நானும் கடந்த ஓராண்டாக –அதாவது, இந்த வலைப்பூவைத் தொடங்கிய நாள் தொட்டு- இந்தத் தளத்தைத் தமிழ்10-இல் இணைக்க முயன்று வருகிறேன்; முடியவில்லை!
இணைப்பதற்காக ஒவ்வொரு முறை அந்தத் தளத்துக்குச் சென்று ‘பதிவை இணைக்க’ பொத்தானை அழுத்தும்பொழுதும் ‘பக்கம் காணப்படவில்லை’ (404 Error) என்றே காட்டும். ‘சரி, புதிய தளங்களை இணைப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போல. சரியான பிறகு வரலாம்’ என நானும் திரும்பி விடுவேன். ஆனால், இப்படியே பலமுறை ஆன பின்னர், ‘சரி, வலைப்பூவை இணைக்கத்தான் முடியவில்லை. தமிழ்10-இன் வாக்குப்பட்டையையாவது நம் தளத்தில் நிறுவி வைக்கலாம். மற்றவர்கள் அதில் வாக்களிப்பதன் மூலமாவது நம் இடுகைகள் அந்தத் திரட்டியில் இணைய முடிகிறதா பார்க்கலாம்’ என்று எண்ணி ஓரிரு நாட்களுக்கு முன் வாக்குப்பட்டை தேடி அந்தத் தளத்துக்குச் சென்றிருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக அந்த அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது.
அதாவது, 2012-உடன் நேரடியாகத் தன் தளத்தில் இணையும் வசதியைத் தமிழ்10 திரட்டி முற்றிலும் நிறுத்திவிட்டிருக்கிறது. அதற்குப் பதிலாக, நம் முகநூல் கணக்கு மூலம் இடுகைகளைத் தமிழ்10-இல் இணைக்கும் வசதியை அந்நிறுவனம் வழங்கி வருகிறது. இது பற்றிய மேலும் விவரங்களுக்குக் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கி அந்த அறிவிப்பைப் படியுங்கள்!
தமிழ்10 நிறுவனத்தினர் தங்கள் ‘பதிவை இணைக்க’ பொத்தானைக் குறிப்பிட்ட இந்த அறிவிப்புக்குத் திசைதிருப்பி விட்டிருந்தால் (redirect) இப்படி ஓராண்டுக்கும் மேலாக நான் காத்திருக்கவும், ஏமாறவும் நேர்ந்திருக்காது. வலைப்பூவுக்கு மிகுதியான நேயர்களை அழைத்து வரும் திரட்டிகளுள் ஒன்றான இதில் தொடக்கத்திலேயே நான் என் பதிவுகளை இணைத்திருந்தால், இன்னும் நல்ல பலனும் கிடைத்திருக்கும். இதை அந்த நிறுவனத்தினருக்கும் தெரிவித்திருக்கிறேன். நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.
இணையத்தில் தேடிப் பார்த்ததில், இது பற்றி விளக்கமான தகவல் ஏதும் இல்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.
தமிழ்10 தன் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நான் கருதிய நிலையில், உண்மை இப்படியிருக்கவே, எனக்கு இப்பொழுது மற்ற சில திரட்டிகள் பற்றியும் ஐயம் எழுந்துள்ளது. தமிழ்10 மட்டுமில்லை திரட்டி, ஒன் இந்தியா-தமிழ், மீனகம், தமிழ் பிளாக்கர் ஆகிய திரட்டிகளிலும் என்னால் என் வலைப்பூவை இணைக்க முடியவில்லை. உண்மையிலேயே இவர்களெல்லாரும் தங்கள் சேவையை நிறுத்தி விட்டார்களா அல்லது, இவற்றிலும் தமிழ்10 போலவே வேறு ஏதாவது சிக்கலா என்பது தெரியவில்லை. இவற்றில் சில நிறுவனங்கள் இது பற்றித் தொடர்புகொண்டும் பதிலளிக்க முன்வராததால் மற்ற திரட்டிகளை நான் அணுகாமலே விட்டுவிட்டேன். ஆனால், பதிவர் ரூபக் ராம் அவர்கள் தான் தன் வலைப்பூவைத் தமிழ்10-இல் இணைக்க முயன்று முடியாமல் போனபொழுது அதற்காக அவர்களைத் தொடர்புகொண்டு மேற்கண்ட முகநூல் மூலம் இணையும் வழிமுறையைத் தெரிந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். (அவருடைய அந்தக் குறிப்பைப் படிக்க அழுத்துங்கள் இங்கே!). நான் அப்படிச் செய்யாமல் விட்டதற்காக, ஓரிருவர் தவற்றுக்காக அனைவரையும் தவறாக நினைத்ததற்காக இப்பொழுது வருந்துகிறேன்!
நம்மை மதித்துப் பதிலளிக்காத திரட்டிகளின் சேவை நமக்குத் தேவையில்லை. ஆனால், அவர்களைப் போலவே அனைவரையும் கருதாமல், எந்தெந்தத் திரட்டிகளில் சிக்கல் இருக்கிறதோ அந்தந்த நிறுவனங்களைத் தொடர்புகொள்ளத் தயங்க வேண்டா என்பதே இதன் மூலம் நான் புதிய பதிவர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி!
அதே நேரம், திரட்டிகளை நம்பிப் பதிவர்கள் இல்லை. பதிவர்களை நம்பித்தான் திரட்டிகள் இருக்கின்றன. நாங்கள் நினைத்தால் முகநூல், கூகுள்+ போன்ற சமூகவலைத்தளங்களை மட்டுமே துணைக்கொண்டு உலகத் தமிழர்கள் அனைவரிடமும் எங்கள் எழுத்துக்களைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதைத் திரட்டி நடத்துபவர்கள் புரிந்துகொள்வது நல்லது!
பி.கு: உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ எந்தெந்தத் திரட்டிகளில், பட்டியலிடுதளங்களில் (Directories) இணைந்திருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் பின்தொடரவும், அந்தத் தளங்களிலெல்லாம் நீங்களும் உங்கள் வலைப்பூவை இணைத்துப் பயன்பெறவும், மேலே பக்கப்பட்டியில் (Navigation panel) உள்ள திரட்டிகள் பக்கத்தைப் பாருங்கள்! அண்மையில் களமிறங்கியிருக்கும் புத்தம் புதிய திரட்டிகள் சிலவும் உள்ளன. காணத்தவறாதீர்கள்!
******
நறுக்கு (Tail Piece): தமிழினப் படுகொலை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையம் பன்னாட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி உலகளாவிய கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது! கனிவு கூர்ந்து அதில் கையெழுத்திடுமாறும், முடிந்த அளவு அதைப் பரப்புமாறும் மனிதநேயத்தின் பெயரால் பணிவன்புடன் வேண்டுகிறேன்!
கையெழுத்திட, பரப்ப அழுத்துங்கள் இங்கே!
கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் இந்தப் பதிவைப் பரப்புங்கள்! உங்கள் சக பதிவர்கள் பயன்பெற உதவுங்கள்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
// திரட்டிகளை நம்பிப் பதிவர்கள் இல்லை. பதிவர்களை நம்பித்தான் திரட்டிகள் இருக்கின்றன. //
பதிலளிநீக்குஅப்படிச் சொல்லுங்க...!
நன்றி ஐயா! :-)
நீக்கு