.

வெள்ளி, ஜனவரி 23, 2015

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மேற்கத்திய பண்பாடா?



Uniformity between Indus civilization bull and today's Tamilnadu bull! - A proof for the ancientry of bull taming!
ரலாறு, பண்பாடு போன்றவை பற்றியெல்லாம் நாட்டில் யார்தான் பேசுவது என வர வர வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. அதுவும் தமிழர்களுடையவை என வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். காரணம், போயும் போயும் தமிழர்கள்தானே! என்ன செய்துவிட முடியும்? அட, ஒன்றரை லட்சம் பேர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுதே ஒன்றும் கிழிக்க முடியாதவர்கள்தானே?

அந்த வகையில், தமிழர் பண்பாட்டு அடையாளம் ஒன்றைப் பற்றி அண்மையில் திருவாய் மலர்ந்திருப்பவர், தமிழினத்தை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் குடும்பத்தைச் சேர்ந்தவரான மேனகா காந்தி அவர்கள்!

“ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ளாது” என்று இவர் பேசியிருப்பது தங்கள் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்துவிட்டார்களே என ஏற்கெனவே வெந்து போயிருக்கும் தமிழ் நெஞ்சங்களில் வேண்டுமென்றே வேல் பாய்ச்சும் வேலை!

நேற்று வரை விலங்கு நல ஆர்வலராக மட்டுமே அறியப்பட்ட மேனகா காந்தி எப்பொழுது முதல் வரலாற்று ஆசிரியரானார்? இவர் கூறுவது எந்த அளவுக்கு உண்மை? இதோ, சில வரிகளில்...

“பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் 'ஏறு தழுவல்' நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து கி.மு 2000 ஆண்டு அளவிலேயே 'ஏறு தழுவல்' வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.”

- இஃது ‘ஏறுதழுவல்’ எனும் தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையின் பகுதி. மேற்கண்ட கருத்துக்கான சான்றுகளும் அந்தக் கட்டுரையின் அடியில் காட்டப்பட்டுள்ளன.
இதே கட்டுரையில் அடுத்து, சங்க காலத்திலேயே ‘ஏறு தழுவல்’ இருந்திருக்கிறது என்பதற்கான சான்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

Inscription of a man taming a bull! - In the museum of Salem district, Tamilnadu - Another proof for the ancientry of bull taming and Tamils!“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்” எனும் அந்த வரியின் பொருள், “கொல்ல வரும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனைத் தமிழ்ப் பெண் மறுபிறப்பில் கூட மணக்க விரும்ப மாட்டாள்” என்பது. சிந்துவெளி நாகரிகம் மட்டுமில்லை, சங்க காலம் என்பதும் கிறித்து பிறப்பதற்கு முன்புதான் என்பது இங்கு நாம் உணர வேண்டியது. (சான்று: Tamil classical period - சங்க காலம் பற்றிய ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை).

இவை இரண்டு மட்டுமல்ல, ‘ஏறு தழுவல்’ தமிழர் பண்பாடுதான் என்பதற்கு இன்னும் இன்னும் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.

A player taming a bull! - Alanganallur, 2011
ஆக, கிறித்து பிறப்பதற்கு முன்பே - இன்னும் சொல்லப் போனால், மேலை நாடுகளில் நாகரிகம் வளர்வதற்கு முன்பே – இங்கு தமிழர்களால் ஆடப்பட்டு வந்த ஒரு விளையாட்டு எப்படி மேற்கத்திய பண்பாடு ஆகும்? ஊடகங்கள் தன் முன்னால் ஒலிவாங்கியை (mic) நீட்டிக் காத்திருக்கும் மட்டத்தில் இருக்கிறோம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவதா?

ஏறு தழுவல் பற்றி மட்டுமில்லை, சங்க காலம் பற்றியும், தமிழர்களின் இன்ன பிற விழுமியங்கள் பற்றியும் யார் வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய வகையில் விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்திலேயே நிறையக் கட்டுரைகள் உள்ளன. இவற்றையெல்லாம் மேனகா காந்தி பார்த்தது கூடக் கிடையாதா?...

பல ஆண்டுகளாகத் தான் வாழ்ந்து வருகிற பகுதியில் (புது தில்லி) உள்ள வரலாற்று அருங்காட்சியகத்தில் இருக்கும் வரலாற்றுச் சின்னத்தைக் கூட மேனகா காந்தி பார்த்ததில்லையா?...

ஆம் எனில், அப்படி மேலெழுந்தவாரியாகக் கூட அறியாமல் (அல்லது அறிந்தே), ஓர் இனத்தின் பழம்பெரும் அடையாளம் ஒன்றினைப் பற்றித் தவறுதலாக, சிறுமைப்படுத்தும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் – அதுவும் ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசலாமா? அதிலும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற கட்சியின் நிலைப்பாடே அதுதான் எனச் சொல்லலாமா?

“சரி, ஏதோ தெரியாமல் பேசிவிட்டார். அவர் என்ன தமிழரா? அல்லது, தமிழ்நாட்டு மக்களுடனோ தமிழ்நாட்டு அரசியல் புள்ளிகளுடனோ நெருக்கமான தொடர்பில் உள்ளவரா, இவை தெரிந்திருக்க? விடுங்களேன்” எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், அது தவறு!

விலங்கு நலப் போராளியாகப் பல ஆண்டுகளாகக் களத்திலிருப்பவர் மேனகா காந்தி. அப்படிப்பட்டவருக்கு, விலங்குகளுக்கு ஊறு விளைவிக்கும் விளையாட்டு எனப் பல ஆண்டுகளாகத் தவறாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் தமிழர்கள் தரப்பில் எடுத்து வைக்கப்பட்டு வரும் இந்த முதன்மையான கருத்துப் பற்றி – அதாவது, இது தங்கள் பல்லாண்டு காலப் பாரம்பரிய விளையாட்டு என்பதால் தடை செய்யக்கூடாது என வலியுறுத்தப்படுவது பற்றித் தெரியாதா?

ஒவ்வொரு முறை இப்படித் தடை போடப்படும்பொழுதும் தமிழ்நாட்டு அரசு தம் அறிக்கைகளிலும் நடுவணரசுக்கான கடிதங்களிலும் தமிழர் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று என இதைக் குறிப்பிட்டுத் தடை விலக்குக் கோருவது இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருப்பவருக்குத் தெரியாது என்றால் அது நம்பக்கூடியதா?

ஆக, வட இந்தியப் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு, வட இந்திய வரலாறுதான் இந்திய வரலாறு, உணவு உடை நாகரிகம் பழக்க வழக்கங்கள் என எல்லா வகைகளிலும் வட இந்தியர்களுடைவைதான் ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளங்கள் என மீண்டும் மீண்டும் நிறுவி வரும் இந்திய அரசியலாளர்களுடைய போக்கின் ஒரு நீட்சியாகத்தானே இது தென்படுகிறது? அத்தகைய மனப்பான்மையிலிருந்து எழும் சொற்களாகத்தானே இந்தக் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது?

ஒருவேளை, மேனகா காந்தி அறியாமல், தெரியாமல் இப்படிப் பேசியதாகவே இருந்தாலும், அப்படியும் நமக்கு இது தொடர்பாக வேறு சில கேள்விகள் எழுகின்றன தவிர்க்க முடியாமல்.

இதே போல, இந்தியாவின் வேறு எந்தப் பண்பாட்டைப் பற்றியாவது இப்படி ஒரு தெரியாத்தனமான கருத்தை, வாய்க்கு வந்தபடி அவரால் உதிர்க்க முடியுமா?

ஏறு தழுவலால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவதாக இவர் கூறுவதை உண்மை என்பதாகவே வைத்துக் கொண்டாலும், இந்த ஒரு விளையாட்டில் மட்டும்தான் இது நடக்கிறதா? இஃது ஒன்றைத் தவிர, இந்தியாவின் மற்ற பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்துமே யாருக்கும் எதற்கும் தீங்கு நேராத வகையில்தான் நடத்தப்படுகின்றனவா?

அப்படி இல்லை எனில், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழர் பாரம்பரிய விளையாட்டைத் தடை செய்ய மட்டும் இவ்வளவு ஆர்வம் எதற்காக? தமிழ் மக்கள் மீது அந்த அளவுக்கா அக்கறை பொங்கி வழிகிறது உங்களுக்கு?

இதே போல, ஏறு தழுவல் மேலைநாட்டுப் பண்பாடு என்ற இவருடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க () கூற்றையும் ஒரு பேச்சுக்காக உண்மை எனவே ஒப்புக் கொண்டாலும், இந்திய விளையாட்டுக்களிலேயே இஃது ஒன்றுதான் மேலைநாட்டுப் பாரம்பரியமா? குதிரைப் பந்தயம், மகிழுந்துப் (car) பந்தயம், ஈருருளிப் (bike) பந்தயம் முதலியவையெல்லாம் என்ன, பகவத் கீதையில் பரிந்துரைக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்களா?

இப்படியெல்லாம் சிந்திக்கப் போனால், நமக்குக் கடைசியில், ‘சின்ன கவுண்டர்’ படத்தில் கவுண்டமணி அவர்கள் சொல்லும் ஒரு துணுக்குதான் நினைவுக்கு வருகிறது. இதோ, நையாண்டிப் படமாக (meme) அஃது உங்கள் பார்வைக்கு! 
Maneka Gandhi and Jallikkattu! - A meme!


(நான் கீற்று இதழில் எழுதியது.)
❀ ❀ ❀ ❀ ❀


படங்கள்: நன்றி தமிழ் போட்டோ கமெண்ட்டு, யூடியூபு.

தமிழர்களின் பழம்பெரும் விளையாட்டுப் பற்றிய தவறான கருத்தைத் தவிடுபொடியாக்கும் இந்த முயற்சிக்கு, கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்குவதன் மூலம் நீங்களும் கைகொடுக்கலாமே! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், தளத்தின் அடிப்பகுதியில் உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

18 கருத்துகள்:

  1. த ம 1
    அவசர வெளியூர் பயணம் அய்யா!
    திங்களன்று கருத்திடுகிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா! அப்படியே ஆகட்டும் ஐயா! காத்திருப்பேன் மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும்.

      நீக்கு
  2. படத்தில் உள்ள கோமாளி நடிகர்கள் சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. வடக்கே உள்ளவர்களுக்கு, தென்னக மாநிலங்கள் எல்லாமே மதராசிதான். அவர் தமிழரானாலும், ஆந்திரக்காரர் ஆனாலும், கர்நாடகத்துக்காரர் ஆனாலும், கேரளத்துக்காரர் ஆனாலும்.....அவர்களிடம் ஒன்று கேட்டுப் பாருங்கள் தென்னகத்துத் மொழிகள் யாவை என்று அரசியல்வாதிகளை அல்ல மக்களை...யாருக்கும் எதுவும் தெரியாது தென்னகத்தைப் பற்றி.. நமக்கு வடக்கு பாகங்களைப் பற்றி உள்ள அறிவு கூட அவர்களுக்குத் தெரியாது. நாம்தான் விழுந்து விழுந்து தேர்வுக்காக வட இந்திய மாநிலங்களைப் பற்றியும் அங்கு ஆண்டவர்களைப் பற்றியும் படிப்பது. அப்புறம் அல்லவா இந்த வீர விளையாட்டைப் பற்றி. நாம் சிந்துசமவெளி நாகரிகம் என்றுதான் ஆரம்பிக்கின்றோம் வரலாற்றை. நமக்கு காஷ்மீரில் என்ன நடக்கின்றது என்பது தெரியும். ஆனால் அவர்கள் தமிழ்நாட்டு மன்னர்கள் எவரேனும் பற்றி தெரிந்திருப்பார்களா இல்லவே இல்லை..அதே போன்று இங்கு என்ன நடந்தது நடக்கின்றது என்பது பற்றியும் வரலாற்றுப்பாடங்களில் குறிப்பிடப்படுவது இல்லையே! அப்படியிருக்க மேனகா காந்திக்குத் தமிழ் நாட்டைப் பற்றி என்ன தெரிந்திருக்கும்? இந்த பாரம்பரியத்தைப் பற்றி? விலங்குகளின்/மாட்டின் கோணத்தில் சொல்லியிருந்தால் சரி எனலாம். ஆனால் நம் பண்பாடு தெரியாதவர்கள் அதைப் பற்றிப் பேசுவதில் எந்த நியாயமும் இல்லை...

    நல்ல பதிவு! நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்வுமிகு கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா / அம்மணி!

      மிகச் சரியாகச் சொன்னீர்கள்! வட மாநில மக்களுக்கு நம்மைப் பற்றி ஏதும் தெரிவதில்லைதான். ஆனால், நாட்டை ஆளும் இடத்தில் இருப்பவர்கள் அப்படி இருக்கக்கூடாது! அப்படியே தெரியாமல் இருந்தாலும் இப்படி வாய்க்கு வந்தபடி கருத்துப் பேசக்கூடாது!

      ஏறு தழுவல் தமிழ்நாட்டு விளையாட்டு என்பதைச் சொல்ல வந்தவன், அதைச் சிந்துவெளி நாகரிகத்திலிருந்து தொடங்கக் காரணங்கள் இரண்டு. ஒன்று, எடுத்த எடுப்பிலேயே படிப்பவர்களை வியப்புக்குள்ளாக்கிக் கட்டுரையை முழுமையாகப் படிக்க வைக்கத் தூண்ட வேண்டும் என்பதற்காக. அதற்கு, நம்முடைய பழைய இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதாகச் சொன்னாலெல்லாம் வேலைக்காகாது. இது சிந்துவெளி நாகரிகத்திலேயே சொல்லப்பட்டிருப்பதை முதல் அடியாக எடுத்து வைத்தால், "அவ்வளவு பழையதா இது" எனப் படிப்பவர் நிமிர்ந்து உட்காருவார். இரண்டாவது, சிந்துவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகம்தான் என அண்மைக்காலமாகப் பல ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். முழுமையாக அது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால், பலரும் பல சான்றுகளை முன்வைத்து இதைக் கூறி வருகிறார்கள். ஆகவே, தமிழர் விளையாட்டான ஏறு தழுவல் சிந்துவெளியிலும் விளையாடப்பட்டிருப்பது அந்தக் கூற்றுக்கு மேலும் சிறிது வலுச் சேர்ப்பதாக அமைவதால், இந்தச் சாக்கில் அதையும் பதிவு செய்ய விரும்பியே அங்கிருந்து தொடங்கினேன்.

      மாட்டின் கோணத்தில் சொல்லியிருந்தால் வேண்டுமானால் அதைச் சரி என எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படிப் பார்த்தால் கூட அது சரி என்று என்னால் ஏற்க முடியவில்லை. மாட்டின் கோணத்திலிருந்து பேச இவர் யார்? அதைச் சொல்ல வேண்டியது மாடுதானே? தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூறத் தெரிந்த மனிதர்களையே புரிந்து கொள்ளாதவர்கள் வாயில்லா உயிரினத்தைப் புரிந்து கொண்டு, அதற்காகப் பேச இயலுமா என்ன? :-P

      நீக்கு
    2. நம்முடைய பழைய இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதாகச் சொன்னாலெல்லாம் வேலைக்காகாது. இது சிந்துவெளி நாகரிகத்திலேயே சொல்லப்பட்டிருப்பதை முதல் அடியாக எடுத்து வைத்தால், "அவ்வளவு பழையதா இது" எனப் படிப்பவர் நிமிர்ந்து உட்காருவார். இரண்டாவது, சிந்துவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகம்தான் என அண்மைக்காலமாகப் பல ஆய்வாளர்கள் கூறி வருகிறார்கள். //

      ம்ம்ம் அறிந்தோம் ஆனால் அது இன்னும் ஆதாரங்களுடன் வெளிவராததால் அதைப் பற்றிப் பேச முடியவில்லை. அதுவும் சரிதான் இப்படி ஆரம்பித்தால் வாசிப்பவர் நிமிர்ந்து உட்கார்ந்து வாசிப்பார் என்றால் மனதில் கொள்ள வேண்டியதே!

      அப்படிப் பார்த்தால் கூட அது சரி என்று என்னால் ஏற்க முடியவில்லை. மாட்டின் கோணத்திலிருந்து பேச இவர் யார்? அதைச் சொல்ல வேண்டியது மாடுதானே? தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூறத் தெரிந்த மனிதர்களையே புரிந்து கொள்ளாதவர்கள் வாயில்லா உயிரினத்தைப் புரிந்து கொண்டு, அதற்காகப் பேச இயலுமா என்ன? :-P//

      ஹஹஹ் அதுவும் சரிதான்!! நண்பரே! விலங்குகள் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டால்...பார்க்கப் போனால் நாங்கள் ஒரு பதிவு இப்படி விலங்குகள் பேசுவதாக ஒன்று எழுதி பாதியில் இருக்கின்றது.....ம்ம்ம் பார்ப்போம் முடித்து வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று..அஹ்ஹ் உங்கள் கருத்து புரிந்தது.

      நீக்கு
    3. வெகுநாள் கழித்தும் இதை நினைவு வைத்துக்கொண்டு மறுகருத்திட்டதற்கு மிக்க நன்றி ஐயா, அம்மணி!

      விலங்குகள் பேசும் பதிவா? நன்றாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட கற்பனைகளெல்லாம் சிறுவர் இதழ்களோடு நின்று விட்டன. பதிவுலகத்துக்கு இதைக் கொண்டு வரும் முயற்சியா? நல்லது ஐயா, அம்மணி! ஆவலோடு காத்திருக்கிறோம்!

      நீக்கு
  4. அய்யா வணக்கம்.
    அவசர வேலை காரணமாக உடனடியாகக் கருத்திடமுடியவில்லை. பின்னூட்டக் கருத்தின் நீட்சி பற்றிய அச்சமும் இதற்குக் காரணம்.
    //ஜல்லிக்கட்டு என்பது மேற்கத்திய பண்பாடு. அதில் மாடுகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள்.//
    என்னும் அம்மையாரின் கருத்தில், அது மேற்கத்திய பண்பாடன்று என்பதை நீங்கள் எண்பித்துவிட்டீர்கள்.
    அடுத்த கருத்தில் ஒருபாதியை ஏற்கிறேன். அதில் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள்.
    மாடுகள் கொல்லப்படுகின்றன என்பதை ஏற்பதற்கில்லை.
    ஏனெனில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நானறிந்தவரை அதற்குச் சான்றில்லை.
    நடப்பில் ஏறு தழுவுதலின் போது மாடுகள் கொல்லப்பட்டன எனும் செய்தியை நான் கேள்விப்பட்டதில்லை.
    ஆனால் தமிழ்க்குடியின் தொன்மை நிறுவிடச் சான்றாய் அமையும் ஏறு தழுவுதல் என்னும் விளையாட்டின் மரபை நாம் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற அய்யப்பாடு எனக்கு இன்னும் இருக்கிறது.
    தமிழ் இலக்கியப் வாசிப்பும் புரிதலும் இதனை மனங்கவர் பெண்ணை அடைதற்கு வழிமுறையாகவும், ஏனையோர்க்கு வீர விளையாட்டாகவும் மட்டுமே பதிவுசெய்து போய் இருக்கின்றன. இங்கு நாம் நினைவிற் கொள்ள வேண்டியது பழம்மரபுகள் அனைத்தையும் இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்திருப்பதில்லை. தொல்குடியின் தொடர்ச்சியாய் உருமாறிப்போன பலவற்றையும் கலை என்ற பெயரில் கூத்தென்ற பெயரில், விளையாட்டென்ற பெயரில் நமது அவை தம்முள் பொதிந்து வைத்திருக்கின்றன. அவை படைக்கப்பட்ட போதும் பயிலப்பட்ட போதும் அவற்றின் ஆதிகாரணம் இன்னதென அப்பழந்தமிழர் அறிந்திருந்தனரா என்று அறுதியிட்டுக் கூறவியலாது. ஆனால் நமக்கிருக்கும் இன்றைய அறிவு இப்பழந்தமிழ்க்கருவூலங்களில் பொதிந்து கிடக்கும் உள்ளர்த்தங்களை, ஆதி மனித எச்சங்களை, பண்பாடுறத்துடித்த சமூகத்தின் வேர்களை வெளிக்கொணர்வதாய் அமைதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன்.
    மனிதன் நாகரிகப் படிநிலைகளில் நுழைந்தது புதிய கண்டுபிடிப்புகளினாலும், இயற்கையில் தான் பணியவேண்டுவனவற்றிற்குப் பணிந்தும், தனக்குப் பணிவனவற்றைப் பணிவித்தும் நிகழ்த்தியதாகக் கொண்டால், அத்தொல்குடி,காடுகளில் அலைந்த மிருகங்களை வேட்டையாடியது ஒரு புறம், பொன் முட்டையிடும் வாத்தாகத் தாம் கண்ட ஆவினங்களைப் பணிவித்தது மறுபுறம் என்றிருக்க வேண்டும். ஆனால் அம்முயற்சி அத்துணை இலகுவாய் அமைந்திருக்காது என்பது திண்ணம்.
    நம் இலக்கியங்கள் களிறினும் வலிமை பொருந்திய காளைகளைக் காட்டுகின்றன. அவற்றை அடக்கும் முயற்சியில் உயிர்நீத்த வீரர்களைக் காட்டுகின்றன.
    தொல்பழங்காலத்தில், காடு கரை, வீடு என்பனவெல்லாம் ஒருவன் கொண்ட செல்வத்தின் அடையாளங்கள் அல்ல. ஒருவன் கொண்ட செல்வம் என்பது, அவனிடம் இருக்கும் ஆநிரைகள்தான்.
    அவற்றைக் காடுகளில் உயிரைப் பணயம் வைத்து அவன் பிடித்துவர வேண்டி இருந்தது. பழக்கப்படுத்தி அவனது பட்டியில் சேர்க்க வேண்டி இருந்தது.
    மாடுதான் அவனது செல்வம்.
    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
    மாடல்ல மற்றை யவை
    என்னும் இடத்தில் செல்வம் என்பதற்கு மாடு என்றே வள்ளுவன் ஆள்கிறான்.
    மாடுகள் கோ வெனப்பட்டதும் கோக்களை அதிகம் உடையவன் பின்பு கோ எனப்பட்டதும் அவன் வசிப்பிடம் கோயில் எனப்பட்டதும் இவ்வரலாற்றின் தொடர்ச்சியாய் இருத்தல் கூடும்.
    அக்காலத்தில் போர் என்பது ஒருவனின் செல்வங்களான ஆநிரைகளைக் கொள்ளையடித்துப் போதல்தான்
    வெட்சி நிரை கவர்தல்
    அதை மீட்க இழந்தவனின் போராட்டம் கரந்தை. பிறப் புறத்திணைகள் யாவும் தொடர்வது இதன் காரணம் பற்றியே!
    தன்பெண்ணைக் காக்கத் தேவையான செல்வத்தை ஈட்ட வேண்டும் எனில் செல்வம் எனப்பட்ட மாடுகளை அடக்கிக் கொணரும் வீரம் அவனிடம் இருக்க வேண்டும். காடுகளில் அலைந்த அவற்றை அடக்கிக் கொணர வேண்டும். ஏறு தழுவுவோனுக்கு முலைக்கூலி பெறாமல் பெண் கொடுப்பதையும் நம் இலக்கியங்கள் பதிந்திருக்கின்றன.
    நாளடைவில்,
    வளர்ப்பு மாடுகள் பல்கிப் பெருகிக் காட்டுமாடுகளைப் பிடித்துப் பழக்குந் தேவை குறைந்த நாளில், அப்பயிற்சியை மரபை ஒரு எச்சமாய், விட்டுவிடாமல் தொடர நினைந்த தமிழர்கள் இதை விளையாட்டு வடிவமாகக் கொண்டார்கள் என நினைக்கிறேன். பல கூத்துகளும் கூட இது போன்ற தொல்குடியின் திருத்தப்பட்ட வடிவமாகத் தொடர்ந்தவையாகலாம்.
    இவை என் புரிதல்தான்.
    இதற்கு ஆதாரங்கள் எதுவும் தற்போது என்னிடத்தில் இல்லை.
    மொத்தத்தில் தங்கள் பதிவில் நான் உணர்ந்தது,
    “ எழுதப்படாத காலத்தின் வரலாறு “
    இத்தலைப்பில் பதிவொன்றை இடும் அளவிற்குச் சிந்திக்க வைத்துவிட்டீர்கள் நன்றி.
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா!... ஆகா!... ஆகா!... என்னவொரு கருத்து ஐயா!! இவற்றுள் பலவும் நானறியாதவை. இப்பொழுது நீங்கள் கூறிய பிறகுதான் புரிகிறது, நான் மேனகா காந்தியின் கருத்தில் முன்பாதியை மட்டும்தான் உடைத்திருக்கிறேன் என்பது! வருந்துகிறேன்! ஆனால், தங்களுக்கு இப்படியொரு பதிவை எழுதச் சிறுவன் என் பதிவு ஒரு தூண்டுதலாய் அமைந்திருக்குமெனில், அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சி! அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. அய்யோ! மூணு நாள் ஆச்சா!!! எப்படி நான் கவனிக்காமல் விட்டேன்:(( சகா ! மன்னிச்சூ:(((

    ஏன் எல்லாத்தையும் ஒரு பக்கமா கொண்டுபோய்டீங்க??? திடீர்னு புது வீட்டுக்கு வந்ததது போல இருந்துச்சு!!!

    பதிவு வழக்கம் போல ஆழமாய், தீர்க்கமாய், கொஞ்சம் கோபமாய் இருந்தது:) மீம்ஸ் சூப்பர்! படிக்கும் போது எனக்கு தோன்றிய கேள்வி எல்லாம் நீங்களும் பதிவிலேயே கேட்டுவிட்டீர்கள். ஒன்னு மட்டும் மிஸ்ஸிங்!! டாஸ்மாக்கை விடவா ஏறு தழுவுதல் நிறைய மரணங்கள் ஏற்படுத்துகிறது???இல்லை இவர்கள் ஏற்படுத்தும் மதக்கலவரங்களை விட கொடியதா ஜல்லிக்கட்டு??


    ** அட, ஒன்றரை லட்சம் பேர் கண்ணெதிரே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுதே ஒன்றும் கிழிக்க முடியாதவர்கள்தானே*** குற்ற உணர்ச்சியா இருக்கு சகா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அய்யோ! மூணு நாள் ஆச்சா!!! எப்படி நான் கவனிக்காமல் விட்டேன்:(( சகா ! மன்னிச்சூ:((( // - :-D :-D

      //ஏன் எல்லாத்தையும் ஒரு பக்கமா கொண்டுபோய்டீங்க??? திடீர்னு புது வீட்டுக்கு வந்ததது போல இருந்துச்சு!!!// - ஏன், நன்றாக இல்லையா? வேண்டுமானால் சொல்லுங்கள் பழையபடி மாற்றிவிடலாம். படிப்பவர்கள் வசதிக்குத்தான் அவையெல்லாம். இந்த விதயத்தைப் பொறுத்த வரை, உங்கள் விருப்பமே என் விருப்பமும்.

      //டாஸ்மாக்கை விடவா ஏறு தழுவுதல் நிறைய மரணங்கள் ஏற்படுத்துகிறது???இல்லை இவர்கள் ஏற்படுத்தும் மதக்கலவரங்களை விட கொடியதா ஜல்லிக்கட்டு??// - அப்படிப் போடுங்கள்! பெண்ணாகிய நீங்கள் இதை ஆதரிப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெரும்பாலும், பெண்கள் ஏறுதழுவலை ஆதரிப்பதில்லை நான் பார்த்த வரை.

      பாராட்டுக்களுக்கு நன்றி! அந்த நையாண்டிப் படத்தை யாரும் இதுவரை தனிப்படப் பாராட்டவில்லை. என்னுடைய அந்த முதல் முயற்சிக்கு முதல் பாராட்டே உங்களிடமிருந்துதான். அதற்காகத் தனி நன்றி!

      இனப்படுகொலையை நினைத்துக் குற்றவுணர்ச்சி தேவையில்லை. காரணம், மக்களாகிய நாம் நம்மால் இயன்ற வரை போராடி விட்டோம். இதற்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு நாம் அந்த நேரம் எல்லா முயற்சிகளையும் செய்துவிட்டோம்; பலனில்லை. ஆனால், அந்த நேரத்தில் கூட அதையொட்டி நடந்த தேர்தலில் கருணாநிதி கூறியபடி காங்கிரசுக்கே வாக்களித்தார்களே பெரும்பான்மைத் தமிழ்நாட்டுத் தற்குறிகள், அவர்கள்தாம் அந்த இனப்படுகொலையின் அந்த கோர முடிவுக்கே காரணம். அவர்கள்தாம் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும். நாமில்லை சகா! வருந்தாதீர்கள்!

      நீக்கு
    2. **பெரும்பாலும், பெண்கள் ஏறுதழுவலை ஆதரிப்பதில்லை நான் பார்த்த வரை.** ஹா,,,ஹா...ஹா...என் சித்தப்பா ஒரு ஜல்லிக்கட்டு பிரியர். எங்கள் தோட்டத்தில் இப்போது ஒரு அழகான ஜல்லிக்கட்டு காளை உண்டு. சின்ன வயதில் என்னை என் சித்தப்பா தான் வளர்த்த ஒரு காளையின் அருகே அழைத்துசென்று அதன் முகத்தை நீவி, கழுத்தை தொட சொன்னார் . பயந்தபடியே அருகே போனதும், ஆனால் அந்த காளை சாதுவாய், என்னிடம் நட்புபாராட்டியதும் இப்போ நடந்தது போல இருக்கு:)

      **அந்த நையாண்டிப் படத்தை யாரும் இதுவரை தனிப்படப் பாராட்டவில்லை. என்னுடைய அந்த முதல் முயற்சிக்கு முதல் பாராட்டே உங்களிடமிருந்துதான்.** வாவ்! அப்படியா!!! எனக்கு அந்த டயலாக் ரொம்ப பிடிக்கும்.:)
      **தமிழ்நாட்டுத் தற்குறிகள், அவர்கள்தாம் அந்த இனப்படுகொலையின் அந்த கோர முடிவுக்கே காரணம். அவர்கள்தாம் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டும். நாமில்லை சகா! வருந்தாதீர்கள்** நல்லவேளை நான் இல்லை. என்றாலும் உங்கள் சொற்கள் தரும் ஆறுதலை இனி அடிக்கடி நினைத்துக்கொள்ள வேண்டியதுதான். நன்றி சகா:)

      நீக்கு
    3. மஞ்சு விரட்டுக் காளையுடனான உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி! தளத்தின் வடிவமைப்புப் பற்றிய உங்கள் கருத்து பயனுள்ளது. மனதில் கொள்கிறேன். அதற்காக மிகவும் நன்றி!

      நீக்கு
    4. அட ! இன்னிக்குப் பாக்கும் போதுதான் அந்தப் படமே வந்துச்சுங்க...அன்னிக்கு அது வரவே இல்லையே!

      நீக்கு
    5. அப்படியா?! தளத்தின் வேகக்குறைவு காரணமாக இருக்கலாம். விரைவில் அதைச் சரி செய்ய முயல்கிறேன். இதைத் தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  6. வணக்கம், வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன், இணைப்பு
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_6.html

    பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்