தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் முடிசூடாப் பேரரசர் வாண்டுமாமா அவர்கள் |
தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் துருவ விண்மீன் வீழ்ந்து விட்டது! மூன்று தலைமுறைகளாகத் தமிழ்க் குழந்தைகளின் உள்ளத்து அரியணையில் முடிசூடாப் பேரரசராக வீற்றிருந்த வாண்டுமாமா நம்மை விட்டுப் பிரிந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது!
முதலில் இந்தச் செய்தியை, வலைப்பூ ஒன்றில்தான் பார்த்தேன். ஆனால், நம்பவில்லை. காரணம், வாண்டுமாமா இறந்துவிட்டதாகச் சொல்லப்படுவது இது முதல்முறையில்லை.
திருமணம் கூட ஆகாத இளைஞராக அவர் இருந்தபொழுதே, “வாண்டுமாமா இருந்த இடம் பூண்டு முளைத்துப் போய்விட்டது” என்று பெரும்புகழ் பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன் அந்தக் காலத்தில் எழுதியது முதல், வாண்டுமாமா இறந்து விட்டது தனக்கு மிக நன்றாகத் தெரியும் என்று, ஏதோ தானே இறுதி ஊர்வலத்துக்குத் தோள் கொடுத்தது போல் வலைப்பதிவர் ஒருவர் எழுதியது வரை - வாண்டுமாமா மறைந்து விட்டதாகச் செய்தி வருவது தமிழுலகத்துக்குப் புதிதில்லை. ஆனால், தமிழ் காமிக்சு உலகம் நடத்தி வரும் நண்பர் கிங் விஸ்வா அவர்களின் பதிவைப் படித்த பின்புதான் அந்த வெகுநாளைய புரளி கடைசியில் உண்மையாகி விட்டதை உணர்ந்தேன்; உள்ளம் உதிர்ந்தேன்!
வாண்டுமாமாவுக்கு முன்பும் சரி, பின்பும் சரி, தமிழில் எத்தனையோ பேர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள்; எழுதுகிறார்கள். ஆனால், யாருமே வாண்டுமாமா ஆகிவிட முடிவதில்லை!
வாண்டுமாமா! – நினைக்கும்பொழுதே இனிக்கும் பெயர்! கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்க் குழந்தைகளுக்கு முதன்முதலில் அறிமுகமாகி வரும் எழுத்தாளரின் பெயர் இதுதான்! ஆனானப்பட்ட கல்கி முதல் தன் சுட்டு விரலில் எழுத்துலகின் தலையெழுத்தையே தீர்மானித்த சுஜாதா வரை மற்ற எல்லோருமே இவருக்குப் பிறகுதான் நமக்கெல்லாம் அறிமுகமானார்கள். இவர் தமிழின் சுவையை நமக்குச் சேநெய் தொட்டு வைத்திராவிட்டால் இந்த மற்றவர்களின் நூல்களையெல்லாம் நாம் படித்திருப்போமா, படிக்கும் பழக்கம் நம்மில் எத்தனை பேருக்கு இருந்திருக்கும் என்பவையெல்லாம் விடையளிக்க முடியாத கேள்விகள்!
ஆம்! இன்றும் தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு நம் மக்களுக்குத் தமிழ் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால், இதழ்களும் நூல்களும் இந்த அளவுக்காவது விற்பனையாகின்றன என்றால், அதற்கு வாண்டுமாமா என்கிற இந்த மாமனிதர் ஓர் இன்றியமையாக் காரணர்!
தமிழின் சிறுவர் இலக்கியம் உண்மையில் மிகத் தொன்மையானது. ஔவையாரின் எழுத்தாணியில் தொடங்கி, பாரதியாரின் தூவல்களில் தவழ்ந்து, இன்று சிறுவர்களுக்கான இணையத்தள இதழ்கள் வரை பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பெருவரலாற்றில் வாண்டுமாமா போலவும் அவரை விடக் கூடுதலாகவும் புகழ் வாய்ந்தவர்கள், திறமையாளர்கள், வெற்றியாளர்கள் பலர் இருக்கலாம். ஆனால், வாண்டுமாமா மீது மட்டும் ஏன் இவ்வளவு மோகம்?! காரணம், மற்றவர்களெல்லாரும் குழந்தைகளுக்கான கதைகளைக் கூறிய காலத்தில், வாண்டுமாமா அவர்கள் குழந்தைகளுக்காகக் கதை கூறினார்!
தமிழில், சிறுவர் இலக்கியம் என்றாலே அவை பெரும்பாலும், குழந்தைகளுக்கு அறிவுரை கூறும் விதமாகவே அமைந்திருந்தன. ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதற்கொண்டு இதுதான் வழக்கம். ஆனால், வாண்டுமாமா குழந்தைகள் குதூகலிக்கும் விதமாகக் கதை சொன்னார். அவர் கதைகளில் கம்பளங்கள் பறக்கும், கோழிக்குஞ்சுகள் உடலில் வைர வைடூரியங்கள் இழைக்கப்பட்டிருக்கும், நாய் வில்லன்களை வீழ்த்தும், புலி குழந்தையை வளர்த்து நாட்டுக்கே அரசனாக்கும். மொத்தத்தில் அவருடைய எழுதுகோல் குழந்தைகளை இன்னொரு மாய உலகத்துக்கே அழைத்துச் செல்லும் மந்திரக்கோலாகவே விளங்கியது!
இவையெல்லாம் அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளாக இருக்கலாம். ஆனால், அவை குழந்தைகளின் கற்பனைத் திறனுக்குச் சிறகு முளைக்க வைத்தன. எல்லைகளுக்கும் மரபுகளுக்கும் புலன்களுக்கும் உட்பட்டே சிந்திக்காமல், வானளாவிய அளவில் சிந்தனைப்போக்கு விரிவுபட வேண்டுமானால், மனித அறிவு சரியான நேரத்தில் கட்டுடைக்கப்பட வேண்டும். அந்த அருஞ்சேவையைக் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் இத்தகைய கதைகள் மூலம் மிக மென்மையாகச் செய்தார் வாண்டுமாமா.
இப்படிச் சொல்வதால் பலர், வாண்டுமாமாவை வெறும் மாயக்கதை எழுத்தாளர் என நினைத்து விடுகிறார்கள். அதுதான் இல்லை! தருமு வளர்த்த தவளை, சூட்கேஸ் மர்மம் போன்ற அவருடைய கதைகள் உலகத்தரம் வாய்ந்த சிறுவர் இலக்கியங்கள். திகில் தோட்டம், ரத்தினபுரி ரகசியம் எனக் குழந்தைகளுக்கென்றே அறிவியல் புனைகதைகளையும் அவர் வழங்கியுள்ளார். சி.ஐ.டி சிங்காரம், டயல் ஒன் நாட் நாட் போன்ற சிறுவர்களுக்கான துப்பறியும் கதைகளும் புனைந்துள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் இதழுலகில் படக்கதைகளின் (comics) பொற்காலத்தை உருவாக்கிக் காட்டியவர் வாண்டுமாமா. வாண்டுமாமாவுக்கு முன்பும் படக்கதைகள் தமிழில் வெளிவரத்தான் செய்தன. ஆனால், அவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமான சிற்சில முயற்சிகள், அவ்வளவே! வாண்டுமாமாதான் அதை நிலைநிறுத்தினார், பரவலாக்கினார். அதன் மூலம், தமிழ்ச் சிறுவர் இலக்கியத்துறையின் பாணியையே தீர்மானிப்பவராக அவர் திகழ்ந்தார். Yes! He is the Trend setter of Modern Tamil children literature!
சிறுவர் இதழ்களைப் படங்களாலும் நிறங்களாலும் நிரப்பி, திரைப்படங்களுக்கு நிகரான விறுவிறுப்பு கொண்ட படக்கதைகளைக் கொட்டிக் கொடுத்து, பட்டம், பாண்டி, கோலி என்று தெருவிலேயே விளையாடிக் கொண்டிருந்த தமிழ்ச் சிறுவ-சிறுமியரை உட்கார்ந்து தமிழ் படிக்க வைத்தவர் வாண்டுமாமா.
அதே நேரம், அவர் வெறும் கற்பனைச் சுவை மட்டுமே வழங்கும் எழுத்து விற்பனையாளராக இல்லை. வரலாறு, அறிவியல், மருத்துவம், புதிர், கைவினை, சுற்றுச்சூழல், உயிரினங்கள் எனக் குழந்தைகளுக்கான அறிவுசார் நூல்களையும் அவர் படைத்தார்.
என்னைப் போன்ற வாண்டுமாமாவின் தீவிர விசிறிகள் அவரை சுஜாதாவோடு ஒப்பிடுவது வழக்கம். தீவிர இலக்கியம் முதல் வெகுமக்கள் ஊடகமான திரையுலகம் வரை கோலோச்சியவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். ஆனாலும், ஒப்பீட்டளவில் பார்த்தால் பொது எழுத்துத்துறையில் சுஜாதா அவர்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை விடச் சிறுவர் எழுத்துத்துறையில் வாண்டுமாமாவுக்கு இருந்த முக்கியத்துவம் மிகவும் கூடுதல்! சிவாஜி, கல்கி, அமுதசுரபி எனப் பல இதழ்கள் இவரை நம்பியே தங்கள் சிறார் இதழ்களையும் – பகுதிகளையும் வெளியிட்டன. பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள், கோகுலம் எனத் தமிழின் முப்பெரும் சிறுவர் இதழ்கள் இந்த ஒரு மனிதரை நம்பியே தொடங்கப்பட்டன!
சிறுவர்களுக்காக மற்ற எழுத்தாளர்கள் புனைந்த கதைகள் சிறுவர்கள் மட்டுமே ரசிக்கத் தக்கவை. ஆனால், வாண்டுமாமா எழுதியவை பெரியவர்களையும் சிறுவர்களாக்கி ரசிக்க வைத்து விடும் என்பதுதான் அவர் எழுத்து வன்மைக்குரிய தனிச்சிறப்பு!
குறிப்பாக, 'டயல் ஒன் நாட் நாட்'-ஐப் படித்துப் பார்த்தால், இந்த அளவுக்குக் கடினமான கதைகளை எந்தத் துணிவில் குழந்தைகளுக்காக எழுதினார் வாண்டுமாமா என இன்றும் வியப்பு ஏற்படும். துப்பறியும் சிறுகதைகளின் தொகுப்பான அதில், நாயகன் சிங்காரம் ஈடு இணையற்ற திறமை வாய்ந்த தடயவியல் வல்லுநனாக இருப்பான். தன் கூர்மையான நுண்ணோக்கினாலும், மதியூகத்தாலும் ஷெர்லாக்ஹோம்ஸ் போல உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிரடிப்பான். ஒவ்வொரு கதையும் மூன்று நான்கு பக்கங்களில் அவ்வளவு சிறப்பாக, ஒரு குறும்படத்துக்கு இணையான விறுவிறுப்புடன் மிளிரும். போதாததற்கு, முதல் சில கதைகளில் ஆங்காங்கே படங்களுக்குள் துப்புக்களை (clues) ஒளித்து வைத்து, கடைசி வரை அவற்றை விடுவிக்காமலே கதையை முடித்து, சிங்காரம் எப்படி அந்த வழக்கைக் கண்டுபிடித்தான் என்பதை நம்மையே கண்டுபிடிக்கச் சொல்லியிருப்பார் வாண்டுமாமா. கண்டுபிடிக்க முடியாதவர்கள் நூலின் பின்பக்கத்தில் விடையை அறியலாம். இப்படியொரு புதுமையை இதற்கு முன்போ பின்போ எந்த எழுத்தாளராவது செய்ததுண்டா எனத் தெரியவில்லை.
இந்த அளவுக்குச் சிக்கலான கதைகளைச் சிறுவர்களுக்கு எழுதும் அளவுக்கு தமிழ்ப் பிள்ளைகள் மீது, அவர்களது அறிவுக்கூர்மை மீது வாண்டுமாமாவுக்கு இருந்த நம்பிக்கையைப் போற்றுவதா, அல்லது அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக இந்தக் கதைகளையெல்லாம் புரிந்து படித்து, பாராட்டியும் விமர்சித்தும் கடிதங்களும் எழுதிக் குவித்த அந்தக் காலக் குழந்தைகளின் அறிவாற்றலைப் பாராட்டுவதா என இந்தப் புத்தகத்தைப் படிக்கும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக மலைப்புத் தட்டும்!
“என்ன இருந்தாலும் குழந்தைகளுக்கான எழுத்தாளர்தானே?” என நினைப்பவர்கள், அவர் ‘கௌசிகன்’ என்ற பெயரில் பெரியவர்களுக்காக எழுதிய ‘அவள் எங்கே’, ‘பாமினிப் பாவை’ போன்ற நூல்களைப் படித்துப் பார்த்தால், பெரியவர்களுக்காக எழுதக்கூடிய அளவுக்குச் சிறந்த திறமையும் ஆற்றலும் கொண்ட அவர் உண்மையில் அவை அனைத்தையும் குழந்தைகளுக்காகவே காணிக்கையாக்கி இருக்கிறார் என்பதை உணரலாம்.
ஆனால், அப்பேர்ப்பட்டவர் தன் எழுத்துலக வாழ்வில் தொடர்ச்சியாகச் சந்தித்தவையெல்லாம் இரண்டகங்களும் (துரோகம்) ஏமாற்றங்களும்தாம். குறிப்பாக, கல்கி நிறுவனம் முற்றிலும் அவரையே நம்பித் தொடங்கிய, ஆண்டுக்கணக்கில் அவரால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘கோகுலம்’ இதழிலிருந்து வேண்டுமென்றே அவரை வெளியேற்றியதைச் சொல்லலாம்.
‘பூந்தளிர்’ எனச் சொன்னாலே வாண்டுமாமா நினைவுக்கு வருவது போல், ‘கோகுலம்’ எனச் சொன்னாலும் அவர் நினைவுதான் வர வேண்டும். அதுதான் நியாயம்! ஆனால், அப்படி நடக்கவிடாமல், அவர் பார்த்துப் பார்த்து வளர்த்த இதழிலிருந்து அவரை வெளியேற்றியதோடு, அதன் தோற்றம், உள்ளடக்கம் என எல்லாவற்றையும் வாண்டுமாமா பாணிக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாமல் மாற்றி, அந்த இதழையே சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்து, அதற்கும் வாண்டுமாமாவுக்குமான தொடர்பை வேண்டுமென்றே மறக்கடித்து, அழ.வள்ளியப்பா அவர்களை ஆசிரியராக்கி, இன்றும் ‘அழ.வள்ளியப்பா நினைவுச் சிறுகதைப் போட்டி’ எனும் ஒன்றை நடத்துவதன் மூலம் ஏதோ அவர்தான் அந்த இதழின் முதல் ஆசிரியர் என்பது போன்ற பொய்த் தோற்றத்தை நிலைபெறச் செய்த கல்கி.இராஜேந்திரன் அவர்களின் சூழ்ச்சி சிறுவர் இலக்கியத்துக்காகக் கடைசி மூச்சு வரை உழைத்த அந்த மாமேதைக்கு இழைக்கப்பட்ட இரண்டகங்களிலேயே மிகவும் கொடுமையானது!
ஆனால், நேயர்கள் (வாசகர்கள்) எனும் முறையில் நாம் இந்தக் கொடுமைக்காக இராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி செலுத்தத்தான் வேண்டும். ஏனெனில், அவர் மட்டும் இதைச் செய்திராவிட்டால், வாண்டுமாமா வெளியே வந்து ‘பூந்தளிர்’ எனும் இதழைத் தொடங்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.
நானும் வாண்டுமாமாவும்
முதல் ஊதியத்தில் எல்லோரும் என்னென்னவோ வாங்குவார்கள். ஆனால், அந்தக் காசில் வாண்டுமாமாவின் கதைப்புத்தகம் வாங்கியவன் நான். அந்த அளவுக்கு அவர் எழுத்துக்கள் மீது ஆறாக் காதல் கொண்டவன்.
உலகத் தமிழர்கள் அனைவரையும் போல எனக்கும் வாண்டுமாமா அவருடைய கதைகளின் வழியாகத்தான் முதலில் அறிமுகமானார். 80-களில் பிறந்தவர்களுக்கு, கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்குப் போகும் பழக்கம் பற்றித் தெரியும். அப்படி நான் சிறு வயதில் என் பாட்டி வீட்டுக்குப் போகும்பொழுதெல்லாம் தொலைக்காட்சி கூட இல்லாத அந்நாளில் எனக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு கதைப் புத்தகம் படிப்பது. என் மாமா சங்கர் அவர்கள் ஒரு பெரிய தகரப் பெட்டி –டிரங்க் பெட்டி- நிறையக் கதைப் புத்தகங்கள் வைத்திருந்தார்! அங்குதான் எனக்கு வாண்டுமாமாவின் வனப்புமிகு எழுத்துக்கள் அறிமுகமாயின.
எனக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் அப்பொழுது ஐந்து ஆறு அகவை இருக்கும். அப்பொழுதே கதை படிக்கத் தொடங்கிவிட்ட எனக்கு, அந்தச் சிறு வயதில் படித்த வாண்டுமாமாவின் ‘ஷீலாவைக் காணோம்’ கதையும், அதன் பல படங்களும் ஏறத்தாழ 10, 12 அகவை வரை நினைவில் பசுமையாக இருந்தன என்றால், அதற்குக் காரணம் அந்தக் கதையின் அருமையான நடையும் கண்கவரும் சித்திரங்களும்தான். (ஓவியரின் பெயர் உறுதியாகத் தெரியாததால் குறிப்பிட முடியவில்லை). அதன் பிறகு எனக்குப் பார்வதி சித்திரக்கதைகள் வரிசையில் வெளிவந்த ‘ஷீலாவைக் காணோம்’ கதைப்புத்தகத்தைப் பழைய புத்தகக் கடையில் என் பெரியப்பா இலட்சுமணன் அவர்கள் வாங்கித் தந்தார். ஆனால், மாமாவின் தகரப் பெட்டியிலிருந்து நான் படித்தது, என் மாமா, அம்மா ஆகியோர் சிறுவர்களாயிருந்தபொழுது வெளிவந்த பிரதி. அதை இன்றுள்ள பலர் பார்த்திருக்கக் கூட மாட்டீர்கள். இன்றும் அந்தப் பழைய ‘ஷீலாவைக் காணோ’மின் அட்டைப் படம் என் நினைவகக் கண்களில் மங்கலாக நிழலாடுகிறது. டைகர் முன்னால் போக, அதன் கழுத்துக் கயிற்றைப் பற்றிக்கொண்டு ஷீலா பின்னால் ஓட, தொலைவில் கடத்தல்காரர்கள் இருவரும் அவர்களைத் துரத்தி வருகிற அந்தக் காட்சி என்றென்றும் என் நினைவை விட்டகலாதென நினைக்கிறேன்.
‘ஷீலாவைக் காணோம்’ மட்டுமா? இன்னொரு பெரியப்பா ஒருவர் வீட்டில் படித்த ‘கபீஷ் கதம்பம்’, பூந்தளிர் இதழ்களில் படித்த ‘காக்கை காளி கதைகள்’ ஆகியவை கனவுக்காட்சிகள் போல இன்னும் நினைவடுக்கில் தேங்கியிருக்கின்றன.
‘பூந்தளிர்’ இதழ் பற்றிச் சொல்லாமல் வாண்டுமாமா பற்றி எழுதிவிட முடியுமா என்ன? பெயரைச் சொல்லும்பொழுதே ஏதேதோ நினைவுகளை நெஞ்சில் கிளர்த்தும் இதழ் ‘பூந்தளிர்’!
மின்சுளுந்து (torch), ஒரு துண்டு நூல் ஆகியவற்றை வைத்து, கோடை காலத்தில் வெப்பம் கூடுதலாகவும் குளிர் காலத்தில் குறைவாகவும் இருப்பதற்கான காரணத்தைப் பூந்தளிரில் வாண்டுமாமா விளக்கியிருந்ததைப் படித்துவிட்டு, அதே போல் நானும் செய்து பார்த்து, மற்றவர்களுக்கும் செய்து காட்டிய நினைவுகள்...
ஒரு கௌவி (clip), ஒரு பால்ம நாடா (Rubber band), கொஞ்சம் அட்டை ஆகியவற்றை மட்டுமே வைத்துக்கொண்டு, இன்றைய ரிஸ்பீக்களை (wrisbee) விடப் பன்மடங்கு வேகத்தில், கண்ணிமைக்கும் வேகத்தில் பறக்கும் வட்டுகளைச் செய்யும் வித்தையைப் பூந்தளிரில் படித்துவிட்டு அத்தை மகன் பிரகாஷ் செய்து காட்டி அசத்திய, அதை நிறையச் செய்து வைத்துக்கொண்டு அவனுடன் சேர்ந்து பறக்கவிட்ட காலங்கள்...
பலே பாலு, சி.ஐ.டி.சிங்காரம், அவர் உதவியாளர் பாலு, கபீஷ், பிந்து, சுப்பாண்டி, காக்கை காளி, வேட்டைக்கார வேம்பு, அனு மாமா போன்ற கதைமாந்தர்கள்...
இவற்றையெல்லாம் சாகும் வரை மறக்க முடியாது!
இப்படி வாண்டுமாமாவின் எழுத்துக்களுடனே வளர்ந்தவனுக்கு, வாண்டுமாமாவுக்கென முகநூலில் விசிறிப் பக்கமே நிறுவும் பேறு கிடைக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!
வாண்டுமாமாவுக்கான முகநூல் விசிறிப் பக்கத்தின் விருப்பப் பெட்டி
ஆம்! இன்று முகநூலில் நீங்கள் பார்க்கும் வாண்டுமாமாவின் விசிறிப் பக்கம் அடியேன் உருவாக்கியதுதான்.
2011இல் நான் முகநூலில் இணைந்தபொழுது எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனத் தமிழ்ப் பெருமக்கள் பலருக்கும் அதில் விசிறிப் பக்கம் இருக்கக் கண்டேன். நேற்றைக்குப் பிறந்த வலைப்பூக்களுக்குக் கூட விசிறிப் பக்கங்கள் இருந்தன. ஆனால், பெரும் தமிழ்த் தொண்டாற்றிய வாண்டுமாமாவுக்கென அப்படி ஒன்று இல்லை. அஃது எனக்கு ஒருபுறம் பெருத்த வேதனையையும், மறுபக்கம் மிகுந்த மகிழ்ச்சியையும் ஒருசேர அளித்தது. காரணம், அவருக்கென ஒரு விசிறிப்பக்கம் உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே என்பதால்தான்.
நினைத்தபடியே 2012இல் வாண்டுமாமாவுக்கென ஒரு விசிறிப் பக்கத்தை வெளியிட்டேன். ஆனால், அப்பொழுது வரை எனக்கு அவர் இருக்கிறாரா, இல்லையா என்பதே தெரியாது.
ஆனால், அடுத்த ஓரிரு மாதங்களிலேயே ‘ஆனந்த விகட’னில் வாண்டுமாமாவின் நேர்காணலை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார் இதழாளர் சமஸ் அவர்கள். உடனே, அவரைத் தொடர்புகொண்டு வாண்டுமாமா அவர்களின் முகவரியை வாங்கினேன். அவருக்காக முகநூலில் விசிறிப் பக்கம் தொடங்கியிருப்பது பற்றியும், இணையத்தில் பதிவர்கள் ஏராளமானோர் அவர் புகழைப் பரப்பி வருவது குறித்தும் எழுதி அனுப்பினேன். அடுத்த சில நாட்களிலேயே தன்னுடைய சொந்தவரலாற்று நூலான ‘எதிர்நீச்சல்’ புத்தகத்தைத் தன் நினைவொப்பத்துடன் (Autograph) எனக்கு அனுப்பித் திக்குமுக்காட வைத்தார் வாண்டுமாமா. நூலின் முகப்பில் திரு ஞானப்பிரகாசனுக்கு அன்பும் ஆசியுடனும் என்று தன் கையாலேயே எழுதி, நினைவொப்பம் இட்டிருந்தார்.
வாண்டுமாமாவின் எனக்கான அந்த நினைவொப்பம் |
அதிலும், அந்த நூலில் அவர் தன் துணைவியாரின் படம் இருந்த பக்கத்தை நுனி மடக்கி வைத்திருந்தார். ஆகவே அது, அவர் தான் படிப்பதற்காக வைத்திருந்த, அல்லது தான் படித்துவிட்டு வைத்திருந்த பிரதி என நினைக்கிறேன். இவை மட்டுமல்ல, கடைசிப் பக்கத்தில் இருந்த தன் நூல்களின் பட்டியலுடைய மேற்புறத்தில் இப் பட்டியல் 1995 க்கு முந்தையது. இப்போது அதிகம் என்று எனக்காக அவர் அன்புடன் குறிப்பும் எழுதி அனுப்பியிருந்தார்.
வாண்டுமாமா எனக்காக எழுதியனுப்பிய அந்தக் குறிப்பு |
குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் எழுத்துக்களைப் பேராவலுடன் படித்து வந்த எனக்கு இப்பரிசு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். பல நூற்றுக்கணக்கான சிறுவர் இலக்கியங்களை எழுதிய அந்தத் திருக்கரங்களால் எனக்காக ஒரு குறிப்பு அவர் எழுதியது என் வாழ்நாளில் நான் பெற்ற பேறு. என் வாழ்வின் கிடைத்தற்கரிய கருவூலமாக அந்த நூலை நான் பாதுகாத்து வருகிறேன். இதோ, இந்தப் பதிவையும் அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் முழுக்கவும் எழுதுகிறேன். இவை எனக்குக் கிடைக்க மூல காரணமாக விளங்கிய திரு.சமஸ் அவர்களுக்கும், ஆனந்த விகடன் இதழுக்கும் இங்கு என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு, கடந்த ஆண்டு வந்த அவருடைய 89ஆவது பிறந்தநாளை ஒட்டி மீண்டும் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். பதில் ஏதும் அவரிடமிருந்து வராவிட்டாலும் அவர் அதைப் படித்திருப்பார் என்றே நம்புகிறேன்.
வாண்டுமாமாவுக்கு விசிறிகள் செய்யக்கூடியது என்ன?
ஒரு காலத்தில், தட்டு நிறையக் காட்பரீசு சாக்கலேட்டுகளையும் இன்னொரு தட்டு முழுக்கப் பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள் ஆகியவற்றையும் வைத்து இரண்டில் ஏதாவது ஒன்றுதான் என்று கூறினால் நம் சிறுவர்கள் வாண்டுமாமாவின் எழுத்துக்கள் நிறைந்த இரண்டாவது தட்டைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்! அப்பேர்ப்பட்ட அந்தப் பொற்காலத்துக்கு மீண்டும் ஒருமுறையாவது போய் வர பாலுவிடம் இருந்தது போலொரு பறக்கும் காற்சட்டை நம்மிடம் இல்லையே என ஏங்குபவர்கள் நாம்.
ஆனால் இன்று...? வாண்டுமாமா யார் என்று கூட நம் குழந்தைகளுக்குத் தெரியவில்லை. வாண்டுமாமா மட்டுமில்லை, சிறுவர்களுக்கான எழுத்தாளர்கள் யாரைப் பற்றியும் இன்று நம் பிள்ளைகளுக்குத் தெரியாது. வாண்டுமாமாவுக்குப் பின் சிறுவர்களுக்கான படைப்புலகில் அவ்வளவு புகழோடு யாரும் உருவாகவும் இல்லை. இஃது உண்மையில் வாண்டுமாமாவுக்குப் பெருமை சேர்ப்பதாகாது.
தான் சாதித்த துறை தன் காலத்துக்குப் பிறகும் வளமாக இருந்து, ஆனாலும் தன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாமல் போனால்தான் அது பெருமை. மாறாக, தனக்குப் பின் அந்தத் துறையே இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோவது அந்தச் சாதனையாளருக்கோ, அந்தத் துறைக்கோ, அந்தச் சமூகத்துக்கோ ஒரு சிறிதும் பெருமையில்லை; தாள முடியாத வேதனைதான்!
படிப்பது என்றாலே பாடப் புத்தகம் படிப்பதுதான் என்று ஆக்கி விட்ட இன்றைய கல்விமுறையால் புத்தகம் என்கிற பொருளைப் பார்த்தாலே குழந்தைகள் முகம் சுளிக்கிறார்கள். அதையும் மீறிப் படிக்கும் பழக்கம் உள்ள சில சிறுவர்களும் விரும்பிப் படிப்பது ஹாரி பாட்டரையும், ஜெரோனிமோ ஸ்டில்டனையும்தான்.
தமிழ்ப் பற்றே இல்லாத பெற்றோர்கள், பெரியவர்களுக்காக மட்டுமே எழுதிக்கொண்டு சிறுவர் இலக்கியத்துறையை முற்றிலும் புறக்கணிக்கும் எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறைக்கு நம் மொழி போய்ச் சேராத இந்த நிலை பற்றித் துளியும் கவலைப்படாத தலைவர்கள், சிறுவர் இலக்கியத்தின் இந்த வீழ்ச்சி நாளை தங்களையும் தடம் தெரியாமல் அழிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளாத பிற ஊடகங்கள், குழந்தைகள் வெறுக்கும்படியான கல்விமுறையை உருவாக்கி வைத்திருக்கும் அரசுகள், தான் பெற்ற இன்பத்தைத் தன் பிள்ளைகளுக்குத் தர மறந்த தனியாட்களாகிய நாம் என நாம் அனைவருமே இதில் குற்றவாளிகள்தாம். நாமேதான் இவற்றைச் சரி செய்யவும் வேண்டும்! அது நம் கடமை!
குழந்தைகளுக்கு மீண்டும் கதைகள் சொல்லத் தொடங்குவோம். நம் குழந்தைகள், அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகள் என அனைவரையும் வாரத்துக்கு ஒருமுறையாவது கூட்டி வைத்துக்கொண்டு கதைகள் கூறுவோம்! வாண்டுமாமா தொடங்கிய ‘கோகுலம்’, பற்பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘அம்புலிமாமா’, இழப்பு ஏற்படும் என உறுதியாகத் தெரிந்தும் அடுத்த தலைமுறைக்கு மொழியையும் கற்பனைத்திறன் போன்ற பிற நல்லனவற்றையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்ட, விகடன் நிறுவனத்தின் ‘சுட்டி விகடன்’, வெள்ளிவிழாக் காணும் சிறுவர் அறிவியல் இதழான ‘துளிர்’ எனச் சிறுவர்களுக்கான இதழ்கள் இன்றும் வெளிவருகின்றன. அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கித் தரத் தொடங்குவோம்! வானதி, கங்கை போன்ற தமிழ்ப் பதிப்பகங்கள் வெளியிடும் குழந்தைகளுக்கான நூல்களை, இன்னும் விற்காமல் நமக்காகக் காத்திருக்கும் வாண்டுமாமா அவர்களின் கதைச் செல்வங்களை நம் குழந்தைகளுக்குப் பரிசளிப்போம்! நூல் கண்காட்சிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று படிக்கும் பழக்கத்தை –தமிழ் படிக்கும் பழக்கத்தை- அவர்களிடம் ஊக்குவிப்போம்!
“இன்றைய குழந்தைகள் பாவம்! அவர்களுக்குக் கதை சொல்லுங்கள்! கதைப் புத்தகம் வாங்கிக் கொடுங்கள்!” – இதுதான் வாண்டுமாமா தன் கடைசி நேர்காணலில் இந்த உலகத்துக்குக் கூறிய செய்தி!
அவரது இந்தக் கடைசி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், தமிழ்ச் சிறுவர் இலக்கியத்தின் பொற்காலம் அவருடன் முடிந்துவிடாமல் காப்பாற்றுவதுதான், நாக்கில் புற்றுநோயுடன் உயிருக்குப் போராடியபடியே இறுதி மூச்சு வரை குழந்தைகளுக்காகவே எழுதிக் கொண்டிருந்த அந்தத் தமிழ்ப் பெருந்தொண்டருக்கு அவர் விசிறிகளும், இந்தத் தமிழ் கூறும் நல்லுலகமும் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!
*********
நன்றி
படங்கள்: ௧.மாயாபுரி, ௨.சித்திரக்கதை, ௩.தமிழ் காமிக்சு, ௪.தமிழ் காமிக்சு, ௫.அழகிய படங்களுடன் கூடியது, ௬.digitalart, ௭.அன்பே சிவம்.
உசாத்துணை: 'எதிர்நீச்சல்' - வாண்டுமாமாவின் சொந்தவரலாறு, வாண்டுமாமா நேர்காணல் - சமஸ், தொந்தி பூதமும் மந்திர நாயும் (Tamil children magazines) - சிவ் அவர்களின் பதிவு.
தொடர்புடைய இடுகைகள்:
தொடர்புடைய வெளி இணைப்புகள்:
இந்தப் பதிவைப் பரப்புங்கள்! வாண்டுமாமாவின் கனவு நிறைவேறச் செய்யுங்கள்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
அருமை ஐயா! வாண்டுமாமா இறந்துவிட்டார் என தமிழ் இந்து செய்தித்தாளில் படித்தவுடன் அதிர்ச்சியுற்றேன்! அவர் கோகுலத்தில் பணியாற்றியது தெரியாது. ஆனால் பூந்தளிர், பார்வதி சித்திரக்கதைகள் நிறைய படித்து இருக்கிறேன்! பலேபாலு, சிங்காரம் போன்ற கதாபாத்திரங்களை மறக்க முடியாது, கபீஷ் என்னுடைய சிறுவயது பேவரிட்! அருமையான எழுத்தாளர்! அவருக்கான சிறப்பான அஞ்சலிப்பதிவு! நன்றி! வாண்டுமாமாவின் முகநூல்விசிறிப் பக்கத்தில் உடனே இணைந்து கொள்கின்றேன்!
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி ஐயா! வாண்டுமாமா விசிறிப் பக்கத்திலும் இணைந்துவிட்டது கண்டு மகிழ்ச்சி!
நீக்குதொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!
நானும் வாண்டுமாமாவின் தீவிர ரசிகன் .என் சின்ன வயதில் வாண்டுமாமா வார் இதழில் நான் கேட்ட 'கேள்வி எதற்காக பிறந்தது மாமா ?'என்பது .அவர் அளித்த பதில் 'பதிலை கண்டுபிடிப்பதற்காக தம்பி 'என்பது .என் வீட்டு விலாசம் தாங்கி வந்ததால் எனக்கு பெருமை தாங்கவில்லை ,பலரும் கேள்வி கேட்டு வராத சூழ்நிலையில் வியப்புடன் பார்த்தார்கள் .அதை இன்று நினைத்தாலும் மகிழ்ச்சியாய் இருக்கிறது .அவர் கதைகள் தந்த ஊக்கத்தால் இன்று வரை எழுதி வருகிறேன் !அன்னாருக்கு என் அஞ்சலிகள் !
பதிலளிநீக்குத ம 1
கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள்! வாண்டுமாமா உங்கள் கேள்விக்குப் பதிலளித்தார் என்பதை இப்பொழுது படிக்கும்பொழுதும் பொறாமையாகத்தான் இருக்கிறது. நானும் சிறு வயதில் பூந்தளிர் படித்ததுண்டு. ஆனால், மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து இதழ்களுக்கு மேல் இருக்காது. ஆனால், பழைய புத்தகக் கடைகளில் நிறையப் பூந்தளிர் இதழ்களையும், பார்வதி சித்திரக்கதைகளையும் படித்துள்ளேன். சிவற்றை இன்னும் கருவூலமாகப் பாதுகாத்தும் வருகிறேன்.
நீக்குகருத்துரைத்தமைக்கு நன்றி! வாண்டுமாமா விசிறிப் பக்கத்திலும் நீங்கள் இணைந்திருப்பது கண்டேன். மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நன்றி!
தாங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்! வாண்டு மாமாவின் கையெழுத்துடன் அவர் எழுதிய புத்தகமும் தங்களுக்குக் கிடைக்கப் பெற்றதற்கு! நாங்கள் சிறு வயதில் மிகவும் ரசித்து ரசித்து வாசித்த அவரை எங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகம் செய்து வாசிக்க வைத்து அவர்களுடன் நாங்களும் வாசித்து மகிழ்ந்தததை நினைவு கூறுகின்றோம். சி ஐ டி சிங்காரம் மிகவும் பிடிக்கும். நாங்களும் இணைகின்றோம் வாண்டுமாமா பக்கத்தில். குழந்தைகளை மகிழ்வித்த, வயதானாலும் வாசிப்பவர்களைக் குழந்தைகளாக்கி மகிழவைத்தை அந்தப் பெரிய மனிதரைக் குறித்துத் தாங்கள் இங்கு எழுதி அஞ்சலி செலுத்தியதற்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள். நாங்களும் இந்த அஞ்சலியில் இணைகின்றோம். தாங்கள் எங்களுக்கு அறிமுகமான அன்றே தங்கள் தளத்திற்கு வந்து இந்தப் பதிவைப் படித்து பின்னூட்டம் இட்டு அது செல்லாமல் மீண்டும் முயன்று செல்லாமல்...இதோ இன்றுதான் பின்னூட்டம் இடுகின்றோம். வரும் என்று நினைக்கின்றோம்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி!
ஆம்! இந்த முறை வந்து விட்டது ஐயா!
நீக்குஉங்கள் உணர்வுமிகு கருத்துக்களுக்கும் அஞ்சலியில் உங்களையும் இணைத்துக் கொண்டதற்கும் மிக்க நன்றி! ஏதோ, நம்மால் அவருக்குச் செய்ய முடிந்தது இதுதான்.
இப்படி மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாராட்டும் உங்கள் அன்பை என்னவென்று சொல்ல! நன்றி ஐயா!
நீக்குதாங்கள் வாண்டு மாமாவை பற்றி கொடுத்த அனைத்தும் அருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது நண்பரே,,, இனி தங்களது பதிவுகளை தொடர இணைத்துக்கொண்டேன்.
பதிலளிநீக்குநேரமிருப்பின் எனது பதிவு ''பாம்பனிலிருந்து... பாம்பாட்டி'' படிக்கவும் நன்றி.
உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி! இணைத்துக் கொண்டது குறித்து மகிழ்ச்சி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்! நீங்கள் கூறிய அந்தப் பதிவை நான் கண்டிப்பாகப் படித்துப் பார்க்கிறேன். நன்றி!
நீக்குஐயா அவர்கள் இறைவனடி சேர்ந்தது இன்று வரை நான் அறியவில்லை. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அவருடைய புத்தகங்களைத்தான் அள்ளி வந்தேன். நீங்கள் எழுதிய எழுத்து ஒவ்வொன்றும் என் மனத்திலிருந்து வந்தது போல் இருக்கின்றது. ஒரு பெட்டி நிறைய வாங்கிச் சேர்த்து இருந்த பூந்தளிர் பொக்கிஷங்களை நான் முட்டாள்தனமாகத் தவறவிட்டேன். அவரின் எதிர் நீச்சல் படித்த போது என் மனம் கனத்துப் போனது.
பதிலளிநீக்கு//நீங்கள் எழுதிய எழுத்து ஒவ்வொன்றும் என் மனத்திலிருந்து வந்தது போல் இருக்கின்றது// - உங்கள் உணர்ச்சி ததும்பும் பாராட்டுக்கு என் உளமார்ந்த நன்றிகள்! நீங்கள் மட்டுமில்லை, பூந்தளிர் இதழ்களைச் சேகரித்து வைத்துப் பின்னால் கவனக்குறைவு காரணமாய்த் தவற விட்டவர்கள், சேகரித்து வைக்காமலே அந்தந்த மாதம் படித்த பின் தூக்கிப் போட்டு விட்டு இன்று அதை நினைத்து நொந்து கொள்பவர்கள் ஏராளமானோர். என்ன செய்வது, அப்பேர்ப்பட்ட அந்த இதழ் பின்னாளில் நின்று விடும் என யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? நம் மீது குற்றமில்லை; நம் ஆட்சியாளர்கள் நம் மொழியை வைத்திருக்கும் நிலைமை அப்படி. கருத்துக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!
நீக்கு
பதிலளிநீக்குஎனக்கு வாண்டுமாமா எழுதிய குள்ளன்ஜக்கு என்ற புத்தகம் தேவை. தயவுசெய்து யாரிடமாவது இருந்தால் தருகிறீர்களா? அதற்கான விலையைதந்துவிடுகிறேன். அதிகநாட்களாக கஷ்டப்பட்டுதேடிக்கொண்டிருக்கிறேன். என் தொடர்பு எண்.7708912428
முகம் தெரியாத நண்பருக்கு வணக்கம்!
நீக்குஉங்கள் மறுமொழியை வெளியிட இத்தனை நாள் தாமதமானதற்கு முதலில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இணையத்தில் தேடிப் பார்த்ததில், வாண்டுமாமா அவர்களின் பெரும்பாலான நூல்களை வெளியிட்ட வானதி பதிப்பகம்தான் நீங்கள் கேட்ட ‘குள்ளன் ஜக்கு’ நூலையும் வெளியிட்டிருக்கிறது என்று தெரிய வந்தது. வானதி பதிப்பகத்தில் வாண்டுமாமா அவர்களின் பல அற்புத நூல்கள் இன்னும் விற்பனையாகாமல் கிடக்கின்றன என்பது ஒரு வகையில் வருத்தமான செய்தி; அவர் நூல்களைத் தேடிக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியான செய்தியும் கூட.
நீங்கள் அவர்களை முதலில் பேசி வழியாகத் தொடர்பு கொண்டு குறிப்பாக இந்த நூல் இருக்கிறதா எனக் கேட்டுப் பாருங்கள். இருந்தால் அனுப்பி வைப்பார்கள். ஒருவேளை விற்றுப் போயிருந்தால் மீண்டும் அவர்கள் அந்த நூலை மறுவெளியீடு செய்தால்தான் உண்டு. ஆனால் ஏற்கெனவே வாண்டுமாமாவின் இத்தகைய கதை நூல்கள் பலவும் விற்காமல் தேங்கியிருப்பதால் மீண்டும் அவர் நூல்களை அவர்கள் மறுபதிப்புச் செய்ய வாய்ப்பு இல்லை. எனவே உங்களுக்கு மச்சம் (luck) இருந்தால் மட்டும் இந்த நூல் கிடைக்கக்கூடும். முயன்று பாருங்கள்!
தொடர்புக்கு:
வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு
தியாகராஜா நகர்
சென்னை - 600017
இந்தியா.
பேசி: +914424310769, +914424342810