தலைப்பைப் பார்த்துவிட்டு “என்னடா இவன், இப்படிக்
கேட்கிறான்!”
எனத் திகைக்காதீர்கள்! சுதந்திரத் திருநாள் என்பது பிறந்தநாளைப் போன்றது இல்லை,
குறிப்பிட்ட மனிதர் இருந்தாலும், மறைந்தாலும் கொண்டாடுவதற்கு. அது மணநாளைப் போன்றது.
குறிப்பிட்ட கணவரும் மனைவியும் சேர்ந்து வாழும் வரைதான் அந்த மணநாளைக் கொண்டாட
முடியும். இருவரும் உறவு கசந்து பிரிந்துவிட்டால், அதன் பிறகு அந்த மணநாளை யாரும்
கொண்டாட முடியாது; அப்படிக் கொண்டாடினால் அதை விடப் பித்துக்குளித்தனம் எதுவும்
இருக்க முடியாது!
அதே போலத்தான், சுதந்திர நாளைக் கொண்டாடுவது
என்றால், நீங்கள் கொண்டாடும்பொழுது அந்த சுதந்திரம் உங்களிடம் இருக்க வேண்டும்! ஆனால்,
தமிழர்கள் உண்மையிலேயே சுதந்திரக் குடிமக்களா?
‘பூவரசன்’
எனும் ஒரு (மொக்கை) படத்தில், கவுண்டமணியிடம் செந்தில் கேட்பார், “என்ன! இந்தியாவுக்கு
சுதந்திரம் கெடைச்சிடுச்சா?! அப்படின்னா, அந்த சுதந்திரம் இப்ப யாருகிட்டண்ணே
இருக்கு?”
என்று. அதற்குக் கவுண்டமணி, அப்பொழுது தெருவில் எடுத்துச் செல்லப்படும் பிணத்தைக்
காட்டி, “அதோ மல்லாக்கப் போறானே? அவன்கிட்ட போய்க் கேளு!” என்பார்.
அந்தப் படம் வந்தபொழுது அப்படி இருந்ததோ இல்லையோ,
ஆனால் இப்பொழுது, இந்தியாவில் சுதந்திரத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது.
செத்தவன் கையில் கொடுக்கப்பட்ட வெற்றிலை பாக்கு போலப் பயனில்லாமல்!
விளையாட்டுக்கோ வெறுப்பிலோ சொல்லவில்லை.
சிந்தித்துப் பாருங்கள்! சுதந்திரக் குடிமக்களுக்கான எந்த உரிமையாவது, வசதியாவது
இங்கு நமக்கு இருக்கிறதா?
சுதந்திரமான குடிமக்கள் என்றால் அவர்களுக்கு
என்று மண் இருக்கும்; அதன் மீது அவர்களுக்கு உரிமை இருக்கும். தமிழர்களுக்கு அது
இருக்கிறதா? நமக்குச் சொந்தமான கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு ஏதோ தின்பண்டம்
போலத் தூக்கிக் கொடுத்திருக்கிறது. அதைத் தடுக்கவோ மீட்கவோ நம்மால் முடியவில்லை.
ஆக, நமக்கு மண்ணுரிமையில்லை!
கச்சத்தீவு எப்பொழுது நம் கைவிட்டுப் போனதோ
அப்பொழுதே நம் மீன்பிடி உரிமையும் நம்மைவிட்டுப் போய்விட்டது. கச்சத்தீவைக் கூட விடுங்கள்;
அந்தப் பக்கம் போகாமல், இங்கே கோடிக்கரைப் பகுதிக்குள்ளேயே மீன் பிடித்துக்
கொண்டிருந்தாலும் கூடத்தான் எல்லை தாண்டி வந்து தாக்குகிறார்கள் சிங்களக்
காடையர்கள். ஆக, நமக்குக் கடல் உரிமையும் இல்லை!
காவிரி, பெரியாறு என ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாம்
பயன்படுத்தி வந்த, நாம் இறை வடிவங்களாகப் போற்றி வணங்கி வந்த நம் ஆறுகளில் நமக்கு
ஒரு சொட்டுத் தண்ணீருக்கு இன்று உரிமை இருக்கிறதா? ஒவ்வோர் ஆண்டும் பாசன நேரத்தில்
அண்டை மாநிலங்களைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது. அதன் பிறகு, நீதிமன்றத்தில்
முறையிட்டு, நடுவணரசிடம் மண்டியிட்டு, செத்துச் சுண்ணாம்பாகி முதல் கட்டத் தண்ணீர்
வருவதற்குள் பயிருக்கு அடித்தது போக மிச்சமிருந்ததைக் குடித்து விட்டு அதே வயலில்
விழுந்து சாகிறார்கள் நம் உழவர் பெருமக்கள்! ஆக, நீர் உரிமையும் நமக்கு இல்லை!
சுதந்திரக் குடிமக்கள் என்றால் அவர்களுக்கு ஒரு
நாட்டின் பாதுகாப்பு இருக்கும். அவ்வளவு எளிதில் அவர்களை இன்னொரு நாடு தாக்கிவிட
முடியாது; அப்படியே தாக்கினாலும் அதற்குத் தக்க பதிலடி கிடைக்கும். ஆனால்
நமக்கு?... சிங்களன், சீனன், இத்தாலியன் என எவன் வேண்டுமானாலும் வந்து சுட்டுத்
தள்ளுகிறான் மீன் பிடிக்கப் போகும் தமிழனை! ஒரு நாட்டின் குடிமக்களுக்குண்டான
அடிப்படைப் பாதுகாப்பு தமிழர்களுக்குக் கிடைக்கிறதா, அல்லது இதுவரை தமிழர்கள் மீது
நடத்தப்பட்ட பல நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் ஒன்றுக்காவது இந்தியா இதுவரை
பதிலடி கொடுத்திருக்கிறதா? அட, பதிலடி கூட வேண்டாமையா! இதைப் பற்றி முறையிட்டால் இந்த நாட்டுப் பிரதமர் தன் பங்குக்குத் தானும் படையை அனுப்பி நம்மையே தாக்குகிறாரே,
இதற்குப் பெயர்தான் பாதுகாப்பா?
வணிகம் செய்ய, ஆராய்ச்சி புரிய, நீதி பரிபாலிக்க
என வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் அவரவர் மொழியிலேயே நடத்த முடிவதுதான் சுதந்திரம்.
இங்கு அதற்குச் சட்டம் இடமளிக்கிறதோ இல்லையோ சமுதாயரீதியாக அது சாத்தியப்படுகிறதா?
எல்லாவற்றுக்கும் மேலாக, சுதந்திரம் என்றால்
நம்மை நாமே ஆள்வது (பார்க்க: http://ta.wikipedia.org/wiki/அரசியல்_விடுதலை அல்லது
http://en.wikipedia.org/wiki/Independance).
சுதந்திரம் பெற்று இதோ 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை, ஒருமுறையாவது தமிழர் ஒருவர்
இந்நாட்டின் பிரதமராக ஆக முடிந்திருக்கிறதா, அல்லது இனியாவது அப்படி ஆக ஏதேனும்
வாய்ப்பு இருப்பதாக உங்களுக்குத் தென்படுகிறதா? அப்படியே ஒருவேளை, தப்பித் தவறித்
தடுக்கி விழுந்து ‘வேட்டி கட்டிய (அல்லது பேண்டு அணிந்த) தமிழர் ஒருவர் (?)’
பிரதமராகிவிட்டாலும் இந்த இந்தியா எனும் பலபட்டறை அமைப்பில் அவரால் தமிழர்களின்
பிரதிநியாக இந்த நாட்டை ஆள முடியுமா? தமிழரால் மட்டுமில்லை, இந்தியாவின் அரசியல்
அமைப்புக்கு, இங்கு யார் பிரதமராக வந்தாலும், அவருடைய சமுதாயத்துக்கான ஒரு தேசியப்
பிரதிநிதியாக அவரால் ஒருக்காலும் செயல்பட முடியாது. இங்கிருக்கும் 14க்கும்
மேற்பட்ட இனங்கள் மொத்தத்துக்குமான பிரதிநிதியாகத்தான் அவரால் விளங்க முடியும்.
ஆக, மண்ணுரிமை இல்லை, கடலுரிமை இல்லை, நீர் உரிமை
இல்லை, பாதுகாப்பு இல்லை, அடித்தாலும் அழித்தாலும் கேட்க நாதியில்லை, சொந்த மொழி
சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் சமுதாய அமைப்பு இல்லை, எல்லாவற்றுக்கும்
மேலாக ஆட்சி உரிமையும் இல்லை! இதற்குப் பெயர்தான் சுதந்திரமா நண்பர்களே?
தமிழர்கள் நிலைமைதான் இப்படி என்றால்,
இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்கள் நிலைமை இன்னும் மோசம்! அங்கே இந்தியப்
படையினரே அந்த மக்களை எல்லா விதக் கொடுமைகளுக்கும் ஆட்படுத்துகிறார்கள்!
அடிப்பது,
மிரட்டுவது, கொல்வது, பாலியல் வல்லுறவு செய்வது, சித்திரவதைப்படுத்துவது என,
ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அங்கேயும் நடக்கிறது.
இலங்கையில், அந்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தமிழர்கள் அங்கே தன் உரிமைகளை
இழந்தது போல இந்திய வடகிழக்கு மாநிலங்களிலும் இந்நாடு சுதந்திரம் அடைந்த மறுநாள்
தொட்டு அவர்கள் அங்கே சொல்லொணாத் துன்பங்களைச் சொந்த நாட்டுப் படையினராலேயே
அனுபவித்து வருகிறார்கள்.
இப்படி எந்தவிதமான உரிமையும் இல்லாத, சொந்த
நாட்டுப் படைகளாலேயே அச்சுறுத்தலுக்குள்ளாகிற வாழ்க்கை முறைக்குப் பெயர்
‘அடிமைத்தனம்’
நண்பர்களே! ஆம்! உலக மரபும், சட்டங்களும் அப்படித்தான் சொல்கின்றன. நாம்
மட்டும்தான் இதை சுதந்திரம் எனச் சொல்லி, வெட்கமில்லாமல் அதைக் கொண்டாடவும்
செய்கிறோம்!
இப்படியெல்லாம் எழுதுவதால் என்னை நாட்டுப்
பற்றில்லாதவன் என நீங்கள் நினைக்கலாம். நண்பர்களே, கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள்! நாட்டுப்பற்று என்றால் என்ன? நாட்டின் மண் மீது, அதன் நிலப்பரப்பு
மீது, அதன் வரலாற்றுப் பழம்பெருமைகள் மீது மட்டும் கொண்டிருக்கும் பற்றா? இல்லை!
அதற்குப் பெயர் மண்ணாசை; தற்பெருமை! இவற்றோடு சேர்த்து, நாட்டு மக்கள் மேலும்
-அந்த சக மனிதர்கள் மேலும்- கொண்டிருக்கும் நேசம்தான் உண்மையான நாட்டுப்பற்று!
ஆனால், இதே நாட்டின் ஒரு பகுதியில், சக
குடிமக்கள், சொந்த நாட்டின் உடன்பிறப்புக்கள் இதே நாட்டின் படையினரால் இவ்வளவு
கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுவதை மறந்து, நாம் அனுபவிப்பது உண்மையான சுதந்திரம்
இல்லை அடிமைத்தனம் என்பதையும் உணராமல், வெறும், இந்த இந்தியா எனும் ‘நிலப்பரப்பு
அடைந்த சுதந்திரத்தை’ நாம் கண்மூடித்தனமாகக்
கொண்டாடிக் கொண்டே இருக்கிறோம் என்றால் நம் நாட்டுப்பற்று எந்தளவுக்கு நம்
அறிவுக்கண்ணை மறைத்திருக்கிறது என்பதை அருள்கூர்ந்து ஒரு நிமிடம் சிந்தித்துப்
பாருங்கள்!
இப்பொழுது சொல்லுங்கள்! நமக்கு விடுதலைக்
கொண்டாட்டம் ஒரு கேடா?
விழியம்: நன்றி யூடியூபு.
படங்கள்: நன்றி வினவு.
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
congress, bjp, pmk, dmk, admk cpm,cpi vijaykanth, rajni, kamal,
பதிலளிநீக்குall cini male, female to be shunted out of tamil nadu property confiscated familt members put to hard labour
all MLAs, MPs are jailed along with family ,sent to andaman for hard labour property confiscated
vatti, manal, mann, cut
one for each no labour all are owners of village property
share the labour - share the boot
நீங்கள் சொல்வது மிக மிக மிகையாக இருக்கிறதே நண்பரே! என்ன, அண்மையில் 'சிட்டிசன்' படம் பார்த்தீர்களா? :-)
நீக்குகருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!
கலைஞர் எதுவும் செய்யலயா ?
பதிலளிநீக்கு30,000 கோடி 3+1+1 பேருக்கு பங்கு
சிங்கபூர் , இந்தோன்னாசிய முதலீடு
பாமக 1500 கோடி மால தீவில் , 400 ஏக்கர் திண்டிவனத்தில் , 120 ஏக்கர் தைலாபுரத்தில் பினாமி
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குநண்பரே! இது, நாம் கொண்டாடும் விடுதலை உண்மையானதா என்பது பற்றிய பதிவு. இதில் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ, இராமதாசையோ எப்படி இழுப்பது? அவர்களைப் பற்றியும் எழுதத்தான் போகிறேன். ஏற்கெனவே, வேறு தளங்களில் எழுதியும் இருக்கிறேன். எடுத்துக்காட்டுக்குப் பார்க்க http://tinyurl.com/lvuhy7t.
நீக்குகருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!
சுதந்திரதின நாளிலே இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களைச் சிந்திக்கத் தூண்டும் பதிவு. எல்லோரும் தங்களை மறந்து சிந்திப்பதால் தான் ஒருவரும் உங்களுக்குப் பதிலெழுதவில்லைப் போல் தெரிகிறது. :)
பதிலளிநீக்குபாராட்டுக்கு நன்றி நண்பரே! முதல் ஆளாகக் கருத்துரைத்தமைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!
நீக்கு