.

சனி, ஏப்ரல் 23, 2016

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு மூன்றாம் பிறந்தநாள்!



3rd Birthday

ட்பிற்கினிய உலகத் தமிழ் உறவுகளே! அனைவருக்கும் நேச வணக்கம்!

உங்கள் அன்பிற்குகந்த ‘அகச் சிவப்புத் தமிழ்’ இன்று மூன்றாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது!

நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய நேரத்தில், வழமை போல் கடந்த ஆண்டின் வலையுலகப் பயணம் பற்றிய விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவா! முதலில், இந்த மூன்றாண்டுக் கால வளர்ச்சி பற்றிய சில புள்ளி விவரங்கள்...

ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
மொத்தம்
பதிவுகள்
30
21
24
75
கருத்துக்கள்*
171
357
336
864
பார்வைகள்
24,000+
32851+
36260+
93111+
அகத்தினர்கள்**
266
267
539
1072
 
* பிளாக்கர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட.
** சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.

இந்த மூன்றாண்டுக் காலத்தில் பெருமளவு வருகையாளர்களை அழைத்து வந்த முதல் பத்துத் தளங்கள்:

தளங்கள்
பார்வைகள்
9524
2740
2562
2347
2153
2041
1797*
1360
604
428

குறிப்பு: தமிழ்த் திரட்டிகளில் தமிழ்மணத்துக்கு அடுத்தபடியாக, தமிழ் பி.எம் குறிப்பிடத்தக்க அளவில் வருகையாளர்களை அழைத்து வருவதில் சிறப்பிடம் வகிப்பதைத் தமிழ்ப் பதிவுலக அன்பர்கள் கவனிக்க வேண்டுகிறேன்!

இந்த மூன்றாண்டுக் காலத்தில் உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவுகள்:

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்றும் இந்தப் பதிவு முதலிடத்தில் வீற்றிருக்கிறது!

கடந்த மாதம் எழுதப்பெற்ற இந்தப் பதிவு, மூன்று ஆண்டுகளாக எழுதப்பட்ட மற்ற எல்லாப் பதிவுகளையும் தாண்டி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

நடப்பாண்டில் ஆங்கிலப் புத்தாண்டு அன்று எழுதிய இந்த இடுகை, படிப்படியாக முன்னேறி வியக்கத்தக்க வகையில் மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளது.

முந்தைய ஆண்டு இரண்டாம் இடத்தை வகித்த இந்தக் கட்டுரை தற்பொழுது நான்காம் இடத்தில்.

தளத்தின் முதல் பதிவான இது, இன்றும் இப்பட்டியலில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

‘அகச் சிவப்புத் தமிழ்’ நேயர்கள் மிகுதியாக வாழும் நாடுகள்:

நாடுகள்
பார்வைகள்
இந்தியா
40462
அமெரிக்கா
18082
இரசியா
5931
பிரான்சு
3429
ஐக்கிய அரபு நாடுகள்
2824
சிங்கப்பூர்
1935
இலங்கை
1828
இங்கிலாந்து
1688
ஜெர்மனி
1523
கனடா
1294

நினைவில் நிரடும் நிகழ்வுகள்...

I Recall them
முந்தைய இரு ஆண்டுகளைப் (ஏப்ரல் 2013–ஏப்ரல் 2014, ஏப்ரல் 2014–ஏப்ரல் 2015) போல் அல்லாமல் கடந்த ஆண்டு (ஏப்ரல் 2015–ஏப்ரல் 2016) சில வருத்தமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. ஆகவே, கசப்பும் இனிப்பும் கலந்த குளம்பியைப் (coffee) போல் இக்காலக்கட்டத்தை உணர்கிறேன்.

கடந்த ஆண்டு நடந்தவற்றிலேயே முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது, தளத்தின் பின்தொடர்வோர் எண்ணிக்கையின் உயர்வு. கூகுள்+, முகநூல் பக்கங்களின் பின்தொடர்வோர் எண்ணிக்கை முறையே 200-ஐயும் 300-யும் தாண்டியதையும், அதனால் முந்தைய இரு ஆண்டுகளை விடக் கடந்த ஆண்டு ‘அகத்தினர்கள்’ எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மடங்கு கூடுதலாக உயர்ந்து மொத்த எண்ணிக்கை ‘ஆயிரத்தையும்’ தாண்டியிருப்பதையும் பெருமகிழ்ச்சியோடு உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்!

ஆண்டின் முதல் பதிவான ‘உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு இரண்டாம் பிறந்தநாள்!’ கட்டுரைக்கு வந்த கருத்துக்கள்தாம் கடந்த ஆண்டில் இனித்த முதல் நிகழ்வு.

நான் பெரிதும் வியக்கும் தமிழறிஞர் ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா அவர்களே அந்தப் பதிவின் கருத்துரையில், “தமிழில் பெரிதும் பிழையற்றுக் காணப்படும் தளம்” என்று அகச் சிவப்புத் தமிழைப் பாராட்டியிருந்தது தளத்தின் இலக்கணத் தரத்துக்கு நல்லதொரு சான்றிதழாய் அமைந்திருந்தது.

அதே நேரம், அவருக்கு அடுத்து கருத்துரைத்திருந்த, 650 பதிவுகளுக்கும் மேல் எழுதிய முன்னோடிப் பதிவரான ‘தேவியர் இல்லம்’ திருப்பூர் ஜோதிஜி அவர்கள், “தெளிவும் நேர்மையும் உங்களின் இரண்டு கண்கள்” என்று குறிப்பிட்டிருந்ததை என் நடுநிலைத்தன்மைக்குக் கிடைத்த ஏற்பிசைவாக (recognition) எண்ணி அகம் மிக மகிழ்ந்தேன்.

அதே வரிசையில், நான் மிகவும் மதிக்கும் கருத்தாழமிக்க பதிவரும், சிறந்த நண்பருமான ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள், அகச் சிவப்புத் தமிழின் இரண்டாண்டுப் பயணம் பற்றிப் படித்துவிட்டு மிகவும் நெகிழ்ந்ததோடு இல்லாமல், “இந்தப் பயணத்தின் திசை இன்னும் நீளமானது. உங்கள் இலக்குகள் இன்னும் உயரியவை. அவற்றை அடையும்போது உங்களது உயரமும் இன்னுமின்னும் கூடும். இன்னும் சொல்லப்போனால் உங்கள் தகுதிக்கு இன்றைய நிலை கம்மிதான்” என்றெல்லாம் வாழ்த்தியிருந்தது என்னை ஊக்கத்தில் சிறகடிக்காமலே பறக்க வைத்தது!

நான் அவர்கள் தளத்துக்குச் செல்ல மறந்தாலும் பொருட்படுத்தாமல், என்னுடனான நட்பை மட்டுமே கருத்தில் கொண்டு தொடர்ந்து என் தளத்துக்கு வந்து, படித்து, கருத்திட்டுச் செல்பவர்களான பதிவுலக வேந்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா, புனைவுகளில் பின்னும் நண்பர் ‘தளிர்’ சுரேஷ், உரிமைமிகு தோழர் கில்லர்ஜி, என்னைப் போலவே சமூகச் சீற்றம் மிக்க தோழர் வலிபோக்கன் ஆகியோரும் மனதார வாழ்த்தியிருந்ததை இந்நன்னாளில் மீளவும் நினைவு கூர்கிறேன்.

அடுத்தது, முந்தைய ஆண்டு நம் அன்பார்ந்த பதிவுலக நண்பர்களால் நான்கு முறை ‘வலைச்சரம்’ இதழில் பரிந்துரைக்கப்பட்ட உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ போன ஆண்டு மேலும் ஒருமுறை, நண்பரும் நான் மதிக்கும் பெரியவருமான ‘சாமானியனின் கிறுக்கல்கள்!’ சாமானியன் சாம் அவர்களால் ஐந்தாவது தடவையாகப் பரிந்துரைக்கப்பட்டது. (பார்க்க: இணையத்தில் தமிழ்!).

இதற்கடுத்து, ‘ஏன் இயலாது மதுவிலக்கு? – தடைகளைத் தகர்க்கும் வகைகளும், அமல்படுத்தும் முறைகளும்’ எனும் தலைப்பில் மதுவிலக்குக்கான படிப்படியான திட்டங்கள் அடங்கிய என் கட்டுரை (வேறு தலைப்பில்) ‘விகடன்’ தளத்தின் ‘வாசகர் பக்கம்’ பகுதியில் வெளியிடப்பெற்றதைப் பெருமையுடன் நினைவு கூர்கிறேன்.

அடுத்து, நான் எதிர்பாராத ஒரு வகையில் வெற்றி பெற்ற ‘இட ஒதுக்கீடு’ பற்றிய கட்டுரை.

‘இட ஒதுக்கீடு’ பற்றிச் சிறு வயதிலிருந்தே பல வகையான கேள்விகளையும் கருத்துக்களையும் எதிர்கொள்வது தமிழ்நாட்டில் பிறந்த அனைவருக்கும் பொதுவானதுதான். தொடக்கத்தில், இட ஒதுக்கீடு பற்றி (எல்லோரையும் போலவே) எதிர்மறையான கருத்துக் கொண்டிருந்த நான், பின்னாளில் இது தொடர்பான சமூக அக்கறையாளர்கள் பலரின் ஆழமான கட்டுரைகளைப் படித்து மனம் மாறினேன். நான் பெற்ற தெளிவு இவ்வையகமும் பெற விரும்பி, ‘இட ஒதுக்கீடு சரியா தவறா’ என்கிற அடிப்படையில் காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகள் பலவற்றுக்கும் ஒரே இடத்தில் விடை தரும் முயற்சியாக ‘இட ஒதுக்கீடு – சில கேள்விகளும் சில பதில்களும்’ எனும் கட்டுரையைப் போன ஆண்டில் எழுதினேன். எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பையும் குறிப்பிடத்தக்க அளவு எதிர்ப்பையும் ஈட்டிய இக்கட்டுரை, சில நாட்கள் கழித்து ‘என்னுடைய நேர்காணல்’ என்ற பெயரில், சற்றும் எதிர்பாராத வகையில் ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழில் வெளியானது. கணினி, தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே வெளியிடும் ‘தமிழ் கம்ப்யூட்டர்’ தன் வழக்கத்துக்கே மாறாக இந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தது, அந்தக் கட்டுரைக்குக் கிடைத்த சிறந்த ஏற்பிசைவு. (பார்க்க: https://www.facebook.com/agasivapputhamizh/posts/935593053182488).

கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் நடந்த ‘வலைப்பதிவர் திருவிழா-2015’, அதுவரை இல்லாத அளவுக்கு, பல போட்டிகள், பரிசுகள், வலைப்பதிவர் கையேடு என்று கோலாகலமாகக் களைகட்டியது. போட்டியில் நானும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!’ என்று ஒரு கட்டுரையை வெளியிட்டேன். பரிசு கிடைக்கவில்லை என்றாலும் தமிழின் முன்னணிப் பதிவர்கள், முன்னோடிப் பதிவர்கள், தமிழார்வலர்கள் என அத்தனை பேரும் அந்தக் கட்டுரையின் தீர்வை வழிமொழிந்திருந்தது என்னைப் பெருங்களிப்பில் ஆழ்த்தியது.

இந்த ஆண்டு சனவரி ஒன்று அன்று இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! என்று தொழில்நுட்பப் பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். அதில், முன்னணித் தொழில்நுட்பப் பதிவர்களில் ஒருவரான ‘அன்பை தேடி அன்பு’ அவர்களே வந்து கருத்திட்டது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.

அதே சனவரியில், ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா அவர்கள் ஏறுதழுவல் பற்றிய அவரது விதப்புக்குரிய கருத்துக்களைப் பதிவாக வெளியிட வேண்டும் என்று நான் கோரியதை ஏற்று, ‘ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?’ என்ற ஆய்வுப் பதிவு ஒன்றை எழுதியதோடு அதில் என்னையும் குறிப்பிட்டிருந்தது பெரிதும் மகிழ்ச்சிக்குரிய தறுவாயாக அமைந்தது.

A Big Victory in FB page
மேற்படி இடுகைகள் அனைத்தையும் விட விஜயகாந்த்தின் வாக்கு வங்கி பற்றியும் அவர் தகுதி பற்றியும் எழுதிய ‘தேர்தல் - 2016 (1) | விஜயகாந்த் எனும் படச்சுருள்! ஓட்டுபவர்கள் யார்? ஏன்? - ஊடகங்கள் சொல்லாத உண்மைகள்!’ எனும் கட்டுரை அடைந்த வெற்றிதான் என்னைப் பெருவியப்புக்கு ஆளாக்குகிறது. பதிவிட்டுத் தமிழ்மணத்தில் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கில் சொடுக்குகள் (hits)! தளத்தின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததும் ஒன்றிரண்டு நாட்களிலேயே 110 பேரைப் புதிதாக இணைய வைத்த இந்த இடுகை, 16,986 பேரை அடைந்து அவர்களில் 1220 பேர் ஒரே நேரத்தில் பக்கத்துள் ஈடுபட்டிருக்க வைத்தது! அகச் சிவப்புத் தமிழின் முகநூல் பக்கத்தில் இதுவரை இப்படியொரு வெற்றியை எந்த இடுகையும் பெறவில்லை. எழுதிய இந்த ஒன்றரை மாதத்தில் இதுவரை பெற்ற தளப் பார்வைகள் 4600க்கும் மேல்! இப்படி ஒரு கட்டுரைக்கு இப்பேர்ப்பட்ட ஒரு வெற்றி, நான் துளியும் எதிர்பாராதது.

ஆனால், இந்த வெற்றிகளுக்கு இடையில் கசப்பான ஓரிரு நிகழ்வுகளும் நடந்தன.

இம்மாதம் நான் எழுதிய ‘தேர்தல் - 2016 (2) | பா.ம.க-வுக்கு வாக்களிப்பதற்கும் இராசபக்சவுக்கு வாக்களிப்பதற்கும் என்ன வேறுபாடு?’ எனும் இடுகை இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. நாகரிகமாக எதிர்ப்பைப் பதிவு செய்தவர்கள் மிகச் சிலரே. மற்றபடி பலர், குறிப்பாக, தளத்தின் முகநூல் பக்கத்தில் கருத்துரைத்திருந்தவர்கள் நான் தமிழனே இல்லை என்றும், வெட்கங்கெட்டவன் என்றும், நாயென்றும், தூவென்றும் மிகவும் ‘நாகரிகமான’ வார்த்தைகளால் ஏசி மகிழ்ந்தார்கள். முதலில், அவற்றைப் படிக்கும்பொழுது எனக்கு மனம் வலிக்கத்தான் செய்தது. ஆனால், இப்படிக் கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், பொதுவெளியில் வந்து அப்படிப்பட்ட ஒரு கொடூரக் கொலையை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள் என்றால், அவர்களெல்லாரும் எப்பேர்ப்பட்ட மனிதத்தன்மையற்றவர்களாக இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, இப்படிப்பட்டவர்களின் இழிசொற்களுக்காகவெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு நல்லதும் செய்ய முடியாது; (எதிர்ப்புக்கு) நாற்றத்துக்கு அஞ்சினால் (அரசியல்) சாக்கடையைத் தூய்மை செய்ய முடியாது என்று உணர்ந்து அக்கருத்துக்களைப் புறந்தள்ளினேன்.

அடுத்ததாய், எனக்கு மிக மிக மிகப் பிடித்த பதிவுலகத் தமிழறிஞர் ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா அவர்கள் இந்தாண்டு எழுதுவதை நிறுத்தியது. பணிச்சுமை காரணமாக எழுத முடியவில்லை என்றுதான் ஐயா அவர்கள், கடைசியாக அவருடன் பேசும்பொழுது சொன்னார். ஆனால் அதன் பின், பதிவர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்களுடனான சந்திப்பின்பொழுது, இனி எழுதுவது ஐயம்தான் என்று அவர் கூறியதாகத் தெரிய வந்து அளவில்லா வருத்தம் அடைந்தேன். ஜோசப் விஜு ஐயாவின் எழுத்துக்களைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போல் கண்களால் அள்ளிப் பருகுபவன் நான். ஆனானப்பட்ட தமிழ்த் தாத்தா விடை காணாமல் விட்டுச் சென்ற தமிழ்ப் புதிருக்கு விடை கண்ட இமயம் அவர். அப்பேர்ப்பட்டவர் எழுதுவதை நிறுத்தியது உலகத் தமிழர்கள் அத்தனை பேருக்கும் பேரிழப்பு எனத் துளியும் தயங்காமல் சொல்வேன்! இவ்வாண்டுப் பதிவுலகில் எனக்கேற்பட்ட பெரிய வேதனை அது!

அடுத்ததாக, முதன்முறையாய்ப் பதிவுலகில் எனக்குத் தெரிந்த ஒருவர் உயிரிழந்தது என்னைத் துணுக்குற வைத்தது. என் முதல் பதிவுக்கு, அழைக்காமலே வந்து பாராட்டி, கருத்திட்டு, வாழ்த்துத் தெரிவித்துச் சென்றவர், அதுவரை நான் யாரென்றே அறியாத பதிவர் ‘மணிராஜ்’ இராஜராஜேஸ்வரி அவர்கள். அதன் பிறகும் ஓரிரு முறை வந்து கருத்திட்டிருந்தார்; நான் அவர் தளத்துக்கு ஒருமுறை கூடச் செல்லாதபொழுதும்! அப்படிப்பட்ட அன்பு நெஞ்சர் திடீரென மறைந்தது திகைப்பாக இருந்தது. அவர் இருக்கும்பொழுது ஒருமுறை கூட அவர் தளத்துக்கு நான் செல்லவில்லையே, கருத்திட்டு அவரை மகிழ்விக்கவில்லையே என இப்பொழுது நினைத்துக் குற்ற உணர்வு கொள்கிறேன். மனித வாழ்க்கை நிலையற்றது. இருக்கும்பொழுதே நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை நாம் நிறைவு செய்து விட வேண்டும் என்பதை உணர்கிறேன்.

இவற்றுக்கிடையில், மிகச் சிறந்த பாவலரும் என் பெருவிருப்புக்குரிய பதிவருமான சகா ‘மகிழ்நிறை’ மைதிலி அவர்கள் இதே ஆண்டு மூடிய தன் தூவலை மீண்டும் திறந்தது கொஞ்சம் ஆறுதல்!

முத்தாய்ப்பாக நான் குறிப்பிட விரும்பும் தித்திப்பு நிகழ்வு, ‘பதிவர் சந்திப்பு’!

‘என்னது! அதற்குத்தான் நீர் வரவேயில்லையே?!’ என நீங்கள் எல்லாரும் நினைப்பது புரிகிறது. நான் சொல்வது புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழாவை இல்லை. தனிப்பட்ட முறையில் எங்கள் வீட்டில் நடந்த பதிவர் சந்திப்பை.

ஆம்! ‘தில்லையகத்து கிரானிக்கிள்சு’ பதிவர் கீதா அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்; என்னைச் சந்தித்தார். இந்த மூன்று ஆண்டுக் காலத்தில் நான் நேரில் சந்தித்த முதல் பதிவர் அவர்தான். எனக்கும் பதிவர் கீதா அவர்களுக்குமான நட்பு முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு இன்னும் கூடியது. ஏறத்தாழ என் அம்மா வயது அவருக்கு. ஆனாலும், என்னைச் சிறுவனாக எண்ணாமல் மிகவும் மதித்துப் பேசுவார். நான்தான் எப்பொழுதும் அவரிடம் ஏதாவது எதிர்க் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பேன். (‘அவரிடம் மட்டுமா?’ என இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் பல்லைக் கடிப்பது கேட்கிறது!Showing Teeth) ஆனால் அவரோ, எப்பொழுதும் கனிவாக அளவளாவித் தன் பெருந்தன்மையை உறுதிப்படுத்துவார். 12.4.2016 அன்று கீதா அவர்கள் வீட்டுக்கு வருகை புரிந்தார். பதிவுலகம், பதிவர் திருவிழா, சமயம், சாதிவெறி, பா.ம.க, இட ஒதுக்கீடு, இன்னா செய்யாமை (அகிம்சை), தமிழ் மொழி, படிக்கும் பழக்கம், எழுத்தாளர் சுஜாதா, தமிழ்மணத்தின் தரவரிசை முறை, பெண்ணியம், தேர்தல், விஜயகாந்த், வைகோ, சீமான், பதிவர்கள் துளசி ஐயா, மைதிலி, ஜோசப் விஜு ஐயா, கில்லர்ஜி, காவிரிமைந்தன், போகன்... என இன்னும் இன்னும் யார் யாரையோ பற்றியும் என்னென்னவோ பற்றியும் பேசினோம், நான் - அவர் - கூடவே என் அம்மாவும். (ஆனாலும் வழக்கம் போலவே நான், வெகுநாட்களாக அவரிடம் சொல்ல நினைத்த சிலவற்றை மறந்து தொலைத்து விட்டேன் என்பது தனிக்கதைAlas!). தனிப்பட்ட முறையிலும் எங்கள் வாழ்க்கை பற்றிய தகவல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். அவருடனான அந்த நாளும் பேச்சும் மறக்க முடியாதவை.

நன்றி!!!

இணையத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் வலைப்பூக்கள் பூத்துக் குலுங்குகையில், இந்தப் பூவையும் நாடி வந்து தேன் குடித்து, மகரந்தம் பரப்பிய நேசத் தமிழ்ப் பொன்வண்டுகளுக்கு...

பல வகைகளிலும் இந்த மலரைத் தொடர்ந்து நுகர்கிற புதிய, பழைய அகத்தினர்களுக்கு...

என் வலைப்பூவைத் தங்கள் வலைப்பூப் பட்டியலில் இணைத்து என் எழுத்தைத் தங்கள் நேயர்களுக்கும் விருந்திடும் என் வலையுலகத் தோழர்களுக்கு...

இட ஒதுக்கீடு’ பற்றிய என் கட்டுரையைத் ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழின் ஆசிரியருக்கு முகநூலில் பகிர்ந்து, அந்தக் கட்டுரை அப்படி ஒரு சிறப்பைப் பெற மூலக் காரணமாக விளங்கிய என் பெருமதிப்பிற்குரிய தமிழறிஞர் திருவள்ளுவன் இலக்குவனார் அவர்களுக்கு...

எதிர்ப்புத் தெரிவித்தால் நான் இன்னும் ஓங்கி அடிப்பேன் எனத் தெரியாமலே என்னை வளர்த்து விடும் என் இனிய எதிரிகளுக்கு...

இணையத்தின் ஒரு மூலையில் கிடக்கும் இத்தளத்தின் பதிவுகளைப் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு சேர்த்து இத்தனை பேர் படிக்கவும் பாராட்டவும் முதன்மைக் காரணிகளாய் விளங்கும் திரட்டிகள், சமூக வலைத்தளங்கள், அவற்றில் செயல்படும் குழுக்கள், செருகுநிரல் (plugin) சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories) ஆகியவற்றுக்கு...

தளத்தின் வளர்ச்சி - தளர்ச்சி அறிந்து மெருகேற்ற உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites), பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம் ஆகியவைக்கு...

பதிவுகளை அழகூட்டப் படங்களை வழங்கும் பல்வேறு இணையத்தளங்களுக்கு...

எல்லாவற்றுக்கும் மேலாக, நம் மொழியின் பெயரைக் கூடச் சரியாகச் சொல்லத் தெரியாமலே, தமிழ் வளர்க்க நமக்கு இந்த அரிய இலவசச் சேவையை வழங்கி வரும் பிளாகர்க்கு என அனைவருக்கும்...

Thank You!


காணிக்கை

என் எழுத்துத் திறமை
வாதத் திறமை
நடுநிலைச் சிந்தனை
சமூக அக்கறை
படிக்கும் பழக்கம்
நேர்மை
துணிவு
என எதுவுமே
எனக்குச் சொந்தமானது இல்லை
அனைத்தும் இவர் வழங்கிய கொடை
இத்தனை தகுதிகளும் நிரம்பிய
இவர் குருதியில் பிறந்ததால்
இவர் நிழலில் வளர்ந்ததால்
பெற்றேன் இவையெல்லாமே...

என் ஆருயிர்த் தாய் இ.புவனேஸ்வரி அவர்களுக்கு இந்த ஆண்டின் வலைப்பூ வெற்றியைக் காணிக்கையாக்குகிறேன்!

❀ ❀ ❀ ❀ ❀

படங்கள்: நன்றி ௧) Stuart Miles at freedigitalphotos.net ௨) Master isolated images at FreeDigitalPhotos.net.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூவின் வளர்ச்சி அடுத்த ஆண்டில் மேலும் பன்மடங்காகப் பெருக உதவலாமே!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

9 கருத்துகள்:

  1. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களின் தளத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்!
    இந்த மூன்று வருட தள வரலாற்றையே அற்புதமான பதிவாக தந்து விட்டீர்கள். ஏராளமான விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நண்பர் ஜோசப் விஜு அவர்களின் முடிவு பலருக்கும் வருத்தம் அளிக்கிறது. நானும் அவர் எழுத்தின் ரசிகன். மீண்டும் எழுத வேண்டும்.
    கீதா அவர்கள் எனக்கும் நல்ல அறிமுகம் அடிக்கடி பேசிக்கொள்வோம். நல்லதொரு பண்பாளர். மனதார பாராட்டக் கூடியவர்.
    வெகு சமீபமாகத்தான் தங்களின் தளத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். என்னை கவர்ந்த வலைத்தளங்களில் அகச் சிவப்புத் தமிழுக்கு முதன்மையிடம் எப்போதும் உண்டு.
    மேலும் பல ஆண்டுகளைக் கண்டு, தமிழுக்கு பங்காற்றும் படைப்புகளை தொடர்ந்து தர வேண்டும்.
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விரிவான வாழ்த்துக்கும் அன்பு நிறைந்த பாராட்டுக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பரே! கீதா அவர்கள்தாம் உங்கள் வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்வித்தார். நீர் மேலாண்மை பற்றிய உங்கள் பதிவுகளை மொத்தமாய்ப் படிப்பதற்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன். மீண்டும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. விரிவான விளக்கத்துடன் தங்களது பதிவை அழகாக தெரிவித்து இருக்கின்றீர்கள் நண்பரே

    நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு எமது வாழ்த்துகள் தங்களது எழுத்தருவி தொடர்ந்து பொழியட்டும் நனைந்திடக் காத்திருக்கின்றேன்

    தங்களது அன்னையாருக்கு எமது வணக்கங்கள்

    ‘’என்னை’’யும் கூட குறிப்பிட்டமை அறிந்து மகிழ்ச்சி
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைக் குறிப்பிடாமல் எப்படி ஐயா!!

      உங்கள் வருகைக்கும் அழகான வரிகளிலான வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா! அம்மாவுக்கு நீங்கள் தெரிவித்த வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி! மீண்டும் நன்றி!

      நீக்கு
  3. மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! எங்கள் இனிய நண்பரே! நீங்கள் இன்னும் பல படைப்புகள் படைத்து வெற்றியுடன் பதிவுலகில் நடை போட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

    எப்படித் தங்களது சென்ற இரு வருடங்களுக்கான உங்கள் அடி எடுத்து வைக்கும் இந்த நாளை தவற விட்டோம் என்று தெரியவில்லை...சரி எப்படியோ...இப்போது இதனைப் பார்த்துவிட்டோம்...வாழ்த்துகள் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம்...

    கீதா: இபுஞா உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்வு எனக்கு. அதில் தங்கள் தாயையும் சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி! இனிமையான தாய். தங்களுக்குப் பல வகையிலும் ஆதரவு அளித்து ஒரு தூண் போன்றுத் தங்களைத் தாங்கி நிற்கும் உயரிய இதயம்! அன்பு நிறைந்த உள்ளம். நீங்கள் இருவரும் மிகவும் நட்புடன் நண்பர்களைப் போன்றுப் பேசிப் பழகுவதைக் கண்டு மனம் உவகை கொண்டது. அந்த நட்புடன் கூடிய அன்பு இதயத்திற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! தாங்கள் நம் சந்திப்பைக் குறித்து இங்குக் குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி! மீண்டும் வருவேன்...தங்கள் வீட்டிற்கு..

    //நான்தான் எப்பொழுதும் அவரிடம் ஏதாவது எதிர்க் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் அவரோ, எப்பொழுதும் கனிவாக அளவளாவித் தன் பெருந்தன்மையை உறுதிப்படுத்துவார்.//

    எதிர்க் கருத்துகள் இருக்கலாம். தவறு இல்லையே! ஆனால் அது எப்படி நட்பையும் அன்பையும் பிரிக்கும்? அப்படிப் பிரித்தால் அது உண்மையான, பக்குவப்பட்ட நட்பாகவோ, அன்பாகவோ இருக்க முடியாதே! //எப்பொழுதும் கனிவாக அளவளாவித் தன் பெருந்தன்மையை உறுதிப்படுத்துவார்.// ஹஹாஹ் இது கொஞ்சம் மிகைப்படுத்தலாகத் தெரிகிறதே...

    சரி என்ன மறந்து விட்டீர்கள் உங்கள் தலையில் குட்டிக் கொள்ளும் அளவிற்கு??!!! சரி குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நான் மீண்டும் வருவேன் இல்லையா அப்போது பேசுவோம்...

    நன்றி அனைத்திற்கும்...மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகாக்கள் இருவரும் வந்து கருத்திட்டது கண்டு மிக்க மகிழ்ச்சி! உங்கள் அடுக்கடுக்கான வாழ்த்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்! என் அம்மாவைப் பற்றிய உங்கள் பாராட்டுக்களுக்குத் தனி நனி நன்றி!

      //இது கொஞ்சம் மிகைப்படுத்தலாகத் தெரிகிறதே...// - இல்லவே இல்லை சகா! உண்மைதான்.

      //மீண்டும் வருவேன் இல்லையா அப்போது பேசுவோம்...// - ஆகட்டும் சகோ! நன்றி!

      நீக்கு
  4. வாழ்த்துக்கள் ஐயா, தங்களின் பதிவுகள் காரசாரமாக இருப்பினும் உண்மையை உரத்து கூறுபவை. இதனாலேயே பதிவுலகில் எதிரிகளை சம்பாதித்துக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தங்களின் தமிழ் தொண்டு மேலும் சிறப்புற இந்த ஆண்டிலும் தொடரட்டும். ஜோசப் விஜு அவர்கள் பதிவு எழுத மாட்டார் என்ற தகவல் வலிக்கிறது. அவரின் தமிழ் இலக்கண இலக்கிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தவை. எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதுபவர். பதிவுலகில் திடீர் இறப்புகள் என்னையும் கலங்க வைக்கிறது. என் குடும்பத்திலும் சில விரும்பத்தகா நிகழ்வுகள் என்னையும் பதிவுலகம் பக்கம் நெருங்கவிடவில்லை. திரும்பி வருகையில் எண்ணிலா மாற்றங்கள். மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பதால் வரவேற்போம். இந்த சிறுவனையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்களின் பதிவுகள் காரசாரமாக இருப்பினும் உண்மையை உரத்து கூறுபவை// - மிக்க நன்றி ஐயா! ஆனால், நான் குறிப்பிட்டவர்கள் பதிவுலகில் இல்லை; முகநூலில் வந்தவர்கள்.

      //என் குடும்பத்திலும் சில விரும்பத்தகா நிகழ்வுகள் என்னையும் பதிவுலகம் பக்கம் நெருங்கவிடவில்லை// - ஓ அப்படியா! வருந்துகிறேன் ஐயா!

      //ஜோசப் விஜு அவர்கள் பதிவு எழுத மாட்டார் என்ற தகவல் வலிக்கிறது// - ஆம்! நானும் நீங்களும் இங்குள்ள மற்ற பதிவர்களும் தெரிவிக்கும் வருத்தம் கண்டாவது அவர் மனம் மாறும் என நம்புகிறேன்.

      மற்றபடி, உங்கள் நினைவு எனக்கு எப்பொழுதும் உண்டு. நீங்கள் எழுதிய அந்தப் பேய்க் கதை அடிக்கடி நினைவுக்கு வருவதுண்டு. நான் செய்வது தமிழ்த்தொண்டெல்லாம் இல்லை. ஏதோ எனக்குத் தோன்றிய சில நல்லவற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான். உங்கள் பாராட்டுக்கும் என் எழுத்து மீதான நன்மதிப்புக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

      நீக்கு
  5. How to Type Tamil in Photoshop | Photoshopல் இனி தமிழில் எழுதுங்கள்! - http://www.mytamilpeople.in/2016/05/how-to-type-tamil-in-photoshop-photoshop.html

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்