சிற்றலை மீதமர் தும்பி! அன்புத் தோழரான கவிஞர் ரேவதி ராம் அவர்கள் அண்மையில் வெளியிட்ட மூன்று மணமிக்க படைப்புகளுள் குட்டிப்பூ!
பொதுவாக, கவிதைகள் அதிகம் படிக்கும் வழக்கமில்லை எனக்கு. ஆனால் கவிஞர்கள் அதிகம் பழக்கமாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் கவிதைகளிலேயே எந்நேரமும் நீச்சல்.
ஆனால் குளம், ஆறு, கடல் என எவ்வளவுதான் நீந்தினாலும் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு காட்டுத் தடாகத்தில் நீந்தக் கிடைக்கும் ஒரு பகல், வாழ்நாளில் எந்நாளும் வெளிச்சமிட்டுக் கொண்டிருக்கும். அப்படி ஒரு மறக்க முடியாத பகல்தான் சிற்றலை மீதமர் தும்பியைப் படித்தது!
பார்க்கும்பொழுதே கையில் எடுக்கத் தூண்டும் சின்னஞ்சிறு வடிவம்! ஒவ்வொரு பக்கமும் பிறந்த குழந்தை போலக் குட்டிக் குட்டியாய்க் கவிதைகள்.
முதல் பக்கத்தில் “அன்பின் அஞ்சிறைத் தும்பிக்கு” எனும் தலைப்பில் கவிதை சொட்டச் சொட்ட ஓர் அணிந்துரை எழுதியிருக்கிறார் நம் பேரன்புத் தோழரான கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள். அதில் அவர் எடுத்துக்காட்டியுள்ள கவிதைகளும் அவை பற்றிய பாராட்டுக்களும் எப்படிப்பட்ட நூலைப் படிக்க இருக்கிறோம் என்பதை முன்கூட்டியே உணர்த்தி நம் மனத்தை ஆயத்தப்படுத்தி விடுகின்றன! இதையடுத்து நம் அருமைத் தோழர், கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன் அவர்கள் எழுதியுள்ள அணிந்துரையும் கவர்கிறது.
அடுத்துக் கவிஞர் எழுதியுள்ள என்னுரையில், தான் இந்த இடத்துக்கு வரக் காரணமானவர்களுள் ஒருவர் விடாமல் நன்றி நவின்றிருக்கிறார், தன் மூன்று வயது மகனுக்கு உட்பட!
காணிக்கைப் பக்கத்திலிருந்தே (Dedication page) தும்பி தன் கவிதைச் சிறகைப் படபடக்கத் தொடங்கி விடுகிறது. அப்படி என்ன காணிக்கை எழுதியிருக்கிறார்?... சொல்ல மாட்டேன், படித்து விழி விரியுங்கள்!
இதில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் இயற்கையைப் பாடுகின்றன; சில வாழ்வின் அழகியலைப் பதிவு செய்கின்றன; காதல், காமம், பெண்ணியம், நகைச்சுவை எனப் பல பாடுபொருள்களின் இடையிடையே மெய்யியல் பேசும் கவிதைகளும் நிறையவே உள்ளன! இதோ எடுத்துக்காட்டுகிறேன் ஒன்றை:
இதுவரைமரக்கிளை நரம்புகளில்ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தஅந்த இலைஇன்றுதான்தன்னை விடுவித்துக் கொண்டது...கீழே விழுந்த அதைக்குசலம் விசாரித்துதலை கோதிய காற்றுடன்சரசரவென்ற ஒலியில்தரையில் புரண்டுவாழ்ந்த காலத்தின்கவிதை பாடிக்கொண்டிருக்கிறதுபழுத்த இலை.
இதில் பழுத்த இலையின் விடுவிப்பு என்பது முதுமையில் உயிரைப் பிரிவதா, குடும்பத்தைப் பிரிவதா? எப்படி வைத்துக் கொண்டாலும் பொருள் தருகிறது கவிதை. அதுவும் நேர்மறையான பொருளைத் தருகிறது. அதுதான் வியப்பு!
சாவையே கொண்டாட்டமாய் எதிர்கொள்வது தமிழ்ப் பண்பாடு. அதனால்தான் இறந்தவர்களைக் கூட ஆட்டம் பாட்டத்துடன் வழியனுப்பி வைக்கிறோம். அதைத்தான் இந்தக் கவிதையும் சொல்வதாய்ப் படுகிறது.
இரண்டாவது பொருளில் எடுத்துக் கொண்டால், குடும்பத்தை விட்டு முதியோர் இல்லத்தில் சேர்ந்த பின்னும் உடன் வாழும் மனிதர்களுடன் இனிமையாகப் பேசிக் கழித்து அந்த வாழ்வையும் கொண்டாடும் சில அரிய மனிதர்களை நினைவு கூட்டுகிறது கவிதை.
துக்கம், இழப்பு, பிரிவு எல்லாம் வாழ்வின் இன்றியமையாப் பகுதிகளே என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மெய்யியலாளர்கள் சொல்லி வரும் கடுமையான உண்மையை இவ்வளவு அழகியலோடு சொல்ல முடியுமா! வியப்பாக இருக்கிறது.
மேல் நோக்கிப்பறக்க ஆசை போதும்உள் நோக்கிப்பறக்கத்தான்சிறகு தேவை
என்கிறார் ஒரு கவிதையில். மொத்தக் கவிதையே இவ்வளவுதான்! இரு கை விரல்களின் எண்ணிக்கையில் மாபெரும் சிந்தனைக்குரிய மெய்யியலைத் தந்து அசத்துகிறார்!
அடுத்து வரும் கவிதை... இது என்ன வகைமை எனப் படித்து விட்டு நீங்களே தீர்மானியுங்கள்!
ரயில்பூச்சிகள் இரண்டும்ஒன்றின் மேல் ஒன்றுஊர்ந்து கொண்டிருப்பதைஇங்கிதமின்றிகண்கொட்டாமல் வாய்பிளந்துபார்க்கும் என்னைதன் இலை உதிர்த்துவேறிடம் நகரப் பணிக்கிறதுமரக்கிளை.
இது அதுவரை நான் படிக்காத பாடுபொருள்! படித்ததும் பதின்வயதுக் கவிஞர் ஒருவரின் நாட்குறிப்பேட்டில் ஒரு பக்கத்தை எட்டிப் பார்த்தது போல் இருந்தது! கவிதையில் நகைச்சுவை எனும் வகைமை, அதிகம் மை படாத பகுதி. அந்த வகையில் வரும் இது போன்ற கவிதைகளைக் கவிஞர் அதிகம் முயலலாம்.
ஆமாம்எழுத வேண்டும்கவிதைதான்கடவுளைக் குறித்துத்தான்பேனாவைப் பிடிக்கையில்சிறு சந்தேகம்கைதாகப் போவதுநானாசொல்லா
என்று ஒரு கவிதை, படைப்புலகின் மீதான இன்றைய ஒடுக்குமுறையைப் பதிவு செய்கிறது. இத்தகைய ஊமைக்குத்துகள் உறைக்க வேண்டியவர்களுக்குக் கட்டாயம் உறைக்கும். அப்படிப்பட்டவர்களோடு அதிகம் பழகியவன் எனும் முறையில் அது எனக்கு நன்றாகத் தெரியும். இப்படிப்பட்ட கவிதைகளைத் தோழர் தொடர வேண்டும்!
வெகு நேரமாய்ஆடிக் கொண்டிருக்கும்ஊஞ்சலில்அமைதிப் பேச்சுவார்த்தைநடந்த வண்ணமிருக்கிறதுஒற்றை இலைக்கும்லேசான காற்றுக்கும்.
இப்படி ஒரு கவிதை! படித்துக் கொண்டிருந்தபொழுதே பழைய ஆங்கிலத் திகில் படம் ஒன்றில் (Terminator?) பார்த்த ஒரு காட்சி மனக்கண்ணில் திரையாடியது!
இசை பற்றி இவர் எழுதியிருக்கும் சில கவிதைகள் அதன் மீது இவருக்கு இருக்கும் பெருவிருப்பையும் பெருமதிப்பையும் காட்டுகின்றன.
கள்வெறி போதைஅறிந்ததில்லைகரைமிகு காமம்கொண்டாடியது இல்லைதனை மறந்ததில்லைஆனால்இசை அறிவேன்
என்கிற கவிதையை இசை ஒரு மனிதராக வந்து படித்துப் பார்த்தால் மகிழ்நீர் விட்டு அழும்.
இதே போல் காதல் பற்றியும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார். அதில் முதன்மையானது,
கடலென இருக்கும் என்னைச்சிறு பறவையெனக் கடக்கிறதுகாதல்
என்பது. திரை இயக்குநர்கள் கோடிகளைக் கொட்டிக் கொண்டு வரும் காட்சிப் பெருமண்டங்களை (visual magnificent) மூன்றே வரிகளில் கொண்டு வந்து காட்டி வாசகரைத் திக்குமுக்காடச் செய்கிறார் இவர்!
தித்திக்கும் காதல் கவிதைகள் அளவுக்குக் கசக்கின்ற காதல் பிரிவுக் கவிதைகளும் பல உள்ளன.
காற்றின் காகிதமாய்வெவ்வேறு திசைகளில்பறக்கத் துவங்கியநம்மைக்கேலி பேசிச்சிரிக்கின்றனஇதுவரை நாம்எழுதிய சொற்கள்.
இதை அப்படியே அச்செடுத்து, அற்பக் காரணங்களுக்கெல்லாம் முறித்துக் கொண்டு போகும் இளம்சோடிகளுக்குச் சட்டமிட்டுக் கையில் கொடுக்கலாம். இப்படி அசத்தலான காதல் கவிதைகள் நிறைய இருக்கின்றன புத்தகத்தில்.
உரசும்வெப்பச் சூட்டில்மலர்முகிழும் அதிசயம்இந்தக் கூட்டுத்தீயில்மட்டுமே
இப்படியும் ஒரு கவிதை! காமத்தை இப்படித் துளியும் விரசம் இல்லாமல் பாடுவது என்பது அரிதினும் அரிதாகச் சிலருக்கு மட்டுமே வசப்பட்ட கலை! அதை நிகழ்த்திக் காட்டித் தமிழ்ப் படைப்புலகில் தான் தவிர்க்க முடியாதவர் என்பதை உணர்த்தியிருக்கிறார் ரேவதி ராம்.
ஆனால் வகை வகையாய் இத்தனை கவிதைகள் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட முக்கியமானவையாய் நான் பார்ப்பவை இதிலுள்ள வேறு சில கவிதைகளை. இதோ அவற்றுள் ஒன்றைப் பாருங்கள்!
நெருப்பின் சூடும்மழையின் குளிரும்கொண்ட நிறைமேகம்அவன் மீசை
இப்படி ஆணை வருணிக்கும் கவிதைகள் ஓரிரண்டு இந்தப் புத்தகத்தில் குறிஞ்சி மலராய்ப் பூத்துக் கிடக்கின்றன!
ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள் பற்றி இரண்டு ஆண்டுகள் முன் அருஞ்சொல் இதழில் ‘இரு உலகங்கள்’ எனும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு தொடரை எழுதி முடித்தார் எழுத்தாளர் அராத்து அவர்கள். அதன் இரண்டாவது வாரத்திலேயே அவர் பெண்கள் மீது வைத்த ஒரு முக்கியமான குற்றச்சாட்டு “பெண்களை வருணித்து ஆண்கள் காலங்காலமாக எவ்வளவோ எழுதிக் குவித்திருக்கிறார்களே? மறுபுறம் ஆண்களை வருணித்துப் பெண்கள் எழுதியவை எத்தனை இருக்கும்?” என்பதுதான். சங்கக் காலம் முதல் எடுத்துக் கொண்டாலும் எண்ணிக்கை மிகச் சொற்பம் என்கிறார் அவர்.
இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுக்குக் கொஞ்சமாவது தீர்வு தரும் வகையில் ஆண் பற்றிய சில கவிதைகளை இந்நூலில் பார்க்க முடிவது ஆறுதல்.
இப்படிப் பல வகையிலும் படித்தாக வேண்டிய கவிதைத் தொகுதியாகத் தமிழ் வாசிப்பு எனும் பெருங்கடலின் சிற்றலை மீது வந்து அமர்ந்திருக்கிறது இந்தத் தும்பி!
தானே சொந்தப் பதிப்பகம் தொடங்கிப் புத்தகத்தைத் வெளியிட்டிருக்கிறார் கவிஞர். விலை 120 ரூபாய். படித்து மகிழ மட்டுமில்லை பிறந்தநாள் பரிசாக, திருமண அன்பளிப்பாக – இப்படிப் பல வகைகளிலும் மற்றவர்களுக்கு வழங்கி மகிழ்விக்கவும் சிறந்த தேர்வு! அமேசானிலேயே வாங்கலாம். இதோ இணைப்பு - https://amzn.to/49xI7iF
பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்த இனிய நூல் சென்றடைய உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
0 comments:
கருத்துரையிடுக