அப்பேர்ப்பட்ட
விளையாட்டு உலகத்துக்குத் தமிழ்நாட்டின் கொடைகள் பல. கபடி, கில்லி, பட்டம், பம்பரம் என நீளும்
அந்தப் பட்டியலில் வித்தியாசமான ஒன்றாக இடம் பிடிப்பதுதான் ‘நண்டு ஊருது, நரி ஊருது’ விளையாட்டும்!
“அட! அது ஒரு
விளையாட்டா? சிறு குழந்தைகளுக்குக் காட்டும் ஒரு சாதாரண வேடிக்கைதானே?” என்று
நினைக்கிறீர்களா? உங்களைப் போல்தான் நானும் நினைத்துக்
கொண்டிருந்தேன்; ‘அந்த’ நூலைப் படிக்கும் வரை.
அண்மையில், ‘அக்குப்பிரஷர்’ பற்றிய ஒரு நூலைப்*
படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘வர்மக்கலை’ என்ற பெயரில்
தமிழ்நாட்டுச் சித்தர் பெருமக்களால் கண்டுபிடிக்கப்பட்டுப், பின் சீனத்துக்குப்
போய், (உபயம்: போதிதர்மர்?), அங்கேயிருந்து ‘அக்குப்பிரஷர்’ என்ற பெயரில் உலகெங்கும்
பரவிய இந்த மருத்துவ முறையின்படி, நம் உடம்பில் ஆங்காங்கே பல ‘ஆற்றல் புள்ளிகள்’ இருக்கின்றன. இவை
ஒவ்வொன்றும் உடம்பின் ஒவ்வோர் உறுப்போடு தொடர்புடையவை. அந்தந்த உறுப்புக்கான
புள்ளியைக் -குறிப்பிட்ட தடவைகள்- அழுத்தி விடும்பொழுது (massage) அந்தந்த உறுப்பில்
இருக்கும் நோய்களும் வலிகளும் தீரும் என்பது இந்த மருத்துவத்தின் அடிப்படை. உலக
நாடுகள் பலவற்றாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அறிவியல்பூர்வமான
மருத்துவ முறைதான் இது.
நான்
படித்த அந்த அக்குப்பிரஷர் நூல், நம் உடம்பில் எங்கெங்கே எந்தெந்த
உறுப்புக்கான ஆற்றல் புள்ளி அமைந்திருக்கிறது என்பதைப் பற்றியது. அதில் குறிப்பிட்டுள்ளபடிப்
பார்த்தால், நம் உடலின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு
உறுப்புகளுக்கான ஆற்றல் புள்ளிகள் இருக்கின்றன என்றாலும் உள்ளங்கைகளிலும்
உள்ளங்கால்களிலும் மட்டும் உடம்பின் எல்லா உறுப்புகளுக்குமான ஆற்றல் புள்ளிகள்
அமைந்திருக்கின்றன. மேலும், விரல் நுனிகள்தாம் உடலின் எல்லா நரம்புகளும் சேரும்
இடங்கள் என்பதால் அவைதாம் உடல் முழுவதற்குமான ஆற்றல் புள்ளிகள் என்றும் அந்த நூல்
சொல்கிறது. அதனால் விரல் நுனிகளையும் உள்ளங்கையையும் மட்டும் நாள்தோறும்
அக்குப்பிரஷர்
முறைப்படி அழுத்திக் கொடுத்துக் கொண்டு வந்தாலே உடலின் எல்லா நோய்களும் நீங்கும்,
உடல் நலமும் பெருகும் என்று அந்த நூலை எழுதிய மருத்துவர் அதில் கூறியுள்ளார்.
அதுவும்
குழந்தைகளுக்கு அக்குப் ‘பிரஷர்’ கூடத் தேவையில்லை அக்கு ‘டச்’ மட்டுமே கூடப்
போதும் என்கிறார். அதாவது, குழந்தைகளுக்கு ஆற்றல் புள்ளிகளின் மீது அழுத்தம்
கொடுக்கக் கூடத் தேவையில்லை, தொட்டுக் கொடுத்தாலே போதுமானது என்கிறார்.
இதைப் படித்தபொழுது எனக்கு ‘நண்டு ஊருது, நரி ஊருது’ விளையாட்டுதான்
நினைவுக்கு வந்தது!
கொஞ்சம் நினைத்துப்
பாருங்கள்! அந்த விளையாட்டின்பொழுது நாம் என்ன செய்கிறோம்? முதலில், “பப்பு... பூவா...” என ஒவ்வோர் உணவுப்
பொருளின் பெயராகச் சொல்லிச் சொல்லிக் குழந்தையின்
விரல் நுனிகளை ஒவ்வொன்றாகப் பிடித்துவிடுகிறோம். பிறகு, பருப்பு கடைவதாகச்
சொல்லிக் குழந்தையின் உள்ளங்கையில் நம் முழங்கையால் மெதுவாகக் கடைந்து
கொடுக்கிறோம். அப்புறம், குழந்தையின் புறங்கையிலிருந்து அக்குள் வரை, “நண்டு ஊருது... நரி
ஊருது...” எனச் சொல்லியபடியே நம் விரல்களை நடத்திக் (!) கொண்டு
சென்று கடைசியில் கிச்சுக்கிச்சு மூட்டுகிறோம். குழந்தை சிரித்துத் துள்ளுகிறது!
ஆக மொத்தம், முழு உடம்புக்குமான
ஆற்றல் மண்டலங்களாக விளங்கும் விரல் நுனிகள், உள்ளங்கையில்
அமைந்திருக்கும் உடலின் எல்லா உறுப்புகளுக்குமான ஆற்றல் புள்ளிகள் ஆகிய அனைத்தும்
இந்த விளையாட்டினால் குழந்தைக்கு ஊக்குவிக்கப்படுகின்றன! உடல், உள்ளம், அறிவு என எல்லா
வகையிலும் ஒரு குழந்தை முழுமையான வளர்ச்சியை அடைவதற்கும்
நோயற்ற வாழ்வை வாழ்வதற்கும் இந்த ஒரு சிறு விளையாட்டு உதவுகிறது!!
நம் தமிழ்
முன்னோர்கள் வடிவமைத்திருக்கும் ஒரு சாதாரணக் குழந்தை விளையாட்டு கூட எந்த
அளவுக்கு அறிவியல் தன்மையும், மருத்துவச் சிறப்பும், உட்பொருளும்
நிறைந்ததாக இருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது உண்மையிலேயே நம் முன்னோர்களை எண்ணி
நாம் பெருமைப்படத்தான் வேண்டியிருக்கிறது இல்லையா?
*அந்த நூல்:
ஆரோக்கிய வாழ்வுக்கு அக்குப்பிரஷர்.
ஆசிரியர்: மரு. ஜெ.ஜெயலக்ஷ்மி.
சுகம் பதிப்பகம்.
ஆரோக்கிய வாழ்வுக்கு அக்குப்பிரஷர்.
ஆசிரியர்: மரு. ஜெ.ஜெயலக்ஷ்மி.
சுகம் பதிப்பகம்.
அக்குப்பிரஷர் படம்: நன்றி usetamil.net.
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
மிகவும் அருமையாக எழுதப்பட்ட இந்த பதிவு பலருக்கும் உபயோகப்படும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள் சார்.
நான் இப்படி ஒரு வலைப்பூ தொடங்கியிருக்கிறேன் என்று தெரிந்த அந்த நொடியே இங்கு வருகை புரிந்து, தளத்தின் முதல் பின்னூட்டத்தை வழங்கி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நண்பர் கிங் விஸ்வாவுக்கு நன்றி! தொடர்ந்து இடுகைகளைப் படியுங்கள்! தங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!
நீக்குஇத்தனை ஆண்டுக்காலப் பழைமையுள்ள விளையாட்டைப் பற்றிய இந்த ரகசியத்தை நேற்று எழுத வந்த என் மகன் வெளிக்கொண்டு வந்திருக்கிறான் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடித்துவிட்டுத் தன் மேலான கருத்தைத் தெரிவித்த என் அம்மாவுக்கு நன்றி!
நீக்குநம் தமிழ் முன்னோர்கள் வடிவமைத்திருக்கும் ஒரு சாதாரணக் குழந்தை விளையாட்டு கூட எந்த அளவுக்கு அறிவியல் தன்மையும், மருத்துவச் சிறப்பும், உட்பொருளும் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நினைக்கும்பொழுது உண்மையிலேயே நம் முன்னோர்களை எண்ணி நாம் பெருமைப்படத்தான் வேண்டியிருக்கிறது....
பதிலளிநீக்குமிகப் பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
நன்றி அம்மணி!
நீக்கு