ரசனை! – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்!
நினைத்துப் பார் மச்சி! ஆதி காலத்தில் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு இருந்தது? பிற உயிரினங்களைப் போலத்தான் மனிதனும் உண்டான், உறங்கினான், இனத்தைப் பெருக்கினான், பின்னர் இறந்து போனான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு மனிதன் மேற்கொண்ட முதல் செயல் ஓவியப் பதிவு!
கற்கால மனிதர்கள் குகைளிலும், பாறைகளிலும் வரைந்து வைத்திருக்கும் கீறல் ஓவியங்கள்தான் மனித இனத்தின் ஆகப்பெரும் ஆவணங்களாக, வரலாற்றுக் கருவூலங்களாக (treasure) இன்றும் போற்றப்படுகின்றன. மற்ற விலங்குகளைப் போல் ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்றில்லாமல் தான் பார்த்ததை வரைந்து வைக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் எப்பொழுது ரசனை உணர்வு ஊற்றெடுத்ததோ அப்பொழுதுதான் முதன்முறையாக மனிதர்கள் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டார்கள்; முன்னேறத் தொடங்கினார்கள்.
ஆக, நாகரிகத்தை நோக்கி மனித இனம் எடுத்து வைத்த முதல் காலடியே ரசனை எனும் புள்ளியில்தான் தொடங்கியது என்றால் அது மிகையாகாது!
கற்காலத்தில் மட்டுமில்லை, தற்காலத்திலும் மனித வாழ்வை வடிவமைப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது! எப்படி?... கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!




















