.

செவ்வாய், நவம்பர் 11, 2014

கலையுலகில் கமலியல்! (Kamalism in Tamil Cinema!) - கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் முழுமையான உரையுடன் (with full script)!


Kamalism in Tamil Cinema! - Kamalhaasan Diamond Jubilee Birthday Documentary!

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் கலைமணம் கமழ்த்தி வரும் உயர்திரு.கமல்ஹாசன் அவர்கள் வைர விழாப் பிறந்தநாள் காணுவதை முன்னிட்டு, நான் துணையாசிரியராகப் பணியாற்றும் யுவா தொலைக்காட்சியின் நிறுவனரும் என் ஆருயிர் நண்பருமான பிரகாஷ் அவர்கள் எங்கள் தொலைக்காட்சி சார்பாக விழியம் ஒன்றை வெளியிட்டு அந்த மாபெரும் கலைஞரைச் சிறப்பிக்க விரும்பினார். அதற்கு நான் எழுதிக் கொடுத்த படைப்பு இதோ உங்கள் கண்முன்! 

கமல்ஹாசன்!
தமிழ்த் திரையுலகம் எனும் அற்புத விளக்கைத்
தன் பொற்கரங்களால் உயிர்ப்பிக்கப் பிறந்த அலாவுதீன்!
தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு உயர்த்திய புகழ் ஏணி!
உலகநாயகன் எனத் தமிழ் மக்கள் கொண்டாடும் கலைஞானி!

இந்திய சினிமாவின் வயதில் பாதி
இவருடைய அனுபவம்!
பேச்சு மூச்சு இரத்தம் சதை என
ஒவ்வோர் அணுவிலும் கலைத்தாயைக் கருச்சுமக்கும்
இந்தத் தமிழ்க்குழந்தையின் பயணம்
ஆறு வயதில் தொடங்கியது!

1960இல் ஆளவந்த அந்தக் குழந்தை நட்சத்திரம், தமிழ்த் திரைவானின் துருவ நட்சத்திரமாய் இன்று அறுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இதோ அவருடைய விசிறிகளின் ஒரு சிறு காணிக்கை!


கமல்!
தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பரமக்குடி வழங்கிய காதல் பரிசு!
என்றைக்கும் தெளியாத இந்த சினிமா பைத்தியம்தான் நடிப்புப் பல்கலைக்கழகத்தின் நிரந்தர குரு! மொழி மீதும் கலை மீதும் மாறாத மையல் கொண்ட காதல் குணா!

பத்து ஆண்டுகள் முன்கூட்டிச் சிந்திக்கும் இந்த ராஜபார்வையாளன், சோதனை முயற்சிகளில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்! தீவிர சினிமாவிலிருந்து வணிக சினிமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சங்கர்லால்!

கதாபாத்திரத்துக்காக
உடம்பையே உருமாற்றும் பழக்கத்தைத்
தொடங்கி வைத்த வித்தைக்காரர்!

அப்புக்காகக் குள்ளமானார்!
நல்லசிவத்துக்காகக் கோரமானார்!
நந்தகுமாரானாய்க் குண்டானார்!
சண்முகியாகப் பெண்ணானார்!
வின்சென்ட் பூவராகனாக வந்தால் இவர் போராளி!
எனக்குள் ஒருவனில் இவரே நேபாளி!
சப்பாணி வெங்கடகிருஷ்ணனும் இவர்தான்!
ஜப்பானில் கல்யாணராமனும் இவர்தான்!

இப்படி
விதவிதமாய் நடிப்பதற்கென்றே
பிறப்பெடுத்த இந்த மகராசன்,
பத்தொன்பது பிலிம்பேர் விருதுகள் பெற்ற
ஒரே நடிகர்!
நான்கு தேசிய விருது வென்ற
மகா நடிகர்!
மூன்று முறை பன்னாட்டு விருது தட்டிய
பெரும் நடிகர்!
பத்மஸ்ரீ
பத்மபூஷண்
எனப் பலவற்றுக்கும்
பெருமை சேர்த்த விருதுநாயகன்!
கனவுப் படைப்பை
கங்காரு போல
மடியிலேயே சுமந்து திரியும் மருதநாயகன்!

எட்டு வயதிலேயே இரட்டை வேடம் போட்ட இவர்,
மூன்று, நான்கு எனப் படிப்படியே உயர்ந்து
தசாவதாரம் எடுத்து நிற்கும்
ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவன்!

நடிப்பு மட்டுமில்லை,
இவர்
கருணாநிதியே வியக்கும் கதாசிரியர்!
கண்ணதாசனாலேயே தட்டிக் கொடுக்கப்பட்ட கவிஞர்!
பாலசுப்பிரமணியத்தையே பிரமிக்க வைத்த பாடகர்!
ஜெயலலிதாவையே ஆட்டி வைத்த நடன இயக்குநர்!
நாகேஷையே வியக்க வைத்த நகைச்சுவை நடிகர்!
எல்லாவற்றுக்கும் மேலாகத்
தன் ஆசான் பாலசந்தரே
எழுந்து நின்று பாராட்டிய திரைப்பட இயக்குநர்!

இப்பேர்ப்பட்ட இந்த
சகலகலா வல்லவன் மட்டும்
நடிக்க வந்திராவிட்டால்
தங்கள் காவியப் படைப்புகளுக்கு
நாயகன் கிடைக்காமல்
பல இயக்குநர் சிகரங்களும் இமயங்களும்
ஊருக்குக் கிளம்பியிருப்பார்கள்!

மொத்தக் கலைத்துறையையும்
கரைத்துக் குடித்த இந்த
முத்தக் கலைஞன் இருந்திராவிட்டால்
தமிழ்த் திரையுலகம்
அடுத்த கட்டத்தை எட்டக்
குறைந்தது இருபதாண்டுகள் தாமதமாயிருக்கும்!

திரைப்படத்துறை எனும் கலைமரத்திலிருந்து
ஒருபோதும் இறங்கத் தெரியாத இந்த வேதாளம்
வெள்ளித்திரைக்கு அள்ளிக் கொடுத்த கொடைகள் ஏராளம்!

பேசும் படம் என்று பேசாமலே நடித்தார்!
கதாநாயகனே இல்லாத மகளிர் மட்டும் அளித்தார்!
காந்திய மணம் வீசும் ஹே ராம் எடுத்தார்!
அதே கைகளால்,
பகுத்தறிவின் பெருமை பேசும் அன்பே சிவமும் கொடுத்தார்!
சாதிகள் வேண்டாமென தேவர் மகனாய் வலியுறுத்தினார்!
மாற்றுத் திறனாளியாகவும் ஈழத் தமிழனாகவும்
பாதிக்கப்பட்டவர்களின் வலி உணர்த்தினார்!

திராவிடக் கருத்துக்களைத் திரைமொழியில் சொல்வதில்
இவர் எம்.ஜி.ஆருக்கு அடுத்த சின்னவர்!
சிவாஜி கணேசனின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கத்
தகுதி படைத்த ஒரே மன்னவர்!
ஜெமினி கணேசன் இருக்கும்பொழுதே
மங்கையர் உளம் கவர்ந்த காதல் இளவரசர்!

அவ்வை சண்முகி, பம்மல் கே.சம்பந்தம் என்று
தன் படங்களின் வாயிலாகவே
தன் முன்னோடிகளின்
பேர் சொல்லும் பிள்ளை!

தனக்கு விடுக்கப்படும்
சவால்கள் அனைத்துக்கும்
தன் படங்கள் மூலமாகவே
பதில் சொல்லும் கிள்ளை!

படவுலகின் மூலம் சொத்துச் சேர்த்த
கலைஞர்களுக்கு நடுவில்
படமெடுப்பதற்காகச் சொத்தையே விற்ற
கலைப் பித்தர்!

உன்னைப் போல் ஒருவன், விருமாண்டி, விஸ்வரூபம் என
இப்படி இவர் சொந்தச் செலவில் வைத்துக்கொண்ட சூனியங்கள்,
கருத்தாழம் மிகுந்த ரசிகர்களுக்காக
இந்த வசூல்ராஜா அளித்த
மானியங்கள்!
கருத்துச் செறிவு பொருட்செலவு
இரண்டிலும்
தமிழ்த் திரையுலகம் இன்று அடைந்திருக்கும் செழுமைக்கு
இவர் அன்றே விதைத்து வைத்த
தானியங்கள்!

அதே நேரம்,
ஒரே ஆண்டில்
ஐந்து வெள்ளி விழாக்கள் கண்ட
வெற்றி விழாக் கதாநாயகன்!

அகில இந்திய ரசிகர் மன்ற மாநாடு நடத்திய
ஒரே மகாநாயகன்!

அனிமேஷன், மார்பிங், கிராபிக்ஸ் எனப்
பல தொழில்நுட்பங்களை
இந்தியத் திரையுலகுக்கு
இழுத்து வந்த
தொழில்நுட்பக் காதலன்!

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக
வெடித்துக் கிளம்பிய
முதல் போராளி பற்றிய படத்துக்கு
எலிசபெத் அரசியின் கையாலேயே
பூசை போட்ட சாகசக்காரர்!

இப்படி
திறமையால் செய்த கலைச் சேவைகள் போதாதென
உடலையே நாட்டுக்காக எழுதி வைத்துவிட்ட மனிதநேயன்!

புகழ்க் கோபுரத்தின்
உச்சியில் இருந்தபொழுதே தன்
ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாய்
மாற்றிய துணிச்சல்காரர்!

இப்படிப் பல விஷயங்களில்
இன்றைய தலைமுறைக்கு
இவர்தான் முன்னோடி!

அடுத்த தலைமுறைக் கலைஞர்கள்
தங்களைச் சரிபார்த்துக் கொள்ள உதவும்
காலக் கண்ணாடி!

இவ்வாறு
இந்த வாழும் வரலாறு
படைத்த சாதனைகள்
எழுத எழுதத் தீராமல் நீளும்!

ஆனாலும்
மகாநதியின் உதட்டு முத்தம்
குருதிப்புனலில் தெறித்த ரத்தம்
ஆங்கிலத்தில் தலைப்பு
சிறுபான்மையர் எதிர்ப்பு
என
அதில் சில பக்கங்களைச்
சர்ச்சைகளும் ஆளும்!
அது ஏனோ
குழந்தைகள் முதல் பெரியவர் வரை
அனைவரும் விரும்பும் இந்தப்
புன்னகை மன்னன்!
பண்பாட்டுப் பாதுகாவலர்களின்
கண்களுக்கு எப்பொழுதுமே
உத்தம வில்லன்!

ஆனாலும்
இவர் “நாட்டை விட்டே போவேன்” என்றதும்
தமிழ்நாடு மிரண்டது!
இவருக்குத் துணையாய்த் திரண்டது!

அந்த அளவுக்குத் தமிழ்க் கலையுலகம்
இவரை மையப்படுத்திச் சுழல்கிறது!
இவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும்
அது மேலும் ஒரு படி நகர்கிறது!


இப்படித்
தன் வாழ்நாள் முழுவதையும்
கலைக்கடவுளுக்கே பாதகாணிக்கையாக்கிவிட்ட
இந்த
நவீன நந்திவர்மன்
நூறாண்டுகள் கடந்தும்
சீர்கொண்டு வாழ வேண்டுமென
நெஞ்சார வாழ்த்துகிறது
பணிவன்புடன் உங்கள்
யுவா தொலைக்காட்சி!


படம், விழியம்:
நன்றி யுவா தொலைக்காட்சி.


❀ ❀ ❀ ❀ ❀

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளைச் சொடுக்கி மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்!  தமிழில் கருத்திட வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

25 கருத்துகள்:

 1. இப்படி
  திறமையால் செய்த கலைச் சேவைகள் போதாதென
  உடலையே நாட்டுக்காக எழுதி வைத்துவிட்ட மனிதருக்கு ஆஸ்கார் கனவு மட்டும் நிறைவேறவில்லையே... ஏன்???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமல் அவர்களின் பெரும்பாலான படங்கள் ஆங்கிலப் படங்களின் தழுவல்கள்தாம். அது கூடக் காரணமாக இருக்கலாம்.

   நீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. வந்தேன் படித்தேன் ரசித்தேன் நண்பரே தங்களது சிந்தனையில் உருவானதை....

  ஆனால் இவர்களால் மக்களுக்கு பிரயோசனம் இல்லை என்பதையும் பதிவு செய்கிறேன்

  இந்தத் தமிழன் இன்னும் சாதனைகள் செய்திட வாழ்த்துகிறேன்
  அன்புடன்
  கில்லர்ஜி
  எமது மதுரை விழா பதிவு காண்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே! ஆனால், இவர்களால் மக்களுக்குப் பயன் இல்லை என்று கூறிவிட்டீர்களே! ஆம், ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால், போகப் போக என் வீட்டுக் குழந்தைகளின் (சித்தி - சித்தப்பா பிள்ளைகள்) நடவடிக்கைகள் என்னுடைய இந்த எண்ணத்தை மாற்றின.

   இந்தக் காலத்தில் பெரும்பாலோர் தம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளில்தாம் சேர்க்கின்றனர். மொழி, படிப்பு, பேச்சு, நடை, உடை, பாவனை என எல்லாவற்றிலும் ஆங்கிலத் தாக்கத்துடனே வளரும் அந்தக் குழந்தைகளுக்குத் தமிழ் மீது பற்று ஏற்பட முதற் காரணமாக இருப்பதே திரைப்படப் பாடல்கள்தாம். அவைதாம் பின்னாளில் அந்த நடிகர்களின் மீதான விருப்பமாக மாறி, அதுவே காலப்போக்கில் திரைப்படத்தின் மீதான ரசனையாக உருப் பெறுகிறது. திரைப்படத்தின் மீதான ரசனைதான் நம் குழந்தைகளைக் கதையுலகிற்கு அழைத்துச் செல்லும் முதற் கருவியாக விளங்குகிறது. எனவே, திரைப்படங்களும் நடிகர்களும் தமிழை வளர்க்கிறார்களோ இல்லையோ, அதை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அரிய தொண்டை அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

   நீக்கு
  2. சினிமா சமூகத்தை சீரழித்து முடித்து விட்டது என்பதே எமது கருத்து ஆனால் பொருப்பாளி சமூகமே,,, ஏனெனில் இருக்கிறவன் ஒழுங்கா இருந்தால் ? செறைக்கிறவன் ஒழுங்கா செறைப்பான் எந்த நடிகனும் எனக்கு ரசிகர் மன்றம் வையினு சொல்லலே, எந்த நடிகனும் நான் கட்சி ஆரம்பிக்கிறேன் அப்படியே தொண்டனாக மாறுனு சொல்லலே ஆனால் நம்ம காமுட்டாப்பயலும், கூமுட்டாப்பயலும் அவங்களை அப்படி ஆக்கிப்புட்டு பழத்தை அவங்களும், அவங்க தலைவங்கமாறும் திண்ணுபுட்டு கொட்டையை மக்களுக்கு போட்டுறாங்கே,,, இவங்களும் தும்பை விட்டுபுட்டு வாலைப்புடிச்சுக்கிட்டு இப்படியே,,,,, 60 வருஷத்தை தாண்டிட்டோம்.

   ஆனால் ? கமல் இதில் இதுவரை விதிவிலக்கே ஆகவே
   கமலைப்பற்றி,,, நானும் சில கருத்துக்களை தங்களுக்காக வைக்கிறேன்,

   கமல்ஹாசன்.

   ஒரு முழுமை பெற்ற தமிழ்க் கலைஞன் என்பதில் நான் மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் அறிந்ததே அவரின் மாறுபட்ட சிந்தனைகள், எமக்கு என்றுமே பிடிக்கும் சிறந்த எழுத்தாளரும்கூட சினிமாவில் 90 சதவீதம் மூக்கை நுனைத்தவர் இந்தத் தமிழனை நினைத்து நிறைய பெருமைப்பட்டுள்ளேன், சிறிது சிறுமையும் கொண்டுள்ளேன் ஒருமுறை 1983 சென்னை விமான நிலையத்தில் டெல்லியில் மூன்றாம் பிறைக்கு அவார்டு வாங்கி வருகிறார் முதல் வராண்டாவில் நானும் ஒருபெண்ணும் மட்டுமே தொடும் தூரத்தில் நின்றிருந்தோம் என்னுடன் நின்றபெண் கமலை கட்டிப்பிடிக்காத குறையாக பிடித்து நிற்கிறார் கண்ணாடியால் வேய்ந்த அடுத்த வராண்டாவில் எல்லோரும் இவரை பிரமாண்டமாய் பார்க்க இவர் என்னை தீர்க்கமாய் பார்த்தார் காரணம் நான் அவரை இயல்பாய் பார்த்தேன் தலையை அசைத்து அழைத்தார் நான் தயக்கத்தோடு கை கொடுத்து ‘’நான் உங்க ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் ‘’தெரியும் உனது பார்வையே சொல்லுச்சு, ரஜினி ரசிகரா ?’’ ‘’இல்லை ஸார்’’ ‘’பின்னே ?’’ ‘’நான் யாருக்குமே ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் உடன் அவர் எனது கையை பிடித்து குலுக்கினார் ‘’நல்லது இப்படியே இரு’’ இது ஐந்து நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டது கூட்டம்கூட நான் நசுக்கி தூரத்தில் தள்ளப்பட்டேன் எனது பார்வையில் எனது மனதை படித்த கமலை அன்றிலிருந்து கவனமாக பார்த்துக்கொண்டு வருகிறேன் ஆனாலும் இன்றுவரை அவருக்கு நான் ரசிகர் இல்லை ஆனால் ? அவரது நடிப்பை ரசிப்பவன் இதுவரை எவனுக்கும் நான் ரசிகன் இல்லை (குறிப்பு கமல் பிறந்தநாளான்று எனக்கு வேண்டப்பட்ட நண்பர் மூலம் எமது வலைத்தள முகவரி கமலிடம் கொடுக்கப்பட்டது அவர் பார்ப்பாரா ? என்பது நானறியேன்) நடிகர்களால் சமூகத்திற்க்கு பிரயோசனம் இல்லையெனினும் இந்தத் தமிழன் நீடூழி வாழ வாழ்த்துவோமாக...

   உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்கள்
   கில்லர்ஜி.

   நீக்கு
  3. திரையுலகம் பற்றிய உங்கள் கருத்துப் படித்தேன். உங்கள் குற்றச்சாட்டுக்கள் முழுக்க நடிகர்கள் பற்றியதாகத்தான் இருக்கின்றன. ஆனால், நீங்களோ அவற்றைத் திரைத்துறை மீதான குற்றச்சாட்டு என்கிறீர்கள்! பொருந்தவில்லையே நண்பரே! நடிகர்கள் என்கிற அந்த ஒரு தரப்பினர் செய்யும் இத்தகைய செயல்களுக்கு மொத்தத் திரைத்துறை எப்படிப் பொறுப்பாக இயலும்?

   மற்றபடி, திரைத்துறையால் அல்லது திரைப்படங்களால் சமூகத்தில் நேரும் சீரழிவுகள் எனப்படுபவை அதைத் தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதால் ஏற்படும் பாதிப்புக்களே என்பதுதான் என் பணிவன்பான கருத்து. ஆக, ஏறத்தாழ உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றுதான்.

   கமலுடனான உங்கள் சந்திப்பு படிக்கச் சுவையாக இருந்தது. எவ்வளவுதான் வெளியில் எதிர்த்து, மறுத்துப் பேசினாலும், பெரிய மனிதர் ஒருவரை அவ்வளவு அருகில் பார்க்கும்பொழுது, "நான் உங்கள் ரசிகன் இல்லை" எனக் கூற நா எழாது. உண்மையிலேயே புதுமையான மனிதர் ஐயா நீங்கள்!

   ஆனால், உங்களுக்கும் எனக்கும் ஒரு வேறுபாடு. நீங்கள் அவர் தலைமுறையைச் சேர்ந்தவர். நான் அவருக்கு - உங்களுக்கு - அடுத்த தலைமுறை. என் அப்பாவுக்கும் கமல் அவர்களுக்கும் ஓர் அகவைதான் வேறுபாடு. ஆகவே, எவ்வளவுதான் மாற்றுக் கருத்துக்களும் கசப்புக்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி, சிறு பிள்ளையாயிருந்தபொழுதிலிருந்தே நுணுகி நுணுகி ரசித்தும் வியந்தும் வந்ததாலும் அகவை வேறுபாட்டாலும் எழும் அந்த மதிப்பும் மரியாதையும் குறையா.

   //சிறிது சிறுமையும் கொண்டுள்ளேன்// - நானும்! ஏன், எது பற்றி என்பது நான் உங்களுக்கோ, நீங்கள் எனக்கோ சொல்லாமலே தெரியும். இதைப் படிக்கும் நம் நண்பர்கள், உண்மையான தமிழர்கள் ஆகியோருக்கும் அது விளக்காமலே புரியும். ;-)

   நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

   நீக்கு
  5. ஐயா! உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கின்றன. அதிலும் கமல்காசனையும் இந்தியப் பிரதமரையும் விட நான்தான் உங்களுக்கு முதன்மையானவன் என்று கூறியிருப்பதும் அதற்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணமும் அருமை! மிக்க நன்றி! இந்தளவுக்குப் பக்குவம் எனக்குக் கிடையாதுதான். நான் மனிதர்களை அவர்களின் பண்பு, அன்பு, தகுதி எனப் பல அளவுகோல்கள் வைத்தே மதிக்கிறேன். ஆனால், நீங்கள் அவற்றுள் அன்பை அளவுகோலாகக் கொள்கிறீர்கள். இது சரியா தவறா என விவாதிப்பதை விட உங்களுடைய இந்த நேசமிகு நெஞ்சத்தை நான் மதிக்கிறேன்!

   ஆனால் அதே நேரம், நீங்கள் அந்தக் கருத்துரையின் இடையில் பயன்படுத்தியிருந்த ஒரு சொல் மிகவும் தவறானது!! கலைத்துறை சார்ந்த அனைவரையும் மிக மோசமாக இழிவுபடுத்தும் அந்த ஒரு சொல்லுக்காக உங்களுடைய அந்த மொத்தைக் கருத்தையும் நீக்க வேண்டியதாகி விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

   ஆனால், ஒன்று! இந்தியப் பிரதமர்களை விட நான் கமல்காசனை, உங்களை, மற்ற எல்லோரையும் கூடுதலாகத்தான் மதிக்கிறேன். காரணம், நீங்களெல்லாரும் உங்கள் கடமையைச் சரி வர நிறைவேற்றுபவர்கள். இந்திய சராசரிக் குடிமகன்(ள்) இந்தியாவின் தேசிய, மாநிய ஆட்சியாளர்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தவன்(ள்), நல்லவ(ன்)!

   நீக்கு
  6. கில்லர் ஜி! நாம் கமலை அவரது தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொள்ளாமல், அவரது கலைத் திறமையை மட்டும் எடுத்துக் கொண்டு அவரை வாழ்த்துவோமே! நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோமே!

   நீக்கு
  7. நண்பர் துளசி அவர்களே நான்தான் வாழ்த்தி இருக்கிறேனே,,, தமிழன் என்பதால் மட்டுமே.....

   நீக்கு
 3. i had many times faced kamal and certain actors on many occasions. i remained quite.and was not excited. generally all actors feel offended when you just do not concentrate on them we have our own work why should we concentrate on them?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட் சந்தர் அவர்களே! முதலில் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் என் நன்றி!

   கலைஞர்கள் (அல்லது நடிகர்கள்) மீது நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும், நமக்கு வேறு வேலை இல்லையா என்கிற உங்கள் கேள்வி சுவையானதே! இதற்கு என் பதில் என்னவென்றால், கலைஞர்கள் செய்வது உண்மையில் ஒரு வகைச் சேவை, அதனால்தான். அது தொழில் இல்லை. தொழிலாக அதைச் செய்யவும் கூடாது. (கமல் போன்ற ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அதைத் தொழிலாகத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை!). அவர்கள் தாங்கள் வெளிப்படுத்தும் கலைக்காக ஊதியம் பெறுகிறார்கள்தான். ஆனால், அஃது அவர்களின் வயிற்றுப்பாட்டுக்காகவும் தொடர்ந்து கலைத்துறையில் சேவையாற்றுவதற்கான ஊக்கத்துக்காகவும்தானே தவிர, கலைக்கு உண்மையில் விலை கிடையாது. இப்படி விலைமதிப்பற்ற ஒன்றை வழங்கக்கூடியவர்கள் என்பதால்தான் கலைஞர்கள் மீது நாம் கூடுதலாகக் கவனம் செலுத்துகிறோம், மிகுதியாக மதிக்கிறோம், புகழ்கிறோம் எல்லாம்.

   ஆனால் இதில் வேதனை என்னவென்றால், கலைஞர்கள் மட்டுமில்லாமல் எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், மக்களுக்காகவே வாழும் உண்மையான அரசியலாளர்கள் போன்றோரும் இந்தப் பிரிவுக்குள் - விலைமதிப்பற்ற சேவையை வழங்குபவர்கள் என்கிற வகைப்பாட்டுக்குள் - வருகிறவர்களே! ஆனால், நம் மக்கள் நடிகர்களுக்கும் அரசியலாளர்களுக்கும் வழங்கும் மதிப்பை இதர பிறருக்கு வழங்க முன்வருவதில்லை! :-(

   நீக்கு
 4. one cannot help thinking about kamals LIVING IN ARRANGEMENT with gouthami. kamal sends a clear wrong signal to thousands of youngmen across the world. he wore a thic black shirt in a deepawali day and participated in a t.v programme and was talking about periar i am . . surethat he would have never attempted to talk ill of christ or prophet mohamed on christmas or in moharam dates. and in the end he came across severe oppositions fro muslim people also in viswaroopam release. thus all sections of people understand this crooked guy who believes in business only.
  another joker is rajni who talks great things political aspirationsalso when a film of his is to be released god save tamil people from these crooked actors.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமல் மட்டுமில்லை, கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பலரிடமும் உங்களைப் போன்றவர்கள் இதே கேள்வியைத்தான் முன்வைக்கிறீர்கள்; அவர்கள் ஏன், இந்துக் கடவுள்களை மட்டும் பழிக்கிறார்கள், இந்துப் பண்டிகைகளை மட்டும் வெறுக்கிறார்கள் என்று. இதற்கான பதில் வெகு எளிமையானது; அவர்கள் பிறப்பால் இந்துக்கள், அவ்வளவுதான்! நீங்கள் யாரையெல்லாம் இப்படிக் குற்றஞ்சாட்டுகிறீர்களோ அவர்களெல்லாரும் பிறப்பால் இந்துக்கள். பெரியார் முதல் கமல் வரை! எந்த ஒரு மனிதனும் தன் மதத்தின் மூட நம்பிக்கைகள் பற்றித்தான் மிகுதியாக விமர்சிப்பான். காரணம், அது பற்றித்தான் அவனுக்கு முழுமையாகத் தெரியும். மேலும், அவன் அதற்கு உரிமையுள்ளவன் கூட. மேலை நாடுகளைப் பாருங்கள்! அங்கே கிறித்துவத்தையும், ஏசுவையும் கிழி கிழி எனக் கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், அவர்களைப் பார்த்து, "நீங்கள் ஏன் இசுலாமியத்தைப் பற்றிப் பேசுவதில்லை" எனக் கேட்பீர்களா? இந்தச் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை இனிமேலாவது உங்களைப் போன்றவர்கள் விட்டுவிட்டால் நன்றாக இருக்கும்!

   அடுத்து, கமலின் தனிப்பட்ட வாழ்க்கை உலகளவில் (!) பலருக்கும் தவறான எடுத்துக்காட்டாக இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை பற்றிக் கேள்வியெழுப்புவதை இந்தச் சமூகம் எப்பொழுதுதான் நிறுத்தப் போகிறதோ, தெரியவில்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் ஐயா! அது பற்றிக் கேட்க நாம் யார்? அவர் அப்படியொரு வாழ்க்கை வாழ்வதால் அவருடைய பெருமைகள் என்று நான் இந்தக் கவிதையில் குறிப்பிட்டுள்ளவையெல்லாம் இல்லையென ஆகி விடுமா? இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு? ஒருவேளை, அவருடைய அந்த மணம் புரியாமல் சேர்ந்து வாழும் கொள்கை பற்றிப் பாராட்டி நான் கவிதையில் எழுதியிருந்தால் நீங்கள் இப்படி கேட்கலாம். அப்படி இல்லாத நிலையில், அந்த ஒரே ஒரு சர்ச்சைக்குரிய, அதுவும் தனிப்பட்ட ஒரு விதயத்துக்காக அவ்வளவு பெருமைகள் கொண்ட ஒரு கலைஞரைப் பாராட்டக்கூடாது என்கிறீர்களா?

   நீக்கு
 5. மிக அருமையான படைப்பு தங்களுடைய, கமல் எனும் மனிதன், கலைஞனைப் பற்றிய இந்தப் படைப்பு. நல்ல ஒரு பரிசு இந்தக் கலைஞனுக்கு! அதுவும் அவரது 60 வது பிறந்த நாளன்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது ஐயா! மிக்க நன்றி!

   நீக்கு
 6. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
  அன்புடன்
  தங்களின் நண்பன்
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 7. உங்க ப்ரோபைல் காக்கா என்னை இங்கே கொத்தி தூக்கிட்டு வந்துடுச்சு!! யார் வரைந்தது?? அதை பார்க்கும் போதே ஒரு பிஞ்சு கைகள் மனதில் தோன்றி குறுநகையை இழையோட வைத்துவிடுகிறது!!
  -----------------------
  கமல் பற்றிய பதிவில் உங்க எழுத்து நல்ல இருக்கு சகோ:) வேற எதாவது சொன்ன அது டெம்ப்ளேட் பின்னூட்டமாக போய்விடுமோ எனும் அச்சத்திலேயே இந்த பதிவுக்கு இதுவரை பின்னூட்டம் இடாமல் இருந்தேன். என் நண்பர்களிடம் பொய் பேசவும், அவர்கள் மனம் நோக பேசவும் நான் விரும்புவதில்லை. பதிவில் குறை இல்லை. ஆனால் !! கமல் பற்றிய எனது பார்வை மாறியுள்ள இந்நாட்களில் இதில் பின்னூட்டம் இட விருப்பம் இல்லை. உங்களுக்கான வார்த்தைகள் உங்கள் அடுத்த பதிவிற்காக விரல் நுனியில் காத்திருக்கின சகோ:)) மீண்டும் சிந்திப்போம்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுக்கு நன்றி சகா! அந்தக் காக்கையை வரைந்தது பிஞ்சுக் கைகளில்லை, என் சொந்தக் கைகள்தாம்! (ஐயையோ! பொதுவில் சொல்லி விட்டேனே! மானம் போச்சு! மானம் போச்சு!)

   கமலகாசன் பற்றிய என் பார்வையும் இப்பொழுது முன்பு போல் இல்லை. நான் மாற்றிக் கொள்ளவில்லை; அவரேதான் மாற்றி விட்டார். ஈழப் பிரச்சினை, விஸ்வரூபம் போன்ற விவகாரங்களில் எனக்கும் அவர் குறித்துக் கசப்பு மிக உண்டு. ஆனால், இந்தக் 'கலையுலகில் கமலியல்' என்பது கமலகாசன் எனும் கலைஞருடைய அருந்திறங்களை மட்டுமே கணக்கில் கொண்டு எழுதிய ஒரு வாழ்த்துப்பா, அவ்வளவுதான். நண்பனிடம் மாற்றுக் கருத்துக்கள் எவ்வளவுதான் இருந்தாலும் அவன் வாழ்வில் ஒரு நன்மை நடக்கிறது எனும்பொழுது வாழ்த்தப் போவோமில்லையா? அது போல. கமலகாசன் பற்றி நான் நேர்மறையாக எழுதிய இதைப் படித்த நீங்கள் இதே 'கமல்' எனும் பகுப்பிலுள்ள 'இந்திய அரசின் விருதுகளை ஏற்பது பெருமையா, இழிவா?' எனும் பதிவையும் படித்துப் பார்த்தீர்களானால் அவர் மீதான என் காரத்தையும் (ஓரளவு) உணரலாம்.

   ------

   இந்தப் பதிவில் கருத்திட விருப்பமில்லை, இந்தக் கருத்திலுள்ளவை எனக்கான வார்த்தைகள் மட்டுமே என்றெல்லாம் நீங்கள் குறிப்பிட்டிருப்பதால், இது வழக்கம் போன்ற கருத்தா அல்லது என் தனிப் பார்வைக்காக மட்டும் அனுப்பப்பட்டதா என்று ஒரு சிறு குழப்பம். இது பற்றிக் கேட்டுத் தங்களுக்கு கூகுள்+ ஹேங்-அவுட் மூலம் மடல் அனுப்பியிருந்தேன். அனுப்பும்பொழுதே ஐயம் கொண்டேன், உங்கள் பார்வைக்குப் போய்ச் சேருமோ சேராதோ என்று. ஏனெனில், இதற்கு முன்பு எனக்கு ஒருவர் இப்படி ஹேங்-அவுட் மூலம் அனுப்பியிருந்த மடல் ஏறத்தாழ ஓராண்டு கழித்துத்தான் என் பார்வையில் தென்பட்டது. ஐயமிட்டபடியே நடந்து விட்டது. நாம் தொடர்பு கொள்பவர், குறிப்பிட்ட நேரத்தில் நிகர்நிலையில் இல்லாவிட்டால், நமது ஹேங்-அவுட் மடல் அவருக்கு மின்னஞ்சலாகச் சென்று சேர வேண்டும். ஆனால், சில சமயம் அஃது அப்படிச் செல்வதில்லை. இதனால்தான் கருத்தை வெளியிடத் தாமதம். வருந்துகிறேன்!

   நீக்கு
 8. ஒரு நண்பருக்கான பாராட்டை அவரிடம் தானே தெரிவிக்கமுடியும்:) உண்மையில் இதுபோலும் எழுதாளுமைகளின் அடுத்த படைப்பை காண ஆவலோடு காத்திருப்பேன். விஜூ அண்ணாவின் பதிவுகள் பற்றிய updates சை பார்த்தபடியே இருப்பேன். சிலநேரம் இரவு வெகு நேரம் கழித்து இடும் அவரது பதிவுகளை படித்துவிட்டு விடியும் வரை காத்திருந்து பின்னோட்டம் இட்டிருக்கிறேன். :)) so அதுபோல தான் உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறேன் என கூறினேன், மற்றபடி எனக்கும் கமலுக்கும் கருத்துசொல்லக் கூடாதா அளவு வாய்க்கால் வரப்பு தகராறெல்லாம் இல்லை:) நீங்கள் எங்கே கமலிடம் இருந்து விலகினீரோ அதே பிரச்சனை தான்:)
  --------------------
  அந்த படத்தை வரைந்தது நீங்களா!! ஆனாலும் சொல்கிறேன், அந்த படத்தில் இருக்கிற இன்னொசென்ஸ் எனக்கு பிடித்திருக்கிறது. நான் கூட கொஞ்சம் வரைவேன். நானும் இப்படி ட்ரை பண்ணலாம் போலவே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுடைய இந்த வார்த்தைகள் என் பதிவுகளின் எண்ணிக்கையை உயர்த்தும் சகா! நன்றி!

   ----------

   நீங்களாவது கொஞ்சம் வரைவேன் என்கிறீர்கள். எனக்கு அது கூடத் தெரியாது. ஆக, நானே வரையும்பொழுது நீங்கள் தாராளமாக இறங்கலாம்! கலக்குங்கள் அதிலும்! வாழ்த்துக்கள்!

   நீக்கு
 9. பதில்கள்
  1. ஆகா! இப்படி ஒரு கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி ஐயா!! மிக்க மகிழ்ச்சி!! இடையில் சில தவிர்க்க முடியாத வேலைகளால் பதிவிட முடியவில்லை. இதோ, இன்றுதான் அடுத்த பதிவை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நாளை வெளியிட்டு விடுவேன் ஐயா!

   நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்