.

திங்கள், ஏப்ரல் 27, 2020

ஏழாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’


Seventh Birthday of Aga Sivappu Thamizh

நேசத் தமிழ் நெஞ்சங்களே!

இதோ 23.04.2020 முதல் எட்டாம் ஆண்டில் எடுத்தடி வைக்கும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ வலைப்பூவின் ஏழாம் பிறந்தநாள் பதிவை உங்கள் முன் படைப்பதில் மகிழ்கிறேன்.

ஒரு நிமிடம்! பதிவுக்குள் நுழையும் முன், உலகம் முழுதையும் ஆட்டிப் படைத்து வரும் மகுடை (corona) நோய்க் கொடுமையால் உயிரிழந்த உலக மக்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித வாழ்வின் மிகப் பெரிய துக்கம் அன்புக்குரியவர்களின் இறப்பு. ஆனால் அதை விடப் பெரும் துயராய் இறந்த தன் அன்புக்குரியவர்களின் முகத்தைக் கடைசியில் ஒருமுறை பார்க்கக் கூட முடியாத கொடுந்துன்பத்தை ஏற்படுத்துகிறது மகுடை! இது தாள முடியாத துக்கம்!!

இந்தக் கொலைகார நோய் ஒழிய வேண்டும்! பூமியின் எந்த மூலையிலும் ஒற்றைத் தீநுண்மி (virus) கூட மிச்சமில்லாமல் இது அழிய வேண்டும்! வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பமோ மாறாப் புகழ் கொண்ட மரபு மருத்துவமோ ஏதாவது ஒன்று இதைச் சாதித்தே தீரும் எனும் நன்னம்பிக்கையுடன் இந்தப் பிறந்தநாள் பதிவைத் துவக்குகிறேன்.

முதலில் புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். இந்த ஏழு ஆண்டுகளில் எழுதப்பட்ட பதிவுகள், கருத்துக்கள், பார்வைகள், அகத்தினர்கள் (followers) எண்ணிக்கை பின்வருமாறு:

காலக்கட்டம்
பதிவுகள்
கருத்துகள்*
பார்வைகள்
அகத்தினர்கள்**
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
25
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
ஏப்ரல் 2017 -
ஏப்ரல் 2018
18
360
1,02,224
190
ஏப்ரல் 2018 -
ஏப்ரல் 2019
13
120
38949+
-183
ஏப்ரல் 2019 -
ஏப்ரல் 2020
18
103
28298
17
மொத்தம்
143
1628
3,37,863+
2026
* பிளாகர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.


தளத்தை அதிகம் படிக்கும் நாடுகள்:

நாடுகள்
பக்கக்காட்சிகள்
இந்தியா
138000
அமெரிக்கா
90400
இரசியா
14700
அறியப்படாத பகுதி
11900
பிரான்சு
8930
வழக்கமாக, புள்ளிவிவரங்களுக்குப் பின் அந்த ஆண்டில் அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளைப் பட்டியலிடுவேன். ஆனால் முந்தைய ஆண்டில் அதிகப் பார்வைகளைப் பெற்ற அதே பதிவுகள்தாம் கடந்த ஆண்டும் முன்னணி வகித்திருக்கின்றன. தரநிலைதான் கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக மாறியிருக்கிறதே தவிர புதிதாக எந்தப் பதிவும் அதிக வரவேற்பைப் பெறவில்லை என்பதால் நேராக அடுத்த பகுதிக்குத் தாவுகிறேன்.


நினைவகத்தில் சில நிகழ்வுகள்

Some Events in my Memory
கடந்த ஆண்டின் பதிவுகளிலேயே முதன்முறையாகக் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியடைந்தது தாய்மொழி –சிறுகதை. பெரியவர்களுக்கான என் கதைகளில் முதன் முதலில் வெளியானது இதுதான். 24.10.2016 அன்று திண்ணை இதழில் வெளிவந்தது. கடந்த ஆண்டு சூன் மாதம் இந்தித் திணிப்பை எதிர்த்து துவிட்டரில் #StopHindiImposition எனும் சிட்டை (tag) பெரும் சூறாவளியாய்ப் பரவியபொழுது அதுதான் சமயம் என்று இந்தக் கதையை வலைப்பூவில் வெளியிட்டு, குறிப்பிட்ட சிட்டையில் பகிர்ந்தேன். நல்ல வரவேற்பு!

தோழர்களும் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். தவிர, நண்பரும் உறவினருமான சியாம் சுந்தர் அவர்கள் தன் நண்பர்களிடமும் இதைப் பகிர்ந்து பலரும் தொடர்ந்து பாராட்டியபடி இருப்பதாகத் தெரிவித்தார். யாரிடம் இது சென்றடைய வேண்டும் என த்தனை நாள் காத்திருந்தேனோ அந்த இளைய தலைமுறையிடம் ஓரளவாவது கதை சென்று சேர்ந்தது குறித்துப் பெரிதும் மகிழ்ந்தேன்.

முதன் முறையாகக் கடந்த ஆண்டு பகடிக் காணொலி (troll video) ஒன்றை வெளியிட்டிருந்தேன். இந்தியப் பொருளாதாரமும் மக்கள் மனநிலையும் எனும் தலைப்பிலான இந்தப் பகடி, நாட்டின் வரலாறு காணாத பொருளாதாரச் சரிவின் பொருட்டு ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட அறச்சீற்றத்தைத் தணித்துக் கொள்ள உதவியது. இதற்காக நான் கற்றுக் கொண்ட தொழில்நுட்ப விதயங்கள் சுவையானவை என்பதால் எந்த வரவேற்பும் கிடைக்காவிட்டாலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பதிவுகளில் இதுவும் ஒன்று.


கடந்த ஆண்டுப் பதிவுகள் பலவற்றின் இறுதியில் தினச்செய்தி நாளிதழில் வெளியானது என்ற குறிப்பைப் பார்த்திருப்பீர்கள். என்னதான் இணையத்தில் விருப்பக்குறிகளும் பாராட்டுகளும் சுவைத்தாலும் அச்சு ஊடகத்தில் அதுவும் நாளிதழில் நம் படைப்புகளைப் பார்ப்பது தனி உணர்வுதான் நண்பர்களே! என்னை விட எத்தனையோ சிறந்த படைப்பாளிகள் நம் பதிவுலகில் இருக்கிறீர்கள். நான் பெற்ற அந்த இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

தினச்செய்திக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்! படிப்போர் (வாசகர்) பகுதிதான் என்றாலும் பார்க்க அப்படி இருக்காது. நடுப் பக்கத்தில், அதுவும் அறிஞர்கள், புகழாளர்கள் படைப்புகளுக்கு மத்தியில் உங்கள் எழுத்தும் இடம்பெறும். அது மட்டுமில்லை, மாநகரின் முக்கிய பகுதிகளில் உங்கள் கட்டுரை பற்றிய அறிவிப்பை உங்கள் பெயர் மற்றும் படத்துடன் சுவரொட்டியாக ஒட்டுவார்கள்! தவிர வெகுமதியும் உண்டு! அனுப்ப: editorial@dinacheithi.com.

தமிழர் வரலாற்றிலேயே மிகவும் பொன்னான ஆண்டு கடந்த 2019. காரணம் கீழடி! ஒரே நாளில் சங்கக் காலத்தின் தொன்மையை முந்நூறு ஆண்டுகள் முன்தள்ளி வைத்தன கடந்த ஆண்டு வெளிவந்த கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள். உலகத் தமிழர்கள் அனைவரும் பெருங்களிப்பில் வான்முட்ட எகிறிக் குதிக்க வேண்டிய தறுவாய் அது. ஆனால் அப்பொழுதும் நம் மக்கள் திராவிட–தமிழ்த் தேசியச் சண்டையிட்டது சொற்களைத் தோற்கடிக்கும் வேதனையின் உச்சம்.

அந்தச் சர்ச்சையை முடித்து வைப்பது கண்டிப்பாக என்னால் முடியக் கூடியது இல்லை என்றாலும் எத்தனையோ கோடித் தமிழ் மக்களில் எங்கேயாவது யாரேனும் ஒருவரையாவது தொடட்டுமே எனும் எண்ணத்தில் கீழடி!– தமிழ் நாகரிகமா, திராவிடநாகரிகமா? எனும் கட்டுரையை எழுதினேன். எழுதியவன் மட்டும்தான் நான். ஆனால் முடித்த பிறகு இப்படி ஒரு கட்டுரை எழுதினால் இன்றைய தமிழ் அரசியல் சூழலில் இதற்கான எதிர்ப்பு எப்படி இருக்குமோ என நான் பெரிதும் தயங்கிய பொழுது எனக்கு இணையில்லாத் தெம்பூட்டி அதைத் தன் நாளிதழில் வெளியிட்டுத் தந்தவர் கனிவுமிகு மாமனிதரான தினச்செய்தி ஆசிரியர் இரியாசு அகமது அவர்கள்.

பின்னர் வலைப்பூவில் வெளியிட்ட பிறகும் இது பெரிய வெற்றி பெற்றது. துவிட்டர் தி.மு.க-வினர் அளித்த ஆதரவு அதற்கு இன்றியமையாக் காரணம் என்பதையும் இங்கு நான் சொல்லியாக வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விடப் பதிவுலகில் கடந்த ஆண்டு எனக்குக் கிடைத்ததிலேயே மிக மிக முக்கியமானது பதிவுலகப் பெருமக்களின் நேசம்! ❤ ❤

கடந்த ஆண்டு நான் அமேசானின் கிண்டில் நடத்திய பென் டூ பப்ளிசு 2019 போட்டியில் கலந்து கொண்டு 13ஆம் உலகில் ஒரு காதல் எனும் புதினத்தை எழுதியிருந்தேன். அன்பிற்கினிய பதிவர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் என் நூலைப் படித்துப் பார்த்து அது பற்றி வலைப்பதிவும் எழுதியது கண்டு மிகவும் அகமகிழ்ந்தேன். என் முதல் நூலுக்குக் கிடைத்த முதல் மதிப்புரையாக (விமர்சனம்) அஃது அமைந்தது!

அதில் அவர் நூலைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் நான் அளவிலா நன்றிக்கடன் பட்டுள்ளேன். மாபெரும் தமிழ்த் தொண்டர்களையும் பேரறிஞர்களையும் பற்றித் தொடர்ந்து தன் வலைப்பூவில் எழுதி வந்தவர் மதிப்புரையின் இறுதியில் என்னையும் அறிமுகப்படுத்தி அதே பாணியில் எழுதியது எனக்குக் கிடைத்த பெரும் பேறு!

அந்தப் பதிவிலும், புதினத்தைப் படிக்க வருமாறு அழைத்து நான் இங்கு எழுதிய பதிவிலும் கருத்துரைப் பகுதியில் பதிவுலகத் தோழர்கள் எனக்கு அளித்த பாராட்டும் வாழ்த்தும் ஊக்கமும் என்னை உண்மையில் திக்குமுக்காடச் செய்து விட்டன. குறிப்பாக ஜோதிஜி அவர்கள் அளித்த பாராட்டெல்லாம் மறதி நோயே (amnesia) வந்தாலும் என்னால் மறக்க இயலாதவை! அன்புமிகுந்த அந்தப் பதிவுலக அன்பர்கள் அத்தனை பேருக்கும் என் நெஞ்சம் நிரம்பித் ததும்பும் நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்!

Wishes from blogger friends for my novel release

அடுத்து, பதிவுலகின் சிகரப்புகழ்ப் பதிவர்களில் ஒருவரும் சீரிய சிந்தனையாளருமான மது கஸ்தூரிரங்கன் அவர்களும் கதையைப் படித்து விட்டுத் தனக்கே உரிய பாணியில் அமர்க்களமான ஒரு திறனாய்வை வழங்கினார். வெறும் பாராட்டு மட்டுமின்றி நூலின் நிறைகள் குறைகள் என இரண்டையும் எடுத்துக்காட்டும் நல்லதொரு திறனாய்வாக அஃது இருந்தது. மது அவர்கள் எப்பேர்ப்பட்ட படிப்பாளி என்பதை நானறிவேன். அவரிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டுகளைப் பெற்றது எனக்குக் கிடைத்த சிறந்த ஏற்பிசைவு (recognition).

ஆனால் அதை நான் உரிய நேரத்தில் பார்க்கத் தவறி, அளவு கடந்த தாமதமாகக் கடந்த வாரம்தான் பார்த்தேன். அதுவும் அவரே தெரிவித்த பிறகு. மிகவும் வெட்கமாகி விட்டது. அதனால் இந்த ஆண்டிலிருந்தாவது உங்கள் எல்லார் வலைப்பூக்களுக்கும் தவறாமல் வந்து விட உறுதி பூண்டுள்ளேன்!

கடந்த ஆண்டு நான் எழுதிய பதிவுகள் தொடர்பாகவும் பதிவுலகம் தொடர்பாகவும் நடந்த முக்கிய நிகழ்வுகளைத்தாம் இங்கே எழுதி வருகிறேன் என்றாலும் ‘13ஆம் உலகில் ஒரு காதல்’ நூலுக்குத் தேமொழி அவர்கள் தந்த மதிப்புரையையும் இதே தளத்தில் நான் வெளியிட்டிருந்தேன் எனும் வகையில் அதையும் இங்கே குறிப்பிடுவது தவறில்லை என நினைக்கிறேன்.

தமிழறிஞர்கள் மட்டத்தில் பெரும் புகழ் பெற்ற மடலாடற்குழுவான மின்தமிழின் உறுப்பினரும் எழுத்தாளருமான தேமொழி அவர்கள் என் புதினத்துக்கு அளித்திருந்த மதிப்புரை என்றென்றும் நான் நன்றியுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. கதையின் போக்கு, கதைமாந்தர்களின் குணநலன், உரையாடல், காட்சி அமைப்பு என நூலை எல்லாக் கோணங்களிலிருந்தும் அலசி அவர் வழங்கியிருந்தது தரமான துறைசார் (professional) திறனாய்வு! அவர் அதில் என்னைப் பற்றி எழுதியிருந்த வரிகளுக்குத் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ள நான் இன்னும் வெகுதொலைவு போக வேண்டும் என்பது உறுதி! தேமொழி அவர்களுக்கு என் நெஞ்சம் கனிந்துருகும் நன்றி!

இவ்வரிசையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு பதிவு, கடந்த மாதம் எழுதிய “மண்ணையும் பெண்ணையும் தொட்டால் வெட்டு” என்பதுதான் தமிழ்ப் பண்பாடா? எனும் கட்டுரை. வெகுநாட்களாக நான் உள்ளத்தில் மட்டுமே வடித்து வைத்திருந்த இக்கட்டுரையைக் காதல் இணையர் இளமதி-செல்வன் பிரிக்கப்பட்டதை ஒட்டி எழுத்தாக்கினேன். காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறுவது சங்கக் காலத்திலிருந்தே தமிழ் முன்னோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாழ்க்கைமுறைதான் என வரலாற்று ஆதாரத்துடன் எழுதியிருந்தேன். கூடவே தூய்மையான சாதி உதிரம் என்பது இங்கு யார் உடம்பிலும் இருக்க வாய்ப்பே இல்லை என்பதையும் ஏரணத்துடன் (logic) விளக்கியிருந்தேன்.

ஆனால் இதைப் படிக்கக் கூடச் செய்யாமல் பேசுபுக்கில் சாதி வெறியர்கள் என்னைக் கழுவி ஊற்ற, மறுகையாக (பதிலுக்கு) என் தோழர்கள் அவர்களை வதக்கி எடுக்க, என் பேசுபுக்கு காலக்கோடு கலவரமானது. அதே நேரம், சிந்திக்கத் தெரிந்த மனிதர்களிடமும் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர்களிடமும் இக்கட்டுரை சிறந்த பாராட்டுக்களைப் பெறத் தவறவில்லை.

கடந்த ஆண்டின் பதிவுலகத் துயரம் ‘தமிழ்மணம்’ தன் சேவையை முற்றிலுமாக நிறுத்தியதுதான். தமிழ்ப் பதிவுலகுக்கே ஒரு பெரும் அடையாளமாகத் திகழ்ந்த தமிழ்மணம் திரட்டி, மாறி வரும் காலச் சூழல் காரணமாக ஏப்ரல் 2017-18 காலக்கட்டத்திலேயே தன் வாக்குப்பட்டைச் சேவையை நிறுத்தி விட்டது. அதற்கு மாற்றாக, தளத்துக்கு நேரிடையாகச் சென்றாவது பதிவுகளைப் பார்வைக்கு வைக்க வாய்ப்பளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சூலை 26, 2019-உடன் அந்தச் சேவையையும் தமிழ்மணம் நிறுத்தி விட்டது மிகுந்த வருத்தத்துக்குரியது.

ஒரு காலத்தில் தமிழ்ப் பதிவுலகம் என்பது ஒரு மாற்று ஊடகமாகவே திகழ்ந்தது என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். திரைப்படப் பாடலாசிரியர்கள், புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இதழாளர்கள் என அன்று தனக்கென வலைப்பூ வைத்துக் கொள்ளாத ஆளே படைப்புலகில் இல்லை.

ஆனால் பேசுபுக்கு, துவிட்டர் எனச் சமுக ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய பிறகு எழுத்தார்வம் உள்ளவர்கள் கரை ஒதுங்கப் பதிவுலகம் மட்டுமே தேர்வு எனும் சூழல் மாறிப் போயிற்று. வலைப்பூ நடத்திய பெரும்புள்ளிகள் முதல் வலைப்பூ நடத்தியே பெரும்புள்ளி ஆனவர்கள் வரை எல்லாரும் அக்கரைக்குச் சென்ற பின் தமிழ்மணம் போன்ற ஆலமரங்களின் வீழ்ச்சியை எப்படித் தடுக்க முடியும்!

ஆனால் இது காலத்தின் மாற்றம்; ஏற்றுக் கொண்டுதானே      ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே “அப்படி ஒன்றும் கவலைப்பட வேண்டா! ஓர் ஆலமரம் வீழ்ந்தால் என்ன? இந்தா, பிடித்துக் கொள் இன்னொன்று!” என்று பதிவுலகைத் தாங்க இன்னோர் அசத்தல் திரட்டியைப் படைத்திருக்கிறார்கள் தமிழ்ப் பதிவுலகின் தொழில்நுட்பப் பெருந்தகை நீச்சல்காரன் அவர்களும் எழுத்தாளர் ஆரூர் பாஸ்கர் அவர்களும் இணைந்து. பதிவுலகில் கடந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வாக இதைக் கருதுகிறேன்.
Tamilcharam

ஒரு தடவை நம் தளத்தை இணைத்தாலே தானாகவே ஒவ்வொரு தடவையும் நம் வலைப்பதிவுகளை இற்றைப்படுத்திக் கொள்ளும் (update) திறன், செயற்கை நுண்ணறிவால் (artificial intelligence) பதிவுகளைத் தானே வகை பிரித்துக் காட்டும் வசதி, கைப்பேசி போன்ற கையடக்கக் கருவிகளுக்கு உகந்த பயனர் இடைமுகம் (user interface) எனப் பல நுட்பங்களோடு வெகு அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளம் பதிவுலகில் புதுக் குருதி பாய்ச்சும் என நம்புவோம்.

மேலும் பிளாகர் அண்மையில் புதிய பயனர் இடைமுகத்தை (New User Interface) அறிமுகப்படுத்தியுள்ளது. எப்பொழுதிலிருந்து என்று எனக்குத் தெரியவில்லை. இணையத்திலும் இது பற்றித் தகவல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் நேற்றைக்கு முன்நாள்தான் தற்செயலாகக் கவனித்தேன். என்னென்ன மாற்றங்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. புள்ளிவிவரங்கள் பகுதி மட்டும் மிகவும் புதுவிதமாக, அழகாக இருக்கிறது. அதிகத் தகவல்களையும் வழங்குகிறது. முக்கியமாக இது கைப்பேசியிலிருந்து பிளாகர் கணக்கை அணுக மிகவும் உகந்ததாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நீங்களும் இந்தப் புதிய இடைமுகத்துக்கு மாற உங்கள் பிளாகர் கணக்குக்குள் சென்று இடப்பக்கப் பட்டியின் முடிவில் உள்ள ‘புதிய Bloggerஐப் பயன்படுத்து’ எனும் பொத்தானை அழுத்துங்கள். உதவிப் படம் கீழே: 

Blogger New User Interface Button loction

நனி நன்றி!

இணைய உலகமே சமுக ஊடகங்களை மையமாய்க் கொண்டு சுழலத் துவங்கி விட்ட இற்றை நாளிலும் பதிவுலகை மறவாமல் தமிழில் பதிவுகளை எழுதியும் படித்தும் வரும் தமிழார்வலர்களுக்கு…

இன்றளவும் என் தளத்தைப் படித்துப் பகிர்ந்து ஆதரவளிக்கும் அன்பு அகத்தினர்களுக்கு...

தங்கள் விருப்பத்துக்குரிய வலைப்பூக்களின் பட்டியலில் இந்தப் பூவையும் தொடுத்து உதவும் எனதருமைப் பதிவுலகப் பெருமக்களுக்கு...

தொடர்ந்து என்னை எழுதத் தூண்டியும், எழுதிய பின் அதிலுள்ள நிறைகுறைகளை எடுத்துக் கூறி என்னைச் செழுமைப்படுத்தியும் வருகிற கீற்று, அகரமுதல, தினச்செய்தி இதழ்களின் ஆசிரியர்களுக்கு...

வாழ்விலேயே முதன்முறையாக நாளிதழில், அதுவும் தொடர்ந்து எழுத அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த, என் எழுத்துக்கும் பணமதிப்பு ஒன்று உண்டு என்பதைப் புரிய வைத்த, பெருமதிப்புக்கும் என் பேரன்புக்கும் உரிய திரைப்படைப்பாளி இயக்குநர் உயர்திரு.புகழேந்தி தங்கராசு அவர்களுக்கு…

என் நண்பர்கள், வழிகாட்டிகள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு...

இப்படியெல்லாம் திட்டினால் இவன் இன்னும் இது போல் அதிகம் எழுதுவான் என்பது தெரியாமல் என்னை உசுப்பி விடும் என் அறிவுகெட்ட எதிரிகளுக்கு...

பதிவுகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் திரட்டிகள், முக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு...

வலைப்பூவின் ஓட்டமும் வாட்டமும் அறிந்து சீர் செய்ய உதவும் தரவகச் சேவைத் தளங்களுக்கு (Data Analyzing Sites)...

பதிவுகளுக்குப் பதிப்புரிமை வழங்கும் காப்பிரைட்டட்.காம் நிறுவனத்துக்கு...

பதிவுகளைக் கண்கவரும் விதத்தில் காட்சிப்படுத்தப் படங்களையும் இன்ன பிறவற்றையும் வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு...

பதிவுகளின் நம்பகத்தன்மையைக் கூட்ட உரிய தகவல்களை வழங்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள் போன்றவற்றுக்கு...

எல்லாவற்றுக்கும் மேலாக, நான்காம் தமிழ் வளர்க்க நமக்கு பிளாகர் எனும் இந்த அருஞ்சேவையை இத்தனை ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் கூகுள் நிறுவனத்துக்கு...

என அனைவருக்கும்...

யாரையாவது இங்கு நான் குறிப்பிட மறந்திருந்தால் அவர்களுக்கும்...
Thanks

காணிக்கை

என் உச்சக்கட்ட இயலுமைகளை
எனக்கே எடுத்துக்காட்டிய
பேராசான்

சுணங்கிப் படுக்கும் பொழுதெல்லாம்
எழுந்து ஓட வைக்கும்
எரிபொருள்

புதிய உயரங்களை நான் எட்ட
முதல் தூண்டுதலாய்த் திகழும்
பெருங்காரணன்

என் பிறவித் தோழன்
ஆருயிர் மைத்துனன்
பிரகாஷ் சங்கர் அவர்களுக்கு
இந்த ஆண்டின்
பதிவுலகப் பயணத்தைக்
காணிக்கையாக்குகிறேன்!
Hearty Friend Prakash Shankar
படங்கள்: நன்றி அனிமோகிராபி.நெட், ஆட்லிசேட்டிசுவையிங், தமிழ்ச்சரம், தமிழ் சுடேட்டசு டி.பி, சாண்டி போட்டோகிராபி.

முந்தைய ஆண்டுகளில்:
ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!
ஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’!  
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!
உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு இரண்டாவது பிறந்தநாள்!
உங்கள் 'அகச் சிவப்புத் தமிழ்'க்கு முதல் பிறந்தநாள்! 

பிறந்தநாள் பரிசாகக் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கலாமே! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

24 கருத்துகள்:

  1. எட்டாவது ஆண்டும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் பல...

    குறிப்பிட்ட அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! உங்கள் வாழ்த்து கண்டு மிகவும் மகிழ்ச்சி! பதிவில் குறிப்பிட்டது போலவே இனி முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் வலைப்பூக்களுக்கும் வர உள்ளேன். உங்களுடைய வலைப்பூவுக்குத் தவறாமல் வருவேன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி ஐயா! நீங்கள் இப்பொழுதுதான் முதன்முதலாக நம் வலைப்பூவுக்கு வருகிறீர்கள் என நினைக்கிறேன். என் அன்பார்ந்த வரவேற்பு!

      நீக்கு
  4. Try the new blogger! வந்த போதே பயன்படுத்திப் பார்த்து விட்டேன்... சில தொழிநுட்பங்கள் செய்வது எனக்கு கடினமாக இருந்தது... (Theme changes, Edit HTML, Mobile view Settings, etc.,) அதனால் அறியாதவர்கள் கவனமாக தொடரவும்...

    பதிவு எழுதுவது உட்பட, கைபேசியில் அனைத்தும் செய்பவர்கள் (நண்பர் கில்லர்ஜி) அனைத்தையும் தெரிந்து கொண்டு தொடர வேண்டும்...

    பதிலளிநீக்கு
  5. நேரம் கிடைப்பின் சமீபத்திய வலைப்பூ பதிவை வாசிக்க வேண்டுகிறேன்... நன்றி...

    இணைப்பு : https://dindiguldhanabalan.blogspot.com/2020/03/Tamilcharam-and-Blog-Review.html

    பதிலளிநீக்கு
  6. ஏழாம் ஆண்டில் நுழையும் வலைப்பூவுக்கு வாழ்த்துகள்!

    கடந்த 6 ஆண்டுகளில் க(ந)டந்து வந்த பாதையைப் பற்றிய அலசல் வெகு அருமை!

    தொடர்ந்து செல்வோம் வாருங்கள்!
    .

    பதிலளிநீக்கு
  7. ஏழாம் ஆண்டில் நுழையும் வலைப்பூவுக்கு வாழ்த்துகள்!

    கடந்த 6 ஆண்டுகளில் க(ந)டந்து வந்த பாதையைப் பற்றிய அலசல் வெகு அருமை!

    தொடர்ந்து செல்வோம் வாருங்கள்!
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுடன் கூடிய வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே! ஒரு சிறு திருத்தம். ஏழாம் ஆண்டில் நுழையவில்லை. ஏழு ஆண்டுகளை நிறைவு செய்து எட்டாம் ஆண்டில் நுழைகிறது நம் அகச் சிவப்புத் தமிழ். நீங்கள் இப்பொழுதுதான் புதிதாக நம் வலைப்பூவுக்கு வருகிறீர்கள் என நினைக்கிறேன். என் அன்பார்ந்த வரவேற்பு!

      நீக்கு
  8. எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். அனுபவங்களைக் கோர்வையாக, சுருக்கமாக, நேர்த்தியாகத் தந்துள்ள விதம் போற்றத்தக்கது. உங்கள் பதிவுகளைப் படிக்கும்போதிலும் நேரம் காரணமாக அனைத்திற்கும் பின்னூட்டம் இட முடிவதில்லை. ஒரு கால எல்லையை எட்டும்போது கிடைக்கும் மன நிறைவு அளவிடற்கரியது. அதனை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள் என்பதை உங்களின் எழுத்து தெரியப்படுத்துகிறது. வாசிப்பும், எழுத்தும் என்றும் நம்மை உயரவைக்கும். மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! ஐயா, உங்களுடைய இந்த விரிவான கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் கருத்திடத்தான் வேண்டும் என்றில்லை; என் எழுத்துக்களை உங்களைப் போல் பெரியவர்கள் படிக்கிறீர்கள் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை! மிக்க நன்றி! மிகவும் மகிழ்ச்சி!

      நீக்கு
  9. வலைப் பூவில் ஏழு ஆண்டுகள் என்பது இன்றைய சூழலில் சாதாரணமாக செய்தியல்ல
    சாதனை
    வாழ்த்துகள் ஐயா
    தொடர்நது எழுதுங்கள்
    இப்பதிவில் அடியேனைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றி
    ஒரு அருமையான நூலினை விமர்சனம் செய்தமையைத் தவிர வேறெதுவும் நான் செய்திடவில்லை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! என்னை விட மூத்த பதிவர்களான உங்களைப் போன்றோர் பழம் தின்று கொட்டை போட்ட களம் தமிழ்ப் பதிவுலகம். எனவே நான் பெரிய சாதனை ஏதும் புரிந்து விட்டதாக எனக்குத் தெரியவில்லை. என் நூலுக்கு நீங்கள் மதிப்புரை அளித்தது உங்களைப் பொறுத்த வரையில் எளிய ஒரு செயலாக இருக்கலாம். ஆனால் முதன் முதலில் அந்த மதிப்புரையைக் கண்டு வியந்து மகிழ்ந்து ஒரு நொடி திகைத்து நின்ற அந்தத் தறுவாய் இன்னும் என் உள்ளத்தில் இனித்துக் கிடக்கிறது. நான் எழுதிய நூலை மதித்து முதன் முதலாக ஒரு மதிப்புரை; அதுவும் என்னைப் பற்றிய குறிப்புகளுடன்; அதிலும் தமிழுக்கு அரும்பெரும் தொண்டுகளைப் புரிந்த சான்றோர்களைப் பற்றியே எழுதி வரும் உங்கள் தளத்தில் என்றபொழுது நான் அடைந்த மகிழ்ச்சி இவ்வளவு அவ்வளவு இல்லை!! அதைத்தான் மேற்படி கட்டுரையிலும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். உங்கள் வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி!

      பி.கு.: உங்களை அடியேன் என்று நீங்கள் குறிப்பிட்டுக் கொண்டது கண்டு அதிர்கிறேன். அடக்கம் வேண்டியதுதான்; அதற்காக இப்படியா!!

      நீக்கு
  10. மனமார்ந்த வாழ்த்துகள்!

    உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துளசி ஐயா, கீதா அம்மணி!

      வெகு நாட்கள் கழித்து மீண்டும் உங்களை என் தளத்தில் காண மிக்க மகிழ்ச்சி! புதிய உறுதிமொழிக்கேற்ப விரைவில் உங்கள் தளத்துக்கும் வருவேன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. நன்றி தோழரே! நீங்கள் இப்பொழுதுதான் முதன் முதலாக நம் தளத்துக்கு வருகிறீர்கள் என நினைக்கிறேன். எனில் உங்கள் முதல் வருகைக்கு என் உளமார்ந்த வரவேற்பு. தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! என் பதிவுகள் தொடர்ந்து உங்களுக்கு வந்து சேர என் மின்னஞ்சல் சேவையில் இணைந்து கொள்ளுங்கள்! பதிவின் முடிவில் அதற்கான பெட்டி உள்ளது.

      நீக்கு
  12. அருமையான அகச் சிவப்புத் தமிழுக்கு அன்பான வாழ்த்துக்கள் ! மேலும் பணி தொடர வாழ்த்துக்கள்.
    உடுவை.எஸ்.தில்லைநடராசா. இலங்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! உங்கள் வாழ்த்து கண்டு மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  13. மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் பயனுள்ள தகவல் நல்ல விஷயம் மிக்க மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-create-blogger-blog-in-tamil.html

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்