.

சனி, ஜூலை 15, 2023

இலக்குவனார் திருவள்ளுவனின் கலைச்சொல்லாக்க வழிகாட்டி! | 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை

chollAkkam - neRimuRaiyum vazhimuRaiyum
உலகத் தமிழ் நேசர்களே!

கடந்த வாரம் - அதாவது 2023 சூலை மாதம் 7, 8, 9 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு எனது கட்டுரை ஒன்றும் தேர்வாகியிருந்தது. எனக்கு மாறாக என் அம்மா புவனேசுவரி அவர்கள் கட்டுரையை முன்வைக்க தம்பி ஜெயபாலாஜி, சித்தி சியாமளா, தங்கை ஸ்ரீதேவி, மைத்துனர் ரசாக் ஆகியோர் உடன் இருந்தனர். வாழ்வில் முதன் முதலாக உலகளவிலான மாநாடு ஒன்றில் என் படைப்பு இடம்பெற்றது மிகவும் பூரிப்பாக இருந்தது! இந்த ஆய்வுக் கட்டுரையை எழுத ஊக்கமளித்து, முறையாக எப்படி அனுப்ப வேண்டும் என்பது வரை எனக்கு வழிகாட்டியாக விளங்கி இந்தப் பெருமைக்கு மூலக்காரணராக இருந்த உயர்திரு.இலக்குவனார் திருவள்ளுவன் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியுடன் கட்டுரை இதோ உங்கள் பார்வைக்காக.
* * * * *
நம் தமிழ் கூறும் நல்லுலகம் அண்மைக்காலமாகவே தமிழ்ப் பற்று மிக்க நல்லுலகமாக மாறி வருவதை நாம் பார்க்கிறோம்.

குமுக ஊடகங்களில் அன்றாடம் யாரேனும் சிலர் வழக்கில் உள்ள ஏதாவது ஒரு சொல்லைக் குறிப்பிட்டு அது தமிழ்ச் சொல்லா இல்லையா எனக் கேட்கிறார்கள், சிலர் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் கேட்கிறார்கள், சிலர் தங்கள் குழந்தைக்குச் சூட்டத் தூய தமிழில் பெயர் பரிந்துரைக்கக் கோருகிறார்கள். இப்படிப் பல தமிழ் சார்ந்த தேடுதல்கள் நாள்தோறும்.

இப்படி ஓர் ஆர்வத்தைத்தான் நம் மக்களிடம் காண வேண்டுமென்று தமிழ் அறிவுலகம் பல்லாண்டுக் காலமாய் விழி பூத்துக் கிடந்தது. அவ்வகையில் தாய்மொழி ஆர்வம் கொண்டவர்களாக நம் மக்கள் மாறி வருவது ஈடு இணையற்ற மகிழ்ச்சிதான்.

அதே நேரம் ஆர்வம் மிகுந்திருக்கும் அளவுக்கு ஆர்வக்கோளாறும் மிகுந்திருப்பதை நாம் மறுக்க முடியாது. கலைச்சொல்லாக்கம் எனும் பெயரில் பேசுபுக்கு முதலான குமுக ஊடகங்களில் பலர் பரிந்துரைக்கும் சொற்கள் சமயங்களில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழில் கலந்துள்ள சமற்கிருதச் சொற்களைத் தமிழ் என்றெண்ணி அவற்றைப் பயன்படுத்திக் கலைச்சொல் படைப்பது, ஓர் ஆங்கிலச் சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள் தரும் என்பதைக் கூட உணராமல் ஐயம் கேட்பவர் எந்தப் பயன்பாட்டுக்குக் கேட்கிறாரோ அதை மட்டும் மனத்தில் கொண்டு புதுச் சொல் படைப்பது, கேட்கப்படும் சொல்லுக்கு ஏற்கெனவே தமிழில் சொல் இருக்கிறதா இல்லையா என்பதையே பார்க்காமல் தேவையே இல்லாமல் ஒரு புதுச் சொல்லை உருவாக்குவது இப்படிக் கலைச்சொல்லாக்கம் எனும் துறை இங்கே படும் பாடு கொஞ்சநஞ்சமில்லை.

ஆனால் இதற்கெல்லாம் குறிப்பிட்ட தனி மனிதர்களைக் குறை சொல்லியும் பயனில்லை. காரணம், தமிழில் ஏராளமான கலைச்சொல் அகராதிகளும் நிகண்டுகளும் இருந்தாலும் புதிதாகக் கலைச்சொற்களை உருவாக்குவது எப்படி என்பதற்கான வழிகாட்டல் போதுமான அளவில் இங்கு இல்லை.

இந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக ஐயா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் படைத்திருப்பதுதான் சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும் எனும் நூல்! 2020ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் இந்நூல் தமிழில் புதிய சொற்களைப் படைக்க விரும்புபவர்களுக்கு ஒரு தன்னிகரற்ற வழிகாட்டி! அதை ஆராய்வதே இக்கட்டுரை.

ஓர் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல் படைப்பதாக இருந்தால் அந்தச் சொல்லுக்கு முதன்மையாக என்ன பொருள், மேலும் வேறு என்னென்ன பொருள்களிலெல்லாம் அது பயன்படுத்தப்படுகிறது என்பவற்றை மட்டும் ஆராயாமல் குறிப்பிட்ட சொல் ஆங்கிலத்துக்கு எந்த மொழியிலிருந்து வந்தது, அந்த மூலமொழியில் அதன் பொருள் என்ன, வேர் என்ன எனவெல்லாம் எல்லை வரை ஆராய்ந்து அதன் பின் உரிய தமிழ்ச் சொல்லைப் படைப்பதுதான் துறைசார் அறிஞர்களின் வழக்கம்.

அப்படி முறையாக, உலகத் தரம் வாய்ந்த கலைச்சொற்களை உருவாக்கும் செம்மாந்த சொல்லாய்வறிஞர்களில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களும் ஒருவர் என்பதை அனைவரும் அறிவர். அப்பேர்ப்பட்டவர் தன்னைப் போலவே மற்றவர்களும் சிறப்பான கலைச்சொற்களை உருவாக்க இப்புத்தகத்தின் மூலம் வழிகாட்டுகிறார்.

மொத்தம் 13 படலங்கள் (chapters) கொண்ட இந்நூலில் இதன் பெயருக்கேற்ப, ஒரு கலைச்சொல்லை எப்படியெல்லாம் உருவாக்க வேண்டும் எனவும் எப்படியெல்லாம் உருவாக்கக்கூடாது எனவும் நெறிமுறைகளை முன்பாதியில் ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கிறார். அடுத்து தகுதியான சொற்களை உருவாக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனும் வழிமுறைகளைப் பின்பாதியில் அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

இப்படி நூல் நெடுக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் நெறிமுறைகள், வழிமுறைகள் ஆகியவற்றில் மிக மிகச் சிறந்தவை என என் சிற்றறிவுக்கு எட்டிய ஏழே ஏழை மட்டும் இங்கே விரித்துரைக்க விழைகிறேன்!

1. சுருக்கம்:

ஒரு கலைச்சொல் என்பது சிறியதாக இருக்க வேண்டும். வெவ்வேறு சொற்களைக் கோத்துக் கோத்து நீளமான சொல்லாகப் படைப்பது, குறிப்பிட்ட சொல்லுக்கான பொருள் விளக்கத்தைத் தரும் சொற்றொடரையே கலைச்சொல்லாக முன்வைப்பது போன்றவை கூடாது என்பது நூல் சொல்லும் முதல் பரிந்துரை.

‘இன்றைய தேவை குறுஞ்சொற்களே’ என்கிற தலைப்பில் இதற்காகத் தனிப் படலமே ஒதுக்கியுள்ள நூலாசிரியர், “சுருக்கமாக அமையாத சொற்கள் பெரும்பாலும் பயன்பாட்டை இழக்கின்றன” என்கிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, ‘Caliper’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘முடம் நீக்க உதவும் சாதனம்’ என ஒரு சொற்றொடரே கலைச்சொல்லாகப் பரிந்துரைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இப்படிக் கலைச்சொல் எனும் பெயரில் நீள நீளமான சொற்சேர்க்கைகளைப் பரிந்துரைப்பதால் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் ஆர்வமுள்ளவர்கள் கூடச் சுருக்கம் கருதி ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தி விடுகின்றனர் என்பது அவர் கவலை.

ஆகவே ஊன்றி நடக்க உதவும் கோலை ஊன்றுகோல் என்பது போல் காலணியுடன் இணைத்து அணிந்து ஊன்றி நடக்கப் பயன்படுத்தும் Caliper-ஐ ‘ஊன்றணி’ எனலாம் என்கிறார்.

இப்படி Centrifuge என்பதற்குப் பிரிவை, Letter of Credit என்பதற்கு உத்தரவாத மடல், Scrapper box என்பதற்கு செதுவைப்பெட்டி எனச் சுருக்கமும் செறிவும் சொல்லழகும் மிக்க பல கலைச்சொற்கள் இந்தப் படலத்தில் உரிய விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.

2. விளக்கம் உடைமை:

கலைச்சொல் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பது எவ்வளவு முதன்மையானதோ அதை விட முதன்மையானது அது புரியும்படி இருக்க வேண்டும் என்பது. சுருக்கமான சொல்லைப் பரிந்துரைப்பதாக நினைத்துக் கொண்டு யாருக்குமே புரியாத வகையில் கலைச்சொல்லை உருவாக்கி விடக்கூடாது என்பது நூல் சொல்லும் நெறிமுறை.

இவ்வகையில் நன்னூல் கூறும் குன்றக் கூறல், குறைபடக் கூறல், கூறியது கூறல் முதலான நூற்குற்றங்கள் ஐந்தும் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க்கு இன்மை என நூலழகுகள் பத்தும் கலைச்சொல்லாக்கத்துக்கும் பொருந்தும் என்கிறார் நூலாசிரியர். நூல் என்பதே சொற்றொடர்களின் திரட்டுதான் என்பதால் நூலாக்கத்துக்குப் பொருந்தும் இலக்கணங்கள் சொல்லாக்கத்துக்கும் பொருந்துவதுதானே இயற்கை எனவும் அறிவினா எழுப்புகிறார்.

3. தமிழ்ச்சொல்லே கலைச்சொல்:

முன்பே நாம் பார்த்தது போல், பலர் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கொண்டு புதிய கலைச்சொற்களைப் படைத்து விடுகிறார்கள்; சிலர் எந்த அயல்மொழிச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல் தேவையோ அதையே ஒலிபெயர்ப்பு (transliteration) செய்து தமிழில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார்கள். இவற்றையெல்லாம் கண்டிக்கும் இந்நூல், “நம் தாய்மொழியிலேயே ஏராளமான சொற்செல்வம் கொட்டிக் கிடக்கும்பொழுது பிறமொழிக் கலப்பு, ஒலிபெயர்ப்பு எனும் பெயர்களில் நம்மை விட ஏழ்மையான மொழிகளிடம் நாம் ஏன் கடன் வாங்க வேண்டும்?” என உரத்த கேள்வி ஒன்றைத் தமிழ் அறிவுலகுக்கு முன்வைக்கிறது.

கொட்டிக் கிடக்கும் அந்தச் சொற்செல்வத்தின் முகவரியாக நூலாசிரியர் கைகாட்டுவது சங்க இலக்கியங்களை. இன்று புதிய சொற்களாகக் கருதப்படும் யாவும் உண்மையில் சங்கச் சொற்களின் அடிப்படையிலானவையே எனக் கூறுபவர் நமக்குத்தான் அது தெரியவில்லை என்கிறார். அள்ள அள்ளக் குறையாத கருவூலம்தான் சங்க இலக்கியம் என வருணிப்பவர் சங்கச் சொற்களிலிருந்து புதிய கலைச்சொற்களை மீளாக்கம் செய்வதைத்தான் தமிழரின் கலைச்சொல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான எளிய, சரியான தீர்வு என முன்மொழிகிறார்.

முன்மொழிவோடு நில்லாமல் அதைச் செயல்படுத்தியும் காட்டும் விதமாக, இன்றைய புத்துலக வாழ்க்கை முறையில் நாம் பயன்படுத்தும் ‘வால்வு’ எனும் சாதனத்துக்குத் திருக்குறளில் உள்ள ‘அதர்’ எனும் சொல் எப்படிப் பொருந்தி வருகிறது என நூலாசிரியர் விளக்குவது தமிழ் உணர்வுள்ளவர்களைச் சிலிர்க்கச் செய்யும் பகுதி.

இப்படிப் பண்டைத் தமிழ் நூல்களிலிருந்தே சொற்களைத் தேர்ந்தெடுத்து இலக்கண முறைப்படி சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தி இன்றைய வாழ்க்கை முறைக்குத் தேவையான பற்பல கலைச்சொற்களை விதவிதமாகப் புத்தகம் முழுவதும் படைத்துக் காட்டியுள்ளார் இதன் ஆசிரியர். இதைப் பற்றி விளக்கும்பொழுது ஓரிடத்தில், “எவ்வாறு மெய்யுலகில் நம்மால் ஒரு நுண்மணலைக் கூடப் புதிதாக உருவாக்க முடியாதோ அப்படித்தான் சொல்லுலகும்” எனக் கூறுகிறார்!

ஆம்! இஃது உண்மைதானே? எப்படி நம்மால் முற்றிலும் புதியதாக ஒரு சொல்லை உருவாக்கி விட முடியும்? ஏற்கெனவே இருக்கும் சொற்களின் வேரிலிருந்தோ சொற்களை ஒன்றோடொன்று கோத்தோதானே இன்னொரு சொல்லை உருவாக்குகிறோம்! ஆக புதிதாக நாமே உருவாக்கிய சொல் என இங்கு ஒன்றுமே கிடையாது என்பது மறுக்க முடியாதது.

4. மீள்பயன்பாடு:

அற்றைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து இற்றைத் தேவைக்கான சொற்களை உருவாக்க முடியும் என்ற நூலாசிரியர் அதைக் கூட எல்லாவற்றுக்கும் நாம் செய்து கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிறார்.

ஒவ்வொரு தேவைக்கும் புதிது புதிதாக நாம் சொற்களை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; பண்டைய நூல்களில் உள்ள வழக்கற்றுப் போன சொற்களை முடிந்த வரையில் அப்படியே மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்பதே இந்தக் கருத்து.

இதற்கு எடுத்துக்காட்டாக, ‘அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே!’ எனும் தலைப்பில் அறிவியல் நுட்பம் மிக்க சங்க இலக்கியச் சொற்களை வகை வகையாக, தொகை தொகையாக ஒன்பது பக்கங்களுக்கு எழுதியுள்ளார் நூலாசிரியர்.

வானறிவியல், விலங்கியல், நிலவியல், நீரியல், வேளாணியல் என ஒவ்வொரு துறையிலும் மிக நுட்பமான வேறுபாடுகளோடு எப்படி எப்படியெல்லாம் பழங்காலத் தமிழில் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை உரிய விளக்கங்களுடன் கூறும் இப்பகுதி தமிழின் சொல்வளம் குறித்துப் பெரும் மலைப்பை ஏற்படுத்துகிறது.

கூடவே “தமிழால் சொல்ல இயலும்! தமிழில் சொல்ல இயலும்” எனும் புத்தகத்தின் முழக்கம் சரியானதே எனும் நம்பிக்கையும் துளிர்க்கிறது.

5. நேரடி மொழிபெயர்ப்பு கூடாது:

ஒரு சொல்லின் கருப்பொருள், பயன்பாட்டுப் பின்னணி, உருவான தன்மை போன்றவற்றை அறியாமல் நேரடியாக அப்படியே மொழிபெயர்ப்பது இந்நூலில் கண்டிக்கப்படும் இன்னொரு முதன்மையான விதயம்.

இதைப் படித்தபொழுது அண்மையில் பார்த்த வேறொரு நூல் நினைவுக்கு வந்தது. அதில் அதன் ஆசிரியர் எழுதியிருக்கிறார், “குழந்தைகளுக்குப் ‘படுக்கையறைக் கதைகள்’ சொல்வதை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்” என்று. ‘Bed-time stories’ என்பதை அவர் தமிழ்ப்படுத்திய அழகு இது!

சொல்லுக்குச் சொல் நேரடியாக மொழிபெயர்ப்பது நம்மை எங்கே இட்டுச் செல்லும் என்பதற்கு இஃது ஒரு நகைக்க வைக்கும் – அதை நேரம் பதைக்க வைக்கும் - எடுத்துக்காட்டு. இதே போல் ‘ஆட்டோ’வைத் ‘தானி’ என நாம் குறிப்பிடுவது எவ்வளவு தவறான சொல்லாடல் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது.

“‘ஆட்டோ’ என்றால் தானாக இயங்கக்கூடியது என்று பொருள் கொண்டு ஆட்டோவைத் தானி என்கிறோம். ‘ஆட்டோ மொபைல்’ என்பது ‘இயந்திரத்தால் இயங்கும் ஊர்தி’ என்று பொருள் தருவது. அதனைப் பற்றி எண்ணாமல் தானாக இயங்குவது என்று கருதித் ‘தானி’ என்று சொல்ல அச்சொல் தமிழார்வலர்கள் வட்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ள நூலாசிரியர், தொடர்ந்து ‘ரிக்சா’ எனும் சப்பானியச் சொல்லுக்கு இழுத்துச் செல்லப்படும் வண்டி என்பதுதான் பொருள் என்பதால் இயந்திரத்தால் அல்லது பொறியால் இழுக்கப்படும் ‘ஆட்டோரிக்சா’ எனும் முழுப் பெயர் கொண்ட ‘ஆட்டோ’வுக்குப் ‘பொறி இழுவை’ என்பதே பொருத்தமான பெயர் என்கிறார்.

6. ஒரு சொல் பல பொருள் தவிர்ப்பு

ஒரே சொல்லை வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்துவது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமில்லை தமிழில் சொல் வங்கி இல்லை என்பது போன்ற தவறான தோற்றத்தையும் தருகிறது. இதற்கு நூல் தரும் சிறந்த எடுத்துக்காட்டு ‘துறை’ எனும் சொல்.

நீர் நிலைப் பகுதி, பா வகை போன்ற பல பொருள்களில் சங்கக் காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருக்கும் சொல்தான் துறை என்பது. உட்பிரிவு எனும் வேர்ப்பொருள் கொண்ட சொல் என்பதால் இன்று இதை ஆங்கிலத்தின் ‘Department’ எனும் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு பொருள்களில் பயன்படுத்தியபொழுது வராத குழப்பம் இப்பொழுது வருகிறது. காரணம், அரசின் செயலகப் பிரிவுகளையும் துறை என்கிறோம்; அவற்றின் கீழ் இயங்கும் சிறு பிரிவுகளையும் துறை என்கிறோம். தனித் தனியாகப் பயன்படுத்தும்பொழுது எதுவும் தெரியாவிட்டாலும் துறைசார் ஆவணங்களிலும் வேறு பல சூழல்களிலும் இஃது எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிட்ட சூழல்களில் இயங்குபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனவே இப்படி வெவ்வேறு பொருள்களுக்கு ஒரே சொல்லைப் பரிந்துரைக்கக்கூடாது என வலியுறுத்தும் நூலாசிரியர் குறிப்பிட்ட இந்தச் சொல்குழப்பத்துக்கான தீர்வையும் வழங்குகிறார்.

சங்கப் பாடல்களில் இதே துறை எனும் சொல் வரும் இடங்களில் அதன் மேல்பிரிவைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ‘திணை’ எனும் சொல்லை நாமும் இன்று செயலகப் பிரிவுகளைக் குறிக்கப் பயன்படுத்தலாம் என்று பண்டைத் தமிழ் இலக்கியத்திலிருந்து இதற்கான தீர்வை முன்வைக்கிறார். இது போல் பல்பொருள் பயன்பாடு கொண்ட வேறு பல சொற்களுக்கும் உரிய அழகான சொற்களை அளித்துள்ளார்.

தவிர சங்க இலக்கியச் சொற்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சற்றுப் பெரிய சொற்களை இலக்கண முறைப்படி எப்படிச் சுருக்கலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கியுள்ளார்.

கருவியிசைக் கலைஞர் என்பதற்கு மாறாக இயவர், உப்பு விற்பனையாளர் என்பதற்கு மாறாக உமணர், வானூர்தி ஓட்டுநர் என்பதற்கு மாறாக வலவர் என நீளும் அந்தப் பரிந்துரைகள் மிகவும் சுவையானவை!

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூலிலேயே பெரிதும் வியப்பூட்டும் கருத்து, சொல்லாக்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்த வழிகாட்டல்தான். இப்பட்டியலில் முத்தாய்ப்பாக நான் குறிப்பிட விரும்புவதும் அதுதான்.

7. தமிழ் வழிச் சிந்தனையில் கலைச்சொல்லாக்கம்:

அஃதாவது ஒவ்வோர் அயல்மொழிச் சொல்லாக எடுத்து வைத்துக் கொண்டு அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை உருவாக்கும் இன்றைய போக்கே தவறு என்கிறார் நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்! இப்படி அயல்மொழி சார்ந்தே கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபடுவதால்தான் நாம் உருவாக்கும் தமிழ்ச் சொற்களும் அயல்மொழி வாடை வீசுவதாக அமைகின்றன என்கிற அவர் கருத்து வியப்பினால் தன்னைப் போல நம்மைத் தலையாட்ட வைக்கிறது!

தமிழர்களின் இன்றைய வாழ்வியலுக்குத் தேவையான கலைச்சொற்களைத் தமிழ் மொழி சார்ந்த சிந்தனையில் முதலில் உருவாக்க வேண்டும் என்றும் பிறகு வேண்டுமானால் மிச்சமுள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களைத் தனியே உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் நூலாசிரியர் கூறுகிறார்.

இது முற்றிலும் புதுமையான சிந்தனை!

சொல்லாக்க அணுகுமுறையையே புரட்டிப் போடும் கண்ணோட்டம்!

இது சரிதானே? நாம் ஏன் எப்பொழுதும் ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லையே தேடுகிறோம்?

பெரும்பாலும் நாம் இன்று உருவாக்கும் கலைச்சொற்கள் எல்லாமே வெளிநாட்டினர் உருவாக்கிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவற்றுக்கானவைதாம். எனவே அந்தச் சொற்களை ஒட்டித்தாம் அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை நாம் உருவாக்க முடியும்; மறுப்பதற்கில்லை.

அப்படிப் பார்த்தால் தமிழர்கள் உருவாக்கிய சாதனங்களோ, தொழில்நுட்பங்களோ எதுவுமே இல்லையா? நிறையவே உள்ளன. உலகின் முதன்மையான 2% அறிவியலாளர்களுள் குறைந்தது 100 பேர் தமிழ்நாட்டவர்கள் என்கிறது அமெரிக்க இஃடேன்போர்டு பல்கலைக்கழகத்தின் (Stanford University) தரவு. இவர்களுள் எத்தனை பேர் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கும் புதுப்புனைவுகளுக்கும் தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள் எனப் பார்த்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.

அவ்வளவு ஏன், எளிமையான மாவரைபொறியை எடுத்துக் கொள்வோம். வீட்டில் நாம் இட்டலி மாவு அரைக்கும் இந்தப் பொறி கோயம்புத்தூர் தமிழர் உருவாக்கியதுதானே? அதற்கு ஏன் அவர் தொடக்கத்திலேயே ‘மின்னுரல்’ என்று பெயர் வைக்காமல் ‘கிரைண்டர்’ என்று ஆங்கிலத்தில் வைத்தார்?

ஆக நூலாசிரியர் சொல்வது போல் இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் நமக்குத் தமிழ் சார்ந்த சிந்தனைப்போக்கு இல்லை; அத்தகைய சிந்தனைப்போக்கைக் கட்டமைக்கும் தாய்மொழிக் கல்வி முறை இல்லை என்பதுதான்.

அப்படி இருந்திருந்தால் இன்றைய புதிய கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் நாம் உருவாக்காவிட்டாலும் அவை நம் மண்ணில் வந்திறங்கிய நாளிலேயே அவற்றுக்கு நம் மொழி சார்ந்த கண்ணோட்டத்தில் உடனுக்குடன் தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கியிருப்போம்.

சரி, அப்படிப்பட்ட சொற்களை எப்படி உருவாக்குவது என்று கேட்டால் அதற்கும் இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது.

பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் காலத்தில் இருந்த பொருட்களுக்கு எப்படிப் பெயரிட்டார்கள் என்பது நூலில் விளக்கப்பட்டுள்ளது.

சுகர்கேன் எனும் சொல்லுக்கு இன்று புதிதாக நாம் பெயரிட முற்பட்டால் எப்படிப் பெயரிட்டிருப்போம்? சீனிப் பிரம்பு, சருக்கரை மூங்கில் என எப்படியெப்படியோ வைத்திருப்போம். ஆனால் பண்டைத் தமிழர்கள் இப்படி அதன் பயன்பாட்டைப் பற்றியோ வகைப்பாட்டைப் பற்றியோ எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் வெறுமே அதன் நிறத்தை அடிப்படையாக வைத்து அழகாக எளிமையாகக் ‘கரும்பு’ எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். கருப்பாக இருப்பதால் கரும்பு.

இதே போல் உருளையாக இருக்கும் கிழங்கு என்பதால் ‘உருளைக்கிழங்கு’.

இப்படிப் பண்டைத் தமிழர்கள் பொருட்களின் வடிவம், நிறம் போன்ற பல எளிய கண்ணோட்டங்களில் மிகச் சுருக்கமான கலைச்சொற்களை உருவாக்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்” எனும் நூலாசிரியர் இதே முறையைக் கடைப்பிடித்தால் இதே போல் செவ்வையான கலைச்சொற்களை நாமும் இன்றைய தேவைக்கேற்ப உருவாக்க முடியும் என நம்பிக்கை ஊட்டுகிறார்.

கலைச்சொல்லாக்கம் பற்றிய ஆய்வின் ஊடே வேறு சில ஆய்வுப் பார்வைகளையும் நம்மிடம் விதைத்துச் செல்லப் புத்தகம் தவறவில்லை.

✓ திருக்குறளும் சங்கக் கால வரம்புக்குள் வருவதே எனும் கருத்து.

✓ உலகம் சுழல்கிறது எனும் உண்மையை அன்றே பதிவு செய்த திருவள்ளுவரின் பெருமை.

✓ வடமொழி எனத் தவறாகக் கருதப்படும் சில சொற்களின் தமிழ்த் தன்மை.

✓ உடலில் இருக்கும் 10 வகைக் காற்றுக்கான வடமொழிப் பெயர்கள் தமிழிலிருந்து போனவையே எனும் துணிபு.

✓ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மேகங்களை வகைப்படுத்திப் பெயரிட்ட தமிழர் அறிவியல்.

இப்படிப் பல புறனடைக் கருத்துக்களும் நூலில் ஆங்காங்கே மின்னுகின்றன.

கலைச் சொல்லாக்கத்தைப் பொறுத்த வரையில் இதுவரை பார்த்த ஏழு கருதுகோள்கள் தவிர

1. தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்ற பழந்தமிழ் நூல்கள் தரும் சொல்லாக்கம் பற்றிய வழிகாட்டல்கள் இப்புத்தகத்தில் நினைவு கூரப்பட்டுள்ளன.

2. ஒரு கலைச்சொல்லை எப்படி எப்படியெல்லாம் உருவாக்கலாம் என்பது குறித்து இதற்கு முன் தமிழறிஞர்கள் எழுதி வைத்துள்ள கருத்துக்கள் ஐந்தே ஐந்து வகை என மணிச்சுருக்கமாகப் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

3. ஒவ்வொரு படலத்திலும் அதன் தலைப்புக்கேற்ப நிறைய கலைச்சொற்கள் உரிய விளக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 200 எண்ணிக்கை கொண்ட இச்சொற்கள் புத்தகத்தின் முடிவில் பட்டியலாகவும் அளிக்கப்பட்டுள்ளன.

இப்படி உலகத் தரம் வாய்ந்த கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்குவது எப்படி என்பதற்கு இன்னும் பல சீரிய வழிகாட்டல்களும் அரிய ஆய்வுக் கருத்துக்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன.

ஆக கலைச்சொல்லாக்கத்தில் ஏற்படும் குளறுபடிகள், அவற்றுக்கான தீர்வுகள், தரம் வாய்ந்த கலைச்சொற்களை உருவாக்குவதற்கான நெறிமுறைகள், அதற்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என அனைத்தையும் எடுத்துரைப்பதோடு இவை எல்லாவற்றுக்கும் வேரூட்டமாகக் கலைச்சொல்லாக்கக் கண்ணோட்டத்தையே தமிழ் சார்ந்து தகவமைக்கும் இந்நூல் தமிழின் மிக முக்கியமான வரவு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் எழுதியுள்ள இந்த அரிய நூலை நாமும் படிப்போம்! மாணவர்கள் முதல் மாட்சிமை தாங்கிய பெருமக்கள் வரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தித் தமிழ்க் கலைச்சொல்லாக்கத் துறையைச் சரியான திசையில் செலுத்துவோம்!
❀ ❀ ❀ ❀ ❀
படம்: நன்றி மலர்க்கொடி வெளியீட்டகம்.  
தொடர்புடைய பதிவு:

தொடர்புடைய வெளி இணைப்புகள்:

பதிவு பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் உங்களுக்குப் பிடித்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால் கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆகா! மிக்க நன்றி ஐயா! எத்தனை காலம் கழித்துப் பதிவிட்டாலும் முதல் ஆளாக வந்து கருத்திடும் நீங்கள் இருக்கும் வரை தமிழ்ப் பதிவுலகம் உயிர்ப்போடு இருக்கும்.

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்