‘டைட்டானிக்’ படத்தில் ஒரு காட்சி. கப்பல் மூழ்கப் போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து விடும். பிழைப்போமோ மாட்டோமோ என்று எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கூட நாயகனையும் நாயகியையும் துப்பாக்கியால் சுட்டபடி துரத்திக் கொண்டு ஓடுவான் அந்த வில்லன்!
அதைப் பார்க்கும்பொழுது, ‘நாம இன்னும் எவ்வளவு நேரம் உயிரோடு இருப்போம்னே தெரியாத நேரத்துல கூட அடுத்தவங்களை வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டுத் திரியறான் பாரு’ என்று அவன் மேல் நமக்கு அப்படி ஒரு வெறுப்பு வரும். ஆனால், இன்றைய உலகில் நாம் எல்லோருமே ஏறத்தாழ அப்படித்தான் நடந்து கொள்கிறோம் எனச் சொன்னால்...
வியக்க வேண்டாம்! இப்படி நான் சொல்லக் காரணம் நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வின்மை!...
புவி வெப்ப உயர்வால் உலகம் வெகு வேகமாக வெந்து கொண்டிருக்கிறது! இமயமலை உருகுகிறது! துருவப் பகுதிகள் உருகி ஓடுகின்றன! பல்லாயிரம் ஆண்டுகளாகப் பனிப் போர்வைக்குள்ளேயே மறைந்திருந்த பல பனிமலைகள் இன்று வெளியே எட்டிப் பார்த்து நம்மை எச்சரிக்கின்றன! “ஐயா! என் கெணத்தைக் காணோம்” என வடிவேல் சொல்வது போல, “அண்மையில்தானே பார்த்தோம் இங்கே பெரிய பெரிய பனிப் பாளங்களை! எங்கே அவை?” என அலறுகிறார்கள் சூழலியலாளர்கள் (ecologists)! எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இமயக் குளிர்நீர்க்கோள்’ (Himalayan Tsunami) எனும் பெயரில், உலகம் எப்படி அழியப் போகிறது என்பதற்கு ஒரு குட்டி முன்னோட்டமே (Trailer) காட்டி விட்டது இயற்கை!
ஆனால் நாம் இன்னும் சாதி, மொழி, மதம், இனம், மாநிலம், நாடு என ஏதாவது ஒன்றின் பெயரால் அடுத்தவரிடம் சண்டை போட்டுக் கொண்டேதான் இருக்கிறோம்! மக்களுக்குள் எவ்வளவுதான் பிரிவினைகள் இருந்தாலும், எல்லாரின் உரிமைக்கும், வாழ்வுக்கும் பிரச்சினை என வரும்பொழுது அனைவரும் ஒற்றுமையாகி விடுவார்கள் என்பதுதான் வரலாறு. ஆனால், உயிருக்கே ஆபத்து, உலகமே அழியப் போகிறது என்கிற நிலைமை வந்தும் நாம் இன்னும் ஒன்றுபடாவிட்டால் இனியும் எப்பொழுதுதான் திருந்தப் போகிறோம்?