.

வியாழன், ஆகஸ்ட் 29, 2013

முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்!

'Like' Button problem


தொழில்நுட்பப் பதிவு எழுதுவதற்கு நான் ஒன்றும் பெரிய பிரபு கிருஷ்ணாவோ, அப்துல் பாசித்தோ, பொன்மலரோ கிடையாது. ஆனாலும், தமிழ்ப் பற்றாளன் எனும் முறையில் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட வேண்டிய தமிழ் சார்ந்த மாறுதல்களை எடுத்துச் சொல்ல எனக்குள்ள உரிமையால் இதை எழுதுகிறேன்.

நீங்கள் முகநூலைத் தமிழில் பயன்படுத்துபவரா? அல்லது, நீங்கள் வலைத்தளம்/வலைப்பூ நடத்துபவரா? அப்படியானால், குறிப்பாக உங்கள் கவனத்துக்காகத்தான் இந்தப் பதிவு! கனிவு கூர்ந்து முழுக்கப் படியுங்கள்!

அண்மையில், முகநூலின் ‘விருப்பம்’ பொத்தானில் ஏற்பட்டுள்ள ஒரு மாறுதலைத் தமிழில் முகநூல் பயன்படுத்தும் அனைவருமே பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். முகநூல் தமிழ்ப் பயனர்களுக்கு இத்தனை நாட்களாக ‘விருப்பம்’ என்று காட்சியளித்து வந்த முகநூல் பொத்தான், கடந்த சூலை 24ஆம் நாள் முதல் ‘பிடித்திருக்கிறது’ எனக் காட்சியளிக்கிறது. இதனால் முகநூல் பொத்தான்கள் அனைத்திலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது!

‘விருப்பம்’ எனும் சொல்லை விடப் ‘பிடித்திருக்கிறது’ எனும் சொல் ஒரு மடங்கு நீளம் கூடுதல். இதனால், முகநூல் பொத்தான்களில் எண்ணிக்கை (count) மறைந்து போகிறது! எத்தனை ‘விருப்பங்கள்’ தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கீழே உள்ள சில படங்களைப் பாருங்கள்!

'Like' Button problem
பெட்டி பாணியிலான (Box Count) முகநூல் பொத்தான்
'Like' Button problem

குமிழ் பாணியிலான (Button Count) முகநூல் பொத்தான்

இணையத்தின் பெரும்பாலான இடங்களில் முகநூல் ‘விருப்ப’ப் பொத்தான் இப்பொழுது இப்படித்தான் காட்சியளிக்கிறது. எனவே இந்த மாற்றம், தமிழில் முகநூலைப் பயன்படுத்தும் அனைவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் உச்சக்கட்டச் சோகம் என்னவெனில், தமிழ் முகநூல் பயனாளர் ஒருவர் வலைப்பூ நடத்துபவராக இருந்தால், தன்னுடைய வலைப்பூவில் எந்தெந்த இடுகைக்கு எத்தனை ‘விருப்ப’ங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதை அவராலேயே தெரிந்துகொள்ள முடியாமல் போவதுதான்.

இது சரியாக வேண்டுமானால், அனைவரும் தங்கள் தளங்களில் உள்ள முகநூல் ‘விருப்ப’ப் பொத்தானின் அகலத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால், இது சாத்தியமா? தமிழில் வலைத்தளம்/வலைப்பூ நடத்துபவர்கள் வேண்டுமானால் இதற்கு முன்வரலாம். ஆனால், உலகெங்கிலும் உள்ள எல்லா வலைத்தளங்களிடமும் நாம் இதை எதிர்பார்க்க முடியுமா என்பதை ‘முகநூல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்’ சிந்தித்துப் பார்க்க வேண்டும்! ஏற்கெனவே, முகநூலைத் தமிழில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்நிலையில், இருக்கிற பயனாளிகளுக்கும் வசதிக் குறைவை ஏற்படுத்தும் வகையிலான மாற்றங்களை நாம் செய்தால், இருப்பவர்களும் ஒரே சொடுக்கில் ஆங்கிலத்துக்கு மாறிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்!

ஒருவேளை, ‘விருப்பம்’ என்பதை விடப் ‘பிடித்திருக்கிறது’ என்பதுதான் ‘லைக்’ என்பதற்கான சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும் என்று மொழிபெயர்ப்பாளர்கள் கருதியிருக்கலாம். அஃது உண்மைதான் என்றாலும், அந்த அளவுக்குத் துல்லியமான மொழிபெயர்ப்பு இந்த இடத்துக்குத் தேவைப்படுகிறதா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அப்படியே தேவைப்பட்டாலும், ‘பிடித்திருக்கிறது’ எனும் இவ்வளவு நீளமான, பொத்தானின் மேற்பகுதியில் இருக்கும் எண்ணிக்கையை மறைக்கும் அளவிலான சொல்லுக்குப் பதிலாக, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த ‘விருப்பம்’ எனும் சொல்லையே ‘விருப்பு’ என மாற்றலாம். இது, ‘லைக்’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான, சரியான தமிழ்ச் சொல், ‘பிடித்திருக்கிறது’ என்பதைப் போல.

மேலும், கலைச்சொல்லாக்க இலக்கணத்திலேயே கூட, பொருளின் துல்லியத்துக்கு அடுத்தபடியாக முதன்மை பெறுவது அதன் நீளம்தான் என்பது நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. காரணம், ஒரு மொழி எந்த அளவுக்குச் சுருக்கமாகப் பயன்படுத்தப்படக் கூடியதாக இருக்கிறதோ, குறைந்த சொற்களைப் பயன்படுத்தி வேண்டிய பொருளைத் தரக்கூடியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதற்கு மதிப்பும், வீரியமும் கூடுதல். இஃது, இன்றைய கணினிக் காலத்துக்கு மட்டுமின்றி எல்லாக் காலத்துக்கும் பொருந்தும். பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் இலக்கிய வரலாற்றில், திருக்குறளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான இலக்கியங்கள் ஆழமான பொருளுடனும், கற்பனை வளத்துடனும், பா நயத்துடனும் வெளிவந்திருந்தாலும் அவை அனைத்தையும் விடத் திருக்குறள் மட்டும் இன்னும் பெரும்பாலான மக்களால் அறிப்பட்டதாக, பயன்படுத்தப்படக்கூடியதாக இருக்கிறதென்றால் அதற்கு அதன் சுருக்கமான வடிவமும் ஒரு முதன்மைக் காரணம். தவிர, இன்றைய காலக்கட்டத்தில், ஆங்கிலம் குறைந்த சொற்களிலேயே வேண்டிய பொருளைத் தரக்கூடிய ஆற்றல் படைத்ததாகவும், தமிழ் ஒரு வளவளா மொழி என்பதாகவும் ஒரு கருத்து மிகப் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், அன்றாடம் பயன்படுத்தப்படுகிற மிக எளிய ஒரு சொல்லான ‘லைக்’ எனும் நான்கெழுத்துச் சொல்லுக்கு மாற்றாகத் தமிழில் ‘பிடித்திருக்கிறது’ எனும் ஒன்பது எழுத்துக்கள் கொண்ட ஒரு சொல்லை, அதாவது ஒரு மடங்கு கூடுதல் நீளம் கொண்ட ஒரு சொல்லை முன்மொழிந்தால் அது தமிழ் பற்றி ஏற்கெனவே இருக்கும் அந்தத் தவறான கருத்துக்கு உரமூட்டூவதாக அமையாதா என்பதையும் ‘முகநூல் மொழிபெயர்ப்பாளர்கள்’ கனிவு கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

எனவே, ‘முகநூல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்’ உடனடியாக இதை மாற்ற வேண்டும் என்பது இந்தப் பதிவு மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள் மட்டுமில்லை, முகநூலைத் தமிழில் பயன்படுத்தும் அனைவரின் வேண்டுகோளும் கூட!

இந்த வேண்டுகோளைத் தெரிவிப்பதற்காக, Translator Community For தமிழ் என்னும் பெயரில் இயங்கி வரும் முகநூல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் குழுவுக்கு நான் கடந்த சூலை 25ஆம் நாளன்றே ‘குழுவில் இணை’வதற்கான கோரிக்கையை விடுத்தேன். அதாவது, சிக்கல் எழுந்த மறுநாளே! ஆனால், இப்பொழுது வரை அதற்குப் பதில் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் குழுவின் கவனத்துக்கு இந்தச் சிக்கலைக் கொண்டு செல்வதைத் தவிர வேறெப்படி இந்தப் புதிய மொழிபெயர்ப்பை மாற்ற முடியும் என்பதும் எனக்குத் தெரியவில்லை. எனவேதான் இப்படி ஒரு பதிவு எழுதி இந்தச் சிக்கலை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வர வேண்டிய தேவை எனக்கு. இந்தப் பதிவைப் படிக்கும் உங்களுக்கு இந்த வேண்டுகோள் சரியானது எனத் தோன்றினால், நீங்கள் அந்தக் குழுவில் ஏற்கெனவே இணைந்திருந்தால், கனிவு கூர்ந்து இந்தப் பதிவை அவர்களின் காலக்கோட்டில் பகிர்வதன் வாயிலாக இந்த வேண்டுகோள் நிறைவேற உதவுமாறு வேண்டுகிறேன்!

நம்முடைய இந்த வேண்டுகோள் நிறைவேறும் எனும் நம்பிக்கை எனக்கு இருந்தாலும், அதுவரை இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு? ஒரே வழி, முகநூல் பொத்தான்கள் வைத்திருக்கும் அனைவரும் அவற்றின் அகலத்தைக் கூட்டுவதுதான். இது, வலைப்பதிவர்கள்/வலைத்தளம் நடத்துபவர்கள் கவனத்துக்கு.

அன்புள்ள சக பதிவர்களே! வலைத்தளம் நடத்தும் அன்பர்களே! தமிழில் முகநூலைப் பயன்படுத்தும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முன்னிட்டு, கனிவு கூர்ந்து நீங்கள் அனைவரும் உங்கள் முகநூல் பொத்தானின் அகலத்தை மாற்ற வேண்டுகிறேன்! இதனால் எங்களுக்கு மட்டுமில்லை, உங்களுக்கும் பயன் உண்டு. முகநூலைத் தமிழில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்பதை நீங்களும் கவனித்துக் கொண்டுதான் இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்நிலையில், தான் படிக்கும் ஒரு வலைப்பக்கத்துக்குத் தான் எத்தனையாவது ஆளாக ‘விருப்பம்’ தெரிவிக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது எனும்பொழுது ‘விருப்பம்’ தெரிவிக்கும் ஆர்வம் மக்களுக்குக் குறையக்கூடும் இல்லையா? ஆகவே, இப்படிப் பொத்தானின் அகலத்தைக் கூட்டி, தமிழ் முகநூல் பயனர்களுக்கும் எண்ணிக்கை தெரியும்படி வைப்பது உங்களுக்கும் பயனுள்ளதாகவே அமையும்.

சரி, எந்த அளவுக்கு அகலப்படுத்த வேண்டும்? அதையும் சொல்லி விடுகிறேன். நீங்கள் வைத்திருப்பது பழைய பாணி (Standard) ‘விருப்ப’ப் பொத்தானாக இருந்தால் அதன் அகலத்தை 250 புள்ளிகளாகவும் (250px), குமிழ் பாணி (Button Count) பொத்தானாக இருந்தால் 150 புள்ளிகளாகவும், பெட்டி பாணியாக (Box Count) இருந்தால் 125 புள்ளிகளாகவும் அகலத்தை மாற்ற வேண்டும்.

இனி, இதை எப்படிச் செய்வது எனப் பார்ப்போம். (தமிழர்கள் பெரும்பாலானோர், பிளாக்கரை ஆங்கிலத்தில்தான் பயன்படுத்துகிறார்கள். :-( எனவே, கீழே வரும் வழிமுறைகளில் பொத்தான்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக, பிளாக்கர் குறிப்புகள் எழுதும் அனைவருமே பொத்தான்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மட்டும் குறிப்பிடுவது பிளாக்கரைத் தமிழில் பயன்படுத்தும் சிலரையும் வெறுப்பூட்டுவதாக அமையும் என்பதால், தமிழ் பிளாக்கர் பயனர்களின் வசதிக்காகப் பொத்தான்களின் பெயர்கள் கீழே அடைப்புக்குறிக்குள் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன). 

௧) முதலில், உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழையுங்கள் (Log in).

௨) அடுத்து, உங்கள் பயனர் பலகையிலுள்ள (Dashboard) உங்கள் வலைப்பூவின் பெயர் மீது சொடுக்குங்கள்.

௩) இப்பொழுது டெம்பிளேட் (Template) பொத்தானை அழுத்தி, அடுத்து வரும் பக்கத்தில் இருக்கும் Backup/Restore (காப்புப்பிரதி/மீட்டமை) பொத்தானை அழுத்துங்கள்.

௪) அடுத்து வரும் சாளரத்தில் (Window) உள்ள Download full template (முழு டெம்ப்ளேட்டையும் பதிவிறக்கு) பொத்தானைச் சொடுக்கி உங்களுடைய வலைப்பதிவின் இப்பொழுதைய முழு வடிவத்தையும் ஒரு நகலாகக் கணினியில் தரவிறக்கிச் சேமித்துக் கொள்ளுங்கள்.

௫) பிறகு, அந்தக் குட்டிச் சாளரத்தை மூடிவிட்டு, Edit HTML (HTMLஐ திருத்து) பொத்தானை அழுத்துங்கள்.

௬) இப்பொழுது புதிதாக வந்திருக்கும் குட்டிச் சாளரத்துக்குள் சுட்டியால் (Mouse) ஒருமுறை சொடுக்கிவிட்டு Ctrl+F கொடுங்கள்.

௭) இப்பொழுது HTML சாளரத்துக்குள் குட்டிப் பெட்டி ஒன்று வந்திருக்கும். அதனுள் கீழ்க்காணும் வரியை நகலெடுத்து ஒட்டி (Copy & Paste செய்து) செல் (Enter) விசையைச் சொடுக்குங்கள். இது முகநூல் ‘விருப்ப’ப் பொத்தானின் முதல் வரி ஆகும்.
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?

௮) இப்பொழுது, முகநூல் ‘விருப்ப’ப் பொத்தானின் நிரலை (Code) நீங்கள் பார்க்கலாம். இது பின்வருமாறு இருக்கும்.
<iframe allowTransparency='true' expr:src='&quot;http://www.facebook.com/plugins/like.php?href=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;send=false&amp;layout=box_count&amp;show_faces=false&amp;width=55&amp;action=like&amp;font=arial&amp;colorscheme=light&amp;height=62&quot;' frameborder='0' scrolling='no' style='border:none; overflow:hidden; width:55px; height:62px;'/>

இந்த நிரலின் இரண்டு இடங்களில் ‘width:55’ என இருப்பதை நீங்கள் காணலாம். ஒருவேளை உங்களுக்கு வேறு அளவில் கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும், அந்த அளவை உங்கள் பொத்தானின் பாணிக்கேற்ப மேலே கூறப்பட்டுள்ள அளவுக்கு மாற்றிவிடுங்கள்.

௯) பின்னர், Save Template (டெம்ப்ளேட்டைச் சேமி) பொத்தானை அழுத்தி, மாற்றம் சேமிக்கப்பட்டதும் மூடிவிடுங்கள்.

அவ்வளவுதான், இனி முகநூல் தமிழ்ப் பயனர்கள் அனைவருக்கும் உங்கள் வலைப்பூவின் ‘விருப்ப’ப் பொத்தான் முழுமையாக, எண்ணிக்கையோடு தெரியும். ஒருவேளை, நீங்களே முகநூலைத் தமிழில்தான் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த மாற்றத்தைச் செய்து முடித்ததும் நீங்களே உங்கள் வலைப்பூவைச் சென்று பாருங்கள்! அந்த அழகிய மாற்றத்தைக் காணலாம்.

ஆனால், இது பிளாக்கர் வலைப்பூக்களுக்கு மட்டும்தான் பொருந்தும். வேர்டுபிரசு வலைப்பதிவர்கள் பெரும்பாலும் முகநூல் பொத்தான்களையெல்லாம் பயன்படுத்துவதில்லை என்பதாலும், வலைத்தளங்கள் நடத்துபவர்கள் எல்லாரும் கணினித் தொழில்நுட்பத்தை நன்கறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள் ஆதலால் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவைப்படாது என்பதாலும் அவற்றைப் பற்றி நான் இங்கு எழுதவில்லை... எனச் சொன்னால் அது பொய்! எனக்கு பிளாக்கர் பற்றி மட்டும்தான் தெரியும்; மற்றவை தெரியாது. அதனால் எழுதவில்லை. :-P

இது தொடர்பாக, மேற்கொண்டு ஏதும் ஐயம் இருந்தால் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் கேளுங்கள்! பதிலளிக்க முயல்கிறேன். தமிழில் மட்டுமே கேளுங்கள்! எனக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழ் மென்பொருள் இல்லாதவர்கள் உடனடித் தேவைக்குக் கீழே உள்ள ‘தமிழ்ப் பலகை’யைப் பயன்படுத்தலாம். தமிழ் மென்பொருள் நிறுவ விரும்புபவர்கள் இடப்பக்கம் உள்ள ‘இவை விளம்பரங்கள் அல்ல’ எனும் தலைப்பின் கீழ் இருக்கும் தொடுப்புகளைச் சொடுக்கலாம்! 

முதல் படம்: நன்றி http://cdn.theatlantic.com/

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

2 கருத்துகள்:

  1. தொழில்நுட்பப் பதிவு எழுதுவதற்கு நீங்கள் பிரபு கிருஷ்ணாவாகவோ, அப்துல் பாசித்தாகவோ, பொன்மலராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே! தொழில்நுட்பம் பற்றி தெரிந்திருந்தால் போதும்.

    உண்மையில் தொழில்நுட்பம் பற்றி தமிழில் குறைவானவர்களே எழுதுகிறார்கள் என்பதில் வருத்தம் உள்ளது.

    பயனுள்ள பதிவு! தமிழில் பேஸ்புக் பயன்படித்தால் புரிந்துக் கொள்வது கடினமாக உள்ளது. ஆங்கிலம்-தமிழ் என்று சேர்ந்து இருக்கிறது. உதாரணத்திற்கு,

    "பிரபு likes a பதிவு"

    © http://agasivapputhamizh.blogspot.com/2013/08/like-button.html#ixzz2dwfizkos

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ தொடங்குவது பற்றி நீங்கள் எழுதிய தொடரை முழுமையாகப் படித்ததால்தான் என்னால் வெற்றிகரமான ஒரு வலைப்பூவையே தொடங்க முடிந்தது. அப்படி, என் இணைய உலக ஆசிரியர்களுள் ஒருவரான தாங்களே (என் அழைப்பின் பேரில்) வந்து என்னுடைய முதல் தொழில்நுட்பப் பதிவுக்கு முதல் ஆளாகக் கருத்து தெரிவித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது! மிக்க நன்றி!

      தொழில்நுட்பப் பதிவு எழுதுவதற்கு நீங்கள் பிரபு கிருஷ்ணாவாகவோ, அப்துல் பாசித்தாகவோ, பொன்மலராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பரே, தொழில்நுட்பம் பற்றித் தெரிந்திருந்தால் போதும் என்றீர்கள். அது தெரியாதே, அதுதானே சிக்கல்! ஹி... ஹி...

      முகநூலைத் தமிழில் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மை! ஆனால், படிப்படியாக அந்தக் குறைகள் களையப்பட்டும் திருத்தப்பட்டும் வருகின்றன. தொழில்நுட்பம் நன்கறிந்த உங்களைப் போன்ற பதிவுலக வேந்தர்களும் வந்தீர்களானால், விரைவில் அந்தக் குறைகளைச் சரிசெய்து, தமிழில் முழுமையான முகநூல் சேவையைக் கொண்டு வரலாம். தொழில்நுட்பம் சார்ந்த தமிழாக்கங்களில் பொதுவாக உள்ள சிக்கலே, தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கு அவ்வளவாக மொழிப் புலமை இல்லாதததும், மொழி வல்லுநர்களுக்குத் தொழில்நுட்பம் தெரியாதததுமே ஆகும்! இராம.கி ஐயா போன்றவர்கள் பெருமைக்குரிய விதிவிலக்குகள்! எனவே, தொழில்நுட்பியலாளர்களும், மொழியாளர்களும் கைகோத்தால் முகநூல் மட்டுமின்றி இணையச் சேவைகள் தேவைகள் அனைத்தையும் தமிழில் முழுமையாகவும், சிறப்பாகவும், எளிமையாகவும் கொண்டு வர நம்மால் முடியும், தமிழால் முடியும்.

      மிக்க நன்றி!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்