.

திங்கள், ஏப்ரல் 27, 2015

தாலி – சில உண்மைகள், சில கருத்துக்கள், சில கேள்விகள்!Thought of Periyar about Thaali

திராவிடர் கழகம் நடத்திய ‘தாலி அகற்றிக் கொள்ளும் போராட்டம்’, ஊடகபாணியில் கூறுவதானால் “தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது”. பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற ஒரு மரபை எதிர்த்தால் சமூகத்தில் பரபரப்பு ஏற்படத்தான் செய்யும்; அஃது இயல்பு. ஆனால், அந்தப் பரபரப்பையும் தாண்டி இந்து சமய அமைப்புகளிடமும் அந்தக் கட்சிகளிடமும் காணப்படுகிறதே ஒரு பதற்றம், அஃது ஏன்?

தமிழ்நாட்டில் தாலி, கற்பு போன்றவற்றைப் பற்றி யாராவது ஏதாவது பேசினால் உடனே போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் எழுவது வாடிக்கைதான். முன்பு, தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு பேசியபொழுது நடந்த ஆர்ப்பாட்டங்களையும் கண்டனங்களையும் யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், அவையெல்லாம் எந்தக் கட்சிச் சார்பும் இல்லாமல், பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள். ஆனால், இந்தத் ‘தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி’க்கு எதிராக நடக்கும் எல்லாக் கண்டன ஆர்ப்பாட்டங்களும் இந்து சமய அமைப்புகளால் மட்டுமே நேரடியாக நடத்தப்படுகின்றன என்பது இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று!

தாலி என்கிற கோட்பாட்டுக்கு (concept) மக்களிடையே இன்றும் பழைய ஆதரவு அப்படியே இருக்குமானால், முன்பு குஷ்புக்கு எதிராக நடந்தது போல் இப்பொழுதும் பொதுமக்களே திரண்டு வீரமணி அவர்களுக்கு எதிராகவும் திராவிடர் கழகத்துக்கு எதிராகவும் கலகத்தில் இறங்கியிருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. (நடந்திருந்தால் இன்றைய ஊடகப் பெருவெளிச்சத்திலிருந்து அது தப்பியிருக்காது). நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களும் பா.ஜ.க, இந்து முன்னணி போன்ற சமயச்சார்புக் கட்சிகளாலேயே நடத்தப்பட்டிருப்பதும், மக்கள் அமைதி காப்பதும், தாலி இன்று அவ்வளவு ஒன்றும் பெரிய புனிதச் சின்னமாக நம் மக்களால் கருதப்படவில்லை என்பதாகவே எண்ண வைக்கின்றன.

இப்படி, மக்களே அமைதியாக இருக்கும்பொழுது இந்து சமயக் கட்சிகள் மட்டும் இதற்காகக் குதியோ குதி எனக் குதிப்பது அவர்களின் உண்மை முகத்தை அவர்களே அம்பலப்படுத்திக் கொள்வதாகத்தான் இருக்கிறது.

Hinduistic Leaders
தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துபவர்களை வக்கிரம் பிடித்தவர்கள் என்றும், தி.க-வினர் அனைவருமே எந்தவிதமான ஒழுக்கமோ கட்டுப்பாடோ இல்லாதவர்கள் என்றும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாலியை அகற்றிக் கொண்ட பெண்கள் குடும்பப் பெண்களே இல்லை என்றும், இன்னும் இன்னும் பல்வேறு விதங்களிலும் ஒழுக்கமும் பண்பாடும் மணக்க மணக்கப் பல அருமையான கருத்துக்களைத் திருவாய்மலர்ந்து (!) அருளியிருக்கிறார்கள் இந்து சமய அமைப்புகளைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, இராம.கோபாலன் முதலானோர். தவிர, பெரியார் படத்தைச் செருப்பால் அடிப்பது, அதன் மீது சிறுநீர் கழிப்பது போன்ற அருஞ்செயல்களின் மூலம் இவர்கள் நாகரிகத்தின் உச்சாசக்கட்டத்துக்கே சென்று விட்டார்கள். (பார்க்க: தயவு கூர்ந்து செருப்பால் அடியுங்கள் – தந்தை பெரியார்).

உடனே, “ஏன், பெரியார் மட்டும் ராமரைச் செருப்பால் அடிக்கவில்லையா? பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் விடவில்லையா? அது மட்டும் நாகரிகமா?” என நம் நண்பர்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி! ஆனால், அப்படிக் கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! ராமர், பிள்ளையார் போன்ற கடவுள்
உருவங்களைத்தான் பெரியார் செருப்பால் அடித்தாரே தவிர, தன் மாற்றுக் கருத்தாளர்களின் படங்களையோ, கடவுள் நம்பிக்கையாளர்களின் படங்களையோ, இந்து சமயத் தலைவர்களின் உருவங்களையோ அவர் அப்படிச் செய்யவில்லை.

Periyar showing proofs for his thoughtsசரி, கடவுள் உருவங்கள் மீதே ஆனாலும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டால், பெரியார் கடவுள் இல்லை என்றார்; மக்கள் நம்பவில்லை. கடவுள் நம்பிக்கையும் சமயமும், அவை நம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள ஏற்றத்தாழ்வுகளும்தாம் நம் இன்னல்கள் அனைத்துக்கும் காரணம் என்று பெரியார் எடுத்துக் கூறினார். ஆனாலும், அதற்காகக் கடவுளைப் புறக்கணிக்க மக்கள் ஆயத்தமாக இல்லை; அஞ்சினர். கடவுள் இல்லை என்பதற்குச் சான்றாக அறிவியலாளர்களின் அறிஞர்களின் கூற்றுக்களை மக்களிடையே விளக்கினார். ஆனாலும், கடவுள் மீதான அச்சம் மக்களுக்கு விலகவில்லை. எனவேதான், கடவுள் உருவங்களைச் செருப்பாலேயே அடிப்பது, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் விடுவது என நேரடியாகச் செயலிலேயே செய்து காட்டி, இப்படிக் கடவுளை நேரடியாகவே தாக்கியும் தனக்குக் கடவுளால் எந்தத் துன்பமும் நேரவில்லை என்பதை மக்கள் பார்த்தால் கடவுள் சிலைக்கு எந்த ஆற்றலும் இல்லை; அது நம்மை ஒன்றும் செய்யாது என மக்கள் உணர்வார்கள் என்ற நம்பிக்கையில் பெரியார் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். (ஆனால், அப்படியும் இது குறித்து மக்களிடையே பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை என்பது வேறு கதை).

ஆக, ஒரு கோட்பாடு தவறு என்று எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரியாத மக்களுக்குச் செயல்முறையில் புரிய வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சிக்கும், தங்களுக்கு எதிரான கருத்தை மக்களை ஏற்க வைப்பதைப் பொறுக்க முடியாமல் அந்தக் கருத்தை உண்டாக்கியவரின் படத்தை இழிவுபடுத்துவதற்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

இந்த அழகில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமாம்! எழுதி வைத்துக் கொள்ளுங்கள் பா.ஜ.க-வினரே, உங்கள் கனவில் கூட அது பலிக்கப் போவதில்லை!

முதலில், இது தாலி ‘அகற்றும்’ நிகழ்ச்சி இல்லை, ‘அகற்றிக் கொள்ளும்’ நிகழ்ச்சி என்பதை எதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீரமணி அவர்களோ வேறு யாருமோ போய்க் கட்டாயமாக யார் தாலியையும் அகற்றவோ, அறுக்கவோ இல்லை. தாலிக் கோட்பாட்டில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைப் புரிந்து கொண்டு அஃது இல்லாமல் வாழ விரும்புவோருக்கு ஒரு மேடை அமைத்துத் தருகிறார்கள், அவ்வளவுதான். இதோ, விழா மேடையில் உள்ள பதாகையில் கூட அப்படித்தான் இருக்கிறது.

Stage of Thaali ignoring function

ஆக, சமய அடையாளம் ஒன்றைத் தாங்களாக விரும்பி மக்கள் புறக்கணிக்கும்பொழுது அப்படிச் செய்யக்கூடாது எனக் கூற நீங்கள் யார் இந்து அமைப்புகளே? கடவுளையும், சமய நம்பிக்கை சார்ந்த சடங்குகளையும் மறுப்பது உலகெங்கும் உள்ளதுதான். கடவுள் இருக்கிறார், சமயச் சடங்குகளில் பொருள் இருக்கிறது என்பது ஒரு தரப்பினரின் நம்பிக்கை என்றால், அதை நம்பாமல் இருப்பது மறு தரப்பினரின் உரிமை. அப்படிப் பார்த்தால், தாலியை அணிவதும் அகற்றிக் கொள்வதும் அவரவர் விருப்பம். அப்படித் தாலியை மறுக்கக்கூடாது, கழற்றக்கூடாது எனச் சொல்வதாயிருந்தால் தாலியை மறுக்கும் பெண்ணுக்குக் கணவர்தான் சொல்ல வேண்டும். மாறாக, அதைச் சொல்ல நீங்கள் யார்? இந்திய மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையே தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள் என நினைப்பா மனதில்?

கேட்டால், இந்து சமயக் கட்சியினர் எனும் முறையில் இந்து சமய அடையாளத்துக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டிக்கிறோம் என்பீர்கள். தெரியாமல்தான் கேட்கிறேன், இந்து சமயப் பண்பாட்டையும் அடையாளங்களையும் காப்பதில் உண்மையிலேயே அவ்வளவு அக்கறையா உங்களுக்கு?

அப்படியானால், முந்நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கிய இராசபக்சவுக்கு ஏன் கடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ஆதரவளித்தீர்கள்? கோயிலை இடித்தால் ஆதரவு, தாலியை அகற்றினால் எதிர்ப்பா? கோயிலா தாலியா – இரண்டில் எது பெரிய பண்பாட்டுச் சின்னம்?

சரி, தாலிதான் கோயிலை விடப் பெரிய இந்து சமய அடையாளம் என்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தாலும், நடந்த இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கணவனை இழந்ததன் மூலம் அவர்கள் விருப்பத்துக்கு மாறாகவே தாலியறுக்கப்பட்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நீங்கள் ஏன் இன்று வரை பெரிதாக எந்தக் குரலும் எழுப்பவில்லை?

“ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை, இந்தியா எடுக்கும் முடிவைத்தான் நாங்களும் பின்பற்றுவோம். ஏனென்றால், அண்டை நாடு என்கிற முறையிலும், அந்த நாட்டில் பாதிக்கப்படுகிற அதே தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற நாடு என்கிற வகையிலும் இதில் முடிவெடுக்க முழு உரிமையும் இந்தியாவுக்குத்தான் உண்டு” என்று உலக நாடுகளும், ஐ.நா முதலான பன்னாட்டு அமைப்புகளும் ஒரே குரலில் கூறுகின்றன. எனவே, இன்று நீங்கள் நினைத்தால் ஒரே நாளில் ஈழத்தில் இடிக்கப்படும் கோயில்களையும் அறுக்கப்படும் தாலிகளையும் காப்பாற்றலாமே! அதை விட்டுவிட்டு சமய நம்பிக்கை இல்லாத காரணத்தால் தாங்களாகவே முன் வந்து தாலியை அகற்றிக் கொள்பவர்களுக்கு எதிராகப் போராட வேண்டிய தேவை என்ன?

இந்தக் கேள்விகளுக்குக் கண்டிப்பாக பா.ஜ.க-வையோ இன்ன பிற இந்து சமய அமைப்புகளையோ சேர்ந்தவர்கள் யாரும் பதிலளிக்கப் போவதில்லை. ஆனால், இதைப் படிக்கும் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவருமே இந்தக் கோணத்தைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

இராமருக்குக் கோயில் கட்டுகிறேன் என்பது, மொத்த இந்தியாவுமே இந்து நாடு என்பது, எதற்கெடுத்தாலும் “இந்து, இந்து, இந்து” எனப் பேசுவது என இந்துப் பண்பாட்டையே காக்கப் பிறப்பெடுத்த திருக்குமாரர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் பா.ஜ.க-வினருக்கும் பிற இந்து சமய அமைப்புகளுக்கும் உண்மையிலேயே இந்து சமயத்தின் மீது அக்கறை இருக்கிறதா? இருந்திருந்தால் இவர்கள் இந்துக் கோயில்களை இடித்த இராசபக்சவுக்கு ஆதரவளிப்பார்களா? தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் நாமெல்லாம் இந்துக்கள் என்று கூறி பா.ஜ.க-வில் சேர அழைக்கும் இவர்கள், இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் அதே இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட வேண்டிய ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்பது ஏன்? அவர்கள் கோரிக்கையான தமிழீழத்தை எதிர்ப்பது ஏன்? அவர்கள் தாலி அவர்கள் விருப்பத்துக்கு எதிராகவே வலுக்கட்டாயமாக அறுக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பது ஏன்? இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்! இந்தக் கருத்துக்களை இந்தியா எங்கும் உள்ள இந்துக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்! “எவ்வளவுதான் அட்டூழிங்கள் நிகழ்த்தினாலும் நம் சமயம் சார்ந்த ஒரே அரசியல் பிரதிநிதி இவர்கள்தானே” என்கிற நினைப்பில் இவர்களை ஆதரிக்கும் இந்துக்களுக்கு இந்த உண்மையைப் புரிய வைக்க வேண்டும்! இங்கு எல்லாமே அரசியல்தான் – பதவிதான் – பணம்தான்! மற்ற எதற்காகவும் யாரும் இங்கு அரசியல் சேவை புரிய வரவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்!

அப்படியானால் தாலி அகற்றுவதை இந்து அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

தாலி கட்டுவது தமிழர் வழக்கமா ஆரியர் வருகைக்குப் பின் ஏற்பட்ட பழக்கமா என்பது குறித்துத் தமிழறிஞர்களிடையிலேயே முரண்பாடான கருத்துக்கள் நிலவினாலும், பொதுமக்கள் பார்வையில் அஃது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வழக்கமாகத்தான் கருதப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட, இந்து சமயத்தின் முதன்மையான அடையாளங்களில் ஒன்றான தாலியைத் தமிழர்கள் புறக்கணித்தால் தமிழ்நாட்டில் தங்கள் நிலைமை என்னாகும் என்கிற பதற்றத்தினால்தான் இந்து அமைப்புகள் இதை எதிர்க்கின்றனவே தவிர, மற்றபடி இந்துப் பண்பாட்டின் மீதோ, தமிழ் மக்கள் மீதோ இவர்களுக்கு எந்தவிதத்திலும் அக்கறையும் இல்லை, சர்க்கரையும் இல்லை.

தி.க மட்டும் ஒழுங்கா? 

K.Veeramani

அதே நேரம், திராவிடர் கழகம் ஒன்றும் பெரிய தமிழர் நலக் கட்சியும் இல்லை. ஈழத்தில் தமிழினமே படுகொலை செய்யப்பட்டபொழுது, அதை நிறுத்தும் ஆற்றல் தன்னிடம் இருந்தும் செய்யாமல் கருணாநிதி வேடிக்கை பார்த்த வேளையில், அவரை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காமல், மாறாக அவருடைய அந்தச் செயலுக்குச் சாக்குச் சாக்காகச் சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர்தான் மானமிகு தலைவர் வீரமணி அவர்கள். அப்பேர்ப்பட்டவர் இத்தனை ஆண்டுகளாகப் போராட்டம் எதுவும் நடத்தாமல், திடீரெனப் பெரியாரியச் சிந்தனைகள் இன்று கிளர்ந்தெழுந்து தமிழர் நலனுக்காக மீண்டும் இப்படிப் போராட்டமெல்லாம் நடத்துகிறார் எனக் கூறினால், அதை நம்பும் அளவுக்கு இந்தப் பெரியார் மண்ணில் யாரும் இளித்தவாயர்கள் இல்லை.

தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு போராட்டத்தின் மூலம் இந்து சமயக் கட்சிகளைச் சீண்டிவிட்டுத் திராவிடத்துக்கு எதிரான கலகங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் விளைவித்தால், தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து நிலைபெற்றிருக்க வேண்டியதன் கட்டாயத்தைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தலாம், சரிந்து கிடக்கும் தி.மு.க, தி.க ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் செல்வாக்கை மீட்கலாம் எனும் திட்டமாகவே மக்கள் இதைப் பார்க்கிறார்கள்.

இப்படி, ஒரு கருத்தியலைத் தவறு என்பவர்கள், சரி என்பவர்கள் ஆகிய இருவேறு தரப்பினரும் குறிப்பிட்ட அந்தக் கருத்தியலின் தன்மைக்காகவோ, மக்கள் நலன் கருதியோ அல்லாமல் தங்கள் நலனுக்காகவே அவற்றைக் கூறுவதாகத் தென்படும் நிலையில், மக்களாகிய நாம் நாமாகச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவதுதான் சரியாக இருக்க முடியும். எனவே, இந்த இரு தரப்பினரில் ஒருவரையும் நம்பாமல் ‘தாலி கட்டும் வழக்கம்’ சரியா தவறா, அது வேண்டுமா வேண்டாவா என்பது பற்றித் தமிழ் அறிஞர்கள், வரலாற்று வல்லுநர்கள் ஆகியோரின் சான்றுடன் கூடிய கருத்துக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டும், மேற்கொண்டு தாங்களாகவே சிந்தித்தும் மட்டுமே முடிவுக்கு வருமாறு நம் தமிழ் மக்களைக் கோருகிறேன்!

தாலி தமிழர் பண்பாடா?

தாலி என்கிற கோட்பாட்டைத் தமிழர்கள் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், முதலில் அது தமிழ்ப் பண்பாடாக இருக்க வேண்டும்! அது தமிழ்ப் பண்பாடுதானா என்று கேட்டால், ஆம் என்றும், இல்லவே இல்லை என்றும் இரு வேறு முரண்பட்ட கருத்துக்களைத் தக்க சான்றுகளுடன் கூறுகிறார்கள் தமிழ் அறிஞர்கள் பலர்.

“புதுநாண் நுழைப்பான் நுதி மாண் வல் உகிர்ப் பொலங்கல ஒரு காசு” என்று அள்ளூர் நன்முல்லையாரும், “வாலிழை மகளிர் விழவணி கூட்டும்” என்று வெள்ளிவீதியாரும் குறுந்தொகையில் பாடியிருப்பது, தாலி கட்டும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது என்பதற்கான அத்தாட்சி எனத் தமிழ் விக்கிப்பீடியா கூறுகிறது.

ஆனால், அகநானூற்றிலும், தொல்காப்பியத்திலும் பழந்தமிழர்த் திருமணங்கள் எப்படி நடந்தன என்பதைக் காட்சியாகவே விவரிக்கும் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே மருந்துக்கும் காணப்படாததால் தமிழர்த் திருமண முறையில் தாலிக்கு இடமே இல்லை என்று தமிழறிஞர்கள் பலரும் அடித்துக் கூறியுள்ளார்கள்.

“கி.பி 10-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது” என்கிறார் வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.

“பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை” என்கிறார் வரலாற்று வல்லுநர் மா.இராசமாணிக்கனார்.

Tho.Paramasivan - Great Historical Scholarகாலஞ்சென்ற அறிஞர்களின் கருத்துக்கள் இப்படி இருக்க, நிகழ்கால அறிஞர்களில் தலைசிறந்த ஒருவரான புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் தொ.பரமசிவன் ஐயா அவர்கள் “கி.பி 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலிப் பேச்சே கிடையாது” என்கிறார். போதாததற்கு, “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருட்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை” என்றும் தனது ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில் அவர் நெற்றியடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்காலத் தமிழறிஞர்களில் தலைசிறந்த இன்னொருவரான இராம.கி அவர்களோ, தாலி தமிழர் பண்பாடுதான் என்பதை நிறுவும் முயற்சியாக ‘தாலி’ என்கிற தலைப்பில் வரலாற்று ஆய்வுத் தொடர் ஒன்றையே இணையத்தில் படைத்துள்ளார்! (பார்க்க: தாலி).

Raama.Ki - Great Tamil Scholarஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தாலி) முதலான பல்வகைத் தாலிகள் பண்டைத் தமிழரிடத்தில் இருந்ததைச் சங்கப் பாடல் சான்றுகளுடன் எடுத்துக்காட்டும் ஐயா அவர்கள், இவையெல்லாம் இருந்திருக்கும்பொழுது மணமான பெண்கள் அணியும் தாலி மட்டும் ஏன் இருந்திருக்காது எனக் கேள்வி எழுப்புகிறார். ஆண் பிள்ளைகளும், இளைஞர்களும் அக்காலத்தில் ஐம்படைத்தாலி என்கிற ஒன்றை அணிகிற வழக்கம் இருந்ததைப் பாடல் சான்றுகளோடு நிறுவியுள்ளார். இராம.கி அவர்களுக்கு முன்பே ஐம்படைத்தாலி பற்றித் தமிழறிஞர்கள் ஏராளமானோர் – தாலி தமிழர் பண்பாடு இல்லை என்போர் உட்பட – தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள், அப்படி ஒரு மரபு இருந்ததை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மணமான பின் ஆண்களும் அந்தக் காலத்தில் தாலி அணியும் வழக்கம் இருந்ததாகவும் ஒரு பாடலை இராம.கி ஐயா சுட்டிக்காட்டுகிறார்! அது மட்டுமின்றி, கணவனை இழந்தாலும் பெண்கள் கைம்பெண்களாக ஒதுக்கப்படும் வழக்கம் அக்காலத்தில் இல்லை; அவர்கள் ‘மங்கலப் பெண்கள்’ என்றுதான் பாடல்களில் குறிப்பிடப்படுகிறார்கள் என அந்தப் பாடல் வரிகளை அவர் மேற்கோள் காட்டுகிறார்.

ஆனால், அவரே அதே தொடரின் இன்னோர் இடத்தில், சங்க காலத்துக்குப் பிற்பட்ட நூலான சிலப்பதிகாரத்தில்தான் தாலி முதன்முறையாகத் திருமணச் சடங்கில் குறிப்பிடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதோடு, “சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படும் அந்த மேட்டுக்குடித் திருமணம் தமிழர் வழக்கத்தையும், ஆரியர் வழக்கத்தையும் கலந்து விரவியே குறிக்கிறது என்பதையும் இங்கு அழுத்திச் சொல்ல வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில், ‘தாலி தமிழர் பண்பாடுதான்’ என உறுதியாகக் கூறப் போதுமான சான்றுகள் இன்று வரை கிட்டவில்லை. அதற்காக, ‘அது தமிழர் பண்பாடே இல்லை’ என உறுதியாக மறுக்கவும் முடியாதபடி சில சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. இது வரை தமிழறிஞர்கள் இது குறித்து ஓர் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் உறுதி! தாலி என்கிற இந்தக் கோட்பாடு தமிழ் நாகரிகத்தில் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டதோ, அந்த முறையில் நாம் இன்று அதைப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் அது.

பண்டைக் காலத்தில் மணமாகும் முன்னும், பின்னும் ஆண்களும் தாலி அணிந்திருந்திருக்கிறார்கள். ஆனால், இன்று அப்படி இல்லை. சிலப்பதிகாரக் காலத்தில் (பண்டைக் காலத்தில் இல்லை) மணமான பெண்கள் தாலி அணியும் வழக்கம் இருந்திருப்பது உறுதியாகத் தெரிந்தாலும் அது பெண்களின் சமூகநிலையைத் தீர்மானிப்பதாக இல்லை. கணவனை இழந்தாலும் பெண்கள் மங்கலகரமானவர்களாகவே கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய தாலிக் கோட்பாட்டின்படி தாலி இழந்த பெண் கைம்பெண்.

ஆக, தாலி தமிழர் பண்பாடாகவே இருந்தாலும், தமிழர் பண்பாட்டில் அது கடைப்பிடிக்கப்பட்ட முறைக்கு முற்றிலும் மாறான வகையில் இன்று கடைப்பிடிக்கப்படுகிற சூழ்நிலையில் அதை நாம் தமிழர் பண்பாடு என எப்படிச் சொல்ல முடியும்? எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? மரபின் பெயரால் நாம் ஒன்றை ஏற்றுக் கொள்வதாயிருந்தால், அது கொஞ்சமாவது அந்த மரபை எதிரொலிப்பதாக (reflect) இருக்க வேண்டும். அப்படி இல்லாத, முற்றிலும் மாறான அல்லது மாறிப் போய்விட்ட ஒன்றை நாம் அந்த மரபினுடையதாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது வடிகட்டிய முட்டாள்தனம்.

இன்றைய இந்திய, தமிழ் சமூகத்தில் தாலி!

இன்றைய இந்திய, தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரை தாலி என்பது தேவையில்லாத ஒரு சுமைதான்.

தாலி என்பது வேற்று ஆண்களிடமிருந்து பெண்ணைப் பாதுகாக்கவா அல்லது, வழிதவறிப் போய்விடாமல் இருக்க வேண்டும் எனப் பெண்ணுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காகவா என்றால், இரண்டுக்கும்தான் என்றுதான் பழமையாளர்கள் கூறுகிறார்கள். இவை சரியா தவறா என்பது அப்புறம் இருக்க, இந்தக் காலத்தைப் பொறுத்த வரை இவை இரண்டுக்குமே தாலி பயன்படுவதில்லை என்பதுதான் கண்கூடு.

பால் மணம் மாறாக் குழந்தை முதல் பல் போன பாட்டி வரை எல்லாப் பெண்களுமே பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்படும் இன்றைய காலக்கட்டத்தில், தாலி அணிந்திருப்பதால் மட்டும் எந்தப் பெண்ணையும் எந்தக் காமவெறி நாயும் விட்டு வைக்கப் போவதில்லை.

Children Marriage

அதே போல, நினைவு தெரியாத காலத்திலேயே சிறு பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடும் பழக்கம் கொண்ட விடுதலைக்கு முன்பான இந்திய சமூகத்தில் வேண்டுமானால், சிறு வயது முதலே ஒரு பெண்ணுக்கு, அவளுக்கென ஒருவன் இருக்கிறான் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட காலத்தில் தாலி தேவைதான். ஆனால், அந்தப் பழக்கம் முற்றிலும் (!) இல்லாத இன்றைய நாளில், வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமே பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுகிற, அப்படி மணமான உடனே பெண் கணவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுகிற இன்றைய காலக்கட்டத்தில் “உனக்குக் கணவன் ஒருவன் இருக்கிறான். உனக்குத் திருமணம் ஆகிவிட்டது” என்பதை எந்தப் பெண்ணுக்கும் ‘நினைவூட்டியபடியே இருக்க’த் தேவை இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சமூகத்தில் திருமணத்துக்குப் பின் ஆண் மட்டும் வழக்கம் போல இருக்கலாம்; ஆனால், பெண்ணுக்கு மட்டும் மணமாகி விட்டதற்கான நிலையான ஓர் அடையாளம் இருந்தாக வேண்டும் என்பது பெண்ணின் ஒழுக்கத்தின் மீது அந்தச் சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகவே அமைகிறது.

“தனக்குத் திருமணம் ஆன பிறகு, அது தெரியாமல் யாராவது தன்னிடம் வந்து காதல் புரிய முற்பட்டாலோ, திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாலோ, நம் பெண்கள் உண்மையைத் தெரிவித்துக் கண்டிப்பாக அந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து விடுவார்கள்” என்கிற நம்பிக்கை ஒரு சமூகத்துக்கு இருக்குமானால், அந்தச் சமூகம் தன் பெண்களுக்குத் திருமண அடையாளத்தைக் கட்டாயப்படுத்துமா என்பதைத் தமிழ்ப் பெண்களும் இந்தியாவின் பிற பகுதிப் பெண்களும் கூடச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆக, அப்படி ஒரு நம்பிக்கை தங்கள் மீது இந்தச் சமூகத்துக்கு, இந்த இந்து சமயத்துக்கு, இந்த இந்து சமய அமைப்புகளுக்கு இல்லாததால்தான், “பெண்ணுக்கு நிலையான மனம் கிடையாது” என்கிற பிற்போக்குத்தனமான ஆரியக் கருத்தியலின் மீதான நம்பிக்கை நம் ஆண்களுக்கு இன்னும் அகலவில்லை என்பதன் அறிகுறியாகத்தான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் தாலி நம்மிடையில் வழக்கத்தில் இருக்கிறது என்பதை நம் பெண்கள் உணர வேண்டும்!

இப்படித் தங்கள் நடத்தையைக் கேள்விக்குறியாக்கும் அடையாளமான தாலியைத் தாங்களே புனிதப் பொருளாகக் கருதுவதும், தொட்டுத் தொட்டு வணங்குவதும், பொட்டிட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதும் எப்பேர்ப்பட்ட அருவெறுப்பான ஒரு வழக்கம், தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளும் பழக்கம் என்பதைச் சிந்திக்க இந்தக் கணினிக் காலக்கட்டத்திலாவது பெண்கள் முன்வர வேண்டும்!

ஆக, தமிழர் பண்பாடு என உறுதியாகக் கூற முடியாத, அப்படியே தமிழர் பண்பாடாக இருப்பினும் தமிழர் பண்பாட்டுக்கு உரிய வகையில் இல்லாமல், முற்றிலும் மாறான முறையிலேயே கடைப்பிடிக்கப்படுகிற, இந்தக் கால வாழ்க்கை முறைக்குப் பொருந்தாத, உங்கள் கற்புக்குக் களங்கம் கற்பிக்கிற தாலியை என் அருமை அக்கா தங்கைகளே, கழற்றி எறியுங்கள்! சமயத்தின் பெயரால் எவனாவது அச்சுறுத்தினால் இந்தக் கட்டுரையைக் கொண்டு கருத்தால் அடியுங்கள்!

பி.கு: எவ்வளவுதான் காரணங்களையும் ஏரணங்களையும் (logics) எடுத்துக் கூறினாலும் இத்தனை ஆண்டுகளாகத் தாலியுடன் வாழ்ந்துவிட்ட நம் முந்தைய தலைமுறையினரான தாய்மார்களை இன்று நாம் திடீரென அதைத் தூக்கி எறியச் சொன்னால், அஃது அவர்களால் முடியாது. எந்த ஒரு மாற்றத்தையும் ஒரே நாளில் நாம் எதிர்பார்ப்பது தவறு! எனவேதான், இன்றைய காலக்கட்டத்துப் பெண்களான அக்கா, தங்கைகளுக்கு மட்டும் நான் இதைப் பரிந்துரைக்கிறேன்.

(நான் கீற்று இதழில் எழுதியது, சில மாற்றங்களுடன்.)
 
❀ ❀ ❀ ❀ ❀


படங்கள்: நன்றி ௧. ராஜ் டூட்டி, ௨. ஒன் இந்தியா தமிழ்டூட்டி ஆன்லைன், ௩. தமிழ் வாழ்க!!, . வினவு, ௫. ஒன் இந்தியா தமிழ், ௬. திண்ணை, ௧0. வளவு, ௧. தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.

உசாத்துணை: நன்றி விக்கிப்பீடியா, வளவு

பதிவின் கருத்துக்கள் சரி எனத் தோன்றினால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து இந்த விழிப்புணர்வு முயற்சி வெல்ல உதவுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தமிழில் எழுத வசதியில்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கீழே 'தமிழ்ப் பலகை'! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், அதற்கு அடுத்து உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்!


 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

4 கருத்துகள்:

 1. தாலி அகற்றி கொள்ளுதல் எத்தனை பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது இவர்களுள். நச்சுனு சொல்லீடீங்க சகா. தாலி இல்லாத பெண்ணிடம் யாராவது ப்ரொபோஸ் செய்தால் என்னாவது என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒருவேளை கேடுகெட்ட கணவனிடம் மாட்டிகொண்ட பெண் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்றுகொண்டால் என்ன என்று தோன்றிவிடும் இல்லையா? அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்பதெல்லாம் எடுபடாதே:)
  அலைபாயுதே வந்த போது இருந்த எதிர்ப்பு கூட ஒ! காதல் கண்மணிக்கு இல்லை. லிவிங் to கெதர் சமாசாரம் எல்லாம் கண்டுகொள்ளாத அளவு தான் நம் மக்கள் போய்கொண்டிருகிரார்கள். இப்படி எல்லாம் கூப்பாடுபோட்டு தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டிய நிலை அரசியல்வாதிகளுக்கு.

  நான் முன்நெற்றியில்(வகிடு) குங்குமம் வைப்பதில்லை. ஆனால் தாலி அணிந்திருக்கிறேன். உறவினர் வாய்க்கு அவலிட விரும்பாமல். ஆனால் அதற்கே என் உறவுப்பெண்கள் தொடங்கி, உடன் பணிபுரியும் ஆசிரிய தோழிகள் வரை எல்லோரும் ஒரே அட்வைஸ் "சுமங்கலிகள் முன்நெற்றியில் குங்குமம் வைத்தால் தான் மங்களம், கணவருக்கு ஆயுள் கூடும்" அது ,இது என. அது என்ன head light மாதிரி என்று என் தங்கையிடம் நான் சொல்லி சிரிப்பேன். திருமணத்தன்று எங்கள் உறவுகளில் ஆண்களுக்கும் தான் மெட்டி அணிவிக்கிறார்கள். ஆனால் ஒரு ஆண் கூட கல்யாணமா இரவு வரை கூட அதை அணிவதில்லை:(( இந்த காலத்து இளைஞர்கள் இப்படி ஒரு கருத்தோடு வருவது வரவேற்கத்தக்கது சகா:) வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட்புக்குரிய சகா! உங்கள் கருத்துக்குப் பதிலளிக்கும் முன் ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

   இதுவரை 502 பார்வைகளும், 69 வாக்குகளும் பெற்ற இந்த இடுகைக்குக் கருத்துத் தெரிவித்த ஒரே துணிச்சல்காரர் தாங்கள்தான்! அதற்காக என் பாராட்டுக்கள்!

   //தாலி இல்லாத பெண்ணிடம் யாராவது ப்ரொபோஸ் செய்தால் என்னாவது என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒருவேளை கேடுகெட்ட கணவனிடம் மாட்டிகொண்ட பெண் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் ஏற்றுகொண்டால் என்ன என்று தோன்றிவிடும் இல்லையா?// - ஆகா! சேம் சைடே கோல் போட்டுட்டீங்களேம்மா! நகைச்சுவைக்காகச் சொன்னேன். அப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும் பெண்ணாக இருந்தாலும், தன் நிலைமையைச் சொல்லி, கணவரிடம் மணவிலக்குப் பெற்றுத்தான் புதிய காதல் விண்ணப்பத்தை ஏற்பாரே தவிர, ஏற்கெனவே தனக்கு மணமானதை மறைத்துப் புதியவனுடன் ஓடிவிடுவார்கள் நம் பெண்கள் என எனக்குத் தோன்றவில்லை. நம் பெண்களை நான் நம்புகிறேன்! நம் சமூகத்துக்கும் அந்த நம்பிக்கை வேண்டும் என்றுதான் கூற விழைகிறேன். அதற்காக, நீங்கள் அந்தப் பொருளில் கூறியதாக நான் சொல்ல வரவில்லை. நீங்கள் கூறியதை வேறு யாரும் தங்கள் தரப்பு வாதமாகப் பயன்படுத்திக் கொண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் சொன்னேன்.

   பேச்சில் மட்டும் இல்லாமல், சொந்த வாழ்விலும் நீங்கள் பகுத்தறிவாளராகத்தான் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன்; பெருமைப்படுகிறேன்! அதே நேரம், உங்களுடைய இந்த சுதந்திரத்தை மதிக்கிற, நீங்கள் இப்படி வாழ்வதை ஏற்றுக் கொள்கிற தங்கள் கணவர் திரு.மது கஸ்தூரி அவர்களை எண்ணி மேலும் பெருமையாக இருக்கிறது! பாராட்டுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சகா!

   நீக்கு
 2. **தங்கள் கணவர் திரு.மது கஸ்தூரி அவர்களை எண்ணி மேலும் பெருமையாக இருக்கிறது!**

  உண்மை தான் சகா:) ஆரம்பத்தில் என் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து ஒன்றும் சொல்லாத கஸ்தூரி, ஒரு முறை நிலவன் அண்ணா வீட்டில் இருந்து தவறுதலாய் எடுத்துவந்துவிட்ட "காலம் தோறும் பிராமணியம்" என்ற நூல் தொகுதி முழுவதுமாய் படித்து முடித்து, இப்போ என்னைவிட தெளிவாய் பகுத்தறிவு பேசுகிறார். இப்போ அவரிடம் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். என் அத்தையும், அண்ணியும் (கஸ்தூரியின் அம்மா, தங்கை) நான் கஸ்தூரியை மாற்றிவிட்டதாக அங்கலாய்ப்பதுண்டு:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக, தவறுதலாய்ச் செய்த ஒரு செயல் சரியான விளைவை ஏற்படுத்தி விட்டது! :-) வாழ்த்துக்கள்!

   நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (90) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (39) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (12) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (9) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (23) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (9) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (1) பொதுவுடைமைக் கட்சி (1) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (5) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்