.

புதன், நவம்பர் 06, 2013

இலங்கைக் காமன்வெல்த் மாநாட்டை நிறுத்த ஒரே வழி!... - போராளிகளின் இன்றியமையாக் கவனத்துக்கு!

Do not organise the Commenwealth conference in Srilanka the country which had done Tamils genocide!
ஈழத்தில் தமிழின அழிப்பு நடந்தது முதல் இப்பொழுது வரை எத்தனையோ போராட்டங்களை நாம் இந்தப் பிரச்சினைக்காக நடத்தியிருக்கிறோம். ஆனால், இந்த எல்லாப் போராட்டங்களையும் விட உச்சக்கட்டக் குழப்பத்துக்குப் பலியாகி இருப்பது இப்பொழுது நடைபெற்று வரும் ‘இலங்கைப் (காமன்வெல்த்) பொதுநலவாய மாநா’ட்டுக்கு எதிரான போராட்டம்தான்.

ஒரு பக்கம் ‘பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது’ எனப் போராடுகிறோம்; மறுபக்கமோ ‘இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது’ எனப் போராடுகிறோம்! அப்படியானால், மாநாடு இலங்கையில் நடந்தால் தேவலையா? போராடுபவர்களே தங்கள் முதல் கோரிக்கை நிறைவேறாது என்கிற முடிவோடுதான் போராடுகிறார்களா? என்ன குழப்பம் இது! இவை முன்னுக்குப் பின் முரணானவை அல்லவா?

இந்த இரண்டில் சரியான கோரிக்கை எது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்தப் பொதுநலவாய மாநாட்டை இலங்கை ஏன் நடத்துகிறது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்! அதைப் புரிந்து கொண்டால் மாநாடு நடக்கவே கூடாதா அல்லது அதில் இந்தியா கலந்துகொள்ளாமல் இருந்தால் மட்டும் போதுமா என்பதைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

Gordon Brown - Former Prime Minister of Englandஇந்த ஆண்டு மட்டுமில்லை, ஈழத்தில் நம் இனத்தையே கொன்று கூறு போட்ட ஓராண்டுக்குள்ளாகவே, அடுத்து வந்த பொதுநலவாய மாநாட்டைத் தான் நடத்திவிடப் பெருமுயற்சி மேற்கொண்டது இலங்கை. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அன்றைய தலைவர் என்ற முறையில் அப்பொழுதைய பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரௌன் அதைத் தடுத்து நிறுத்தினார். (பார்க்க இங்கே). “இலங்கை இந்த மாநாட்டை நடத்துமானால் அதில் கலந்துகொள்ளக் கூடாது எனப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் வலியுறுத்துவேன்” என்ற அவருடைய அதிரடி அறிக்கை இலங்கையை மட்டுமின்றி உலக நாடுகளையே அன்று அதிர வைத்தது! ஆனால், இன்றைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் அவர் போல் இல்லாதது நமக்குப் பின்னடைவே!

இப்படி, இந்த மாநாட்டை ஒருமுறையாவது நடத்திவிட இலங்கை தொடர்ந்து துடிப்பதற்குக் காரணம் என்ன?

என்னதான், நடந்த இனப்படுகொலையில் இலங்கைக்கு முன்னணியில் நின்று உதவிய நாடு என்றாலும், நடப்பது விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் இல்லை, ஈழத் தமிழர்களை அழிப்பதற்கான இனப் படுகொலை என்று புரிந்ததுமே அதை எதிர்க்கத் தொடங்கிய இரண்டாவது நாடு இங்கிலாந்து. (முதல் நாடு வாடிகன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!). அன்று முதல் இன்று வரை ஈழப் பிரச்சினையில் இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து காய் நகர்த்தி வரும் தலையாய நாடு இங்கிலாந்துதான். அமெரிக்கா கூட இங்கிலாந்துடன் சேர்ந்துதான் இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதே தவிர, தன் சொந்த முனைப்பினால் இல்லை எனச் சொன்னால் மிகையாகாது. உலகையே ஆட்டிப் படைக்கும் இருபெரும் நாடுகளுள் ஒன்றான பிரிட்டன், ஈழப் பிரச்சினையில் தனக்கு எதிராக இருப்பது எப்பொழுதும் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல என்பதை உணர்ந்திருக்கும் இலங்கை, பிரிட்டனுடனான தன் உறவை வலுப்படுத்திக் கொள்ள, பிரிட்டனும் பிற நாடுகளும் ஈழப் பிரச்சினையில் தனக்குத் தொடர்ந்து அளித்து வரும் அழுத்தத்தை நிறுத்தி இந்தியா போல அவர்களையும் தனக்கு ஆதரவாகத் திருப்ப மேற்கொள்ளும் முயற்சிதான் இந்தப் பொதுநலவாய மாநாடு! அதாவது, நேர்மை பேசும் அரசு அலுவலர்களைக் கவிழ்க்கக் குறுக்குவழியில் பணம் ஈட்டும் முதலாளிகள் நடத்தும் விருந்து போல. வடநாட்டில், தேர்தலில் வென்றவன் மற்ற கட்சிகளுடன் தனக்கு எந்தப் பகைமையும் இல்லை என்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து வெற்றி விழா விருந்து கொண்டாடுவானே அது போல.

ஆக, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே! ஈழப் பிரச்சினையில் தமிழர் தரப்பை வலுவிழக்கச் செய்வதற்காக இலங்கை மேற்கொள்ளும் இந்தப் பன்னாட்டு முயற்சியை (International Effort) முறியடிக்க வேண்டுமானால் நாம் இந்த மாநாட்டையே முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டுமா அல்லது இந்தியா மட்டும் இதில் கலந்துகொள்ளாமல் இருந்தால் போதுமா? ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்கும் இங்கிலாந்து முதலான நாடுகளைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஆத்திரேலியா போன்ற தமிழர் ஆதரவு நாடுகள் போகக்கூடாதா அல்லது ஏற்கெனவே இலங்கையின் காலடியில் விழுந்து கிடக்கும் இந்தியா போகக்கூடாதா? யார் இந்த மாநாட்டுக்குப் போவது நமக்கு மிகுந்த பாதிப்பை விளைவிக்கும்? நம் நண்பன் நம் எதிரியுடன் சேர்வது நமக்கு ஆபத்தா அல்லது நம் எதிரியின் நண்பன் அவன் வீட்டுக்குப் போவது ஆபத்தா? சிந்தியுங்கள்! நாம் யாரை நோக்கிப் போராட வேண்டும்? எந்த அலுவலகங்களுக்கு முன்பாகப் போராட வேண்டும்? இந்திய நடுவணரசு அலுவலகங்களுக்கு முன்பாகவா அல்லது இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாகவா? கனிவு கூர்ந்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

“ஏன், இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாகக் கூடத்தானே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன?” என நீங்கள் கேட்கலாம். ஆம்! தூதரகங்களுக்கு முன்பாக‘வும்’ போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதுதான் சிக்கல். நடுவணரசு அலுவலகங்களைப் பூட்டுதல், தொடர்வண்டியை மறித்தல், உண்ணாநிலை, பொதுக்கூட்டம்... இப்படிப் பல போராட்டங்களுக்கிடையில், பத்தோடு பதினொன்றாகத் தூதரகங்களுக்கு முன்பாகவும் போராடுகிறோம்! இது எப்படிப் பலனளிக்கும் நண்பர்களே?
Struggle before Indian, England offices by the May 17 movement!
மே 17 இயக்கத்தின் இந்திய, இங்கிலாந்து அலுவலகங்களுக்கு முன்பான போராட்டம்!
நினைத்துப் பாருங்கள்! கடந்த ஆண்டு, இதே நவம்பர் திங்களில் நபிகள் நாயகம் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு திரைப்படம் அமெரிக்காவில் வெளிவந்ததே, அப்பொழுது நாம் எப்படிப் போராடினோம்? ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக மட்டும் குவித்தோம். உலகெங்கும் உள்ள எல்லா இசுலாமியத் தோழர்களும் சொல்லி வைத்தாற்போல் இதையே செய்தார்கள். அந்தப் போராட்டத்தின் வழிமுறைகளில் வேண்டுமானால் வேறுபாடு இருந்திருக்கலாமே தவிர, அந்தப் போராட்டம் நடத்தப்பட்டது முழுக்க முழுக்க அமெரிக்கத் தூதரகங்களை நோக்கி மட்டுமே என்பதில் மாற்றம் இல்லை. அதனால்தான், அந்தப் படத்தை எடுத்தவர் உடனடியாகச் சிறைப்படுத்தப்பட்டார்.

ஆனால், மதத்துக்கு ஒரு பாதிப்பு என்றால் மந்தை மந்தையாகக் கூடத் தெரிகிற நமக்கு, இனத்துக்கு ஒரு பாதிப்பு என வரும்பொழுது அப்படி ஓரணியில் நிற்க ஏன் கசக்கிறது? ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரை இப்படி எந்த ஓர் ஒற்றுமையும் நமக்குள் இல்லை. ஒரு பக்கம் ஊர்வலம், இன்னொரு பக்கம் கையெழுத்து இயக்கம், வேறொரு பக்கம் மாநாடு என ஆளுக்கொரு வகையில் போராடிக் கொண்டிருக்கிறோம். அனைவரும் ஓரணியில் திரண்டு, ஒற்றை இலக்கைக் குறிவைத்து ஒரே மூச்சாக நடத்துவதற்குப் பெயர்தான் போராட்டமே தவிர, இப்படி ஆளாளுக்கு அவரவருக்கு வசதிப்பட்ட வகையில் நடத்தினால் அஃது அவரவர் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வெறும் விளம்பர முயற்சிதான்!

இசுலாமிய உடன்பிறப்புக்களின் மேற்கண்ட போராட்டத்திலிருந்து, நம் கண்ணெதிரே வெற்றிபெற்ற அந்தப் போராட்டத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாவா? ஒரு முறை, ஒரு போராட்டம், குறிப்பிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வெற்றியடைந்தால் அடுத்த முறை அதே போன்ற ஒரு பிரச்சினை தலைதூக்கும்பொழுது மறுபடியும் அதே பாணியிலான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்பது கூட நமக்குத் தெரிய வேண்டாவா? இதைக் கூட யாராவது வந்து நமக்குச் சொல்லித் தர வேண்டுமா?

எனவே, போராளித் தோழர்களே! போராட்டத் தலைவர்களே! மாணவப் புலிகளே! கட்சித் தோழர்களே! பொதுமக்களே! அனைவரும் ஒன்று திரளுவோம்! ஏற்கெனவே இலங்கையின் நட்பு நாடான இந்தியா இந்த மாநாட்டுக்குப் போவதாலோ போகாமல் இருப்பதாலோ நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதையும் மாறாக* ஏற்படும் பாதிப்பை விட, தனக்கு எதிராக இருக்கும் இங்கிலாந்து முதலான நாடுகளையும் நட்பாக்கிக் கொள்ளவே இலங்கையால் திட்டமிட்டு நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு, அந்த நாடுகள் போவதுதான் நமக்கு ஈடு செய்ய முடியாத அரசியல் வலுவிழப்பை ஏற்படுத்தும் என்பதை முதலில் புரிந்து கொள்வோம்!

ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மொத்தமாகத் தீக்குளித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்திய அரசை நோக்கிய நம் போராட்டங்களைக் குறைத்துக்கொண்டு, தன் தூதரகத்துக்கு முன் ஒரு சிறு கூட்டம் கூடினாலும் உடனே அந்நாட்டுப் பிரதமருக்கு அழுத்தம் தருகிற இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாக நம் போராட்டங்களை ஒருமுனைப்படுத்துவோம்! இந்த மாநாட்டை முதல் நாடாகப் புறக்கணித்த கனடாத் தூதரகத்துக்கு முன் நன்றியறிவித்தல் கூட்டம் நடத்துவோம்! கனடாவைப் பின்பற்றுமாறு மற்ற நாட்டுத் தூதரகங்களுக்கு முன்பாகக் கூக்குரல் எழுப்புவோம்! அறவழியில், நன்னெறியில் உலகமே திரும்பிப் பார்க்கும் விதத்தில் போராடுவோம்! இந்த மாநாடே நடக்கவிடாமல் முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவோம்! சிங்கள-இந்திய-தி.மு.க சூழ்ச்சியை முறியடிப்போம்! வரலாறு போற்றும் வெற்றியை நமதாக்குவோம்! 

வெல்க தமிழர்!
தமிழர் வென்றால்தான்
வாழும் தமிழ்!

(பி.கு: இலங்கைப் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது எனப் பிரிட்டன் இளவரசரிடம் கோரிக்கை விடுத்து மடல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. நீங்களும் அனுப்ப வேண்டாவா? சொடுக்குங்கள் இங்கே!)

*காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் ஆகப்போவது என்ன? - பதிவில் 'சேவ் தமிழ்சு' இயக்க ஒருங்கிணைப்பாளர் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இந்த ஒரு கருத்து திரும்பப் பெறப்படுகிறது!


படங்கள்: நன்றி சேவ் தமிழ்சு இயக்கம்wikimedia.org, மே பதினேழு இயக்கம்.

(நான் கீற்று இதழில் எழுதிய கட்டுரை).

தொடர்புடைய பதிவு:
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்புக்குச் சக உணர்வாளன் ஒருவனின் மடல்!

இந்தப் பதிவை முடிந்த அளவுக்குப் பரப்பி, போராட்டம் வெல்ல உதவுவீர்!

 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

7 கருத்துகள்:

  1. //சிங்கள-இந்திய-தி.மு.க சூழ்ச்சியை//

    ஞானப்பிரகாசன்,
    தி.முக. சூழ்ச்சி என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. http://may17movementnews.blogspot.in/2013/10/blog-post_18.html - இந்த இணைப்பைப் படித்துப் பாருங்கள் புரியும்! உங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு

  2. ஆனால் பின்பு உங்களது கருத்துக்கு மாறாகவே டேவிட் கமருனுக்கும் , சாள்சுக்கும் மட்டும் தனித்தனியாக நெருக்கடி கொடுத்து மடல் அனுப்ப வேண்டும் .

    இந்திய பிரதமரை மட்டும் இப்போது தமிழகம் கொடுப்பது போல் எந்த நெருக்கடியும் கொடுக்காது ப்ரீ யாக கொழம்பு அனுப்பி வைத்து விட வேண்டும் .
    இந்தியப்பிரதமருக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை திசை திருப்பி விடுவதற்காக சாமர்த்தியமாக நாசூக்காக இந்த கட்டுரை வரையப்பட்டுள்ளது.
    அதற்கு சொல்லப்பட்டுள்ள காரணம் தான் மிக வேடிக்கையாக உள்ளது .
    இந்தியப்பரதமர் ஏற்கனவே கொழம்பின் காலடியில் விழுந்து கிடக்கிறாராம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன பேசுகிறீர்கள்?
      டேவிட் காமரூனும், இளவரசர் சார்லசும் யார்? இந்தியத் தரப்பினரா?... கட்டுரையில் கூறப்பட்டுள்ளது என்ன? அந்த மாநாட்டுக்கு இந்தியா போகாமல் இருப்பதை விட இங்கிலாந்து போகாமல் இருப்பதுதான் முக்கியம் என்பதுதானே? இங்கிலாந்து பிரதமரும், இங்கிலாந்து இளவரசரும் போகாமலிருப்பதற்குத்தானே நெருக்கடி கொடுத்து மடல் அனுப்ப அழைத்திருக்கிறேன்? அஃது எப்படிக் கட்டுரையின் கருத்துக்கு மாறானது என்கிறீர்கள்? குறை சொல்வதையும், எதிர்க் கருத்து இடுவதையும் வேண்டாவெனச் சொல்லவில்லை. ஆனால், அதைக் கொஞ்சமாவது சிந்தித்து, உங்கள் கருத்து சரிதான் என நீங்களே ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டு கருத்திடுங்கள்! சரியா?

      மேலும், இந்தியப் பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாதென்றும் கட்டுரையில் எழுதப்படவில்லை. அதையே முதன்மையான போராட்டமாக வைத்துக் கொள்ளாதீர்கள். அந்தக் கோரிக்கையினால் பலன் இல்லை. இங்கிலாந்துதான் முக்கியமாகப் போகக்கூடாது. எனவே, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களைக் குறைந்துக்கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான போராட்டங்களைக் கூட்டுங்கள் என்றுதான் எழுதியிருக்கிறேன்.
      //ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மொத்தமாகத் தீக்குளித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்திய அரசை நோக்கிய நம் போராட்டங்களைக் குறைத்துக்கொண்டு, தன் தூதரகத்துக்கு முன் ஒரு சிறு கூட்டம் கூடினாலும் உடனே அந்நாட்டுப் பிரதமருக்கு அழுத்தம் தருகிற இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாக நம் போராட்டங்களை ஒருமுனைப்படுத்துவோம்!// - எனும் வரிகள் உங்கள் கண்களில் படவில்லையா?

      போராட்டத்தை நான் திசை திருப்பிவிடுகிறேன் என்றிருக்கிறீர்கள். ஆம்! திசை திருப்பித்தான் விடுகிறேன். தோல்வியடையக்கூடிய திசையில் செல்லும் போராட்டத்தை வெற்றித் திசைக்குத் திருப்பி விடுகிறேன். எத்தனையோ முறை ஈழப் பிரச்சினைக்காக நாம் இந்தியாவை நோக்கிப் போராடியுள்ளோம். ஆனால், ஒருமுறையாவது வென்றோமா? சிந்தியுங்கள்! ஆனால், நம் இசுலாமிய உடன்பிறப்புக்கள், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய பட விவகாரத்தில் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன் போராடி உடனடி வெற்றியை ஈட்டினார்கள். எனவேதான், மீண்டும் மீண்டும் இந்தியாவை நோக்கிப் போராடித் தோல்வியடையாமல், நம் போராட்டத்தால் பாதிப்படையக்கூடிய வெளிநாடுகளின் தூதரகங்களுக்கு முன் போராடலாம் வாருங்கள் என அழைக்கிறேன். இதைத் தவறு எனச் சொல்பவர்கள், போராளிகள் தோல்வியடைய விரும்புகிறார்கள் எனப் பொருள்!

      நீக்கு
  3. உங்கள் கருத்தைப்பொறுத்தவரை பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதே தவறு . எனவே தனித்தனியாக ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் நெருக்குதல் தருவது பிரயோசனமற்றது , மற்றும் நேர விரயமும் கூட என்பது வரை சரி .

    ஆனால் அதன் பிறகு தான் தங்கள் புத்தியை காட்டியுள்ளீர்கள் .

    உங்களது முன்னைய கருத்துக்கு முரணாக இளவரசர் சால்ஸுக்கும் , இங்கிலாந்து பிரதமருக்கும் மடல்களாக அனுப்ப வேண்டும் அதே நேரம் இந்தியப்பிரதமருக்கு இப்பொது தமிழகம் கொடுப்பதுபோல் எந்த நெருக்குதலும் கொடுக்காமல் அவரை ப்ரீ யாக கொழும்புக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் .
    இதுதான் நீங்கள் சுத்தி வளைத்து சொல்வது .
    இதற்கு நீங்கள் சொல்லும் காரணம் அல்லது சப்பைக்கட்டு என்னவென்றால் இந்தியப்பிரதமர் ஏற்கனவே இலங்கையின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார் என்பதுதான் .
    தமிழகத்தில் உள்ள கட்சிகள அனைத்தும் ஒன்று பட்டு இந்தியப்பிரதமருக்கும் வெளியுறவுத்துறைக்கும் என்று மில்லாத நெருக்கடியை கொடுத்து வரும் நிலையில் மத்திய அரசையும் பிரதமரையும் காபாற்ற ரொம்பவே பாடுபட்டிருக்கிறீர்கள் .
    சும்மா சொல்லக்கூடாது தமிழ க மக்களின் கவனத்தை இந்தியபபிரதமரிருந்து விலக்கி உலகத்தலைவர்களை நோக்கி நன்றாகவே திசை திருப்பி விட்டுள்ளீர்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் மீண்டும் மீண்டும் சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். மன்மோகன் சிங்கைத் தாராளமாக அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று கட்டுரையின் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இந்திய அரசுக்கு முதன்மையாகவும் உலக நாடுகளை நோக்கிக் குறைந்த அளவிலும் தரப்படும் அழுத்தத்தைத் தலைகீழாக மாற்றி, யார் நாம் சொன்னால் கேட்பார்களோ, யார் இந்த மாநாட்டுக்குப் போவது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ அவர்களை நோக்கிப் போராட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியப் பிரதமர் இலங்கையின் காலடியில் விழந்து கிடக்கவில்லை என்று வெளியில் போய்ச் சொன்னால் உங்களைத்தான் எல்லாரும் தமிழர் எதிர்ப்பாளர் என்பார்கள். முதலில் கட்டுரையின் தலைப்பு என்ன? மாநாட்டையே நடத்தவிடாமல் செய்வதற்கான ஒரே வழி எது என்பதுதானே? அதுதானே கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது? இதன்படிச் செய்தால் மாநாடே நின்றுபோகும் எனும்பொழுது மன்மோகன் பற்றி நமக்கென்ன கவலை? மாநாடு நடந்தால்தானே அந்தாள் போக முடியும்? அந்த மாநாடே நடக்காமல் இருக்க வழி சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் மீண்டும் மீண்டும் மன்மோகன் போகாமல் இருந்தால் மட்டும் போதும் என்கிறீர்கள். அப்படியானால் மாநாடு நடந்து, இன்று இந்தியா போல நாளை இங்கிலாந்து, அமெரிக்கா முதலான நாடுகளும் இலங்கைக்கு நட்புறவாகிவிட வேண்டும் என்பது உங்கள் விருப்பமோ!

      நீக்கு
    2. //தனித்தனியாக ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் நெருக்குதல் தருவது பிரயோசனமற்றது , மற்றும் நேர விரயமும் கூட என்பது வரை சரி .// - அப்படியெல்லாம் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? இந்தியாவை நோக்கி முதன்மையாக அழுத்தம் தருவதும், உலக நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பான போராட்டத்தைப் பத்தோடு பதினொன்றாக நடத்துவதும் தவறு; முதலாவதைக் குறைத்துக்கொண்டு இரண்டாவதைக் கூட்ட வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறேன்.
      //ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மொத்தமாகத் தீக்குளித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காத இந்திய அரசை நோக்கிய நம் போராட்டங்களைக் குறைத்துக்கொண்டு, தன் தூதரகத்துக்கு முன் ஒரு சிறு கூட்டம் கூடினாலும் உடனே அந்நாட்டுப் பிரதமருக்கு அழுத்தம் தருகிற இங்கிலாந்து முதலான நாடுகளின் தூதரகங்களுக்கு முன்பாக நம் போராட்டங்களை ஒருமுனைப்படுத்துவோம்!// என்றுதான் வரிகள் இருக்கின்றன. முதலில், ஒரு கட்டுரையைப் படிக்க வரும்பொழுது திறந்த உள்ளத்துடன் வாருங்கள்! நீங்களாக, உங்கள் விருப்பத்துக்கேற்பச் செய்துகொள்ளும் அ(ன)ர்த்தங்களுக்கு எழுதுபவர்கள் பொறுப்பாக முடியாது.

      மக்களே! மீண்டும் சொல்கிறேன். இது மாநாட்டையே நடத்தவிடாமல் தடுப்பதற்கான வழியைக் காட்டும் கட்டுரை. புரிந்துகொள்ளுங்கள்! மாநாடு நடந்தால்தான் மன்மோகன் போக முடியும். அதையே நாம் தடுக்க முடியும் எனும்பொழுது அந்த வழியைப் பின்பற்றுவீர்களா அல்லது மன்மோகன் மட்டும் போகாமல் தடுக்க முயல்வீர்களா? எரிவதையே பிடுங்க முடியும்பொழுது கொதிப்பதை அடக்க வேண்டியது பற்றித் தனியாகக் கவலைப்படுவானேன்? வேரோடு அகழ முடியம்பொழுது காம்பை மட்டும் கிள்ளுவானேன்? சிந்தியுங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்