.

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

நாடாளலாமா நம் நாயகர்கள்? – தமிழ் நடிகர்களின் அரசியல் தகுதி பற்றி விரிவான அலசல்!


The Real Hero!

நடிகர்கள் நாடாளலாமா, அரிதாரம் பூசுபவர்கள் அரசியலுக்கு வரலாமா என்பவையெல்லாம் உலகின் வேறெந்த மக்களாட்சி நாட்டிலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குக் கேடு கெட்ட கேள்விகள்! மக்களாட்சி நாடு ஒன்றில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அல்லது, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர உரிமை அளிக்கும் நாடுதான் மக்களாட்சி நாடாகும்! இதில், நடிகர்கள் வரலாமா, நாட்டுப்புறக் கலைஞர்கள் வரலாமா, பெட்டிக் கடைக்காரர்கள் வரலாமா, பிரம்புக் கூடை பின்னுபவர்கள் வரலாமா எனவெல்லாம் தனித் தனியாகக் கேள்வி எழுப்ப இடமேயில்லை.

அதே நேரம், திரைப்படத்தில் நடிக்க வருவதையே ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கான குறுக்கு வழியாகக் கருதும் மடத்தனமும் உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்க முடியாது என்பதை நாம் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்!

திரைப்படம், அரசியல் இரண்டும் இரண்டு வெவ்வேறு துறைகள். இதற்கான தகுதிகள் வேறு, அதற்கான தகுதிகள் வேறு. ஆனால், இவை இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்வதில் நம் அரசியலாளர்களும், நடிகர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களே இல்லை. விளம்பரம், புகழ், செல்வாக்கு இம்மூன்றையும் - ஆம், இந்த மூன்றே மூன்றையும் – உடனே தருபவை என்பதைத் தவிர இந்த இரண்டு துறைகளுக்கும் இடையில் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. அப்படியிருக்க, எந்தத் தகுதியின் அடிப்படையில் நம் நடிகர்கள் அரசாட்சிக் கனவு காண்கிறார்கள் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வருவதற்கென ஒரு தகுதி வேண்டாமா? திரைப்படத்தில் நடிப்பதற்கு மட்டும் நீங்கள் என்னென்ன வகைகளில், எப்படியெல்லாம் பயிற்சி எடுத்து உங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்கிறீர்கள்? தனியாகப் பயிற்சியாளர்களை வைத்துச் சண்டை கற்றுக் கொள்கிறீர்கள், உடற்பயிற்சி கற்றுக் கொள்கிறீர்கள், ஆடக் கற்றுக் கொள்கிறீர்கள், அன்றாட உணவுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது வரை நுணுக்கமாகக் கேட்டு அறிந்துகொண்டு கடைப்பிடிக்கிறீர்கள்! ஆனால், அரசியலுக்கு வருவதற்கு இப்படி என்ன பயிற்சி எடுத்தீர்கள்? வில்லனைக் குத்துவதற்கு மடக்குவது போல் ஐந்து விரல்களையல்ல, ஒரே ஒரு விரலை மடக்குங்கள் பார்க்கலாம் இந்தக் கேள்விக்கு!

பத்தாயிரம் ஆண்டுகால வரலாறும் பத்துக் கோடி மக்களும் கொண்ட தேசிய இனம் ஒன்றை ஆள, அதற்கான பன்னாட்டுப் பிரதிநிதியாக அமர ஆடவும், பாடவும், நடிக்கவும், பேசவும் தெரிந்தால் போதுமா? வேறெந்தத் தகுதியும் வேண்டாமா? சிந்தித்துப் பாருங்கள்!

எம்.ஜி.ஆர் வரவில்லையா என்றால், அவர் என்ன சும்மாவா வந்தார்? தகுதிகளை வளர்த்துக்கொண்டு வந்தார். தன் திருமண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள் என்பதற்காகவோ, தன் திரைச் செல்வாக்குக்கும் முதல்வரின் அரசியல் செல்வாக்குக்கும் இடையிலான உரசல் காரணமாகவோ (ரஜினி), தன் படத்தை வெளிவர விடாமல் தடுத்ததற்காகக் கோபப்பட்டோ ஓர் இரவில் முடிவெடுத்து அவர் அரசியலுக்கு வரவில்லை. கருணாநிதி தன்னை முதுகில் குத்தி, கட்சியிலிருந்து நீக்கித் தனிக் கட்சி தொடங்க வேண்டி வந்ததற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே அவர் அரசியலில் இருந்தார். நடிகனாக ஓரளவு நிலைபெற்றிருந்த புதிதிலேயே தி.மு.க-வில் சேர்ந்தார். திரையுலகில் தனக்குக் கிடைத்த மக்கள் செல்வாக்கு முழுவதையும் திராவிடக் கொள்கைகளை, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பவே பயன்படுத்தினார். அண்ணாவுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்தபொழுது கூட அவர் தலைமைப் பதவிக்குத் தான் போட்டியிடாமல் கருணாநிதியைத்தான் அந்த அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தார்!

Black M.G.R?இப்படி, ஆண்டுக்கணக்கில் அரசியல் அனுபவம், நேர்மையான அரசியல் தலைவர்களுடனான தொடர்பினால் விளைந்த அரசியல் - சமூகத் தெளிவு, பொதுமேடைகளில் பல முறை மக்களை நேரடியாகச் சந்தித்ததால் உண்டான பொதுக் கருத்தை அறியும் திறன், மக்கள் – சமூக – இனப் பிரச்சினைகள் பற்றிய புரிதல், தலைவர் பதவியை விரும்பாத அரசியல் பக்குவம், பொதுநல நோக்கு முதலான பல தகுதிகள் கொண்ட அவர் எங்கே? அடுத்த எம்.ஜி.ஆர் ஆகக் கனவு காணும் நம் இன்றைய நடிகர்கள் எங்கே? இவற்றுள் எந்தத் தகுதி இவர்களுக்கு இருக்கிறது?
இவற்றையெல்லாம் வளர்த்துக் கொள்ள இவர்கள் என்ன அக்கறை காட்டுகிறார்கள்? இப்படி எந்த ஒரு தகுதியை இவர்கள் இதுவரை வெளிப்படுத்தினார்கள்? தனக்கிருந்த அரசியல் தகுதிகளுக்குண்டான இடத்தை அடையத் தன் திரையுலகப் புகழைப் பயன்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆருக்கும், திரைப்படத்தால் கிடைத்த விளம்பரத்தை மட்டுமே தகுதியாகக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க விரும்பும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லையா?

உடனே, இப்பொழுது பதவியில் இருப்பவர்களுக்கும், இதுவரை அந்தப் பதவியில் இருந்தவர்களுக்கும் மட்டும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றனவா எனக் கேட்கலாம். இல்லைதான்! அதற்காகத்தானே மாற்று (Replacement) தேடுகிறோம்? அடுத்து வருபவர்களும் அவர்களைப் போலவே தகுதியில்லாதவர்களாக இருப்பதா? சிந்தியுங்கள் மக்களே! 

“தகுதி... தகுதி... தகுதி! அப்படி என்னதான் தகுதி வேண்டும் என்கிறாய்” எனக் கேட்கிறீர்களா? சரி! தமிழர்களின் தலைவராக, தமிழ்நாட்டு முதல்வராக வருவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன? நம் நடிகர்களுக்கு அந்தத் தகுதிகள் இருக்கின்றனவா? மேலோட்டமாக ஒரு கண்ணோட்டம் விடலாம் வாருங்கள்!

நேர்மை
கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆட்சியில் அமர்த்த ஆயத்தமாக இருக்கும் இதே தமிழ் மக்கள்தான் இவர்களுக்கு மாற்றாக ஒருவரையும் வெகு காலமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், இவர்கள் இருவரிடமும் இருக்கும் நேர்மையின்மை. எனவே, அடுத்து வரும் தமிழர் தலைவருக்கு இன்றியமையாத முதற்பெரும் தகுதி ‘நேர்மை!’

Rajinikanthஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் வீரம் பேசிவிட்டுக் கர்நாடகத்தில் அதற்காக மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்திடமும், மதுரைக்காரத் தமிழன் எனச் சொல்லிக்கொண்டு வீட்டில் தெலுங்கு பேசும் விஜய்காந்திடமும் அப்படியொரு நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? இவற்றுக்குப் பெயர் நேர்மையா? 

நுண்மாண் நுழைபுலம்
எவ்வளவுதான் நேர்மையாளராக இருந்தாலும் தனி ஒரு முதலமைச்சரால் தமிழ்நாட்டையே தூக்கி நிறுத்திவிட முடியாது. கூடவே, அவரைப் போலவே நேர்மையும் இன்ன பிற தகுதிகளும் வாய்ந்த அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தேவை. அப்படிப்பட்ட நல்ல அமைச்சர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை, வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மனிதர்களை எடை போடும் திறன் வேண்டும். அப்படித் தேர்ந்தெடுப்பவர்களை எங்கே, எப்படித் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்யலாம் என்கிற திட்டமிடும் திறமை வேண்டும். வெல்பவர்களில் யாரிடம் எந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம் எனச் சரியாக முடிவெடுக்கத் தெரிய வேண்டும். அப்படியே எல்லாவற்றையும் சரியாகச் செய்து வென்று, அமைச்சரவையையே அமைத்துவிட்டாலும் அதைத் தக்க வைத்துக்கொள்ளவும் நல்லதோர் ஆட்சியை வழங்கவும் மிதமிஞ்சிய அறிவாற்றல் தேவை! 21 நாட்களிலேயே ஆட்சி கலைந்த வரலாறு கண்டது தமிழ்நாடு. அந்த அளவுக்கு அரசியல் சூதாடிகள் நிறைந்த மாநிலம் இது. அரசியலோடு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லாமல் பின்னின்று அரசாங்கத்தையே இயக்கும் வல்லமை படைத்தவர்களும் இங்குண்டு! இப்படிப்பட்ட சூழ்நிலைகளையெல்லாம் வென்று, இப்பேர்ப்பட்ட செல்வாக்குடையவர்களிடமிருந்தெல்லாம் தானும் தப்பித்து, நாட்டையும் மீட்டு நல்வழியில் இட்டுச் செல்வதற்கு ஈடு இணையற்ற ‘நுண்மாண் நுழைபுலம்’ (perspicacity) வேண்டும்! 

Thalaivaa?
ஏறத்தாழ 200 கோடி ரூபாய் வருவாயை அள்ளித் தந்த ‘துப்பாக்கி’ படத்துக்குப் பிறகு, ‘நாயகன்’, ‘புதிய பறவை’, ‘தேவர் மகன்’ என மூன்று படங்களை மின் அம்மியில் வைத்து அரைத்தது போன்ற ஒரு படத்தைத் தேர்வு செய்த விஜயிடம் இப்பேர்ப்பட்ட அறிவாற்றல் இருக்கும் என நம்புகிறீர்களா? இத்தனை ஆண்டுத் திரையுலகப் பட்டறிவுக்குப் பிறகும், ஒரு நல்ல கதையைக் கூடத் தேர்ந்தெடுக்கத் தெரியாத இவர்கள் நல்ல அமைச்சர்களைத் தேர்வு செய்து விடுவார்களா? 

துணிச்சல்
அரசியலில் அடியெடுத்து வைக்கும் புதிதில் எல்லோருமே நல்லவர்கள்தாம். “சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும்; நாட்டையே புரட்டிப் போட வேண்டும்; மக்களின் வாழ்க்கைத் தரத்தையே மாற்றிக் காட்ட வேண்டும்; இவற்றுக்குத் தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் ஒழித்துக் கட்ட வேண்டும்” என்றெல்லாம் பல கொள்கைளோடும், திட்டங்களோடும்தாம் ஒவ்வொருவரும் இந்த வாயிலுக்குள் நுழைகிறார்கள். ஆனால், சாக்கடையைத் துப்புரவாக்க வந்த அவர்களே கடைசியில் நாறி நமுத்துப் போய் விடுவதைத்தான் நாம் பார்க்கிறோம். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் கருணாநிதி முதல் இருபது ஆண்டுகளுக்கு முன் வந்த இராமதாசு வரை இதற்கு எடுத்துக்காட்டுகள் இங்கு நிறைய! எனவே, அடுத்து ஆட்சிக்கு வர விரும்புபவர்கள், மேலே பார்த்தபடி, நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருந்தால் மட்டும் போதாது, ‘துணிச்சல்’ உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்! எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் தான் கொண்ட கொள்கைகளிலிருந்து பிறழாத நேர்மைத் திறமும், தான் திட்டமிட்ட மக்கள் நல நடவடிக்கைகளை யார் வந்து தடுத்தாலும் செயல்படுத்தத் தயங்காத நெஞ்சுறுதியும் கொண்டவர்களாகத் திகழ வேண்டும்!

நல்ல படம் ஒன்றில் நடித்து அது சரியாக ஓடாமல் போய்விட்டால், உடனே அடுத்த படத்திலேயே, விசிறிகளை வெட்டாத குறையாக வீச்சரிவாள் எடுத்துக் கொண்டு வில்லனை விரட்டோ விரட்டென விரட்டும் நம் இன்றைய கதாநாயகர்களுக்கு இப்படி ஒரு துணிச்சல் இருக்கிறதா? ஒரு படத்தின் தோல்வியையே தாங்க முடியாமல் அடுத்த படத்தில் மசாலா குதிரைக்குத் தாவும் இவர்கள், அரசியல் களத்தின் சோதனைகளையும் வேதனைகளையும் துணிச்சலோடு எதிர்கொண்டு கடைசி வரை கொள்கைப் பற்றோடும், திட்டமிட்டதை நிறைவேற்றும் திறனோடும் திகழ்வார்களா? 

பிரச்சினைகள் பற்றிய தெளிவு
ஏற்கெனவே இருக்கிற கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றாக மக்கள் புதிய தலைவரைத் தேடுவது, நாட்டில் இருக்கிற முன்னேற்றம் போதாது, இன்னும் இன்னும் மற்ற மாநிலங்களையும் நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவெல்லாம் இல்லை. இந்தச் சமூகத்தையே விழுங்கிக் கொண்டிருக்கிற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக. மக்கள்தொகை அளவுக்கு இங்கே பிரச்சினைகளும் பல்கிப் பெருகித் திரிகின்றன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலவும் சாதிப் பிரச்சினை முதல் நேற்று முளைத்த மின் தட்டுப்பாடு வரை பிரச்சினைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவற்றையெல்லாம் தீர்க்க, முதலில் இப்பிரச்சினைகள் பற்றிய தெளிவு தலைவராக விரும்புபவருக்கு இன்றியமையாதது!

காவிரி நீர் வேண்டி ஒரு நாள் முழுக்க உண்மையாகவே பட்டினிப் போராட்டம் நடத்தினார் ரஜினிகாந்த். அவர் பற்றி மாறான கருத்து கொண்டிருந்தவர்களையும் வாயடைக்க வைத்த போராட்டம் அது. ஆனால் அதன் முடிவில், ஆறுகளையெல்லாம் இணைப்பதுதான் காவிரி நீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு என்றும், அதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் தானும் ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் அவர் விட்ட அறிக்கை, அந்தப் பிரச்சினையில் அவருக்கு இருக்கும் தெளிவின்மையைத் தெளிவாகவே புரிய வைத்தது. காவிரியைக் கடலுக்கு விட்டாலும் விடுவோமே தவிர தமிழரின் வயலுக்கு விடமாட்டோம் எனக் கர்நாடகம் அழிச்சாட்டியமாக அடம் பிடிப்பதுதான் இந்தப் பிரச்சினைக்குக் காரணமே தவிர, காவிரியில் அப்படி ஒன்றும் தண்ணீர் இல்லாமல் இல்லை; ஆண்டுதோறும் பல டி.எம்.சி காவிரி நீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது என்பதுதான் உண்மை. அன்றாடம் செய்தித்தாள் படிக்கிற சராசரிக் குடிமகன், குடிமகளுக்குத் தெரிந்த இந்த எளிய தகவல் கூடத் தெரியாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து என்ன செய்வார்? கருணாநிதி, வைரமுத்து, வை.கோ முதலான அரசியல், வரலாற்று அறிஞர்களுடன் பழகிய ரஜினிக்கே தமிழ்நாட்டின் ஒரு பிரபலப் பிரச்சினை பற்றிய புரிதல் இவ்வளவுதான் என்றால், தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும், பொதுவாழ்வில் தான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் தன் அப்பாவையே சார்ந்து நிற்கும் விஜய்க்கும், தன் கட்சிப் பரப்புரைக்கே குடித்துவிட்டு வந்து உளறும் விஜய்காந்துக்கும்  இந்தச் சமூகத்தின் இன, மொழி, சமூக, அரசியல், உரிமைப் பிரச்சினைகள் பற்றி என்ன தெளிவு இருக்கும்? 

தமிழ் உணர்வு
தமிழர்களை ஆள்பவர் முதலில் தமிழராக இருக்க வேண்டும்! தெலுங்கர்களைத் தெலுங்கரும், கன்னடர்களைக் கன்னடரும், மலையாளிகளை மலையாளியும், காசுமீரிகளைக் காசுமீரியும் மட்டுமே ஆளும்பொழுது தமிழர்களை மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் எனும் நிலைமை இருப்பதற்குப் பெயர் பெருந்தன்மையோ, தேசிய ஒருமைப்பாட்டு உளப்பான்மையோ இல்லை, இளிச்சவாய்த்தனம்! நாட்டின் அமைப்புப்படியே பார்த்தாலும், மொழிவாரியாக மாநிலங்கள் வகுக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் அந்த மாநிலங்களை ஆள்பவர்களும் அந்தந்த மொழி சார்ந்த இனத்தின் பிரதிநிதிகளாக இருப்பதுதான் நியாயமாக இருக்க முடியும். ஆனால் அதே நேரம், ‘தமிழர்’ என இங்கு குறிப்பிடுவது ஒருவருடைய உணர்வு நிலையைத்தானே தவிர, பிறப்பை இல்லை. மலையாளியாகப் பிறந்த எம்.ஜி.ஆர் அவர்கள், ஆட்சிக்காலம் முடிந்த பின்னும் மீண்டும் மீண்டும் தேர்தலில் வெல்லும் அளவுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்களின் செல்வாக்கையும் பெற்றிருந்தார்; மேதகு.பிரபாகரன் அவர்கள் இன்றும் நினைத்து நினைத்துப் போற்றும் அளவுக்கு ஈழப் பிரச்சினை பற்றிய புரிதலோடும் விளங்கினார். ஆனால், பிறப்பால் தமிழரான கருணாநிதி ஒன்றரை இலட்சம் தமிழர்கள் செத்ததை வேடிக்கைதான் பார்த்தார். எனவே, ஒருவர் தமிழரா இல்லையா என்பது அவரது வாழ்க்கைமுறை சார்ந்ததே தவிர, பிறப்பைச் சார்ந்தது இல்லை! ஆனால், நம்முடைய நடிகர்கள் முதலில் தமிழர்களா?...

தமிழ் இனத்தையே அழித்தொழித்த காங்கிரசாரின் கைகளில் இரத்தம் கூடக் காயாத நிலையில், இனப்படுகொலை நடந்த நான்கே மாதங்களுக்குள் காங்கிரசில் சேர்வதற்காக ராகுலிடம் போய் நின்றவர் நடிகர் விஜய்! [அஜீத்தும், முன்னாள் முதல்வர் (!) அர்ஜுனும் இன்னும் ஒரு படி மேலே போய், “ஈழத் தமிழருக்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்துக்கும் ஆதரவு தரப் போவதில்லை” என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். (பார்க்க: காணொலி)].

'Tamil Actor' Simbuஈழப் பிரச்சினைக்காக இந்தியா, அமெரிக்கா என நாடுகளே ஆடிப் போகும் அளவுக்கு மாணவத் தமிழர்கள் நடாத்திய அறப்போருக்கு நடிகர்.சிம்பு வெளிப்படையாக நேரில் வந்து தன் ஆதரவைத் தெரிவித்துப் போனவுடன், எங்கே தங்கள் பெயர்கள் கெட்டுவிடுமோ என்று அஞ்சி, அப்பொழுதும் மாணவர்களை நேரடியாக ஆதரித்தால் இந்திய அரசைப் பகைத்துக் கொண்டதாகிவிடுமே என்பதற்காகத் தனியாக வேறு ஒரு போராட்டத்தை நடத்தி, இல்லாத தங்கள் உணர்வை வெளிப்படுத்தினார்கள் மற்ற நடிகர்கள்!

இவர்களா தமிழர்கள்? இவர்களா அடுத்த தலைவர்கள்? இப்படி, அடிப்படைத் தகுதிகளே கூட இல்லாத இவர்களா ஆட்சிக்கு வரும் தகுதி உடையவர்கள்? இவர்களை நம்பியா ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழைமை வாய்ந்த தமிழ்ப் பேரினத்தை ஒப்படைக்கப் போகிறோம்?

அப்படியானால், காலத்துக்கும் இதே கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியிலேயே சீரழியச் சொல்கிறாயா எனக் கேட்டால், இல்லை, கண்டிப்பாக இல்லவே இல்லை! பதவி வெறிக்காக ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலி கொடுத்துவிட்டு, அந்தக் குற்றவுணர்வு துளியும் இன்றி இன்னும் தமிழினத் தலைவனென்கிற இறுமாப்போடு திரியும் கருணாநிதியும், தன் அதிகார வெறிக்காக இடிந்தகரை எனும் ஓர் ஊரையே முள்ளிவாய்க்கால் போன்ற ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடமாக்கிய ஜெயலலிதாவும் யாராலும் சகிக்க முடியாத ஆட்சியாளார்கள்! இவர்களுக்கு மாற்று கண்டிப்பாக வேண்டும்! அது யாராக இருந்தாலும் வரவேற்பதே நம் கடமை; நடிகர்கள் உட்பட! ஆனால், வருபவர்கள் தங்களுக்குண்டான தகுதிகளை வளர்த்துக் கொண்டு வர வேண்டும் என்பதே இதன் மூலம் நாம் சொல்ல விரும்பும் செய்தி, விடுக்க விரும்பும் வேண்டுகோள் எல்லாம்.

Yes! They can be the leaders, but this is not the time to they lead!


 பதிவுகளை உடனுக்குடன் பெறக் கீழ்க்காணும் பொத்தானைச் சொடுக்கி
வாட்சாப் தடத்தில் (Whatsapp Channel) இணையுங்கள்!!

Aga Sivappu Thamizh Whatsapp Channel

முகநூல் வழியே கருத்துரைக்க

6 கருத்துகள்:

  1. நீங்க சொல்கிற தகுதி தமிழ்நாட்டில ஒருத்தருக்குத்தான் இருக்கு - T .ராஜேந்தர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க என்னைய பாராட்டுறீங்களா இல்ல ஓட்டறீங்களா?... ஹா ஹா! கருத்துக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு
  2. அருமையான பதிவு. தன் மாய உலகின் செல்வாக்கை கொண்டு முதல்வராக எண்ணுபவன் பொது இடத்தில் தன் சினத்தை கட்டுப்படுத்த முடியாத பொழது.. நம் நாட்டின் உள்ள பல சிக்கலை எப்படி பொறுமையாக தீர்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி சக்திவேல் அவர்களே! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்!

      நீக்கு
  3. பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்! உங்கள் செம்மையான கருத்துக்களைப் பதியுங்கள்! மேற்கண்ட இணைப்புகள் மூலம் சமூக வலைத்தளங்கள், திரட்டிகள் ஆகியவற்றிலும் பதிவைப் பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த இந்தப் பதிவு மற்றவர்களையும் சென்றடைய உதவுங்கள்!

      நீக்கு

என் புதினத்தை வாங்க

என் புதினத்தை வாங்க
மேலே உள்ள படத்தை அழுத்துங்கள்
பதிவுகளை உடனுக்குடன் பெற

பன்முகப் பதிவர் விருது!

பன்முகப் பதிவர் விருது!
15.09.2014 அன்று நண்பர் கில்லர்ஜி அவர்கள் வழங்கியது!

அண்மையில் அகத்தில்...

Recent Posts Widget

தொடர...

வாட்சாப் தடத்தில் (Channel)...

முகநூல் அகத்தில்...

கீச்சகத்தில் தொடர...

குறிச்சொற்கள்

11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு (1) 13ஆம் உலகில் ஒரு காதல் (4) அ.தி.மு.க (9) அஞ்சலி (21) அணு உலை (2) அம்பிகை செல்வகுமார் (1) அம்மணம் (1) அமேசான் (6) அயல்நாட்டுத் தமிழர் (1) அரசியல் (91) அழைப்பிதழ் (7) அற்புதம்மாள் (2) அறிவியல் (2) அன்புமணி (1) அனுபவம் (40) ஆட்சென்ஸ் (1) ஆதார் (1) ஆம் ஆத்மி (1) இங்கிலாந்து (1) இசுரேல் (2) இட ஒதுக்கீடு (4) இணையம் (19) இந்தித் திணிப்பு (1) இந்தியா (25) இரசியா (1) இராசபக்ச (2) இராமதாஸ் (2) இல்லுமினாட்டி (2) இலக்கணம் (3) இலங்கை (1) இறைமறுப்பு (1) இனப்படுகொலை (23) இனம் (46) ஈழம் (44) உக்கிரேன் (1) உணவு அரசியல் (1) உலக வெப்பமயமாதல் (3) ஊடகம் (24) எழுவர் விடுதலை (1) ஐ.நா (5) ஒருங்குறி (1) கடவுள் (1) கதை (3) கமல் (4) கருணாநிதி (10) கல்வி (11) கலைச்சொல்லாக்கம் (1) கவிஞர் தாமரை (1) கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் (2) கவிஞர் ரேவதி (1) கவிதை (19) காங்கிரஸ் (6) காசா (2) காணொளி (4) காதல் (2) காந்தியம் (1) கார்த்திக் சுப்புராஜ் (1) காவிரிப் பிரச்சினை (6) கிண்டில் (5) கிரந்தம் (1) கீச்சுகள் (2) குழந்தைகள் (10) குறள் (2) கூகுள் (2) கையொப்பம் (2) கோட்பாடு (9) சங்க இலக்கியம் (1) சசிகலா (1) சட்டம் (16) சந்திப்பு (1) சமயம் (12) சமற்கிருதம் (2) சமூகநீதி (4) சரிதா (1) சாதி (10) சிங்களர் (1) சித்திரக்கதைகள் (1) சிவகார்த்திகேயன் (1) சிறுவர் இலக்கியம் (4) சீமான் (7) சுற்றுச்சூழல் (6) சுஜாதா (1) சூர்யா (1) செவ்வாய் (1) சென்னை (3) சொத்துக்குவிப்பு (1) தமிழ் (31) தமிழ் தேசியம் (5) தமிழ்த்தாய் (1) தமிழ்நாடு (16) தமிழர் (45) தமிழர் பெருமை (17) தமிழறிஞர் முத்துநிலவன் (1) தமிழின் சிறப்பு (3) தற்காப்புக் கலைகள் (1) தற்கொலை (2) தன்முன்னேற்றம் (10) தாய்மொழி (5) தாலி (1) தி.மு.க (11) திரட்டிகள் (4) திராவிடம் (9) திருமுருகன் காந்தி (1) திரைப்படம் (2) திரையுலகம் (9) திறனாய்வு (1) தினகரன் (1) துருவ் (1) தே.மு.தி.க (1) தேசியக் கல்விக் கொள்கை (1) தேசியம் (10) தேர்தல் (9) தேர்தல் - 2016 (5) தேர்தல்-2019 (3) தேர்தல்-2021 (2) தொலைக்காட்சி (2) தொழில்நுட்பம் (10) தோழர் தியாகு (1) நட்பு (13) நிகழ்வுகள் (5) நிர்மலா சீதாராமன் (1) நினைவேந்தல் (10) நீட் (5) நூல்கள் (10) நூற்றாண்டு (1) நெடுவாசல் (1) நேர்காணல் (1) பகடி (3) பதிவர் உதவிக்குறிப்புகள் (10) பதிவுலகம் (24) பா.ம.க (2) பா.ஜ.க (30) பார்ப்பனியம் (14) பாலஸ்தீனம் (2) பாலியல் (1) பிக் பாஸ் (1) பிறந்தநாள் (10) பீட்டா (1) புதிய வேளாண் சட்டம் (1) புறநானூறு (1) புனைவுகள் (10) பெண்ணியம் (6) பெரியார் (3) பேரறிவாளன் (2) பேரிடர் மேலாண்மை (1) பொங்கல் (5) பொதுவுடைமை (2) பொதுவுடைமைக் கட்சி (2) பொருளாதாரம் (2) பொழிவு (2) போட்டி (1) போர் (3) போராட்டம் (10) ம.ந.கூ (2) மகான் (1) மச்சி! நீ கேளேன்! (7) மடல்கள் (10) மடோன் அஷ்வின் (1) மணிவண்ணன் (1) மதிப்புரை (5) மதுவிலக்கு (2) மருத்துவம் (7) மாநாடு (1) மாநாடுகள் (1) மாய இயல்பியம் (1) மாவீரர் நாள் (3) மாற்றுத்திறனாளிகள் (2) மிஷ்கின் (1) மீம்ஸ் (7) மீனவத் தமிழர் பிரச்சினை (3) மூடநம்பிக்கை (3) மேனகா காந்தி (1) மொழியரசியல் (2) மொழியறிவியல் (2) மோடி (11) யுவர் கோட் (1) யோகிபாபு (1) ரசனை (2) ரஜினி (3) ராகுல் (2) ராஜீவ் படுகொலை (1) வரலாறு (22) வாழ்க்கைமுறை (17) வாழ்த்து (6) வானதி சீனிவாசன் (1) விக்ரம் (1) விடுதலை (6) விடுதலைப்புலிகள் (13) விருது (1) விஜய் (1) விஜய் சேதுபதி (1) விஜயகாந்த் (4) வீரமணி (1) வேளாண்மை (7) வை.கோ (6) வைரமுத்து (2) ழகரம் (1) ஜல்லிக்கட்டு (6) ஜெயலலிதா (14) ஸ்டெர்லைட் (2) ஹமாஸ் (2) ஹீலர் பாஸ்கர் (1) Bhagavath Gita (1) BJP (1) Casteism (1) Cauvery (1) Dalit (1) Genocide (3) Hindu (1) Karnataka (1) Magical Realism (1) Manisha (1) Modi (1) Notion Press (1) Open Letter (1) pentopublish2019 (5) Politics (2) Religion (1) Scheduled Castes (1) Sexual Harassment (1) Tamilnadu (1) Tamils (1) Unicode (1) Unicode Consortium (1) UP (1) Women (1) Yogi Adityanath (1)

முகரும் வலைப்பூக்கள்