இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது ‘இனப்பற்று’! ஆனால், இன்று இனப்பற்று எனும் சொல்லைக் கூட யாரும் பயன்படுத்துவதில்லை, ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறோம். மேடையில் மார் தட்டுபவர்கள் கூட “‘இன உணர்வு’ என் இரத்தத்திலேயே ஊறியது” என்றுதான் முழங்குகிறார்கள்! அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று!
என்னதான், தமிழ்நாட்டு இளைஞர் படை வீறு கொண்டு எழுந்து உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தனி ஈழத்துக்குப் போராட்டம் நடத்தினாலும்,
இன உணர்வு என்பது ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடாகவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடாகவும்தான் இன்றும் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களும், படித்த சமூகத்தினரும் கருதுகிறார்கள்.
இப்படிப்பட்ட கருத்தாக்கம் கொண்டவர்கள், தமிழர்கள் தவிர இந்தியாவில் வேறு யாராவது இப்படிக் கருதுகிறார்களா என ஒரே ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும்! ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ... யாராவது இப்படி நினைக்கிறார்களா? அவ்வளவு ஏன், இந்தியப் பிரதமர் கூடத் தாடியும் தலைப்பாகையுமாய் இன்றும் தன் இன அடையாளத்தோடுதானே காட்சியளிக்கிறார்? சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்பதைத் தமிழ் மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
இந்தியாவில்தான் என்றில்லை, உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும் எதற்காகவும் கைகழுவுவது இல்லை! இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா? மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் தங்களுடைய இன அடையாளங்களோடு வாழ்வது மட்டும் கீழ்த்தரமானதாகிவிடுமா?
நண்பர்களே! மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர்களாகவே வாழும்பொழுது நாம் மட்டும் தேசியம் எனும் பெயரால் நம் இன உணர்வையும் (இந்த இடத்தில் ‘பற்று’ எனச் சொல்ல முடியாது) அதற்கான அடையாளங்களையும் வெறுப்பது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகும்! இது உண்மையில், நம் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடே தவிர வேறொன்றுமில்லை!
உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன. இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம். கூடவே, நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார் சொத்துகளையும் இழக்கிறோம் என்பது நாம் உணர வேண்டிய ஒன்று!
சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே அவை இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைதாம் என்பதை நிரூபிக்க முடிந்ததால்தான். அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால்தான். எனவே, இனம் என்பது வெறும் சமுதாய அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!
அது மட்டும் இல்லை தோழர்களே, இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity) ஆகிவிட்டது, கவனித்தீர்களா? எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை, மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் சமுதாய அடையாளமாகவும்தான் இருந்தன. ஆனால், எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalization Era) ஒருவர் வெளிநாட்டுக்குப் போய்த் தன் நாட்டின் பெயரைத் தன் அடையாளமாக முன்னிறுத்தினால், எத்தனையோ மத, இன, நாடு சார்ந்த மக்கள் வாழும் அந்த நாட்டில் இவர் யார், என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அந்த நேரத்தில், நம் இனத்தின் பெயரையோ, மொழியின் பெயரையோ சொன்னால்தான் நமது அடையாளத்தை நாம் புரிய வைக்க முடியும். ஆம்! நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் இன்று ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளங்களாக விளங்குகின்றன! ஆக, இன்னமும் நாம் நாட்டின் அடையாளத்தை நம்முடைய அடையாளமாகக் கருதுவதுதான் பழமைத்தனம், பிற்போக்குத்தனம்!
அதுவும் இந்தியாவைப் பொறுத்த வரை, இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது. ஏனென்றால், உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன. ஆனால், இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும்தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம். மற்றபடி, இந்தியாவுக்கெனத் தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது. எனவே, மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில் சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.
நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம் போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா? அது அறிவுடைமையாகுமா?
குறித்து வைத்துக் கொள்ளுங்கள், இனி வரும் காலத்தில் நாம் நம் அடையாளமாக நம் இனத்தை முன்னிறுத்தப் போகிறோமோ அல்லது நம் தேசியத்தை முன்னிறுத்தப் போகிறோமா என்பதில் நாம் அறிவாளியா இல்லையா, பழமையாளரா நாகரிகமானவரா என்பவையெல்லாம் கூட அடங்கியிருக்கின்றன!
('நெருடல்' தளத்தில் நான் முன்பு எழுதிய கட்டுரையின் புது வடிவம்).
படம்: நன்றி poetsriram.com, eutamil.com, envazhi.com.
*********
இனியவர்களே! பதிவு பிடித்திருக்கிறதா? அப்படியானால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகளில் தலா ஒரு சொடுக்கு சொடுக்குங்களேன்! அப்படியே, உங்கள் கருத்துக்களையும், பதிவுக்கான உங்கள் தரக்குறியீட்டையும் வழங்குங்கள்! தமிழில் எழுத மென்பொருள் இல்லாதவர்களுக்காகக் கீழே காத்திருக்கிறது ‘தமிழ்ப் பலகை’. மற்றபடி, தனிப்பட்ட முறையில் ஏதேனும் சொல்ல விரும்பினால் கீழே உள்ள படிவம் வாயிலாகத் தட்டுங்கள் ஒரு மின்னஞ்சல்!
பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!
//இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால்//
பதிலளிநீக்குஇனப்பற்று "குறுகிய" மனப்பான்மை அன்று!
அது "குறுகிய" மனப்பான்மை என்று சொல்லிச் சொல்லியே,
நம் தமிழை பிறரும்/நாமும் "குறுக்கிய" மனப்பான்மை!:(
ஆகா நீங்களா! நீங்கள் வந்து என் படைப்புக்குக் கருத்து தெரிவித்திருப்பது எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாக மட்டுமில்லை, பெருமையாக இருக்கிறது! நன்றி தலைவா!
நீக்கு