ஓரினச்சேர்க்கையாளர் குழுமக் கொடி |
முன்னேற்றம்
என்பது எப்பொழுதும் படிப்படியாக ஏற்பட வேண்டும். இது தனி மனிதனுக்கு மட்டுமில்லை,
சமூகத்துக்கும் பொருந்தும்!
ஓரினச்
சேர்க்கை சரியா, தவறா என்பது அப்புறம். ஆனால், அதற்குச் சட்டப்படி ஏற்பிசைவு
(அங்கீகாரம்) வழங்கும் அளவுக்கு நம் சமூகம் முன்னேறிவிட்டதா என்பதே என் கேள்வி.
அமெரிக்காவில்
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள், ஐரோப்பாவில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால்,
அங்கெல்லாம் தனி மனித விடுதலை அந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது. இங்கு...?
அகநானூறு
முதலான சங்க இலக்கியங்கள், பண்டைத் தமிழினம் எந்தளவுக்குப் பாலியல்
நாகரிகத்துடனும் சுதந்திரத்துடனும் திகழ்ந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால்,
அப்படி வாழ்ந்த இனம் இது என இன்று சொன்னால் நம்மாலேயே நம்ப முடியாது.
ஒரு
புறம், நம் மக்களில் பெரும்பாலானோருக்குப் பாலியல் அறிவே முழுமையாக இல்லை.
ஆணும்
பெண்ணும் காதலிக்கவே இங்கு முழுமையான சுதந்திரம் இல்லை.
மறுபுறம்,
காதலுக்கும் காமத்துக்குமே இன்னும் சரிவர வேறுபாடு புரியாமல் பள்ளிப் பருவத்திலேயே
பிள்ளைகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு ஓடுகின்றன! (எதிரெதிர் பாலினரோடுதான்!)
நம்
பிள்ளைகளுக்கு நாம் பாலியல் கல்விக்கே இன்னும் ஏற்பாடு செய்யவில்லை. அவ்வளவு ஏன்,
ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் வகுப்பறையில் சேர்த்து உட்கார வைத்துப்
பாடம் கற்பிக்கும் அளவுக்குக் கூட இன்னும் நம் சமூகம் முன்னேறவில்லை. பாலியல்
அறிவுடன் பிள்ளைகளை வளர்க்கும் நம் பழந்தமிழ்ச் சமூக அமைப்பும் இப்பொழுது இங்கு
இல்லை.
இப்படி,
பாலியல்துறையில் இன்னும் இருட்டிலேயே மூழ்கிக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, அதை
வெட்டவெளிச்சமாகப் பேசக்கூடிய சமூகத்தைப் பின்பற்றும் தகுதி எப்படி இருக்க
முடியும்? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாவா?
அதே
நேரம், ‘இந்தியப் பண்பாடு’ எனும் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கான
ஏற்பிசைவை எதிர்ப்பவர்கள் சரியான கேடிகள்! எதற்கெடுத்தாலும், எப்பொழுது
பார்த்தாலும் இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு... இந்தியப் பண்பாடு!
தெரியாமல்தான் கேட்கிறேன், ‘இந்தியப் பண்பாடு’ என ஒன்று இருக்கிறதா?
தமிழ்ப்
பண்பாடு இருக்கிறது, தெலுங்குப் பண்பாடு இருக்கிறது, கன்னடப் பண்பாடு,
மகாராட்டிரப் பண்பாடு, ஒரியப் பண்பாடு எனக் காசுமீரப் பண்பாடு வரை பல பண்பாடுகள்
இங்கு இருக்கின்றன. இந்து, முசுலீம், கிறித்தவப் பண்பாடுகள் கூட இருப்பதாக
ஒப்புக்கொள்ளலாம். ஆனால், ‘இந்தியப் பண்பாடு’ என ஒன்று கிடையவே கிடையாது. அப்படி ஒன்று
இருப்பதாகச் சொல்வது இந்தியத் தேசிய இனங்களை ஏமாற்றும் பன்னெடுங்காலப் பச்சைப்
பொய்!
பண்பாடு
என்பது முன்னோர் கடைப்பிடித்த நாகரிகம். அது முழுக்க முழுக்க இனம் சார்ந்ததாகவும்,
மதம் சார்ந்ததாகவும் மட்டுமே காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
அப்படியிருக்க, பல மதங்களும், பல இனங்களும் வாழும் இந்நாட்டில் முழு நாட்டுக்கும்
பொதுவான ஒரு பண்பாடு எப்படி இருக்க முடியும்? கேட்டால், இந்நாட்டின் பழமையான மதம்
இந்து மதம்; எனவே இந்து மதப் பண்பாடே ‘இந்தியப் பண்பாடு’ என்பார்கள். அதுவும் பொய்! ஆங்கிலேயர்
காலத்தில் நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்பொழுது,
கிறித்தவம், இசுலாமியம், பார்சி போன்ற மதம் சார்ந்த மக்கள் தவிர மற்ற எல்லாரையும்
‘இந்து’க்கள் பட்டியலிலேயே சேர்த்துக் கொள்ளும்படி,
ஆங்கிலேயர்களுக்குத் தவறாக வழிகாட்டினார்கள் வெள்ளையர் அரசில் செல்வாக்கு
பெற்றிருந்த அன்றைய பார்ப்பனர்கள். அதனால்தான் தமிழர், தெலுங்கர், கன்னடர்,
மலையாளியர் என மொத்தத் திராவிட இனமும் இந்துமயமானது. மேலோட்டமாகப் பார்க்க ஒரே
மாதிரியாக இருப்பினும், கடவுளர், அவர்களை வழிபடும் முறைகள், சடங்குகள் என இந்து
மதத்துக்கும் இங்குள்ள தேசிய இனங்களின் மதங்களுக்கும் எல்லா வகைகளிலும்
அடிப்படையிலேயே பற்பல வேறுபாடுகள் உள்ளன. இது பற்றி அண்மைக்காலமாக விழிப்புணர்வு
பெருகி வருகிறது. எனவே, ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் இங்கு தனித்தனி மதங்கள்
இருந்திருக்கின்றன எனும்பொழுது, எல்லா இனங்களையும், எல்லா மதங்களையும் விழுங்கி
ஏப்பம் விட்டு ஓர் உருவமாக வளர்ந்து நிற்கும் இந்து மதத்தை ஒரு மதம் என்றே சொல்ல
முடியாது எனும்பொழுது அதன் பண்பாடுதான் இந்தியப் பண்பாடு என்பது துளியும்
உண்மையில்லாதது!
சரி,
மதம் போகட்டும்; மனிதத்துக்கு வருவோம்!