழுதும் மக்களுக்கு அதிலுள்ள நியாயத்தைத் தெரியப்படுத்துவது இன்றியமையாதது! இதைச் செய்யாமல் எப்பேர்ப்பட்ட தலைவனாலும் போராட்டத்தின் இலக்கை வென்றெடுக்க முடியாது என்பதை இன்றைய தலைவர்களும் நம் தமிழ்ப் பற்றாளர்களும் முதலில் உணர வேண்டும்!

இலங்கைக் கொடுங்கோலனின் வருகைக்கான எதிர்ப்புப் பற்றி மக்கள் சில கேள்விகள் எழுப்புகிறார்கள். அவற்றுக்குப் பதில் கூற வேண்டியது நம் கடமை.

ஒவ்வொரு கேள்வியாகப் பார்க்கலாம்.

ஞாயிறு, மே 18, 2014

2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்!


Genocide Rememberance!Genocide Rememberance!

யிற்று!
அப்படி இப்படி என ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன!

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த முறை நாம் நம் மெழுகுத்திரிகளைக் கண்களில் நீரோடு மட்டுமில்லாமல், உதட்டில் சிறு புன்னகையோடும் ஏற்றலாம். தமிழினப் படுகொலைக்குப் பழிவாங்கி விட்ட நிறைவில்! காங்கிரசை வீழ்த்திய மகிழ்வில்!

ஆம், வெளிவந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளை ஒட்டி நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பரிசு! சிறந்த ஆறுதல்! கடந்த ஐந்தாண்டுக்காலத் தமிழர் போராட்டங்களின் பெருவெற்றி!

இது காங்கிரசுக்கு வாழ்வா சாவா தேர்தல் எனக் காரணங்களோடு விளக்கினார் தலைசிறந்த அரசியல் நோக்கரான ப.திருமாவேலன் அவர்கள், தமிழின் தனிப்பெரும் ஊடகமான ஆனந்த விகடனில். அப்படிப் பார்த்தால், இந்தத் தேர்தலில் காங்கிரசை நாம் சாகடித்து விட்டோம் என்றே சொல்லலாம். ராஜீவ் கொலைப் பழியை அதில் தொடர்பே இல்லாத தமிழர்கள் மீது சுமத்தியதோடில்லாமல், அந்த ஒற்றை மனிதன் கொல்லப்பட்டதற்காக நம் இனத்தையே அழித்த காங்கிரசு, இப்பொழுது அதுவும் அழிந்து விட்டது எனச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு வீழ்ச்சியை அடைந்திருக்கிறது! தமிழர்களின் இந்தக் கனவை நனவாக்கிய இந்திய உடன்பிறப்புகளுக்கு முதலில் கோடானுகோடி நன்றி! 

நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப் பிரச்சினை எதிரொலித்ததா? சான்றுகள் என்ன?

திங்கள், மே 05, 2014

உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்!


Aga Sivappu Thamizh - The Blog must read by every Tamil!

நெஞ்சார்ந்த உலகத் தமிழ் உறவுகளே!
அனைவருக்கும் நேச வணக்கம்!

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இப்பொழுது இரண்டாம் ஆண்டில்!

ஆம்! முதன்முதலில் என் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 12.11.2012 அன்று அவர் கையால் நிறுவப்பட்ட இந்த வலைப்பூ, கடந்த ஆண்டு என் தம்பியின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 23 அன்று தன் முதல் பதிவை வெளியிட்டது.

அந்த இனிய நாளை இப்பொழுது நான் நினைவு கூர்கிறேன்.

அந்த வலைப்பூ வெளியீட்டு நிகழ்வையே ஒரு குட்டி நூல் வெளியீட்டு விழா போலத்தான் நாங்கள் அரங்கேற்றினோம்.

தளத்தின் முதல் பதிவை என் தம்பி ஜெயபாலாஜி வெளியிட, தளத்தின் தலையாய பகுதியான ‘பற்றி’ பக்கத்தை (About page) என் அப்பா இளங்கோவன் அவர்கள் வெளியிட்டார். தளத்தின் பெருமையைப் பறைசாற்றும் முதன்மை உறுப்பான பக்கப் பார்வைகள் செயலியை (Pageviews Widget) என் பாட்டி சொக்கம்மாள் அவர்கள் நிறுவ, தளத்தின் முதல் கருத்தைப் பதிவு செய்தார் என் அம்மா புவனேசுவரி அவர்கள். (ஆனால், அதற்குள்ளாகவே நண்பர் கிங் விஸ்வா முதல் ஆளாகக் கருத்திட்டு விட்டது மறக்க முடியாத நட்பின் இனிமை!).

‘பற்றி’ பக்கத்தில் தளம் குறித்து எழுதிய பாவைப் (poetry) பாராட்டி ‘எதிர்வினைகள்’ பட்டியில் (Reactions Bar) வாக்களித்ததன் மூலம் என் சித்தி குணலட்சுமி அவர்கள் முதல் ஆளாகத் தளத்துக்கு ‘விருப்பம்’ தெரிவிக்க, முதல் பதிவுக்கான வாக்கை அளித்துத் தளத்தின் இடுகைக்கான முதல் ‘விருப்ப’த்தைப் பதிவு செய்தார் சித்தப்பா மோகன்குமார் அவர்கள்.

அப்படித் தொடங்கிய இந்த வலைப்பூவுக்கு இந்த ஓராண்டில் நீங்கள் அளித்திருக்கும் வளர்ச்சி பற்றி இதோ உங்கள் மேலான பார்வைக்கு:

மொத்தப் பதிவுகள்: 30

மொத்தக் கருத்துக்கள்: 171 (என் பதில்கள் உட்பட | பிளாக்கர் கருத்துப்பெட்டி + முகநூல் கருத்துப்பெட்டி)

மொத்தப் பார்வைகள் (Total Pageviews): 24,000+ (சராசரியாக ஒரு நாளுக்கு 65 பார்வைகள்)

மொத்த அகத்தினர்கள் (Followers): 266 (சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து)

வருகையாளர்களை அழைத்து வருவதில் முதல் பத்து இடங்களைப் பிடிக்கும் தளங்கள்:


தளங்கள்
பார்வைகள்

3274

1394

787

578

477

399

210

160

144

114
உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:


‘அகச் சிவப்புத் தமிழ்’ நேயர்கள் மிகுதியாக வாழும் நாடுகள்:


நாடுகள்
பார்வைகள்
இந்தியா
12989
அமெரிக்கா
3352
இரசியா
1477
ஐக்கிய அரபு நாடுகள்
716
இலங்கை
546
சிங்கப்பூர்
497
இங்கிலாந்து
472
கனடா
463
ஆத்திரேலியா
366
பிரான்சு
292நினைவில் கமழும் நிகழ்வுகள்!

Memories are fragrancing in the Heart Flower!

'தமிழ்மணம்' திரட்டியில் இணைந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே ‘அகச் சிவப்புத் தமிழ்’ 806ஆவது இடத்தைப் பிடித்தது அதன் வளர்ச்சி குறித்துக் கிடைத்த முதல் மகிழ்ச்சி! (தரவரிசையின் கடைசி எண் 1077).

அடுத்து, ‘சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா?’ பதிவு அடைந்த பெரும் வெற்றி என்றென்றும் மறக்க முடியாதது. ஒரே நாளில் 250-க்கு மேல், ஒரே மாதத்தில் 1500-க்கு வாரத்தில் 3500-க்கு மேல் எனப் பக்கப் பார்வை எண்ணிக்கையில் எகிறியடித்த இந்தக் கட்டுரை. அந்த ஒரு வாரத்துக்குள் 591 முகநூல் விருப்பங்களையும் பெற்றது.* (கூகுள்+, கீச்சுப் பகிர்மான எண்ணிக்கைகள் தனி!). இன்றும் 4200க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பார்வையிடப் பெற்று இந்தப் பதிவு முதலிடத்தில் இருக்கிறது! பார்வை எண்ணிக்கை ஒரு புறம் இருக்க, தமிழ் ஆர்வலர்கள் பலரின் பாராட்டுக்களையும் இக்கட்டுரை பெற்றதுதான் பெருமை தரும் நிகழ்வு.

அடுத்தது, நான் பெரிதும் மதிக்கும் தமிழறிஞரும், முன்னோடிப் பதிவருமான ‘மாதவிப்பந்தல்கண்ணபிரான் (கே.ஆர்எஸ்) அவர்களே வந்து இழிவானதா இனப்பற்று? எனும் என் பதிவைப் படித்துவிட்டு ஆதரவாகக் கருத்தளித்தது. நான் இன்றும் நினைத்து மகிழும் நிகழ்வு அது!

இதற்கடுத்ததாக, என் வலைத்தொழில்நுட்ப ஆசான் ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித் அவர்களே வந்து முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்! என்கிற என் தொழில்நுட்பப் பதிவைப் பாராட்டி எழுதியது பெருமிதம் பொங்கிய தறுவாய்!

இதுவரை பார்த்த பதிவுகள் அளவுக்குப் பக்கப் பார்வைகளையோ, முன்னோடிகளின் பாராட்டையோ அவ்வளவாகப் பெறாவிட்டாலும், தனிப்பட்ட முறையில் என் உள்ளத்துக்கு மிக மிக நிறைவை அளித்தவை,

தமிழினப் படுகொலையின்பொழுது விடுதலைப்புலிகளும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசு சுமத்திய அபாண்டக் குற்றச்சாட்டை உடைக்கும் வகையிலான ஆணித்தரமான ஒரு வாதத்தை 2009இலிருந்தே நான் நண்பர்களிடம் கூறிக் கொண்டுதான் இருந்தேன். அதை ஒரு முறை ‘தோழமை’ மடலாடற்குழுவிலும் பதிவு செய்திருந்தேன். அதை மேற்கண்ட பதிவு மூலம் இணையத்தில் நிலையாகக் காட்சிக்கு வைத்தது, தமிழன் எனும் முறையில் நான் என் இனப் போராளிகளுக்கு ஆற்ற வேண்டிய கடமையை ஓரளவாவது நிறைவேற்றினேன் என்கிற ஆறுதலைக் கொடுத்தது.

சிறுவர் இலக்கியம் அழிந்தால் தமிழ் மொழியே அழியும் எனும் கருத்தை நான் வெகு காலமாகவே கூறி வருகிறேன். இது பற்றி நான் எழுதிக் கொடுத்த சொற்பொழிவைத் தோழர் பிரகாஷ் அவர்கள் மேடையேற்றியபொழுது அவர்தம் கல்லூரித் தமிழாசிரியர் அதைப் பாராட்டியது, அதே கருத்தைக் ‘கல்கி’ இதழ் ஆசிரியருக்கு எழுதி அனுப்பி, அவர்கள் நடத்தும் ‘கோகுலம்’ சிறுவர் இதழை முன்னேற்றச் சில நடவடிக்கைகள் எடுக்குமாறு நான் அளித்த பரிந்துரைகளை ஏற்று அவரும் அவற்றுள் சிலவற்றை முயன்று பார்த்தது ஆகியவையெல்லாம் அந்தக் கருத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றிகள்! அப்படிப்பட்ட அந்த வெகுநாள் கருத்தை மேற்கண்ட இரண்டாவது இடுகை மூலம் நிலையாகப் பதிவு செய்தது, என் தாய்மொழிக்கு என்னாலான ஒரு சிறு தொண்டைப் புரிந்த நிறைவைத் தந்தது.

நன்றி!

Thanks!

இணையப் பெருஞ்சோலையில் நேற்று முளைத்த இந்தச் சிறு (வலைப்)பூவையும் பொருட்படுத்தி, இந்தச் சிறுவனின் கருத்துக்களைக் கூட மதித்து வந்து படித்த, வாக்களித்த, பகிர்ந்த அனைவர்க்கும் முதலில் வானளாவிய நன்றி!

தளத்தை வடிவமைக்கும்பொழுது மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களை அரும்பாடுபட்டுச் சரி செய்தளித்த நண்பர்கள் ‘கற்போம்’ பிரபு கிருஷ்ணா, ‘பிளாக்கர் நண்பன்’ அப்துல் பாசித், ‘ஒன்லைன் பதில்!’ அப்துல் பாசித் ஆகியோருக்கு நன்றி!...

வலைப்பூ நடத்துவது பற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாத நான் இன்று மற்றவர்களுக்கு வலைப்பூ வடிவமைத்துத் தருமளவுக்கு முன்னேற இன்றியமையாக் காரணிகளாய் விளங்கிய பிளாக்கர் நண்பன், கற்போம், பொன்மலர், தங்கம்பழனி வலைத்தளம், வந்தேமாதரம் ஆகிய தளங்களுக்கு நன்றி!...

(முதலாமாண்டு நிறைவு பற்றிய இந்தப் பதிவை எப்படி எழுத வேண்டும் என்பது கூட ‘பிளாக்கர் நண்பன்’ தளம் பார்த்துக் கற்றதுதான்!)

வலைத்தளத்துக்கான இலச்சினை (Logo), பதாகை (Banner) இரண்டையும் வரைந்து கொடுத்த நண்பர் கண்ணதாசன் அவர்கள், அதற்கு இறுதி வடிவம் கொடுத்த, மைத்துனரும் பிறவித் தோழருமான பிரகாஷ் அவர்கள் இருவருக்கும் நன்றி!...

‘அகச் சிவப்புத் தமிழ்’ப் பதிவுகளைப் பார்த்து விட்டு முகநூல், கூகுள்+ போன்ற சமூக வலைத்தளங்களில் என்னோடு இணைந்த புதிய நண்பர்கள் அனைவருக்கும், குறிப்பாக- ஒரு பதிவு விடாமல் படித்துப் பாராட்டியும், கருத்து தெரிவித்தும் தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் ந.சக்கரவர்த்தி, திண்டுக்கல் தனபாலன் ஆகியோருக்கும் நன்றி!...

முதன்முதலாகத் தன் தமிழ்விடுதூது வலைப்பூவில், படிக்க வேண்டிய தளங்கள் பட்டியலில் தமிழ் நூலகம், மாதவிப் பந்தல், முதலான போற்றுதலுக்குரிய தளங்களின் வரிசையில் ‘அகச் சிவப்புத் தமி’ழையும் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்திய, நான் கொஞ்சம் தளர்ந்து போன ஒரு நேரத்தில் தானே முன்வந்து ஆறுதலளித்த நண்பர் சக்திவேல் காந்தி அவர்களுக்கு நன்றி!...

நான் வலைப்பதிவு தொடங்கும் முன்பாகவே என் எழுத்துக்களில் தெறித்த தமிழுணர்வைப் பாராட்டி இணைய இதழ்களில் அவற்றை வெளியிட்டு ஊக்குவித்தவரும், கருத்துரீதியாக, தகவல்ரீதியாக நான் ஏதும் தவறு செய்தால் உடனுக்குடன் வழிகாட்டுபவருமான ஐயா திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு நன்றி!...

வலைப்பூ தொடங்கியதாகச் சொன்ன உடனே ஓடோடி வந்து முதல் ஆளாகக் கருத்திட்ட நண்பரும், முன்னோடிப் பதிவருமான கிங் விஸ்வா அவர்களுக்கு நன்றி!...

தொடங்கியவுடனே முதல் ஆட்களாக வந்து உறுப்பினர்களாகி நம்பிக்கையூட்டிய நண்பர்கள் ரமேஷ் கருப்பையா, வெற்றிப்பேரொளி சோழன், கார்த்திகைப் பாண்டியன், தமிழ்நாடன், யாழ்காந் தமிழீழம், அப்துல் பாசித் (பிளாக்கர் நண்பன்) ஆகியோருக்கு நன்றி!...

தளத்தைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சென்று பலரும் படிக்கவும் பாராட்டவும் முதன்மைக் காரணிகளாய் விளங்கும் சமூகவலைத்தளங்கள், அவற்றின் குழுக்கள், திரட்டிகள், செருகுநிரல் (plugin) சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு நன்றி!...

தளத்தின் வளர்ச்சியை அறிய உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites), பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் ஆகியவற்றுக்கு நன்றி!...

இடுகைகளுக்கான படங்களை வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு நன்றி!...

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அருமையான இலவசச் சேவையை வழங்கும் பிளாக்கருக்கு நன்றி!...

இன்று நான் இப்படி நான்கு பேர் படித்துப் பாராட்டும் அளவுக்கு எழுதக் கற்றிருக்கிறேன் என்றால் அதற்கு எல்லா வகையிலும் இன்றியமையாக் காரணிகளாகத் திகழும் என் குடும்பத்தினர், உறவினர்கள் எனும் சொல்லால் நான் குறிப்பிட விரும்பாத வீட்டுக்கு வெளியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் என்றே அழைக்க விரும்புகிற பெருமக்கள், நெஞ்சம் நிறைந்த நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் முத்தாய்ப்பான நன்றி!...

காணிக்கை

My Grandpa R.KulaSekaran

எனக்கு...

கண்ணதாசன் பாடல்களில் செறிந்த கவித்துவத்தை வரி வரியாக விளக்கி...

திராவிட இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடுகளில் பொதிந்திருந்த நியாயத்தைப் புரிய வைத்து...

வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றைக் கதை கதையாக எடுத்துக் கூறி...

தமிழன் எனச் சொல்லிக் கொள்வதில் உள்ள பெருமிதத்தை உணர்வித்து...

எனது இன்றைய தாய்மொழிப்பற்று, இனப்பற்று, ரசனை, படைப்புணர்வு, சமூக அக்கறை அனைத்துக்கும் மூல முதற் காரணமான என் தாத்தா ஆர்.குலசேகரன் அவர்களுக்கு இந்த வலைப்பூவின் இந்த முதலாமாண்டுச் சிறு வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

பி.கு: வலைப்பூவின் குறை நிறைகள் பற்றி உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்! 

படங்கள்: நன்றி Fraja algerie, பூரியம்

*தகவல் பிழையும் விடுபாடும் பின்னர் அறிந்து திருத்தப்பட்டது. 

இந்தப் பதிவைக் கீழ்க்காணும் சமூக வலைத்தளங்களிலும், திரட்டிகளிலும் பகிர்வதன் மூலம் உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூ இந்த ஓராண்டில் அடைந்திருக்கும் வளர்ச்சி அடுத்த ஆண்டில் பன்மடங்காகப் பெருகுமே!

பதிவர் பரிந்துரை

’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா? - கோயில் பூசையில் தமிழர் உரிமைகள்! மிரள வைக்கும் ஆய்வு

பார்ப்பனர் அல்லாதோரின் கோயில் பூசை உரிமைக்காகப் பாடுபட்ட தமிழ் முன்னோடிகள் முன்குறிப்பு : பார்ப்பனரல்லாத 36 பேரைக் கோயில் பூசாரிகளாக ...

தொடர...

மின்னஞ்சலில் தொடரப் பெட்டியில் மின்னஞ்சல் முகவரி தருக↓

அனுப்புநர்:FeedBurner

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (7) அஞ்சலி (22) அணு உலை (2) அம்மணம் (1) அமேசான் (5) அரசியல் (77) அழைப்பிதழ் (6) அற்புதம்மாள் (1) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (30) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இட ஒதுக்கீடு (3) இணையம் (18) இந்தித் திணிப்பு (1) இந்தியா (22) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (16) இனம் (46) ஈழம் (38) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (22) ஐ.நா (5) ஒருங்குறி (1) கதை (2) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (8) கவிஞர் தாமரை (1) கவிதை (14) காங்கிரஸ் (6) காணொலி (1) காதல் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (4) கீச்சுகள் (2) குழந்தைகள் (8) குறள் (1) கூகுள் (1) கையொப்பம் (2) கோட்பாடு (7) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (13) சமயம் (10) சமூகநீதி (4) சாதி (8) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (6) சுற்றுச்சூழல் (5) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (21) தமிழ் தேசியம் (4) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (11) தமிழர் (41) தமிழர் பெருமை (13) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (1) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (3) தாலி (1) தி.மு.க (9) திரட்டிகள் (4) திராவிடம் (5) திருமுருகன் காந்தி (1) திரையுலகம் (8) தினகரன் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (8) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தொலைக்காட்சி (1) தொழில்நுட்பம் (9) தோழர் தியாகு (1) நட்பு (7) நிகழ்வுகள் (1) நிர்மலா சீதாராமன் (1) நீட் (3) நூல்கள் (4) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (2) பதிவர் உதவிக்குறிப்புகள் (8) பதிவுலகம் (16) பா.ம.க (2) பா.ஜ.க (23) பார்ப்பனியம் (11) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (7) பீட்டா (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (5) பெரியார் (3) பேரறிவாளன் (1) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (4) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) போராட்டம் (7) ம.ந.கூ (2) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (9) மணிவண்ணன் (1) மதிப்புரை (1) மதுவிலக்கு (1) மருத்துவம் (5) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (4) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (2) மேனகா காந்தி (1) மோடி (9) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (21) வாழ்க்கைமுறை (14) வாழ்த்து (4) வானதி சீனிவாசன் (1) விடுதலை (4) விடுதலைப்புலிகள் (10) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (6) வை.கோ (4) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Cauvery (1) Karnataka (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1)

முகரும் வலைப்பூக்கள்