இயைபின் கொற்றவனே!
தன்னிகர் அற்றவனே!
உனைப்போல் எழுத இங்கு
ஏது மற்றவனே!
நீ இன்றித் தமிழன் இனி
ஏதுமற்றவனே!
உனக்கு இரங்கல் பா எழுதவா
வலைப்பூ தொடங்கினேன்
என்று
எனக்குள்ளாக அழுது - மன
மூலையில் முடங்கினேன்!
ஆனால்
நடமாடிய தமிழே!
உனக்கே இரங்கல் பா
எழுதாததற்கு
நான் கற்ற தமிழ்
எனக்கெதற்கு?
சிலப்பதிகாரம்,
மணிமேகலை...
என
புதுக்கவிதையால் நீ
புதுப்பிக்க வேண்டிய
பழந்தமிழ்க் கருவூலங்கள்
இன்னும் எவ்வளவோ
இருக்க
அதற்குள் என்ன அவசரம்
இறக்க?
எப்படி மனம் வந்தது
தமிழுலகைத்
துறக்க?
இனி எங்கு போவோம்
அப்படியொரு தமிழைச்
சுவைக்க?!
கருணாநிதியுடன் ஒரு கையைக்
குலுக்கிக் கொண்டே
பார்வதியம்மாளைத் திருப்பியனுப்பியதைக்
கண்டித்து
மறுகையால்
பாட்டெழுதிய
தமிழ்ப் பொற்செண்டே!
நீயன்றோ
உண்மைக் கவி!
உனையிழந்து
இனி என் செய்யும்
தமிழ்ப் பெரும் புவி?!
விருப்ப மொழியாய்த்
தமிழ் படிக்கும்
காலத்தில்
அதை
விருப்பு மொழியாய்
ஆக்கியது
உன் தமிழ்!
இனி எங்களுக்கு
எங்கு கிடைக்கும் அந்தச்
செந்தமிழ்?!
‘முக்காலா முக்காபுலா’
‘கலாசலா கலசலா’
என்றெல்லாம்
இளைஞர்களுக்கு வைப்பாய்
சொக்குப்பொடி மருந்து
பின்னர்
‘முன்பே வா! அன்பே வா’
‘நங்காய்! நிலாவின் தங்காய்!’ –
என்று
அவர்களுக்குப் படைப்பாய்
இலக்கிய விருந்து!
இப்படித்
திட்டமிட்டுத் திட்டமிட்டு
இலக்கிய ரசனை வளர்த்தது
வாலி பாணி!
உனக்குப் பின்னே
இந்தச்
சேவை செய்ய
யாரும்
பிறக்கும் முன்னே
போகலாமா
வாலிபா நீ?
தீர்ந்து விட்டதா
இதற்குள்
உன் மை?
சொல்லியிருந்தால்
எங்கள் உதிரத்தைக் கொடுத்திருப்போம்!
இது உண்மை!
வந்திருக்கலாம்
உன் உடலுக்கு
முதுமை!
ஆனால்
உன் எழுத்திலே
தீரவில்லையே இன்னும் அந்த
இளமை!
அதற்குள் நீ
ஓய்வெடுத்துக் கொண்டதென்ன
புதுமை!
பாடியிருக்கலாமே
காலனை நோக்கி
அறம்?
காட்டியிருப்பானே
அவன் உனக்குப்
புறம்!
மறந்ததேன்? – எங்களைப்
பிரிந்ததேன்?
நீ போனாலும்
உன் படைப்புகள் இருப்பதாக
ஆறுதல் கொள்வதா?
அதைப்போல் வேறு
மடத்தனம் உள்ளதா?
நீ எழுதியவையெல்லாம் அமுதம்தான்
மறுக்கவில்லை;
ஆனால்
சுரபியே போய்விட்டதே
அதுதானே
பொறுக்கவில்லை!
பார்வதியை வேண்டினாய்
கவிதையில் ஒருமுறை
“திருஞான சம்பந்தன்
அருந்தியது போக
மிச்சத்தை எனக்குக் கொடு”
என்று!
நினைவை அது
தீண்டுகிறது இன்று
சம்பந்தன் அருந்தியது
உமையவள்
கிண்ணத்தில் தந்த ஞானப்பால்;
ஆனால்
எங்கள் வாலிநீ பருகியதோ
தமிழ்த்தாய்
மடியமர்த்தி ஊட்டிய சொந்தப்பால்!
அப்பேர்ப்பட்ட உனக்கும்
இறப்பு என ஒன்றிருக்கும் – என
நினைக்கவில்லை இதுவரைக்கும்!
ஆனால்
அது நடந்தே விட்டது!
உயிருள்ள தமிழ்ப் பேரகராதி எரிந்தே விட்டது!
கடைசியில்
தமிழ்த்தாயின் தூவல் உடைந்தே விட்டது!
*********
பெருங்கவிஞர்.வாலி அவர்கள் பற்றி முழுமையாக அறிய: http://ta.wikipedia.org/wiki/வாலி
வாலி அவர்களின் பாடல்களைப் படித்து மகிழ: http://www.tamilpaa.net/tamil-lyricist-list/vaali
படம்: நன்றி http://www.moviegallary.in/
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
Visit : http://jeevanathigal.blogspot.com/2013/07/21-to-27-07-013.html மூலம் உங்கள் தளம் வருகை... தொடர்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குபெருமதிப்பிற்குரிய மூத்த வலைப்பதிவர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு பணிவன்பான வணக்கங்கள்!
நீக்குஉங்களைப் பற்றி அறிவேன். புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பவர், நல்ல வலைப்பூக்களைத் தொடர்ந்து கண்காணித்துத் தவறாமல் கருத்திட்டு ஊக்கமளிப்பவர் நீங்கள். புதிய பதிவர்களுக்கு முன்னோடியான நீங்கள் என்னைத் தொடர்வதாகச் சொல்லியிருப்பது எனக்கு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக்க நன்றி!