.

திங்கள், ஏப்ரல் 13, 2015

மச்சி! நீ கேளேன்! - ௫ | ரசனை தரும் வாழ்க்கைத்தரம்!


Taste! - An Essential ingrediant of lifestyle

சனை! – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்!

நினைத்துப் பார் மச்சி! ஆதி காலத்தில் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு இருந்தது? பிற உயிரினங்களைப் போலத்தான் மனிதனும் உண்டான், உறங்கினான், இனத்தைப் பெருக்கினான், பின்னர் இறந்து போனான். மற்ற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டு மனிதன் மேற்கொண்ட முதல் செயல் ஓவியப் பதிவு!

கற்கால மனிதர்கள் குகைளிலும், பாறைகளிலும் வரைந்து வைத்திருக்கும் கீறல் ஓவியங்கள்தான் மனித இனத்தின் ஆகப்பெரும் ஆவணங்களாக, வரலாற்றுக் கருவூலங்களாக (treasure) இன்றும் போற்றப்படுகின்றன. மற்ற விலங்குகளைப் போல் ஏதோ பிறந்தோம், இருந்தோம், இறந்தோம் என்றில்லாமல் தான் பார்த்ததை வரைந்து வைக்கும் அளவுக்கு மனித உள்ளத்தில் எப்பொழுது ரசனை உணர்வு ஊற்றெடுத்ததோ அப்பொழுதுதான் முதன்முறையாக மனிதர்கள் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்டார்கள்; முன்னேறத் தொடங்கினார்கள்.

ஆக, நாகரிகத்தை நோக்கி மனித இனம் எடுத்து வைத்த முதல் காலடியே ரசனை எனும் புள்ளியில்தான் தொடங்கியது என்றால் அது மிகையாகாது!

கற்காலத்தில் மட்டுமில்லை, தற்காலத்திலும் மனித வாழ்வை வடிவமைப்பதில் ரசனை பெரும்பங்கு வகிக்கிறது! எப்படி?... கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்!

ரசனை வளர்ச்சியே அறிவின் வளர்ச்சி

ரசனை என்பது பெரும்பாலான சமயங்களில் அறிவுக்கு இணையானதாகப் பார்க்கப்படுகிறது. திரைப்படத்துறையையே எடுத்துக்கொண்டால் மேட்ரிக்ஸ், லைப் ஆப் பை போன்ற கடினமான கதைக்களங்களைப் படமாக்குவதில் இன்றும் நம் இயக்குநர்களுக்குத் தயக்கம் இருக்கக் காரணம், அவற்றை நம் மக்களால் புரிந்து கொள்ள முடியுமா எனும் ஐயம்தான். இத்தனைக்கும், கடந்த இருபது ஆண்டுகளில் படித்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்படியிருந்தும், வெகுமக்கள் ஊடகமான திரைப்படத்திலேயே அதன் அடுத்த கட்டக் கலைவடிவத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட நாம் இன்னும் முன்னேறவில்லை என்றால், படிப்பு எந்த அளவுக்கு நம் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களில் கூட, மருத்துவம் பொறியியல் போன்ற பெரிய படிப்புகளைப் படித்த பலரே உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களையோ, இலக்கிய நயம் மிகுந்த படைப்புகளையோ புரிந்துகொள்ளத் திணறும்பொழுது, பத்தாவது பன்னிரண்டாவதோடு நின்றுவிட்ட எத்தனையோ பேர் இவற்றை ரசிப்பதோடில்லாமல் விரிவாக விமர்சனமே செய்வதை மிகச் சாதாரணமாகப் பார்க்கிறோம்.

அதற்காக, படித்தவர்களெல்லாரும் முட்டாள்கள், படிக்காதவர்கள்தாம் அறிவாளிகள் எனக் கூறுவதாகப் புரிந்து கொள்ள வேண்டா! எல்லாவற்றுக்கும் பழக்கம்தான் காரணம். வெகு காலமாக நல்ல படங்களையும் கதைகளையும் தொடர்ந்து ரசித்துப் பழகியவர்கள், காலப்போக்கில் சராசரி மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமான கதைக்களங்களையும் ரசிக்கும் அளவு வளர்ந்து விடுகிறார்கள். அவர்களின் புரிந்து கொள்ளும் திறன் அந்த அளவுக்கு மேம்பட்டு விடுகிறது. ரசனை வளர வளர அறிவும் தன்னால் வளரும் என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு.

In 80sஇருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த பல படங்களை இப்பொழுது நம்மால் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. நாடகத்தனமான காட்சியமைப்புகள், தேவையில்லாத விளக்க உரையாடல்கள், யதார்த்தமில்லாத கதைப்போக்கு என அவற்றில் பல குறைகள் நமக்கு இப்பொழுது தென்படுகின்றன. ஆனால், அப்பொழுது பார்க்கும்பொழுது அவை தென்படவில்லையே, ஏன்? காரணம், இடைக்காலத்தில் வந்த திரைப்படங்கள் அந்தளவுக்கு நம் ரசனையை மெருகேற்றி விட்டன. அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் திரைக்கதை, உரையாடல், காட்சியமைப்பு என எல்லா வகைகளிலும் படிப்படியாகத் தரத்தில் உயர்ந்ததால் நம் ரசனையும் அதற்கேற்ப உயர்ந்து விட்டது. அதனால், நமது புரிந்து கொள்ளும் திறனும், அறிவும் அடுத்த கட்டத்தை எட்டி விட்டதால், பழைய படங்களில் அன்று நமக்குப் புலப்படாத பல குறைகள் இன்று நமக்குப் பளிச்செனத் தெரிகின்றன. நமக்கே தெரியாமல் நம் அறிவை இப்படி ஒரு பூ மலர்வது போல மிக மிக மிருதுவாகவும் இயல்பாகவும் வளர்த்தெடுப்பது ரசனை எனும் ஆசிரியரைத் தவிர வேறு யாராலாவது இயலுமா?

எல்லாத் தரப்பு மனிதர்களாலும் ரசிக்கப்படுவது என்பதால்தான் திரைப்படங்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொண்டேனே தவிர, உண்மையில் எல்லாக் கலைவடிங்களுமே ரசனை மூலம் அறிவை வளர்க்கக்கூடியவைதாம்! எழுத்து, இசை, கணிதம், விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அதை ரசிப்பதற்கென்று ஓர் அடிப்படை அறிவு கட்டாயம் தேவை. அந்த ரசனை வளர வளர அதைச் சார்ந்த நம் அறிவும் தானாக வளரவே செய்யும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதனின் உண்மையான அறிவு என்பதே கற்பனைத் திறன்தான் என்கிறார்கள் அறிவியலாளர்கள். ‘அறிவுச் சோதனை’களின்பொழுதும் (I.Q test) மனிதரின் கற்பனைத் திறன்தான் முக்கியமாக அளவிடப்படுகிறது. அப்பேர்ப்பட்ட கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்வதற்குக் கலைவடிவங்களின் மீதான ரசனையை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

ரசனை வளரப் பண்பு வளரும்

சாதாரண பள்ளிச் சிறுவனை அண்ணல் காந்தியடிகளாக மாற்றிய அரிச்சந்திரன் நாடகம் முதல் இந்தியன், அந்நியன் போன்ற இன்றைய தலைமுறையின் விழிப்புணர்வுத் திரைப்படங்கள் வரை எல்லாக் காலக்கட்டங்களிலுமே கலைவடிவங்கள் பண்புநலனில் பெருத்த தாக்கத்தைத் தனிமனித அளவிலும், சமூக அளவிலும் ஏற்படுத்தியே வருகின்றன.

Fine Artsகதை, கவிதை, கட்டுரை, திரைப்படம், சொற்பொழிவு போன்றவை நற்பண்புகளை நேரடியாக வலியுறுத்துகின்றன என்றால், இசை, நடனம், கணிதம், ஓவியம் போன்ற நுண்கலைகள் உளவியல்ரீதியாகச் செயல்பட்டு நம் உள்ளத்தை மறைமுகமாக நெறிப்படுத்துகின்றன. விஷயம் தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்கக்கூடிய தரத்திலான இசை, கலையழகைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதின ஓவியம் (modern art) எனக் கலைகளின் நுட்பமான பரிமாணங்களையே ரசிக்கும் அளவுக்கு நுண்ணறிவும் மென் உணர்வும் கொண்டவர்களால் உடன் வாழும் மனிதர்களையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படி சக மனிதர்களைப் புரிந்து நடக்கும் நேசமுள்ள மனிதர்கள் ஒருபொழுதும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள். பொதுவாகவே, கலாரசனை மிகுந்த உள்ளம் கொண்டவர்கள் பெருந்தன்மையும், குழந்தை உள்ளமும் கொண்டவர்களாக இருப்பது வழக்கம். ஆக, ரசனை வளர வளர நம் பண்பும் வளரும் என்பது உறுதி!

ஒரு மனிதரின் மிகப்பெரிய சொத்தே அவருடைய அறிவும் பண்பும்தாம். இந்த இரண்டின் மூலம்தான் மற்ற எல்லாச் சொத்துக்களையும் உறவுகளையும் நாம் சம்பாதிக்க முடிகிறது. யாராலும் பறித்துக்கொள்ளவோ உரிமை கொண்டாடவோ முடியாத இந்தச் சொத்துக்கள்தாம் ஒரு தனி மனிதரின் இணையற்ற அடையாளங்களாகவும் கருதப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட அறிவு, பண்பு இரண்டையும் வளர்த்தெடுக்கிற, அதுவும் எந்தவிதமான சிரமமோ முயற்சியோ இல்லாமல், நமக்குப் பிடித்த விஷயத்தைத் தொடர்ந்து அனுபவிப்பதன் மூலமாகவே இந்த இரண்டிலும் உச்சத்தைத் தொட வழி வகுக்கிற ரசனை உணர்வை வளர்த்துக் கொள்வதைத் தவிர நமக்கு வேறு என்ன வேலை?

“அட, ரசனையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் கிடைப்பதாகவே இருக்கட்டும். ஆனால், அதை வளர்த்துக் கொள்ளாவிட்டால் பெரிதாகக் கெடுதல் ஏதாவது வந்துவிடப் போகிறதா என்ன” என்று கேட்கிறாயா மச்சி?

அதையும் பகிர்கிறேன்; அடுத்த இதழில்...


--பகிர்வேன்... 

❀ ❀ ❀ ❀ ❀ 

படங்கள்: நன்றி ௧) யுவா தொலைக்காட்சி, ௨.௧) ஏ.வி.எம், ௨.௨) தமிழ் ஜாய், ௨.௩) சுலேகா.காம், ௨.௪) பவித்துளிகள், ௩.௧) அருணன் கபிலன், ௩. (ம) ௩.) பிக்சபே.

(இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை - யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்).

முந்தையவை: 

» மச்சி! நீ கேளேன்! - 4 | இலட்சங்களில் வருமானம் இனி வெறும் கனவுதானா? - பொறியியல்துறை வேலைவாய்ப்பின்மையும் தீர்வும்!

» மச்சி! நீ கேளேன்! - 3 | பூமி கண்ணைக் குத்தும்! - உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்தே ஐந்து நெறிகள்!

» மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!

» மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!

பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் கருத்திட வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! 

பதிவுகள் உடனுக்குடன் மின்னஞ்சலில் வந்து சேர...

முகநூல் வழியே கருத்துரைக்க

8 கருத்துகள்:

 1. //கடந்த இருபது ஆண்டுகளில் படித்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்படியிருந்தும், வெகுமக்கள் ஊடகமான திரைப்படத்திலேயே அதன் அடுத்த கட்டக் கலைவடிவத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கூட நாம் இன்னும் முன்னேறவில்லை என்றால், படிப்பு எந்த அளவுக்கு நம் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்பது குறித்து ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை//

  உண்மையயிலேயே சிந்திக்க வைத்த விடயமே தங்களது அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
  தமிழ் மணம் 2
  எனது தொடர் பதிவுக்கு வருகை தரவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்கும் ஆர்வத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! வாக்குக்கும் நன்றி! தொடர் பதிவா? கண்டிப்பாக வருகிறேன்.

   நீக்கு
 2. அய்யா வணக்கம்.
  ரசனை என்பது வாழ்வில் தேவைப்படுவதுதான்.
  ஆய்தல் என்பதற்கு எல்லாராலும் சட்டென எடுத்துக் காட்டப்படும் தொல்காப்பிய நூற்பா ஒன்றுண்டு,

  “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
  ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் “

  ஆய்தல் என்பது உள்ள ஒன்றின் நுணுக்கத்தைக் காணுதல் என்று பொருள்படுவதாகச் சொல்வார்கள். ( உண்மையில் இந்நூற்பா இப்பொருளில் அமையாவிடின் கூட ) ரசனை என்பது ஒன்றை நுணுகி ஆராய்தல், அறிந்ததைக் கண்டு வியத்தல் அல்லது பழித்தல் இது போன்றது எனத் தோன்றுகின்றது.
  அதற்குப் படித்திருத்தல் என்பதை விட இந்த நுணுக்கமாய்ப் பார்க்கும் மனமே தேவைப்படுகிறது என்று கருதுகிறேன்.

  அது இல்லாவிட்டால் வாழ்வு இல்லையா என்றால் அது இல்லாத உயிரிகள் போல வாழ வேண்டியதுதான்.

  நன்றி.


  த ம கூடுதல் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா! வருகைக்கும் சிறப்பான பாடல் ஒன்றுடனான தங்கள் செம்மையான கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி!

   நீக்கு
 3. ரசனை! – இந்த ஓர் உணர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனித இனம் இன்னும் காடு மலைகளில் வேட்டையாடித்தான் திரிந்து கொண்டிருக்கும்!----உண்மையான வரிகள் அய்யா...த.ம.1

  பதிலளிநீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (87) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (35) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (21) இனம் (44) ஈழம் (43) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கவிஞர் தாமரை (1) கவிதை (17) காங்கிரஸ் (6) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (10) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (2) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (29) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (2) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (1) திரையுலகம் (8) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (10) நிகழ்வுகள் (2) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (5) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (21) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (1) போட்டி (1) போர் (1) போராட்டம் (9) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மணிவண்ணன் (1) மதிப்புரை (3) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (5) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (1) Hindu (1) Karnataka (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்