‘வேலையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’!
ஒரு துறையில் எவ்வளவு பணியிடங்கள் இருக்கின்றன, துறையின் எதிர்காலம் எப்படி, உலகநாடுகளின் பொருளாதார வீழ்ச்சி எப்படிப்பட்ட பாதிப்புகளை அதில் ஏற்படுத்தும் என எந்தக் கணக்கும் பார்க்காமல், திருவிழாவில் தண்ணீர்ப் பந்தல் திறப்பது போல் நாடெங்கும் எவன் வேண்டுமானாலும் பொறியியல் கல்லூரி திறக்க ஒப்புதலளிக்கும் அரசுகள்...
வேலைவாய்ப்புக் கிடைக்காத பொறியாளர்கள் ஏற்கெனவே 1.8 கோடி பேர் இருக்க, அது பற்றித் துளியும் கவலைப்படாமல், ஏதோ ஊறுகாய்ப் பொட்டலம் தயாரிப்பது போல் ஆண்டுக்கு 10 இலட்சம் பொறியாளர்களை உருவாக்கித் தள்ளிக்கொண்டே இருக்கும் நம் கல்விக் கோயில்கள்...
இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல், மக்களுக்காக உயிரையும் கொடுக்க ஆயத்தமாய் இருப்பதாக மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லித் திரியும் தலைவர்கள் என அனைவருமே இதில் குற்றவாளிகள்தாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களான நம் பக்கமும் சில தவறுகள் இருக்கின்றன என்பதை மக்கள் நாம் உணர வேண்டிய நேரம் இது!...
பொறியியல்துறையின் எதிர்காலம் பற்றியோ, வேலைவாய்ப்புகள் பற்றியோ நமக்குப் பெரிய புள்ளி விவரங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை; ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி பொறியியல்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றிய உலக அறிவு நமக்குத் தேவையில்லை. ஆனால், ஒரே துறையில் ஆண்டுதோறும் இத்தனை இலட்சம் பேர் போய் விழுந்தால் அத்தனை பேருக்கும் வேலை கிடைக்குமா என்கிற அடிப்படைச் சிந்தனையாவது நமக்கு வேண்டாவா?
கூலித் தொழிலாளர்கள் கூட ஒரு வண்டியில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேற்பட்டோர் ஏறிவிட்டால், ‘இதற்கு மேல் ஏறினால் போகிற இடத்தில் அவனும் எத்தனை பேருக்கென்று வேலை கொடுப்பான்’ எனச் சிந்தித்து, மேற்கொண்டு அதில் ஏறாமல் அடுத்த வண்டிக்காகக் காத்திருக்கத் தொடங்குவார்கள். படிக்காத அந்த மக்களுக்கு இருக்கும் அறிவு கூட வெள்ளைச் சட்டை வேலை பார்க்கும் படித்த பெற்றோர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? மாத ஊதியம் இலட்சங்களில் என்றவுடன் கண்களை மறைத்து விட்டதா ஆவல்?
௯௦ (90)-களில் அரசு வேலைக்காக, படித்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருந்தோம்; உலகமயமாக்கலுக்குப் பின் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரத் தொடங்கியதும், எந்தத் துறை நிறுவனமாக இருந்தாலும் அதற்குக் கணக்கு வழக்குப் பார்க்கக் கண்டிப்பாக ஒருவன் தேவைப்படுவான் என்று கணித்து எல்லோரும் கூட்டம் கூட்டமாக இளநிலை வணிகவியல் (பி.காம்) பயிலத் தொடங்கினோம்; அது போதவில்லை என்றதும் கண்ட உப்புமா கல்லூரிகளிலும் சேர்ந்து எப்படியாவது முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) முடித்துவிடத் துடித்தோம்; எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும்படி, பொறியியல் பயின்றால் மாதம் ஒரு இலட்சத்துக்கும் மேல் ஊதியம் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு விட்டில் பூச்சிகள் போல் போய்ப் பொறியியல் கல்லூரிகளில் விழுந்தோம். என்றுதான் மாறும் நமது இந்தச் சந்தை மனப்போக்கு?
கை நிறையச் சம்பாதிக்க விரும்புவதில் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட துறையில் மட்டும்தான் அது முடியும் என்கிற குறுகிய மனப்பான்மைதான் தவறு! எந்தத் துறையாக இருந்தாலும், அதன் உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு வருமானமும் உச்சத்தில்தான் இருக்கிறது என்பதைக் கூர்ந்து பார்த்தால் உணர முடியும்.
இவை மட்டுமல்ல எழுத்து, பேச்சு, திரைப்படம், புகைப்படம், விளையாட்டு, அறிவியல் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அந்தத் துறையில் உச்சம் தொட்டவர்கள் பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு நிகராகவும், அவர்களை விடப் பன்மடங்கு கூடுதலாகவும் கூட வருவாய் ஈட்டுவது நாம் அறியாததில்லை.
எனவே, நிறைய வருமானம் வரக்கூடிய துறையையே அனைவரும் தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதன் உச்சக்கட்டத்துக்குச் செல்ல முயல்வதே சிறந்தது!
அப்படியே இருந்தாலும், ஒரு துறையின் உச்சக்கட்டத்தை அடைவது எல்லோராலும் எப்படி முடியும் எனக் கேட்பீர்கள்.
முடியும்! அவரவருக்கு ஆர்வமுள்ள, திறமையுள்ள துறையில் படித்தால்!
ஆம்! ஒவ்வொருவருக்கும் பிறப்பிலேயே ஏதேனும் ஒரு துறையில் இயல்பாகவே ஆர்வமும் திறமையும் இருக்கும். அது என்ன என்பதைக் கண்டுபிடித்து அந்தத் துறைக்கான படிப்பைத் தேர்ந்தெடுத்தால் எந்த விதச் சிரமமும் இல்லாமல் எளிமையாக அந்தத் துறையில் உச்சம் தொடலாம். பிடித்த துறை, அதுவும் இயல்பிலேயே அந்தத் துறையில் கொஞ்சம் திறமை உண்டு என்பதால் அது தொடர்பாகப் படிப்பதோ, திட்டப்பணிகளில் (projects) ஈடுபடுவதோ பெரிய சிரமமாக இருக்காது. வெகு எளிதாக மதிப்பெண்களையும், வேலைவாய்ப்பையும் எட்டலாம்.
பொறியியல்துறையும் இதற்கு விலக்கில்லை. இன்றும் அத்துறையில் வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியப் பொறியியல் கல்வி உலகத்தரத்தில் இல்லாதது, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளோ இற்றைத் தரமுள்ள (updated) ஆசிரியர்களோ இல்லாத கல்லூரிகள், இவற்றால் மாணவர்களும் போதுமான திறமையோடு உருவாக்கப்படாதது, நிறுவனங்களின் வளாகத் தேர்வுக் (Campus interview) குளறுபடிகள் போன்றவற்றையெல்லாம் மீறி இன்றும் பொறியியல்துறையில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கத்தான் செய்கிறது. யாருக்கு? முதல் தரமான கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமா? இல்லை! படிக்கும்பொழுதே துறையில் ஆழ்ந்த திறமையை வளர்த்துக் கொள்ளும் ஆர்வலர்களுக்கு, சிறந்த பொறியாளராவதற்குண்டான துடிப்புக் கொண்டவர்களுக்கு, துறை தொடர்புடைய திறமை இயல்பிலேயே இருப்பவர்களுக்கு.
ஆக, மாற வேண்டியது நம் கண்ணோட்டம்தான். எதைப் படித்தால் வேலை கிடைக்கும் எனப் பார்க்காதீர்கள்! எதைப் படித்தால் மிகுதியான வருமானம் கிடைக்கும் எனக் கணக்குப் போடாதீர்கள்! உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறது? உங்கள் பிறவித்திறன் (Born talent) எது? அவற்றைக் கண்டுபிடியுங்கள்! பள்ளிப் பருவத்திலிருந்தே அதற்கேற்ப உங்கள் படிப்புகளைத் திட்டமிடுங்கள்! அப்படிச் செய்தால், படிப்பது எதுவாக இருந்தாலும் அந்தத் துறையில் உச்சம் தொடலாம் மச்சி! முன்பே பார்த்தது போல், எல்லாத் துறைகளிலும், அவற்றின் உச்சக்கட்ட நிலையில் இருப்பவர்களுக்கு வருமானமும் இலட்சங்களில்தான் இருக்கும் என்பதால் கை நிறைய வருமானமும் பெறலாம்!
நமக்கு மட்டுமில்லை, நாட்டுக்கும் இதுதான் நல்லது! அவரவருக்கு ஆர்வமும் அறிவும் உள்ள துறையிலேயே ஒவ்வொருவரும் சேர்ந்தால், நாட்டின் ஒவ்வொரு துறைக்கும் ஆகச் சிறந்த திறமையாளர்கள் கிடைப்பார்கள். இதனால் அனைத்துத் துறைகளுமே வெகு விரைவில் முகடு (peak) தொடும்!
எனவே, காலங்காலமாகக் கல்வியாளர்கள் கூறி வருவது போல், வேலைக்காகப் படிக்காமல் விருப்பத்துக்காகப் படியுங்கள்! வேலை மட்டுமில்லை வானமும் வசப்படும் மச்சி!
--பகிர்வேன்...
❀
❀ ❀ ❀ ❀
படங்கள்: நன்றி ௧. யுவா தொலைக்காட்சி, ௨. வைரமுத்து.நெட், மை டியர் தமிழ், பிலிமி பீட், தேனீ, விகடன், செய் அல்லது செய்.
(இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை - யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்).
முந்தையவை:
மச்சி! நீ கேளேன்! - 3 | பூமி கண்ணைக் குத்தும்! - உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்தே ஐந்து நெறிகள்!
மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!
மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!
தொடர்புடைய வெளியிணைப்புகள்:
(இந்தியாவிலேயே கல்லூரி மாணவர்களுக்கான முதல் இணையத்திரை - யுவா தொலைக்காட்சியில் நான் எழுதும் தொடர்).
முந்தையவை:
மச்சி! நீ கேளேன்! - 3 | பூமி கண்ணைக் குத்தும்! - உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்தே ஐந்து நெறிகள்!
மச்சி! நீ கேளேன்! - 2 | வார்த்தை என்னும் வல்லாயுதம்!
மச்சி! நீ கேளேன்! - 1 | லைக் அண்டு ஷேர்!
தொடர்புடைய வெளியிணைப்புகள்:
பதிவின் கருத்து சரி எனத் தோன்றினால் மற்றவர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் கருத்திட வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
நீங்கள் சொன்ன சிறந்ததை முதலில் பெற்றோர்கள் தான் உணர வேண்டும்..
பதிலளிநீக்குமுதல் ஆளாக வந்து கருத்துரைத்ததோடு இல்லாமல் எனக்கு முன்பாக நீங்களே பதிவைத் தமிழ்மணத்தில் இணைத்து விட்டீர்களே! நன்றி ஐயா!
நீக்குஎனவே, காலங்காலமாகக் கல்வியாளர்கள் கூறி வருவது போல், வேலைக்காகப் படிக்காமல் விருப்பத்துக்காகப் படியுங்கள்! வேலை மட்டுமில்லை வானமும் வசப்படும் மச்சி!// பஞ்ச்
பதிலளிநீக்குஆனால் இன்று எத்தனை பிள்ளைகள் தங்கள் விருப்பப்படி படிக்கின்றார்கள் சொல்லுங்கள். பெற்றோர் தான்பல குடும்பங்களில் முடிவு எடுக்கின்றார்கள். பெற்றோர்களின் ஆதரவு பல பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லை. பொறியியலிலும் கூட தேர்ந்தெடுத்துத்தான் படிக்கின்றார்கள். எதில் வேலை வாய்ப்பு அதிகம், பணம் ஈட்டுதல் அதிகம் என்று. மருத்துவத்திலி கூட பாரா மெடிக்கல் படிப்புகள் நிறைய இருக்கின்றன...ஆனால் அதில் கூட பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. ஆர்வம் காட்டப்படும் குழந்தைகளுக்கு பெற்றொர் ஆதரவு இருப்பதில்லை. இரண்டும் இருந்தால் சாதி முட்டுக்கட்டையாகிவிடுகின்றது சேர்வதில். இந்தச் சாதி எல்லாத் துறையிலும் விளையாடுகின்றது...
மிகவும் நல்ல பதிவு. நாம் விரும்பும் ஒன்றில் படித்தால் அதில் நிச்சயமாக உழைத்தால் நம் திறமை நம்மை அதில் மிளிர வைக்கும்.
பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா, அம்மணி!
நீக்குகல்வியும் வசூல்ராஜக்கள் மாதிரி ஆகிவிட்டதே..நண்பரே....!
பதிலளிநீக்குஆம் ஐயா! அதை ஏன் கேட்கிறீர்கள்! இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், நம் மக்கள் பெரும்பாலோர் இதில் தெரிந்தே தங்களை ஏமாற்றக் கல்வி நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பதுதான்.
நீக்குமிக மிகச் சரியே! கலந்தாய்வு முடிவுகள் தெரியும் முன்னரேயே பெற்றோர் பணம் கட்டி சேர்த்துவிடுகின்றார்கள். இன்னும் சொல்லப்ப்போனால், பரீட்சை முடிவுகள் தெரிவதற்கு முன்னரேயே கூட....இடம் பதிவு செய்து விடுகின்றார்கள். பல தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்...இப்படித்தான் கொழிக்கின்றன. ஏனோ அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. ம்ம்ம்ம் இந்தக் கல்லூரிகளை நடத்துபவர்களும் அரசியல்வாதிகள் இல்லை, அவர்களின் சொந்தக்காரர்கள்தானே.....அரசியலில் இல்லை என்றால் கல்லூரிகளே நடத்த முடியாது என்ற நிலைமை. மக்களிற்கு நன்மை செய்ய வேண்டிய மருத்துவமும், பொறியயலும் இப்படி ஆகிப் போனது....அவதிப்படுவோர் என்னவோ சாதாரண பாமர மக்கள்தான்....அரசும், மக்களுக்கும் இடையில் என்ன ஒரு முரண்பாடு!
நீக்குநன்றாகச் சொன்னீர்கள்! இந்த முரண்பாடு இருக்க இருக்க வளர்ந்து கொண்டே போகிறது. பார்ப்போம், எல்லாவற்றுக்கும் முடிவு என்கிற ஒன்று இருக்கத்தானே வேண்டும்!
நீக்குபல காலமாய் என்னுள் உறுத்திகொண்டிருந்த கேள்விக்கு பதிலாய், நமது சமூகத்தின் " பட்டபடிப்பு " கெளரவ வெறிக்கு சாட்டையடியாய் அமைந்த பதிவு ! இப்படி ஒரு அருமையான பதிவுக்கு வாழ்த்துகளும் நன்றியும் !
பதிலளிநீக்குமக்கள் தொகை, ஒரு வட்டத்தில் வசிக்கும் மக்களின் தேவை, ஏற்கனவே அங்கே இருக்கும் கல்வி நிலையங்கள், ஒரு படிப்புக்கான எதிர்காலம், அதற்கு அந்த நாட்டின் தேவையின் அளவு என பல விசயங்களை ஆராய்ந்து, திட்டமிட்ட பின்னரே மேலை நாடுகளில் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்படுகின்றன ! இதை விடுங்கள்... ஒரே மாதிரி பொருட்களை விற்கும் ஒரு வணிக அங்காடிக்கும் இன்னும் வணிக அங்காடிக்கும் இத்தனை தூர இடைவெளி அவசியம் என்ற சட்டங்கள் கூட அங்கு உண்டு. காரணம் ஒருவனுக்கு வர வேண்டிய லாபம் இரண்டாய் பிரிந்து இரண்டு பேருமே தெருவுக்கு வந்துவிடக்கூடாது என்பதால் அப்படி !!!
நம் நாட்டில் வணிகமும் கல்வி சேவையும் ஒன்றுதான் ! இன்னும் சொல்லப்போனால் கல்வி சேவை கெளரவமான வணிகம் ! இங்கு கல்விச்சேவை தொடங்க " சூட்கேஸ்களின் " எண்ணிக்கையே முக்கியம் !
அடுத்ததாக உங்களின் உதாரணங்கள் மிகவும் உண்மை !
பெற்றோர்கள் தங்கள் கெளரவத்துக்காக தாங்கள் விரும்பிய படிப்பை தங்கள் பிள்ளைகளின் மீது திணிக்காமல் அவர்களின் ஆர்வம் அறிந்தாலே போதும்... இன்றைய புற்றீசல் கல்வி நிறுவங்களின் பெரும்பான்மை மூடப்படும் !!!
எனது புதிய பதிவு : மதமாற்றம் மனமாற்றமாகுமா ?
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post_21.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
நன்றி
சாமானியன்
தங்கள் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஐயா! ஒரு கடை வைக்க இசைவளிப்பதில் கூட வெளிநாடுகள் எவ்வளவு அக்கறையோடு இருக்கின்றன என்பது பற்றிய தங்கள் தகவல் இதுவரை கேள்விப்படாத, வியப்பான செய்தி! அதற்காக நன்றி! பதிய பதிவுக்குக் கட்டாயம் வருகிறேன்.
நீக்குஅய்யா வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் ஆழமான வழமை போலச் சமுதாயப்பயன்மிக்கக் கட்டுரைகளில் இதுவுமொன்று.
கல்வி இன்றைய கல்விக்கூடங்களில் படும்பாடு சொல்லி மாளாது.
மாணவரைத் ““தயாரிக்கின்ற““ வகுப்பறைகளின் கொடி வானளாவப் பறக்கின்ற ஓர் நாட்டில் அதன் அடியில் கிடக்கின்ற, எத்தனையோ சாதாரணமான, தன்னியல்பில் வளர்கின்ற படிக்கின்ற மாணவர்கள் மாற்றுக் குறைந்தவர்களாகத்தான் கருதப்படுகிறார்கள்.
இக்கருத்தேற்றம் மாறாத வரை, மனம் விரும்புகின்ற ஒரு துறையை ஒருவன் தேர்ந்தெடுத்து அதில் சிறக்க அவனை அனுமதிக்காதவரை, நம் நாட்டின் சமச்சீரான முன்னேற்றம் என்பது கானல் நீர்தான்.
அருமையான பகிர்வு அய்யா!
நன்றி.
நன்றாகச் சொன்னீர்கள் ஐயா! ஆனால், அந்தக் கருத்தேற்றம் மாறாது. காரணம், அதை இவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பார்ப்போம், எல்லாவற்றுக்கும் முடிவு என ஒன்று இருந்துதானே ஆக வேண்டும்! கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா!
நீக்கு‘வேலையில்லாப் தொழிலாளி’ போன்ற சொற்களும் புழக்கத்தில் இருக்கின்றன. நண்பரே..!!
பதிலளிநீக்குஅட, அவர்கள் எண்ணிக்கை ஏராளம் ஐயா! அதிலும் முற்றிலுமான வேலையிழப்பு, பகுதியான வேலையிழப்பு என இருவகைப்படுவதால் 'வேலையில்லாத் தொழிலாளிகள்' எண்ணிக்கை கணக்கே கிடையாது.
நீக்குகருத்துக்களுக்கு நன்றி ஐயா!
நீக்குவழக்கம் போல முதலில் மன்னிப்புக்கேட்டு விடுகிறேன்:))))
பதிலளிநீக்குபக்கம்பக்கமாய் தட்டச்சிய என் முதல் பின்னூட்டம் publish தட்டும் நொடியில் இணைய இணைப்பு துண்டுபட்டதால் என் மனமும் துண்டுபட்டுவிட்டது. அதை பொருக்கி, சிதறிய என் முத்துகளை கோர்த்து மறுமுறை பதிய ரெம்ப லேசியா இருந்துது தல:((((
இதோ இப்போ வந்துட்டேன்ல!! நீங்க எழுதும் பதிவுகள் பலவும் என் அறிவின் திரி கிள்ளி, அதன் தாக்கத்திலேயே அடுத்த பதிவை எழுதுமாறு செய்துவிடுகின்றன!!!!
**
‘வேலையில்லாப் பட்டதாரி’ போன்ற சொற்கள் மீண்டும் புழக்கத்துக்கு வரக் காரணமாகி விட்டது ‘பொறியியல்துறை’*** அட!!! ஆமால்ல!!!
இந்த பதிவின் சாரத்தை என் மாணவர்களோடு பகிர்ந்துகொண்டேன் சகா! இப்போ என் வகுப்பு மாணவர்களின் எதிர்கால இலக்குகளில் சில மற்றம் தெரிகின்றன:)
இப்போகூட நம்ம ஊரில் தெருவுக்கு ஒரு டீச்சர் ட்ரைனிங் பள்ளியும், ஊரின் எல்லைகளில் எஞ்சினியரிங் கல்லூரிகளும் புற்றீசல் போலன்னு சொல்லலாமா,இல்ல மழைக்காளான்கள் போலன்னு சொல்லலாமா னு தெரியலை. தகுதித்தேர்வு நடைமுறைக்கு வந்தபின் இப்போ டீச்சர் ட்ரைனிங் மோகம் குறைந்துள்ளது.
அப்புறம் ஒரு கொடுமை, பன்னிரெண்டாம் வகுப்பில் நான் முட்டிமுட்டி மனனம் செய்த விக்டர் மேயர் தியரம் இப்போவரை எனக்கு பயன்படவில்லை,இனி பயன்படுமா என்பதும் ஐயமே!! நம் கல்விமுறை இன்னும் எவ்வளவோ மாறவேண்டியிருக்கிறது சகா!
வழக்கமாக நம் ஆட்கள் அரசாங்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் கல்விமுறை, திட்டம் என அரசை எதிர்பார்த்திருப்பதை விட, வழக்கம் போல உங்களை போன்றோர் சொல்லும் ஆலோசனைகளை மனதில் அசைபோட்டு, நல்ல ஒரு முடிவை அவர்களே எடுப்பார்கள் என்பது என் நம்பிக்கை. செறிவான உங்கள் நடையும்,கருத்தும் தாங்கி வரும் அடுத்த பதிவுக்காய் ஆவலோடு காத்திருக்கிறோம் சகா:) வாழ்த்துகள்:)
//வழக்கம் போல முதலில் மன்னிப்புக்கேட்டு விடுகிறேன்// - அட, எதற்கம்மா அதெல்லாம்? நட்பும் கருத்துச் செறிவும் துள்ளல் நடையும் கொண்ட உங்கள் கருத்து எப்பொழுது வந்தாலும் சரி, வந்தாலே போதும்!
நீக்கு//இந்த பதிவின் சாரத்தை என் மாணவர்களோடு பகிர்ந்துகொண்டேன் சகா! இப்போ என் வகுப்பு மாணவர்களின் எதிர்கால இலக்குகளில் சில மற்றம் தெரிகின்றன:)// - உண்மையாகவா!!! இந்த வார்த்தைகள் எனக்கு எப்பேர்ப்பட்ட ஊக்கத்தை அளிக்கும் என்பதை நீங்கள் முழுமையாக உணர்ந்து விட முடியாது!! அந்தளவுக்கு இது என்னை என்னென்னவோ செய்கிறது. மிக்க நன்றி சகா!!!!!
அப்புறம், ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் மீதான மோகம் குறைந்துள்ளது எனும் உங்கள் நற்செய்திக்கு நன்றி! வாழ்க்கைக்குப் பயன்படாத வகையில் அமைந்துள்ள நம் கல்விமுறையில் மாற்றம் தேவை என்ற தங்கள் கருத்து மிகவும் சரியே! (சொல்லிட்டாருப்பா!) ஆனால், பள்ளிக்கல்வியில் மட்டுமில்லை சகா! கல்லூரிக் கல்வியிலும் - குறிப்பாக, பொறியியல் கல்வியில் நம் பிள்ளைகள் படிப்பவை வழக்கொழிந்த தொழில்நுட்பங்களைப் பற்றியவைதாம் என்பது அண்மையில், அதே துறையில் ஆசிரியப் பணியாற்றும் நண்பர் மூலம் கிடைத்த பெருந்திகைப்புத் தகவல்! தமிழில் படித்தால் வெளியூரிலோ, வெளிநாட்டிலோ வேலை கிடைக்காது எனக் கூறி இலட்ச இலட்சமாய்க் கொட்டி ஆங்கிலத்தில் படிக்க வைக்கிறோம். ஆனால், படிப்பு ஆங்கிலத்தில் இருந்தால் மட்டும் போதுமா? இற்றைத்தரமாக (updated) இருக்க வேண்டாவா? பொறியியல் மாணவர்கள் இன்று கல்லூரியில் படிக்கும் தொழில்நுட்பங்கள், அந்தக் கல்வி இன்றைய தொழில்நுட்ப உலகிற்குப் பொருந்தாததாம். ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தொழில்நுட்பத்தையே இன்றும் பொறியியல் எனும் பெயரால் நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகின்றன இந்தக் கல்விக் கோயில்கள். அதைப் படிக்கும் அவர்கள் இன்றைய பொறியியல்துறையைப் பொறுத்த வரை கவைக்குதவாதவர்களே (out-dated persons)! இதற்கென்ன சொல்கிறீர்கள்? இப்பேர்ப்பட்ட பொறுப்பில்லாத அரசுகளையும் ஆட்சியாளர்களையும் என்ன செய்யலாம்? என்ன செய்தாலும் தகும்!
//செறிவான உங்கள் நடையும்,கருத்தும் தாங்கி வரும் அடுத்த பதிவுக்காய் ஆவலோடு காத்திருக்கிறோம் சகா:) வாழ்த்துகள்:)// - மிக்க நன்றி சகா! இதோ, அடுத்த பதிவு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
நீக்கு**ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தொழில்நுட்பத்தையே இன்றும் பொறியியல் எனும் பெயரால் நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகின்றன இந்தக் கல்விக் கோயில்கள். அதைப் படிக்கும் அவர்கள் இன்றைய பொறியியல்துறையைப் பொறுத்த வரை கவைக்குதவாதவர்களே (out-dated persons)! இதற்கென்ன சொல்கிறீர்கள்?**
நீக்குசொல்ல என்ன இருக்கிறது சகா:(( 1997க்குள் பள்ளிசெல்லும் வயதுள்ள அனைத்துக் குழந்தைக்கும் கல்வி என்பதே நம் இலக்காகும் என நான் டீச்சர் ட்ரைனிங் ல படிச்சப்போ 2000 மாவது ஆண்டு:))))
நம் கல்வி முறை update ஆகவேண்டும் என்பதுதான் என் கவலையும்
.**மிக்க நன்றி சகா! இதோ, அடுத்த பதிவு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.**மிக்க நன்றி சகா!
நன்றி!
நீக்குஅப்படா!!! ஒருவழியா வெற்றிகரமா பின்னூட்டம் போட்டாச்சு:)))
பதிலளிநீக்கு:-)
நீக்கு