.

திங்கள், மே 18, 2020

பதினோராம் ஆண்டு நினைவேந்தலும் ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கான முக்கிய வேண்டுகோளும்

May-18-Tamil-genocide-day
மிழினப் படுகொலையின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் இன்று!

ஆம்! ஒன்றரை இலட்சம் தமிழர்கள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துப் பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டன!

ஒரே இரவில் நாற்பதாயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டதை இந்த உலகம் வெறும் செய்தியாகக் கடந்து சென்று பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன!

கொசுக்களும் ஈக்களும் கூட ஒரே நாளில் இத்தனை ஆயிரம் எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் மனிதர்களான நாம் கொல்லப்பட்டோம்! ஆயினும் இன்னும் நமக்கு நீதி வழங்க இந்த உலகம் ஒரு தப்படி கூட இதுவரை எடுத்து வைக்கவில்லை.

இந்தப் பதினோரு ஆண்டுகளாக நாமும் என்னென்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். நினைவேந்தலுக்கு விளக்கேற்றுவதிலிருந்து ஐ.நா., அவையில் உரையாற்றுவது வரை. ஆனால் இவற்றால் ஏதாவது பலன் உண்டா என்பது பலரின் அடிமனத்துக் கேள்வியாக இருக்கிறது. எனக்கும் இந்தக் கேள்வி இருந்தது, இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்வைப் பார்க்கும் வரை.

இனப்படுகொலை நினைவேந்தல் காலமான இந்த மே மாதம் வந்தாலே இணையத்தில் ஈழ ஆதரவாளர்களுக்கும் தி.மு.க-வினருக்குமிடையே சொற்போர் நடப்பது வழக்கம்தான். இந்த முறை அது கொஞ்சம் பெரிதாகவே போய் விட்டது. ஆனால் செய்தி அஃது இல்லை! வரம்பு மீறிப் பேசிய தி.மு.க-வினரை இந்த முறை அந்தக் கட்சியே முறைப்படி அறிக்கை விட்டு அப்படிப் பேசுவதைத் தவிர்க்குமாறு கோரியதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு!

DMK notice to its people to avoid hate speech on Eelam freedom fight

கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்பொழுது, இந்தியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்களை அந்தச் சட்டத்தின் கீழ் ஏன் சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டு நாடாளுமன்றத்தில் தி.மு.க., குரல் எழுப்பியது.

அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு (Citizenship Amendment Act-CAA) எதிராகக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் “ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்” என்று தி.மு.க., தலைவர் முழக்கமிட்டார். இப்பொழுது ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதைத் தவிர்க்கும்படி வேறு அக்கட்சி தன் தொண்டர்களுக்கு அறிவுறுத்துகிறது.

அடுத்தடுத்து நடக்கும் இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்பொழுது தி.மு.க., ஈழப் பிரச்சினையில் மீண்டும் இறங்கி வருவதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களும் (தி.மு.க-வினர்) இந்தப் பதினோரு ஆண்டுகளாக எத்தனையோ மாய்மாலங்களைச் செய்து பார்த்தார்கள்.

“ஆயிரம்தாம் இருந்தாலும் ஈழ விவகாரம் வேற்று நாட்டுச் சிக்கல். அதில் நாம் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது” என்று மக்களைத் திசை திருப்பப் பார்த்தார்கள்; நடக்கவில்லை.

இனப்படுகொலை நேரத்தில் தி.மு.க., எந்த விதத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இங்கே நடந்து கொள்ளவில்லை என்று நம்ப வைக்கப் பார்த்தார்கள்; முடியவில்லை.

விடுதலைப்புலிகளையும் ஈழப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அதன் மூலம் ஈழத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு மக்களின் அன்பைக் குறைக்க முயன்றார்கள்; பலிக்கவில்லை.

இப்படி எல்லா வழிகளிலும் முயன்று பார்த்து விட்டுத்தான் எதற்குமே தமிழ்நாட்டு மக்கள் மசியவில்லை, ஈழத் தமிழர்களுடனான இவர்களுடைய உள்ளார்ந்த நேசப் பிணைப்பை அறுக்கவே இயலவில்லை என்றானதும் வேறு வழியின்றி இப்பொழுது தங்கள் கட்சிக்காரர்களையே திருத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றுள்ளது தி.மு.க.!

ஈழ விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாதெனத் தி.மு.க., தலைமைக்குப் புரியத் தொடங்கியுள்ளது என்பதன் சிறு அறிகுறியே இது!

இஃது ஈழ உறவுகளைக் காப்பாற்றத் தமிழ்நாட்டிலிருந்து நம்மால் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட இயலாவிட்டாலும் அவர்களுக்காகப் பேசுவது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, இணையத்தில் பதிவிடுவது, சமுக ஊடகங்கள் வாயிலாகக் குரல் கொடுப்பது, நினைவேந்துவது எனக் கடந்த பதினோரு ஆண்டுகளாகச் செய்து வந்தோமே அந்த அத்தனை முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள மிகச் சிறு வெற்றி!

ஆட்சி, அதிகாரம், சட்டம் என அத்தனையும் தங்களுக்கு எதிராக இருந்தும் அஞ்சாமல், இத்தனை காலமாகியும் சோர்வுறாமல் நம் தமிழீழச் சொந்தங்களுக்காக இங்கே இடைவிடாது இயங்கி வந்த ஈழ ஆதரவு இயக்கங்கள் – கட்சிகள் – தலைவர்கள் – பொதுமக்கள் ஆகியோரே இதற்கு முழுக் காரணம்!

தி.மு.க-வைப் பொறுத்த வரை, ஆட்சியில் இல்லாவிட்டால் ஈழத்துக்காகக் கழுத்து நரம்பு தெரிய முழங்குவதும் ஆட்சியைப் பிடித்து விட்டால் இரண்டகம் (துரோகம்) புரிவதுமே வாடிக்கை. இந்த முறை அவர்கள் இறங்கி வருவதும் அப்படி வழக்கமான ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் அதற்காக நமக்கு ஆதரவான எந்த ஒரு சிறு மாற்றத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து விடக்கூடாது; அது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகப் போய்விடும் என்பதே என் கோரிக்கை!

இன்றைய சூழலில், வட இந்தியா முழுவதையும் சமயப் போதையில் ஆழ்த்தி வைத்திருக்கும் பா.ச.க-வுக்கு எதிராகக் காங்கிரசு இங்கே அரசியல் செய்ய வேண்டுமானால் அதற்குத் தென்னாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தி.மு.க-வின் ஆதரவு இன்றியமையாதது. பத்தாண்டுக் காலமாக ஆட்சி இழந்து நிற்கும் தி.மு.க-வுக்கோ எந்த விதத்திலும் மக்களோடு முரண்படாமல் இணங்கிப் போக வேண்டிய கட்டாயம். அதனால்தான் ஈழ விவகாரத்திலும் இறங்கி வருகிறார்கள் என்பது என் பணிவன்பான கருத்து.

இவர்களுடைய இந்த அரசியல் நெருக்கடியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்களுக்காகப் போராடி வரும் இயக்கங்களின் வரலாற்றுக் கடமை! பெரியோர்களே! எங்கள் முன்னோடிகளே! வழிகாட்டிகளே! இதை விட்டால் இனி இப்படி ஓர் அரிய வாய்ப்பு அமையாது!

எனவே ஈழத் தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள், போராளிகள் அனைவரும் இனி ஈழ விவகாரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, இறங்கி வரச் செய்கை (signal) காட்டும் தி.மு.க-வை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வழிக்குக் கொண்டு வர முயலுமாறு இந்தப் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் நாளில் வேண்டி வலியுறுத்திக் கோருகிறேன்!

அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அரசியல் எனும் சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் இருக்கலாம். ஆனால் போராளிகளைப் பொறுத்த வரை அதிகாரத்தில் இருப்பவர்களையும் அதிகாரத்துக்கு வர இருப்பவர்களையும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் அழுத்தம் கொடுப்பது மட்டுமே அரசியல் எனும் சொல்லுக்கான ஒரே பொருள் என்பது நீங்கள் அறியாதது இல்லை!

தமிழீழ ஆதரவுத் தலைவர்கள் அந்த அழுத்தத்தைத் தர இப்பொழுதும் தவற மாட்டீர்கள் எனும் நன்னம்பிக்கையுடன் இதோ உங்களோடு சிறியேனும் குடும்பத்தினருடன் ஏற்றுகிறேன் எங்கள் வீட்டு வாசலில் மெழுகுத்திரி!

இந்த மெழுகுத்திரியின் கண்ணீர் போலவே விரைந்து தீரட்டும் தமிழர் கண்ணீரும்!

Salute & Tribute

வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்!!
மலர்க தமிழீழம்!!!

பி.கு.: உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழ் இன அழிப்பை எப்படியாவது தடுத்திருக்க முடியாதா எனும் தமிழர் ஒவ்வொருவரின் ஏக்கத்தையும் கற்பனையிலாவது தணித்துக் கொள்ளும் சிறு முயற்சியே கடந்த ஆண்டு நான் எழுதிய ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ புதினம்! எனவே இனப்படுகொலை நாளை ஒட்டி அந்த நூல் இன்றும் நாளையும் இலவசம்! இதுவரை படிக்காத உணர்வாளர்கள் இப்பொழுதாவது படியுங்கள்! உங்கள் கருத்தைப் பதியுங்கள்! நூலைப் பெற - https://amzn.to/2qFuL4z


(நான் ‘கீற்று’ இதழில் ௧௮-௦௫-௨௦௨௦ அன்று எழுதியது)
❀ ❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி மாவீரம், யாழ்.

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! சர்ச்சைக்குரிய இந்தப் பதிவுக்கு நீங்கள் அளித்திருக்கும் இசைவான கருத்து மக்களின் புரிதலை மேம்படுத்தும் என நம்புகிறேன்.

      நீக்கு
  2. ஈழத் தமிழர்களுக்கு இனியாவது விடிய வு பிறக்கும் என நம்புவோம். தங்கள் குக்கி அறிவிப்பு வாஞிப்பை இடையூறு செய்கிறது. அகற்றி விடுங்கள். அல்லது பகிர்வுப் பட்டையை அகற்றுங்கள்.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் நம்பிக்கை மிக்க கருத்துக்கு நன்றி!

      எல்லா இணையத்தளங்களிலும் நினைவிகள் (cookies) வைக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அண்மையில் பிளாகரில் அறிவிப்பு வந்தது இல்லையா? அதனால்தான் வைத்திருக்கிறேன் ஐயா! அந்த அறிவிப்பிலேயே உள்ள 'புரிந்தது (Ok)' எனும் பொத்தானை அழுத்தி விட்டால் அதன் பிறகு அது வராது. ஆனால் இப்படி ஒரு மறுமொழியை உங்களுக்குத் தருவதற்கு முன் எதற்கும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று கைப்பேசியிலிருந்து தளத்தைப் பார்வையிட்டேன். அந்த அறிவிப்புக்கு மேலேயே பகிர்வுப் பட்டையும் இடம்பெறுவதால் பொத்தானை அழுத்துவது எளிதாக இல்லைதான். இன்றே இதற்கொரு வழி செய்கிறேன்.

      தளத்தின் சிக்கலை எடுத்துச் சொல்லி உதவியதற்கு மிக்க நன்றி!
      வலை ஓலையில் விரைவில் இணைந்து விடுவேன்.
      அழைப்புக்கும் தனி நன்றி!

      நீக்கு
  3. ஐயா, மிகவும் அற்புதமான கட்டுரை. ஒவ்வொரு தமிழரும் படிக்க வேண்டிய கட்டுரை. வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்து, தக்க சான்றுகளுடன் விளக்கியிருப்பதை யாரும் மறுதலிக்க முடியாது. மிக்க நன்றி. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! உங்கள் மனம் திறந்த விரிவான பாராட்டுக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிகவும் நன்றி! நீங்கள் இப்பொழுதுதான் முதன் முறையாக நம் தளத்துக்கு வருகிறீர்கள் என நினைக்கிறேன். என் அன்பான வரவேற்பு! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! அனைவரும் இதைப் படிக்க விரும்பும் நீங்கள் இதைச் சமுக வலைத்தளங்கள் மூலம் பகிர்ந்தால் அதற்கு ஏதுவாக இருக்கும். மிக்க நன்றி!

      நீக்கு
  4. மனிதர்கள் வாழும் உலகம் அல்ல...இது கொடும் மாக்கள் வாழும் உலகமிது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நீண்ட காலத்துக்குப் பின் மீண்டும் தங்களை என் தளத்தில் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி ஐயா! காரணம் ஈழம்! எங்கிருந்தாலும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் எத்தனை காலம் பிரிந்திருந்தாலும் உண்மைத் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் உணர்வுப் பாலமாய் அதுவே விளங்குகிறது. என்றாவது ஒரு நாள் நம் கனவு பலிக்கும்! ஈழம் மலரும்! நம்புவோம்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்