.

திங்கள், ஏப்ரல் 24, 2017

உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’க்கு நான்காம் பிறந்தநாள்!

4th Birthday of Agasivapputhamizh

கத்திற்கினிய எந்தமிழ்ச் சொந்தங்களே! நேச வணக்கம்!

இதோ, உங்கள் கருத்திற்குகந்த ‘அகச் சிவப்புத் தமிழ்’ தன் நான்காவது பிறந்தநாளை உங்களுடன் கொண்டாட வந்திருக்கிறது. (தொடங்கப்பட்ட நாள்: 23.04.2013) இந்த இனிய தறுவாயில், இந்த நான்காண்டுப் பயணம் பற்றிய புள்ளிவிவரங்கள், பதிவுலகப் பயணத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை உங்கள் முன் வைக்க விழைகிறேன். முதலில், தளத்தின் நான்காண்டு வளர்ச்சி குறித்த அடிப்படைத் தகவல்கள்.
 

பதிவுகள்
கருத்துக்கள்
பார்வைகள்
அகத்தினர்கள்
ஏப்ரல் 2013 –
ஏப்ரல் 2014
30
171
24,000+
266
ஏப்ரல் 2014 –
ஏப்ரல் 2015
21
357
32,851+
267
ஏப்ரல் 2015 -
ஏப்ரல் 2016
24
336
36,260+
539
ஏப்ரல் 2016 -
ஏப்ரல் 2017
18
181
75,281+
930
மொத்தம்
93
1045
1,68,392+
2002
பிளாக்கர் கருத்துப்பெட்டி, முகநூல் கருத்துப்பெட்டி இரண்டும் சேர்த்து, என் பதில்களும் உட்பட. 

சமூக வலைத்தளங்களிலும் சேர்த்து.

அகச் சிவப்புத் தமிழின் நேச(ர்) நாடுகள் 😜
 

இந்தியா
65592
அமெரிக்கா
50628
ரஷ்யா
7567
பிரான்ஸ்
5112
ஐக்கிய அரபு நாடுகள்
4237

உங்களால் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவுகளில் முதல் ஐந்து:

சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா? – விரிவான அலசலும் விளக்கங்களும் (9570 பார்வைகள்)

தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்தப் பதிவே முதலிடத்தில் வீற்றிருக்கிறது. அதுவும் முதல் மூன்று ஆண்டுகளில் 4888 பார்வைகளைப் பெற்றிருந்த இப்பதிவு, இந்த ஒரே ஆண்டில் மட்டும் 4682 பார்வைகளை மீண்டும் பெற்று அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது. இனியும் இதை முறியடித்து முன் செல்லும் வகையில் ஒரு பதிவை என்னால் எழுத முடியுமா என மிரளுகிறேன்!

இன்ட்லி! - தமிழ்ப் பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! (6652 பார்வைகள்)

கடந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் இருந்த இந்த இடுகை, இந்த ஒரே ஆண்டில் கூடுதலாக 4514 பார்வைகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.

தேர்தல் - 2016 (1) | விஜயகாந்த் எனும் படச்சுருள்! ஓட்டுபவர்கள் யார்? ஏன்? - ஊடகங்கள் சொல்லாத உண்மைகள்! (5086 பார்வைகள்)

  கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தப் பதிவு தற்பொழுது மூன்றாம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

மாற்று அரசியல் தோற்று விட்டதா? - தேர்தல் முடிவுகள் பற்றி நடுநிலையான ஓர் அலசல்! (3496 பார்வைகள்)

  கடந்த ஆண்டு மே மாதம் எழுதப்பட்ட பதிவு இது. ஒரே ஆண்டில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பார்ப்பனர்களின் பாட்டன் சொத்துக்களா கோயில்களும் இறையியலும்?! (2262 பார்வைகள்)

  கடந்த ஆண்டில் நான்காம் இடத்தில் இருந்த கட்டுரை. தற்பொழுது ஐந்தாம் இடத்தில்.

நினைவில் மணக்கும் நிகழ்வுகள் 


The incidents that are fragrancing in my mind

இந்த ஆண்டுப் பதிவுலக அனுபவத்தில் முதன்மையாகக் குறிப்பிட வேண்டியது, தளத்தின் பார்வைகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட எதிர்பாராத உயர்வு. முதல் அட்டவணையில் நீங்களே பார்த்திருப்பீர்கள், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பார்வைகள் எண்ணிக்கை மடங்குக் கணக்கில் உயர்ந்திருப்பதை. மொத்தத்தில் மட்டுமில்லை, தனிப்பட ஒவ்வொரு பதிவு வாரியாகப் பார்த்தாலுமே கூட முன் எப்பொழுதையும் விட இந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் பார்வை எண்ணிக்கை பெருகியுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் எனக் கணிக்கிறேன். வளரும் பதிவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்கிற நினைப்பில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக நான், மிஞ்சிப் போனால் மாதத்துக்கு இரண்டு பதிவுகள்தாம் எழுதுவேன். ஆனால், கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், அதில் யாருக்கு வாக்களிப்பது நல்லதாக இருக்கும் என ஆராயும் வகையில் பதிவுத் தொடர் ஒன்றை எழுத முற்பட, மாதத்துக்கு மூன்று பதிவுகள் என மூன்று மாதங்களுக்கு எழுத வேண்டி வந்தது. சமகால நாட்டு நடப்புப் பற்றிய பதிவுகள், அதுவும் எப்பொழுதும் சர்ச்சைக்குரிய தளமான அரசியல் பற்றியவை என்பதால் பார்வை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்ததைக் காண முடிந்தது. “ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை என்றில்லாமல் அடிக்கடி பதிவு எழுதுவதுதான் நிறைய பார்வைகளைப் பெறுவதற்கான அடிப்படை வழிமுறை” என்கிற பதிவுலகின் மாறாக் கோட்பாடு என் வரையிலும் மீண்டும் ஒருமுறை உறுதியானது. “தனிப் பதிவுகளை விட, பதிவுத் தொடர் நிறைய பார்வைகளை ஈட்டும்” எனும் பதிவுலக முன்னோடிகளின் வாக்கும் பலித்தது. நானும் இலட்சாதிபதி ஆனேன். இது முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்த ஆண்டில் புதிதாக நான் ரெட்டிட் சமூக ஊடகத்திலும் பதிவுகளைப் பகிரத் தொடங்கியது காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். வெகு நாட்களுக்கு முன் என் ஆருயிர்த் தோழர் அஷ்வின் சத்யா அவர்கள் ரெட்டிட் பற்றி உயர்வாகச் சொல்லியிருந்ததால் சோதித்துப் பார்ப்போமே என்றுதான் பகிரத் தொடங்கினேன். சற்றும் எதிர்பாராத வகையில் பார்வை எண்ணிக்கை எகிறியது!

ஆனால், குழப்பம் என்னவென்றால், பிளாகர் கணக்கின் டிராபிக் மூலங்கள் (Traffic Sources) பகுதியில் ரெட்டிட் ஒருமுறை கூடக் காட்டப்படவில்லை. பழைய பதிவுகளாக இருந்தால் கூட ரெட்டிட்டில் பகிர்ந்த சில மணி நேரங்களில் குறிப்பிட்ட பதிவின் பார்வை எண்ணிக்கை வெகுவாக உயர்கிறது. ஆனாலும், டிராபிக் மூலங்களில் ரெட்டிட்டின் பெயரைக் காணவில்லை. ஆக, ரெட்டிட் மூலமாகக் கிடைக்கும் பார்வைகள் அந்தந்த இணைப்புகளின் கணக்கில்தான் வரவு வைக்கப்படுகின்றன எனத் தோன்றுகிறது. ரெட்டிட் மட்டுமில்லை, இணையத்தில் கொஞ்சம் உலவியதில் வேறு சில தளங்கள் கூட அகச் சிவப்புத் தமிழின் பதிவுகளைப் (எனக்குத் தெரியாமலே) பகிர்வது தெரிய வந்தது.

‘இப்படி பல தளங்கள் நமக்குத் தெரியாமல் நம் வலைப்பூவின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்க, நாமோ டிராபிக் மூலங்கள் பட்டியலில் காட்டப்படும் தளங்கள் மட்டும்தான் முன்னேற்றத்துக்குக் காரணம் என நம்பி, ஆண்டுதோறும் புள்ளிவிவரம் வெளியிடுகிறேன் எனும் பெயரில் குறிப்பிட்ட சில தளங்களுக்கே மறுபடி மறுபடி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறோமே! இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!’ என்று தோன்றியது. அதனால்தான் இந்த முறை, மிகுதியான பார்வையாளர்களை அழைத்து வரும் முதல் பத்துத் தளங்களின் பட்டியலை நான் வெளியிடவில்லை. பட்டறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் முகநூல் குழுக்கள், கூகுள் குழுக்கள், கூகுள் தேடுபொறி, தமிழ்மணம், ரெட்டிட் ஆகியவை முறையே வெகுவான பார்வையாளர்களை அழைத்து வருவதாகச் சொல்லலாம்.

இதே போல், பார்வை எண்ணிக்கை தொடர்பாகக் குறிப்பிடத்தக்க இன்னொரு நிகழ்வையும் கவனிக்க முடிந்தது. தேர்தல் பதிவுத் தொடரில் எழுதப்பட்ட ‘விஜயகாந்த் எனும் படச்சுருள்!...’ கட்டுரை, வெளியான ஒன்றரை மாதத்திலேயே 4600-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, அதற்கு முன் இரண்டு ஆண்டுகளாக எழுதப்பட்ட எல்லாப் பதிவுகளையும் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தது. ஆனால், அதன் பின் இந்த ஆண்டில் தளம் 75,000 பார்வைகளுக்கு மேல் பெற்றும் இந்தப் பதிவு மட்டும் முன்னை விட மிக மிகக் குறைவான பார்வைகளையே பெற்று தன் இடத்திலிருந்து ஒரு படி இறங்கியிருக்கிறது.

அதே சமயம், தளம் தொடங்கிய முதல் ஆண்டில் எழுதப்பட்ட ‘சென்னைத் தமிழ் அன்னைத் தமிழ் இல்லையா?...’ கட்டுரை, ஏறத்தாழ இத்தனை ஆண்டுகளில் பெற்ற மொத்தப் பார்வைகளின் அளவுக்கு இந்த ஒரே ஆண்டில் மீண்டும் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

ஆக, அந்தந்த நேரத்து சமூகப் பரபரப்புக் காரணமாக வரவேற்பு பெறும் பதிவுகள் அந்தப் பரபரப்பு போன பின் யாராலும் விரும்பப்படுவதில்லை; அதே நேரம், மிகவும் சிந்தித்து எழுதப்படுகிற, எக்காலத்துக்கும் பொருத்தமான பதிவுகள் என்றென்றும் நம் தளத்துக்குத் தொடர்ச்சியான வருகைகளைப் பெற்றுத் தருகின்றன என்பதை இதிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ‘தரமே எல்லாவற்றுக்கும் காரணம்’ (Content is King) எனும் கோட்பாடு எவ்வளவு உண்மையானது என்பதை அனுபவரீதியாக உணர்கிறேன்.


அடுத்ததாக, தளத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டுகளை விடப் பின்பற்றுவோர் ஒரு மடங்கு கூடுதலாக உயர்ந்தது. ஆனால், முன் எப்பொழுதையும் விட மிகக் குறைவான பதிவுகளையே எழுதியும் இந்த ஆண்டு மறுபடியும் ஒரு மடங்கு கூடுதலாக ‘அகத்தினர்’ எண்ணிக்கை முன்னேறியுள்ளது. குறிப்பாக, டுவிட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை ‘ஆயிரத்தைத் தாண்டி விட்டது’ என்பதைப் பெருமகிழ்ச்சியோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Agasivapputhamizh twitter followers count has been crossed 1K


ஜல்லிக்கட்டுப் போராட்டம்! - உணவு அரசியலுக்கு எதிரான உணர்வுப் போர்!’ பதிவுக்கு நண்பர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்கள் அளித்த கருத்துரையைத்தான் இவ்வாண்டு பெற்ற பாராட்டுகளிலேயே மிகவும் பெரியதாக உணர்கிறேன். “இனி நடைபெறும் சல்லிக்கட்டுப் போட்டிகள் சாதிப் பாகுபாடற்ற புதிய சல்லிக்கட்டுகளாக இருத்தல் வேண்டும்” என நான் வலியுறுத்தியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் பாராட்டியிருந்தது தமிழ்ப் பற்றாளன் என்பதையும் தாண்டி சரியான மனிதன் நான் என்பதற்கான ஏற்பிசைவாக அமைந்ததை மகிழ்வோடு நினைவு கூர்கிறேன்!

இதே பதிவின், இதே கருத்தைப் புகழ் பெற்ற கவிஞர் ‘புதிய மாதவி’ சங்கரன் அவர்களும் பாராட்டியிருந்தது எதிர்பாராத பூரிப்பை அளித்தது!

இதே போல், இதற்கு முன்பு ‘My Dear Karnataka People! – An open letter to Karnataka people from Tamilnadu people with some important facts!’ இடுகையில் ‘ஊமைக்கனவுகள்’ ஜோசப் விஜு ஐயா, ‘மனப் புழுக்கம் தீர்த்த பதிவு’ என ஆழமிகு சொற்களால் பாராட்டியிருந்ததும் மறக்க முடியாத ஒன்று.

இவ்வாண்டில் எழுதிய ‘காலம் கடந்த தண்டனை விடுதலைக்குச் சமம்! - சொத்துக் குவிப்பு வழக்கு முடிவும் நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்!’ கட்டுரையை முதலில் வெளியிட்ட ‘கீற்று’ இதழ் அதைத் தன் முகப்புப் பக்கத்திலேயே தொடர்ந்து மக்கள் பார்வைக்குத் வைத்தது இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.


The Agasivapputhamizh article which is showcased in 'Keetru' e-zine's home page

மகிழ்ச்சிக்குரிய அடுத்த செய்தி, வெகு காலமாக நினைத்துக் கொண்டிருந்தது போலத் தளத்தின் அடைப்பலகையை (template) இந்தாண்டு மாற்றி விட்டேன். முன்பு போல் இல்லாமல் கணினி, கைக்கணினி (tablet), கைப்பேசி என எந்தக் கருவியிலிருந்து பார்த்தாலும் அந்தந்தக் கருவிக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இந்தப் புதிய வடிவம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்து நான் குறிப்பிட விரும்பும் நிகழ்வு, சக பதிவருடன் இணைந்து ஒரு பதிவை எழுதிய புதிய அனுபவம்.

கடந்த அக்டோபரில், பல ஆண்டுகளுக்குப் பின் காவிரிப் பிரச்சினை மீண்டும் பூதகரமாக வெடித்தது. கருநாடகத்தில் தமிழர்களும் தமிழர் உடைமைகளும் தாக்கப்பட்டனர். அவ்வேளையில், காவிரிப் பிரச்சினையில் தமிழர் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்ல நான் விரும்பினேன். ஆனால், எனக்கோ ஆங்கிலம் தெரியாது; கன்னடர்களுக்குத் தமிழ் தெரியாது.

அந்த நேரத்தில்தான் என் உதவிக்கு வந்தார் ‘தில்லையகத்து கிரானிக்கிள்சு’ கீதா அவர்கள்! தமிழ் மக்கள் சார்பாகக் கன்னட மக்களுக்கு நான் எழுதிய அந்த மடலை மிக அழகாக, மூலக் கட்டுரையின் கனிவு – சீற்றம் என எதுவுமே துளியும் குறையாமல் நறுக்குத் தெறிக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அளித்தார். அதுதான் ‘My Dear Karnataka People! – An open letter to Karnataka people from Tamilnadu people with some important facts!’ என்கிற பதிவு.

மூலக் கட்டுரையில் நான் எந்தெந்த வரிகளை, எந்தெந்தக் கருத்துக்களை எங்கே எப்படி எழுதியிருந்தேனோ, அவை அனைத்தையும் அப்படிக்கு அப்படியே வரவழைத்து, அதே நேரம் ஆங்கில மொழியின் நடையும் அழகும் மிளிர கீதா அவர்கள் மொழிபெயர்த்த விதம் பெரிதும் வியப்புக்குரியது! இவ்வளவு ஆங்கிலப் புலமையை வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பதிவு எழுதாமல் தமிழில் எழுதும் அவரது தாய்மொழிப் பற்று நிகரற்றது!

மூன்றாம் பிறந்தநாள் பதிவில், நான் பெரிதும் மதிக்கும் ரசிக்கும் ஜோசப் விஜு ஐயா பதிவு எழுதுவதை நிறுத்தியது பற்றி மிகவும் வேதனையோடு குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆண்டு அந்த வேதனையைப் போக்கும் விதமாய் அவர் மீண்டும் தன் விசைப்பலகையைத் திறந்தது குறித்து எனக்கு அலைபுரளும் மகிழ்ச்சி!

அதே பிறந்தநாள் பதிவில், இடையில் பதிவு எழுதுவதை நிறுத்தியிருந்த ‘மகிழ்நிறை’ மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்கள் மீண்டும் எழுதத் தொடங்கியதை மகிழ்வுடன் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதற்குப் பின் அவர் முற்றிலுமாகவே எழுதுவதை நிறுத்தி விட்டது எனக்கு அளவிலாத ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளித்தது; அளித்துக் கொண்டிருக்கிறது!

பதிவுலகில் நான் பார்த்த மிகச் சிறந்த படைப்பாளிகளைப் பட்டியலிட்டால் அவர்களில் மைதிலி கண்டிப்பாக முதல் வரிசையில்தாம் இருப்பார். என்றாவது ஒருநாள் மீண்டும் அவர் தன் எழுத்து வீச்சுக்களைத் தொடங்குவார் என நான் திடமாக நம்புகிறேன்!

அடுத்தபடியாக நான் குறிப்பிட விரும்புவது நாம் யாரும் நினைத்துப் பார்க்க விரும்பாத ஒரு கசப்பான நிகழ்வு!

பதிவுலகிலுள்ள அனைவருக்கும் எனக்கும் மிக இனிய நண்பர் கில்லர்ஜி அவர்கள் தம் தங்கையாரை இந்த ஆண்டு இழந்தது. தாமதமாகத்தான் இந்தத் துயரச் செய்தி எனக்குத் தெரிய வந்தது. அதற்குள் நண்பர், கொஞ்சம் மனம் தேறிப் பதிவுகள் எழுதும் அளவு வந்து விட்டார். அப்படிப்பட்ட நிலையில், ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று மீண்டும் அவர் மனப்புண்ணைக் கிளற நான் விரும்பாமையால் நான் அவரைத் தொடர்பு கொள்ளவேயில்லை. ஏற்கெனவே ஆருயிர் மனைவியைப் பறிகொடுத்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் அந்த அன்புள்ளம், இப்பொழுது தங்கையையும் இழந்து எவ்வளவு துடிக்கும் என்பதை எண்ணி மிகவும் வருந்துகிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அவருக்கு இந்தக் காயமாவது ஆறட்டும் எனக் கூறுவதைத் தவிர வேறென்ன சொல்ல!

இறுதியாக, சக பதிவர்களுடன் அண்மைக்காலமாக நட்பு கொஞ்சம் வளர்ந்திருப்பதைக் குறிப்பிட விழைகிறேன்.

‘தமிழ் வலைப்பதிவகம்’, ‘கணினித் தமிழ்ச் சங்கம்’ ஆகிய வாட்சப் குழுக்கள் மூலம் பதிவுலக அன்பர்களைத் தொடர்பு கொள்வது இப்பொழுது மிகவும் எளிதாகியுள்ளது. இடுகைகளைப் பொத்தாம் பொதுவாக இல்லாமல், குறிப்பாகப் பதிவர்களின் பார்வைக்கு எனத் தனிப்படக் கொண்டு செல்வது இதனால் ஏதுவாகி உள்ளது. அதிலும், ‘கணினித் தமிழ்ச் சங்கம்’ குழு மூலம் எழுத்தாளர் அண்டனூர் சுரா, நட்புமிகு ‘தேன்மதுரத் தமிழ்’ கிரேசு, பதிவுலக ஆசிரியர் முத்துநிலவன் ஐயா போன்றோரோடு அளவளாவிய நிகழ்வுகள் நினைவிலாடுகின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் முத்துநிலவன் ஐயாவோடு ஏற்பட்டுள்ள நெருக்கம் சுவையானது.

நன்றியோ நன்றி!

இணையத்தில் எத்தனையோ தமிழ் வலைப்பூக்கள் பூத்துக் குலுங்குகையில், இந்தச் சிறு மலரையும் தேடி வந்து தேன் குடிக்கிற, மகரந்தம் பரப்புகிற நேசத் தமிழ்ப் பட்டாம்பூச்சிகள்...

பல வழிகளிலும் இந்தப் பூவைத் தொடர்ந்து தாங்கும் காம்புகளான புதிய, பழைய அகத்தினர்கள்...

அகச் சிவப்புத் தமிழைத் தங்கள் வலைப்பூவில் பட்டியலிட்டு தங்கள் நேயர்களுக்கும் என் எழுத்தை விருந்தாக்கும் என் வலையுலகத் தோழர்கள்...

தொடர்ந்து என் எழுத்துக்களை வெளியிட்டும், அதிலுள்ள நிறைகுறைகளைத் தெரிவித்து என்னைச் செம்மைப்படுத்தியும் வருகிற ‘கீற்று’ இதழ் ஆசிரியர்கள் நந்தன், இரமேஷ், ‘அகரமுதல’ இதழ் ஆசிரியர் திருவள்ளுவர் இலக்குவனார் ஐயா...

வெட்ட வெட்டத் துளிர்க்கும் வாழை எனத் தெரியாமல் என்னை மீண்டும் மீண்டும் தாக்கும் இனிய எதிரிகள்...

ஒரு மூலையில் இருக்கும் இந்த வலைப்பூவையும் இணையச்சரத்தில் தொடுத்தெடுத்து மக்கள் பார்வை கிடைக்க வழி செய்யும் திரட்டிகள், சமூக ஊடகங்கள், அவற்றின் குழுக்கள், செருகுநிரல் - கைச்செயலிச் சேவைத் தளங்கள், பட்டியலிடு சேவையகங்கள் (Directories)...

தளத்தின் ஏற்ற இறக்கம் அறிந்து மெருகேற்ற உதவும் தரவகச் சேவையகங்கள் (Data Analyzing Sites)...

பதிவுகளுக்கு உரிமப் பாதுகாப்பு வழங்கும் காப்பிரைட்டட்.காம்...

பதிவுகளை அழகூட்டப் படங்களையும் செறிவூட்டத் தகவல்களையும் அளிக்கும் இணையத்தளங்கள், நூல்கள், இதழ்கள்...

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் வளர்க்க நமக்கு இந்த அரிய சேவையைத் தொடர்ந்து இலவசமாக வழங்கி வரும் பிளாகர் என அனைவருக்கும்...


Thank you so much!

காணிக்கை!


மாய உலகின் பறக்கும் கம்பளங்களில்

மிதந்து கொண்டிருந்தவன் கையில்

திருக்குறளைக் கொடுத்து

சிறுவர் இலக்கியம் சுவைக்கும் வயதில்

அறிவியல் நூல்களை அளித்து

படிக்கும் பழக்கம்

முளைக்கும் பருவத்திலேயே

சரியான திசையை

எனக்குக் காட்டிய

என் மாமா

கு.மணிவண்ணன் அவர்களுக்கு

இந்த ஆண்டின் வலையுலக வெற்றியைக்

காணிக்கை ஆக்குகிறேன்! 

My Uncle Mr.K.Manivannan

படங்கள்: நன்றி fotographic1980 at freedigitalphotos.net, பிக்சபே, கீற்று, காம்னா.வெப்துனியா.

கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி, உங்கள் விருப்பத்துக்குரிய இந்த வலைப்பூவின் வளர்ச்சி அடுத்த ஆண்டில் மேலும் பன்மடங்காகப் பெருக உதவலாமே!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

11 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களை அளியுங்கள்!

      நீக்கு
  2. ...நெஞசம் நிறைந்த வாழ்த்துக்கள் ஞானப்பிரகாசன்! நடுநிலை கருத்துக்களுக்கு என்றுமே மக்கள் மத்தியில் ஆதரவு உண்டு. எனினும் பார்வையாளர் எண்ணிக்கை என்றெ மயக்கத்தில் இருந்து விடுபடுவதும் நல்லதே என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது.ஏனெனில் சில்லறைத்தனமான வலைத்தளங்களுக்கு எளிதாக வந்துபோகிறவர்கள் அதிகம். கனமான அல்லது நீளமான பதிவுகளை சராசரி வாசகன் ஏற்பதில்லை. எனவே, கொள்கைப்பிடிப்போடு, சாதிவெறி, இனவெறி, கட்சிவெறி இல்லாத மொழிப்பற்றோடு செயல்படுவதே பதிவர்களுக்கு கௌரவத்தைப் பொற்றுத்தரும் என்பமு என் கருத்து. மீண்டும் வாழ்த்துக்கள்.

    இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! சரியான நேரத்தில் மிகச் சரியான அறிவுரையை அளித்திருக்கிறீர்கள். கண்டிப்பாக இதை என்றும் நான் நினைவில் கொள்வேன்! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களை அளியுங்கள்! மீண்டும் நன்றி!

      நீக்கு
  3. நான்காம் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று
    ஒற்றை வரியில் கருத்திட்ட பின்
    நானும் நழுவ இயலாது ஐயா!
    வலைப்பூ நடாத்துவது
    இலகுவானதாக இருக்கலாம் - அதனை
    பேணுவதென்பது இலகுவானதல்ல!
    எழுதுவது என்பது
    இலகுவானதாக இருக்கலாம் - அதனை
    வாசகர் விரும்பும் வகையில்
    எழுதுவது இலகுவானதல்ல!
    வெளியிடுவது என்பது
    இலகுவானதாக இருக்கலாம் - அதனை
    வாசகர் கண்ணிற்கு எட்ட
    முயலுவது இலகுவானதல்ல!
    மொத்தத்தில இலகுவானது என்று
    சொல்வதெல்லாம் - ஈற்றில
    எத்தனையோ தடைகளைக் கடந்த பின்னரே
    வெற்றிகளைத் தந்திருக்கிறது!
    தங்கள் தமிழ் பற்று
    தங்கள் விடாமுயற்சி
    தங்கள் ஆளுமை ஆற்றல்
    தங்கள் பதிவர்களுடன் உறவைப் பேணும் சிறப்பு
    தங்கள் வாசகர் விருப்பறிந்து வெளியிடும் ஆற்றல்
    என்றவாறு நீளும்
    தங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக
    நான்காம் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிருகிறேன்!
    தங்கள் பயணம் தொடர
    எனது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா! தங்கள் விரிவான, கருத்தாழ்ந்த வாழ்த்துக்கு என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

      நீங்கள் கூறுவது போல் இத்தனை தகுதிகள் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் வாக்குப் பலிக்கும் வகையில் கண்டிப்பாக நான் நடந்து கொள்வேன் என உறுதியளிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி! மீண்டும் நனிநன்றி!

      நீக்கு
  4. மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே தொடரட்டும் தங்களது தமிழ் வீச்சு.

    என்னையும் குறிப்பிட்டது கண்டு விழிகள் கலங்கின...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மி்க்க நன்றி நண்பரே! உங்கள் வாழ்த்துக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி! என்றும் உங்களுடன்...

      உங்கள்
      இ.பு.ஞானப்பிரகாசன்

      நீக்கு
  5. நான்கு ஆண்டுகள்.... மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    தங்களின் எழுத்துப் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! வலைப்பூவின் ஊட்டத்தில் (feed) ஏற்பட்ட சிக்கல் காரணமாக உங்களைப் போல் பலருக்கும் இந்தப் பதிவைக் கொண்டு சேர்க்க இயலவில்லை. அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்! இத்தனை நாள் கழித்து உங்கள் பார்வைக்கு வந்தும் தேடி வந்து வாழ்த்திய உங்கள் அன்பினுக்கு நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்